மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு

This entry is part 21 of 25 in the series 7 ஜூலை 2013

 

                                                  டாக்டர் ஜி.ஜான்சன்
           தூக்க மூச்சடைப்பு ( sleep apnoea ) என்பது தூங்கும்போது மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போவதாகும்.இது சில வினாடிகளே நீடிப்பதால் , பாதிப்புக்கு உள்ளானவர் உடன் திணறிக்கொண்டு விழித்து எழுந்து விடுவர்.தேவையான கார்பன்-டை -ஆக்ஸ்சைடு இல்லாதிருத்தல் , சுவாச மையத்தில் தூண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும்.           தூக்க மூச்சடைப்பு நடுத்தர வயதுடைய , உடல் பருமன் அதிகமுள்ள ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும். மொத்த ஜனத்தொகையில் 1 முதல் 2 சதவிகிதத்தினர் இவ்வாறு பாதிக்கப்படலாம். தொண்டைச் சதை ( tonsil ) வீக்கமுற்றுள்ள பிள்ளைகளிடம்கூட இது காணப்படும்.இதன் அறிகுறிகளும் அவை தோன்றும் துரித அளவையும் ( frequency ) இவ்வாறு பட்டியலிடலாம்:* உரக்கமான குறட்டையொலி ( loud snoring ) – 95%

* பகல் நேர தூக்கம் ( daytime sleepinness ) – 90%

* உட்சாகமில்லாத தூக்கம் ( unrefreshed sleep ) – 40%

* ஓய்வற்ற தூக்கம் ( restless sleep ) – 40%

* காலை தலைவலி ( morning headche ) 30%

* இரவு மூச்சுத் திணறல் ( nocturnal choking ) – 30%

* குறைவான பாலியல் எழுச்சி ( reduced libido ) – 20%

* காலை போதை ( morning drunkenness ) – 5%

* கணுக்கால் வீக்கம் ( ankle swelling ) – 5%

நாம் தூங்கும்போது நமது நெஞ்சுப் பகுதியிலுள்ள சுவாசத் தசைகளின் ( respiratory muscles ) செயல்பாடு குறைகின்றது.விரைவுக் கண் இயக்கத் தூக்கத்தில் ( REM sleep ) இது இன்னும் அதிமாகிறது.இந்நேரத்தில் இடைத்திரை ( diaphragm ) மட்டுமே இயங்குகிறது..

தூங்கும்போது தொண்டையின் பின்புறமுள்ள சுவாசக் குழாய் மூச்சை உள்ளே இழுக்கும் பொது முழுமையாக ஒட்டிக்கொள்வதால் மூச்சடைப்பு ஏற்படுகின்றது.

குறட்டை விடும்போது சுவாசக் குழாய்கள் முழுதும் மூடிக்கொள்ளாமல் ஓரளவு மூடுகின்றன.ஆழமில்லாத , குறைந்த அளவில் சுவாசிக்கும்போதும் ( hypopnoea ) அதிக அளவில் சுவாசக் குழாய் மூடிக்கொள்ளலாம். மூச்சடைப்பு உண்டானதும் சுவாசம் இவ்வாறு மெதுவாகி சுவாச மண்டலத்தைத் தூண்டி, சுவாசத் தசைகளை செயல்படச் செய்து தூங்குபவரை எழுப்பிவிடுகின்றது.இவ்வாறு தூக்கத்திலிருந்து விழிப்பது சில வினாடிகளே நீடிப்பதால், பல வேளைகளில் தூங்குபவர் அறியாமலேயே ஓர் இரவில் நூற்றுக்கணக்கான தடவைகள் இதுபோன்று சிறு சிறு விழிப்புகளுக்கு உள்ளாகலாம். இதனால் நிறைவான நிம்மதியான தூக்கமின்றி , பகலில் தூக்கம் வருவதும் அதனால் கூர்மையாகச் சிந்திக்க முடியாமல் மூளை மழுங்கடிக்கப்படுவதும் , வேலையில் கவனமின்மையும் ஏற்படலாம்.

தூக்க மூச்சடைப்பை உண்டு பண்ணக்கூடிய நிவர்த்தி செய்யக்கூடிய காரணங்கள் வருமாறு :

* சுவாசக் குழாயை அழுத்தும் காரணங்களான அதிக உடல் பருமனும் தொண்டைச் சதையும்.

* மூக்கினுள் அடைப்பை உண்டுபண்ணும் சளி, சதை ( polyps ),கட்டிகள் அல்லது மூக்கின் பிரிசுவர் விலக்கம் ( nesal septal defect ).

* சுவாசத்தைக் குறைக்கும் மருந்து வகைகள் மதுபானம், தூக்க மாத்திரைகள், வலி குறைக்கும் மாத்திரைகள்.

பெரும்பாலும் தூக்க மூச்சடைப்பு உள்ளதை நோயாளியும் அவரது துணைவியாரும் சொல்லும் அறிகுறிகளை வைத்து நிர்ணயம் செய்துவிடலாம். இதை நிச்சயப்படுத்த ஒரு சிலருக்கு சில பரிசோதைகள் தேவைப்படலாம் .இதில்முக்கியமானது தூக்க ஆய்வு ( sleep study ). நோயாளி இரவில் ஒரு தனி அறையில் படுத்து தூங்கவேண்டும். அப்போது அவரின் தூக்க ஆழத்தையும், மாறுதல்களையும் ,தூக்க மூச்சடைப்பு போன்றவவை ஒயர்களால் இணைக்கப்பட்ட கருவியின் ( Polysomnogram ) மூலமாகப் பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால் மூளையின் செயல்பாட்டை அறிந்துகொள்ள மூளை மின்னியக்கப் பதிவு ( EEG – Electroencephalogram ) செய்யப்படும்.

தூக்க மூச்சடைப்புக்கான சிகிச்சை

* உடல் எடையைக் குறைத்தல்.

* மது அருந்துவதைக் குறைத்தல்.

* புகைப்பதை நிறுத்துதல்.

*மல்லாக்கப் படுப்பதைத் தவிர்த்தல் .பக்கவாட்டில் படுத்தல்

* தூக்க மாத்திரைகளைத் தவிர்த்தல்.

கடுமையான தூக்க மூச்சடைப்பு உண்டானால் தற்போது CPAP ( Continuous Positive Airway Pressure ) என்ற சிகிச்சை முறை உள்ளது. மூக்கு, வாய்ப் பகுதியில் ஒரு முகமூடி போடப்பட்டு அதன் மூலமாக தொடர்ந்து காற்று புகுத்தப்படுகிறது.இதன் மூலமாக சுவாசக் குழாய் அடைபடாமல் காக்கப்படுகின்றது .

மூக்கில் சதை, கட்டி அல்லது பிரிசுவர் விலக்கம் , தொண்டையில் சதை போன்றவற்றை அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்து கொள்ளலாம்.

தூக்க மூச்சடைப்பு உள்ளவர்கள் உடன் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொண்டு தக்க சிகிச்சை செய்து கொள்வதே நல்லது.

( முடிந்தது )

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *