மறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்

author
6
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 17 in the series 1 பெப்ருவரி 2015

 

வைகை அனிஷ்
அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டு என்பது விளை என்றால் விருப்பம் என்றும் ஆட்டு என்பது ஆட்டம் என்று பொருள்படும். இவ்விதமான விளையாட்டுக்களின் மூலம் உடலியல், உளவியல், சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணையாக அமையும்.விளையாட்டுக்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள் என்றும் நகர்ப்புற விளையாட்டுக்கள் என்று இரண்டு பிரிவாக பிரிக்கலாம். நாட்டுப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பரவியது ஒரு வகை. இன்று நாம் காணும் நகர்ப்புற விளையாட்டுகள் பெரும்பாலும் நாட்டுப்புற விளையாட்டுக்களில் கிடைக்கப்பெற்றிருந்தன. ஆண்கள் விளையாடும் கபடி, சதுரங்கம், நீச்சல் போன்றவை இவ்வகையில் அடங்கும். சில விளையாட்டுக்கள் நகர்ப்புறங்களில் இருந்து நாட்டுப்புறத்திற்கு பரவியது. கைப்பந்து, கிரிக்கெட் போன்றவை.இவற்றில் ஆண்பிள்ளை விளையாட்டு, பெண்பிள்ளைகள் விளையாட்டு என இரண்டு வகை உண்டு. மேலும் கோடை, மழை என ஒவ்வொரு பருவத்திற்கேற்றவாறும் இவ்வகை விளையாட்டுகள் அமைந்துள்ளன. அரசுப்பள்ளிகளில் இதற்கென்று ஒருதுறையும் உள்ளது. பி.டி.வாத்தியார் என அழைப்பார்கள். பி.இ.டி. பிரியட்டில் அனைத்து மாணவர்களும் விளையாட்டு மைதானத்திற்கு சென்று தங்கள் விருப்பப்படி விளையாடுவார்கள். இன்று கல்வி வியாபாரமாக்கப்பட்டதைத்தொடர்ந்து தங்கள் பள்ளிகள் கல்வியில் முதல் இடம் பெறவேண்டும் என்ற நோக்கில் விளையாட்டுத்துறை பெயரளவில் செயல்படுவது கண்கூடான உண்மை.
கிராமப்புற விளையாட்டுக்களை பல வகைப்படுத்தலாம். ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், ஜோடிப்புறா, வண்டிப்பந்தயம், கோலிக்குண்டு,சிலம்பு, ச+ விளையாட்டு என பலவகையுண்டு. இதில் அகவிளையாட்டு மற்றும் புறவிளையாட்டு என்ற இருவகை உண்டு. வீட்டினுள் விளையாடப்படும் அகவிளையாட்டுக்களான தாயம், பல்லாங்குழி, ஆற்றங்கரையில் மணலில் விளையாடப்படும் கீச் கீச் தாம்பலம்.. கியா கியா தாம்பலம், தொட்டுப்பிடித்தல் விளையாட்டு, கண்ணாமூச்சி ரே..ரே. விளையாட்டு. ஆண், பெண் இருபாலரும் விளையாடும் கல்லாங்காய் எனப்படும் சுட்டி பிடித்தல், நீர்விளையாட்டு என உள்ளது. இவ்விளையாட்டுக்கள் பருவத்தின் தன்மைக்கும் மாறுபடும். ஒரு பருவத்தில் கிட்டிப்புள்ள விளையாட்டு, மற்றொரு காலத்தில் பம்பரம், ஒரு காலத்தில் புளியங்கொட்டை, காற்றாடிக்கும் காலத்தில் பட்டம் விடுதல் போன்ற விளையாட்டுக்கள் என பல வகை உண்டு. இதே போல ஆண்களின் வீர விளையாட்டாக புலிவேடம், சடுகுடு விளையாட்டு, இளவட்டக்கல், ஓட்டம், மோடி விளையாட்டு, தாயம், பல்லாங்குழி, மஞ்சள் நீர் தெளித்தல், அம்மாணை ஆடுதல், கயிறு குதித்தல் முதலியவை மனமகிழ்ச்சி உணர்வை மையமிட்டே அமைகின்றன.
ஆடுபுலி ஆட்டம்
இந்த விளையாட்டு அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டுக்கு மூளையைச் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி ஆட வேண்டியிருக்கும். இந்த விளையாட்டிற்கு மூன்று சிறுகற்களும் 15 புளியங்கொட்டைகளும் தேவைப்படுகிறது. ஆடுகளைக்கொண்டு புலியை நகர விடாமல் கட்டியும் விடுவார்கள். புலியால் ஆடுகள் வெட்டவும் படும். இவ்வாறு நாட்டுப்புற ஆண்கள் விளையாடும் இவ்விளையாட்டு தற்பொழுது சதுரங்கம் என்ற செஸ் விளையாட்டாக மமாறிவிட்டது.
நீச்சல் விளையாட்டு
தேனிப்பகுதியில் மழைக்காலங்களில் இவ்விளையாட்டு விளையாடுவார்கள். ஆறு, மதகு, கிணறு போன்ற பெரிய வாய்க்காலில் சிறுவர்கள் குதித்து விளையாடி மகிழ்வர். இதற்கு எண்ணிக்கை இல்லை. கரையில் ஒரு புறமிருந்து மறுகரையை தொடவேண்டும். முதலில் தொட்டவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவர். இதற்கு நீச்சலிடிக்கும்போது நீரில் மூச்சுவிடுவது எப்படி, நீரில் மூழ்காமல் எழுந்து நிற்பது ஆகியவை. இயற்கையாக நீச்சலடிப்பது வேறு. ஆனால் நீச்சலடிக்கும்போது சுவாசிப்பது கடினம். மூச்சுப்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானது. இதற்கு பயிற்சியாளர் சுரக்காய் குடுவை, டயருடைய டய+ப் போன்றவற்றை வயிற்றில் கட்டி பழக்கிவிடுவார்கள்.
கிட்டிப்புள்ளை
பரந்த மைதானத்தில் ஓரிடத்தில் இரண்டு கம்புகளை வைத்து விளையாடு விளையாட்டாகும். அதில் ஒரு கம்பு சிறியதாகவும், மற்றொன்று கம்பு பெரியதாகவும் இருக்கும். மைதானத்தில் ஓரிடத்தில் கிட்டியை வைக்க ஒரு கோட்டைக் கிறுவார்கள். அதன் மையத்தில் கொஞ்சம் கீழே செங்குத்தாக குழிவடிவில் ஒரு குறுக்குக்கோடு போட்டு இந்தக் குறுக்குக் கோட்டிலிருந்துதான் புள்ளைக் கீந்துவார்கள். அப்படி கீந்திய புள்ளை எதிர்ப்புறமாக இருப்பவர் கிட்டியை நோக்கி வீசுவார். புள்கிட்டியின் மேல் பட்டுவிட்டால் ஆட்டம் இழந்து விடுவதாகப் பொருள்படும். அப்படிப் படவில்லையென்றால் கிட்டியானவர் புள்ளைத் தட்டி எழுப்பி அடிப்பார். அவருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த அளவைக்கொண்டு ஸ்கோர் கணிப்பர். குழுவினர் அனைவரும் முடிந்துவிட்டால் எதிரணியினர் ஆடுவர். இதுவே கிட்டிப்புள் விளையாட்டாகும். இவை பரிணாம வளர்ச்சி அடைந்து கிரிக்கெட்டாக உருமாறியது. தற்பொழுது நாடுகளுக்கு இடையே போட்டியையும், வெறுப்பையும், பல நுகர்பொருட்களை விற்பனை செய்வதற்கும் மோசடிகள் நடைபெறுவதற்கும் உகந்த விளையாட்டு. இதனை பெர்னாட்சா பதினொரு முட்டாள் விளையாட பதினொரு ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று கூறினார்.
இளவட்டக்கல்
ஒவ்வொரு ஊரிலும் கிராமங்களில் இளவட்டக்கல் என்ற கல் பந்தைப்போல் உருண்டையாக இருக்கும். திருமணம் முடிக்கின்ற வயதிற்கு வருகின்ற ஆண் அந்தக்கல்லை தூக்கி பின்புறம் எரிய வேண்டும். அப்போதுதான் அவனுடைய வீரத்தையும், உடல்திறனையும் வைத்து பெண் கொடுக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்துள்ளது. தற்பொழுது கெங்குவார்பட்டி பகுதியில் கேட்பாரான்றி இளவட்டக்கல் ஒன்று உள்ளது.
கோலிக்குண்டு
இரண்டு நபர்கள் சேர்ந்து இரண்டு கோலிக்குண்டை அடித்து விளையாடுவதும், ஈரமான மண்தரையில் ஒரு குழியை தோண்டி குண்டை விழவைக்கும் விளையாட்டு உள்ளது. அதே போல 10க்கும் மேற்பட்ட குழிகளை தோண்டி அதில் சிறிய குண்டுகளைப்போட்டு பெரிய குண்டால் அடிப்பது ஒரு வகையான விளையாட்டு.
தாயக்கட்டை
தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவெங்கும் பெண்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று தாயக்கட்டை. பண்டைய காலத்தில் முதன்மை இதிகாசமான மகாபாரத்தில் தாயக்கட்டையின் பங்கு இன்றியமையாததாக அமைந்துள்ள, அரசன் முதல் ஆண்டிவரை தாயம் உருட்டுதல் பொழுதுபோக்குமட்டுமின்றி ஒரு பாரம்பரியச் சடங்காகவும் அமைந்திருக்கிறது. அரசன் பகைவனால் தாயம்  ஆட அழைக்கும்போது மறுத்தால் அது சத்திரிய தர்மத்திற்கு எதிரானதாக கருதப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் அழகன்குளம், பழனி அருகே உள்ள பொருந்தில் ஆகிய இடங்களிலும் ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், குணால் ஆகிய சிந்துச் சமவெளி நாகரிகம் நிலவிய பகுதிகளின் அகழாய்வுகளிலும் தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன.
தாயம் என்ற சொல் ஆயம் என்ற பொருளிலும், இலக்கியங்களில் வந்துள்ளது. தாயத்தை உருளாயம், ஆயங்கொளின், உருளாயச் ச+தாடி, ஆயம் பிடித்தாரும், தப்பிலாத கவறுருண்ட தாயம் என்று பல பெயர்களில் சீவகசிந்தாமணி, பெரியபுராணம், நளவெண்பா, வில்லிபாரதம் போன்ற இலங்கியங்களில் அழைக்கப்பட்டுள்ளது. மேலும் பேசும் கல், வட்டு, கவறு, சோழி அல்லது சோகி, விபீதகக் கொட்டை, தாயம் ஆகியவற்றை ச+து என்ற பொருளில் அழைத்துள்ளனர்.  தாயம் என்பதற்கு வல் என்ற பொருள் உண்டு. வல் என்பது வல்சி அதாவது உணவு என்ற பொருளில் ஐங்குறுநூறு, நற்றினை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகியவற்றிலும் புறநானூறு ஆகிய பாடல்களிலும் பயின்று வருகிறது. தொல்பழங்குடி மக்களிடையே முதலில் உணவினைப் பங்கிடுவதற்கே தாயம் பயன்படுத்தப்படுள்ளதால் அது வல் என்று பெயர் பெற்றுள்ளது. வேத கால மக்களிடையே குதிரைப்பந்தயமும், ச+தாட்டமும் பொழுது போக்காக இருந்தன. அக்ச-தாயக்கட்டை அக்ச குக்தம் என்பது ரிக் வேதத்தில் பயின்று வரும் ஒரு அங்கமாகும். அக்ச-கிரிஷி பிரசம்ச அக்ச கித்தவ நின்த,அதாவது வேளாண்மையுடன் தொடர்புடைய சீட்டு ச+தாட்டத்துடன் தொடர்புள்ள தாயம் ஆகியவற்றினைப் புகழ்வதாகப் இகச்ச+க்தம் ஆகியவற்றினைப் புகழ்வதாக அமைந்துள்ளது.
சமூகத்தில் தாயம்
சங்க காலத்தமிழ் மக்களும் கடவுள் தங்கியிருந்த தூண் அமைந்துள்ள மன்றத்தில் தாயம் ஆடியதாகக் கூறுகின்றது.
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
புலிகண் மாறிய பாழ்படு பொதிகையில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே
புறம் 52:12-17
மேற்கண்ட பாடலில் வல என்ற சொல் தாயத்திற்குத் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாயிடக் குழிந்த என்பதில் உள்ள நாய் என்பது தாயம் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஆட்டத்திற்கான காய்களே ஆகும். ஆட்டத்தில் நாய்களை இட்டு இட்டு அவ்விடம் குழிந்து காணப்பட்டதாகப் பாடல் கூறுவதிலிருந்து, மன்றத்தில் தொடர்ச்சியாகத் தாயம் ஆடப்பட்டிருக்கவேண்டும் என்பதும் முதியோர் ஆடியதாகக் கூறப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் காட்டப்படும் குறிஞ்சி நிலத்துத் தலைமகளாவாள். இவள் வேட்டையில் கொண்டுவரப்படும் பொருள்களை பகுப்பவள் ஆவாள். ஆக தாயம் என்ற சொல் பண்டைக்காலத்தில் அதாவது ச+தாட்டமாகக் கொள்வதற்கு முன்னால் உணவு பொருள்கள், நிலம் ஆகியவற்றை சமமாகப் பங்கிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தாயத்தின் அடுத்தகட்டமாக சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு நிலம், உள்ளிட்டவை பிரிக்கப்பட்டன. ச+தாட்டம் என்ற சொல்லிற்கு முன்பாக பங்கீடுதல் என்ற பொருளில் இந்த விளையாட்டு பின்பற்றப்பட்டு புனிதமான விளையாட்டாக கருதப்பட்டது.
மணல் விளையாட்டு
; மழை பொழிந்தால் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று கிச்சு கிச்சு தாம்பலம் விளையாட்டு. மணலைகுவியலாக வைத்து விளையாடப்படும் விளையாட்டு. தற்பொழுது தெருக்கள் அனைத்தும் சிமிண்;ட் தளம், பேவர் பிளாக் கல், தார்ரோடு போன்றவற்றால் மணல்ரோடுகள் காண்பது அரிதாகிவிட்டது, மேலும் தற்பொழுது ஆங்கில மோகம் கொண்டு பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மணலில் விளையாடினால் தோல் நோய், அலர்ஜி ஏற்படும் எனக்கூறி இவ்விளையாட்டை தவித்துவருகின்றனர்.
குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று மணல் விளையாட்டு. கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. சில வேளைகளில் பெரியவர்களும், சிறுவர்களோடு சேர்ந்து கொள்வர். சிறு மணல் கரையில் துரும்பை மறைத்துக் கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு. இந்த ஆட்டத்திற்கு இரண்டுபேர்கள் ஆட்ட நாயகர்கள். ஒருவர் துரும்பை மறைப்பவர். மற்றொருவர் கண்டுபிடிப்பவர். இருகைப் பெருவிரலிலும் இணைந்து விரல்கள் நீட்டப்பட்ட நிலையில் கைக்குள் அடங்கும். மணல் அல்லது புழுதி மண் கரை அமைக்கப்படும். அதன் நீளம் விளையாடுபவர் கையில் ஒரு முழம் இருக்கும்.
கிச்சுக் கிச்சுக் தம்பலம்
கிய்யாக் கிய்யாத் தம்பலம்
மச்சு மச்சு தம்பலம்
மாயா மாயா தம்பலம்
இப்படி பாடிக்கொண்டு தன் கையிலுள்ள துரும்;பை ஒருவர் மறைப்பார். கண்டுபிடிப்பவர் தம் இருகை விரல்களையும் கோத்துக்கொண்டு துரும்பு இருக்கும் இடத்திலுள்ள கரையை பொத்திக் கொள்வார். மறைத்தவர் கை பொத்தப்படாத கரையைக் கிண்டித் தான் மறைத்த துரும்பை எடுக்கவேண்டும். அப்பகுதியில் துரும்பு இல்லையென்றால், இருக்குமிடத்தைக் கையால் பொத்தி மறைத்தவர், தான் மறைத்த இடத்தில் துரும்பு இருப்பதை எடுத்துக் காட்டவேண்டும்.யார் கையில் துரும்பு அகப்படுகிறதோ அவர் துரும்பை மறைக்கும் ஆட்டத்தைத் தொடங்குவார். இது ஒரு ஊக விளையாட்டு. சங்க காலம் தொட்டே இப்படி மணல் விளையாட்டுக்கள் மறைந்து போவதற்கு நாகரீகத்தை விரும்பும் பெற்றோர்கள் காரணமாகி நிற்கிறார்கள். குழந்தைகளின் அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டுகளில் ஒன்றான கிச்சு கிச்சு தாம்பலம் விளையாட்டு தற்பொழுதுள்ள குழந்தைகளுக்கு என்ன விளையாட்டு என்று கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது.
தற்பொழுது அறிவை மழுங்கடிக்கும் கம்;ப்ய+ட்டர், லேப்-டாப், செல்போன், வீடியோ கேம்ஸ் என அறிவுத்திறனை சோதிக்காமல் ஆடம்பர விளையாட்டுக்களின் வருகையால் பாரம்பரிய விளையாட்டுக்கள் கற்றுக்கொடுக்க கூடிய ஆட்களும் இல்லை. விளையாடக்கூடிய மனநிலையிலும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியத்தில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு நாட்டுப்புற விளையாட்டுக்கள் ஏதாவது ஒருவகையில் அதனை வெளிப்படுத்துபவர்களின் உடலியல் உளவியல் கூறுகளின் வெளிப்பாடுகளாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
———————
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி
தேனி மாவட்டம்
அலைபேசி:9715-795795
Series Navigationஎன்னவைத்தோம்காணாமல் போகும் கிணறுகள்
author

Similar Posts

6 Comments

  1. Avatar
    arun says:

    A very good article. Children like myself not known any of them. we are living in a machine age. Hence, most of us behave like machines.

    thank you.

  2. Avatar
    ஷாலி says:

    //ஆடம்பர விளையாட்டுக்களின் வருகையால் பாரம்பரிய விளையாட்டுக்கள் கற்றுக்கொடுக்க கூடிய ஆட்களும் இல்லை. விளையாடக்கூடிய மனநிலையிலும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியத்தில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.//

    இதற்க்கு.செல்போன்,வீடியோ கேம்ஸ் மட்டும் காரணமல்ல…பார்த்தீனிய செடி போல் பரவி வரும் ஐபிஎல் எனும் மோசடி சூதாட்ட கிரிக்கட்டில் சிக்கியுள்ள கிறுக்கர்களும் காரணம்.சூனிய கிரிக்கெட்டில் நாடே மயங்கிக் கிடக்கும் நிலையில் பாரம்பரிய விளையாட்டை எங்கு போய்த் தேடுவது…?ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து ஒரு பத்தாண்டுகளுக்கு கிரிகெட்டை தடை செய்தால் பாரம்பரிய விளையாட்டுகள் உயிர்த்தெழும்.நாட்டின் வேலைநேரம் வீணாகாமல் உற்பத்தி பெருகும்.மட்டையடித்தவர்களே இன்று பாரதரத்னாவாக பரிணாமம் எடுக்கும்போது பாரம்பரிய விளையாட்டை படு குழியில் தள்ள வேண்டியதுதான்.கிச்சுக் கிச்சு தம்பலமாவது…கிய்யா கொய்யா தம்பலமாவது…….!

  3. Avatar
    Meenakshi Balganesh says:

    அருமையான கட்டுரைக்கு நன்றி. நான் சிறுமியாக விளையாடிய பாண்டி ஆட்டம் தற்போது காணவே கிடைப்பதில்லை. எத்தனை பேருக்கு இதைப்பற்றித் தெரியும்? தெரிந்தவர்கள் வீடியோ பதிவு செய்து வைத்தாலாவது இவை ஆவணப் படுத்தப்படும்! நமது அடுத்தடுத்த தலைமுறையினர் இவற்றைக் கண்டாவது களிக்கலாமே! ஹும். இப்படியும் ஒரு காலத்தின் விபரீதம்!

  4. Avatar
    paandiyan says:

    நீங்கள் ஒன்றை பார்க்கவில்லை என்றால் அது உலகத்தை விட்டு போயிவிட்டது என்று அர்த்தம் இல்லை!!–

    வைகை அனிஷ்க்கும் நான் சொல்வது அதுதான்.

  5. Avatar
    BS says:

    மீனாட்சி பாலகணேசனுக்கு எந்த ஊரம்மா? தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் (பேரூர்களில் மட்டும் எல்லாவிடங்களிலும் என்று வராது) பெண்பிள்ளைகள் அதே விளையாட்டை விளையாடிக்கொண்டுதானிருக்கிறார்கள். என் வீட்டிலிருந்து அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது என் பொழுதுபோக்குகளுள் ஒன்று.

  6. Avatar
    BS says:

    //தற்பொழுது அறிவை மழுங்கடிக்கும் கம்;ப்ய+ட்டர், லேப்-டாப், செல்போன், வீடியோ கேம்ஸ் என அறிவுத்திறனை சோதிக்காமல் ஆடம்பர விளையாட்டுக்களின் வருகையால் //

    சிரித்தேன்.கட்டுரையாளர் தன் வயதைக்காட்டிவிட்டார்.

Leave a Reply to Meenakshi Balganesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *