மறைபொருள் கண்டுணர்வாய்.

This entry is part 31 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

காலையில் புது புடவையணிந்து பளிச்சென்று கிளம்பியபோது ராதிகா நம்பினாள்.அது ஒரு இனிய நாளாக இருக்க வேண்டும் என்று. அன்று விடுப்பு எடுத்திருக்கலாமே என்று அவள் கணவன் கூறியதை மறுக்க இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது அன்று முடிக்க வேண்டிய முக்கியமான அலுவலக வேலைகள். இரண்டாவது, யாரும் உடனில்லாமல் அவள் மட்டுமே வீட்டில் தனித்திருக்க வேண்டும். அவள் பள்ளியில் படிக்கும்போது “வீட்டில் சாமி கும்பிடறாங்க!, கோவிலுக்கு போறோம் , பாட்டிக்கு உடம்பு சரியில்ல” என்றெல்லாம் எடுத்த விடுமுறைகள் இப்போது அவளுடைய குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டுவிட்டதால் அவர்களும் விடுப்பு எடுக்க முடியவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறந்த மணி நேரக் கொண்டாட்டம் ஆகிவிடும் போல். கேக் வெட்டி, பாரம்பரியமான ” ஹாப்பி பர்த் டே” பாடி முடிந்துவிடுகிறது – பழந்தமிழகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை போலும். இருந்திருந்திருந்தால் ஏதாவது ஒரு புலவர் வாழ்த்துப் பாடல் பாடியிருப்பாரே – இதற்கு மட்டும் ஆங்கிலத்தை நாட வேண்டியுள்ளது.

பிறந்த நாள் கொண்டாடி முடித்து, அலுவலகம் சென்றால், தோழியரின் இனிய நாள் வாழ்த்துக்கள் கிட்டின. புன்னகையுடன் அவள் இருப்பிடம் சென்றாள். அவளது மேஜையின் மேல் குறிப்புப் புத்தகம் இருந்தது. அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் அதில் இருக்கும்.. முதல் நாளே மறு நாளைய வேலைகளை குறித்து வைத்து விடுவாள். அப்போதுதான் மறுநாள் வந்தவுடன் தாமதம் இல்லாமல் வேலையினை தொடங்க சரியாக இருக்கும். ஒரு உண்மையென்னவெனில் சில பொல்லாத நாட்களில் பட்டியலில் இல்லாத பணிகள் திடுமென்று வந்து சேர்ந்துவிடும். மாலை வீடு திரும்பும்போது பட்டியலில் முடிக்கப்படாத அன்றைய வேலைகளுடன் மறுநாளைய குறிப்பும் சேர்ந்து மலைக்க வைக்கும்.

சரி, இன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறிப்புப் புத்தகத்தை பார்வையிடத் தொடங்கினாள். முதல் வேலை பாக்கித் தொகையை தர வேண்டி ஒரு நினைவூட்டு கடிதம் தயாரிக்க வேண்டியிருந்தது. கடிதம் அனுப்ப வேண்டிய நிறுவனத்தின் விவரங்களுடன் கடிதத்தை கணிப்பொறியில் வடிவமைத்தாள். அருகே வந்து எட்டி பார்த்த வினு “அனுப்புனர் யாருப்பா? அட, அந்த குடாக்கு பெயரிலா அனுப்பனும். இன்னிக்கு எத்தனை ரிம் பேப்பர் செலவாகப் போகிறதோ” என்று கவலைப்பட்டாள்.

ஏனெனில் ‘அந்த குடாக்கு’க்கு தன்னுடைய (இல்லாத) ஆங்கிலப் புலமையில் அத்தனை பெருமை. ஒரு கடித்தை – ஏற்கனவே அவரின் ஒப்புதல் பெற்ற மாதிரியினை வைத்தே தயாரித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் திருத்தம் இருக்கும். பல வேலைகளை முடிக்கும் அருமையான மணி நேரங்களை இந்த ஒரே வேலை மாலைவரை இழுத்துவிடும். திரும்ப திரும்ப செய்ததனால் தலைவலி வேறு வந்துவிடும். ஒரு நினைவூட்டுக் கடிதத்தினை கவிதைப் போட்டிக்கு அனுப்பப்போகின்ற படைப்புபோல வார்த்தைகளை தேடித்தேடி மாற்றிக் கொண்டேயிருப்பார். எதிரிலேயே நின்று திருத்தம் செய்து வாங்கி, நடையாக நடந்து கடித்தில் கையொப்பம் வாங்கும் முன் கால்வலி வந்துவிடும். முகமும் மாறிப்போய்விடும். வேலை நேரமும் முடிந்து போகும்.

உங்களுக்கே தோன்றியிருக்கும் இதைப்போய் இன்று செய்ய வேண்டுமா என்ற கேள்வி. என்ன செய்வது… ஒரு அழகான வானவில்லை ரசிக்கவோ, மாலை நேரத்து மழையில் நனையவோ, சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியினை ரசிக்கவோ மறுப்பு தரும் சூழ்நிலை என்னும் கொடுங்கோலன்தான் இது போன்ற ஆரம்பம் முடிவு காண முடியாத இடியாப்ப சிக்கலை நம் விருப்பமில்லாமல் நம் தலையில் சுமத்திவிடுகிறான். இன்று வேணு விடுப்பு எடுத்திருந்ததால் இந்த பணி அவளுடையதாக மாறிப் போனது.

கடிதத்தின் முதல் நகலை எடுத்துக் கொண்டு சென்றபோது வழக்கத்தைவிட அதிகமாக கடினமான வார்த்தைகள் வந்து விழுந்தன. எதற்கு திட்டு விழுகிறது என்றே தெரியாமல் பொதுவாக பதில் சொல்ல நேருவதும் பிறருடைய தவறுக்காக சம்பதமில்லாதவர் இவற்றை எதிர் கொள்ளுவதும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிரமங்களில் ஒன்று – மற்றதுதான் தெரியுமே… குறைவான ஊதியம், அதிக வேலை. .வேணுவின் நேற்றைய பணியில் தவறு கண்டுபிடித்து திட்ட ஆரம்பித்தார்.

இதற்காக வேணுவை அவள் குறை சொல்லவும் முடியாது . ஏனெனில் இது போல அவள் விடுப்பு எடுத்த நாட்களில் சுமைதாங்கியாக அவன் நிற்பான். இப்போது தவறு என்று சொல்லப்படுவதற்கே சரியான விளக்கத்தை அவனால் நாளை வந்து சொல்ல முடியும். அதற்குள் இவளை வறுத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல வேணு நாளை வந்து விளக்கம் சொல்லும்போது பதிலே பேசாமல் தலையாட்டிவிடுவார். அவளுக்கும் இது போலத்தான் தொடர்ச்சியிருக்கும். தனக்கு கீழே வேலை செய்பவர்களை நேரிடையாக பாதிக்காமல் தன்னை பற்றிய ஒரு பயத்தை விதைக்கும் யுக்தியோ என்று கூட யோசித்திருக்கிறாள். என்ன ஒன்று, இன்று அவள் என்றால் நாளை யாரோ… திரும்பவும் அவள் மண்டகப்படி கிட்ட ஒரு வாரம் ஆகிவிடும். மாதம் நான்கு முறை அவளுடைய முறை.

இன்றைய விசயத்திற்கு வருவோம், அவள் பதில் பேசாததாலோ என்னவோ மூன்றாவது முறையிலேயே கடிதம் ஒப்புதல் பெற்றுவிட்டது. வெற்றிகரமாக வெளியே வந்த அவளிடம் வியப்பாக வினு ” உண்மையிலேயே நல்ல நாள்தான்” என்றாள். வினுவாக இருந்தால், அவரிடம் மல்லுக்கு நின்று பதில் பேசி இன்னும் பத்து முறை நடந்து காரியம் முடியும். அப்புறம் அவளது அறையில் கண்கள் கரிக்க அவள் விடும் கெட்ட திட்டு வாசல்படி தாண்டாமல் இருப்பது நலம் என்று ராதிகா வேண்டிக் கொள்வாள். “பெரிய கலெக்டர் வேலை. வேறு கிடைக்காதா என்ன? ” வேறு வேலை தேடும் முடிவிற்கு வினு செல்கையில் அவள்தான் சமாதானப்படுத்துவாள்.

அவளுடைய கைப்பேசி ஒலித்தது. “தங்கம் சார்” பெயரைப்போலவே தங்கமான மேலதிகாரி. ‘குடாக்’கிற்கு எதிர்மறை. தலைமை அலுவலகத்தில் இருந்து மாற்றலாகி வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. அவருடைய அமைதியான நடவடிக்கைகள் நிறைய பணிகளை முடிக்க வைத்து அற்புதமான நாளைத் தரும். புன்னகையுடன் அவர் அறைக்கு சென்றாள். வழக்கத்திற்கு மாறாக, சற்று கடினமான பார்வை பார்த்தார். அவளுக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது இந்த வாரத்தில் இது மூன்றாவது சம்பவம். சில நாட்களாகவே இப்படித்தான் அவளை எதிர் நோக்குகிறார். ஏதோ ஒரு பழி சுமத்துகிறார். அவர் மேல் வைத்த நம்பிக்கையில் அவற்றை அவளுடைய தவறாக ஒப்புக் கொண்டாள். உள்ளுணர்வு ஏதோ எச்சரிக்க பொறுமையாக கவனிக்க ஆரம்பித்தாள்.

“எத்தனை முறை இது போல தவறு செய்வீர்கள் ராதிகா. உங்களை நானும் மேலிடத்தில் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று ஆரம்பித்தார்.. உண்மையில், ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் மேலிடத்திற்கு அவளுடைய பெயர் கூட தெரியுமா என்பது சந்தேகம்தான்.

“இந்த டிராப்ட் எவ்வளவு தவறாக இருக்கிறது பாருங்கள்” என்று தூக்கியெறிந்தார். அது அவள் செய்த வேலையில்லை. அதைச் சொன்னால், அந்த நிறுவனத்தில் நீண்ட நாட்களாக வேலை பார்ப்பதால், இது போல மற்றவர் வேலைகளின் நல்லது கெட்டதையும் சுமக்கும் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பார். அவர்களுக்கு அவள் கற்றுத்தர வேண்டும் என்றும் சொல்லுவார். மற்றவர் வேலையில் அநாவசியமாக தலையிடும் உரிமை அவளுக்குக் கிடையாது. அதுவும் தற்போது வேலைக்கு வருபவர்கள் எல்லாம் அடுத்தவரிடம் ஆலோசனை செய்வதை தவிர்க்கிறார்கள் என்பதும் உண்மை.

அவளிடம் உதவி கேட்பவர்களுக்கு மறுக்காமல் ஆலோசனை தருவாள். சொல்லித் தருவாள். அவர் சொன்ன மேலிடத்திற்கு அது தெரிய வேண்டும் என்றுகூட விரும்ப மாட்டாள். அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு உண்மை அவளுக்கு புலப்பட்டது. அவளை மட்டுமே இவ்வாறு சிக்கலில் ஆழ்த்துகிறார். ஒரு குற்ற உணர்ச்சியில் அவளை தலைகுனிந்து நிறுத்துகிறார். தங்கம் சாரிடம் அடிக்கடி திட்டு வாங்குவது உரைத்தபோது கண்களில் கண்ணீர் பெருகியது. சட்டென திட்டுவதை நிறுத்திவிட்டு கரிசனம்போல் அவர் பார்த்த பார்வையில் மனம் நெகிழ ஆரம்பித்தவள், திடுக்கிட்டாள். இதில் ஏதோ பொய் உள்ளது. ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் எதுவின் பார்வையோ நிழலாடியது. சட்டென விரைப்பாக நிமிர்ந்தவள், “இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன், சார்” என்றுவிட்டு வெளியே வந்தாள்.

அறையை விட்டு வெளியே வந்தவளிடம் வினு ஓடி வந்தாள்.” என்னப்பா, பிறந்த நாளும் அதுவுமாக அழுது கொண்டு…” என்று சமாதனம் சொன்னாள். அவளிடம் தலையாட்டி மறுத்துவிட்டு இருக்கைக்கு திரும்பினாள். சற்று யோசித்த போது குழப்பமாக இருந்த சில விசயங்கள் பிடிபட, ஒரு முடிவிற்கு வந்தாள். வழக்கமாக அலுவலக விசயம் எதைப்பற்றியும் கணவனிடம் பேசாத அவள் அன்றைக்கு நிகழ்ந்தவற்றை சொன்னாள். அவ்னுடைய ஒப்புதலுடன் மறு நாள் வேலையை ராஜினாமா செய்தாள்.

ஏன் இந்த முடிவு என்று யோசிக்கிறீர்களா? குடாக்கின் செயலுக்கு சமாதானம் சொன்னவள், தங்கமுத்துவின் கெடுபிடியை ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை? எல்லோரையும் உதைக்கும் கழுதையை நம்பமுடியும். ஏனேன்றால் அதன் குணம் தெரிந்துவிட்டது. அதற்கு அனைவரும் ஒன்றுதான். ஒருவரிடம் மட்டும் புலித்தோலை போர்த்திக் கொள்ளும் பசு அவரிடம் மட்டும் புலியாக நினைப்பது பாதுகாப்பற்றது. . இனும் சிறிது நாட்கள் கழித்து பெரிய ஆபத்திலிருந்து அவளை தப்புவித்த நன்றியுணர்வு அவளுக்குள் விதைக்கப்படும். எப்போதோ போக வேண்டிய வேலையை காப்பாற்றிக் கொடுத்தவர் என்று . மனதளவில் அடிமையாகும் வாய்ப்புகள் ஏற்படலாம். மேலும், இதெல்லாம் வெளியே செய்தியாக பரப்பப்படலாம். இது ஒரு யானையை சிக்க வைக்கும் பொறியாக மாறலாம். ஏதாவது விலையாக கேட்கப்படும்போது மறுத்தாலும் பழி வந்துதான் சேரும். அவளுக்காக ஏதோ வலை விரிக்கப்படுவதை உணர்ந்து கொண்ட தப்பித்தல்தான் அது. அதுதான் யுகந்தோறும் பெண்ணை மனித மிருகங்களுக்கு பலியாகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வழிவழியாக தரப்பட்ட எச்சரிக்கை உணர்வுமாகும்.

சாகம்பரி `

Series Navigationகூடுகாலம்
author

சாகம்பரி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *