மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20

This entry is part 26 of 41 in the series 8 ஏப்ரல் 2012

“அரசகுற்றத்திற்கு மரணதண்டனைபெற்ற அநேகருக்கு இங்கே தான் சமாதி. நேற்று அரசர் பரிவுடன் நடந்துகொண்டார்.இல்லையெனில் கணிகைப்பெண் சித்ராங்கியும் இந்தக்கிணற்றில்தான் பட்டினி கிடந்து செத்திருப்பாள். கொஞ்சம் இப்படி வாருங்கள். இந்த இடத்தில் காதை வைத்து கேளுங்கள். ”

22. சாம்பல் நிற கீரி ஒன்று முட்செடிபுதரிலிருந்து மெல்ல ஓடி வருகிறது. இவர்களைப்பார்த்ததும் அசையாமல் ஓரிரு கனங்கள் நிற்கிறது. தனது கூர்மையான கருத்த மூக்கை அரசமர சருகுகளைச் சீய்த்து எதையோ தேடுவதுபோல பாவனை செய்தது. நிமிர்ந்தபோது அதன்கண்களிரண்டும் இளம்வெயிலில் ஈரத்தன்மையுடன் ஒளிர்ந்தன. தெளிந்த நீரில் நீலவானம் அசைவின்றி இருக்க, நீரின் மேற்பரப்பில் மலர்ந்த குமுதம் நாணத்தால் வெளுத்திருந்தது. குளத்தின் பாதிநீரை ஆக்ரமித்துக்கொண்டு மரகதப் பச்சையில் அதன் இலைகள் மிதந்துகொண்டிருக்கின்றன. பெயர் தெரியாத பறவையொன்று தன்னைத் தாங்கக்கூடுமென்ற துணிச்சலில் பொருந்தமான இலையொன்றைத் தேடி, கால்களின் கூர்நகம் கிழித்திடாமல் மெதுவாய்ப் பறந்துவந்து உட்காருகிறது. காத்திருந்தது போல வேகமாய் ஓடிச்சென்று அதன் கால்விரல் சவ்வினை பற்றி ஏறிய சிலந்தியை, கொத்தமுயன்று தோற்ற பறவை மீண்டும் இறக்கை அடித்து மேலே பறந்தது அதன் முதுகு மஞ்சளாகவும் வயிறு கருப்பாகவும் இருப்பதை இருவருமே கண்டார்கள், நீண்டிருந்த அதன் வால் மயிலிறகின் நீலத்திலிருந்தது. பாதரே பிமெண்ட்டா ‘ஜகனா’ வென்று வாய் திறந்து கூவினார். வேங்கடவன் சிரித்தான். “அது ஒருவகை இலைக்கோழி” என்றான். அவர் ஆம் என்பது போல தலையாட்டினார். உடலில் நீலமும் மஞ்சளும் கலந்தகோடுகளைப் போட்டிருந்த அரணைகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு ஓடுகின்றன. அதிலொன்று அதன் கீழ்த்தாடை பையை உப்பவைத்துக்கொண்டு தலையை உயர்த்தி பார்க்கிறது. வைணவர்களால் கருடனென்று கொண்டாடப்படும் சிறிய கழுகு விஷ்னுவின் வாகனம் சிறகுகளை முழுவதுமாக விரித்து காற்றில் நீந்திச்செல்வதும் குளத்து நீரில் தெரிகிறது, அது ‘கீச்’சென்று நீட்டி சத்தமிட இருவர் தலைகளும் பின்புறம் சாய்ந்து குரல்வந்த திக்கைப்பார்த்தன. அடுத்தகணம் அமைதியாக எவர் வம்பும் வேண்டாமென்றிருந்த நீரை அதன் கூறிய நகங்கள் கிழித்து மீண்டும் விசுக்கென்று எழுந்தது. நீர்ப் பரப்பில் முத்து பரல்கள் சிதறி இறைந்தன. கருடனின் கால்களில் தவளையொன்று கிழிபட்டு தொங்குவதை பார்க்கிறார்கள். பிமெண்ட்டாவின் உடல் வெடவெடத்து அடங்கியது. அப்போது தான் குளத்து நீரை அவதானித்தார். அல்லிதண்டுகளில் தொற்றிக்கொண்டும், இலைகளின் மேற்பரப்பில் குதித்து இரைதேடியபடி பச்சை தவளைகளும், மண்டூகங்களும் இருந்தன. அங்கிருந்து கண்களை பொன் வண்டுகள் சத்தமிடும் கொடுக்காப்புளி மரத்திற்காய் திருப்பியபொழுது மரக்கிளையொன்றில் தேனடை கண்ணிற்பட்டது. தேனிக்கள் பறப்பதும், பறந்து அலுக்கிறபோது உட்காருவதுமாக இருக்கின்றன, தேன் ஒழுகி கிளைகளில் சொட்டிக்கொண்டிருந்தது.

– ம்.. இயற்கை விநோதமானது. ஒன்றின் முடிவில்தான், மற்றதின் ஆரம்பம். – பாதரெ பிமெண்ட்டா.

– உயிரின் வாழ்க்கையும் இந்த விதிமுறைக்குள்தான் அடங்குகிறது. அதைத் துறவிகளைக்காட்டிலும் நாங்கள் அதிகம் உணர்ந்திருக்கிறோம்.

– நேற்று அவையில் பார்த்தேனே. உனக்கு எத்தனை துணிச்சல்? சிறுவனென்று நினைத்தேன். நேற்றைய உனது நடத்தையைப் பார்த்து, எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். அவர் மன்னரென்பதை மறந்து விட்டாயா என்ன?

– நீங்கள் சொல்வதும் உண்மைதான். கொள்ளிடத்து பாளையக்காரரான எனது தந்தையும், பெண்னாற்றங்கரையிலுள்ள திருவதி பாளையக்காரரும், வேலூர் லிங்கம நாயக்கரும் கிருஷ்ணப்ப நாயக்கருக்கு அடங்கியவர்கள். கிருஷ்ணபுரத்தின் தயவில்தான் எங்கள் பாளையங்கள் இருக்கின்றன. இருந்தாலும் கிருஷ்ணப்ப நாயக்கரை சித்தப்பா சித்தப்பா வென்றுதான் அழைப்பேன். அந்த உரிமையிலேதான் நேற்று அப்படி நடந்து கொள்ள நேர்ந்தது. அதுவும் தவிர நாளை நீங்கள் கிருஷ்ணபுரத்தைவிட்டு கொள்ளிடத்திற்கு பயணப்படுகிறபோது, மன்னர் என்னை துணையாகச் செல்லும்படி உத்தரவிட்டதையும் கேட்டீர்களல்லவா?

– அதையும் கேட்டேன், அதற்கு முன்னால் நீ மன்னரிடம் “இந்தப்பெண்ணை வைத்துக்கொண்டு நாட்டையும் உங்கள் அரியாசனத்தையும் கொடுங்கள், நான் கிருஷ்ணப்ப நாயக்கராக கொஞ்சநாளைக்கு இருந்து பார்க்கிறேன்” எனக் கூறியதையும் கேட்டேன். ஆமாம் யார் அந்தப் பெண். இருந்தாலும் அவளுக்கு கூட இத்தனை தைரியம் கூடாது.

– ஆமாம் நான் கூட அதனை எதிர்பார்க்கவில்லை.

– யார் அந்தப் பெண்?

– அவளொரு கணிகை. எங்கள் பாளையத்தை சேர்ந்தவள். பெயர் சித்ராங்கி, அவளுடைய தாயாரும் அவளுமாக சிதம்பரத்தில் இத்தனை நாட்களாக வாழ்ந்தார்கள். கடந்த மாதத்தில் கோவிந்தராஜர் திருப்பணியை நடக்கவிடமாட்டோமென்று தில்லை தீட்சதர்கள் உயிரைமாய்த்துக்கொண்டார்களில்லையா?அப்படி உயிரை மாய்த்துக்கொண்டவர்களில் இவளை ஆதரித்துவந்த தீட்சதரும் ஒருவர். மன்னர் தஞ்சைக்கு போகிறபோதும் எங்கள் பாளையத்திற்கு வருகிறபோதும் சித்ராங்கியை காணாமற் திரும்பியதில்லை. தீட்சதர் இறந்தபிறகு நாயக்கரின் அரவணைப்பில் காலம் தள்ளலாமென்று கிருஷ்ணபுரம் வந்திருக்கிறார்கள். தாயும் மகளும் வந்த நாளிலிருந்து மன்னரை காண அரண்மனை வாசல்வரை வருவார்களாம், பின்னர் திரும்பிப்போய்விடுவார்களாம். காரணம் அச்சம். பிறரிடம் சொல்லவும் கூச்சம். எனக்கு இடையர் தெருவில் ஒரு சினேகிதனிருந்தான். அவன் இவர்களை அழைத்துவந்து உதவிசெய்யவேண்டுமென்று கூறினான். பிறகு நடந்ததென்னவென்று நீங்கள் அறிவீர்களே.

– ஆம். கணிகையர் தெருவில் ஒரு வீட்டை அவர்களுக்குத் தானமாக வழங்கும்படி மன்னர் உத்தரவிட்டதை கேட்டேனே.

– ஆமாம். ஏதோ என்மீதிருந்த அபிமானத்தால் அந்த உத்தரவு பிறந்தது. இல்லையெனில் அந்தபெண்ணின் பேச்சுக்கு மரணக் கிணறு வாய்த்திருக்கும். தப்பித்தாள்.

– எனக்குக்கூட வியப்பாக இருந்தது. இரக்கமின்றி பல உயிர்களின் சாவுக்கு நீங்கள் காரணமாக இருந்திருக்க வேண்டாம் என்றாளே. நானறிந்த வகையில் இந்துஸ்தான பெண்கள் மிகவும் அடக்கமானவர்களாயிற்றே. .

– அது உயர்குல பெண்களிடம் எதிர்பார்க்கவேண்டியது. இவளைப்போன்ற பரத்தையரிடம் நாம் அதனை எதிர்பார்க்கமுடியாது. மன்னர் அரன்மணை பொக்கிஷங்களையெல்லாம் உங்களுக்குத் திறந்து காட்டினாரென்று கேள்விபட்டேன்.

– ஆமாம் பிரதானியையும், பொக்கிஷ நிர்வாகியையும் வரவழைத்து எனக்குக் காட்டுமாறு பணித்தார். அப்பப்பா எவ்வளவு நகைகள், பொன்னும் மணியும், வைரமும் வைடூரியமும், மாணிக்கமும், பவழமும், முத்தும்.. ஒரு துறவியிடம் காட்டக்கூடாதுதான், நானும் மறுத்திருக்க வேண்டும். என்ன செய்வது? மன்னரின் , உபசரிப்பிற்கு இங்கிதத்துடன் நடந்துகொள்ளவேண்டுமென தாம்பூல தரிக்கும் விவகாரத்தில் எனக்கு நீ பாடம் எடுத்திருந்தாயே, மறந்து போகுமா என்ன? என்னைக் கொள்ளிடத்தில் விட்டுவிட்டு நீ திரும்ப கிருஷ்ணபுரம் வரும் வேலையிருக்கிறதா?

– இல்லையில்லை. மன்னரும் அவர் கீழிருக்கும் பா¨ளையகாரர்களும் மீண்டும் போர்க்கொடி தூக்குகிறார்கள். அவர்களுக்கு விஜயநகர ஆட்சியின் கீழ் இருக்க விருப்பமில்லை. சுதந்திரமாக இருக்கவே விருப்பம்.

– உனது தந்தையிடம் சொல்வதுதானே.

– இதிலெல்லாம் நான் தலையிடக்கூடாது. பெரியவர்கள் விஷயம்.

– நியாயம்தான்..வா போகலாம், நகரைப் பார்க்காலாமென்று எனது நண்பர்கள் சென்றிருந்தார்கள், அவர்கள் அநேகமாக திரும்பும் நேரம். நாளைய பயண ஏற்பாடுகளை வேறு கவனிக்க வேண்டும். நீங்கள் உங்கள் உடமைகளை சரிபார்த்து பெட்டிகளில் வையுங்கள். பயண ஏற்பாட்டிற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தாயிற்று. கொள்ளிடத்திலிருந்து நேரே கிருஷ்ணபட்டணம் போகும் உத்தேசமா?

– போக வேண்டியதுதான். திருவாங்கூரில் எங்கள் சேசுசபையைச் சேர்ந்த அலெக்ஸாந்த்ரு லெவி என்ற அடிகள் இருக்கிறார் அவரிடம்ந்தான் தற்போதைக்கு கிருஷ்ணபட்டண தேவாலய திருப்பணியை மேற்பார்வையிடக் கேட்டுக்கொள்ளவேண்டும். பணி நிமித்தமாக அவர்தான் அங்கு தங்கப்போகிறார்.

பாதரெ பிமெண்ட்டாவும் கொள்ளிடத்து இளவரசனும் ஆனைக்குளத்திற்கு மேற்காக வந்திருந்தார்கள். அங்கே வேறு¢ இரண்டு குளங்களிருந்தன. பிமெண்ட்டாவின் பார்வையை புரிந்துகொண்டவன் இந்த இரண்டு குளத்திற்கும் சக்கரகுளமென்றும், செட்டிகுளமென்று பெயர். பொதுவாக இந்த திசையில் நடுப்பகல் நேரத்தில் வருவதற்கு எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் அஞ்சுவான்.

– ஏன்?

– உங்கள் வலப்புறத்தில் மரங்களடர்ந்த பகுதியில் வேப்ப மரத்தின் கீழ் ஒரு கோவிலொன்று தெரிகிறதில்லையா அது கன்னிமார் கோவில். ஏழுகன்னிகளில் ஒருத்தியான கமலக் கன்னியின் கோவில் அது. அவர்கள் ஏழு சகோதரிகள். யாரோ உடலிச்சைக்கு முயன்றதாகவும், தப்பித்து தறகொலைக்கு முயன்ற சகோதரிகளை வீரப்ப நாய்க்கன் என்பவன் காபாற்றியதாகவும் கதை சொல்கிறார்கள். அது உண்மையோ பொய்யோ. ஆண்களை குறிப்பாக இளஞர்களைதேடி அவர்கள் பழிதீர்த்துக்கொள்வதாக ஒரு கிளைக்கதை உலவுகிறது. ஆனால் நான் நம்புவதில்லை.

– ஏன்?

– தண்டிப்பதென்றால் எங்களைப்போன்று ஆட்சி அதிகாரமென்றிருப்பவர்களைத்தான் அந்தக் கன்னிச்சாமி முதலில் தண்டிக்கவேண்டும். எனது தகப்பனார் எண்பது வயதிலும் பெண்களை தூக்கிவருகிறார். பாளையக்காரர்களே அப்படியெனில் தஞ்சை, மதுரை செஞ்சி நாயக்கர்களைப்பற்றி சொல்லவேண்டாம். வருடத்திற்கு ஒருத்தியை மணம்செய்து கொள்கிறார்கள்.

– இதென்ன?

எதிரே சுமார் பதினைந்தடி அகலம் இருபதடி உயரத்திற்கு சிறியதொரு குன்றுபோல பாறாங்கல், தலைப்பில் கைப்பிடி சுவரொன்றும் இருந்தது.

– உள்ளே இயற்கையாய் உருவான கிணறு உள்ளது. மரணக்கிணறு என்று பெயர். அரசகுற்றத்திற்கு மரணதண்டனைபெற்ற அநேகருக்கு இங்கே தான் சமாதி. நேற்று அரசர் பரிவுடன் நடந்துகொண்டார்.இல்லையெனில் கணிகைப்பெண் சித்ராங்கியும் இந்தக்கிணற்றில்தான் பட்டினி கிடந்து செத்திருப்பாள். கொஞ்சம் இப்படி வாருங்கள். இந்த இடத்தில் காதை வைத்து கேளுங்கள்.

– எதற்கு?

– இறக்குந்தருவாயிலும் மனித உயிர்கள் முனமுவதைக் கேட்கலாம்.

பிமெண்ட்டாவின் உடல் நடுங்கி அடங்கியது. ஜீஸஸ்! என அவர் சொல்லிகொண்டது வேங்கடவன் காதிலு விழுந்தது.

(தொடரும்)

——————————

Series Navigationமொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *