மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34

This entry is part 24 of 32 in the series 15 ஜூலை 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா

39. பிள்ளை மனம் குழப்பத்தில் இருந்தது. கிருஷ்ணபுரத்தில் நாளைய தினம் எதுவும் நடக்கலாமென்ற நிலை. இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயநகரத்தில் ஏற்பட்டிருருந்த தலைகீழ் மாற்றம், பேரரசின் கீழிருந்த சிற்றசர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. விஜயநகர சாம்ராச்சியத்தை உரிமைகோரி, இரு அணிகள் மோதிக்கொள்ளும் நிலமை உருவாகியிருந்தது.

மன்னர் வெங்கடபதியாருக்குப்பின் விஜய நகர சாம்ராச்சியம் வேறொருவர் கைக்குப் போகக் கூடாதென்றெண்ணி அவருடைய மூத்ததாரமும் கோபுரி வம்சாவளியைச் சேர்ந்தவளுமான வையாம்பிகாவும் அவள் சகோதரர் ஜெகராயரும் எங்கோ பிறந்த சிக்கமராயனை அவர் வாரிசென நம்பவைக்க அந்த சதிக்குத் தமது சொந்த இலாபம்கருதி கிருஷ்ணப்ப நாயக்கரும் ஒத்துழைத்தார். ஆனால் மன்னர் வெங்கடபதியாருக்கு உண்மை விளங்கியிருக்கவேண்டும், இறக்குந்தருவாயில் தமது சகோதரன் மகன் ஸ்ரீ ரங்கருக்கு முடிசூட்டினார். பட்டத்திற்கு வந்த ஸ்ரீ ரங்கர் சில நாட்கள் அமைதியாக இருந்திருக்கலாம். இளமைக்காலத்தில் தஞ்சையிலிருந்தபோது தெரியவந்த ஜ•ப்னா வெள்ளாழர்களுக்கு உயர்பதவிகள் அளித்து ஜெக ராயருக்கு வேண்டியவர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறார். சிக்கமராயனுக்கு முடிசூட்டமுடியாமற்போன கோபத்திலிருந்த ஜெகராயர் வெறுப்புற்று விஜய நகர சாம்ராச்சியத்தின்கீழிருந்த சிற்றரசர்களை ஒன்று திரட்டி பிரச்சினைகொடுக்க ஆரம்பித்தார். இந்த அணியில் சேராதவர் பலகாலமாக வெங்கடபதியாருக்குக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த எச்சம்ம நாயக்கர். ஒருமாதம் கழிந்தது. ஒரு நாள் ஜெகராயர் தமது படைவீர்களுடன் அரண்மனையைச் சுற்றிவளைத்து ஸ்ரீ ரங்கரை பதவிவிலிருந்து விலகச் செய்து, சிறையில் அடைத்து நெருக்கடிகள் பலவற்றைக்கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீ ரங்கரையும் அவர் மனைவி, மகள், மூத்த மகன், அவன் மனைவி அவ்வளவு பேரையும் கொலைசெய்திருக்கிறார். வண்ணானொருவன் துணையுடன் அழுக்குப் பொதியென்று சொல்லி ஸ்ரீ ரங்கரின் இளையமகன் ராம தேவனை மாத்திரம் எப்படியோ தந்திரமாக எச்சம நாயக்கர் காப்பாற்றி இருக்கிறார். இக்கொடூர கொலைகளை அறியவந்த சிற்றரசர்கள் ஒருவர் பின்னொருவராக ஜெகராயரிடமிருந்து விலகி எச்சம நாயக்கர்பக்கம் சேர்ந்துகொண்டார்கள். நிலமைத் தமக்குச் சாதகமாக இல்லையென்பதை அறியவந்த ஜெகராயரும் சிக்கமராயனை அழைத்துக்கொண்டு உயிருக்குப்பயந்து காட்டில் ஒளிந்திருப்பதாக செய்தி. ஜெகராயர் அனுப்பிய ஆளொருவன் காலையில் கிருஷ்ணபுரம் வந்திருக்கிறான்.

மந்திராலோசனை மண்டபத்தில் வழக்கம்போல மன்னரும் அவரருகில் இராஜகுருவும் சம ஆசனத்தில் அமர்ந்திருக்க, சற்று தள்ளி தளவாய் முதலான பிற காரியதரிசிகள் சற்று உயரம் குறைந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள். மண்டபம் அமைதியாக இருந்தது. நாயக்கரின் முகத்தில் சஞ்சலம் வெளிப்படையாகவே தெரிந்தது. மற்றவர்களும் இராயர் கவலை தங்களுடயதென்பதுபோல முக வாட்டத்துடனிருந்தனர்.

– வாருங்கள் நந்தகோபாலப்பிள்ளை உங்களுக்காகத்தான் காத்திருந்தோம். மகா ராஜாதிராஜரை சிறிது நாழிகை காக்கவைத்தமைக்காக சிரம்தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன்.

– இராகவ ஐயங்கார் மன்னர் காதில் ஏதோ முணுமுணுத்தார்.

தமது ஆசனத்திலமர்ந்த பிள்ளை:

– சொல்லுங்கள் பிரபு முக்கிய சேதியேதேனும் வந்ததா? எனக்கேட்டார்.

– ஜெக ராயரிடமிருந்து உதவி கேட்டு வந்திருக்கிறது. எதிரிகளுடன் தஞ்சை ரகுநாய நாயக்கனும் கைகோர்த்திருக்கிறான்.

– எதிர்பார்த்ததுதான், எச்சம நாயக்கரைபோலவே தஞ்சை ரகுநாதரும் காலம்சென்ற விஜய நகர சக்கரவர்த்தி வேங்கடபதியாருக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர். இரு தினங்களுக்கு முன்பு கொலையுண்ட ஸ்ரீ ரங்கரும், உங்கள் மருமகன் தஞ்சை இராயர் ரகுநாதரும் பால்ய கால நண்பர்கள். தஞ்சையில் இருவரும் மிகவும் அன்யோன்யமாக இருந்திருக்கிறார்கள். எனவே ஜெகராயரை அவர் ஆதரிப்பாரென்று எதிர்பார்க்கமுடியாது. நம் ராஜ குரு என்ன சொல்கிறார்.

– நீர் கூறுவது வாஸ்த்துவம். தஞ்சை இரகுநாத நாயக்கர் ஸ்ரீ ரங்கர் மகன் இராமதேவனுக்கு விசுவாசமாக இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். நமது இராஜாவிடம் ஏற்கனவே எம் யோசனையைத் தெரிவித்திருக்கிறேன். ஜெகராயரை தொடக்கத்திலிருந்தே நாம் ஆதரித்து வருகிறோம். இனியும் தொடர்ந்து ஆதரிக்கவேண்டும் என்பதுதான் அவர் விருப்பமும், எமது விருப்பமும். மதுரை முத்து வீரப்ப நாயக்கரும், நமக்குத் துணையாக நிற்கிறார். இந்நிலையில் விஜயநகர சாம்ராச்சியத்தில் திரும்பவும் ஜெகராயர் ஆதரவுடன் நமது சிக்கம இராயனை பதவியில் அமர்த்துவதொன்றுதான் கிருஷ்ணபுர அரசியலுக்கு உதவும். கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னர் வேங்கடபதியாரால் அடைந்த அபகீர்த்தியை விடுவிக்க இதனைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடியாது.

– சிக்கம நாயக்கனுக்காக கிருஷ்ணபுரத்தின் எதிர்காலத்தை பணயம் வைப்பது நல்லதல்ல என்பதுதான் அடியேன் கருத்து. விஜயநகரத்தை எதிர்த்து செய்தகாரியங்களால் கண்ட பலனென்ன. ஒவ்வொருமுறையும் இக்கட்டில் சிக்கிக்கொள்வதும் தஞ்சை இரகுநாத நாயக்கர் தயவால் மீள்வதுமாக இருந்துவந்திருக்கிறது. தவிர ஜெகராயர் அணியில் அவர் சகோதரர் எத்துராஜரையும் மதுரை முத்து வீரப்ப நாயக்கரையும் நம்மையும் தவிர்த்து வேறு சிற்றரசர்களில்லை. பதிலாக நேற்றுவரை ஜெகராயர் அணியிலிருந்த சிற்றசர்கள் எல்லோரும் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த கொலைகளினால் அதிர்ச்சியுற்று எச்சம்ம இராயர் பக்கம் திரண்டிருப்பதாகக் கேள்வி. – பிரதானி நந்தகோபால் பிள்ளை.

– பிரதானிக்கு சில தகவல்கள் நமக்கு முன்னமே வந்துவிடும்போலும். எமக்கும் சில தகவல்கள் வந்தன. தாங்கள் சிலதினங்களாக நகரத்துக்குளங்களில் புதையலைத் தேடிக்கொண்டிருப்பதாக செய்தி கிடைத்தது. கிடைத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுவீர்களில்லையா?

– ராஜகுரு ஏதோ கற்பனையிலிருக்கிறார். சகலலோக நாயகராகவிருக்கிற நாராயணன் அனுக்கிரகத்தைப்பெற்ற நம் மன்னருக்கும் நமது தேசத்திற்கும் ஏதும் நேர்ந்துவிடக்கூடாது. எமது முன்னோர்கள் உருவாக்கிய இந்த இராச்சியத்திற்கு, நமது தவறான யோசனைகளால் பங்கம் நேர்ந்துவிடக்கூடாது. நாங்கள் அக்ராஹரத்தைத் தானமாகப்பெற்றதற்காக உழைப்பவர்களல்ல. உண்மையாக உழைப்பவர்கள்.

பிரதானியிடமிருந்து ராஜகுரு இதனை எதிர்பார்க்கவில்லை. அவர் கோப்பத்துடன் எழுந்தார். எழுந்தவரை நாயக்கர் அமைதிபடுத்தினார். பின்னர் அவர் பிரதானியிடம்:

– பிள்ளை உம்மை எச்சரிக்கிறேன். இங்கே யாம் வேறு எமது குரு வேறல்ல. அவர் மனம் நோகும்படி வாரத்தையாடினால் எம்மை அவமதிப்பதாகும். உமது மூதாதையர்களும் நீரும் நமது நம்பிக்கைக்குரியவர்களாக இன்றுவரை நடந்துவந்துள்ளீர்கள். அது இனியும் தொடரவேண்டுமென்பதுதான் எம் ஆசை. நீர் தேடிக்கொண்டிருக்கும் புதையல்பற்றி நமக்கும் தகவல் வந்தது. ஆனால் அதுபற்றி பேச இது நேரமல்ல. சிக்கமராயன் விவகாரத்தில் உமது கருத்தென்ன அதைத் தாமதமின்றி தெரிவியும்.

– அடியேன் வார்த்தைகளை பொருத்தருள வேண்டும். நேற்றுவரை ஜெகராயருடனிருந்த சிற்றரசர்கள் பலரும் அவரை இனி ஆதரப்பதில்லை என்று முடிவெடுத்த பிறகு, தெரிந்தே இக்கட்டில் சிக்குவது புத்திசாலித்தனமல்ல என கருதுகிறேன்.

– குரு நீங்கள் என்ன நினைக்கிறீர்;

– ஏற்கனவே தெரிவித்ததுதான். இன்றைக்கு நமது அணியிலிருந்து விலகிக்கொண்டவர்கள், நாளை திரும்பவும் நமது தரப்பிற்கு வரக்கூடும். காட்டில் ஒளிந்துகொண்டிருக்கும் ஜெகராயரையும் சிக்கம இராயரையும் நாம் உடனடியாக காப்பாற்றியாகவேண்டும். இதில் ஆபத்துகளில்லாமலில்லை. ஆனால் மதுரை நாயக்கரின் படைகளோடு நமது படைகளும் சேருவதால், போரில் நாம் செயிக்கப்போவது உறுதி. நீங்கள் நமது தளவாயிடம் அதற்கான ஆக்கினையை இடுங்கள். பாளையபட்டுகளுக்கும் உடனடியாக ஓலை அனுப்பி அவரவர் படையைத் தயார் நிலையில் வைக்கச்சொல்லுங்கள்.

– தளவாய், நீர் அமைதியாக இருந்தாலெப்படி?

– மகா இராயருக்கு வந்தனங்கள். இதில் சொல்ல என்ன இருக்கிறது. ராஜகுரு எதைக்கூறினாலும் நியாயமாகவே இருக்குமென தெரியாதா? அப்படியே செய்வோம்.

(தொடரும்)

Series Navigation2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் !வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *