மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38

This entry is part 24 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012
ஹரிணி

 

46.  எரிக் நோவா தெரிவித்திருந்த கதை ஆர்வமூட்டுவதாக இருந்தது. என்ன படித்தாய்? எனக்கேட்டேன். Philology என்று எனக்கு விளங்காத சொல்லைக் கூறினான். உனக்கு சமூக உளவியல் தெரியுமா என்றேன். மென்றுகொண்டிருந்த ரொட்டி வாயிலிருக்க முகத்தை உயர்த்தி கீழிறக்கினான். அசைவற்றிருந்த வாயில் ரொட்டியையும் உமிழ்நீரையும் சேர்ந்தார்போல பார்த்தபிறகு தொடர்ந்து சாப்பிட எனக்கு ஒப்பவில்லை. தயவுசெய்து வாயிலிருப்பதை விழுங்கித்தொலை, நான் சொல்லவந்ததை முடிக்கிறேன் என்றேன். அவசரமாக விழுங்கினான்.

 

– சமூக உளவியல் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் எனது பிரச்சினைக்கும் அதற்கும் என்ன தொடர்பு?

 

– இருக்கிறது. அவள் தெரிவித்ததுபோல அவள் சகோதரனிடத்திலிருந்து நேரடியாகவோ அல்லது வேறுவகையிலோ உங்களுக்கு மிரட்டுதல் வந்ததா? .

 

– இதுவரையில் இல்லை

 

– ‘அப்படியெனில் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமென நினைக்கிறேன். உங்களுக்கு வேறு காரியங்கள் இருப்பின் நீங்கள் புறப்படலாம். பெண்ணின் தொலைபேசி எண்ணை மட்டும் கொடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேனென்ற எனது வாக்கை அவன் நம்பவில்லையென்பதை. ஒளிமங்கிய கண்மணிகள் சாடையாக தெரிவித்தன.

 

– இந்த அரைநாளை உங்களுக்காவே ஒதுக்கினேன். எப்படியென விளக்கிச்சொன்னால் எனக்கும் நிம்மதி. கடந்த ஒருவாரமாக தவித்துக்கொண்டிருக்கிறேன். பிரான்சுக்கே திரும்பிவிடலாம் போலிருந்தது. உஙளை சந்தித்தபிறகே பதட்டம் தணிந்திருக்கிறது. அதற்கு முன்னால் ஒரு கேள்வி, உங்களுக்கு என்னுடைய கதையில் நம்பிக்கை இருக்கிறதா?

 

– ‘நம்பிக்கை’ விநோதமான சொல். என்னால் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதிலெதுவும் சொல்ல இயலாது. என்னை இந்தியப்பெண்ணென நம்பி உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்திலிருந்து என்மூலமாக விடுதலைபெற நினைக்கிறீர்கள். புதுச்சேரி மக்களுக்கு விசேடமாக ஒரு மூக்கு இருக்கவேண்டும், கடைகளில் நுழைந்தவுடனேயே என்னை வெளியூர்காரியாக தீர்மானித்து விலைசொல்கிறார்கள். ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ அவர்களுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு சொற்களை பிரயோகித்து திருப்திகொள்கிறார்கள். எனது அம்மாவும் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறார். பிரான்சில் நாங்கள் பிரெஞ்சுக்காரர்களல்ல; இந்தியாவில் நாங்கள் இந்தியர்களல்ல. இதுதான் எங்கள் அடையாளம். எந்த நம்பிக்கையில் உங்கள் நண்பர்கள் எனது முகவரியைக் கொடுத்திருப்பார்களென யோசிக்கிறேன். எனது நிறம் உள்ளூர் மொழியை தடையின்றி பேசுவது காரணமாக இருக்கலாம். ஆனால் கையாளுவதற்கும் பேசுவதற்கும் சமூக உளவியலில் வேறுபாடுகளிருக்கின்றன’-

 

‘மேடம்’ எனக்குறுக்கிட்ட பணிப்பெண் காப்பி நிரம்பிய இரண்டு கோப்பைகள் தட்டை மேசைமீது வைத்துவிட்டு என்னைப்பார்த்தாள். அவள் கறுத்தமுகம் உயிர்ப்பின்றி கெட்டித்து இருந்தது. இமையில் அப்பியிருந்த மையும், இமை மயிர்களை அவை கறுத்த திரிகள்போல மாற்றியிருந்த இலட்சணமும் எரிச்சலை ஊட்டின. சூனியக்காரிபோல இருந்தாள். மேசையில் ஆள்காட்டி விரலால் தாளம்போட்டபடி இருந்தாள். எங்கள் இருவருக்குமிடையே நடந்த உரையாடல் பிரெஞ்சிலிருந்தபோதும் அதை கேட்கவிரும்பியதுபோல அசையாமல் அங்கு நின்றது எனது கோபத்தை வரவழைத்தது.

 

– ஏன் நிற்கிறாய் நீ போகலாம், அழைக்கும்போது வந்தால் போதும் – நான்

 

– வேறு ஏதாச்சும் வேணுங்களா? உங்கள் சட்டை நன்றாக இருக்கிறது. பிரான்சு சட்டையா?- அவள்

 

– ம்..இதுதானா? வேறு கேள்விகள் இருக்கின்றனவா? என குறுக்கிட்டு மடக்கியபோது, அவள் தட்டை எடுத்துக்கொண்டு மெதுவாக முனகிக்கொண்டு நடந்தாள். எதிரில் அமர்ந்திருந்த எரிக் நோவா சிரித்தான். எங்கே நிறுத்தினேன்- எனக்கேட்டேன்.

 

– உள்ளூர் மொழியை தடையின்றி பேசுவது காரணமாக இருக்கலாம். ஆனால் கையாளுவதற்கும் பேசுவதற்கும் சமூக உளவியலில் வேறுபாடுகளிருக்கின்றன’- எனக்கூறி நிறுத்தினீர்கள், என்றான்.

 

அவனுடைய  முகம் இறுகிய பால்கட்டி நிறத்திற்கு வந்திருந்தது. விழிகளில்தளும்பிய அவநம்பிக்கை, கீழுதட்டை சுழித்து நிறுத்தியபோது அழுந்த துடைக்கப்பட்டிருந்தது. குழம்பிய மனநிலையில் இருக்கவேண்டும்.

 

நண்பர்களெனில் நீ என்று அழைக்கும் நமது பிரெஞ்சு வழக்கத்தை நம்முடைய உறவிற்கும் பயன்படுத்திக்கொள்ளலாமில்லையா?

 

– தாராளமாக

 

– நன்றி. உன்னுடைய அனுபவம் எனக்கும் நேர்ந்தது. நேர்ந்த இடம் பிரான்சு. குளிர் காலத்தில் ஒரு நாள் மாலை சேன் நதியோரம் நடந்துகொண்டிருந்தேன். மாலை மணி ஐந்திருக்கும். குளிர்கால இருளென்பதால் அடர்த்தியாகவும் உடலில் ஒட்டவும் செய்தது. காற்று முரட்டுசுபாவத்துடன் வீசியதால் சைபீரியக்  குளிரின் தன்மையிலிருந்தது. நடந்த களைப்பில் லூயி பிலிப் பாலத்தில் சிறிது நேரம் நிற்கலாம் போலிருந்தது. கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்றபடி நோத்ர்- தாம் தெ பரி பேராலயத்தை அவதானித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ‘மதாம்’ என்று என்னை அழைப்பதுபோல ஒருகுரல். தலையைத் திருப்பினேன். என்னைக்காட்டிலும் இளம்வயதினளாக இருக்கக்கூடும் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். கருப்பு மேலங்கி அணிந்து, தனது த¨லைமயிரை மேலங்கியின் கழுத்துப்பகுதிக்குள் விட்டிருந்தபோதும், அடர்ந்த கேசத்திற்குச் சொந்தக்காரியென்று விளங்கிற்று. எளிமையும் தன்னடக்கமும் கொண்டவளென்று  பார்த்த மாத்திரத்தில் எவரும் கூறுவார்கள். அவள் கையில் ஒரு பொருள். மின்சார ஒளியில் பிரகாசித்தது.

 

– கீழே கிடந்தது. உங்களுடையதா பாருங்கள்.

 

என் முகத்திற்கு நேரே அப்பொருளிருந்தது. அப்பொருளை முதன் முதலாகப் பார்க்கிறேன். தங்கமோதிரம்.

 

– இல்லை என்னுடையதில்லை. அவசரமாக மறுக்கிறேன்.

 

– அப்படியா? உங்கள்பின்னால் வந்துகொண்டிருந்தேன். கீழே கிடந்தது. நீங்கள் முன்னால் நடந்து பாலத்தில் கைப்பிடிசுவரில் நிற்கிறீர்கள். சற்றுமுன்னரே விழுந்திருக்கவேண்டும். இல்லையெனில் வேறு யாரிடமாவது கிடைத்திருக்கலாம், எனவே உங்களுடையதென நினைத்து கேட்டேன். எவ்வளவு கனம் பார்த்தீர்களா? வாங்கிப்பாருங்களேன். எனக்கேட்டபோது அம்முகத்திடத்தில் ஏற்பட்ட ஈர்ப்பில் உள்ளங்கையில் வாங்கிபார்த்தேன். அவள் கூறியதுபோல கனமாக இருந்தது. திருப்பி அவளிடம் கொடுத்தபோது அதை வாங்கி தன்னுடைய விரலொன்றில் போட முயற்சித்தாள்.

 

– மிகவும் பெரியதாக இருந்தது. மோதிரம் கிடைத்த அதிட்டம் போட்டுப்பார்க்க வாய்ப்பில்லை.  எங்கே உங்கள் விரலுக்குப் பொருந்துகிறதா பாருங்கள், என்றாள்.

 

எனக்கு வியப்பு, அவள் விரல்கள்போலவே என்னுடைய விரல்களுமிருந்தன. ஆனால் அவள் விரல்களுக்குப் பெரிதாகத் தோற்றம் தந்த மோதிரம் எனக்குச் சரிவந்தது.

 

– பொருத்தமாகத்தான் இருக்கிறது, எனக் கழட்டிக்கொடுத்தேன்.

 

– நீங்களே எடுத்துக்கொள்ளுங்களேன்.

 

– உனக்குப்பெரிய மனதுதான். திருப்பிக்கொடுத்தேன்.

 

– நான் வருகிறேன் மேடம் என நடந்தவள் சில நொடிகளுக்குப்பிறகு திரும்பவும் வந்தாள்.

 

– மேடம் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டீர்களே, எனக்கிருக்கும் நெருக்கடிக்கு இந்த மோதிரம் அல்ல வேறு ஏதாவது கிடைத்தால்கூட விற்பதைத்தவிர வேறு வழியில்லை. இம்மாத வாடகையை எப்படி கட்டுவதென்ற நிலையிலிருக்கிறேன். மோதிரத்தை வைத்துக்கொண்டு உங்களால் முடிந்ததைக்கொடுங்களேன், எனக் கேட்டாள். அடுத்த இரண்டொரு நிமிடங்களில் கையிலிருந்த 100யூரோவை அவளிடம் கொடுக்க மோதிரம் என் கைவிரலில் இருந்தது. பதினைந்து நாட்கள் சென்றிருந்தன. எனது தோழி ஒருவளைச் சந்திக்கச்சென்றேன். அவள் விரலிலும் அதேமோதிரம். எங்கே கிடைத்தது எனக்கேட்டதற்குக் கிடைத்த பதிலைக்கொண்டு, இருவருமே ஏமாந்திருக்கிறோமென விளங்கிற்று.

 

எங்களுக்குப் பிரான்சு நாட்டில் ஏற்பட்ட அனுபவமும் உனக்கு இந்தியாவில் ஏற்பட்ட அனுபவமும் அடிப்படையிலொன்று.. ஏமாறுகிறவர்களைத்தேடி அனுதாபத்தைப் பெறும் இவர்கள் முயற்சிக்கு எல்லா நேரங்களிலும் பலன் கிட்டுவதில்லை.  தங்கள் திட்டத்தைக் குறுக்கு வழியில் எட்ட நினைக்கும் இப்பெண்களுக்கு, சாதுர்யமான வார்த்தைகளை கையாளுதலென்பது ஒருவகை வியூகம். ஏமாந்தவர்களே விரும்பி  ஏமாற்றத்திற்கு உடன்பட்டதாக முடிப்பதிலேயே உரையாடலைக் கையாளுவதின் வெற்றி இருக்கிறது. ஓர் விண்ணப்ப வாக்கியம் நேரடியாக தமது தேவையைமட்டுமே பேசுமானால், அவ்விண்ணப்பதிலுள்ள வேண்டுகோள் நிராகரிக்கப்படலாம். எனக்குப் பணம் தேவைபடுகிறதென்று மோதிரக்காரி கேட்டிருந்தாலோ, என்னை பிரான்சுக்கு அழைத்துசெல்ல முடியுமாவென புதுச்சேரிபெண் ஒளிவுமறைவின்றி  கேட்டிருந்தாலோ வெற்றியின் சதவீதம் குறைவு. உரையாடலின் ஆரம்பத்தில் விண்ணப்பத்தை பரிசீலிப்பவரின் கவனத்தைப் பெறவேண்டுமென்பது முதற்கட்டம்: ‘மோதிரம் கீழே கிடந்தது உங்களுடையதா”வென்றது அப்பெண் நிகழ்த்திய உரையாடலின் தொடக்கம். ஏமாறும் பேர்வழியை தன்னோடு இணைத்துக்கொள்வதென்பது இரண்டாவது கட்டம். மோதிரம் கனமாக இருக்கிறது இல்லையா?  என்ற கேள்விக்கு அதுவே நோக்கம். மூன்றாவது கட்டம் பலிஆட்டின் அதிட்டத்தை நம்பவைப்பது. ‘என்னிடம் மோதிரத்தைக்காட்டிய பெண் என்ன கூறினாள் தெரியுமா “முடிந்ததைக் கொடுங்களேன்”. இம்மூன்று வகைகளை உங்களோடு புதுச்சேரி பெண் நடத்திய உரையாடலுக்கும் பொருத்திபார்க்கலாம். இவர்களுக்கு மனிதர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிற இரக்ககுணத்தை குறிவைத்து ஜெயிப்பது அடிப்படை நோக்கம். நாமும் அதே வழிமுறையைக் கையாளவேண்டும். அப்பெண்ணின் சகோதரனால் உனக்கு உடனடியாக எவ்வித ஆபத்துமில்லை. எனது முடிவு சரியெனில் நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்று. அப்பெண் வந்தால் பிரான்சுக்குத் திரும்ப ஆறுமாதம் ஆகும், அதுவரை காத்திரு என்று சொல்லு.  அவளைச் சத்திப்பதை தள்ளிப்போடு. தவிர்க்க முடியாதெனில் பொது இடத்தில் சந்தி. விசாமுடிந்ததென்றால் போய்க்கொண்டே இரு. நானும் அவளை அழைத்து பேசுகிறேன் –  என்றேன்.

 

 

எரிக் நோவாவின் முகத்தில் திடீரென்று சந்தோஷம் வழிந்தது. வேறு ஏதேனும் சாப்பிடுகிறாயாவென என்னைக்கேட்டான். மறுத்தேன். அடுத்த மேசையில் விசாரித்துவிட்டுத் திரும்பிய பணிப்பெண்ணிடம், பில்லை போட்டு கொண்டு வரச்சொன்னேன். இத்தனை நீண்ட உரையாடலுக்குப் பிறகு எனது தொண்டைக்குழியில் ஒரு சந்தேகம் சிக்கிக்கொண்டு  நெருடியது. எதற்காக தயங்கவேண்டுமென்று  சுற்றிவளைக்காமல் கேட்டுவிட்டேன். அப்பெண்ணிடம் உண்மையில் வேறுவகையான உறவு இல்லை அல்லவா?

 

– ச்சீ ச்சீ அப்படி எதுவுமில்லை. என்றவன், நாளை அவளைச் சந்திக்க நேர்ந்தால், என்ன நடந்ததென்று உன்னிடம் நேரில் சொல்லலாமா? என்று வினவினான்.

 

அவனிடம் அதற்கு சாத்தியமில்லை செஞ்சிக்குப் போக வேண்டியிருக்கிறதென்று கூறினேன். அவன் அப்படியா எனக்குக்கூட செஞ்சிக்குச் செல்ல வேண்டிய வேலை இருக்கிறது, அங்கே ஒருவரை பார்க்கவேண்டும். ஒரு புத்தகமொன்று அவரிடம் இருப்பதாக செய்திகிடைத்தது. அதுகிடைத்ததெனில், புதுச்சேரிக்கு வந்த நோக்கத்தில் பாதி நிறைவேறியதுபோலவென்றான். எனக்கு வியப்பு அதிகரித்தது. அவனிடம் செஞ்சி பற்றிய நாவலொன்றை அண்மையில் படித்திருந்ததைத் தெரிவித்தேன். அவன் தேடிச்செல்லும் புத்தகத்தின் பெயரோ, அப்புத்தகத்தை வைத்திருப்பவர்பெயரோ தெரியுமாவெனக்கேட்டேன். தற்போது உன்னிடம் தெரிவித்த தகவலுக்குக்கூடுதலாக ஒரு மில்லி கிராம்கூட என் வசமில்லை. செஞ்சியில் சந்தித்த பிறகு அவசியம் கூறுவேன். என்றான்.

 

பணிப்பெண் பில்லை கொண்டுவந்தாள். எரிக் நோவா அதற்கான கட்டனத்தைக் கொடுக்கிறேன் என்றான். நான் தடுக்கவில்லை. இருவரும் வெளியேவந்தபோது, என்னிடம் மீண்டும் உனது குடியிருப்புக்கு அழைத்து செல்லட்டுமா எனக்கேட்டான். பக்கத்தில் ஒரு புகைப்படகாரரிடம் சில படங்களைக் கொடுத்திருந்தேன். அதை வாங்கிக்கொண்டு அரியாங்குப்பம் வரை போகவேண்டும் நீ புறப்படு, எனக்கூறி விடைபெற்றேன்.

 

(தொடரும்)

Series Navigation12 பியும் எகிறும் பி பி யும்வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 25
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *