மலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை

This entry is part 1 of 29 in the series 25 டிசம்பர் 2011

 

சித்ராங்கி க்குத் தனது அழகைபற்றிய கர்வமிருந்து. அழகாய் இருப்பவள் கர்வப்படுவதில் என்ன தப்பு? சிதம்பரத்தில் மட்டுமில்லை விஜய நகர சாமாராச்சியத்திலேயே அப்படியொரு பெண் சொரூபத்தை கண்டதில்லையென இதே கட்டிலில் வைத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கூறவில்லையா?

8.     கையெழுத்து மறையும் நேரம். மெல்ல மெல்ல பகல் விலகிக்கொண்டிருந்தது. இரவு தன்னைக்காட்டிக்கொள்ளாமல் பாய்வதற்குத் தயாராய் பதுங்கியிருந்தது. ஒன்றிரண்டு நாழிகையில் தெருவாசல், முற்றம் வழியாக பாய்ந்து வீட்டை நிறைத்துவிடும். மேல வீதியிலிருந்த  எல்லா வீடுகளும் ஒன்றுபோலவே சிற்றோடு வேய்ந்து தெருவாசலில் இரு புறமும் சிறியதும் பெரியதுமான விளிம்பில் கருங்கற்களைப் பதித்து காரை பூசிய திண்ணைகளுடன் இருந்தாலும் சுவரில் சுண்ணாம்பு அடித்து செம்மண் குழைத்து பட்டைகள் தீட்டப்பட்ட சித்ராங்கி வீடு தனித்து தெரிந்தது. வீட்டு வாசலில் வலப்பக்கத்தில் பெரிய வேப்பமரம், பச்சைபசேலென்று கூர் தீட்டிய இலைகளுடன் வெகு சுதந்திரமாக  கிளைகளை விரித்திருந்தது.  திண்ணைக்கு முன்பாக வீதியை இணைத்து பந்தல் போட்டிருந்தவர்கள் வேப்பமரத்தைக் கவனமாக தவிர்த்திருந்தனர். பந்தலில் விழுந்ததுபோக தெருவோரத்திலும் சிந்திக்கிடந்த வேப்பம்பூக்கள் மரத்தின் வளத்தை உறுதி செய்தன. பந்தலில்  வில்வண்டியொன்று கூட்டில் வைக்கோல் பரப்பி, அதற்குமேல் விரித்திருந்த இரத்தின கம்பளத்தில் சற்றுமுன் கோவிலுக்குச் சென்ற சித்ராங்கியின் இளஞ்சூடு குறையாமல் இருந்தது. நுகத்தடி தும்புகளைகூட அவிழ்க்கவில்லை.

 

உச்சிகால பூசைக்கு நடராஜரைச் தரிசிக்க சென்றவள், சாயரட்சை பூசைவரை கோவிலிலே பழியாய் கிடந்துவிட்டு சற்றுமுன்னர் தான் திரும்பியிருந்தாள். அந்தி பூசைக்கு போவதுதான் அவளுடைய வழக்கமாக இதுநாள்வரை இருந்துவந்தது. கடந்த ஒரு மாதமாகத்தான் உச்சிகாலம், சாயரட்சை பூசையென்று இரண்டையும் வழக்கப்படுத்திக்கொண்டாள். தீட்சதருடன் அவர் மைத்துனன் ஜெகதீசன் பூஜைக்காலங்களில் ஒத்தாசை செய்ய வருவானென்று நம்பினாள். தகப்பன், பிள்ளை, மைத்துனரென்று உறவுகளுடன்  பூஜைபுனஸ்காரங்களில் கலந்துகொள்வதென்பது  தீட்சதர் குடும்பங்களுக்குப் புதிதல்ல. ஆனால் ஜெகதீசனை பார்ப்பதுதான் அரிதாக இருந்தது. செண்பகமும் சித்ராங்கியை எச்சரித்திருந்தாள். “எந்நேரமும் இதுபோல கோவிலே கதியென்றிருப்பது நல்லதில்லை அக்கா! நீங்கள் கவனித்தீர்களாவென்று தெரியவில்லை, நான் கவனித்தேன். அவர்கள் பார்வையில் ஏளனம் தெரிகிறது. கோவிலுக்கு சாமியைத் தரிசிக்க வரவில்லை, ஆள்பிடிக்க  வருகிறாளென தீட்சதர் வீட்டுப்பெண்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். காதில் விழுந்தது. தீட்சதர் முகம்கூட முன்புபோல இல்லை கடுகடுப்புடன் பார்க்கிறார். அவரும் இப்படி நாம் கோவிலுக்கு வருவதையும், காத்துக்கிடப்பதையும் விரும்பவில்லை போலிருக்கிறது”, என்றாள். சித்ராங்கியையும் அவள் தாய் மீனாம்பாளையும் பலவருடங்களாக அறிந்திருந்த செண்பகத்தின் எச்சரிக்கையிலும் நியாயமிருந்தது

 

ஜெகதீசனுக்கு முதல் லிகிதம் சீர்காழியிலிருந்து திரும்பிய இரண்டாம் நாள் எழுதினது.  முதற் கடிதமென்பதால் வெளிப்படையாக சொல்ல தயக்கம் காட்டினாள். இலைமறை காயாக தீட்சதர் இளைஞனிடத்தில் தனக்குள்ள பிரேமையைக் கூறியிருந்தாள் :

 

நன்னீர் குளத்துநற்றா மரைமொட்  டவிழ

கண்மீன் மகிழ்நன் காதலிற் திளைக்கும்

நன்மடவாள் முலைக்கச்சு களைந்தும் மணவாளன்

பண்ணிசைக்க மறப்பதோ சொல்.

 

மடலை ஓலை நறுக்கில் எழுதி செண்பகத்திடம் கொடுத்தபோதே ஜெகதீசனை மனக்கண்ணில் நிறுத்தி மகிழ்ந்தாள். ஜெகதீசனிடம் கடிதத்தை சேர்ப்பித்துவிட்டு திரும்பும் செண்பகத்தின் பேச்சும் நம்பும்படியாகத்தான் இருந்தது. ஆனால் அவ்வளவு மடல்களும் கிணற்றில் போட்ட கற்கள்போல ஆனதைக்கண்டு மிகவும் சஞ்சலப்பட்டாள்.

 

ஆனிமாதத்தில் மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கிலிருந்த  சிவகாமசுந்தரியின் சந்நிதிக்குசென்றுவிட்டு திரும்பும்போது ஜெகதீசன் ஒருமுறை எதிர்பட்டான். நான்கைந்து தீட்சதர் இளைஞர்களுடன் நடந்து வந்தான். சித்ராங்கி அவனைகடந்து சில அடிகள் எடுத்துவைத்தாள். தயங்கி நின்றாள். திரும்பினாள். தலை மட்டும் தோள்வரை வந்து நின்றது. மல்லிகைப்பந்தை சுமந்திருந்த கூந்தலின் ஒற்றைப்பின்னல் தோள் வழியாக முன்புறம் விழுந்தது வசதியாகப்போயிற்று. அதன்முனையைக் கிள்ளுவதுபோல பாவனைசெய்து, பாதிக்கண்களால் அவனைப் பார்த்தாள். ஆம் அவனை மட்டுமே பார்த்தாள். கொக்கு மீனை பார்ப்பதுபோல. ஆபத்தை உணர்ந்த மீன் நழுவிச்சென்றது. வாய்விட்டு சிரித்துக்கொண்டும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் நடந்து சென்றார்கள். கூட்டத்தில் ஒருவன் குறும்புக்கார இளைஞனாக இருக்கவேண்டும். “சிவகாமசுந்தரியைதேடி எல்லோரும் மேலவீதிக்கு போகிறார்களாமே, அப்படியா?” என்று இவள் காதுபடகேட்டான். இவளுக்குச் சுரீர் என்றது. ஜெகதீசன் அவனைக் கண்டிப்பான் என எதிர்பார்த்தாள். அவனிடமிருந்து எவ்வித பதிலுமில்லை. இவளுக்கு கோபம்கோபமாக வந்தது. செண்பகம் வேண்டாமென்றாள். இதையெல்லாம் சகித்துக்கொள்ளவேண்டும் என்றாள். அண்றிரவு வெகு நேரம் அழுதாள். இரவு உணவை மறுத்தாள்.

 

– அக்கா தீட்சதர் வீட்டு பிள்ளையை மறந்துவிடுங்கள். அவன் கிடக்கிறான். திமிர் பிடித்தவன். நாளைக்கே இவர்கள் கொட்டத்தை அடக்கமுடியும். நீங்கள் மனது வைக்கவேண்டும். அவனைக்காட்டிலும் ஆயிரம் மடங்கு வனப்பும் செல்வமும் கூடிய ஆண்கள் உங்கள் தரிசனத்திற்காக கால் தேய நடக்கிறார்கள்.

 

– செண்பகம் எனக்கு ஒரு உதவிசெய்வாயா?

 

– ஏன் இந்த கேள்வி? என்னை புரிந்துகொண்டது இவ்வளவுதானா?

 

– ஆனால் என்னை நீ புரிந்துகொள்ளவில்லையே. எனக்கு எந்த ராஜகுமாரனும் வேண்டாம். இந்த ஜெகதீசனை எனது மஞ்சத்தில் கொண்டுவந்து சேர்த்தால் போதும். என்னைத் தேடிவருகிற ஆண்கள் மேல் எனக்கு எரிச்சல்தான் வருகிறது, நான் தேடும் ஆண் எனக்கு வேண்டும். சொல்லடி செண்பகம் செய்வாயா?

 

– அக்கா?

 

– பேசாதே செய்துகாட்டு.

 

அடுத்த இரண்டு கிழமைகளில் செண்பகம் ஒரு நல்ல செய்திகொண்டுவந்திருந்தாள்.

 

– ஆடிப்பெருக்கிற்கு வல்லம்படுகைக்கு உங்களவரை அழைத்துவர ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் அவரை சந்திப்பீர்கள். பிறகு உங்கள் சாமர்த்தியம். சந்தோஷம்தானே?

 

– மெய்யாகவா?

 

– சத்தியம். சித்ராங்கியின் கையைப்பிடித்து செண்பகம் அவள் உள்ளங்கையில் அடித்து மெல்ல கிள்ளினாள்.

 

– சித்ராங்கி அப்போதே செண்பகத்தை ஜெகதீசனாகப் பாவித்து இறுகக் கட்டிக்கொண்டாள்.

 

– அக்கா விடுங்கள். எனது எலும்புகளை உடைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே. அம்மா பார்க்கப்போகிறார்கள். இதென்ன இப்படியொரு விபரீதமான மோகம். ஆபத்தானது.

 

சித்ராங்கி விலகி நின்றாள்.

 

– செண்பகம் இந்த உதவிக்கு ஏதேனும் நான் செய்தாகவேண்டுமே. கழுத்திலிருந்த அட்டிகையைக் கழட்டினாள்

 

– என் உயிருக்கு உலைவைக்கிறீர்கள். தீட்சதர்வீட்டு பிள்ளைக்கு கொடுத்ததுபோக உங்கள் மனதில் இடமிருந்தால் எனக்கும் கொஞ்சம் ஒதுக்குங்கள் அதுபோதும். இதுபோன்ற பரிசு பொருளைக் கொடுத்து கொலைகளத்துக்கு அனுப்பும் காரியம் வேண்டாம்.

 

– ஏன்? எதற்காக அன்போடு அளித்த பொருளை மறுத்து எனது மனதை நோகச் செய்கிறாய்.

 

– உங்களைப் போன்ற செல்வத்தில் மிதக்கும் பெண்களின் கழுத்திற்கு அட்டிகையும் மாலையும் பரிசாக வராலாம். ஏழைகளென்றால், எங்கோ திருடியதென்று பொருள். நாளைக்கே செண்பகம் திருடினாள் என்று நீங்கள் சொன்னால் அதைத்தான் உலகம் நம்பும். .

 

– சரி, இந்த மகிழ்ச்சியை வேறுவகையிற்கொண்டாடுவோம். இன்றைக்கு உனக்கு எதுபிடிக்குமோ அதை சமைக்க ஏற்பாடு செய். இருவரும் சேர்ந்து உணவருந்துவோம். இதை நீ மறுக்கக்கூடாது. என்ன?

 

– ம்..

 

மதிய உணவுக்குப் பின் சித்ராங்கியும் செண்பகமும் அந்தி சாயும் வரை தாயம் ஆடினார்கள். மாலை வழக்கம்போல சாயரக்ஷை பூசைக்கு சென்றுவந்தனர். இரவு உப்பரிகையில் கதை சொல்லி மகிழ்ந்தார்கள்.

 

மறுநாள் ஆடிப்பெருக்கிற்கு சென்ற பெண்கள் இருவரும் வெகுநேரம் காத்திருந்தார்கள். கொள்ளிடக்கரையெங்கும் மொய்த்திருந்த கூட்டத்திடை  வெட்கத்தைத் துறந்து ஜெகதீசனைத் தேடி அலைந்ததுதான் மிச்சம். அவன் வரவேயில்லை.

 

மகளின் முகம் அற்ப மனிதர்களின் தரிசினத்திற்கு உகந்ததல்ல என்பதுபோல மீனாம்பாள், பத்துமுழத்தில் தங்கச் சரிகையும் பட்டும்கலந்து நெய்த சவுக்கத்தைப் போர்த்திதான் மகளை கோவிலுக்கு அழைத்து வருவாள். உற்சவமூர்த்திக்கு நைவேத்தியம் செய்யப்படவேண்டியதை தெருப் பண்டாரங்களுக்கு விநியோகிக்க மீனாம்பாளுக்கு பைத்தியமா என்ன? சித்ராங்கி  தாயின் துணையின்றி கோவிலுக்குப் போனதில்லை. மீனாம்பாளும் தனது துணையின்றி செண்பகத்தை மட்டும் நம்பி மகளை அனுப்பக்கூடாதென்பதில் தீர்மானமாக இருந்தவள்தான். ஆனால் மீனாம்பாளை சமாளிக்க சித்ராங்கி கற்றிருந்தாள். “நானென்னெ சின்னகுழந்தையா? மீனாம்பாள் மகள். கூத்தபிரானே நேரில் தோன்றி பெண்ணே சம்மதமா என்றாலும், எத்தனை கழஞ்சு பொன் கொடுப்பீர்கள் என்பேன், அம்மாவின் சம்மதமின்றி என் விரலைக்கூட ஒருவரும் தொடமுடியாது”, மகளின் வார்த்தையைக்கேட்ட பிறகு மீனாம்பாள் பேச என்ன இருக்கிறது. புளகாங்கிதமடைந்தாள். கண்களில் நீர் தளும்ப மகளைக் கட்டிக்கொண்டாள்.

 

ஆனால் சமீப நாட்களாக சித்ராங்கி கோவில் கோவிலென்று அலைவதை மீனாம்பாள் கவனித்துக்கொண்டுதான் வருகிறாள். தீட்சதர் காரணமோவென நினைத்தாள். தீட்சதரிடம் மகளுக்குத் தீவிர பிரேமை இருப்பதாக தெரியவில்லை. வேறு என்ன நியாயங்கள் இருக்கமுடியுமென்று  யோசித்தாள். அவள் மனதில் சந்தேகங்கள் துளிர்விட்டன. விபரீதமாக ஏதேனும் நடப்பதற்குள் முளையிலேயே கிள்ளியாக வேண்டும். இப்போதுதான் நாலு பெரிய மனிதர்கள் வரப்போக இருக்கிறார்கள். கொள்ளிடத்திலிருந்து சோழகன் ஆள் ஒருவன் வந்துபோனான். சுற்றுவட்டாரத்தில் பெண்களைப் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டிருப்பதாகக் கேள்வி. கிருஷ்ணபுர நாயக்கரால் சிதம்பரத்தில் அவன் ஆட்டம் அடங்கியிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகாலமாக சித்ராங்கி தீட்சதர் உடமை என்ற பேச்சு சிதம்பரம் முழுக்க இருக்கிறது. அப்பேச்சு மீனாம்பாளை பொறுத்தவரை நடையில் ஒரு விறைப்பையும் மூப்பை மறைத்து ஒருவித மினுமினுப்பையும் பூசியிருந்தது. கோபுரத்தில் நுழைகிறபோதே, வயிறு ஒட்டிய தீட்சதர்கள், ஏக்கத்துடன் பார்க்கிறார்கள், மிரட்சியுடன் ஒதுங்கி நிற்கிறார்கள். அண்மைக்காலமாக  கிருஷ்ணப்ப நாயக்கரும் சிதம்பரத்திற்கு வரும்போதெல்லாம் தாட்சாயினிச் சந்திப்பைச் சம்பிரதாயமாக்கிக் கொண்டிருக்கிறார். முதல் நாள் நாயக்கரின் முத்து பல்லக்கு சித்ராங்கியை அழைத்துச் செல்ல வீடு தேடிவந்தபோது,  தாசிகுல பெண்கள்  பொறாமையில் வெந்தார்கள் தன்காலத்தில் சம்பாதிக்கமுடியாத பொன்னையும் பொருளையும் மகள் காலத்தில் சம்பாதிப்பதற்கான வேளை வந்திருக்கிறதென்பதில் மீனாம்பாவுக்கு ஏகத்திற்கு மகிழ்ச்சி. கூடத்தில் ஊஞ்சல் சங்கிலி கிறீச்சிசிடுகிறது. இப்போது கூட தாம்பூல தட்டை அருகில் வைத்துக்கொண்டு வெற்றிலையைக் கடைவாயில் சுருட்டி வைத்தபடி அதுபற்றித்தான் யோசிப்பாள். கிருஷ்ணப்ப நாயக்கர் வரவு உறுதியானால் தீட்சதரை உதறிவிட்டு கிருஷ்ணபுரமே கூட புறப்பட்டு போகலாம் என்ற எண்ணமும் கொஞ்ச நாட்களாக அவளிடம் இருக்கிறது அதை ஜாடைமாடையாக பெண்ணிடம் சொல்லவும் செய்கிறாள்.

 

ராஜாக்களே மண்டியிட தயாராயிருக்கும் அவள் அழகுக்கு, சிதம்பரத்து இளைஞனொருவன் அடிபணிய மறுப்பது சித்ராங்கியை சிறுமைபடுத்துவதுபோல இருந்தது. ஒருமுறைக்கு இருமுறை தன்னுடலை தானே பார்த்துகொண்டாள். தனது கண்களே பட்டுவிடும்போல இருந்தது. மீனாம்பாள் சொல்வதுபோல அவள் திரிபுரசுந்தரிதான்.  இவ்வளவிற்கும் பெரிதாய் உடுத்தவில்லை. நிலத்திலிருந்து புதிதாய்த் தோண்டியெடுத்த மஞ்சள் கிழங்கையொத்த அவள் உடல் வாகிற்குத் தோதாக வெள்ளிசரிகையில் மயில்களைக் கொண்ட அரக்கு வண்ண விளிம்புடன் கபில நிறத்தில் ஒரு பட்டுச்சீலை. இடையில் பொன் மணிகள் ஆடும் ஒட்டியாணம். சிவத்த மூக்கில் மாணிக்க பரல்கள் பதித்த மூக்குத்தி, முத்துக்கள் ஆடும் புல்லாக்கு. காதுகளில் சென்றமுறை கிருஷ்ணப்ப நாயக்கர் உள்ளங்கையில் வைத்து விரல்களைமூடிய வைரம் பதித்த தோடு, கழுத்தில் ஒரு பவழ அட்டிகை. இரு கைகளிலும் கனத்த காப்புகள், கால்களில் தண்டை. அவ்வளவுதான். விசேட நாட்களென்றால் பூட்டி அழகுபார்க்க இதுபோல இரண்டு மடங்கு நகைகள் வீட்டிலிருக்கின்றன. சித்ராங்கியை பிரம்மன் கைகொண்டு படைத்தவனல்ல, பசும்பொன்னில் வார்த்திருந்தான். நெருக்கமானவர்களிடத்தில் அரசகுல ரத்தம் தனது மகள் உடலில் ஓடுவதாக மீனாம்பாள் சொல்வதுண்டு. ஆனால் எந்த அரசகுல இரத்தமென்று மகளிடம்கூட சொல்லியதில்லை. பிற தாசிகள் கொள்ளிடக் கிழவன் என்கிறார்கள், அதனால்தான் அவனும் மீனாம்பாள் மகளை விட்டுவத்திருக்கிறானேயன்றி கிருஷ்ணபுர நாயக்கருக்காக அல்ல என்பது அவர்கள் தரப்பு வாதம்.

 

சித்ராங்கியை எவர் பார்த்தாலும் கண்களை விலக்க தயங்குவார்கள். ஆருத்ரா தரிசனத்தற்கு வருபவர்களில் ஒரு பெருங்கூட்டம்  அம்பலவாணனின் ஆடியபாதங்களை தரிசிப்பதோடு கனகசபையின் பஞ்சாட்சர படிகளில்  எடுத்து வைக்கின்ற செம்பஞ்சுக் குழம்பு பூசிய சித்ராங்கி பாதங்கள் – அது பகல் நேரமோ, இரவுக்காலமோ; சூரியனோ சந்திரனோ இருவரில் யார் தயவென்ற கேள்வியில்லை – ஜொலிப்பதை காண வருகின்றார்கள். தீபாரதனை முடித்தகையோடு தீட்சதர்கள் கைகளிருந்து ஆராதனை தட்டை திரும்பப்பெறும்போது கற்பூர ஜோதியில் பளீரிடும் அவள் முகமும், நாசி துவாரங்களை அதிகம் காட்டாத மூக்கும், செக்கசேவெலென்றிருந்த உதடுகளும், செழுமையில் திளைத்த கன்னங்களும், சிமிட்டும் இமைகளும், சுடரும் விழிகளும், முன் நெற்றியில் அணுக்கமாக வளைந்திருக்கும் கோணல் வகிடெடுத்த தலைமயிரும், அதன் சூட்சமத்தால் இலைமறைகாயாக தெரிகிற காதுமடல்களும், பின்னர் அது கூந்தலாய் உருப்பெற்று பிடறியில் கால்போட்டு, கரு நாகம்போல பின்புறத்தில் புரளுவதுவரை எல்லாமே அழகுதான்.

 

சித்ராங்கிக்குத் தனது அழகைபற்றிய கர்வமிருந்து. அழகாய் இருப்பவள் கர்வப்படுவதில் என்ன தப்பு? சிதம்பரத்தில் மட்டுமில்லை விஜய நகர சாமாராச்சியத்திலேயே அப்படியொரு பெண் சொரூபத்தை கண்டதில்லையென இதே கட்டிலில் வைத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கூறவில்லையா? அவரை பொறுத்தவரை இந்த லோகத்தில் இரண்டே இரண்டுபேர்தான் அழகு. ஒருத்தி யோக நித்திரைசெய்யும் நாராயணர் பக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கும் லட்சுமி தேவி. மற்றொருத்தி அந்த நாராயணனின் அடியாரான கிருஷ்ணப்ப நாயக்கரின் சித்ராங்கி. கோவிந்தராஜபெருமாளை தரிசிக்க இல்லையென்றாலும் இந்த சித்ராங்கியை தரிசிக்க சிதம்பரம் வரமாட்டேனா என்று கூறியிருக்கிறார்.

 

கதவை மூடியிருந்ததால் சற்று முன்னதாகவே அறைக்குள் மெல்லிய இருள் பரவியிருந்தது. புடவையை மாற்றத் தோன்றவில்லை. மனதிற் புகைந்தது. ஏமாற்றமா, கோபமா இன விவரிக்க இயலாதவளாகயிருந்தாள். சீண்டிய பாம்புபோல சுவாசித்துக்கொண்டிருந்தாள். தலையிலடித்துக்கொண்டு அழலாமா என்று கூடத் தோன்றியது.  அம்மாவுக்குத் தெரிந்தாள் வீட்டை களேபரம் பண்ணிவிடுவாள். செண்பகம் நல்ல செய்தியை கொண்டுவருவாளா? கொண்டுவருவாள் என்றது மனம். அம்மா நீங்க தைரியமா வீட்டுக்குபோங்க, அவரை நான் போய் பார்த்து வரேன், என்று சமாதானம் சொல்லியிருக்கிறாள். செண்பகத்திற்கு அவன் மனதை மாற்றும் அளவிற்கு சாதுர்யமுண்டா. இவள் அழகைக் காட்டிலும் செண்பகத்தின் வாய்ப்பேச்சினை நம்பி இந்தவீட்டிற்கு ஆண்கள் வரவில்லையா என்ன? வந்திருக்கிறார்கள். ஆனால் செண்பகத்தின் பேச்சு தீட்சதர் மைத்துனனிடம் மாத்திரம் எடுபடாமல் போவதேன்?

(தொடரும்)

 

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (83)
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *