மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41

This entry is part 22 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 

நாகரத்தினம் கிருஷ்ணா

 

 

51.       மயக்கம் தெளிந்திருந்தேன். பறவைகளும் விலங்குகளும் கூடி உரையாடுவதுபோல குரல்கள் தெளிவின்றி கேட்டன. வீட்டின் முன்வாசலிலிருந்த பூவரசமரங்களிலும், இடது புறம் களைத்து காலை பரப்பியபடி வாயில் நுரையொழுக கண் துஞ்சும் எருதுகளிடமும் வெக்கையின் பாரிய வீச்சு. விநோத கயிறுகளால் இழுப்பட்ட சர்க்கஸ் கூடாரம்போல வீட்டு வாசலை வெயில் மூடியிருந்தது. என்னைக் கண்டதும் அலை இயக்கம் நின்ற கடல்போல அங்கே மௌனம். விழல் வேய்ந்து கீழே சிமெண்ட் மெழுகிய அக்கொட்டகை ஏற்கனவே கண்ணிற்பட்டிருக்கிறது, எனினும். கேட்பாரற்ற நோயாளி போலவிருந்த அதன் தோற்றம் பெரிதாய்க் கவர்ந்ததில்லை. ஓர் அசாதரண கவலையில் ¦துவாக நடந்து மனிதர் கூட்டத்தை நெருங்கினேன். அவர்கள் தங்கள் பேதங்களை மறந்து கூடியிருந்தார்கள். இறுக்கத்தை தளர்த்த நினைத்தவள்போல ஒருத்தி, “எங்க நடு சித்தி பொண்ணுகூட இரண்டு முறை தண்ணியிலே விழுந்து மூன்றாவது முறை எழுந்திருக்கவில்லை. பாவிமகள் குளிப்பாட்டகுள்ள வள்ளிக்கிழங்குமாதிரியில்ல இருந்தா. பொணத்தை குழியிலெ வச்சுட்டு திரும்பன மனுஷன் சோத்த வாயிலவைக்க ஒரு கிழமை ஆச்சு!”, என்றாள். கூட்டத்தைவிலக்கிக்கொண்டு முன்னால் சென்றேன். வேணு அம்மா கவலையுடன் அமர்ந்திருந்தாள். அருகில் பார உடலுடன் வேறொரு பெண்மணி. அவள் மார்பில் கலா பெண்ணின் பாதியுடல் இருந்தது. மறுபாதி சிமெண்டு தரையில் கால் பிரிந்து கிடந்தது. தண்ணீரில் முக்கியெடுத்ததுபோலவிருந்தாள். ஒருவர் விசிறிமட்டையால் விசிறிக்கொண்டிருந்தார். கலாபெண்ணின் பஞ்சாபியிலும் தலை மயிரிலும் வடிந்து வாசலில் நீர்த்தாரைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஈர ஆடை அவள் உடலை கடித்திருந்தது. கை கால்களில் அசைவு தெரிந்தது.

 

–  உங்கள் வீட்டில் வேலையிருந்தால் அதைப்போய் பாருங்களேன்? வேணுகோபால்.

 

–  ஆமாம். இப்படி கூட்டம் கூடினால் எப்படி, அவளுக்கு காற்று வேண்டாமா? பெரியவர் சடகோபன்.

 

–  கலாவுக்கு என்ன? – அவரிடம் கேட்டேன்

 

–  அக்கா! கலா கையை நீட்டினாள்.

 

–  பத்து நிமிடத்திலே எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன், பிறகு சொல்றேன். கிழவர் பேச்சு எனது பதட்டத்தை குறைக்கசொல்லப்பட்டதென்பதை வாட்டத்துடனிருந்த அவர் முகம் உரைத்தது.

 

– உனக்கு என்ன நடந்தது? -கலாவிடம் கேட்டேன்.

 

– மாமா  அப்புறமா சொல்வாங்க, என்ற கலாவின் அம்மா, அருகிலிருந்த காப்பி தம்ளரை கையிலெடுத்துக்கொண்டு “போட்ட காப்பி கூட ஆறிபோச்சு, கொஞ்சம் குடியேன்”, என்றாள். கூட்டம் மெள்ள கரைந்துகொண்டிருந்தது.

 

நீட்டிய காப்பி தம்ளரை வேண்டாமென்று மறுத்து எழுந்தவளை, அணைத்துக்கொண்டு முத்தமிட்டேன். தன்னை மார்பில் சாய்த்திருந்த பெண்மணியின் கரங்களை விலக்கிவிட்டு எழுந்திருக்க முயற்சி செய்தவளுக்கு இரண்டு பெண்கள் உதவினார்கள். கலா அம்மாவும் இன்னொரு பெண்மணியுமாக ஆளுக்கொருபக்கம் பிடித்துக்கொண்டு மெள்ள நடத்தி வீட்டிற்குள் அழைத்துவந்தார்கள். நடக்க முடியுமென்றாள் கூடத்திற்கு இடப்புறம் கலாவின் தாய் நடக்க அவளைத்தொடர்ந்தேன். அறையில் கலா அம்மா மூலையில் சாய்த்துவைத்திருந்த பாயைத் தரையில் விரித்துப் போட்டாள். ஒரு தலையணையையும் கொடுத்தாள். ஈர உடையைக் களைந்து மாற்றுடை அணியவேண்டும் என்றேன். அவள் அம்மா ஒரு பையைக்கொண்டுவந்துபோட்டாள்.  “கலா உடையை மாற்றிக்கொள்”, என்றேன். “உங்க முன்னாடி எப்படி? எனக்கு கூச்சமாக இருக்கிறது”, என்றவளிடம், “கண்களை மூடிக்கொள்கிறேன், தைரியமாக உடையை மாற்றிக்கொள்”, என்றேன். எனக்கும் உடை மாற்றிக்கொள்ளவேண்டும் போலிருந்தது, அதை அவளிடம் தெரிவித்தேன். தன் கண்களை மூடவேண்டுமென்ற அவசியமில்லை, என்றாள். நான் அதைச் சொல்லியிருக்கக்கூடாது. மளமளவென்று ஆடையைக் களைந்தேன்.

 

– ‘அக்கா நீங்க ரொம்ப அழகா?

 

– இந்த நேரத்துலே கேட்கவேண்டியா கேள்வியா? கேட்டுட்ட. நான் எப்படி சொல்வது மற்றவங்கதான் சொல்லணும்.உண்மையைச் சொன்னா உன்னைவிட அழகுலே நான் சுமார்.

 

– பொய் சொல்லாதீங்க. நான் குருடிங்கிறதாலே என்னவேண்டுமானாலும் சொல்லலாமென்று நினைக்கறீங்க.

 

– ஏன்?

 

– அழகைப் பற்றி பேச பார்வை வேண்டுமென்ற அரிச்சுவடிகூடவா எனக்குத் தெரியாது.

 

– அழகைத் தொட்டும் உணரலாம். கிட்டவா. உன் கைகளைத் தொட்டுபார், கால்களைத்தொட்டுப்பார், உதட்டில் விரல் வைத்துபார், கன்னங்களை வருடிப்பார், உன் மார்பகங்களைத் தொடு.

 

சொல்ல சொல்ல அவள் விரல்கள் கட்டளைக்குப் பணிந்தவைபோல அவள் அங்கங்களைத் தேடித் ஊர்ந்தன. தொட்டு முடிந்ததும் உடலில் நடுக்கத்தையும், கன்னங்களில் சிவப்பையும் பார்த்தேன். பின்பக்கமாகவே நடந்து சுவற்றோரம் போய் நின்றாள். கைளால் முகத்தைப் பொத்தியவள், தலையைத் திருப்பிக்கொண்டாள்.

 

– பாதிகிணறு தாண்டியிருக்கிறாய். மறுபாதியைத் தாண்டவேண்டாமா. என்னைத் தொடு.

 

– மாட்டேன் எனக்குக் கூச்சமாக இருக்கிறது.

 

– நீ அழகாய் இருப்பது உனக்குத் தெரியவேண்டுமா, வேண்டாமா?

 

– வேண்டும்.

 

– அப்போது தைரியமாக வா! மெல்ல என்னை நெருங்கியவளின் கைகளைத் தொட்டு எனது கன்னங்களில் வைத்தேன். சுதந்திரமாக அவள் விரல்கள் எனது உதட்டைத் தொட்டு விலகின. தயங்குவதுபோல தெரிந்தது. அவள் உன்ளங்கைகளை எனது மார்பில் நிறுத்தினேன். ஏன்நிற்கிற? உட்கார். என்றேன். உட்கார்ந்தவள், சரிந்தது போல என் மேல் விழுந்தாள். அவள் முகம் என் நெஞ்சில் இருந்தது. வெதுவெதுப்பான கண்ணீர் மார்பை நனைத்தது.

 

– ஏன் அழற, அவள் காதுமடல்களை எனது உதடுகள் தொட்டு விசாரித்தன?

 

– எனக்கு அச்சமாக இருக்கிறது,

 

– எதற்கு?

 

-சாமிநாத அண்ணன் இன்னும் வீடு திரும்பலை.  காலையிலே உங்களை அழைப்பதற்கென்று பஸ்ஸ்டேண்டுக்கு வந்தவர். அவங்க வீட்டுலேருந்து வந்திருந்தாங்க. பொதுவா  அவர் எங்கேயும் சொல்லிக்காம போறதில்லை என்பதால பயப்படறாங்க. வேணு அண்ணனும் அவங்க பிராண்ட்ஸ்கெல்லாம் போன்போட்டுப் பார்த்துட்டான் தகவலில்லையாம்.

 

– சுத்தம். இதற்காகவா கவலை. எங்கே போயிடப்போறார் வந்திடுவார். சென்னையிலிருந்து வேணு எப்போது வந்தார்.

 

–  நான்கு மணிக்கெல்லாம் வந்துட்டான். சாமிநாதன் அண்னன் வீட்டிற்குப்போக இருந்தவன் உங்க பிரச்சினையாலே போகவில்லை.

 

– என் பிரச்சின என்ன?

 

– தாத்தாகூட பேசிக்கொண்டு இருந்தீங்க இல்லையா, அப்போது திடீர்னு மயக்கம் போட்டு விழுந்தீட்டீங்க. காலையிலே சாப்பிடாம வந்திருக்கணுமென்று நினைச்சு உங்களைக் கொண்டுபோய் படுக்க வெச்சோம். அக்கா என்ன திடீர்னு அமைதியாயிட்டீங்க?

 

– காலையில் பேருந்து ஏறும்போது தினசரியொன்று வாங்கினேன். படிக்க நேரமில்லை.

 

– சரி. நீங்கள் படித்துக்கொண்டிருங்கள். அம்மா சோற்று வடாம் போடனுமென்று சொல்லிக்கொண்டிருந்தாள், நானும் கொஞ்சம் உதவிட்டு வறேன்.

 

 

52. மணி நான்கு முப்பது. சன்னலைத் திறந்தேன். வெயில் தணியாதிருந்தது. புதுச்சேரியினும் பார்க்க செஞ்சியில் வெயிற் கடுமையாக இருந்தது. வேணுவின் நண்பன் சாமிநாதனைப்பற்றி கலா கூறிய தகவல்கள்  வியப்பாக இருந்தன. காலையில் அவன் நடந்துகொண்ட விதமும் திடீரென்று காணாமற்போன செய்தியும்! இதில் என் பங்கென்ன? நான் ஏதாவது செய்ய இருக்கிறதா? அவனொன்றும் சிறுவனல்ல வந்துவிடுவானென்றது உள்மனம். வராமற் போனால்? இதென்ன அசட்டுத்தனமான கற்பனை. நடப்பது நடக்கட்டும். மாலை புதுச்சேரிக்கு திரும்புவதென தீர்மானமாக இருந்தேன். கதவைத் தள்ளித் திறந்தேன். திறந்த கதவின் கிறீச் சப்தம்கேட்டிருக்கவேண்டும்.

 

– அக்காவா! -கலா: பச்சை நிற ஜார்ஜெட் சுரிதார், கலிதர் குர்த்தா; ஓரங்களில் பேட்ச்வொர்க் பூவேலைகள் என்றிருந்தாள். இருகாதுகளிலும் சுரிதாருக்கு பொருந்தமாக, பச்சைக்கல்பதித்த ஏர் ரிங். கழுத்திலிருந்த பச்சைக்கல் மாலையும் அவளுக்கு நன்றாகவே இருந்தன.

 

– எனது பையில் கேமரா இருக்கிறது. உன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன். அவசரமாய் கைபையைத் தேடி, கேமராவை எடுத்து கலா பெண்ணை விரும்பும் வகையில் நிற்கவைத்து படங்களை எடுத்தேன். சந்தோஷமாக இருந்தது.

 

– என்கண்ணே பட்டுவிடும்போலிருக்கிறது. ஏதாவது விசேடமா?

 

– அதெல்லாம் ஒன்றுமில்லை. சென்னையிலிருந்து திரும்பிய அண்ணன் பையை சோதனைப்போட்டேன்.  குருடின்னாலும் நானும் பெண்தானே?

 

– கலா! இப்படி அடிக்கடி குருடிண்ணு சொல்வதை நிறுத்து. என் காதிலே திரும்ப அந்த வார்த்தைகள்விழக்கூடாது.

 

– விழாது, சத்தியம். முகத்தை அலம்புகிறீர்களா? வெளியில் தண்ணீர் இருக்கிறது. சோப்பும் டவலும் கொண்டுவருகிறேன்.

 

– தேவையில்லைக் கொண்டுவந்திருக்கிறேன் எனக்கூறி அடுத்த பத்துநிமிடத்தில் வேலையை முடித்து, முகத்தை துடைத்தபடி புறவசால் கதவைத் தள்ளிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தேன். வந்தது நானென்று கலாவுக்கு புரிந்திருக்கவேண்டும். “நீங்கள் தாத்தாவுடன் பேசிக்கொண்டிருங்கள். இன்றைக்கெல்லாம் எதுவும் சாப்பிடலை, அம்மா ஓட்டலுக்கு ஆளனுப்பி ஏதோ வாங்கி வைத்திருக்கிறாள். நான் கொண்டுவரசொல்றேன்.”- என்றாள்

 

பெரியவர் ஏதோ புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தார். என்னைக்கண்டதும் புத்தகத்தை மூடி  வைத்துவிட்டு:

 

– வாம்மா உட்கார் – என்றார். .

 

– ஓய்வெடுத்தாயா?

 

– ம்.

 

– உனக்கு ஏதேனும் தகவல் தெரிஞ்சுதா?

 

– எதைப்பற்றி?

 

– சாமிநாதன் காணாமற்போனதுபற்றி.

 

– நீங்களும் அதை நம்புகிறீர்களா? காணாமற்போயிருக்கவேண்டுமென்று உறுதியா எப்படி சொல்றீங்க. அவரே கூட சொந்த விருப்பத்தின்பேரில் எங்கேயேனும் புறப்பட்டு போயிருக்கலாமில்லையா. தவிர அவர் ஒன்றும் சின்னபிள்ளை இல்லையே,  கூப்பிட்டவர்கள் பின்னாடி போவதற்கு. அதிருக்கட்டும் கலாவுக்கு என்ன ஆச்சு?

 

–  சித்தெ முன்னே கிணற்றில் விழுந்துட்டா. அதை தற்கொலை முயற்சியா நினைக்கலை. வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. செஞ்சிக் கோட்டைகளை இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா? குறிப்பாக இராஜகிரிமலையில் ஏறி இருக்கிறாயா?

 

–  மலைகளையும், கோட்டைக்குள் உள்ள பிறவற்றையும் பார்த்தபிறகே உங்கள் நாவலைப்பற்றி வேணு கூறியபோது அதைப் படிக்கவேண்டுமென்ற ஆர்வம் பிறந்தது. பார்த்திருக்கிறேன்.

 

– கமலக்கண்ணி கோவில் பக்கம் போயிருக்கிறாயா?

 

– செஞ்சிக்கோட்டைக்குள் இருக்கிற ஒவ்வொன்றையும் பார்த்திருப்பேன். என்னால் ஒரு புத்தகமே எழுதமுடியும். கமலக்கண்ணி கோவில் மட்டுமல்ல அங்கிருக்கிற ஆஞ்சநேயர்கோவில், பிற கோவில்கள், குளங்கள் கல்யாணமகால், தானியங்களஞ்சியங்களென பலதையும் பார்த்திருக்கிறேன்.

 

– கமலக்கண்ணிகோவில் பக்கம் எத்தனை மணிக்குப் போனாய்.

 

– ஞாபகமில்லை.

 

– அப்படிப் போகவேண்டிவந்தால் உச்சி வேளையில் அங்கே போகாதே. மோரைக்குடித்து நீ மயங்கிவிழுந்ததும் உடம்பெல்லாம் நடுங்கியது. கடந்த இரண்டு கிழமையா கலாபெண்ணை வைத்துக்கொண்டு நாங்கள் படும் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

 

– நீங்கள் பயப்படும் அளவிற்கு அவளுக்கு என்ன நடந்தது? .

 

– திடீர் திடீரென்று பித்து பிடித்தவள்போல நடந்துகொள்கிறாள். வலிப்புகண்டவள்போல வெகுநேரம் படுத்துருளுகிறாள். அவள் பாட்டுக்கு விடுவிடென்று நடந்து சென்று கிணற்றில் குதித்துவிடுகிறாள் ஒவ்வொரு முறையும் காப்பாற்ற யாராவது கிடைப்பார்களா என்ன?  இதே தெருவில் ஓர் இளம்பெண்ணுக்கும் அப்படி பிரச்சினை இருந்து ஒரு நாள் கிணற்றில் குதித்தவள் உதவிக்கு ஆளின்றி பிணமாக மிதந்தாள். குருட்டுப்பெண்ணென்பது ஒரு குறையெனில், புதிதாக இப்பிரச்சினை வேறு.

 

அம்மாவும் பெண்ணுமாய் அடுக்களையிலிருந்து வெளியில் வந்தார்கள். அம்மாவின் கைகளில் தட்டுகள் இருந்தன. பெண் தண்ணீர் செம்பை கீழே வைத்தாள். கலா அம்மா அவளைப்பார்த்து ‘நீ அவர்களுடன் உட்கார். பலகாரத்தை நான் எடுத்து வருகிறேனென்று போனவள், ஒரு பையுடன் வந்தாள். பேப்பரில் மடித்துவைந்திருந்த பார்சல்களை டீப்பாயின் மேல்வைத்தாள். பெரியவர் ஒன்றைப் பிரித்து என் தட்டில் வைத்தார். கலாஅம்மா தான் பிரித்ததை மகளுக்கு வைத்தாள். மற்றொன்றைப்பிரித்து கிழவர் தன் தட்டில் வைத்துக்கொண்டார். கலா அம்மாவிடம், நீங்களும் உட்காருங்களேன் என்றேன். முதலில் உங்கள் வேலை முடியட்டும், காப்பி போட்டுக்கொண்டு வருகிறேன், எனக்கூறியவள் அடுக்களைக்குள் நுழைந்து கதவை மூடினாள்.

 

– என்ன சொல்கிறீர்கள். கலாப் பெண்ணைக் கமலக்கண்ணி பிடித்திருக்கிறாள் என்கிறீர்களா?.

 

– அப்படித்தான் நம்புகிறேன். இதையெல்லாம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளகூடாது. சென்ற வாரம் எங்கள்வீட்டிற்கு வந்திருந்தபோது நான் ஆசிரியராக வேலைசெய்த சமயம் நடந்த சம்பவமென்று கூறியது நினைவிருக்கிறதா? மதிய உணவிற்காக பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டானை நோக்கி வந்துகொண்டிருந்தேனென்றும், உன் வயதுப் பெண்ணொருத்தி தலையை முடிக்காமல் பின்புறம் பரத்தி, இரண்டு கைகளும் தலையைத் தாங்கிக்கொண்டிருக்க குத்துக்கலில் அமர்ந்திருந்தாளென்றும், நான் நெருங்கியதும் கைகளை முகத்திலிருந்து விடுவித்து எழுந்து நின்றவள் என்னை வெறித்துபார்த்துவிட்டு, விடுவிடுவென்று நடந்து பட்டாபிராமன் கோவிலைக் கடந்து தென்மேற்கே சென்றதாகவும் கூறினேன்.  இரண்டு மாதங்கள் கழித்து. ஒரு நாள் மாலை ஆசிரியர் தோழர் ஒருவருடன் சென்றபோது, அவளை மறுபடியும்   ஒரு குன்றில் தனித்து அழுதுகொண்டிருக்கப் பார்க்க நேர்ந்ததையும் அதற்கு நண்பர், “அது கன்னிமார் சாமி. அவளுடைய சகோதரிகளை எந்த காலத்துலேயோ கெடுத்ததற்கு இவளும் அவப்போது வந்து ஆண்களைத்தேடி பழிவாங்கிட்டு இருக்காளாம்”, என அவர் எச்சரித்திருந்ததையும் தெரிவித்தேன்.

 

நீங்களுமா இதையெல்லாம் நம்பறீங்க?

 

 

– நீங்களுமான்னா? எனக்குப் புரியலை.  எங்கள் நிலைமை, ‘ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே’ என்று புறநானூற்றில் வரும் பாடல் வாழ்க்கை.  வேணுவின் படிப்புக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. அவனப்பன் செத்தபோது ஊர் முழுக்க கடனை வச்சுட்டு செத்தான். நம்பிக்கை என்பது நிவாரணம் சார்ந்தது. கையில் பத்து இலட்சமோ இருபது லட்சமோ இருந்தால் கொஞ்சம் அரை மனதாக இந்த விஷயங்களை நம்பி இருப்போம். கோழிக்கழுத்தைத் திருகிபோட்ட கையோடு பெரிய பெரிய மருத்துவமனைகளையும் தேடிப்போயிருக்கலாம். எங்களிடம் இருப்பது கோழிமட்டுமே, அதனாலேதான் இவற்றையெல்லாம் முழுமையாக நம்பி தொலைக்கவேண்டியிருக்கிறது.

 

அவர் கூறிமுடித்தபோது, என் கைத்தொலைபேசி அலறியது. வேணுவாக இருக்குமோ என்று ஐயம். ஹலோ! தொலைபேசி குரல் கொரகொரத்தது.

 

– எனக்கு லைன் கிடைக்கலை கொஞ்சம் வெளியில் சென்று பேசுகிறேனென பெரியவரிடமும் கலாவிடமும் கூறிவிட்டு தெருவாசலுக்கு வந்தேன்.

 

– ஹரிணி! எரிக் நோவா பேசறேன். எங்க இருக்கிற?

 

– செஞ்சியிலே,  ஏன் ஏதேனும் அவசரமா, அந்தப்பெண் கிடைத்தாளா?

 

– இல்லை செஞ்சிக்கு வந்திருக்கிறேன். மகாத்மா காந்தி ரோடுல சிவம் ஹோட்டலில் தங்கியிருக்கேன்.  புதுச்சேரியில் ‘ஹாட்-பிரெட்’ கடையில் இருவரும் உரையாடியபொழுது, எனக்குக்கூட செஞ்சிக்குச் செல்லும் வேலை இருக்கிறது, அங்கே ஒருவரை பார்க்கவேண்டும். புத்தகமொன்று அவரிடம் இருக்கிறது. அதுகிடைத்ததெனில், புதுச்சேரிக்கு வந்த நோக்கத்தில் பாதி நிறைவேறியதுபோலவென்று கூறினேனே நினைவிருக்கிறதா? இன்று பிற்பகல் 3மணிக்கு என்னைசந்திப்பதாக அந்த ஆள் கூறியிருந்தான், வரவேயில்லை. இன்னும் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு புறப்பட்டுவிடுவேன்.

 

– அவர் பெயர் சாமிநாதனா?

 

– உனக்கெப்படி தெரியும்

 

-ஊகம். எப்படி வந்தாய்?

 

– வாடகைக்கார் எடுத்துவந்தேன். இரவு புதுச்சேரி திரும்பிவிடுவேன்.

 

– உன்னுடன் புதுச்சேரி வரலாமா?

 

– தாராளமாக.

 

– ஓட்டல் முகவரியைக்கொடு ஆறு ஆறரை மணிக்கெல்லாம் அங்கிருப்பேன். கொடுத்தான், குறித்துக்கொண்டேன்.

 

– இன்றைக்கே புதுச்சேரி திரும்ப உத்தேசமா? வேணுகோபால்.

 

– எப்போது வந்தாய். உன் பிரண்டு சாமிநாதன் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா?

 

– இதுவரை ஒரு தகவலுமில்லை. நான் கேட்ட கேள்விக்கு பதிலில்லையே.

 

– உனக்குத் தெரியாதா என்ன? இங்கே என்னால் தங்க முடியாது. பெரியவர் நாவலின் கையெழுத்து பிரதியை புதுச்சேரியில் ஒரு நண்பரிடம் கொடுத்திருக்கிறேன். அவர் மின் நகலெடுத்துவிட்டு  பிரதியை என்னிடம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். அப்பிரதியை எடுத்துக்கொண்டு அவசியம் செஞ்சி வரவேண்டியிருக்கும். இதற்குடையில் நீ வருவதென்றாலும் எனக்குச் சந்தோஷம். என்னை ஹோ¡ட்டல் சிவத்தில் கோண்டுபோய் சேர்க்க முடியுமா? மகாத்மா காந்தி ரோட்டில் இருக்கிறதாம்.

 

– நண்பனொருவன் பைக் இருக்கிறது. பிரச்சினை இல்லை. உடனே கிளம்பி ஆகனுமா ?

 

– வேறு வழி இல்லை. உள்ளே போய் பையை எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் ஒருவார்த்தை சொல்லிட்டு வந்திடறேன்.

 

கூடத்திலிருந்த பெரியவர் சடகோபனிடம் சொல்லிக்கொண்டு புறப்படலாமென்று சென்றபோது, ஏதோ யோசனையில் இருந்தார்.

 

– தாத்தா புறப்படுகிறேன்.

 

– புதுச்சேரிக்கா

 

– ஆமாம்

 

– திரும்ப வருவாயல்லவா?

 

– உங்கள் கையெழுத்து பிரதியைக் கொண்டுவருவேன். அநேகமாக புதுச்சேரி நண்பர் பதிப்பகம் சம்பந்தமா விசாரிச்சுவந்திருப்பார். அதற்காக வரவேண்டியிருக்கும்

 

– கலா!  எங்கே போயிட்ட?

 

– இங்கே இருக்கிறேன் அக்கா! உள்ள வாங்க! மிக மெதுவாக பேசினாள். கிழவரின் காதில் விழுந்துவிடபோகிறதென்ற எச்சரிக்கை குரலில் தொனித்தது.

 

–  இருட்டில் நின்றுகொண்டு இங்கேயென்ன செய்கிறாய்?

 

– புதுச்சேரிக்கு பயணப்பட்டாச்சா. உங்களிடம் மனம்விட்டு பேசணுமென்று நினைச்சேன்.

 

– இப்போதுதான் சொல்லேன்.

 

– இல்லை. நீங்கள் காலில் வெந்நீரைக்கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள்; அதற்கு நேரம் காணாது.  இன்னொருமுறை சந்திக்க முடிந்தால் பேசலாம்.

 

– நிச்சயம் சந்திக்கலாம். கவலைப்படாதே. அவள் இருகன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு, ‘அம்மா இல்லையா’ என்றேன்.

 

– அவர்கள் இல்லை. சாமிநாத அண்ணன் வீட்டுக்குப் போயிருக்கனும்.

 

– அவர்களிடம் சொல்லிவிடு  நான் புறப்படுகிறேன்.

 

புறப்படும்போது கலா இருட்டில் விசும்புவது காதில் கேட்டது.

 

 

 

– தொடரும்-

————————————–

 

Series Navigationசாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்உரஷிமா தாரோ (ஜப்பான்)
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *