மாசறு பொன்னே

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 7 of 12 in the series 17 ஜனவரி 2021

குணா (எ) குணசேகரன்

இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக

நிறுக்கள் ஆற்றினோ நன்று, மற்றில்ல,

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,

கை இல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே

மாசறு பொன்னே

கருவுற்ற காலம் தொட்டு அன்னையைச் சார்ந்தோம். பருவ காலத்து காதலென்றோம். தொடர்ந்து உற்றவள் என்றோம்… உறுதுணை என்றோம். மகள் என்றோம், மருமகள் என்றோம்… மறந்தோம்… மறைந்தோம். காலம் திரும்பவும் சுழல்கிறது. யார் தான் விலக்கு? பரந்தாமன் மட்டும் விலக்கா என்ன?

வெவ்வேறு சிந்தனைகளுடன்… எதையாவது சாதிக்க வேண்டும் என்ற மனநிலை. என்ன செய்வதென்று புரியாமல், உடற்பயிற்சி செய்து கட்டுடல் கொண்டான். நடிப்புக்கேற்ற கட்டமைப்பு என்று உசுப்பேற்றி விட்டவர்கள் உண்டு. அது மட்டும் போதாதென்று உணர்ந்து பட கொஞ்ச காலம் பிடித்தது அவனுக்கு.

இதற்கிடையில் வயது காலத்தில் வந்து படும் கோளாறு. அவனும் விலக்கல்ல. காதல் கொண்டான்.

பாரிஜாதம். ஒன்று விட்ட முறைப்பெண். கிராமத்து சூழலில், வயது காலத்தில், ஒன்றானால் என்ன, ஒன்றுவிட்டால் என்ன… அவள் முறைப்பெண். அவளுக்கும் ஓர் ஈர்ப்பு அவன் மேல். கட்டுமஸ்தான மெறுகேற்றிய உடல்… பருவத்தில் வரும் இனக் கவர்ச்சி.

இளம் பிராயத்தில் அவன் மீதிருந்த பற்று… ஆற்றங்கரை, கோவில் தோப்பு என்று சுற்றினார்கள். பள்ளிக்குச் செல்லும் போது ரயில் பாதையில் கை கோர்த்து இணை பிரியோமென்று இணையாது நடந்தார்கள். அப்பொழுது அது விகாரமாய்த் தெரியவில்லை. வயதும் பருவமும் கூட சிறிதாய் விலகத் தொடங்கினாள். காதல் என்பது மாறி வாழ்க்கை என உணரத் தொடங்கியிருந்தாள்.

படிக்கும் காலங்களில் அவள் நினைவும், அவளும் அவனுக்குள் படுத்திய பாடு… அவனால் சரிவர படிப்பில் கவனம் கொள்ள முடியவில்லை. சிற்றிளம் பிராயத்தில் சுற்றி வந்தவள், வயது கூட, அனேகம் யோசிக்கத் தொடங்கினாள். கட்டுமஸ்தின் கவர்ச்சி குறைந்து, அதிக படிப்பில் நாட்டம் போனது. அவனிடமிருந்து விலகியே இருந்தாள்.

அவனுக்கு அப்படியில்லை. சிறுபிராய கவர்ச்சி, காதலாய் மாறி விஸ்வரூபமெடுத்தது. நாட்டமில்லா படிப்பு நட்டாற்றில் விட்டது. கட்டுமஸ்து கை கொடுக்குமென முயற்சித்தான். அது விட்டுத்தான் போனது. சினிமாக் கனவுகள், முயற்சித்த போது தான் தெளிவுறுத்தின… அத்தனை சுலபமில்லையென்று… நெளிவு சுளிவுகள் ஏராளம்… ஏறும் வழி தேடித் தேடி… வேறு வழி தேட முடிவெடுத்தான்.

அதற்குள் அவள் படித்து மேலே போய்விட்டாள். அவன் அங்கேயே தங்கி விட்டான். பெற்றவர் விட்டுச்சென்ற காணி நிலம் கொண்டு, காலம் தள்ளுவதே பெரிய காரியம்.

இருந்தும், அவனுக்குள் அவள் இருந்தாள். திருமண வயது வந்ததும் முயற்சித்தான். அதே காதலோடு… அதே அன்போடு…

வேலையென்றில்லை. பெண்ணைப் பெற்றவர்க்கு கட்டுமஸ்தா பெரிது. கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள ஒருவன் தேவை. பரந்தாமனை அவர் ஒத்துக் கொள்வதாயில்லை.

எது கண்கலங்காமல் என்பதற்கு இருந்த வரையறை… அவர்களுக்குள் வந்துவிட்ட தடுப்புச்சுவர். அத்தோடு அந்தஸ்தும் கூடிப் போனது.

அவனுக்கு ஒரு வேலை வேண்டும்… இல்லை கண்கலங்காமல் காலம் கடத்த வருமானம் வேண்டும். போதாது. காலம் தள்ள இன்னும் கொஞ்சம் வேண்டும்.

இந்த நேரத்தில் வந்தான் சீமைக்காரன். பாரிஜாதத்திற்கு பார்த்த மாப்பிள்ளை… அவனுக்கு ஈடு கட்ட நிச்சயமாய் முடியாது. இதை பரந்தாமன் உணர்ந்தான். காலம் கடந்த தெளிவு.

படிக்கும் காலத்தில் எப்படியும் வாழ்ந்து விடலாம் என்றிருந்த கனவுகள் எடுபடவில்லை, திருமண வாழ்க்கைக்கு.

சிறு வயது முதல் அவனைப் பார்த்து வளர்ந்த சாரதிக்கு அவன் நிலைமை சங்கடத்தை ஏற்படுத்தின. சாதிக்க வேண்டும் என்று  முனைப்புடன் செயல் பட்டவன்… தொட்டுவிடும் தூரங்களை அவளுக்காக விட்டவன். அவளே பிரதானம் என்று போனவன். இதோ அவளும் கை விட்டுப் போகும் நிலை… அவனுக்குள் இருந்த முனைப்புகள் சிறுகச் சிறுக குறைவது போலிருந்தது. ஏதாவது ஒரு வேலை இருந்தால் போதுமென்று. அதைக் கொண்டும் ஈடு கட்ட முடியுமா என்ன?

நிச்சயம் பரந்தாமனுக்கு அவளில்லை என்று முடிவான நிலையில், அவனுக்கு அறிவுறுத்தினான். தெரிய மறுப்பவனுக்கு யதார்த்தம் புரிய வைத்தான். அவனோடு கூட்டிக் கொண்டான். அவன் பார்க்கும் கட்டிடத் தொழிலில் நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்தான். அவனோடு துணையிருத்திக் கொண்டான். எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் காணல் அத்தனை சுலபமில்லை என்பதை புரியவைத்தான்… காதலையும் சேர்த்து.

பரந்தாமனுக்கு மறுபடியும் அந்த இளம் வயது வெறித்தனம் துளிர் விட்டது. சாரதியின் முயற்சிகள் துளிரச் செய்தன. மாநகர வாசம்… மாறுபட்ட வாழ்க்கை… அவனின் முனைப்பு அனேக மாற்றங்களை வெளிப் படுத்தின. செய்கின்ற தொழிலில் அந்த வீரியத்தைக் காட்டினான்.

பொருளாதார மந்த நிலையிலும் பெரும்பாலான வீடுகளை விற்றுத் தீர்த்தான். அடுத்தது, அடுத்தது என அவன் எடுத்த வேகம், சாரதிக்கும் சந்தோஷம்.

சாரதிக்கு சாரதியானான். சாரதி அவனைப் பங்கு தாரராக்கினான். சாரதியின் குடும்பத்தில் ஓர் அங்கமானான். அவன் பிள்ளைகள் இவன் தோழர்கள். அவர்களோடு இருந்துவிட்டால் இவனும் குழந்தையாகிவிடுவான்.

சாரதியும், அவன் மனைவியும் அவனிடம் பல முறை சொல்லிப் பார்த்தார்கள்… ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் சொல்லி… அவன் சிரித்து விட்டு போய் விடுவான்.

பரந்தாமனைப் பார்த்து சாரதி அசந்து போனான். இவனுக்குள் உள்ள இவற்றை அடக்கி வைத்தது எது. காதல்…?  இல்லையென்று போனதும் தான் எத்தனை மாற்றங்கள்? அவனுக்குள் வந்த மாற்றங்கள் அநேகத்தைக் கொடுத்தன.

இருந்தும்… அவனுக்குள் இருந்தது, அவனுக்குள்ளேயே இருந்தது. வருடங்கள் போனாலும் அவை அவனை விட்டுப் போகவில்லை.

அவை புனிதம் என்று நினைத்தான். சிறு வயது முதல், பருவ காலம் வரை இருந்தவை… நின்ற நினைவுகள்… பசுமரத்தாணியாய்… அவன் வளர வளர… அவன் சுற்றி வந்த நினைவுகளை பொக்கிஷமாக்கினான். அந்த இடங்களை வாங்கிப் போட்டான். அதைக் கொண்டவர்… பரிஜாதத்தின் தந்தை… இப்பொழுது இல்லை… அவளும் போய் விட்டாள். அங்கீகாரம் பெற்றவர் மூலம் வாங்கினான். அவற்றை மாற்றவில்லை.

இந்த முறை ஊருக்குப் போன போது போய் பார்த்தான். வாங்கிப் போட்ட இடத்தில் ஒரு மரம்… அவர்கள் பதித்த நினைவுகளுடன்… மரம் வளர்ந்திருந்தது… ஆனால்… அதற்குள் அடித்த ஆணி ஆழமாய் அங்கேயே இருந்தது. அதிலிருந்து வடிந்த பால் உறைந்திருந்தது. மரமும் சற்று பருத்திருந்தது. அவன் அந்த நினைவுகளுடன்…

அவர்கள் பள்ளிக்குச் சென்று திரும்பும் போது இருந்து, கடந்த ரயில் நிலையம் மூடப்பட்டு விட்டது… பயணிகள் கூட்டமில்லையென்று…  அந்த சிமெண்ட் பெஞ்சுகள் அங்கேயே இருந்தன… சற்றே உருக் குலைந்து… அவர்கள் நடந்த ரயில் பாதை… அகலப் பாதையாய் மாறி இருந்தது… ரயில் பாதையை ஒட்டி இருந்த வேப்ப மரங்கள் களை தட்டி உறு மாறி வயது ஏறி அங்கேயே நின்றன… இயற்கையும், மனித செயற்கைகளும் இன்னமும் அவற்றை சேதப் படுத்தவில்லை. பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் இன்னும் அது வழி போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள்.

காலத்தின் ஓட்டம் தான் எத்தனை மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

பொதுக் கழிப்பிடம் உருவாகியிருந்தது. ரயில் சாலையின் இருபுறமும் அமர்பவர்கள் இனி இல்லை.

அவனின் வளர்ச்சி, அந்த ஊருக்குள் அவனுக்கு ஒரு அந்தஸ்தை தந்திருந்தது. இருந்தும் அவனுக்குள் ஏதோ ஒன்றை இழந்து நிற்கும் உணர்வு.

திரும்பி வந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. புதிய கட்டிடத்தில் ஒரு வீடு வேண்டி அவள் வந்திருந்தாள். பாரிஜாதம்… ஒரு சிறுவனை கூட்டிக் கொண்டு…

அவளுக்குள் சில மாற்றங்கள். கழுத்தில் அத்தாட்சி இல்லாமல். அது தான் நாகரிகம் போலும் என்று நினைத்தான். அவளிடம் பேசலாமா என்ற உள்ளுணர்வை ஏதோ தடுத்தது.

அவள் இங்கேயே வந்துவிட்டாளாம். சீமைக்காரன் போய் விட்டான். அவள் தனித்து… ஒரு பிள்ளையுடன்… வந்து விட்டாள்… சொந்த தேசத்தில் வேலை தெடிக்கொண்டு இருந்து விடலாமென்று…

இதுவும் சாரதி சொல்லித்தான் தெரியும்.

பரந்தாமனுக்குள் இனம் புரியாத உணர்வு. அவளின் நிலை கேட்ட சோகமா… இல்லை அவளைக் கண்டுவிட்ட சந்தோஷமா… இல்லை இவள் இன்னும் என்னவள் தானோ என்ற ஏக்கமா… சொல்லத் தெரியவில்லை.

அவனுக்குள் உள்ள சில மாற்றங்களை சாரதி கவனிக்கத் தவறவில்லை.

பரந்தாமனுக்கு அன்று வேலைப் பலு சற்று குறைவு. அருகிலிருந்த வணிக வளாகம் சென்றான். அங்கிருந்த பூங்காவில்… அவள்… பையனுடன்… அருகில் சென்றான்… பையனிடம் பேச்சு கொடுத்தான்… சிறு குழந்தையானான்… சாரதியின் பிள்ளைகள் போல அவனிடமும் விளையாடினான். அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் இருந்தது ஏக்கமா… சோகமா… நேரம் கடந்ததும் போய்விட்டாள்.

அவனுக்குள் இன்னும் அந்த எண்ண ஓட்டம். என்ன நினைத்திருப்பாள்… தவறாகவா… பேசலாமா… எனக்குள் ஏன் இப்படி? பழைய நினைவுகளா… அவள் ஏற்றுக் கொள்வாளா…?

நினைவுகள் நிற்பதாயில்லை. எண்ணங்கள் எடை போட்டன… இவ்வளவு நாள் காத்திருந்தது இதற்குத்தானா… நிலையில்லா இந்த நினைவுகளுக்கு சாரதி ஒரு முற்றுப் புள்ளி வைத்தான்.

அந்த வார இறுதியில் அவளை அழைத்திருந்தான். பரந்தாமனுக்குத் தெரியாது. சாதாரணமாய் வந்தவனுக்கு… சற்றே சங்கடம்… அங்கே அவளைப் பார்த்த்ததும். அவள் மகன், அவனைப் பார்த்ததும் சந்தோஷமாய்… “ஹாய்” என்றான். ராக், சிஸர், பேப்பர்…? என்று விளையாடத் தலைப்பட்டான்.

அவனிடம் அநேகம் பேசினான். அவனுக்குப் பிடித்தவைகளை பேசினான். கைப்பேசியில் எதையோ காட்டிப் பேசிக் கொண்டிருந்தான். அதை அவள் கவனிக்கத் தவறவில்லை.

எல்லாம் முடிந்து போகும் தருவாயில் சாரதி கேட்டான். “ நீ ஏன் கொண்டு விடக் கூடாது”.

சட்டென்று கேட்டதும் எதுவும் சொல்லவும் தெரியவில்லை, மறுக்கவும் முடியவில்லை.

இவன் என்ன பாலம் போடுகிறானா? அவளுக்கும் இஷ்டமா? இல்லை ஏதேச்சையா? குழப்பங்களுடன் ஆமோதித்தான். உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் கலந்த குறுகுறுப்பு… சின்ன வயதில் அவளுடன் இருந்த தருணங்களில் இருந்தது போல்…

காரில் செல்லும் போது அவள் ஏதும் பேசவில்லை. வெளியிலேயே பார்த்துக் கொண்டு வந்தாள். அவள் மகன் அநேகம் கேட்டான். அவர்களுக்குள் நடந்த சம்பாஷனைகளை கவனித்தும் கவனிக்காதிருந்தாள்.

அவனுக்குள் இருந்த உணர்வுகள்… பேசிக் கொண்டிருந்தாலும்… பாரிஜாத மலருக்கான வாசம்… செயற்கையா… இயற்கையா என்று சொல்லத்தெரியவில்லை. அவன் நேசித்த வாசம். அவனை விட்டுப் போன வாசம். அவன் காத்திருந்த வாசம். அது காமமில்லை. காதல்… காதலில் கண்ட வாசம்…

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வந்ததும் நிறுத்தினான். அடிக்கல் நாட்டி, அஸ்திவாரம் போட்டது முதல், ஒவ்வொரு கட்டமும் அவன் பார்வையில் வளர்ந்து முடித்த கட்டடங்கள். இப்பொழுது அடுத்தவர்க்குச் சொந்தம். காசு கொண்டு பிரித்து விட்டார்கள்.   இருந்தும் உள்ளுக்குள் அவன் கொண்ட உணர்வுகள், அவன் பார்த்து வளர்த்தவை இருந்து கொண்டு தான் இருந்தது.

அவள் இறங்கினாள். மகனிடம் சொன்னாள்… “பாபு அவரை வரச்சொல்”. அவனுக்கு சொன்னது புரியவில்லை, இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷம். தாயும் மகனும் என்றிருந்த வீட்டில் ஒரு மூன்றாம் மனிதர். அவனுக்குப் பரிச்சயமானவர். வருகிறார்… பரந்தாமனின் கையைப் பிடித்து அழைத்தான்.

ஏன் அவள் சொல்லக் கூடாதா… என்ன தயக்கம். ஒவ்வொரு கால கட்டங்களையும் யோசித்துப் பார்க்கிறான்… என்னையே சுற்றி வந்தவள்… என்னை விட்டு விலகிப் போனவள். இதோ இப்பொழுது “வரச்சொல் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இறங்குவதா வேண்டாமா என்று யோசித்தவன், அந்த சிறு மனதைக் கஷ்டப் படுத்த விரும்பாமல் இறங்கினான்.

நடந்த பாதை… அவன் பார்த்துப் பார்த்து வளர்ந்த கதையை சொல்லிக் கொண்டு வந்தான். ஆச்சர்யத்துடன் அவனும் கேட்டுக் கொண்டு வந்தான். அப்பொழுது தான் பார்த்தான்… அவள் போய் விட்டிருந்தாள்.

கடந்து வீட்டிற்கு வந்த போது கதவு திறந்திருந்தது. நேர்த்தியுடன்… சுவற்றில் புகைப் படங்கள்… பரந்தாமன் பாபுவுக்கு கைப்பேசியில் காட்டிய பசுமரத்தாணி புகைப் படங்கள்… அந்த மரத்தில் அவர்கள் பதித்த நினைவுகள்…

அவள் அங்கு இல்லை. உள்ளுக்குள் இருந்து தேம்பி அழும் சத்தம். உள் சென்று பார்த்த பாபுவிற்கு ஏனென்று புரிந்தும் புரியாமலிருந்தான். அந்நிய தேசத்து வளர்தலில் இருந்த ஒரு தெளிவு இருந்தது. திரும்பி வந்தவன், பரந்தாமனின் கையைப்பிடித்து அழைத்துச் சென்று பாரிஜாதத்தின்  கையோடு சேர்த்தான். தேம்பி அழுதவள் ஓவென்று அழுதாள்.

பரந்தாமன் ஆறுதல் படுத்தியதும்… தேறினாள்.

வெளியில் வந்த பாபு யதார்த்தமாய் அமர்ந்திருந்தான். வீட்டின் புகைப்படத்தை பரந்தாமனின் கைப்பேசியில் பார்த்ததும் புரிந்திருக்க வேண்டும். சேர்ந்திருக்க வேண்டியவர்கள் ஏனில்லை என்று மட்டும் அவனுக்குப் புரியவில்லை.

– குணா (எ) குணசேகரன்

Series Navigationமூட முடியாத ஜன்னல்தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)
author

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    புதிய பார்வையைக் காட்டும் சிறுகதை. இன்றைய சிறுவர்கள் நன்றாகச் சிந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பாபு நன்றாக உள்வாங்கி இருக்கிறான். பர்ந்தாமன் ஆறுதல் படுத்தியதும்…. தேறினாள் என்று இருப்பதிலிருந்து கதையின் முடிவை வாசகனுக்கு ஊகிக்கவிட்டிருக்கிறார் ஆசிரியர். பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *