மாமியார் வீடு

This entry is part 5 of 37 in the series 22 ஜூலை 2012
(திருமதி ஒல்கா அவர்களின் “அத்தில்லு ” என்ற சிறுகதையை ‘மாமியார் வீடு” என்ற தலைப்பில்
அனுப்பி உள்ளேன்.
ஒல்கா வின் புகைப்படத்தை இணைத்துள்ளேன்.

‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தொடர் திண்ணையில் வெளிவந்துள்ளது, ஒல்காவின் படைப்புதான்.)

தெலுங்கு மூலம் : ஓல்கா

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

மின் அஞ்சல் : tkgowri@gmail.com

இப்போதுதான் செய்தி வந்தது, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அன்று அனுப்பி விடுவார்கள் என்று. சுதந்திர தினத்தன்று எனக்கு சுதந்திரம்.

சிறுவயதில் பார்த்த வண்ண வண்ண கொடிகள் கண்முன்னால் படபடத்துக் கொண்டிருந்தன.

வந்தே மாதரம்… வந்தே  மாதரம் .. சுஜலாம் சுபலாம்  மலையஜ சீதலாம்.  ஸஸ்ய ஷ்யாமலாம் மாதரம்..”

மாதா! தாய்! நான் ஒரு தாய்தானா? இல்லாமல் என்ன? ஆனால் இல்லை. நான் ஒரு தாயாக எப்போது இல்லாமல் போய்விட்டேன்?

நான் ஒரு தாய்தான். இரண்டு மகன்களைப் பெற்ற பிறகு யாராவது அம்மாவாக ஆகாமல் இருக்க முடியுமா?

ஆனால் இப்போது அம்மா என்று அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை.

யாரும் என்னை ஒரு தாயாக அடையாளம் காணுவதில்லை.

என் கருவறைகூட என் தாய்மையை ஒப்புக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அம்மா என்ற சொல்லை நினைத்தால் வயிற்றை புரட்டிக்கொண்டு வருகிறது.

சமீபகாலமாக எனக்கு என் சிறுவயதைத் தவிர வேறு எதையும் நினைக்கத் தோன்றவில்லை. எஞ்சிய வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொண்டு எப்படியோ பிள்ளைப் பருவத்திற்கு மனம் நழுவிக் கொண்டிருந்தது.

ஐம்பது வருட வாழ்க்கையில் எனக்கு என் பிள்ளைப் பிராயத்தைத் தவிர நினைத்துப் பார்க்க எதுவும் இருக்கவில்லை.

பால்யம் என்றால் ஓட்டம், விளையாட்டு, கதைகள். பெரும் பாலானவர்களுக்கு அப்படித்தான் இருக்க வேண்டும். நிறைய வேலைகளை செய்து வந்தேன். எதுவும் பாரமாகத் தோன்றியது இல்லை. நினைவு தெரிந்த நாள் முதல் அம்மா சொன்ன வேலைகள் எல்லாம் உற்சாகத்துடன்  முடித்துவிட்டு அப்பாவுடன் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தேன்,

அப்பா பள்ளிக்கூட ஆசிரியர்.. பிழைக்கத் தெரியாத ஆசிரியராக  இருந்தாலும் வாழ்க்கையின் இனிமையைப் பகிர்ந்துக் கொடுத்த அப்பா.

வாத்தியாரின் மகள் என்று எனக்குத் தனி சலுகை. அந்த சின்ன ஊரில் அது கூட ஒரு அந்தஸ்துதான்.

வீட்டுக்கு ஒரே பெண் குழந்தை என்று அம்மாவுக்கு ரொம்ப செல்லம். பாட்டிக்கு அருமை பேத்தி. பள்ளிக்குச் செல்லும் பாதையில் புதர்களுக்கு நடுவில், வயல்களுக்கு மேல் பறக்கும் தும்பியோ, பட்டாம்பூச்சியோ நான்.

அந்த சிறிய கிராமத்தில் இருக்கும் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து முடித்துவிட்ட சரஸ்வதியின் மறு உருவம் நான்தான் என்று பூரித்துப்போகும் பாட்டி. கல்வி அறிவு இல்லாத பாட்டிக்கு படித்த கதைகளை அப்படியே கண் முன்னால் நடப்பது போல் சொல்லுவேன். தம்பிகள் மூன்று பெரும் சூழ்ந்து கொள்வார்கள்.

மருதோன்றி இட்ட கைகளை நிலா வெளிச்சத்தில் பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கும்? அந்த மணம் எவ்வளவு நன்றாக இருக்கும்?

சிவப்பாய் பற்றிய என் கைகளின் அழகு..

அந்த கைகளுக்கு, அழகான அந்த கைகளுக்கு இரத்தம் பூசப்பட்டால் எவ்வளவு பயங்கரம்?

திருமண நாளன்றும் மருதாணி இட்டுக் கொண்ட கைகள்தான்.

சந்தோஷமாகவே திருமணம் செய்து கொண்டேன். அப்பா ஆசிரியராக   இருந்தாலும் எனக்காக அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் சாதரண  உத்யோகஸ்தனாக  தேடினார். என் வாழ்க்கையின் பாதுகாப்பிற்கு கவலை இல்லை என்று பத்து பேரிடம் பெருமையாக சொல்லிக் கொண்டார்.

ஒரே பெண் என்பதால் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர், வரதட்சிணைக்காக இருப்பதை எல்லாம் திரட்டி கொடுத்தார்கள். என்னுடைய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளின் முடிவுகள் வெளியான அன்றே, எங்கள் ஊரிலிருந்து பஸ்ஸில் தெனாலிக்கு வந்து. அங்கே ரயில் ஏறி ஹைதராபாதுக்கு குடித்தனத்திற்கு வந்து சேர்ந்தேன். காலையில் ரயிலை விட்டு இறங்கும் போது உடல் முழுவதும் ரயில்கரி  படிந்து விட்டிருந்தது. நன்றாக சோப்பு தேய்த்து குளித்த பிறகு நிம்மதியாக இருந்தது. ஆனால் அன்று முதல் என் வாழ்க்கைக்கு கரி படிவது தொடங்கி விட்டிருந்தது. கழுவினாலும் போகாத கரி. யாராலும் போக்க முடியாத கரி. சோப்பு, டெட்டால், லோஷன்கள் எதாலும் விடுபடாத கரி.

பள்ளிக்குப் போகும் வழியில் ஜாலிக்காக தும்பியைப் பிடிப்போம். இரண்டு மென்மையான இறகுகளை எங்கள் இரண்டு விரல்களால் பிடிக்கும் போது அந்த தும்பிக்கு எப்படி இருந்திருக்கும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

திருமணமாகி ஹைதராபாதுக்கு வந்த பிறகு தெரிந்தது. இறகுகள் முறிந்து கீழே விழுந்து செத்துப் போனால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ. ஆனால் சிறகுகளை இரண்டு வலிமைன விரல்கள் பிடித்துக் கொண்டிருக்கும் போது, முதலில் படபடவென்று துடிப்பு, தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு. மெல்ல மெல்ல எல்லாம் இழந்து, வாழ வேண்டும் என்ற உற்சாகம் நசித்து, அந்த விரல்களுக்கு பழக்கப்பட்டுவிட்டு ,அதுதான் வாழ்க்கை என்ற நினைப்பு.

புதிதாக குடித்தனம் தொடங்கிய நாட்களில் சந்தோஷமே இல்லை என்று சொல்வதற்கு இல்லை. கணவன் ஜாலியாகப் பேசினால், ஏதாவது வாங்கிக் கொடுத்தால், அருகில் இழுத்து அணைத்துக் கொண்டு முத்தமிட்டால் சில நாட்கள் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த சந்தோஷ நாட்கள் மிகவும் குறைவு. பாரமாக, சுமையாக கழிந்த நாட்கள்தான் அதிகம். எரிச்சல், கோபம், துவேஷம்….தேவை இல்லாவிட்டாலும் என் மீதுதான் பொழிந்து கொண்டிருந்தன.

என் கணவருக்கு சம்பளத்தை விட மேல்வரும்படிதான் அதிகம். எவ்வளவு பணம் இருந்தாலும் திருப்தி அடையாத சுபாவம் அவருடையது. கிராமத்தில் இருக்கும் தன் பெற்றோருக்கு  அனுப்பும் சிறிய தொகையைத் தவிர மீதியெல்லாம் வீட்டுக்கே செலவாகி கொண்டிருப்பதாக அவர் எரிச்சல் அடையும் போது தவிர எனக்கு அவருடைய வருமானத்தைப் பற்றியோ, செலவைப் பற்றியோ தெரிந்ததில்லை..

வீட்டிற்கு பலவிதமான பொருட்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன, அவற்றைச் சுற்றிலும் சந்தோஷம் இல்லாமல் பயம் சூழ்ந்துக் கொண்டு இருக்கும். அந்த பயம் ஏன் என்று புரியும் முன்பே எனக்கு இரண்டு மகன்கள் பிறந்து விட்டார்கள்.

குழந்தைகளை வளர்ப்பதில் பத்து ஆண்டுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டேன். அதிலேயும் பயம்தான், குழந்தைகளை சரியாக வளர்க்கத் தெரியவில்லை என்ற சொல்லை தினமும் நூறு தடவை கேட்கும்போது, ஒருக்கால் அது உண்மைதானோ என்று தோன்றும்.

பத்தாண்டுகள் கழித்து குழந்தைகள் மெல்ல மெல்ல என்னிடமிருந்து விலகிப்போய் விட்டார்கள். அவர்களுடைய உலகம் என்னுடைய உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு விட்டது. சின்ன வயதில் அவர்களுடைய மழலை பேச்சு புரியாமல் சிரித்துக் கொள்வேன். பெரியவர்களான பிறகு அவர்களுடைய பேச்சு புரிந்தும் புரியாமலும் பயந்து கொண்டிருந்தேன்.

வீட்டில் எதற்கும் குறை இல்லை. குழந்தைகள் நல்ல பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய வேலையில் பிரமோஷனுடன் ஹோதா, சம்பளம், மேல் வரும்படி எல்லாமே கூடிவிட்டன.. அம்மா, அப்பா மற்றும் தம்பிகள் எல்லோரும் நன்றாக இருந்தார்கள்.

நான்? நான் நன்றாக இருக்கிறேனா?

எனக்குத் தெரியாது. சாப்பாட்டுக்கும், உடைக்கும் குறையில்லை. வீடு முழுவதும் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதன்மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும், வாங்கிய பொருளை வீட்டில் ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்றாலும் எல்லாமே அவருடய விருப்பம். பிறகு அவருடைய மகன்களின் விருப்பம். என் கையில் ஒரு பத்து ரூபாய்கூட இருந்ததில்லை. எனக்கு என்ன தேவை? வீட்டிற்கு வேண்டியதை எல்லாம் வாங்கிப் போடும் நபர் இருக்கும் போது? புத்தகங்கள் வாங்கவேண்டும் என்ற ஆசை திருமணமான முதல் மாதத்திலேலேயே நசிந்து போய் விட்டது. அந்த வீட்டு கலாச்சாரத்தில் புத்தகங்களுக்கு இடம் இல்லை.

வீட்டுக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்யும் புத்திசாலித்தனம் எனக்கு இல்லை என்று திருமணமான முதல் நாளன்றே அவருக்குத் தெரிந்து விட்டது. சொல்ல மறந்து விட்டேன். அவர் சொந்தமாக வீடு கட்டினார். கிருகப்பரவேசத்திற்கு வந்த அம்மா, அப்பா, உறவினர்கள் எல்லோரும் என் அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்தார்கள். அது என்னுடைய வீடு இல்லை என்று என் ஒருத்திக்கு மட்டும்தான் தெரியும். எந்த வீடாக இருந்தாலும் எனக்கு ஒன்றுதான். அந்த வீட்டில் என்னுடைய இடம் என்னவென்று தெரிந்தது என் ஒருத்திக்குத்தான்.

திருமணமான புதிதில் அம்மாவிடம் ஏதாவது சொல்ல முனைந்தால் அவை சின்ன விஷயங்கள் என்றும், பொருட்படுத்தக் கூடாது என்றும் சொல்வாள். அதற்குப் பிறகு அவருடைய குடிப் பழக்கத்தைப் பற்றியோ, உதைப்பது பற்றியோ சொல்லவேண்டும் என்றுகூட நினைத்ததில்லை. இந்த இரண்டையும் அவர் தொடங்கும் முன்பே வாழ்க்கையில் எனக்கு பிடிப்பு போய் விட்டது. இரண்டு விரல்களுக்கு இடையில் சிக்கிய தும்பி நான். எந்நேரமும் துரத்திக் கொண்டிருக்கும் பயம் தவிர வேறு துணை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

என் மூத்த மகனின் திருமணம். இத்தனை வருடங்கள் கழிந்து விட்டன. பதினேழு வயதில் ஹைதராபாதுக்கு வந்தேன். பதினெட்டு வயதில் கல்யாண் பிறந்தான். அவனுடைய திருமணத்தின் போது எனக்கு  நாற்பத்தி மூன்று. ஆனால் அந்த இருபத்தைந்து ஆண்டுகளும் எனக்கு நூறாண்டுகள் போல் கழிந்தன.

மகனுடைய திருமணம் என்ற போது எங்கிருந்தோ உற்சாகம் எட்டிப் பார்க்க முற்பட்டது. ஆனால் அதற்குள் அடங்கி விட்டது. கல்யாணுக்கு அரசாங்க வேலை. வரதட்சிணை விஷயத்தில் நிறைய சம்பந்தங்கள் தந்தை மகனுக்கு பிடிக்கவில்லை.

கடைசியில் தந்தையும் மகனும் சேர்ந்து ஒரு பெண்ணை முடிவு செய்தார்கள். அவர்களுக்கும் இதே ஊர்தான். நிச்சியதார்த்தம் அன்று போய்பார்த்தேன். சின்ன வயதில் எங்கள் வீட்டில் புதராக  வளர்ந்த துளசிச்செடியை போல் இருந்தாள்  உமா. அவளுடைய கையைப் பற்றிக் கொண்ட போது அது வியர்வையால் ஈரமாக இருந்தது. அவள் உடல்  லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. கையை ஒரு முறை லேசாக அழுத்தி விட்டு அவள் முகத்தைப் பார்த்து சிரித்தேன். இந்த கால் நூற்றாண்டு காலத்தில் என் தொடுகை! சின்ன வயதில் குழந்தைகளைத் தொட்டதை விட்டால், சுந்தந்திரமாக, என்னையும் அறியாமல் இன்னொருவரை தொட்ட சந்தர்பங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

உமா என்னைப் பார்த்து சிரித்தாள். ஆனாலும் அதில் ஏதோ பயம். எனக்குத் துணையாக இன்னொரு பயம் அந்த வீட்டில் நுழையப் போகிறதா?

உமா எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு, ஏனோ தெரியவில்லை, என் பயம் குறைந்து விட்டது. ஒன்றுக்கு  இரண்டு பெண்கள் இருக்கிறோம் என்றா? காரணம் தெரியவில்லை. உமாவும் பயந்து கொண்டே எங்கள் வீட்டுக்கு வந்தாள்.

‘பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையம்மா’ என்று சொல்லத் தோன்றியது. ஆனால் சொல்லும் தைரியம் எனக்கு எங்கே இருக்கிறது?

திருமணமான ஆறு மாதங்கள் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. இரண்டாவது மகன் மேற்படிப்புக்காக அமெரிக்கா போய் விட்டான். உமாவுக்கு இந்த ஆறு மாதங்களில் வீடு பழகி விட்டது. ஆண்கள் இருவரும் வெளியில் போன பிறகு நாங்கள் இருவரும் நட்புடன் ஏதேதோ பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தோம். உமாவிடம்கூட நான் என் சின்ன வயது நினைவுகளையே சொல்லி வந்தேன். அந்தப் பெண்ணும் ஹைதராபாதில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். பத்தாவதுடன் படிப்பை நிறுத்தி விட்டார்கள். நான் சொல்லும் செய்திகள், எனக்கு நினைவில் இருந்த கதைகளை சொல்லும்போது திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பாள். என் மகனுடன் உரிமையுடன் பேசுவாள். நான் என் கணவரிடம் பேசியதைவிடப் பரவாயில்லை  என்று தோன்றியது.

நான்கு பெரும் சேர்ந்து இரண்டு சினிமாவும் பார்த்தோம். அவ்விருவரும் அவ்வபொழுது, நண்பர்கள் வீட்டுக்கு, சினிமாவுக்கும் போய் வருவார்கள்..

உமாவின் வருகையால் ஏதோ கொஞ்சம் மாற்றம் வந்தது. எனக்கு மருதாணி பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு மெஹந்தி வரவழைத்து என் கைகளுக்கு போட்டுவிட்டாள். அந்தக் கைகள் அவருடைய கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று நான் ரொம்ப திண்டாடினேன். கடைசியில் அவர் கண்ணில் பட்டபோது அவர் என்னைப் பார்த்த பார்வைக்கு வெட்கத்தால் குன்றிப் போய்விட்டேன்.

ஆனாலும் சரி அந்த அனுபவம் நன்றாக இருந்தது. எனக்கு பிடித்தமானதற்கு  முரண்டு பிடிப்பது நன்றாக இருந்தது. நான் உயிருடன் இருப்பதற்கு அடையாளம்போல் இருந்தது. தொடக்கத்திலிருந்தே இப்படி முரண் பட்டிருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்று யோசித்தேன்.

இன்னும் ஒரு மாதம் போனால் உமா எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிடும் என்ற போது, அந்தப் பெண்ணின் முகத்தில் கருமேகங்கள் திரையாக படிவதைக் கவனித்தேன். நாட்கள் செல்லச் செல்ல உமாவின் முகத்தில் பயம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ..

“என் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு கொழுப்பெடுத்து இருப்பதற்கு வெட்கமாக இல்லையா? எத்தனை தடவை சொல்வது? உன் அப்பனை என்னிடம் பேசச்  சொல்” என்றான்.

அவன் அந்த வார்த்தைகளை சொன்ன தோரணைக்கு உமாவின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. அவ்விருவரும் போன பிறகு கேட்டேன். உமா சொனாள். வரதட்சிணை பணத்தில் இன்னும் இரண்டு லட்சம் தர வேண்டுமாம். அவளுடைய அப்பா சிக்கலில் இருப்பதால் கொடுக்க முடியாமல் இருக்கிறார். என் மகன் பார்த்து கொண்டிருக்கும் வேலையைத் தவிர ஏதோ வியாபாரம் தொடங்கப் போகிறானாம். அதற்கு பணம் வேண்டுமாம்.

என்னுள் நடுக்கம் பரவியது. புலியின் கர்ஜனையை என்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடியும். மறுநாள் என் கணவர் என்னிடம் இந்த விஷயத்தைச்  சொல்லி , அந்தப் பெண்ணிடம் பேசி அந்த பணத்தை சீக்கிரமாக வரவழைக்கும்படி செய்யச் சொன்னார். நான் சொல்வதால் உமாவால் கொண்டு வர முடியுமா? அவளுடைய அப்பா கொடுக்க வேண்டும். அவரிடம் இருக்க வேண்டும்.

என் கணவர் நேராக உமாவிடமே பணத்தைப் பற்றி தானே பேசத் தொடங்கினார்.

உமாவுக்கு எப்படி உதவி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இருவரின் முகத்திலும் பயம். பயமே உருவாக வளைய வந்து கொண்டிருந்தோம்.

உமாவின் பெற்றோர்கள் வந்து கெஞ்சினார்கள். தந்தையும் மகனும் சொன்னதை செய்வதைத் தவிர நானாக சுதந்திரமாக ஒரு காரியத்தையும் செய்தவள் இல்லையே?

“மாமியார் வீட்டில் சுகமாக இருப்பாள் என்று இந்த இடத்தில் கொடுத்தோம்.” உமாவின் தாய் பேச்சுவாக்கில் சொன்னாள்.

எனக்கு அந்த வார்த்தை சுருக்கென்று தைத்தது. இது மாமியார் வீடா? இது என்னுடைய வீடா? இந்த வீடு என் பெயரில் இல்லை. இந்த வீட்டின்மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பு இல்லை.

ஆனாலும் உமாவைப் பொறுத்த வரையில் இது புகுந்தவீடு. மாமியார்வீடு.

எனக்கு ஏனோ பெரிதாக சிரிப்பு வந்தது. அந்த நேரத்திற்கு அடக்கிக் கொண்டுவிட்டேன். ஆனால் பிறகு தனியாக இருந்த போது “மாமியார் வீடு” என்று நினைத்து நினைத்து சிரித்து களைத்துப் போய்விட்டேன். அதற்குப் பிறகு அழுது  அழுது உறங்கி விட்டேன்.

நாட்கள் செல்ல செல்ல நிலைமை சூடாகி கொண்டிருந்தது. ஒரு நாள் உமாவைக் கொண்டுபோய் பிறந்த வீட்டில் விட்டுவிட்டு வந்தான் என் அருமை  மகன். மெல்ல மெல்ல  தந்தை, மகனின் பார்வை என் மீது திரும்பிற்று.

மருமகளை வழிக்குக் கொண்டுவரத் தெரியாத அசடாம்  நான். இதுவே இன்னொரு மாமியாராக இருந்தால் மருமகளை வாட்டி எடுத்து வரதட்சிணையை வசூல் செய்திருப்பாளாம். என்னிடம் பயம் கொஞ்சம்கூட இல்லாததால் பிறந்த வீட்டுக்குப் போகவும் தயாரானாளே தவிர பணத்தைக் கொண்டு வரவில்லையாம், கேட்டுவிட்டு மௌனமாக இருப்பதைத் தவிர என்னால் என்ன செய்ய முடியும்?

இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பெரிய மனிதர்களின் பஞ்சாயத்தில், ஆறுமாத அவகாசம். உமா மறுபடியும்  ‘மாமியார்” வீட்டுக்கு வந்தாள்.

“எதற்காக வந்தாய் உமா?” என்று கேட்ட போது பைத்திகாரி… அழுதாள்.

அந்தப் பெண்ணின் கஷ்டத்தைப் போக்கும் சக்தி எனக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் வாழ்ந்த முறையை நினைத்துப் பார்க்கும் போது அருவெறுப்பாக இருந்தது. உமாவுக்காக அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. வாயைத் திறக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளாக பழக்கப்பட்டுவிட்ட பயம்,  உடலுடன் ஒட்டிக்கொண்டு விட்டது. மூச்சுடன் கலந்து விட்டிருந்தது. ரத்தம் நீர்த்துவிட்டது.

உமாவுக்காக என்னால் என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காமலேயே ஆறு மாதங்கள் கழிந்து விட்டன. காலத்திற்கு யாருமே ஒரு பொருட்டு இல்லை. யார் மீதும் கருணைக் காட்ட வேண்டுமென்று நினைக்காது.

அன்றிரவு எப்போதும் போலவே அவரவர்களின்  அறைகளுக்குள் சென்று படுத்துக் கொண்டு விட்டோம். நான் நன்றாக தூங்கிவிட்டேன். ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. முழுவதுமாக விழித்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கும் போது கூக்குரல் கேட்டது. என் அறையிலிருந்து வெளியே ஓடி ஹாலுக்கு வந்து பார்த்தால் நெருப்பு பற்றிக் கொண்ட நிலையில் உமா! என் கணவரும், மகனும் தொலைவில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் கத்திக் கொண்டே முன்னோக்கி ஓடப் போனபோது இருவரும் என்னைப் பிடித்துக் கொண்டு வாயை அழுத்தமாக மூடிவிட்டார்கள். எனக்கு நினைவு தப்பிவிட்டது.

மீண்டும் நினைவு திரும்பிய போது வீட்டில் உமா இல்லை. வீடு முழுவதும் களேபரமாக இருந்தது.

“உமா எங்கே?” என்று பதற்றமும், துக்கமும் கலந்த குரலில் கேட்டேன். ஆஸ்பத்திரியில் இருப்பதாக சொன்னார்கள். உமாவுக்காக நெஞ்சு வெடித்து விடும்போல் அழுதேன்.

என் அழுகை நிற்கும் முன்பே போலீசார் வந்தார்கள். என்னை அரெஸ்ட் செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார்கள். ரிமாண்டில் வைத்தார்கள்.

உமா செத்துப்போய் விட்டாளாம். செத்துப் போகும் முன் நான் அவளைக் கொளுத்தி கொன்றுவிட்டதாக சொன்னாளாம்.

பொய்! எனக்கு நிச்சயமாகத் தெரியும். உமா அப்படிச்  சொல்லியிருக்கவே மாட்டாள்.

நான் எவ்வளவு குரலை உயர்த்திக் கத்தினாலும் கேட்பவர்கள் யார்? போலீசார், அந்தச் சூழ்நிலை, என் பயம், என் துக்கம், என் தனிமை. என்னை விசாரிக்க நாதியில்லை. கடவுளே! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என்று அழுதேன். வேண்டிக்கொண்டேன். ஓரிரண்டு நாட்களுக்கு பிறகு லாயர் வந்து என்னிடம் பேசிய பிறகு எனக்கு எல்லாம் புரிந்து விட்டது.

உமா நடந்ததை அப்படியே சொல்லிவிட்டு இறந்து போயிருக்கிறாள். ஆனால் அதை மாற்றி அதில் என் பெயரை புகுத்துவதற்கு, கதையை ஜோடிப்பதற்கு நோட்டுக்கட்டுகள் கைமாறியிருந்தன.

கோர்டில் நான் வாயைத் திறக்கவில்லை. ஆமாம் என்றோ இல்லையென்றோ எதுவும் சொல்லவே இல்லை. நான் குற்றத்தை ஒப்புக் கொண்டால்தான் தங்கள் இருவரின் வேலையும் நிலைக்கும் என்றும், இல்லை என்றால் எல்லோரும் விஷத்தைக் குடித்துவிட்டு சாக வேண்டியதுதான் என்றும் என் மூத்த மகன் எச்சரித்துவிட்டுப் போனான். என்னைக் கொன்று விடுவதாகவும், அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும் என் கணவர் என்னை மிரட்டிவிட்டுச் சென்றார்.

உண்மையைச் சொல்லி வெளியில் வந்து அந்த வீட்டுக்குள் வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால்தானே வாயைத் திறப்பதற்கு?

எல்லோரும் என்னை ஏசினார்கள். நாளேடுகளை என் போட்டோ போட்டார்கள்.

“மாமியார் கொடுமைகளுக்கு பலியான மருமகள்”

“மருமகளை எரித்து கொன்றுவிட்ட கொடும்பாவி மாமியார்”

“மாமியார் வீட்டில் மருமகளின் படுகொலை”

இப்படி நாளேடுகளில்  நான் பிரபலமாகிவிட்டேன்.

அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரே சிரிப்பு. மாமியார் வீடு!

எவ்வளவு  மோசமான வார்த்தை? எதற்காக இந்த வார்த்தை வழக்கத்திற்கு வந்தது? மாமனார் வீடு என்றோ, கணவன் வீடு என்றோ சொல்லாமல் இருப்பது என்னைப் போன்றவர்களுக்காக தானா? குற்றங்களை எல்லாம் மாமியார் மீது சுமத்துவதற்காகத்தானா? எல்லோரும் என்னை அருவருத்தார்கள். உறவினர்கள் யாரும் என்னைப் பார்க்க வரவில்லை.

என்னுடைய வாசம் வீடு என்ற சிறையிலிருந்து ஜெயில் என்ற   சிறைக்கு  மாறியது.

ஜெயிலுக்கு வந்த பிறகு என் கணவராகட்டும், குழந்தைகள் ஆகட்டும் ஒரு முறைகூட வந்து என்னைப் பார்க்கவில்லை. அதனால்தான் நான் ஒரு தாய் என்று யாராவது சொன்னாலோ, தாய் என்று நினைப்பு எனக்கே  வந்தாலோ  வயிற்றைப் புரட்டிக்கொண்டு வரும்.

ஜெயில் வாழ்க்கையில் சுகம் இல்லாவிட்டாலும் ஒரு விதமான அமைதி கிடைத்தது. என்னைப் போன்றவர்கள் மேலும் நான்குபேர் இருந்தார்கள். பலவிதமான குற்றங்களை செய்துவிட்டு வந்தவர்கள் நிறையபேர் இருந்தார்கள். எல்லோரிடமும் தைரியமாக பேச முடிகிறது. நடந்தது என்னவென்று சொல்ல முடிகிறது. என் பேச்சை பலர் நம்பினார்கள். அவர்களுடைய கஷ்டத்தையும் மறந்து சிலர் கண்ணீர் விட்டார்கள். படிப்பு வராதவர்களுக்கு படிப்பு சொல்லித் தருகிறேன். ஏழு வருடங்களில் ஐந்தாண்டுகள் கழிந்து விட்டன.

இப்பொழுது என் மீது கருணைக் காட்டி இரண்டாண்டுகள் தண்டனைக் குறைத்து வெளியில் அனுப்பி விடுவதாக சொல்லுகிறார்கள்.  எங்கே போவது? என் கணவரிடம் போகவேண்டும் என்று இல்லை. போனாலும் அவர்கள் உள்ளே விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. ஜெயிலில் ஐந்தாண்டுகள் கழித்துவிட்டு வந்தவளை இல்லாளாய் ஏற்றுக்கொள்ளக் கூடிய கணவராக இருந்தால் நான் ஜெயிலுக்கு ஏன் போகப் போகிறேன்?

அவர்களுடைய உத்தியோகத்தை அவர்கள் நிம்மதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் போனால் அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வீட்டுக் கதவுகளை எனக்காகத்  திறக்க மாட்டார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் அம்மா, அப்பா இறந்து போய்விட்டார்கள் என்று ஒரு கார்டு  எழுதிப் போட்டதைத் தவிர தம்பிகளும் வந்து பார்க்கவில்லை. என்ன செய்வது? எங்கே போவது?

நான் சுதந்திரமாக வாழ வேண்டும். ஐம்பது வயதில் எனக்கு சுதந்திரம் கிடைத்திக்கிறது. நான் ஏதாவது  ஒரு வேலையைச்  சம்பாதித்துக் கொள்ள வேண்டும். சொந்தக்கால்களில் நிற்கவேண்டும். எந்த பயமும் இல்லாமல் என் வாழ்க்கையை நான் வாழ  வேண்டும். இந்த எண்ணம் என் பதினாறாவது வயதிலேயே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உமா இறந்து போகும் முன்பே எங்கள் இருவருக்கும் இந்த எண்ணம் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஏதோ ஒரு விலையைக் கொடுத்தால் தவிர பெண்களுக்கு இந்த எண்ணம் வராமல் போவானேன்?

பரவாயில்லை. தாமதம் ஆனாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் இன்னொரு பத்தாண்டுகள் என் வாழ்க்கையை வாழ்ந்து செத்துபோனால் போதும். என் வாழ்க்கை முழுவதுமாக நாசமாகவில்லை என்ற திருப்தியுடன் ஜெயிலை விட்டு வெளி உலகில் அடியெடுத்து வைத்தேன்.

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35கல்வியில் அரசியல் பகுதி – 2
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    என்ன உருக்கமான கதை ! உள்ளத்தைத் துள்ள வைக்கும் மனிதர் ! நாட்டில் நடமாடும் கதை ! என்ன எளிதான நீரோட்டத் தமிழ் நடை.

    பாராட்டுகள் திருமதி. கௌரி கிருபானந்தன்

  2. Avatar
    jayashree shankar says:

    மாமியார் வீடு…..!////நான் சுதந்திரமாக வாழ வேண்டும். ஐம்பது வயதில் எனக்கு சுதந்திரம் கிடைத்திக்கிறது. நான் ஏதாவது ஒரு வேலையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். சொந்தக்கால்களில் நிற்கவேண்டும். எந்த பயமும் இல்லாமல் என் வாழ்க்கையை நான் வாழ வேண்டும். இந்த எண்ணம் என் பதினாறாவது வயதிலேயே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உமா இறந்து போகும் முன்பே எங்கள் இருவருக்கும் இந்த எண்ணம் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஏதோ ஒரு விலையைக் கொடுத்தால் தவிர பெண்களுக்கு இந்த எண்ணம் வராமல் போவானேன்?////
    விலை…வாழ்வாகிப் போனதே..!
    ஒரு பெண் குழந்தை, மகள்,அக்கா, தங்கை,தோழி,காதலி,மனைவி,தாய்,மாமியார்….இதுபோல் எந்தப் பெயரிலும் அவளுக்குத் தான்
    சுதந்திரம் இல்லையே….இதயம் உருகிக் கருணையை வழிய வைத்த நிஜம் இங்கே அரங்கேறி இருக்கிறது.
    அத்தில்லு…. !நியாயத் தராசில்…! அருமையாக கதையின் சாரத்தை அப்படியே மொழி பெயர்த்துத் தந்த திருமதி.கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு
    மிக்க நன்றி.
    அன்புடன் ஜெயஸ்ரீ ஷங்கர்.

  3. Avatar
    Gowri Kirubanandan says:

    ஒல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல. பெண்கள் இரண்டாம் நிலையில் நடத்தப்படுவதை சொல்வதுடன், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இருக்கும். மொழிபெயர்ப்பு கதைகளை வாசகர்கள் கவனிக்கிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *