மாரீசன் குரல் கேட்ட வைதேகி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 19 in the series 8 ஏப்ரல் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி

இராமன் தனது அம்பினால் வீழ்ந்து பட்ட மாரீசன் தன் குரலில் இலக்குவனையும்,சீதையையும் அழைத்தது ஏன் எனச் சிந்திக்கிறான்.ஒருவேளை இலக்குவனை பர்ணசாலையிலிருந்து அகற்றி சீதைக்குத் துன்பம் தருவதற்காக இருக்குமோ என நினைக்கிறான்.

ஆனாலும் தம்பி எனை அறிவான்,அரக்கனின் வஞ்சனைக் குரலெனவும் தெளிவான்,தேவியைத் தேற்றுவான் என நினைந்தான். இருப்பினும் விரைந்திடல் நலமென பர்ணசாலை நோக்கித் திரும்பினான்.

அரக்கரின் மாயைக்கு அவதார நாயகர்களும் ஆட்படுவர் போலும்.

இங்கு இராமனின் அபயக் குரல் கேட்ட சீதை மரத்தினின்று வீழ்ந்த குயிலைப் போல் வீழ்ந்து வயிற்றில் அறைந்து கொண்டு அரற்றினாள்.என்னால்தான் இப்படி நடந்தது எனப் புலம்புகிறாள்.இராமனிடமிருந்து சீதை பிரிவதற்கு இது ஓர் முன்னறி குறி(வயிற்றில் அடித்துக் கொள்வது) மிகப் பெரிய துன்பம் நேருங்காலைப் பெண்கள் தமையறியாது வயிற்றில் அடித்துக் கொண்டு அரற்றுவர்.அவள் தீயிற் பட்ட பூங்கொடி போலவும், இடியோசை கேட்ட நாகம் போலவும் நடுங்கினாள் . இவ்வளவில் இலக்குவன் இராமனுக்கு ஒரு தீங்கும் இல்லை, இது அரக்கனின் குரல் கவலற்க என்கிறான். மேலும் ஐந்து பூதங்களும்,ஏழு கடல்களும் பதினான்கு உலகங்களும் இராமன் வீழ்ந்தான் எனில் நிலை திரியும். சீதையின் திருமணத்தின் போது சிவபெருமானின் வில் இராகவன் தொட்டதும் முறிந்ததே!அனைவரும் வில்லை எடுத்தது கண்டார் பின் இற்றதுதானே

கேட்டார், அத்துணை வலிமையுடையவன் அபயமென அழைப்பானா? சிந்தியுங்கள் என்கிறான்.

அவளோ, .

’ நீயும் ஒரு இளவலா தமையனுக்கு உதவாமல் நின்றனையே , இராமனுக்குற்ற தீங்கைக் கேட்டும் உதவச் செல்லாது நீ நிற்பது நெறியற்றது, எனச்

சொல்வதோடு`…………………என் அயல்

நிற்றியோ,இளையோய் ஒருநீ’ என்றாள்`.

அதாவது வான்மீகியின் சீதை இலக்குவனைப் பலவாறாகப்

பேசுவாள்,ஆனால் கம்பனின் சீதை ஒரே ஒரு சொல்தான் ` ஒருநீ`(நீயும் ஒரு…..)அது போதும் அவனுக்கு அவனது நடத்தையைச் சந்தேகிக்க.

மேலும்,

`ஒரு பகல் பழகினார் உயிரை ஈவர் நீ

பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் வெருவலை நின்றனை`(குகன் இராமனிடம் கொண்ட அன்பு சுட்டுகிறாள்.) இராமனோடு ஒரு நாள் பழகியவர்கள் கூட அவனுக்காக உயிரும் தருவர்,நீ அவனோடு பிறந்தும், தம்பியாக இருந்தும்,

அவனது அபயக் குரல் கேட்டும் அசையாமல் நிற்கிறாயே என்கிறாள்.

தெய்வ அவதாரமாக இருந்தாலும் மானுடமாக வந்ததால் தயக்க மயக்கங்களுக்கு ஆட்படுகிறாள். கணவனுக்கு என்ன நேர்ந்ததோ எனக் கலங்குகிறாள்,அவனது வல்லமையை அறிந்திருந்தாலும் அறிவை அன்பு ஆட்கொள்வதனால் ஒரு நல்ல இல்லாளின் மனம் இதுதான் எனக் காட்டுகிறாள்.அதனால்தான் இலக்குவனைச் சென்று பார்க்கச் சொல்கிறாள்,அவன் அசைவதாய்த் தெரியவில்லை.என்ன சொன்னால் நகர்வான் எனத் தேர்ந்து அவன் நடத்தை பற்றிச் சொல்கிறாள். உண்மையில் சீதை உளவியல் தெரிந்தவள்தானே!

இலக்குவனும் அவளுக்குச் சளைத்தவன் அல்லவே,

அன்னையைப் போன்ற அண்ணியின் மனம் அறிந்தவன், இராமனுக்காகத்தான் இவ்வாறு பழி சொல்கிறாள் என அறிந்தவன், அதனால்தான் அவளைத் தனியே விட்டுச் செல்ல முடியாமல் திணறுகிறான்.தேவியோ இறுதியாக நெருப்பில் வீழ்கிறேன் என்கிறாள்.

`தாமரை வனத்திடைத் தாவும் அன்னம்போல்

தூம வெங்காட்டு எரி தொடர்கின்றாள் தன்னை`

தாமரை மலர்க் காட்டின் மேல் அன்னம் ஒன்று தாவுவது போல் நெருப்பில் விழப் போகிறாள்.இங்கு தீயின் சிவந்த நாக்குகள் தாமரை மலர்களுக்கும் அன்னப் பறவை வைதேகிக்கும் உவமையாகின்றன.

அவள் உயிர்விடத் துணிந்ததும் ஏதும் செய்ய இயலாமல் இளையவன் ஏகத் துணிகிறான்.

இலக்குவனும் அவளுக்கு ஒன்றை நினைவூட்டுகிறான்,

`அரசன்தன் ஆணை மறுத்து ஏகு என்றீர், தனிமையில் உள்ளீர்’. இராமனின் ஆணையை அவன் மீறிட எண்ணமில்லை என்பதை. அவளைத் தடுத்து நிலத்தில் வீழ்ந்து வணங்கி,நீர் இறத்தல் என்ற சொல்லுக்கு அஞ்சுகிறேன் நும் கட்டளையை ஏற்பேன். நெருப்பில் விழுவதைக் கைவிடுங்கள் என்கிறான்.

முதன்முதலாக இலக்குவன் உயிரோடு இருப்பதற்கு வருந்துகிறான்.அண்ணனின் ஆணையை நிறைவேற்றவும்

முடியவில்லை,அண்ணியைக் காக்கவும் இயலவில்லை,விதி விளையாடுகிறது,வெல்லும் வழி தெரியவில்லை. நடந்துள்ள நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால்,`நான் பர்ணசாலையை விட்டு அகன்றால் சீதைக்குக் கேடு நேரும்

எனத் தெரிகிறது,ஆனால் காவலிருக்கவும் முடியாது அண்ணியாரின் பிடிவாதம் அவரை உயிரை விடச் சொல்கிறது,நான் என்ன செய்வேன்?`

என வேகின்ற சிந்தையான் விடைகொண்டு ஏகினான்.சீதையைக் காவலின்றி விட மனமில்லை, போகாவிடின் இவள் உயிரை விடுவாள்,போனாலோ இவளுக்குத் தீங்கு நேரலாம் என் செய்வேன் பாவியேன். ‘ ……………………………………… தொல்வினைப்

பிறந்து போந்து,இதுபடும் பேதையேன் எனா`

வினைப்பயனால் பிறந்து இத்துயரினை அடைகிறேன். என் உயிரை மாய்த்துக் கொள்ளவும் இயலவில்லை.என் செய்வேன் என விம்முகிறான்.

இவ்வாறு வேகின்ற நெஞ்சத்தோடு அண்ணியிடம் விடை கொள்கிறான் இளவல்.அறமானது எப்படியும் தீங்கு நேராது காத்திடும் தேவியை,அதோடு பெரிய தந்தையாய் அன்பு பாராட்டும் எருவையின் அரசன் அதாவது கழுகுகளின் தலைவன் சடாயு தன் மருகியாய்ப் போற்றும் சீதையைக்

காத்து நிற்பான் எனத் துணிந்து,

`தேவர்செய் தவத்தினால் செம்மல் ஏகினான்`.

அரக்கர்களின் குலத்தை வேரோடு அழித்துத் தேவர்களைக் காக்க இராமபிரான் எடுத்த அவதார நோக்கம் நிறைவேற வேண்டி

தேவர்கள் செய்த தவத்தின் பயன் நிறைவேறும் காலம் வந்துற்றதால் இலக்குவன் பர்ணசாலையை விட்டு அண்ணனைத் தேடிச் சென்றான் என்கிறார் கம்பர்.

Series Navigationதமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2018 – (குறும்படங்களுக்கு மட்டும்)காலண்டரும் நானும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *