மாவின் அளிகுரல்

This entry is part 3 of 26 in the series 27 அக்டோபர் 2013

 

===ருத்ரா
பெண்ணை நுங்கின் கண்செத்தென‌
பனிநீர் இழிபு கல்சுனை நாட‌
உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை
காணில் வெரூஉம் கருவி குன்றம்
ஓர்ந்தகண் கலிமா வெறியொடு தொலைச்சும்.
இறைந்த எச்சக் குடர்படு அஞ்சினை
அகவிய மாவின் அளிகுரல் எதிர
ஒள்வீ அன்ன உகு கணீர் உகுக்கும்.
அஞ்சும் அஞ்சும் புல்லிய புல்லும்.
தூம்பு நீண்ட அங்குழல் கொன்றை
தூஉய் தந்த தாது உண் தும்பி
இமிழ்தரு மென்னொலி நுண்சுரம் கேட்கும்.
அடர்தரு பாசடை அடவிகள் அண்ணும்.
அழுங்கிய ஓதைகள் உதிரும் ஆங்கே.
குணில்பாய் அருவி நெஞ்சம் தாக்கும்
காட்சிகள் மலியும் வேய்புரை வெற்ப‌
நின் நெஞ்சும் அதுவே ஒப்பும்.
ஆறு தேற்றா ஆறுதடம் அன்ன‌
அளியேன் யானும் தேராநின்று.
தெரியிழைத் தோழி தேற்றினும் அழியும்.
.
பொழிப்புரை
=====
பனை நுங்கின் கண்போல் தண்ணீர் கசிந்து கொண்டேயிருக்கும் சுனைகள் நிறைந்த மலைநாடனே!புலியின் தீயுமிழ் கண்கள் புள்ளிகள் நிறைந்த வேங்கை மரபொந்துகளைக் கண்டால் எதிரிப்புலியென அஞ்சும்.மேலும் கருத்த மழைமேகங்கள் நிறைந்தவை அம்மலை.அது வெறும் மரம் என்று கூர்ந்து நோக்கி
உணர்ந்த பின் அருகே  துள்ளியோடும் காட்டுவிலங்கை அப்புலி வெறியோடு தாக்கிக்கொல்லும்.அது தின்று போட்ட எஞ்சிய குடல்கள் அழகிய மரக்கிளையில் தொங்குவது துன்பம் மிக்க காட்சி. இறந்த அந்த விலங்கின் இறுதியான ஒலி நெஞ்சைக்கவ்வும் படி எதிரொலிப்பதால் அக்கிளையில் பூத்த சிறு வெண்பூக்கள் உதிர்வது கண்ணீர் விடுவது போல் தோன்றும்.மெல்லிய புல் கீற்றுகள் கூட அஞ்சி நடுங்கும் அச்சம் தரும் மலை அது.நீண்ட குழல் போன்ற
காய்களைக்கொண்ட கொன்றைப்பூக்களின் மகரந்தங்களை தாங்கும் உள்ளீடு அற்ற மையக்காம்புகளில் அந்த மகரந்தங்களை உண்ண வண்டுகள் மொய்க்கும்.அவற்றிற்கும் அந்தக்காட்டில் ஒலிக்கும் மெல்லிய பண்ணின் (ராகத்தின்) குரல் கேட்கும்.அடர்ந்த பசும் இலைகள் கொண்ட காடுகள் நெருக்கமாக காட்சி தரும்.அங்கேயும் ஏதோ எங்கிருந்தோ யாரோ விசும்பி அழும் ஓசைகள் இலைகளுக்குப் பதிலாக அவை உதிர்வது போல் தோன்றும்.முரசு ஒலிக்கும் போது அதன் அடிக்கும் கம்புகள்(குணில்)விழுந்து விழுந்து ஒலிப்பது போல் அருவிகள் ஓசைடுவது கூட நெஞ்சை உலுக்கும்.இக்காட்சிகள்
நிறைந்த மூங்கில்கள் செழித்த மலைநாட்டுத் தலைவனே என்னைப்
பிரிவுத்துன்பத்தில் தள்ளிய உன் நெஞ்சமும் இப்படி என்னை இப்படித்தான் தாக்குகிறது.எங்கே நோக்கி ஓடுகிறோம் என்று தன் வழியைத் தானே தெள்ளதெளிவாக அறியாத ஆற்றின் சுவடு போல் நானும் தேராமல் கலங்கித்தவிக்கிறேன்.தேர்ந்த நகைகள் அணிந்த என் தோழி எவ்வளவதேற்றியும் நான் நெஞ்சம் அழிந்து வாடுகிறேன்.
===================================================ருத்ரா
Series Navigationகாற்றுவெளி மின்னிதழ் அறிவிப்புநமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *