மிதிலாவிலாஸ்-15

This entry is part 12 of 23 in the series 4 அக்டோபர் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

நள்ளிரவு நேரம். இரண்டு மணி ஆகி விட்டது போல் கடியாரத்தில் மணி அடித்தது.

படுக்கையறையில் அபிஜித் ஒருக்களித்து படுத்தபடி ஆழமான உறக்கத்தில் இருந்தான். அவன் இடது கை மைதிலியின் தலையைச் சுற்றிலும் வளைத்தது போல் அவள் தலையணையின் மீது இருந்தது. ஆனால் அவன் பக்கத்தில் மைதிலி இருக்கவில்லை. பக்கத்து அறையில் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மைதிலி நாற்காலியில் உட்கார்ந்து மேஜை விளக்கு அருகில் குனிந்து இந்த உலகத்தையே மறந்து போனவளாய் கையில் இருந்த போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தாள்.

போட்டோவில் அரவிந்த் சிரித்துக் கொண்டிருந்தான். அந்த சிரிப்பு பாதி சீரியசாகவும் பாதி புன்முறுவலாகவும் இருந்தது. அவளிடம் மட்டுமே அந்த புன்முறுவல். மற்ற உலகத்திற்கு அவன் முகம் மௌன முத்திரை! அவனுடையது ஒரு தனி உலகம். அதிலேயே அவனுக்கு எல்லா ஆனந்தமும். இந்த உலகத்தைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் ஏழ்மை, மான மரியாதை, போட்டி பொறாமை போன்ற எந்த பிரச்சினைகளும் அவனுக்கு இல்லை. ஏழையாக இருந்தாலும் அவனால் எளிமையாய், சந்தோஷமாய் வாழ முடியும். உடன் இருப்பவர்களுடன் அவனுக்கு என்றுமே எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. அவனிடம் அவ்வளவு சுலபமாக யாராலும் பேசிவிட முடியாது. தன் உலகத்தில் யாரையும் வர அனுமதித்ததும் இல்லை.

கிரிஜாவின் சித்தியின் மகனாய் முதல்முறை கிரிஜாவின் வீட்டில் பார்த்தபோது அவனிடம் எந்தவிதமான மதிப்போ, மரியாதையோ காட்டியதில்லை அவள். கிரிஜாவுடன் சேர்ந்து அவள் அறையில் தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்த போது, அந்த அறையில் ஒரு ஓவியத்தைப் பார்த்தாள். கிழிந்த ஆடைகளில் ஒரு இளம்பெண் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும் காட்சி. அதற்கு இயற்கை என்று தலைப்பு இருந்தது. அவளால் அந்த ஓவியத்திலிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. பால்லூட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் பாதி மூடியிருந்த கண்கள்! அவற்றில் தென்பட்ட திருப்தி, பாலை அருந்திக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தன்மயக்கம்! பார்க்கப் பார்க்க அந்த ஏழை இளம்பெண் அற்புதமான அழகு படைத்தவளாக தென்பட்டாள். அரவிந்த் அவளை அழகியாக சித்தரிக்கவில்லை. ஆனால் அந்தக் குழந்தையைப் பிடித்துக் கொண்ட விதம், லேசாக முகவாயை உயர்த்தி குழந்தைக்கு பாலூட்டும் சந்தோஷத்தை வெளிபடுத்தும் அந்த முகம் பார்க்கப் பார்க்க புதிய அழகுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

“கிரிஜா! இந்த ஓவியம் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் வாங்கிக் கொள்கிறேன்” என்றாள்.

“வாங்குவதாவது! சில்லி! அந்தக் காகிதங்களை சில சமயம் நான் புத்தகங்களுக்கு அட்டையாய் போடுவேன். எடுத்துக் கொள். எங்க அரவிந்த் இதுபோன்ற கிறுக்கல்களை தினமும் கிறுக்கிக் கொண்டிருப்பான்” என்று எடுத்துக் கொடுத்தாள்.

“ஊஹும். நான் வாங்கிக் கொள்கிறேன்.”

“நீ ஒரு பைத்தியம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே, “கிரிஜா! என்னுடைய ஸ்கெட்ச் பென்சில் பார்த்தாயா?’ என்று கேட்டபடி அரவிந்த் வந்தான்.

“நான்தான் எடுத்தேன். அதைவிடு. நீ இன்று காலையில் எழுந்து யார் முகத்தைப் பார்த்தாய்? ஒருக்கால் என்னுடைய முகத்தைத்தான் பார்த்திருப்பாய். இதோபார்! உன் ஓவியத்தை வாங்குவதற்கு மகாராணி அவர்கள் வந்திருக்கிறார்கள். விலை என்னவென்று சொல்லு?” என்று கட்டைவிரல் மீது ஆள்காட்டி விரலை சுண்டிவிட்டு கேட்டாள்.

“விலையா?” என்றான் வியப்புடன்.

“ஒருக்கால் இதுவரையில் உன் வாழ்க்கையில் யாரும் கேட்டிருக்க மாட்டார்களாய் இருக்கும். நூறு சொல்லட்டுமா இருநூறா? போகட்டும் பணத்தை கறந்து விடுவோம். ஆயிரம் சொல்லட்டுமா? இதுதான் சான்ஸ் உனக்கு.”

கிரிஜாவின் வார்த்தைகள் ஊசியால் குத்துவது போன்ற வேதனையை அனுபவிப்பது போல் அவன் கண்ணிமைகள் படபடத்தன. எதிர்ப்பு தெரிவிக்க முடியாத, பதில் சொல்ல முடியாத இயலாமை.

“கிரிஜா!” தடுக்க முயன்றாள் மைதிலி.

“ஓ.கே. நீங்களே நேரடியாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள்.” தாய் அழைத்த குரல் கேட்டதும், “இதோ வருகிறேன் மம்மி!” என்று போய்விட்டாள்.

இருவரும் எதிரெதிரே நின்றிருந்தார்கள். சாதாரணமான பைஜாமா, குர்தா, கண்களில் மூக்குக் கண்ணாடி. அரவிந்த் சாதாரண மனிதன் போல் இல்லை. தன்னுடைய கண்களுக்கு தேஜஸ் நிறைந்தவனாய் தென்பட்டான்.

“எவ்வளவு கொடுக்கச் சொல்றீங்க?” கேட்டாள்.

அவன் இரண்டு கைகளையும் ஜோடித்தான். அந்தச் செயலில் அபூர்வமான நளினம் இருந்தது.

“நீங்க வேண்டும் என்று நினைப்பதே எனக்கு சந்தோஷம். அந்த சந்தோஷத்திற்கு எவ்வளவு விலை சொல்லணுமோ எனக்குத் தெரியாது. தயவு செய்து அதை நீங்க எடுத்துக் கொள்ளுங்கள்.” அவன் தலையை உயர்த்தாமலேயே தயக்கத்துடன் சொன்னான்.

பண விஷயத்தில் மேலும் வற்புறுத்தினால் அது அவனுக்கு வேதனை தருவது போல் ஆகும் என்று உணர்ந்துகொண்டாள்.

“இதற்கு இயற்கை என்று ஏன் தலைப்பு கொடுத்தீங்க?” ஆர்வத்துடன் கேட்டாள்.

“அந்தத் தாய் இயற்கை. அந்தக் குழந்தை மனிதன். இயற்கை மனிதனுக்கு எல்லாம் தரும். அவ்விருவரின் சம்பந்தம் தாய் சேய் போன்றது என்பது என் உத்தேசம்.”

மைதிலி மௌனமாக கேட்டுக் கொண்டாள். திரும்பவும் அந்த ஓவியத்தைப் பார்த்தால். இப்போ இன்னும் அழகாக இருப்பது போல் தோன்றியது. சாதரணமான தன் மனதிற்கு எட்டாத எண்ணத்தை அவன் தூரிகை வர்ணங்களால் எடுத்துச் சொன்னது.

“அந்தப் பெண்ணை ஏழையாக ஏன் சித்தரித்தீங்க?”

“அது ஏழ்மை இல்லை. எளிமை. இயற்கையின் முன் மனிதன் எப்போதும் குழந்தைதான். அதனால்தான் சின்னக் குழந்தையாய் வரைந்தேன்.” அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவன் கண்களில் ஏதோ ஒளி! ஓவியத்தைக் காண்பிக்கும் போது கூர்ந்து கவனித்தாள் மைதிலி. அவன் கைவிரல்கள் ரொம்ப நாசூக்காக அழகாக இருந்தன.

“நீங்க பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாமல் எனக்கு இதைக் கொடுக்கறீங்க. ஏதாவது எழுதிக் கொடுங்கள்” என்றால்.

அரவிந்த் மேஜை மீது குனிந்து ஓவியத்தின் மீது ஸ்கெட்ச் பேனாவால் எழுதினான். “ஒவ்வொரு பெண் மீதும் இயற்கையைச் சேர்ந்த தாய்மையின் பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை மறந்த பெண் முழுமையடைய மாட்டாள்.” அவன் நிமிர்ந்து “உங்கள் பெயர் மைதிலியா?” என்று கேட்டான்.

ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள்.

அவன் கடைசி வரியாக “மைதிலிக்கு முதல் முறையாக அறிமுகம் ஆன சந்தர்ப்பத்தில்” என்று எழுதிக் கொடுத்தான்.

“தாங்க்யூ!” என்றாள். அவன் பதில் சொல்லவில்லை. அறையிலிருந்து நிசப்தமாக வெளியேறிவிட்டான்.

அவன் எழுதிய வரிகள் மைதிலியின் மனதில் பன்னீர் தெளித்தது போல் இருந்தன. ஒவ்வொரு மனிதனுக்கும் எதிராளியுடன் அறிமுகம் ஏற்படும் முதல் பார்வையிலேயே நல்ல நேரமோ கெட்ட நேரமோ முடிவாகிவிடும் என்று மைதிலியின் தாய் வழி பாட்டி எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பாள். மைதிலிக்கு அரவிந்த் விஷயத்தில் எல்லாம் நல்லது தான் நடப்பது போல் தோன்றியது. அவன் அறிமுகம் ஆன முதல் வாரத்திலேயே கிரிஜா, மைதிலி இருவரும் டிக்ரி பாஸ் செய்து விட்டார்கள். அந்த வயதில் அந்த சாதனை உலகத்தையே ஜெயித்தது போன்ற சந்தோஷம்தான். கிரிஜா வீட்டில் சிநிகிதிகள் எல்லோரும் கூடி பார்ட்டி கொண்டாடினார்கள்.

கிரிஜாவின் தந்தையும், மைதிலியின் தந்தையும் டிபென்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் எப்போதும் வீட்டை விட்டு தொலைவிலேயே இருந்து வந்தார்கள். குழந்தைகளின் படிப்புக்காக சமீபத்தில்தான் ஹைதராபாதில் வீடு கட்டிக்கொண்டு குடும்பத்தை இங்கே வைத்து விட்டார்கள். இரண்டு குடும்பங்களும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருந்து வந்தன. கிரிஜா வீட்டில் குழந்தைகள் அதிகம். அத்துடன் உறவினர் வருகையும் ஜாஸ்தி. மைதிலியின் தாய் சமூக சேவகி. எப்போதும் பிசி. அதனால் மைதிலி பெரும்பாலும் கிரிஜாவின் வீட்டிலேயே இருந்து வந்தாள்.

மைதிலி தன்னுடைய சிநேகிதிகளின் பிறந்தாளுக்கு பரிசாக அரவிந்த் வரைந்த ஓவியங்களை வாங்கி கொடுத்து வந்தாள். மைதிலி கொடுத்தது என்பதால் அவர்களும் தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டு அவற்றைப் பாராட்டுவார்கள். நாளடைவில் மைதிலி மூலமாக அவர்களும் வாங்க ஆரம்பித்தார்கள்.

மைதிலி பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தபோது, “எங்கேயிருந்து இவ்வளவு பணம்?” வியப்புடன் கேட்டான் அரவிந்த். இருவருக்கும் இடையே அறிமுகம் வளர்ந்தது.

“உங்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லையா?” ஒரு முறை கேட்டாள்.

“இல்லை.”

“பணம் சம்பாதிக்கவில்லை என்றால் வாழ்வதற்கு என்ன வழி?”

“அதைப் பற்றி நான் என்றுமே யோசித்து இல்லை. எனக்கு வந்த வித்தை இது ஒன்றுதான்.” கையில் இருந்த தூரிகையைக் காண்பித்தான். “இது என் ஆன்மாவுக்கு திருப்தியைத் தரும். சாதம் போடாது.”

அவன் கிரிஜாவீட்டு கார் கேரேஜில் தங்கி இருந்தான். அங்கே பழைய டயர்கள், வேண்டாத பழைய சாமான்கள் நிறைய இருந்தன, காரை மூத்த மகளுக்குக் கொடுத்து விட்டதால் கிரிஜாவின் தாய் அதை ஸ்டோர் ரூம் ஆக்கி விட்டாள். வீட்டில் இடம் போதாமல் ஓரிருவர் ஆண்பிள்ளைகள் அங்கே படுத்துக் கொள்வார்கள்.

“இந்த இடம் ஜெயில் போல் மூச்சு முட்டவில்லையா?” என்றாள் மைதிலி.

அவன் அரிதான முறுவலை உதிர்த்தான். “இந்த உலகமே ஒரு பெரிய ஜெயில். அதில் சின்னச் சின்ன அறைகள் நம் வீடுகள். ஒரு முறை தூரிகை கையில் பிடித்துவிட்டால் சுற்றிலும் என்ன இருக்கிறது என்று எனக்கு நினைவு இருக்காது” என்றான்.

மைதிலிக்கு அவன் பேச்சுக்கள் ஆர்வத்தைத் தூண்டிவிட்டன. அவன் பேசுவதை மேலும் மேலும் கேட்க வேண்டும் என்று தோன்றும். கிரிஜா மற்ற சிநிகிதிகளுடன் பேசும் போது சலிப்பு ஏற்படத் தொடங்கியது.

அரவிந்துடன் பேசும் போது நேரம் போவதே தெரியவில்லை.

ஒருமுறை ஷாப்பிங் போவதற்காக பஸ்ஸ்டாப்புக்கு வந்தாள். அங்கே அரவிந்த் நின்றிருந்தான்.

“எங்கே?” என்று கேட்டாள்.

“பிரஷ் மற்றும் சில வர்ணங்கள் வாங்க வேண்டும். கடைத்தெருக்கு போகிறேன்.”

“நானும் அந்தப் பக்கம்தான். துணை யாரும் கிடைக்கவில்லை. கிரிஜா வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.”

“மனிதன் எப்போதும் தனியன்தான். துணை என்று வருபவர்கள் கொஞ்ச நேரம்தான் இருப்பார்கள். அதான் நான் துணைக்காக தேடமாட்டேன். மேலும் அவர்களால் நமக்கு சில பொறுப்புகள் வந்து சேரும்.”

“அப்படி என்றால் உங்களுடன் நான் கூட வரக் கூடாதா?”

“வாங்க. நீங்கள் வருவதால் எந்த இடைஞ்சலும் இல்லை. பேசிப் பேசி அனாவசியமாக எதிராளிக்கு தொல்லைக் கொடுக்க மாட்டீங்க.”

“தாங்க்யூ!” என்றாள்.

பஸ் வந்தது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். முதலில் மைதிலிக்கு வேண்டியதை வாங்கிய பிறகு அவன் ஷாப்பிங் செய்தான்.

“காபி குடிப்போமா?” கேட்டாள்.

அவன் தலையை அசைத்தான்.

இருவரும் ஹோட்டலில் அதிகம் பேசிக்கொள்ள வில்லை. ஹோட்டலில் மொட்டை மாடியில் இருந்த ரெஸ்டாரெண்டில் உட்கார்ந்திருந்தார்கள். அங்கிருந்து வியூ ரொம்ப அழகாக காட்சியளித்தது.

“என்ன யோசிக்கிறீங்க?’ என்றாள்.

“ஹைதராபாத் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ரொம்ப சந்தடி இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் கிராமம் போல் இருக்கும். மனிதனை எப்போதும் உற்சாகமாக இருக்கச் செய்யும்.”

“அடுத்தது என்ன ஓவியம் வரையப் போவதைப் பற்றி யோசிக்கிறீங்க?”

“நல்லா இருக்கு. எப்போதும் ஓவியத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பேனா?”

“மற்றதைப் பற்றிகூட நீங்க யோசிப்பீங்களா?” வியப்புடன் கேட்டாள்.

“நான் மட்டும் மனிதன் இல்லையா? ஓவியம், கவிதை எல்லாம் என்னுடைய தனித்தன்மையின் வெளிப்பாடு மட்டும்தான்.”

“அப்படி என்றால் இப்போ எதைப்பற்றி யோசிக்கிறீங்களோ சொல்லுங்கள்?”

“சாதாரணமாக நான் பெண்களுடன் அதிகமாக பழக மாட்டேன். உங்களுடன் இத்தனை குறைவான நேரத்திற்குள், இவ்வளவு உரிமை எப்படி ஏற்பட்டது என்று யோசிக்கிறேன்.”

“ஒருக்கால் அது நானாக எடுத்துக் கொண்ட உரிமையாய் இருக்கலாம்.”

“இருக்கலாம்.”

“இதற்கு முன் உங்களுக்கு பெண்கள் யாருமே அறிமுகம் ஆனதில்லையா?”

“இருக்காங்க.”

மைதிலி சீரியஸ் ஆகிவிட்டாள். “பெயர் சொல்ல முடியுமா?”

“ஸ்ரீ லதா.”

இருவருக்கும் நடுவில் மௌனம் சுவராக நின்றது.

அவன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான், மைதிலி கோப்பையை விரல்களால் சுழற்றிக் கொண்டிருந்தாள்.

பேரர் பில்லை கொண்டு வந்தான். மைதிலி பர்ஸை எடுக்கப் போனாள்.

“என்னிடம் இருக்கு.” அவன் எடுத்து கொடுத்து அனுப்பி விட்டான்.

“கிளம்புவோமா?” என்று கேட்டான். மைதிலி எழுந்து கொண்டாள்.

இருவரும் மௌனமாக படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். மைதிலி முன்போல் சேர்ந்து நடக்கவில்லை. சற்று இடைவெளி விட்டு நடந்து கொண்டிருந்தாள்.

இருவரும் பஸ்ஸ்டாப் அருகில் வந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் சேர்ந்து நடக்க வேண்டியதாயிற்று.

“ஸ்ரீலதா என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?” எங்கேயோ பார்த்துக் கொண்டு சீரியஸாக கேட்டாள்.

“ரொம்பப் பிடிக்கும்.” அவனும் எங்கேயோ பார்த்துக் கொண்டு சீரியஸ் ஆக பதில் சொன்னான்.

“கல்யாணம் பண்ணிக் கொள்ளணும் என்று நினைத்தீங்களா?”

“ஊம்.”

“எப்போ பண்ணிக் கொள்வதாக இருக்கீங்க?”

“எங்கள் கல்யாணம் நடக்காது.”

“ஏன்?”

“ஸ்ரீலதாவின் கல்யாணம் அவள் அத்தானுடன் நடந்து முடிந்து விட்டது.”

மைதிலி ஆச்சரியமடைந்தாள். வியப்பிலிருந்து சந்தோஷம் பொங்கி வந்தது. அவன் பக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தாள். “ஏன்? உங்களிடம் பணம் இல்லை என்று அவங்க வீட்டார் மறுத்து விட்டார்களா?”

“ஊஹும்.”

“காரணம் என்ன?”

“நான் ஸ்ரீலதாவிடம் அவளை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லவே இல்லை.”

“சொல்லவில்லையா?” வியப்புடன் கேட்டாள்.

“சொல்லவில்லை.”

“சொல்லவில்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு எப்படி தெரியும்?”

“சொல்லாமலே தெரியணும். தெரியும் என்று நான் நினைத்திருந்தேன். அது என்னுடைய முட்டாள்தனம். இல்லை இல்லை. அந்த முட்டாள்தனம்தான் என்னைக் காப்பாற்றியது. உன்னிடம் எதிராளிக்கு பிரியம் இருந்தால் அது சொல்லாமலே புரிந்து விடும். அந்த எண்ண அலைகள் தானாகவே வரவேண்டும். ஸ்ரீலதாவிடம் எனக்கு இருந்தது ஒருபக்க காதல் என்று உணர்ந்து கொண்டேன்.”

“அப்போ என்ன செய்தீங்க?”

“என்ன செய்தேன்? இரண்டு மாதங்கள் வரையில் ஒரு ஓவியம் கூட வரையவில்லை. என் தலைமீது ஏறி உட்கார்ந்திருந்த பேய் இறங்கிவிட்டது. நிம்மதியாக ஓவியம் வரையத் தொடங்கினேன். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுதான் எனக்குத் துணை. காதல் என்ற உணர்வுக்கு நான் தகுதியற்றவன் என்று நினைத்தேன்.”

மைதிலி சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பு நிற்கவே இல்லை. சிரித்துக் கொண்டே இருந்தாள்.

அரவிந்த் பதற்றத்துடன் சுற்றிலும் பார்த்தான். “பலமாக சிரிக்கிறீங்க” என்றான். மைதிலி நிம்மதியாக சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பின் வெளிப்பாடாக கண்ணிமை ஓரத்தில் ஆனந்தக்கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தது. அவனருகில் நகர்ந்து சேர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

“சற்று முன் தொலைவில் நடந்து வந்தீங்களே?”

“உங்க வாழ்க்கையில் வேறு ஒரு பெண் இருக்கிறாள் என்றால் ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது.”

“அது தவறு. வாழ்க்கை யாருக்கும் சொந்தம் இல்லை. நம் வாழ்க்கையில் யாராவது ஏதோ ஒரு சமயத்தில் வந்து சேருவார்கள். நமக்கு முன்னால் சிலர் இருப்பார்கள். நமக்கு பிறகும் சிலர் வந்து சேர்ந்துக் கொள்வார்கள்.”

“என்னால் அதை சகித்துக் கொள்ள முடியாது. தெரியாத போது நடந்தால் பரவாயில்லை. தெரிந்த பிறகு மற்றவரின் நிழல் கூட பட விடமாட்டேன்.”

“நீங்க சிறுபிள்ளைத்தனமாக பேசுறீங்க.”

“எனக்கு எல்லாம் தெரியும்.”

‘தெரியாது. உங்கள் விஷயமே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்து கொள்வீங்க. சில மாதங்கள் கழித்து உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் மூன்றாவது ஆள்தானே. நீங்க உங்க கணவருடன் அவனையும் ஏற்றுக் கொள்வீங்க இல்லையா? இன்னும் சொல்லப் போனால் கணவரைவிட அதிகமாக அவனைப் பார்த்துக் கொள்வீங்க. உண்டா இல்லையா?”

மைதிலியால் மறுக்க முடியவில்லை. ஆம் என்பது போல் தலைய அசைத்தாள்.

“நான் சொல்ல வந்ததும் அதுதான். நம் வாழ்க்கையில் அறிமுகம் ஆகிறவர்களின் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பிறகு என்னையும் மறக்கச் செய்யும் அளவுக்கு வேறு நபர் உங்களுக்குக் கிடைக்கலாம்.”

“அசாத்தியம்!”

“ஸ்ரீலதாவின் விஷயத்தில் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இனி ஜென்மத்தில் வேறு பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கப் போவதில்லை என்று நினைத்தேன். இப்போ பாருங்கள். உங்களுடன் எவ்வளவு உரிமையாய் பழகிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?”

“என்னைக் கண்டால் உங்களுக்கு பிடிக்கும் இல்லையா?”

“பிரியம் இல்லை என்றால் இத்தனை நேரம் உங்களுடன் இருக்க முடியுமா?” அவன் தன்னைத்தானே கேட்டு கொள்வது போல் சொன்னான்.

மைதிலியின் கை நகர்ந்து அவன் கையின் மீது பதிந்தது. அவன் தடை சொல்லவில்லை. அவள் கை அவன் கையை இறுக்கப் பற்றிக்கொண்டது. இருவரும் கைகளை இணைத்தபடியே பஸ்ஸில் ஏறினார்கள். உட்கார்ந்த பிறகும் கையை விடவில்லை.

ஒருமுறை மைதிலி வேண்டுமென்றே கையை விடுவித்துக் கொள்ள போனாள். அவன் மறுக்கவில்லை.

“நீங்கள் என் கையைப் பற்றிக்கொள்ள வில்லை.” புகார் செய்வது போல் சொன்னாள்.

“நான் உங்களுக்குக் கொடுக்கும் சுதந்திரத்திற்கு அது அடையாளம். காதல் என்றால் அவர்களாக நம்மிடம் பிரியத்துடன் இருக்க வேண்டும். நாம் அவர்களை கட்டிப் போடக் கூடாது.”

“அரவிந்த்!”

“என் பெயர் இனிமையாக என் காதில் விழுகிறது நீ உச்சரிக்கும் போது.”

வான் மேகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் மைதிலி வீட்டுக்கு வந்தாள்.

தந்தை ஊரிலிருந்து வந்திருந்தார்.

“இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?” அவர் கண்களில் மின்னலும் இடியும் வெளிப்பட்டன. “நீயும் ஒரு இளைஞனும் சிரித்துப் பேசிக்கொண்டு சுயநினைவு இல்லாதபடி கடைத் தெருவில் நடந்து வருவதைப் பார்த்தேன்.”

“டாடீ!” ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தை வெளிவரவில்லை. இனியதொரு கனவுலகிலிருந்து டமாலென்று கீழே விழுந்து விட்டது போல் இருந்தது.

அரவிந்துடன் நட்பு கூடாதென்று தந்தை தெளிவாக சொல்லிவட்டார். அவனை சந்திக்கவும் அவர் அனுமதிக்கவில்லை. அரவிந்துக்கு கடிதம் எழுதினாலும், சந்திக்க முயன்றாலும் கொன்றுப் போட்டு விடுவதாக வார்னிங் கொடுத்தார்.

பத்துநாட்கள் கழித்து தந்தை ஊருக்குப் போய் விட்டார். மைதிலி கிரிஜாவின் வீட்டுக்கு ஓட்டமெடுத்தாள். அங்கே அரவிந்த் இருக்கவில்லை. கார் ஷெட்டில் அவனுடைய படுக்கை, கான்வாஸ், ஓவியங்கள் எதுவுமே இல்லை.

“அரவிந்த் ஊருக்குப் போய்விட்டான் மைதிலி.” கிரிஜா சொன்னாள்.

“எங்கே?”

“அவனுடைய பாட்டியின் ஊருக்கு. விவரங்களைச் சொன்னால் அம்மா என்னைக் கொன்று போட்டு விடுவாள். ஆனால் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதுதான் அரவிந்த் அட்ரஸ்” என்று கொடுத்தாள்.

“அரவிந்த் எப்போ போனான்?”

“உங்க அப்பா வந்து விட்டுப் போன அன்று மாலை எங்கள் வீட்டில் பெரிய ரகளை ஆகிவிட்டது. எங்க அம்மா அவனை திட்டி அனுப்பிவிட்டாள்.”

மைதிலி போஸ்டாபீசுக்குப் போய் அரவிந்த் பாட்டி இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி அதன் விவரம் கேட்டாள். இங்கிருந்து அறுபது மைல் தொலைவில் இருக்கும் ஒரு குக்கிராமம்.

மைதிலி மறுநாள் மாலையில் அந்த ஊருக்குப் போய் சேர்ந்தாள். மனதில் தந்தை என்றால் பயம் இருந்தாலும், அரவிந்தைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பில் துணிச்சல் வந்து விட்டது.

குக்கிராமம்! சூரியன் அஸ்தமிக்கும் நேரம். சூட்கேசை எடுத்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கி கால்நடையாய் ஒரு மைல் நடந்து வந்தாள் மைதிலி. அரவிந்த் வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து இரண்டு கையாலேயும் தலையைப் பிடித்தபடி உட்கார்ந்து இருந்தான்.

“அரவிந்த்!” அழைத்தாள்.

திடுக்கிட்டவனாய் நிமிர்ந்து பார்த்தான். தன் கண்களைத் தன்னாலேயே நம்பமுடியாதவன் போல் பார்த்துக் கொண்டே எழுந்து நின்றான்.

“அரவிந்த்! என்னை மன்னித்துவிடு.”

“மைதிலி!!”

“உன்னைப் பார்க்கக் கூடாது என்று சொல்பவர்களிடமிருந்து நான் வந்து வந்துவிட்டேன். உன்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டேன்.”

அழுது கொண்டிருந்த மைதிலியை அர்விந்த் அருகில் இழுத்துக் கொண்டான்.

“என்னை திரும்பிப் போகச் சொல்லி சொல்லாதே. அப்பா என்னைக் கொன்று போட்டு விடுவார். சொல்ல மாட்டாய் இல்லையா?” என்று கேட்டாள்.

“மாட்டேன் மைதிலி. என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் உன்னை யாரும் என்னிடமிருந்து அழைத்துப் போக முடியாது. இந்த பத்து நாட்களில் நீ எவ்வளவு விருப்பமானவள் என்று எனக்கும் புரிந்து விட்டது. இந்த ஜென்மத்தில் யாராலும் நம் இருவரை பிரிக்க முடியாது.” அவள் நெற்றியில் இதழ்களால் ஒற்றியபடி சத்தியம் செய்து கொடுத்தான்.

*****

மேஜை விளக்கின் வெளிச்சத்தில் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலி போட்டோ மீது லேசாக குனிந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது. அரவிந்தின் போட்டோ அவள் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது. மைதிலி கண்ணீரைத் துடைக்கத் துடைக்க மேலும் துக்கம் பெருகிக் கொண்டிருந்தது.

 

Series Navigationமிதிலாவிலாஸ்-14மிதிலாவிலாஸ்-16
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *