மிதிலாவிலாஸ்-17

This entry is part 2 of 23 in the series 11 அக்டோபர் 2015

 (மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் சென்ற வாரமும் , இவ்வாரமும் வெளியாகியுள்ளன.– ஆசிரியர் குழு.)

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

அபிஜித்துடன் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் போவதற்குள் அவள் தந்தை அதுவரையில் ரகசியமாக உறவு வைத்திருந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

“அபிஜித்! நீ மட்டும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தால் என்னவாகி இருப்பேனோ?” என்றாள்.

“இப்படி நடக்கப் போகிறதென்று எனக்கு முன்னாடியே தெரியும்” என்றான்.

“தெரியுமா?’ வியப்புடன் கேட்டாள்.

அவன் தலையை அசைத்தான். “அதனால்தான் நம் கல்யாணத்திற்கு அவசரப்பட்டேன்.”

அவனுடைய முன்னேற்றத்திற்கு அவசியம் என்று தோன்றிய ஒவ்வொரு விஷயத்திலேயும், அதற்குச் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கவனமாக, விழிப்புடன் நடந்து கொள்வது பழக்கமாகி விட்டிருந்தது. அவனுடன் தன்னுடைய வாழ்க்கை பிரிக்க முடியாத பந்தம்.

மைதிலி அரவிந்தின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரவிந்த் பற்றிய நினைவுகளை அபிஜித் ஜெயித்து விட்டிருந்தான். ஆனால்… ஆனால் அவள் மனதில் எண்ணங்கள் வெளிச்சம் நிழலை போல் சூழ்ந்து கொண்டிருந்தன.

சித்தார்த்! மைகாட்! அவள் மனம் தவித்துக் கொண்டிருந்தது. தன்னறியாமல் அவள் கை வயிற்றின் மீது படிந்தது. கண்களிலிருந்து தாரையாக கண்ணீர் வெளி வந்து கொண்டிருந்தது.

இது உண்மைதானா? இது மட்டும் உண்மை என்றால் இந்த உலகத்தில் என் அளவுக்கு அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க மாட்டார்களோ. ஆனால் என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலியும் இருக்க மாட்டார்கள். ஜுரம் குறைந்தாலும் சோர்வுடன் பழைய வீட்டில் தான் விரித்திருந்த படுக்கையின் மீது படுத்திருந்த சித்தார்த்தாவின் முகம் அரவிந்த் போட்டோவின் வழியாக காட்சி தந்தது. கண்ணாடி வழியாக சித்தார்த்தா தன்னைப் பார்க்கும் பார்வையில் பலகேள்விகள் ஒலித்துக் கொண்டிருந்தன.

“எனக்கு நீ! உனக்கு நான்! “ என்று சொன்னாய் அன்று. இதுதானா என்று கேட்பது போல் இருந்தது.

அந்த நிமிடமே வீட்டை விட்டு வெளியேறி அந்த நள்ளிரவு நேரத்தில் அந்த பழைய வீட்டுக்குப் போய் கதவைத் தட்டி சித்தார்த்தா கதவைத் திறந்ததும், “சித்தூ!” என்று அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. இல்லை இல்லை. அவனைத் தூக்கிக் கொண்டு கைக் குழந்தையைப் போல் கைகளுக்கு இடையே கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.

தோளில் போட்டுக்கொண்டு தட்டி தூங்க வைக்கணும் போல் தோன்றியது. மைதிலிக்கு அந்த நிமிடம் சித்தூ பதினெட்டு வயது இளைஞனாகத் தெரியவில்லை. பிறந்து பதினெட்டு நிமிடங்கள் ஆன பச்சிளம் குழந்தையாய் தென்பட்டான். தாய்மையின் பிரவாகத்திற்கு எப்போதோ எங்கேயோ வலுக்கட்டாயமாக போடப்பட்டிருந்த அணைக்கட்டு ஒரேதிரியாக உடைந்து சகலத்தையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

அந்த வேகத்திற்கு நல்லதுகெட்டது தெரியவில்லை. சுதந்திரம் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் சுழன்றுகொண்டு, பொங்கி பூரித்தபடி வேகமாய் ஓட்டமேடுத்துக் கொண்டிருந்தது.

அதற்குள் படுக்கை அறையில் விளக்கு எரிந்தது. “மைதிலி!” என்று அபிஜித் அழைக்கும் குரல் கேட்டது.

மைதிலி சட்டென்று டிராயரைத் திறந்து அரவிந்தின் போட்டோவை உள்ளே தள்ளி மூடிவிட்டாள். அபிஜித் எழுந்து வந்தான்.

“மைதிலி! இங்கே இருக்கிறாயா?”

மைதிலியின் தலை மேஜை மீது கவிழ்ந்து இருந்தது. அவளால் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை.

“என்ன நடந்தது? என் இப்படி இருக்கிறாய்?” அருகில் வந்தவன் அவள் தலைமீது கையை வைத்தான். மைதிலியின் தோள்கள் அதிர்ந்து கொண்டிருந்தன.

வலுக்கட்டாயமாக அவள் தலையை உயர்த்தினான். “என்ன இது? என்ன நடந்தது?” பதற்றத்துடன் கேட்டான்.

பதில் சொல்வது போல் அழுகை மேலும் வெள்ளமாக பொங்கி வந்தது.

“என்ன நடந்தது? அப்பா நினைவுக்கு வந்தாரா? போன் ஏதாவது வந்தா?”

மைதிலி பதில் பேசவில்லை.

“எத்தனை நேரமாக இப்படி தனிமையில் உட்கார்ந்து இருக்கிறாய்? நான் நன்றாக தூங்கிவிட்டேன் இல்லையா?” அபிஜித் மைதிலியை அப்படியே தன் இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டான்.

“என்ன ஆச்சு? என்னை கவலையில் ஆழ்த்துகிறாய் நீ?” சின்னக் குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல் கைகளுக்கு இடையே மைதிலியைத் தாலாட்டினான்.

“அபீ!”

“சொல்லும்மா.”

“எனக்கு பயமாக இருக்கிறது.”

“பயம் எதுக்கு?”

“நான்… நான் ஒரு முறை சித்தூவை பார்த்து விட்டு வருகிறேன்.”

‘சித்தூவையா? இப்போழுதா?” வியப்புடன் மணியைப் பார்த்தான். விடியற்காலை மூன்று மணி நெருங்கிக் கொண்டிருந்தது.

“அவனுக்குக் குறைந்து விட்டது இல்லையா? எதற்காக கவலைப் படுகிறாய்? கட்டாயம் போவோம். நாளை காலையில் நானே உன்னை அழைத்துப் போகிறேன். சரிதானே.”

அபிஜித் மைதிலியை படுக்கையறைக்கு அழைத்து வந்து கட்டில் மீது படுக்க வைத்தான். “சித்தார்த்தா நினைவுக்கு வந்தானா?” மென்மையாக அவள் பக்கம் குனிந்து தலையணையில் முழங்கையை ஊன்றியபடி கேட்டான்.

ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள். அவளுடைய அழுகை நிற்கவில்லை. கட்டுப்படுத்துவதற்காக அவள் செய்யும் முயற்சி பலிக்கவும் இல்லை.

அபிஜித் அவள் தலையை வருடிக்கொண்டே சொன்னான். “மைதிலி! நமக்கு குழந்தைகள் இல்லாமல் போனதாலோ என்னவோ, குழந்தைகள் யாரையாவது பார்த்தால், அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் சரி, அவர்கள் வேதனையில் இருப்பது தெரிந்தால் நம் மனம் தவியாய் தவிக்கிறது. உடனே போய் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் போல் தோன்றும். சித்தார்த்தா விஷயத்திலும் நமக்கு அப்படித் தோன்றுவது சகஜம்தான்.”

“சித்தார்த்தா வேறு” என்றாள் மைதிலி.

“ஆமாம். சித்தார்த்தா வேறுதான். ரொம்ப திறமைசாலி” என்றான்.

மைதிலிவால் பதில் சொல்ல முடியவில்ல்லை.

*****

சானிடோரியத்தில் ராமநாதன் அப்பொழுதுதான் வாக்கிங் முடிந்துக் கொண்டு வந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். சட்டைப் பையில் இருந்த சிகரெட் பேட்டியின் மீது கையை வைத்துக் கொண்டே யாராவது வருகிறார்களா என்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்வையைத் திருப்பினார். யாரும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டதும் சிகரெட்டை எடுத்து லைட்டரால் பற்ற வைத்தார். அவசர அவசரமாய் நான்கு இழுப்புகள் இழுக்கும் போதே யாரோ வருவது போல் காலடிச் சத்தம் கேட்டது. பயந்து போனவராய் சட்டென்று சிகரெட்டை ஜன்னல் வழியாய் வீசி எறிந்தார், அவர் சிகரெட் ஜொலிக்கு போகவே கூடாது. அதன் பெயரைக் கூட நினைக்கக் கூடாது என்று டாக்டர் ஸ்ட்ரிக்ட் ஆக எச்சரித்து இருந்தார்.

அவர் வாசல் பக்கம் திரும்பிய போது எதிரே மைதிலி நின்றிருந்தாள். மகளைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.

“வாம்மா மைதிலி! எப்போ வந்தாய்? அபிஜித்தும் வந்திருக்கிறானா?” என்று கேட்டார்.

“டாடீ!” தீட்சண்யமாக பார்த்துக் கொண்டே கேட்டாள் மைதிலி. “நான் உங்களிடம் ஒரு விஷயத்தை தெளிவுப் படுத்திக் கொள்வதற்காக வந்தேன். நீங்க மட்டும் பொய் சொன்னீங்க என்றால் இந்த ஜென்மத்தில் உங்கள் முகத்தைப் பார்க்க மாட்டேன்.”

“என்ன விஷயம்?”

“அன்று பூனாவில் நான் பிரசவித்த போது எனக்கு பிறந்தது இறந்த குழந்தைதானா?” மைதிலியின் கண்கள் தீவிரமாய் இருந்தன.

“என்ன நடந்தது? அந்த விஷயம் இப்போ எதற்கு?”

“நீங்க மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளிப்பட்டுவிட்டது. எனக்கு மகன் பிறந்திருக்கிறான். உயிருடன் இருக்கிறன். அப்படித்தானே?”

“பிறந்தது மகன் என்றுகூடத் தெரிந்துபோய் விட்டதா?” முணுமுணுத்துக் கொள்வது போல் சொன்னார் அவர்.

“சொல்லுங்கள் டாடீ.”

அவர் பதில் பேசவில்லை.

“இப்பொழுதாவது உண்மையைச் சொல்லுங்கள். நீங்க சொல்லவில்லை என்றாலும் என்னால் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் வாயால் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வந்தேன்.”

“பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த இந்தக் கதையை உன்னிடம் சொன்னது யாரு? எல்லாம் பொய்! யாரோ உன்னை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். உன்னிடமிருந்து பணம் பிடுங்க திட்டம் போடுகிறார்கள்.”

“அவ்வளவுதானா! எல்லாமே பொய்தானா? உங்களைவிட கட்டுக்கதை சொல்கிறவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா? பெங்களூரில் இரண்டாவது குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தும் கூட உங்களைப் போன்ற சத்தியவான் இல்லை என்று அம்மாவை நம்பச் செய்தீங்க. இது கட்டுக்கதை என்று நீங்க சொன்னால் நான் இப்பொழுதே போய் விடுகிறேன் டாடீ. ஆனால் நீங்கள் சொன்னதை அப்படியே நம்பிவிடும் சின்ன வயது மைதிலி இல்லை நான். நானே தெரிந்துகொள்கிறேன். ஆனால் அது உண்மை என்றும், நீங்கள் சொன்னது பொய் என்றும் தெரிந்தால் இனி இதுதான் நம் கடைசி சந்திப்பு.”

மைதிலி விருட்டென்று திரும்பி நடந்துப் போகப் போனாள். ஏதோ சாமி புகுந்துவிட்டது போல் அவள் ஆவேசமாக இருந்தாள். அவள் தன்னை விட்டுவிட்டால் இந்த வயோதிகத்தில், நோய்வாய் பட்ட நிலையில் இனி தனக்கு வேறு நாதி இல்லை.

“மைதிலி!” பதற்றத்துடன் குரல் கொடுத்தார்.

மைதிலி நின்றாள்.

“அவசரப்படாதே. இப்படி வாம்மா.” வேண்டுகோள் விடுத்தார்.

மைதிலி பின்னால் திரும்பினாள்.

“இப்படி வாம்மா.”

மைதிலி வரவில்லை. விளக்கம் கேட்டு வந்த நீதிபதியைப் போல் நின்றிருந்தாள்.

அவரே அருகில் வந்தார். “மைதிலி! நீ திடீரென்று இப்படி கேட்பதற்கு என்ன கராணம்? அதைச் சொல்லு.”

“அது உங்களுக்கு அனாவசியம் டாடீ.”

அவர் வாயைத் திறக்கவில்லை.

“நான் போகிறேன்.”

“போகாதே. நில்! என்மீது கோபம் கொள்ளாதே. உண்மைதான். அன்று உனக்கு ஆண்குழந்தை பிறந்தது உண்மைதான்.”

மைதிலியின் விழிகளில் கிர்ரென்று நீர் சுழன்றது. “உண்மைதான் இல்லையா?”

“ஆமாம். குழந்தையை யாரிடமாவது கொடுக்கச் சொல்லி நான்தான் ரமாகாந்திடம் சொன்னேன். நானும், அம்மாவும் உனக்குப் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக சொல்லச் சொல்லி ரமாகாந்திடம் வேண்டுகோள் விடுத்தோம். ரமாகாந்த் முதலில் சம்மதிக்கவில்லை. நீ இளமையில் இருப்பதை, எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை சொன்ன பிறகு ஓப்புக் கொண்டான்.”

“ரமாகாந்த் அந்தக் குழந்தையை என்ன செய்தார் டாடீ?”

“எனக்குத் தெரியாது. மறுபடியும் நான் அவனைச் சந்திக்கவில்லை.”

“என்ன காரியம் செய்தீங்க டாடீ!” மைதிலியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது. வேதனையும், சந்தோஷமும் கலந்த கண்ணீர் அது.

“அப்போ நான் செய்தது நல்லதுதான். இல்லை என்றால் உன் எதிர்காலம் இப்படி இருந்திருக்குமா?”

“தயவு செய்து இனிமேல் எதுவும் பேசாதீங்க. என் உயிருக்கும் மேலானது எது என்று உங்களுக்குத் தெரியாது. அது என் துரதிருஷ்டம்.”

“உனக்கு வேதனை ஏற்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடம்மா.”

“மன்னித்து விடுகிறேன் டாடீ! அம்மா போய் இரண்டு மாதங்கள் முடியும் முன்பே நீங்க வேறு பெண்ணுடன் ஊர் சுற்றத் தொடங்கினீங்க. அப்போது மன்னித்து விட்டது போலவே இப்போதும் மன்னித்து விடுகிறேன். குறைந்த பட்சம் உண்மையை ஒப்புக்கொண்டீங்க. அது போதும்.” மைதிலி பின்னால் திரும்பி போய்க் கொண்டிருந்தாள்.

அவர் பின்னாலேயே ஓடி வந்தார். “மைதிலி! என் மீது கோபம் இல்லையே? என்னை விட்டுவிட மாட்டாய் இல்லையா?”

“இல்லை டாடீ. உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வைப்பதற்காக அப்படி மிரட்டினேனே தவிர வயோதிகத்தில் நோய்வாய் பட்ட நிலையில், இரண்டாவது மனைவியின் மோகத்தில் காசு பணத்தை எல்லாம் இழந்துவிட்ட உங்களை நான் நிஜமாகவே விட்டுவிடுவேன் என்று எப்படி நினைத்தீங்க? உங்கள் அளவுக்கு கடினமானவள் இல்லை டாடீ நான்.” சந்தோஷமானது நீர்வீழ்ச்சியாய் அவள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது.

மைதிலி காரை ஸ்டார்ட் செய்தாள். அடுத்த நிமிடம் கார் விர்ரென்று கிளம்பிவிட்டது.

ராமநாதன் ஓடி வந்ததில் இருமல் வந்துவிட்டது. மகள் சொன்ன கடைசி வார்த்தைகள் அவர் மனதைக் காயப்படுத்தின.

மைதிலியின் கார் போய் விட்டது. பின்னாலிருந்து கையை ஆட்டிக் கொண்டே, “அன்று நான் மட்டும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் அபிஜித் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு இருப்பானா? இப்படி காரில் பறந்து வந்து என்னை மிரட்டும் நிலையில் நீ இருந்திருப்பாயா? இந்த காலத்து பிள்ளைகளுக்கு நல்லது செய்தால் அதைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லை” என்று சலித்துக் கொண்டார்.

*****

தூரப் பயணத்தின் காரணமாய் தூசி படிந்துவிட்ட மைதிலியின் கார் நேராக வந்து சித்தார்த்தா இருக்கும் சிறிய வீட்டின் முன்னால் நின்றது. மைதிலி காரை விட்டு இறங்கினாள். கார் கதவைச் சாத்திக்கொண்டே அந்த ஓட்டுவீட்டின் பக்கம் பார்த்தாள். அவள் கண்களுக்கு அது புனிதமான கோவில் போல் தெரிந்தது. பயணத்தின் களைப்பு, மனதில் இருந்த அமைதியின்மை மைதிலியின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் தேடுதல் முடித்து, எதிர்பாராமல் கரையை அடைந்துவிட்ட பயணியைப் போல் அவள் கண்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தன.

மைதிலி படியேறி வீட்டுக்குள வந்தாள். அவள் இதயம் முழுவதும் உத்வேகம் நிரம்பி இருந்தது.

கார் சத்தம் கேட்டதுமே அதற்காகவே காத்திருந்தது போல் அன்னம்மா கைவேலையை நிறுத்திவிட்டு வாசல் பக்கம் எட்டிப் பார்த்தாள்.

எதிரே மைதிலி உள்ளே வருவது தென்பட்டதும் அந்தம்மாளின் முகம் மலர்ந்தது. சட்டென்று எதிர்கொண்டு அழைத்தாள்.

“வந்தாயா அம்மா! உனக்காகத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நேற்று முழுவதும் வரவில்லையே? என்ன காரணமோ என்று நினைத்தேன்.” அன்பு ஒழுக வாய் பேசிக் கொண்டிருந்தாலும் அவள் கண்கள் மைதிலியின் கைகளை ஆராய்ந்து கொண்டிருந்தன. ஆனால் அந்தக் கைகள் வெறுமையாய் இருந்தன. மைதிலி எதுவும் கொண்டு வரவில்லை. வெறும் கையுடன் வந்திருக்கிறாள். அந்தம்மாளின் சிரிப்பு மாயமாகி விட்டது.

“அன்னம்மா! சித்தூ.. சித்தூ எங்கே?’ சித்தூ என்று சொல்வதில் அவள் உயிர் அந்தப் பெயருடன் இணைந்து இருப்பது போல் ஒலித்தது.

“அவனா? கொஞ்சம் தேவலையாகி விட்டது இல்லையா. எங்கேயோ போயிருக்கிறான்.”

“வீட்டில் இல்லையா?” ஏமாற்றத்துடன் சொன்னாள்.

“உடம்பு சரியாக இருந்தால் அவன் கால்கள் வீட்டில் தரிக்குமா?”

“எப்போ வருவான்?”

“யாருக்கு தெரியும்? என்னிடம் சொல்லிவிட்டு போவானா? போகும் போது சொல்ல மாட்டான். வந்த பிறகும் போய் அந்த அறையில் உட்கார்ந்து கொள்வான். வந்தானோ இல்லையோ என்று நான்தான் போய் எட்டிப் பார்த்துவிட்டு தெரிந்து கொள்ளணும்.” அன்னம்மா சலித்துக் கொள்வது போல் சொல்லிவிட்டு போய்விட்டாள்.

மைதிலி இங்கு வரத் தொடங்கிய பிறகு பழங்கள், பிஸ்கெட்டுகள் சித்தூவைவிட அவள்தான் அதிகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். வீடு நிறைய சாப்பிடும் தின்பண்டங்கள் இருந்தால் அவளுக்கு வாழ்க்கை சுவர்க்கம் போல் இருந்தது. தினமும் இரண்டு முறை ஹார்லிக்ஸ் கலந்து குடித்து வந்தாள்.

மைதிலி சித்தார்த்தாவின் அறைக்கு வந்தாள். கருவறைக்குள் நுழைவது போல் கவனமாக அடியெடுத்து வைத்தாள். சுற்றிலும் கண்ணால் பார்த்தாள். தான் வாங்கி வந்த மெத்தை சுருட்டி ஒரு மூலையில் வைக்கப் பட்டிருந்தது. தான் அவனுக்காக வாங்கி வந்த உடைகள் பிரிக்கப்படாமல் பாக்கெட்டுகளில் வெளியில் தெரிந்தபடி மெத்தையின் மீது இருந்தன.

பெட்டியின் மீது அவனுடைய பழைய உடைகள் தாறுமாறாக மடித்து வைக்கப் பட்டிருந்தன. மைதிலி அவற்றின் மீது கையை வைத்தாள். அந்தத் தொடுகையில் அவளுள் உறங்கிக் கொண்டிருந்த கனவுகள் விழித்துக் கொண்டிருந்தன. கிழிந்து போய் தையல் போட்டிருந்த அந்த ஆடைகளை மைதிலி கண்ணீர் நிறைந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அனுபவித்து வந்த கஷ்டங்களை அவை பறைசாற்றிக் கொண்டிருந்தன. இரண்டு கைகளாலும் அவற்றைப் பற்றி மார்போடு அழுத்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். கண்களிலிருந்து வழியத் தொடங்கிய கண்ணீர் நிற்கவில்லை.

காலடிச் சத்தம் கேட்டது. மைதிலி திரும்பிப் பார்த்தாள்.

வாசலில் சித்தார்த்தா நின்றிருந்தான். தன்னுடைய பழைய ஆடைகளை மைதிலி மார்போடு அணைத்துக் கொண்டு நிற்பதை கவனித்துவிட்டான். அவன் புருவங்கள் முடிச்சேறின.

மைதிலி சித்தார்த்தாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். “சித்தூ!” அவள் இதழ்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.

“குட் ஈவினிங் மேடம்!” சீரியஸ் ஆக சொன்னான்.

“சித்தூ!” கனவில் நடப்பவள் போல் அவனை நோக்கி நடந்து வந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தாலும், உலகத்தில் இருக்கும் அமைதி, சந்தோஷம் முழுவதும் வந்து குடிகொண்டு விட்டது போல் அவள் முகம் மலர்ந்து இருந்தது.

“சித்தூ!” மிருதுவாய் அழைத்துக் கொண்டே கையை நீட்டி அவன் தோளை அழுத்தமாக பற்றிக் கொண்டாள். அவனது தொடுகையில் இருந்த உயிர்சக்தியானது அவள் கண்ணிமைகளுக்கு பின்னால் இத்தனை காலமாக மறைந்து கொண்டிருந்த இருளைத் துளைத்துவிட்டு வெளிச்சத்தை நிரப்புவது போல் இருந்தது.

“சித்தூ!” அவளுக்கு நிறைய சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் உத்வேகத்து சுழலில் சிக்கிக் கொண்டிருந்த அவள் வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை,

அவன் மெதுவாக, கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் தோளிலிருந்த அவள் கையை விலக்கிக் கொண்டு தொலைவுக்கு நகர்ந்து கொண்டான்.

அறைக்குள் நுழைந்து தேடியவன் இரண்டு டிசைன் புத்தகங்களை எடுத்துக் கொண்டான். அவற்றை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறப் போன போது பின்னாலிருந்து மைதிலி, “சித்தூ!” என்று அழைத்தாள்.

அந்த அழைப்பு கூக்குரலை போல் இருந்தது. அவன் வாசற்படியைத் தாண்டும் போது அந்த அழைப்பு கேட்டது.

வியப்படைந்தவனாய் தோள் வழியாக திரும்பிப் பார்த்தான். அவள் கைகளை நீட்டி அவனை போகாதே என்பது போல் தடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவள் பக்கம் திரும்பினான். “எனக்கு நன்றாக தேவலை ஆகி விட்டது மேடம். தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு திரும்பி விட்டான். போகும் போது அவள் நடத்தை புரியாதவன் போல் தோள்களை குலுக்கிவிட்டு கண்ணிமைகளை உயர்த்தினான்.

அன்னம்மா அவன் அருகில் வந்து சட்டையைப் பற்றிக் கொண்டு, “சித்தூ! அந்தம்மாளை இருநூறு ரூபாய் கேளேன், வீட்டுக்கு வேண்டிய மளிகைச் சாமானை வாங்குவோம்” என்றாள் தாழ்ந்த குரலில்.

சட்டையைப் பற்றியிருந்த அன்னாம்மாவின் கைகளை எரிச்சலுடன் பார்த்தான் சித்தார்த்தா. பிறகு நிமிர்ந்து அன்னம்மாவைப் பார்த்தான்.

அந்தப் பார்வைக்கு பயந்து விட்டவள் போல் அன்னம்மா சட்டையை விட்டுவிட்டாள்.

சித்தார்த்தா போய்விட்டான். அன்னம்மா அறைக்குள் எட்டிப் பார்த்தாள். மைதிலி சித்தார்த்தாவின் உடைகளை கையில் வைத்தபடி அப்படியே நின்றிருந்தாள்.

அன்னம்மா அழுகை கலந்த குரலில், “பார்த்தீங்களாம்மா! அந்த உடைகள் வாங்கி நான்கு வருஷமாச்சு. ஒரே ஜோடிதான். தினமும் ராத்திரி தோய்த்து போட்டு விட்டு காலையில் போட்டுக் கொள்வான். எத்தனைமுறை அதன் கிழிசலை தைத்திருக்கிறேனோ பார்த்தாலே தெரியும்.”

“சித்தூ எங்கே?”

“போய் விட்டான். அவனுக்குக் கோபம். நான் என்ன செய்யட்டும்? குழந்தை வீட்டுக்கு வந்தால் ஒரு பிடி சோறு போட முடியாத தரித்திரம் வீட்டில்” என்றாள் மூக்கை சிந்தி போட்டுக் கொண்டே.

“என்ன? சித்தூ சாப்பிட வில்லையா?”

“இல்லை அம்மா. அரிசி இல்லை.”

“அடடா! ஜுரம் வந்து தேறிக் கொண்டு வருகிறான்.” மைதிலி சட்டென்று பேக்கைத் திறந்து பணத்தை எடுத்து அந்தம்மாளின் கையில் கொடுத்தாள். “உடனே மளிகை சாமான்களை வர வழையுங்கள்” என்றாள்.

அன்னம்மா கையிலிருந்த பணத்தைப் பார்த்தாள். அறுநூறு ரூபாய் இருந்தது. பொக்கைவாய் தெரிய சிரித்துக்கொண்டே, “உன்னை அந்தக் கடவுள் நன்றாக வைத்திருப்பான். வாம்மா உட்கார். நின்றுகொண்டு இருக்கிறாயே? கால்கள் வலிக்கும்” என்று ஜமக்காளத்தை விரித்தாள்.

பணத்தைக் காண்பித்துக் கொண்டே, “நீ கொடுத்தாய் சரிதான். பேரன் என்னைத் திட்டுவானோ என்னவோ?” என்றாள் பயந்தவள் போல்.

“ஒன்றும் சொல்ல மாட்டான். நான் பலவந்தமாக கொடுத்தேன் என்று சொல்லுங்கள். சித்தூவுக்கு சாப்பாட்டில் என்ன பிடிக்கும்?”

“பிடிக்குமாவது மண்ணாவது? சாம்பார், காய்கறி, சாதம் இருந்தால் அதுதான் எங்களுக்கு பண்டிகை. எப்போதாவது சாதத்தில் கொஞ்சம் பாலை ஊற்றி, சர்க்கரையை சேர்ந்து ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டு ஒரே ஒரு முந்திரிபருப்பு போட்டு பாயசம் பண்ணுவேன். அவனுக்கு அந்த பாயசம் ரொம்ப பிடிக்கும். சும்மா பெருமைக்கு சொல்லுவானேன்? எப்போதாவது தான் பாயசத்தை பண்ணுவேன். ஒரு நாள் பாயசம் செய்தால் அன்று தயிர் இருக்காது எங்களுக்கு.”

மைதிலி கீழ் உதட்டை அழுத்திக் கொண்டாள். “சித்தூ உங்களுடைய சொந்த பேரனா?”

“இல்லை அம்மா. என் தங்கையின் பேரன். அவளுடைய மகன் அரவிந்த் என்று ஆக்சிடெண்டில் இறந்து விட்டான்.”

“சித்தூவின் தாய்?”

“அவளும் போய் விட்டதாக சொன்னார்கள். எனக்கு அந்த விவரம் எல்லாம் தெரியாது. கடைசி நாட்களில் என் தங்கை ஆறுவயது பையனாக இருந்த பேரனை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்து சேர்ந்தாள். அவள் போன பிறகு நான்தான் வளர்த்து ஆளாக்கினேன். அவனுக்காகவே உழைத்தேன். ஆண் குழந்தை! பெரியவன் ஆனால் கடைசி நாட்களில் எனக்கு கஞ்சி ஊற்ற மாட்டானா என்ற ஆசைதான். அவன் என்னடாவென்றால் என் பேச்சையே கேட்க மாட்டேங்கிறான்.”

“சித்தூவை நீங்க படிக்க வைக்க வில்லையா?”

“படிப்பா! அவ்வளவு பணம் ஏது என்னிடம்? அவனாகவே கஷ்டப்பட்டு படித்து ப்ளஸ் டூ பாஸ் செய்தான். நான் தையல்மிஷின் வைத்திருந்தேன். தைப்பேன். சித்தூவுக்கு நன்றாக தைக்கத் தெரியும். பத்து வயது ஆகும் போதே அவன் கட்டிங் எல்லாம் கற்றுக் கொண்டு மிஷினில் தைக்க தொடங்கிவிட்டான். நான்கு வருடங்களுக்கு முன்னால் ஒரு சிந்திகாரியின் ரெடிமேட் கடையில் வேலை பார்த்து வந்தான். சம்பளமும் கணிசமாக கொடுத்து வந்தாள். அவன் கொண்டு வரும் சம்பளத்தில் தான் வீடு கழிந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் வேலை, இரவு நேரத்தில் படிப்பு. பரீட்சையில் முதல் மார்க் வாங்கி வந்தான். என்ன நடந்தது என்று தெரியாது. அந்தம்மாளிடம் வேலையை விட்டுவிட்டு வந்து விட்டான். என்ன நடந்தது என்று கேட்டால் சொல்லவும் மாட்டான். இந்த நான்கு வருடங்களாக நாங்கள் படாத கஷ்டம் இல்லை. தனக்கு என்று சொந்தமாக கடை வைக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். கடனுக்காக அலைந்தான். யாரும் கொடுக்கவில்லை. அங்கே இங்கே என்று வேலைக்கு போவான். நான்கு நாட்கள் போனதும் அவர்களுடன் ஒத்துவராமல் நின்று விடுவான். இதுதான் இப்போதைய நிலைமை. இவனுடைய கோபம் இவனை எங்கேயும் நிலைத்து நிற்க விடாது.”

மைதிலி பதுமையைப் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நான் கடைத்தெருவுக்கு போய் சாமான் வாங்கிட்டு வரணும். நீங்க இருக்கீங்களா? கிளம்புறீங்களா?” அன்னம்மா கேட்டுவிட்டாள்.

“நான் இருக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க” என்றாள் மைதிலி கூச்சம் எதுவும் இல்லாமல்.

அன்னம்மா திகைத்துப் போனாள். தயங்கிக் கொண்டே, “பரவாயில்லை. நான் அப்புறமாக போய்க் கொள்கிறேன். தெரு முனையில்தான் கடை இருக்கு” என்றாள்.

“போய்விட்டு வாங்க. சித்தூ வருவதற்குள் சாப்பாடு தயாராக இருக்க வேண்டாமா? ஏலக்காய், முந்திரியை மறக்காதீங்க. உங்க பாயசத்தை இன்று நானும் ருசி பார்க்கிறேன்” என்றாள்.

அன்னம்மா வேகமாக கிளம்பிப் போனாள்.

மைதிலி அறை முழுவதையும் சுற்றிப் பார்த்தாள். அந்த அறையில் சித்தூவின் பொருட்கள் கொஞ்சம்தான் இருந்தன. அவன் சின்ன வயது முதல் அனுபவித்து வந்த கஷ்டங்களை அன்னம்மாவின் மூலம் கேள்விப் பட்டபோது மைதிலியின் அடிமனதிலிருந்து துக்கம் பெருகி வந்தது.

அங்கே தன் வீட்டில் குழந்தைக்காக தவித்துக் கொண்டு, குழந்தைகள் பிறப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தங்களுடைய படுக்கை அறைக்கு பக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த அறையும், அதில் இருந்த வசதிகளும் நினைவுக்கு வந்தன. இந்த இருபது வருடங்களும் தனக்கும் சித்தார்த்தாவுக்கும் ஒரு சாபம். இனிமேல் சித்தூவை விட்டு ஒருநிமிடம் பிரிந்து இருக்க மாட்டாள் அவள். இருக்கவும் முடியாது அவளால்.

மைதிலி அவனுடைய பொருட்களை திரும்பவும் எடுத்து வைத்தாள். அவனுடைய படுக்கையை சரி செய்தாள். சித்தூ ஒரு கைக்குழந்தையை போல் அவளுக்கு அந்த படுக்கையில் காட்சி தந்து கொண்டிருந்தான்.

மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல் அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தைகள் வளர வளர இந்த உலகத்தை பார்க்கும் போது அவர்கள் அடையும் வியப்பும், சந்தோஷமும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கடந்த இருபது வருடங்களாக அந்த சந்தோஷத்தை தந்தையின் காரணமாக அவள் இழந்து விட்டிருக்கிறாள்.

பரவாயில்லை. நடந்து முடிந்த கதை வேண்டாம். அப்பாவை எதுவும் சொல்ல வேண்டாம். சித்தூ உயிருடன் இருக்கிறான். கடந்த காலம் தங்களுடையது இல்லாவிட்டாலும் இனி வரப் போகும் எதிர்காலம் தங்கள் இருவருடையது. இதை யாராலும் தடுக்க முடியாது. தாய்மை மாபெரும் சக்தியாக அவளுக்குள் உருவாகி கொண்டிருந்தது.

அன்னம்மா மளிகைச் சாமான்களை வாங்கிக் கொண்டு சீக்கிரமாகவே திரும்பி விட்டாள். “என்ன விலை விற்கிறது? வண்டியில் பணத்தைக் கொண்டு போய் கூடையில் சாமான்கள் வாங்கும் காலம் வந்து விட்டது” என்று வசைபாடிக் கொண்டே வந்தாள்.

அன்னம்மா சமையல் செய்யும்போது மைதிலி அறைவாசலில் கைகளை கட்டியபடி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஏலக்காயை உரித்துக் கொடுத்தாள். முந்திரியை இன்னும் கொஞ்சம் வறுபடணும் என்று வறுத்துக் கொடுத்து உதவி செய்தாள். சித்தூவைப் பற்றி அன்னம்மா சொல்லிக் கொண்டிருந்தபோது மைதிலி தன்னை மறந்தவளாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

Series Navigationமனோரமா ஆச்சிகவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *