மீண்டு(ம்) வருவேன்!

This entry is part 1 of 7 in the series 26 மே 2019

பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவி்யேற்கப் போகும் திரு.மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாய் மேற்கண்ட புகைப்படத்தை நானே தயாரித்து என் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளேன். அதைக் குறித்து ஒட்டியும் வெட்டியும் சில கருத்துகள் வந்தவண்ணமுள்ளன. அது நல்லதுதான்.
எந்த மதத்தினரையும் புண்படுத்துவது யாருடைய நோக்கமாகவும் இருக்கலாகாது. எந்தவொரு மதத்தின் நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றவர்களை அடக்கியாள முயலும்போது அதை எதிர்ப்பதும், கேள்வி கேட்பதும் அறிவுசால் விஷயமே. அதைக்கூட நிதானமாக, சம்பந்தப்பட்ட எல்லோரையும் உள்ளடக்கிய அளவில், நாகரீகமாகச் செய்ய முடியும்.
நாத்திகவாதத்தை அத்தனை அறிவுபூர்வமாக, தர்க்கரீதியாக கடவுள் மறுப்பை முன்வைத்திருக்கும் சிலரைப் படித்ததுண்டு. ஆனால், இங்கே அப்படி நடப்ப தில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஒரு சாராரை சிறுமைப்படுத்தினால் தான் மறு சாராருக்கு நியாயம் கிடைக்கும் என்று இருசாராருமே நினைக்கும் போக்கையே நிறைய நேரங்களில் காணமுடிகிறது.
ஒரு ஊரில் சிலர் பெண்களைப் பாலியல் வன்முறைக்காளாக்கினால் அந்த ஊரிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அனைவரையும் பழிசொல்லிக் கொச்சைப்படுத்துவதே இங்கே சிலரது வழக்கமான நடவடிக்கையாக இருக்கிறது. எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே.
இங்கே எத்தனை முடியுமோ அத்தனை கொச்சையாக இந்திய நாட்டின் பிரதமரைக் கேவலமாகப் பேசுவதே பகுத்தறிவு என்றவிதமான பார்வை பரவியிருப்பதும், பரப்பப்பட்டுவருவதும் வருத்தமளிக்கிறது. GO BACK MODI என்று ஒரு பிரதமரைச் சொல்வது நம் அறிவின்வழியான அதிகாரமாக நாம். முன்வைப்பதை என்னவென்று சொல்ல. இந்தியர்கள் எல்லோரும் இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் செல்ல லாம் என்பது தானே சுதந்திர நாட்டின் அடிப்படை. அதை நாட்டின் பெருவாரியான மக்களால் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரைத் தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று சொல்வதென்றால்…..
எதிர்ப்பைக் காட்ட இதுதான் வழியா? ஒரு மாநிலத்தை வேண்டுமென்றே புறக்கணித்து அங்கே தனக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவை போக்கிக்கொள்ள பதவி யிலிருக்கும் எந்தக் கட்சியாவது நினைக்குமா? தமிழ்நாடு புறக்கணிக் கப்படுகிறது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பவர்களில் தனித் தமிழ்நாடே தீர்வு என்று சொல்பவர்களும் கணிசமானோர். அதுதான் தீர்வா? தமிழகம் என்ற தனிநாட்டில் சேர, சோழ, பாண்டிய, குறுநில மன்னர்களுக்கிடையே மோதல்கள், போர்கள் நிகழ சாத்தியமில்லையா?
இத்தனை பெருவாரியான வெற்றியைப் பெற்றிருப்பவருக்கு இந்துக்கள் மட்டுமே, உயர்சாதியினர் மட்டுமே வாக்களித்தார்கள் என்று பேசுவது அபத்தம்; பொய் என்று பல ஆய்வலசல்கள், புள்ளிவிவரங்கள் தெளிவாக்கி யுள்ளன. ஃபேஸ்புக்கில் வலம்வந்துகொண்டிருக்கும் ஒருகாணொளியில் உத்திரப்பிரதேசத்தில் திரு.மோடியின் வெற்றியை இசுலாமியர்கள் அத்தனை உற்சாகத்துடன் கொண்டாடுவதைக் காணமுடிகிறது.
ஆனாலும் இங்கே ஒரு கட்சியின் ஊடகப்பேச்சாளராக ஊதியமும் பல்வேறு வசதி களும் பெற்றுவரும் படைப்பாளப் பெண்மணி இசுலாமியர்களை வசைபாடியவர்க ளுக்கே வெற்றி கிடைத்திருப்பதாகக் கூறுகிறார். நாலு அல்லது நாற்பது நல்ல கவிதைகள் எழுதி நானூறு நாடுகளுக்குச் சென்றுவருபவர் நாட்டின் பிரதமரான திரு. மோடி மடிக்கணினியில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கும் படத்தைப் பதிவேற்றி “ஐரோப்பா டூர் போகலாமா?” என்று திரு.மோடி யோசித்துக் கொண்டிருப்பதாய் பதிவிடுகிறார். ஆனால் தாம் ஆதரிக்கும் தலைவர்களுக்கும், அவர்களின் குடும்பத் தினருக்கும் பல நாடுகளில் குவிந்துகிடக்கும் சொத்துகள் குறித்து இத்தகை யோர் கவலைப்படுவதில்லை. கேட்டால் ஊழலை விட மதவாதமே மோசமானது என்று ஒரு கண்காணாத் துலாக்கோலில் இரண்டையும் அளந்துபார்த்ததாய் தீர்ப்பு சொல்கிறார்கள்.
ஊடகவியலாளராக உள்ள பெண்ணொருவர் திரு. மோடி அவருடைய தாயாரிட மிருந்து ஒரு மகனுக்கேயுரிய உரிமையோடு சிறு துண்டைப் பறித்து வாயைத் துடைத்துக்கொள்வதை திரு.மோடியின் அராஜக குணத்தை எடுத்துக்காட்டும் செயலாகப் பழிக்கிறார்.
இந்திய நாட்டில் (மட்டுமா) பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துவருவதை எதிர்க்கும்விதமாக, எடுத்துக்காட்டும் விதமாக திரு. மோடியின் ஆட்சிக்குப் பிறகுதான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதான உட்குறிப்பு தொக்கிநிற்க) ஒருவர் ‘வன்புணர்வு நாடு’ என்று தன் படைப்பிற்குப் பெயர் வைக்கிறார்.
திரு. மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்லை என்று பொய்யாக நிரூபிக்கும் முயற்சியில் ஓர் உயரறிவுசாலி ‘மோடியின் அப்பா யார்?’ என்று கேட்கிறார். இதில் உட்குறிப்பாய் இருக்கும் கொச்சை அர்த்தம் நமக்குத் தெரியாததல்ல.


’சாய்வாலா’ என்று திரு.மோடியைப் பழிப்பதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தினரைப் பழிக்கிறோம் என்றுகூட புரிந்துகொள்ள முடியாத அளவு திமிர்த்தனம் மூத்த காங்கிரஸ்காரரான மணிசங்கர் அய்யர் வார்த்தையில் தெறித்துவிழுந்தது.
அதைவிட ஒரு படி மேலே போய் திரு.ராகுல் ‘சோர், சோர், சோர்’ என்று கத்தித் தீர்த்தார். பக்கத்திலேயே ஊழல் கணவரை வைத்துக்கொண்டு பிரியங்கா வடேரா பா.ஜ.க ஆட்சியை மேடைகளில் இழிவாகப் பேசினார்.
இப்படி நிறைய சொல்லலாம். சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகள் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சி செய்யாததையெல்லாம் ஐந்தே வருடங்களில் செய்யவில்லையே, செய்யவில்லையே என்று திரு.மோடியையும் அவரு டைய அரசாங்கத்தையும் அதே காங்கிரஸ் கேள்விகேட்கும் விசித்திரத்தை அறிவுசாலிகள் பார்க்க மறுத்தாலும் பாமர மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.கவுக்கு மொழி ஒரு பிரச்சினை. அவர்களுடைய பல நல்ல திட்டங்களை மக்கள் தமிழக அரசின் திட்டங்களா கவே அறிந்திருக் கிறார்கள். சர்வ சிக்‌ஷா அப்யான் என்ற திட்டம் இங்கே ’அனைவருக்கும் கல்வி’ என்ற பெயரில் அறியப்படுவதை ஓர் உதாரணமாகக் காட்டலாம்.
முக்கியமாக, பா.ஜ.க வந்தாலே இங்கே நாளும் மதக்கலவரம் நடந்து ரத்த ஆறு ஓடும் என்பதாய் திரும்பத்திரும்ப (அதுவும் அறிவுசாலிகளாக அறியப்படுபவர்கள்) எந்தவித முகாந்திரமுமில்லாமல் கூறிவருவதன் விளைவாய் பாமரமக்கள் மனங் களில் ஒரு எதிர்ப்புணர்வும், அச்சவுணர்வும் ஏற்பட்டிருக்க வழியுண்டு.
குஜராத் கலவரத்தைச் சுட்டி திரு. மோடியை அரக்கனாகச் சித்தரிப்பவர்கள், 1984இல் நடந்த சீக்கியர்கள் மீதான தாக்குதலையோ, தி.மு.க – காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இடம்பெற்றிருந்த ஆட்சியின் சமயம் இலங்கையில் பெருந்திரளாகத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதையோ பேசத் தலைப்படுவதில்லை. (இலங்கையில் நடந்த போரில் இந்தியா நேரடியாகத் தலையிட்டிருந்தாலும் பழி; தலையிடாவிட்டாலும் பழி என்ற அணுகுமுறையை சிலர் எப்போதுமே கடைப்பிடித்துவருவதும் நடப்புண்மை).
தங்களுக்கு வெற்றி கிட்டுவது குறித்தும், கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது குறித்தும் கவலைப்படவேண்டியது பா.ஜ.க.. நான் அதன் கொ.ப.செ அல்ல.
ஆனாலும் ஒரு வாக்காளராக திரு.ராகுல் காந்தியைக் காட்டிலும், திரு. மம்தா பானர்ஜியைக் காட்டிலும், திரு.மாயாவதியைக் காட்டிலும் திரு. மோடி இந்தியாவின் பிரதமராவது மேல் என்று நம்பினேன்; நம்புகிறேன்.
ஒரு கட்சியும் அதன் ஆட்சியும் தவறே செய்யாது என்பதல்ல என் வாதம். ஆனால், இந்திய மக்களைப் பாழும் கிணற்றில் தள்ளுவதற்கென்றே அவதார மெடுத்துவந்தவர் திரு.மோடி என்று உருவேற்றப்பார்ப்பதில் உள்நோக்கம் இருக்கிறது. இன்னும் நிறைய எழுத முடியும். GO BACK MODI என்பதற்கு எதிர்நிலையில்தான் COME BACK – WELCOME BACK என்று எழுதினேன். வாழ்த்தும் போதுகூட ஒரு நாட்டின் பிரதமரை பெயரிட்டு ஒருமையில் அழைப்பது சரியில்லை என்று ‘SIR’ என்று எழுதினேன்.
நான் எழுதியது அதீதம் என்று கருத்துரைத்திருக்கிறார் சக கவி ஒருவர். தமிழகத்தில் பிரதமர் பூஜ்யம் என்று குறிப்பிட்டிருக்கிறார். பூஜ்யமோ, ஒற்றைப்படை எண்ணில் வெற்றிகளோ வாங்காத கட்சி என்று ஏதேனும் இருக்கிறதா என்ன?
அவர் தன்னுடைய டைம்-லைனில் ‘உழைத்து வந்தவன் நீ. தலைவன்’ என்பதாக திரு.ஸ்டாலினின் வெற்றியை வாழ்த்தி வரவேற்றிருக்கிறார். ”உழைத்து வந்ததோடு, கட்சியின் தலைவர் தந்தை என்ற பின்புலமும் அவருக்கு இருந்தது. திரு.மோடிக்கு அத்தகைய பின்புலம் எதுவும் கிடையாது. கடைக்கோடி தொண்டனாக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர்” என்று என்னால் அவருடைய பதிவின் ‘கமெண்ட்’ பகுதியில் எழுதியிருக்க முடியும். எழுதவில்லை. தான் நம்பும் ஒரு தலைவரின் வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடவும், வரவேற்கவும் எந்தவொரு வாக்காளருக் கும் உரிமையுண்டுதானே.
ஆனால், நான் திரு. மோடியை வரவேற்று ஒரு வாசகம் போட்டதும் அது அதீதமாகத் தெரிகிறது. இதில், பெண்ணுக்கு எங்கே அரசியல் புரியும் என்ற கண்ணோட்டமும், அதுவும் குறிப்பாக, திரு.மோடியின் வெற்றியை வாழ்த்தி வரவேற்கும் பெண்மணிக்கு அரசியலே தெரியாது என்றவிதமான திட்டவட்டமான தீர்மானமும் வெளிப்படுவ தாகவே தோன்றுகிறது!
இன்னொருவர் இத்தனை பெருந்திரளான மக்களால் விரும்பப்படுபவர் எப்படி கெட்டவ ராக இருக்கமுடியும் என்று நான் எண்ணுவதாக உள்ளடக்கிய எள்ளலோடு பதிவிட் டிருக்கிறார். அடுத்து அவர் ஹிட்லரை உதாரணங் காட்டக்கூடும். ஆனால், மக்களாட்சி நடக்கும் நாட்டில் எந்தவொரு ஆட்சியாளரும் ஹிட்லராகிவிட முடியாது என்று நான் நம்புகிறேன். இதே மக்களாட்சி நாட்டில் தானே ’எமர்ஜென்ஸி’ நிலை வந்தது என்ற உண்மையையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சரிதான். அப்படி யெனில், அதைக் கொண்டுவந்தவர்களின் வழித்தோன்றல்களையே நாட்டைக் காக்கவந்தவர்களாக அறிவுசாலிகள் திரும்பத் திரும்ப அறிவுறுத்திக் கொண்டிருப்பதும் ஆதரிப்பதும் ஏன்? என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகிறது.

Series Navigationஇந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *