முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்

This entry is part 39 of 39 in the series 18 டிசம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

ராயிடம் வாக்கு தந்துவிட்டதில் மனம் தன்னைப்போல எனது லண்டன் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. அந்த மதியம் பெரிசாய் வேலை ஒன்றுமில்லை. வீட்டுக்கார அம்மாளிடம் எதும் பேசிக்கொண்டிருக்கலாம் என்று கீழே வந்தேன். புனித லூக் மருத்துவப் பள்ளியின் காரியதரிசிதான் எனக்கு இந்த அம்மாளைப் பற்றிச் சொன்னது. அப்போது ஒரு முற்றாத நாற்று நான். பட்டணம் வந்தடைந்திருந்தேன். தங்க இடம்வேண்டும். வின்சென்ட் சதுக்கத்தில் அவளது வீடு வாய்த்தது. அங்கே ஒரு அஞ்சு வருஷம்போல இருந்தேன் நான்.

தரைத்தளத்தில் எனக்கு இரண்டு அறைகள். மேலே பெரிய கூடம். வெஸ்ட்மினிஸ்டர் பள்ளி வாத்தியார் ஒருத்தர் அங்கே இருந்தார். எனக்கு இந்த இரண்டு அறைக்கு வார வாடகை ஒரு பவுண்டு. அவர் 25 ஷில்லிங் தந்துவந்தார்.

திருமதி ஹட்சன் உற்சாகமான சுறுசுறுப்பான சிற்றுருவக்காரி. சப்பை முகம்.  கழுகாட்டம் கீழ்வளைந்த பெரிய மூக்கு. அந்தக் கண்கள்… கரிய துருதுருப்பான கண்கள். அடர்த்தியான கருமையான கூந்தல். மதியங்களிலும், ஞாயிறோவெனில் முழுமையாகவும் அதை கொண்டைபோட்டு, முன்நெற்றியில் ஒரு முக்காடு, பிடரியில் பன் சேர்த்துக் கட்டியிருப்பாள். அப்படி மோஸ்தரை ஜெர்சி லிலி பிடித்த பழைய புகைப்படங்களில் பார்க்கலாம்.

ரொம்ப தங்கமான மனுஷி அவள். (அப்போது எனக்கு அது தெரியாமல் போயிற்று. வயசு அப்படி. அந்த வயசில் யாராவது உங்களிடம் பிரியமாய் நடந்துகொண்டால், பெரியவர்கள் இளையவர்களிடம் அப்படித்தானே நடந்துகொள்வார்கள், என்று சாதாரணமாய்ப் படுகிற வயசு.) அவள் சமையல் அதி அற்புதம். அவளைப் போல ‘ஆம்லெட் சௌஃபில்’ போட லோகத்தில் ஆள் இல்லை. களைப்பாற்றிக் கொள்கிற அறைகளில் அதிகாலையே கண்ப்புகளை மூட்டி விடுவாள். காலை உணவு கொள்கையில் குளிரில் வெடவெடத்தபடி நாம் சாப்பிட வேண்டாம். (இப்பத்திய குளிரில் அவளை நினைக்க வேண்டியிருக்கிறது.)

அந்தக் காலை நாம் குளிக்கிற சத்தம் கேட்கவில்லை என்றால், அவளே புரிந்துகொள்வாள். அடுத்து ஒரு தகர வாளியில் நமது படுக்கைக்குக் கீழே இரவே தண்ணீர் பிடித்து வைத்துவிடுவாள். வெளியே ஆற வைத்த தண்ணீர் சில்லிப்பு அடங்கி, குளிக்கிற பதத்தில் இருக்கும்.

அவள் சொல்வாள் – ஏன் உணவுகொள்ளும் அறை இன்னும் காலியாய்க் கிடக்கிறது. இனனிக்கும் இவனுக்கு வகுப்புக்குத் தாமதமாகப் போகிறது… தடதடவென மாடியேறி வருவாள். கதவைத் தட்டுவாள். கீச்சுக்குரல். ஏய் இப்பவே எழுந்துக்கணும்டா. அப்பறம் சாப்பிட நேரமிருக்காது… உனக்காக விசேஷமா ‘குழிப்பணியாரம்’ பண்ணியிருக்கேன்!

நாள் முழுக்க எதாவது கைவேலையாய் இருப்பாள் அவள். வேலைசெய்கையில் எதும் பாடுகிற வழக்கமும் அவளுக்கு இருந்தது. எப்பவுமே உற்சாகமாய் மகிழ்ச்சியாய் வளையவந்தாள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் வயசு வித்தியாசம் ஜாஸ்தி.. பெரிய குடும்பங்களில் அவன் பரிசாரகனாக வேலை செய்திருக்கிறான். கன்னத்தில் நீள கிருதாக்கள். அமெரிக்கையாய் நடந்துகொள்வான். பக்கத்து தேவாலயத்தில் மணியடிக்கிற ஊழியம் தற்போது. எல்லாரிடமும் நல்ல பேர் அவனுக்கு. எப்பவும் இவளுடன் சாப்பாட்டு மேஜையில் உதவிகள் செய்வான். எங்கள் காலணிகளைத் துடைத்து வைப்பான். துணிமணிகளையும் துவைத்துத் தருவான்.

திருமதி ஹட்சனுக்கு எங்கள் ராத்திரி உணவு முடிந்தபின்தான் ஓய்வு. (நான் ஆறரை மணிக்குச் சாப்பிடுவேன். வாத்தியார் நேரம் ஏழு மணி.) வந்து ஆற அமர எங்களிடம் சில வார்த்தை பேசிக்கொண்டிருப்பாள். அமி திரிஃபீல்ட் எப்பிடி அவளது பிரபல கணவரைப் பேசவிட்டு கவனித்துக் கொண்டிருப்பாளோ, அதைப்போல இவள் பேச்சை நான் பொருட்படுத்திக் கேட்பேன். காக்னி பாணி (காக்னி – கிழக்குப் பகுதி லண்டன்வாசிகள் பேச்சு சமர்த்தர்கள்.) இடக்கு நகைச்சுவையில் அவள் மன்னி. மன்னனின் பெண்பால். எந்தப் பேச்சையும் மடக்கித் திருப்பி யடிப்பதில் மன்னி அவள். அதில் அவள் கொடியேத்தத் தவறியதே இல்லை. அதற்கான குரலெடுப்பும், வார்த்தையாடல்களும் எல்லாமே அவளிடம் கச்சிதம். எதைச் சொன்னாலும் அதன் பூச்சில் ஒரு புன்னகைக் கீற்று, கேக் மேல் வெண்ணெய் போல… சட்டென உவமையோ, சொலவடையோ எடுத்து விடுவதில் அவள் திண்டாடியதே கிடையாது.

அவளுக்கு ஒரு பிரத்யேகமான அசையாச் சொத்து இருந்தது. அவள் வேறு பெண்ணை வேலைக்கு என வீட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டாள். இன்னொரு பெண் எப்படி அங்கே புழங்குவாள் என்பது அவளுக்கு உறுதியில்லை போல. (அந்த விடுதியில் எப்பவுமே ஆண்கள்தான். மதியத் தேநீர் என்று கூடுவது… வெண்ணெய் தோய்த்த சோனி ரொட்டி…. கதவை விரியத்திறந்து, சுடு தண்ணி கிடைக்குமா, என்று குரல் கொடுப்பது… சேவல் பண்ணை இலக்கணங்கள்!)

அதே சமயம் பேச்சிடையே அவள் ‘நீலப் பை’ சமாச்சாரங்களை விரவிவிடத் தயங்கியதே இல்லை. (பொடிவைத்துப் பேசுவதை ‘நீலப் பை’ என்கிறதாகக் குறிப்பிடுவார்கள் என்று தோன்றுகிறது.) மேரி லாயிட் பத்தி அவள் சொன்னதை உதாரணங் காட்டலாம். ”அவள்ட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் என்னன்னால் நம்மை அவள் நல்லா சிரிப்பு காட்டுவாள். நல்லா உள்ளங்கை எலும்பு வரை கூட தீண்டி விடுவாள். ஆனால் வேலி தாண்டிப் போனதே இல்லை.’

தனது நகைச்சுவையை அவள் தானே ரசித்து மகிழ்ந்தாள். விடுதியாட்களுடன் அவள் ரொம்ப இஷ்டப்பட்டே பேச்சுக் கொடுத்ததாய்த் தெரிந்தது எனக்கு. காரணம் அவள் கணவன் ஒரு அழுத்தமான பேர்வழி. உம்மணாமூஞ்சி. (”அவரு அப்டிதான், விடுங்க. சர்ச்சில் வேலை. கல்யாணத்துக்கும் மணியடிக்கணும், கருமாதிக்கும் மணியடிக்கணும். ரெண்டுக்கும் வித்தியாசங் கிடையாதில்லே அவருக்கு?”) அந்தாளிடம் நகைச்சுவை எடுபடாது. ”அவராண்ட நான்சொல்லுவேன். ஹட்சன், சிரிக்க வேளை வந்தால் சிரிச்சிறணும். செத்து புதைச்சப்பறமா சிரிக்கப் போறீங்க?”

அவளது நகைச்சுவை அடுக்கடுக்காய் விரிவது. பதினாலாம் எண் இல்ல விடுதிக்காரி மிஸ் பட்சர். அவளுடன் ஹட்சன் போட்ட தெருச்சண்டைகளை அவள் சொன்னால் அத்தனை சிரிப்பு வரும். வருட வருடங்களாக நடந்து வரும் பெரியபுராணம் அது.

”கிழட்டுப் பூனை. எதுக்கும் ஒத்து வரமாட்டா அவ. நாம ஏணின்னா அவ நோணிம்பா. இன்னாலும் அவளை ஒருநாள் கடவுள் கூட்டிக்கிட்டான்னா எனக்கு வெறிச்னு ஆயிரும். அட அவளை மேல அழைச்சிட்டுப் போயி அவரு என்னபாடு படப்போறாரோ, அறியேன். ஆனால்… எனக்கு ரொம்ப சிரிப்பு காட்டியவள் அவள்தானே?”

அவள் பல்தான் ஏறுமாறா யிருந்தது. அதைப் பிடுங்கியெறிஞ்சிர்றதா, பொய்ப்பல் கட்டிக்கறதா, என்பது பற்றியே ரெண்டு மூணு வருஷம் விதவிதமாய் நாங்கள் பேசி மகிழ்ந்தோம்.

”இதைபத்தி எங்க வீட்டு ஆம்பளைகிட்ட நேத்து ராத்திரி பேசினேனா… அவரு சொல்றாரு. பேசாமல் தூக்கியெறிடி பிடுங்கி. ஆச்சி காரியம்ன்றாரு. எப்பிடியாவது என் பேச்சை முடிச்சி என் வாயை மூடிறணும் அவருக்கு.”

இப்பசத்திக்கு ரெண்டு மூணு வருஷமா அவளை நான் சந்திக்கவேயில்லை. கடைசியாய் ஒரு சிறு குறிப்பு அனுப்பியிருந்தாள். வா வில்லி, வந்து என்னோட ஒரு காட்டமான தேநீர் சாப்டுட்டுப் போலாமே. அத்தோடு தகவலும் சொன்னாள். ஹட்சன் மூணு மாசம் முன்னால், 79 கடந்த மறு சனியன்று இறந்துவிட்டார். ஜார்ஜும் ஹெஸ்டரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்!

அவளுக்கும் ஹட்சனுக்கும் கல்யாணம் முடிச்சதின் சாட்சி ஜார்ஜ். இப்போது நடுத்தர வயசை அடைகிறான் அவன். உல்விச் ஆர்சனல் அவன் வேலை செய்யும் இடம். (ஆயுதத் தொழிற்சாலை.) ஒரு 20 வருஷமாய் அவன் அம்மா, ”பாரு திடுதிப்னு யாரையாவது இழுத்துட்டு வந்து, என் பெண்டாட்டின்னு நிக்கப் போறான்,” என்றே சொல்லி வந்தாள்.

வேலை உதவியாள் ஹெஸ்டர் இன்னவேலை என்றில்லாமல் எல்லா வேலையும் செய்யத் தெரிந்தவள். நான் திருமதி ஹட்சனின் இல்லத்தில் தங்கியிருந்த கடைசி சமயத்தில் அவள் கூடமாட சுத்துவட்ட வேலைகள் என்று வந்து சேர்ந்தாள். இப்பவும் அவளை திருமதி ஹட்சன், என்னாட இம்சை அது – என்றுதான் குறிப்பிடுவாள்.

நான் அந்த இல்லத்துக்கு வந்தபோது திருமதி ஹட்சனுக்கு வயது 30க்கு மேலிருக்கும். அது ஒரு 35 வருஷம் முன்னாடி நடந்த விஷயம். இப்போது இந்த கிரின் பார்க்கில் உலவிக்கொண்டிருக்கிறபோது கூட அவள் உயிரோடிருப்பாள் என்றே தோன்றியது. எனது இளமைப் பருவத்தின் நினைவுக் குளத்தில் தூரப்பரப்பில் நிற்கும் நாரையாய் திருமதி ஹட்சன் கட்டாயம் இருந்தாள்.

நடைவழிப் படிகள் ஏறுகிறேன். ஹெஸ்டர் வந்து கதவைத் திறக்கிறாள். இப்ப அவளுக்கு வயசு 50. சதை போட்டிருக்கிறாள். இன்னுங் கூட அந்த முகத்தில் பொறுப்பற்ற அசட்டுக் களை. கீழ்த்தளத்தின் முன்னறைக்கு நான் வந்தபோது திருமதி ஹட்சன், ஜார்ஜின் காலுறைகளைத் தைத்துக்கொண்டிருந்தாள். கண்ணாடியைக் கழற்றிவிட்டு என்னைப் பார்த்தாள்.

”ஆஹா, இது ஆஷந்தன் தானே? நீ வருவேன்னு யார் எதிர்பார்க்க முடியும்? தண்ணி கொதிக்குதா ஹெஸ்டர், எப்பா, நீ ஒரு நல்ல தேநீர் சாப்பிடலாம்தானே?”

முதன்முதலாய நான் அவளை அறிந்தபோது பார்த்ததற்கு இப்ப உடல் கனத்திருந்தாள். கொஞ்சம் சிரமத்துடன் தாங்கித் தாங்கி நடந்தாள். ஆனால் தலையில் ஒரு நரையில்லை. பொத்தான்களைப்போல பளபளப்பான கண்கள். குறும்பு கொப்பளித்தன அவற்றில். இளஞ்சிவப்புத் தோலால் மூடிய சிறு கைவைத்த நாற்காலியில் நான் உட்கார்ந்துகொண்டேன்.

”எப்பிடி எல்லாம் போயிட்டிருக்கு திருமதி ஹட்சன்?” என்று கேட்டேன்.

”குறைப்பட ஒண்ணுமில்லை. என்ன அப்பப்போல இளமை இல்லை ஓடியாட” என்றாள் அவள். ”நீ இங்க இருந்தப்ப பம்பரமா எத்தனை வேலை செய்வேன், இப்ப அத்தனை வேகம் முடியல்ல. அத்தனை காரியமும் எடுத்துக்கூட்டி முடியல்ல… இப்பல்லாம் ராத்திரி உணவு குடுக்க முடியாமல் விட்டுட்டேன். காலைச் சிற்றுண்டி மாத்திரம் தர்றேன்…”

”எல்லா அறைலயும் வாடகைக்கு ஆள் இருக்காங்கள்லியா?”

”ஆமாமா, அதுக்கு நான் நன்றி சொல்லணும் அப்பா.”

விலைவாசி ஏறிப்போய், இப்போது அவள் வாடகையை உயர்த்தியிருந்தாள். ஓரளவு இப்ப கௌரவமாகவும், வசதியாகவும் தான் இருக்கிறதாகப் பட்டது. ஆனால் இப்போது ஜனங்களுக்கு எத்தனை சௌகர்யம் வந்தாலும் பத்தவில்லை.

”நீ நம்பக்கூட மாட்டே அப்பா. வர்றவங்க, அறையோடவே குளியல் அறையும் சேர்த்துக் கேட்கறாங்க. அடுத்து மின்சார விளக்கு இருந்தால் நல்லதுன்னாங்க. அதோடவும் திருப்தி இல்லை. விடுதிக்கு தனி தொலைபேசி இருக்கணும்னு எதிர்பார்க்கறாங்க. அடுத்தது என்ன கேட்கப்போறாங்களோ, என்னால யோசிக்க முடியல்ல…”

”திருமதி ஹட்சன் இதையெல்லாம் ஏறக்கட்டிட்டு பேசாமல் ஓய்வெடுத்துக்கலாம், அவங்களுக்கு வயசாயிட்டதுன்னு அபிப்ராயப்படாறார் திரு ஜார்ஜ்….” தேநீரை ஊற்றியபடியே ஹெஸ்டர் பேசினாள்.

”நீ உன் சோலியை மாத்திரம் பாரடியம்மா, புண்ணியவதி.” திருமதி ஹட்சன் வெடுக்கென்று சொன்னாள். ”நான் ஓய்வு பெற்றால் நேரே கல்லறையில்தான் அது இருக்கும். எல்லாத்தையும் தலைமுழுகிட்டு, இந்த ஜார்ஜ், கூட ஹெஸ்டர் இதுங்களோட மல்லாடிக்கிட்டு, பேச ஆளில்லாமல் அல்லாடிக்கிட்டு… என்னால முடியாது.”

”திரு ஜார்ஜ் என்ன சொல்றாரு, கிராமத்தில் சின்னதாய் ஒரு வீடு எடுத்துக்கிட்டு அவபாட்டுக்கு விச்ராந்தியா இருக்கலாங்கறாரு…” ஹெஸ்டர் திட்டு வாங்கிய பாதிப்பே இல்லாமல் தொடர்ந்து பேசினாள்.

”கிராமம் கீமம்னு என்கிட்ட பேசாதே. போன கோடையிலேயே மருத்துவர் ஒரு ஆறு மாசம் போல கிராமப்புறமா போயிட்டு வரச்சொன்னார். அந்த யோசனையே என்னைக் கொன்னாப்போல இருந்தது, சத்தியமாச் சொல்றேன். கிராமத்து சப்தங்கள்… எதாவது பறவை எப்ப பார்த்தாலும் அலறும். சேவல்கள் கொக்கரக்கோஓஓஓ…ன்னு குரல் எடுக்கும். பசுக்களின் ம்ம்ஆஆஆ… எனக்கு தாக்குப் பிடிக்க இயலாது. இங்க எனக்கு ஒரு சத்தம் வெளிச் சத்தம் கிடையாது. அங்கபோனா ஓயாத சத்தம் சர்ர் சர்ர்னு காதில் குடாயும். நமக்கு லாயக் படாது கிராமம்.”

இன்னும் பத்திருபது வீடு தாண்டினால் வாக்ஸால் பாலச் சாலை. அதன் கீழே எப்பவுமே ரயில் சத்தம். ரயில் மணியோசை. பஸ் இரைச்சல் வேறு. போதாக்குறைக்கு டாக்சிகள் ஹார்ன் அடித்தபடி பறக்கும். இதையெல்லாம் ஹட்சன் பழகிவிட்டாள். அது லண்டனின் அடையாளம். இந்த சத்தங்கள் அவளுக்கு இதமாய் இருந்தன. குழந்தை அழுகையை ஆசுவாசப்படுத்துகிற அம்மாவின் இதம் இதில் அவளுக்குக் கிடைத்தது.

அதுவரை அவள் வாழ்ந்த இந்த இல்லம்… இடுக்கு முடுக்கான சிறிய இல்லம் தான். இதில் அவள் சந்தோஷமாய்த்தான் கழித்திருக்கிறாள். இவளுக்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். எனக்குத் தெரியும், அவளிடம் ஒரு பாட்டுப்பெட்டி, கிராமஃபோன் இருந்தது. அவளிடம் வசதி என்றால் இது ஒண்ணுதான்…

”திருமதி ஹட்சன், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று நான் கேட்டேன்.

என்னையே உற்றுப் பார்த்தாள் அவள்.

”இப்ப நீ வந்து, இப்பிடிக் கேட்கற வரை, எனக்கு என்ன வேணும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. நீ கேட்டதே போதும் அப்பா. நீ வந்து பார்த்ததே போதும், இன்னும் 20 வருஷம் நான் உற்சாகமாய் ஓடியாடுவேன்.”

சட்டென உணர்ச்சி வசப்பட்டு விடமாட்டேன் நான். நான் எதிர்பாராத அவளது அந்த பதில், அதுதான் திருமதி ஹட்ச.ன… சட்டென எனக்கு தொண்டை அடைத்தது.

நான் கிளம்பும் வேளையில், அவளிடம் ஐந்தாண்டுகள் நான் தங்கியிருந்த அறைகளை ஒருதரம் பார்க்கலாமா என்று கேட்டேன்.

”ஏ ஹெஸ்டர் மாடிக்குப் போயி திரு கிரகாம் இருக்காரான்னு பார். அவர் இல்லாட்டி நீ தாராளமா போயிப் பார்க்கலாம், அவர் ஒண்ணுஞ் சொல்ல மாட்டார்.”

விறுவிறுவென்று மேலேறிப்போய்ப் பார்த்துவிட்டு ஹெஸ்டர் மூச்சிறைக்க வந்து, திரு கிரகாம் இல்லை என்று தெரிவித்தாள். திருமதி ஹட்சன் என்னோடு கூட வந்தாள்.

அதே குறுகலான இரும்புக் கட்டில். அதில்தான் நான் படுத்துறங்கினேன். கனவுகள் கண்டேன். அதே அலமாரிகள். துவைத்துக் காயப்போடுகிற கொடிகள். ஆனால் கூடம் இன்னும் இதந் தருவதாய், ஒரு விளையாட்டு வீரன் இருக்கிற சாயல் கொண்டிருந்தது. சுவரில் கிரிக்கெட் பதினொருவர் குழுப் புகைப்படம். துடுப்பு வலித்தபடி அரை டவுசர் வீரர்கள். மூலையில் கோல்ஃப் மட்டைகள். புகையிலை ஜாடிகள், புகைக்குழாய்கள். எல்லாவற்றிலும் கல்லூரி மாணவனின் கைவண்ணம். மேலே புகைபோக்கியில் கண்டபடி ஒட்டி வைக்கப்பட்டிருந்தன.

எங்கள் காலத்தில் கலை கலைக்காகவே என்பதை நாங்கள் நம்பினோம். புகைபோக்கிப் பகுதியை நாங்கள் ஒரு மூரிஷ் கம்பளியால் மூடி, (மூரிஷ் – ஸ்பெயினின் ஒரு கட்டட அலங்கார வகை.) படங்கள் வரைந்த திரை இட்டு மறைத்தோம். ஒருவித பச்சை வண்ணப் படுதா அது. சுவர்களில் பெருஜினோ, வான் டைக், ஹோபேமாவின் ஓவிய வகைகள் மாட்டிவைத்தோம்… இப்ப என்னவென்றால் அறையே காமாசோமாவென்று கிடக்கிறது…

”நீ நல்ல நல்ல படங்களா அப்ப வெச்சிருந்தே, இல்லியா?” திருமதி ஹட்சன் சொன்னாலும், இப்பத்திய படங்கள் பத்தி அவள் குறைப்பட்டதாகத் தெரியவில்லை.

”ரொம்ப…” என வருத்தமாய் நான் முனகினேன்.

அந்த அறைக்கு வந்தபின்னான அத்தனை வருடங்களையும் சரசரவென்று மனசில் ஊடாடிக் கடந்தேன். என்னவெல்லாம் நிகழ்ந்து கழிந்தன… இதே மேசையில்தான் எனக்குப் பிடித்த காலைச் சிற்றுண்டி அருந்தினேன். மிச்சம் வைக்காமல் ராத்திரி உணவைச் சாப்பிட்டேன். எனது மருத்துவப் புத்தகங்களை இங்கே அமர்ந்துதானே வாசித்தேன். ஆ என் முதல் நாவல் இங்கேதான் எழுதப்பட்டது. இதே கைநாற்காலியில் அமர்ந்தபடிதான் முதன் முதலாக வேட்ஸ்வொர்த்தை, ஸ்டெந்தாலை, ராணி எலிசபத் காலகட்ட நாடகாசிரியர்களை யெல்லாம் வாசித்தேன். ருஷ்ய நாவலாசிரியர்கள். ஜிப்பன். போஸ்வெல். வால்டேர். மற்றும், ரூசோ. எனக்குப்பிறகு இந்தப் புத்தகங்களை யாராவது சீந்தினார்களா அறியேன்.

மருத்துவ மாணவர்கள், வரவுசெலவு குமாஸ்தாக்கள்… என இளைய பட்டாளம் நகரத்துள் ஊடுருவ, மூத்தோரெல்லாரும் இல்லங்களைக் காலிசெய்து வெளியேறினார்கள். பழைய இல்லங்கள், பரிச்சய இடங்களையெல்லாம் தொலைத்து புது உலகத்திற்குள் அவர்கள் தூக்கிவீசப் படுகிறார்கள். திருமதி ஹட்சன் சொல்வதைப் போல இந்த அறை எனக்கு மடிதந்தது சாய. அதனால் வெளியுலகில் திரியும்போது எனக்கு உற்சாகமும் துள்ளலும் இருந்தது. எனது நம்பிக்கைகள் வெளியே கிளைபிரித்து வளர்ந்தோங்கிச் செழித்தன

.எதிர்காலம் பிரகாசமாய் மனதில் தட்டிய கணங்கள். இளமையின் திகுதிகு பரபரப்பு. அடாடா, என்கிற உள்வாங்கல்கள். பிரமைகள். அதில் இருந்து மீட்சிகள். மனத்தாங்கல்கள். ஆஹாக்கள்…. எத்தனை உணர்ச்சிகளின் கேந்திரம் அந்த அறை எனக்கு. எத்தனையோ பேருக்கு. மனிதச் சலனங்களின் ஒட்டுமொத்தக் குவியல் கூடம் அதுவெனப் பட்டது அப்போது. அந்த அறைக்கே தனி அடையாளமும் உயிரும் வந்தாப்போலக்கூட விநோத உணர்வு என்னைச் சூழ்ந்தது.

ஏனென்று சொல்லத் தெரியவில்லை – அப்போது என் மனதில் ஒரு காட்சி… ஒரு நாற்சந்தியில் பெண் ஒருத்தி உதடில் கைவைத்து நினைவுகளை அசைபோட்டபடி அயர்ந்து நிற்கிறாள். உணர்ச்சிவசப்பட்ட அவள் கரங்கள் காற்றில் அலைப்புறுகின்றன.

கலங்கலாய்த் தெரியும் அந்தக் காட்சி, இதைச் சொல்ல கூச்சமாயும் இருக்கிறது… என் மனதைப் படித்த பாவனையில் சிறு சிரிப்பு ஒன்றை திருமதி ஹட்சன் சிந்தினாள். அந்த மூக்கை அப்போது விநோதமாய் என்னைப் பார்த்து ஒருமாதிரி கொனஷ்டை பண்ணவும் செய்தாள்.

”அடாடா, சனங்கள் ரொம்ப வேடிக்கையான ஆட்களா இருக்காங்கப்பா…” என்றாள் அவள். ”இங்க வந்து தங்கின நபர்களையெல்லாம் நான் நினைச்சிப் பார்க்கிறபோது… அட நான் சொல்றதை நம்பினா நம்பு, அந்த மத்தாட்களைப் பத்தியெல்லாம் உன்னாண்ட சொல்லிர்கேனான்னு தெரியல்ல… ஒராளுக்கு அடுத்தாள் இன்னொரு படி வேடிக்கையாய் இருக்காங்க. சிலவேளையில் படுக்கையில் சாய்ஞ்சிகிட்டே அவர்களையெல்லாம் நினைச்சிப் பார்க்கறேன். நானே சிரிச்சிக்குவேன். சிரிக்கத் தெரியலையின்னா இந்த உலகம் கடுப்படிச்சிரும் அப்பா. ஆனால் விடுதிவாசிங்க ஆத்ல ஒரு கால் சேத்ல ஒரு கால்னு வாழறவங்க… எல்லாத்தையும் மனசில இருந்து உதறிட்டு சிரிச்சிப் பொழுதைக் கழிக்கணும்னால் அவங்களுக்குச் சிரிக்கத் தெரிஞ்சிருக்கணும்.”

தொடரும்

storysankar@gmail.com

 

Series Navigationகதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2ஏனென்று தெரிய வில்லை
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *