முள்வெளி அத்தியாயம் -14

This entry is part 11 of 43 in the series 24 ஜூன் 2012

தூண்டில் என்று சிறுகதைக்குத் தலைப்பிருந்தது.

காலை மணி பதினொன்று. கணக்குக் கேள்வித்தாளைக் கையில் வாங்கியவுடன் மிகப் பெரிய விடுதலை உணர்வு. நூறுக்கு நூறு வாங்கி விடலாம். இரவு முழுவதும் தூங்காமலிருந்ததில் பற்றி எரியும் கண்களையும், பித்தக் கசப்பு தட்டிய நாக்கையும் மீறி மனதில் சிறு நிம்மதி பரவியது. பொறுமையாக, கவனமாக எல்லாக் கேள்விகளுக்கும் விடை எழுதி விட வேண்டும். ஹால் டிக்கெட்டோடு கொண்டு வந்திருந்த பழனி முருகன் படத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். இரண்டு பென்சில்கள், அவை இரண்டையும் அம்மா கவனமாகக் கூர்மையாக்கித் தந்திருந்தாள். இரண்டு பேனா, இரண்டு அழிப்பான், அக்கா வாங்கித் தந்த ‘சயன்டிஃபிக் கேல்குலேட்டர்’ அனைத்தும் அவன் விரைவுக்கு அவன் இழுத்த இழுப்புக்கு ஒத்துழைத்தன. எல்லாக் கேள்விகளையும் முடித்து சந்தேகமானவை என்று பின் ஒதுக்கிய இரண்டு கேள்விகளையும் முடித்த போது, விடைகளை சரி பார்க்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்தது. ‘டை அப் யுவர் பேப்பர்ஸ்’ ஆசிரியர் துரிதப்படுத்தினார்.

“நெள இட்ஸ் ஒன் ஓ க்ளாக்.. ஸ்டாப் ரைட்டிங்.” விடைத்தாளை ஆசிரியர் கையில் கொடுத்த பின்பும் கை நடுங்கிக் கொண்டிருந்தது. “ஹால் டிக்கெட்”டை கவனமாக எடுத்துக் கொண்டான். பரிட்சைக்கென்று கொண்டு வரும் சிறிய தோள் பையில் அரை லிட்டர் ‘வாட்டர் பாட்டில்’, கேள்வித்தாள், கேல்குலேட்டர், ஹால் டிக்கெட் அனைத்தையும் திணித்தான்.

வெளியே நல்ல மழை. மார்ச் மாதம் மழை பெய்கிறது! எப்படியோ ‘மேத்ஸ் பேப்பர்’ இந்த அளவு கை கொடுத்தது பெரிய விஷயம்.

வகுப்புக்கு வெளியே மாணவர்களும், மாணவிகளும் தனித்தனியாகக் குழுமியிருந்தார்கள். யாருமே குடை கொண்டு வந்திருக்கவில்லை. அப்பா ஸ்கூட்டரில் கொண்டு வந்து விட்டுப் போகும் போது வானம் தெளிவாக இருந்தது. அப்பா அனேகமாக ஒரு குடையோடு ஆட்டோவை ‘வெயிட்டிங்’கில் போட்டு விட்டு அவனைத் தேடி வந்து விடுவார்.

‘ஹால் டிக்கெட்’ எண் வரிசை பெயரின் அடிப்படையில் அமைந்ததால் மற்ற ‘செக்ஷன்’ மாணவர்களுடன் கலந்து உட்காருவது மிகவும் வசதி. இல்லையென்றால் முரளி மாதிரி ஆட்கள் அடுத்தவன் எழுதி வந்த விடைகளை விமர்சித்து அவன் மனதைக் குழப்பி அடுத்த பரிட்சைக்கு நிம்மதியாகப் படிக்க இயலாத படி செய்து விடுவார்கள்.

**__
**__**
** அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வரவேற்பரையில் காத்திருக்கும் போது அன்று கணக்குப் பரிட்சையோடு கிடைத்த மன நிம்மதி மறுபடி கிடைக்கவேயில்லை என்று தோன்றியது. என்ஜினீயரிங் படித்த போதும், முதன் முதலில் ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் போதும் மனது அமைதியுறவில்லைதான். இன்றைக்கு சகுனம் பார்த்து சௌந்தர்யா வழி அனுப்பி வைத்த போது “ஸக்ஸஸ்” ஆன உடனே எனக்கு மொபைல்ல கூப்பிட்டுச் சொல்லுங்க” என்று சற்று தாமதித்துத் தன் அலுவலகத்துக்குக் கிளம்பினாள்.

இணைய தளத்தில் இந்த நிறுவனம் கொடுத்த விளம்பரம் தனது போட்டி நிறுவனங்களில் அனுபவமும் துடிப்பும் உள்ள இளம் மூளைகளுக்குத் தூண்டில் போடத் தான்.

இது போன்ற தூண்டில்களைக் கண்டுகொள்ளாமல் அவன் புறக்கணித்துத் தான் வந்தான். சௌந்தர்யாவின் அண்ணன் “யூ எஸ்”ஸிலிருந்து வந்த போது அவன் மனதைக் கலைத்து விட்டான்.கொஞ்சம் முயன்றால் சுரேஷ் பள்ளிக்குப் போக ஆரம்பிக்கும் முன்பே “யூஎஸ்” ஸில் ‘செட்டில்’ ஆகி விடலாம் என்கிற ஆசை சௌந்தர்யா மனதில் வேரூன்றி நிற்கிறது. நமக்குப் பிரியமானவர்களுக்குப் போடப் படும் தூண்டில்களுக்கும் நாம் தயாராயிருக்க வேண்டும். விசித்திரமான தூண்டில்கள், கிணற்றிலிருந்து குளத்துக்கு, குளத்திலிருந்து நதிக்கு, மறுபடி இன்னொரு கிணற்றிற்கு அல்லது கடலுக்கோ கூட இடம் மாற்ற வாக்குறுதி தரும் தூண்டில்கள். தூண்டில்கள் வேண்டாம் என்று ஒதுங்கினால் பிற மீன்கள் தூற்றி விடும். பெண் மீன் நிராகரித்து விட்டால்? அதை விடத் தூண்டிலில் தொங்குவதே மேலானது.

‘கன்கிராஜுலேஷன்ஸ்” மொபைலில் அவள் குரல் உற்சாகத்தில் துள்ளியது. ஆனால் அவனுள் புதிய நிர்வாகம் உடனடியாகப் பணியைக் கொடுத்து “பாஸ்போர்ட்” விவரம் கேட்டறிந்து சிங்கப்பூர் போக வேண்டும் என்றதும் எதிரே இருக்கும் பாதை இன்னும் சில வருடங்களுக்குத் தன்னைப் புரட்டிப் போடும் என்று புரிந்தது.

தன் வயதுக்குப் பொருத்தமில்லாத அலுப்பு இது. வீடாய், நகையாய், ரொக்கமாய், பங்குகளாய்க் குவிக்க வேண்டிய நேரந்தான் இது. அவன் திருவான்மியூருக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு மாறலாம் என்ற போதே “நாங்க இந்தத் தனி வீட்டில இருக்கிற சௌகரியத்தை இழக்க விரும்பவில்லை” என்று சொல்லி விட்டார் அப்பா. மறைமலை நகரிலிருந்து வந்து போவது சௌந்தர்யாவுக்கு மிகவும் சிரமாமியிருந்தது.

சிங்கப்பூரில் ஏற்கனவே இருக்கும் பழைய நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிக்க வேண்டும். யார் யாரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று பட்டியலிட வேண்டும். சௌந்தர்யாவுடன் வந்து இருக்க அப்பா அம்மா சம்மதிக்க வேண்டும். இந்தப் பட்டியல்கள் மனத்தின் சோர்வை அதிகரிக்கவே செய்தன. பழைய அலுவலகத்தில் ‘பர்மிஷன்’ சொல்லி இருந்தான். தொலைபேசியில் லீவுக்கு சொல்லி விட்டான். கிண்டி ஸ்டேஷனில் மறைமலை நகருக்கு ‘டிக்கெட்’ வாங்கும் போது மாலைக்குள் சௌந்தர்யாவின் சந்தோஷத்தைக் கெடுத்து விடாத அளவு மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

**__
**__**
** கதையை லதா தொடர்ந்து படிக்கும் முன் ‘ப்ரொடக்ஷன் மேனேஜர்’ தொலை பேசியில் அழைத்தார். “சொல்லுங்க ஜெயக்குமார்”

“மேடம் அந்த ரைட்டர் ராஜேந்திரன் ஊருக்கு ஆளை அனுப்பியிருந்தோம். அவங்க மதர் காலமாயிட்டாங்க”

“ராஜேந்திரனைப் பாத்தாரா நீங்க அனுப்பின ஆளு?”

“இல்ல மேடம். ராஜேந்திரன் இப்போ அந்த ஊரிலே இல்ல”

“தென்?”

“அவரைச் சென்னைக்கிக் கூட்டிக் கிட்டுப் போயிட்டாங்களாம்”

“அழைச்சிக்கிட்டுப் போனது யாரு? அவரோட ஒயிஃபா?”

“இல்லே மேடம். அவரோட ஒயிஃப் யூ ஏஸ் போயிருக்காங்களாம். அவரோட அண்ணன் தான் சென்னையில ஒரு ஆஸ்பத்திரியிலே சேத்துட்டாராம்”

“எந்த ஹாஸ்பிடல்?”

“மென்டல் ஆஸ்பிடல்னாங்க. எதுன்னு தெரியல”

“விசாரிச்சி எந்த ஹாஸ்பிடலின்னு கண்டு பிடிங்க”

“யெஸ் மேடம்”

“அம்பா நீ இறங்காயெனிற் புகலேது…” இந்தப் பாட்டு சீடி கிடைச்சா வாங்கி வைங்க”

“யெஸ் மேடம்”
**__
**__**
** வெளியிலிருந்து பார்ப்பதற்கு அந்த வளாகம் ஒரு பள்ளிக் கூடம் போன்ற தோற்றம் கொண்டிருந்தது. முன்புறம் பாதி சிமென்ட் தரையாகவும், பாதி புற்கள் நிறைந்த மைதானமாகவும் ஒரு ஆயிரம் சதுர அடி திறந்த வெளியாக இருந்தது. தரைத் தளத்தில் ஒரு பெரிய ஹாலும், டாக்டர்கள் பரிசோதிக்கும் மூன்று அறைகளும், ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுக்கும் ஒரு பெரிய அறையும், இதைத் தவிர நோயாளிகள் தற்காலிகமாக அடைக்கப்படும் பத்து அறைகளும் இருந்தன. இதை விட அதிக எண்ணிக்கையில் முதல் மாடியிலும், இரண்டாவது மாடியிலும் நிறைய அறைகள் நோயாளிகளுக்கென இருந்தன. நோயாளிகளின் அறைகள் எல்லாவற்றிலும் மரக் கதவுகளுக்குப் பதில் இரும்பாலான ‘கிரில்’ கதவுகள் மட்டுமே இருந்தன.

மருத்துவர்கள் வரும் போது சீருடை அணிந்த ‘வார்டு பாய்’கள் நோயாளிகளை பலவந்தமாகவோ அல்லது நல்ல விதமாகவோ அழைத்து வருவார்கள். மிகவும் வன்முறையாக நடந்து கொள்ளும் நோயாளிகளைக் கயிறு போட்டுக் கட்டி இருப்பார்கள். பல முறை ‘எலெக்ட்ரிக் ஷாக்’ பெற்ற பின் வன்முறை குறைந்தவராக மாறி விடுவார்.

ராஜேந்திரன் இருந்த அறையில் ஒரு இரும்புக் கட்டிலும் படுக்கையும் தண்ணீர் பாட்டிலும் மட்டுமே இருந்தன. மற்ற நோயாளிகளை ஒப்பிடும் போது ஒரே வித்தியாசம் அவனுக்கு ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுக்கப் படவில்லை. வாரம் ஒரு முறை வரும் டாக்டர் அவனுக்கு இது தேவையில்லை என்று சொல்லியிருந்தார்.

ராஜேந்திரன் க்ரில் கேட்டுகளின் கம்பி வழியே மரங்களும் மரங்கள் மறைக்காத வானத்தையும் பார்த்தான். சிறு வெண் மேகங்கள் அலையாது நின்றிருந்தன. வாகனங்களின் இரைச்சல் விட்டு விட்டு க் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து கால் வலி எடுத்ததும் கட்டிலில் அமர்ந்து காற்றிலேயே விரல்களால் எழுதினான்.

மதுரை வீரன் பெரியண்ணன்
காத்தவராயனைக் கும்பிடு

வாள்வீச்சு பழக நாளாகும்
ஆனால்
வாள் எப்போதும் உடையோடு
ஒட்டிய உறையும் இருக்க
வேண்டும்
ஆண்மகனுக்கு

பளிச்சிட வேண்டும்
கூர்மை இம்மியும் பிசகாததாய்
ஒருமுறையேனும் சுழற்றியே
பின் உறையுள்
இட வேண்டும்
நித்தமும்

உறையுடன் வாள்
தலையணை அருகே
இருக்க வேண்டும்

நடு நிசியை
இரு துண்டாக்க
வீசத் தேவைப்படும்

வாளை வார்த்தெடுத்த
நெருப்பும்
சம்மட்டியும்
ஆண்மைக்குள்
கனன்று கொண்டிருக்கும்

பெயருக்குள்
அடங்க இயலாது
ஆண்மை
சிறைகளை உடைத்துத்
தூளாக்கும்
காயங்கள் தழும்பேறப்
பெருமிதம் கொள்ளும்

பூக்களின்
உரசலில்
சுதாரித்து
கூர்வாளை
உருவி
நிலைத்துக் கொள்ளும்

உடலை ஒட்டி
எட்டுத் திக்கிலும்
வாளைச் சுழற்றி
நெஞ்சை நிமிர்த்தி
வானத்தை நோக்கும்

வானைப் பிளக்கக்
கூடும் வாள்
பிசிறு தட்டும்
நொடிகளைப்
பிளந்து தள்ளும்
கண்டிப்பாய்

Series Navigationமனநல மருத்துவர்கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *