முள்வெளி அத்தியாயம் -21

This entry is part 4 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

“வணக்கம்” என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம்.

“இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி”

“சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா?”

“கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு”

“அதே சானலிலே ஒரு ஸீரியலுக்கு ஒரே எபிஸோட் மட்டும் உங்க குடும்பமே நடிக்கப் போறீங்க”

“எங்களுக்கு ஆக்டிங் வருமான்னு தெரியலியே”

‘அதெல்லாம் டைரக்டர் பாத்துக்குவாரு. உங்களுக்கு சம்மதமா?”

“இதை நான் டிஸைட் பண்ண முடியாது தம்பி. என் சம்சாரம் வேறே வெளியிலே போயிருக்கு”

“ஸார். எனக்கு இன்னிக்கி உள்ளே ஃபிக்ஸ் பண்ணச் சொல்லி டார்கெட். இன்னும் ரெண்டு அட்ரஸ் கொடுத்திருக்காங்க”

“ஒரு நிமிஷம் இரு தம்பி” தனது மொபைலில் இருந்து சற்று தள்ளிச் சென்ற பிறகு யாரோடோ பேசினார். பிறகு “சம்மதம் தம்பி. எப்போ தொடங்குவாங்க ஷூட்டிங்?” என்றார்.

” ‘ரத்த உறவு ‘ அப்பிடிங்கற இந்தக் கதையைப் படியுங்க. பிறகு போன் போட்டு வரச் சொல்லுவாங்க”

“நம்பவே முடியல தம்பி. ரொம்ப தேங்க்ஸ்.”

தலையசைத்து விட்டு சிறியவன் கையில் உள்ள ஒரு சீட்டைப் பார்த்த படி எழுந்தான்.

“ஏன் தம்பி அடுத்த அட்ரஸ்ஸைப் பாக்குறே?”

” அப்பிடியெல்லாம் இல்லே ஸார். படிச்சுப் பாருங்க”

“கோயில் முன்னே கூடி நின்று
கோடி ஜன்ம பாபம் தீர
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்”

” இது சாமி பாட்டாச்சே தம்பி”

” அதைப் பாடறதுக்கு செலக்ட் ஆனவங்க அட்ரஸ் பின் பக்கம் இருக்கு. அவங்களைத் தேடிப் போகணும்”

ஆறுமுகம் ‘ரத்த உறவு ‘ கதையைப் படிக்க ஆரம்பித்தார்.

**__
**__**
**மாலை மணி ஆறு.
FTV பார்த்துக் கொண்டிருந்தார் ராமசாமி. (அம்புஜம் அம்மாள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார்). தொலைக்காட்சியில் நிறைய ‘சேனல்கள் வந்ததில் அவர் சிறுவயது முதல் சொல்லி வரும் ஒரு விஷயம் நிரூபிக்கப் பட்டு விட்டது. ‘வெள்ளக்காரனுங்க நல்ல ரசனையுள்ளவனுங்க. திங்கிறதோ உடுத்துறதோ இல்லை பொம்பளைங்கள ரசிக்கிறதோ.’ ஊரில் இதையெல்லாம் நிம்மதியாகப் பார்த்த நாளே கிடையாது. முதல் தொல்லை வாசற் கதவு. எப்போதாவது அடைத்தால் தானே? ஒரே ஒரு கதவு என்று இருந்தால் தானே? நடைக்கதவுகளை அடைப்பது என்பதே கிடையாது. வெளியில் ‘காம்பவுண்ட் கேட்’டுக்கும் தாழ்ப்பாள் மட்டும் தான். பகல் முழுவதும் திண்ணைகளை ஒட்டிய தேக்குக் கதவு திறந்தே கிடக்க பூனைபோல வரும் வேலைக்காரி, அம்புஜம் கண்ணசரும் போது உரிமையாக உள்ளே வந்து காபித் தூள் எடுத்துப் போகும் பக்கத்து வீட்டு அம்மாள். மகனின் சினேகிதப் பயலுவ. எவனுக்காவது கதவைத் தட்டுவோம் அல்லது செருமுவோமின்னு மெட்ராஸில சொல்லுவாங்களே ‘மேனர்ஸ்’ஸின்னு. அது உண்டா? ஊர்க்காட்டில் அழைப்பு மணி வைக்கிற பழக்கமே கிடையாது. ஒரு முறை ரயில் நேரந்தப்பி வர முன்கதவை இடி இடி என்று இடித்தது தான் மிச்சம். திண்ணையிலேயே தூங்கினார். காலையில் கோலம் போட வந்த அம்புஜம் சிரித்தாளே ஒழிய வருத்தத்தைக் காணோம்.

FTVல் பெண்கள் இப்போது உள்ளாடைகளுடன் வலம் வந்தார்கள். எத்தனை விதங்கள். எத்தனை ரகங்கள். எப்படித்தான் தோலை இவ்வளவு வெள்ளையாகக் கொடுத்தான் கடவுள்? இடுப்போ இல்லை வேறு இடமோ எத்தனை அழகாக இருக்கிறாளுகள்?

தொலைபேசி மணி ஒலித்துத் தொலைத்தது. காலை முதலே மருமளின் தோழிகளும், உறவும், சக ஊழியரும் யாராவது அவளுக்கு சுகப்பிரசவம் ஆகி விட்டதா என்று விசாரித்துத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சென்னையில் தொலைபேசியை கொஞ்சம் அதிகமாகவே உபயோகிக்கிறார்கள் என்று தோன்றியது. இரண்டு சக்கர வாகனம் ஓட்டியபடி கழுத்தில் சொருகிக் கன்னத்தில் இடுக்கிக் கொண்டு அவனவன் போன் பேசிக் கொண்டே போகிறான்.

டெலிபோன் ‘ரிசீவரை’க் கையில் எடுத்தார். “அப்பா நான் சுந்தரம் தான் பேசறேன்”

“என்ன குழந்தை? ஆணா ? பொண்ணா?”

“பொண்ணுப்பா”

“எத்தனை மணிக்கிப் பொறந்ததின்னு குறிச்சி வெச்சிருக்கியா?”

“இன்னும் பொறக்கலப்பா”

“அப்பம் எப்பிடி பொண்ணுன்னி தெரிஞ்சிது?”

“இப்ப இன்னோரு ஸ்கேன் எடுத்தாங்க”

“இன்னும் வலி எடுக்கலியா? உங்க அம்மாளை எளுப்பறேன். அவ எதனாச்சும் ஐடியா கொடுப்பா”

“அதெல்லாம் தேவை இல்லப்பா. ‘ஸிஸேரியன்’ தான். இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்தில ஆபரேஷன்.”

“உங்க மாமனார் கிட்டே பணம் இருக்கில்ல?”

“அப்பா. என்னை ஒரு நிமிஷம் பேச விடுறீங்களா?”

“சொல்லு”

“அவளுக்கு உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. ரெண்டு பாட்டில் A1+ ரத்தம் தேவைப்படும். நம்ம ஏரியாவில நாலு அட்ரஸ் தரேன். போயி அவங்க கிட்டே விஷயம் சொல்லி யாராவது ஒரு ஆளையாவது கூட்டிக்கிட்டு வாங்க’ அவன் முகவரியைச் சொல்ல அவர் குறித்துக் கொண்டார்.

சத்தம் கேட்டு அம்புஜம் எழுந்து வந்தார். (முன்னெச்சரிக்கையாக இவர் சானலை மாற்றி இருந்தார்). முழு விவரத்தையும் கேட்டவுடன் “ஏன் இவனோட மச்சான் என்ன பண்ணறான்? போயிப் போயி நிக்காதேன்னாக் கேட்டாத் தானே? ஏதோ இவுனுக்கே இடுப்பு வலி எடுத்த மாதிரி இல்ல அலை பாயுறான். ஏற்கனவே இவ சரியாத் திங்க மாட்டா. உடம்பு பெருத்துடுமாம். இப்போ ரத்தத்துக்கு செத்து ஒரு சீக்குப் பிள்ளயப் பெக்கப் போறா. அதுவும் பொட்டைப் புள்ளயா”

“அதையெல்லாம் விடுடீ. இப்போ இங்கின ரெண்டு மூணு அட்ரஸ் கொடுத்திருக்கான். ரத்தங் குடுக்குறவங்க ஒருத்தரையாவது கூட்டிக்கிட்டு இப்போ நான் போவணும்”

“முதல்ல ஒரு காப்பித் தண்ணியக் கலந்து கொண்டாரேன்” என்று சமையலறைக்குள் மறைந்தாள் அம்புஜம்.

“என் தம்பி மவன் சூர்யாவுக்கு போன் போடுங்க. அவன் டாக்டர். ‘டக்’குனு முடிச்சிடுவான். செய்தார். “அவன் ‘ட்யூட்டி’யில் இல்லை உறங்குகிறான்” என்று அவன் மனைவி பதில் சொன்னாள். இன்னும் ஓரிரு உறவுக்காரர்களுக்கு போன் செய்தார். யாரும் முன் வரவில்லை. இப்போது சுந்தரம் போன் செய்தால் என்ன பதில் சொல்லுவது?

“நாம இப்போ நேரா ஆஸ்பத்திரிக்கிப் போயி சம்பந்தியம்மா, மச்சினன் எல்லாரும் என்னதாம் பண்ணுறாங்கன்னு பாப்போம். இவன் தலையில எல்லாத்தையும் எறக்கி வெச்சிர்ட்டாங்க. இவுனு ம் ஆடிக்கிட்டிருக்கான்.

நினைவாக ஏற்கனவே பிறந்த பேரன் பேத்திகளின் பழைய துணிகளை எடுத்துக் கொண்டார். மெட்ராஸ் சம்பந்தியம்மா புதுத் துணியாகப் போட்டு சம்பிரதாயத்தைக் கெடுத்துத் தொலைத்தாலும் தொலைப்பா.

ஆட்டோவில் ஏறும் முன் ராமசாமி “ஏம்மா? எதுக்கும் அவன் குடுத்த ஒரு அட்ரஸுக்காவது போவலாமா? தப்பா நெனக்கப் போறான் என்றார்.

“இந்தப் பட்டணத்துல நாம என்னத்தக் கண்டோம்? நேரா ஆஸ்பத்திரிக்கி வண்டியை விடச் சொல்லுங்க. எதனாச்சும் வளி பொறக்கும்”

ஆஸ்பத்திரி வாசலில் சுந்தரம் தென் பட்டான். “அப்பா நீங்க யாரையும் கூட்டிக்கிட்டு வரலியே ப்ளட் டொனேஷனுக்கு?” “இல்லப்பா”

“நல்லதாப் போச்சு. ஆட்டோ டிரைவரை ‘வெயிட்டிங்’கில் இருக்கச் சொல்லி விட்டு அவர்களுடன் ஆஸ்பத்திரியில் நுழைந்தான்.

“கதிரேசன் ஸார் இதுதான் எங்க அப்பா அம்மா” என்று ஒரு இளைஞனிடம் அறிமுகம் செய்தான். எழுந்து கை கூப்பிய அந்த இளைஞன் கருப்பாக இருந்தான். எந்த சாதியோ. “அப்பா நான் இவரை ஆட்டோவுல ஏத்தி விட்டுட்டு வரேன்”

ராமசாமி திரும்பி வந்த சுந்தரத்திடம் “ரெண்டு மூணு பாட்டிலாவது வேணுமின்னியே?”

“என்னோட ரத்தத்தை வேற யாருக்காவது யூஸ் பண்ற மாதிரி என் கிட்டே ஒரு பாட்டில் எடுத்தாங்க. மச்சானும் கொடுத்தான். ராபர்ட்னு ஒருத்தர் மாலா க்ரூப் ரத்தம் கொடுத்தாரு”

“எங்கே அவுரு?” ” தன்னோட வண்டியிலியே கிளம்பிப் போயிட்டாரு”

**__
**__**
**தொடர்ந்து கதையைப் படிக்கும் முன் “அம்மா இதைப் படிச்சி முடிச்சிட்டியா? டிவியில நாம எப்பம்மா வருவோம் ?” என்றது குழந்தை. அவளுக்கு பதில் சொல்லும் முன் வாயில் அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்தால் ஒரு கூரியர் தபால். பிரித்தாள். மாமனார் பெயருக்கு சாதி சங்க அழைப்பிதழ்.

**__
**__**
**
கூரை தேவைப்படா
உயிரினங்களின் வேட்டை
மாறாத
விதிகளுக்குட் பட்டது

பசியும் வேட்டையும்
வார்த்தெடுத்த
கருவிகளில்
சிலவற்றை ஆயுதம் என்றாய்

அசலை நகலிடமிருந்து
பிரிக்கும்
மாயக் கோடு
வரைந்த தூரிகை
உன் கருவிகளுள் இல்லை

ஒப்பனைத் தூரிகைகள்
தேச வரைபடங்களை
சிலுவையின் ஆணிகள்
வரலாறை எழுதின

உன்னைச் சுமக்கும்
ஒட்டகங்கள்
தயக்கமின்றி பாலைவன்ச்
சோலை நீங்கி பயணிக்கும்
சவுக்குச் சொடுக்கில்

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – 97அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *