மெய்ப்பாடு  

This entry is part 7 of 11 in the series 27 பெப்ருவரி 2022

 

              ஜோதிர்லதா கிரிஜா

(குங்குமம் 30.4.2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பக வெளியீட்டில் இடம் பெற்றது,)

     அன்னம்மா ஒரு திடீர் உந்துதலில் “அமுதம்” வார இதழுக்கு அனுப்பிய சிறுகதை அவள் அதை அனுப்பிய இரண்டே மாதங்களுக்குள் அவ்விதழில் வெளிவந்துவிட்டது. காலஞ்சென்ற அவள் அப்பா இருந்திருப்பின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார் எனும் நினைப்பு அவள் விழிகளைக் கலங்கச் செய்தது. தான் கதை அனுப்பியது பற்றி அவள் யாருக்குமே சொல்லவில்லை. ஆனால் அந்தக் கதையைப் பார்த்ததுமே அதை எழுதியவள் அவள்தான் என்பதை எல்லாருமே கண்டுபிடித்துவிட்டார்கள். அதற்குக் காரணம் அவள் தனக்கென்று புதிதாய் ஒரு புனைபெயர் வைத்துக்கொள்ளவில்லை என்பதோடு அவளது அசல் பெயரே சற்று வித்தியாசமானதாக இருந்தது என்பதும்தான்.

     ”அன்னம்மா அஸ்வத்தாமன்” – அஸ்வத்தாமன் என்பது அவள் அப்பாவின் பெயராகும். அவள் தன் அப்பாவின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டிருந்தாள். எனவே சற்றே வேறுபாடான அந்தப் பெயரை “அமுதம்” இதழில் கவனித்ததும் அது அவளாகத்தான் இருக்க வேண்டுமென்பதைப் பலரும் ஊகித்துவிட்டார்கள்.  “அறிமுக எழுத்தாளர்’ என்கிற குறிப்புடன், இதழில் ஆசிரியர் அவள் மைய அரசு அலுவலகமொன்றில் மேல்நிலை எழுத்தராகப் பணி புரிந்துகொண்டிருக்கும் விவரத்தையும் கதையின் இடையே கட்டம் கட்டி அறிவித்திருந்தார். இன்ன அலுவலகம் என்பதைச் சொல்ல வேண்டாமென்று அவள்தான் ஆசிரியருக்குத் தடை விதித்திருந்தாள். இல்லாவிட்டால், இன்னும் அதிக நிச்சயத்துடன் அதை எழுதியவள் அவளே என்பதை அனைவரும் ஊகித்திருந்திருப்பார்கள்.

     அலுவலகத்தில் அவளைத் தேடி வந்து முதலில் பாராட்டியவள் அவள் தோழி சியாமாதான்.  நெருங்கிய தோழியாதலால், அவள் தானே அதை எழுதியவள் போல் குதூகலித்தாள். கதை மிக நன்றாக இருந்ததாகப் பாராட்டிய மறுகணமே, “சசாங்கனுக்குத் தெரியுமா?” என்பதுதான் அவள் கேட்ட முதல் கேள்வி.

      “சசாங்கன் இன்னைக்குத்தானே லீவ்லேருந்து திரும்பி வர்றாரு? வந்ததும்தான் சொல்லணும்.”

      “ஏண்டி? எழுதி அனுப்பினப்ப சொல்லல்லையா?”

      “இல்லேடி. கதை வெளி வெளிவரல்லேன்னா கலாட்டாப் பண்ணுவாரில்ல? அதான் சொல்லல்லே. அவரும் ‘அமுதம்’ பத்திரிகை வாங்கறாரு. அதனால, ஒருக்கா ஆஃபீஸ்க்கு வர்றப்பவே படிச்சுட்டே வந்தாலும் வருவாருன்னு நினைக்கிறேன்.”

     சியாமாவைத் தொடர்ந்து அவள் பிரிவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், மற்றும் ஐந்து ஆண்கள் எல்லாருமே – தலைமை எழுத்தர் உள்பட – அவளைப் பாராட்டினார்கள். “பார்ட்டி குடுத்துடுங்க.” என்று கூட்டமாய் அன்புக்கட்டளை இட்டார்கள்.

     சசாங்கன் அன்று ஒரு மணி நேரம் தாமதமாக வருவதற்கு அனுமதி பெற்றிருந்தான். கதையை அவன் படித்தானா இல்லையா என்பது பதினொரு மணிக்கு அவன் வந்ததன் பிறகுதான் தெரியும் என்று நினைத்துக்கொண்ட அன்னம்மாவுக்குப் பரபரப்பாக இருந்தது. கதை எழுதும் உந்துதல் திடீரென்று தனக்கு வந்தது என்பதையும் முன்கூட்டி அவனிடம் சொல்லக் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது என்பதையும் அவன் வந்ததும் சொல்லிவிடவேண்டுமென்று அவள் எண்ணிக்கொண்டாள்.

      பதினொன்று அடிக்கப் பத்து நிமிடங்கள் இருந்த போது சசாங்கன் பிரிவுக்குள் நுழைந்தான். இருக்கையில் அமர்வதற்கு முன்பாகவே, “அமுதத்துல கதை எழுதியிருக்கிறது நீதானே?” என்று ஆர்வத்துடன் வினவினான்.

      “ஆமா.”

      “எங்கிட்ட கூடச் சொல்லவே இல்லியே?” என்று சிரித்தான்.

      “உங்களுக்குய் வியப்பா இருக்கட்டுமேன்னுதான்.”

      “கதை நல்லா இருந்திச்சு.”

      “தேங்க்ஸ்.”

      சசாங்கனும் அன்னம்மாவும் காதலர்கள் என்பது அந்த அலுவலகம் முழுவதற்கும் தெரிந்த உண்மை. சசாங்கனின் தங்கைக்குத் திருமணம் முடிந்த பின்னர் அவர்களுடையது நடக்கும் என்பதும் எல்லாருக்கும் தெரியும். தங்களது உறவை அவர்கள் மறைத்ததே இல்லை.

      சசாங்கனின் பக்கத்து இருக்கைக்காரன் பத்ரிநாத், “பார்ட்டி குடுத்துடுப்பா, சசாங்க்!” என்றான்.

      “இதென்னப்பா அடாவடியா இருக்கு! அவங்க கதை எழுதினதுக்கு அவங்க கிட்ட் கேளுப்பா! நானா எழுதினேன்?” என்ப்று சசாங்கன் பொய்யாகக் கோபப்பட்டான்.

      “நீ வேற, அவங்க வேறயாப்பா? அதான் உன்னைக் கேக்கறான் பத்ரி!” என்று முரளி அவனுக்கு வக்காலத்து வாங்கினான்.

      “அதானே!” என்று வத்சலா தமுக்கடித்தாள்.

      “இன்னைக்கு மத்தியானமே பார்ட்டி குடுத்துடறேன். சரியா?”: என்ற அன்னம்மா, “நாலு மணிக்கு வச்சுக்கலாமா? ஒரு இனிப்பு, ஒரு காரம், ஒரு காப்பி – அப்புறம் பீடா” – எல்லாம் நம்ம காண்ட்டீன்ல சொல்லிடறேன். ஓகேயா?” என்றாள்.

      “என்னங்க நீங்க? நம்ம கான்ட்டீன்லேருந்தா வரவழைக்கப் போறீங்க? வேற ஏதாச்சும் பெரிய ஹோட்டல்ல வச்சுக்கலாங்க,” என்ற ரங்கராஜன் முகத்தைச் சுருக்கினான்.

      அன்னமா சிரித்தபடி மவுனமாய் இருக்க, “நீங்க கேக்குறது நியாயம் இல்லீங்க. பெரிசா ஏதாவது பரிசு வாங்குறப்போ நீங்க கேக்காமயே பெரிய ஹோட்டல்ல குடுப்பாங்க,” என்று சியாமாதான் அவள் சார்பில் பேசினாள்.

      “அதுவும் சரிதான்.  அப்ப, கூடிய சீக்கிரமே நம்ம எழுத்தாளர் அன்னம்மாவுக்குப் பெரிய இலக்கியப் பரிசெல்லாம் கிடைக்க எங்க வாழ்த்துகளை இப்பவே  சொல்லிடறோம்!”

      … அன்று பிற்பகல் சசாங்கன் ஒரு பெரிய மர அலமாரியின் பின் புறத்தில் நின்று ஏதோ கோப்பைத் தேடிக்கொண்டிருந்தான். அவனைக் கவனிக்காத அவனுடைய அலுவலக நண்பர்கள் தங்களுக்குள் கிண்டலாகவும், முனைப்பாகவும் அன்னம்மாவின் கதையைப் பற்றி விமர்சித்து உரையாடியதை அவன் செவிமடுக்க நேர்ந்தது.

      “அன்னம்மா கதையைப் படிச்சியாடா?”

      “”ஓ. படிச்சேனே! நல்லா எழுதியிருக்காங்க. புருஷனை இழந்த பெண்ணுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டியது எவ்வளவு அவசியம்கிறதை ஆணி அடிச்ச மாதிரி நல்லாவே  சொல்லி இருக்காங்க.”

      “”அப்ப? இவங்களை லவ் பண்ற சசாங்கனுக்கு நம்ம ஆழ்ந்த அனுதாபம் உரியது! இல்லியா?”

      “டே, டேய்! என்னடா சொல்றே?”

      “அவன் செத்தான்னு வய்யி. இந்தம்மா மறு கல்யாணம் கட்டும் லவ்வாவது, மண்ணாவது!”

      “ஒரு கைம்பெண்ணுடைய மறுமணம்கிறது அந்தப் பெண்ணுடைய முக்கியமான பிரச்னை. அதை நியாயமான கண்ணோட்டத்தோட அவங்க அணுகி ஒரு கற்பனைக் கதையை எழுதியிருக்காங்க.  அந்தக் கதையோட அவங்களைத் தனிப்பட்ட முறையில எதுக்கு அநாவசியமா சம்பந்தப்படுத்தறே?  இது வம்புதானே? உங்களுக்கு வேற வேலை இல்லியா? இன்னொரு கதையிலே கடைசிவரை தன்னோட கணவனையே   நெனச்சு நெனச்சு மறுகி வாழ்ந்து முடிச்ச ஒரு பெண்ணைப்பத்தி அவங்க எழுதக் கூடும். இந்த ரெண்டுல எது அவங்களோட இயல்புன்னு எதை வச்சு சொல்லுவீங்க? அலையாதீங்கப்பா! இது நல்லால்லே!” என்று ரங்கராஜன் அவர்களைக் கண்டித்தான்.

      “நீ சொல்றது சரிதாம்ப்பா. இது மாதிரி ஒரு கதையை நம்மள்ள யாராவது எழுதியிருந்தா, ‘அட்டடா! மிஸ்டர் சோ அண்ட் சோவுக்குத்தான் எப்பேர்ப்பட்ட பரந்த மனசு!’ அப்படின்னு புகழுவோம். இல்லியா?” என்று பரந்த்காமன் சிரித்தான்.

      “ஒரு எழுத்தாளர் ஆம்பளையா இருந்தா மட்டும் அந்தாளை விட்டு வெச்சிடுவோமா என்ன!  ‘இவ்வளவு எழுதறானே இந்த ஆளு? அவன் ஒரு விதவையைக் கல்யாணம் கட்டுவானா?’ அப்படின்னு அப்பவுந்தான் நாக்குல பல்லைப்போட்டுப் பேசுவோம்! நமக்கு யாரைப்பத்தியாச்சும் வம்பு பேசணும். அவ்வளவுதான்!” என்ற ரங்கராஜன் மறுபடியும் சீற்றத்துடன் இடைவெட்டினான்.

      “ஒரு எழுத்தாளனோட எண்ணம் அவனோட எழுத்திலே கண்டிப்பா வெளிப்படத்தான் செய்யும். அன்னம்மா அந்த மாதிரி டைப்தான்னு எனாகுத் தோணுது! நம்ம சசாங்கனுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்!

      “நிறுத்துங்கப்பா! அதோ, அன்னம்மாவும் சியாமாவும் வந்துக்கிட்டிருக்காங்க,” என்று ஒருவன் எச்சரிக்க, அவர்களது பேச்சு அத்துடன் நின்றது.

     அலமாரிக்குப் பின்னால் தான் நின்றிருந்தது அவர்களுக்குத் தெரிவதை விரும்பாத சசாங்கன் அந்தப் பிரிவின் மற்றொரு வாசல் வழியாக வெளியேறினான்.

      அன்று மாலை வழக்கம் போல் கடற்கரையில் அன்னம்மாவைச் சந்திக்கும் போது அலுவலக நண்பர்களது உரையாடல் பற்றித் தெரிவித்து அவளது எதிரொலி என்னவென்பதைக் கண்டுபிடிக்க அவன் அவாவினான்.

      …  “அன்னம்! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”

      “சொல்லுங்க! நானே உங்களை ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன்.”

      “என்ன?”

       “மத்தியானம் சாப்பாட்டு நேரம் முடிஞ்சு சியாமாவும் நானும் பிரிவுக்குத் திரும்பிவந்தப்போ, நீங்க வழக்கம் போல அங்கே இல்லே. திரும்பி வந்தப்புறம் உங்க மொகத்துல சுரத்தே இல்லே. ஒரு மாதிரி – எதைப் பத்தியோ யோசிக்கிற மாதிரி – தெரிஞ்சீங்க. நானே கேக்கணும்னு நினைச்சேன்.”

      “அதுக்கும் இப்ப நான் உன்னோட பேசப்போற விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கு.”

      “சொல்லுங்க. எதுவா இருந்தாலும் சொல்லுங்க.”

      “இன்னிக்கு மத்தியானம் சாப்பாட்டு நேரத்துல நம்ம ஆஃபீஸ் ஆளுங்க உன்னோட கதையைப் பத்திப் பேசினாங்க. நீ ரொம்பவே முற்போக்குவாதியாம். நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ விதவை ஆயிட்டா நீ மறு கல்யாண,ம் கட்டுவியாம். அதைப் பத்திக் கிண்டலடிச்சுட்டு, அப்படியே, ‘நம்ம சசாங்கனுக்கு நம்ம ஆழ்ந்த அனுதாபங்கள்’ அப்படின்னும் கேலியா ஒருத்தன் நக்கலடிச்சான்,” என்ற சசாங்கனின் பார்வை அவளை ஆழமாய்த் துளைத்துக்கொண்டிருந்தது.

      அன்னம்மாவின் விழிகள் விரிந்தன. அவளது முகத்தில் உடனடியாக ஒரு வெளிறல் தோன்றியது.

      “சேச்சே! என்னங்க இது! மடத்தனமாவில்லே இருக்கு! ஒரு இளம் விதவையுடைய பிரச்னையைப்பத்தி அனுதாபத்தோட அணுகிக் கதை எழுதினா, அதுக்கு இப்படி ஒரு எதிரொலியா? வேடிக்கையா இருக்கே! நல்ல ஆளுங்க.  இவங்களுக்கு யாரையாவது விமர்சிக்கணும். வம்பு பேசணும். இன்னைக்கு நான் மாட்டினேன்!” – அவளுள் பொங்கிய சினத்தால் அவளது குரல் அதிர்ந்தது.

      “கோபப்படாதே. அன்னம்! அவங்க பேசிக்கிட்டதிலேயும் ஒரு விஷயம் இருக்கு. இப்ப நானே உன்னைக் கேக்கறேன். பதில் சொல்லு. உண்மையான பதில் வேணும் எனக்கு. நாளைக்கு நம்ம கல்யாணம் ஆன பெறகு நான் செத்துட்டா …”

      அவன் தான் தொடங்கியதை முடிக்கும் முன் அவள் ஆவேசமாய்க் குறுக்கிட்டாள்: “என்னங்க இது! அவங்கதான் மடத்தனமா ஏதேதோ பேசினாங்கன்னா, நீங்களும் அதைப் பிடிச்சுக்கிட்டுத் தொங்குறீங்களே! உங்களுக்கே நல்லாருக்குதா இது? இதென்ன அசட்டுக் கேள்வி? நான் உங்க மேல உசிரையே வெச்சிருக்கேன். என்னைப் பொறுத்த மட்டிலே உங்களைத் தவிர வேற யாருக்கும் என் மனசிலே இடம் கிடையாது. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். இதை நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம். ஒரு விதவையினுடைய பிரச்னை பத்தி ஒரு பொண்ணு எழுதக் கூடாதா?  அதுக்கு இப்படி ஒரு விமர்சனமா? அவங்கதான் வேலையத்துப் போய் ஏதேதோ பேசினாங்கன்னா, நீங்களும் அதை வெச்சு என்னைக் கேள்வி கேக்கறீங்களே?”

      “ஒரு எழுத்தாளாரோட எண்ணந்தானே, அன்னம், அவங்க எழுதுற கதையிலேயும் வெளியாகும்? அதனாலதான் அவங்க அப்படிப் பேசிக்கிட்டாங்க. உனக்கு  ஏன் இவ்வளவு ஆத்திரம் வருது?”

      “அப்படின்னா? இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க? நான் அது மாதிரிப் பொண்ணுன்றீங்களா?”

      “அப்ப? அது மாதிரிப் பண்ணுற பொண்ணு உயர்ந்தவ இல்லைங்கிறதை ஒத்துக்கறே தானே?”

      “இதுல உயர்வு தாழ்வுன்னு என்னங்க இருக்கு? அப்ப? மனைவியை இழந்தவன் மறு கல்யாணம் கட்டினா அதுல எந்தக் கேவலமும் இல்லே! ஆனா, ஒரு விதவை ஆதே காரியத்தைப் பண்ணினா, ‘அது மாதிரிப்பட்டவ’ன்னுவீங்க! அப்படித்தானே?”

      “இப்ப நீயேதானே ‘அது மாதிரிப் பொண்ணு’ன்ற வார்த்தையை உபயோகிச்சே? அப்ப? அது ஒரு நல்ல செயல் இல்லைன்னுதானே நீயே நினைக்கிறதா அர்த்தம்? நல்ல செயல் இல்லாத ஒண்ணை நீ ஏன் ஆதரிச்சு எழுதணும்?”

 “இதென்ன அடாவடி? அது நல்ல செயலா, கெட்ட செயலாங்கிறது இப்ப கேள்வி இல்லே. அது ஒரு விதவையுடைய தனிப்பட்ட பிரச்னை. அதுல தலையிட்டுத் தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லே. அவளுக்கு எப்படித் தோணுதோ அப்படிச் செய்யிற உரிமை அவளுக்கு இருக்கு. அதுக்கு யாரும் குறுக்கே நிக்கக் கூடாது. ஒரு ஆம்பளை அதைச் செய்யிறப்போ விமர்சிக்காதவங்க ஒரு பொண்ணு அதே காரியத்தைச் செய்யிறப்போ அது தப்புன்னு விமர்சிச்சாங்கன்னா, அவங்களுக்கு நியாயமே தெரியல்லேன்னு அர்த்தம். ‘அதுமாதிரிப் பொண்ணு’ன்னு நான் சொன்னதை வெச்சு ஒரு விதவை மறு கல்யாணம் கட்டுறது தப்புன்னு நான் நினைக்கிறதா நீங்களா ஏன் கற்பனை பண்ணிக்கிறீங்க? அப்படி ஒரு கருத்து எனக்கு இருந்தா ஒரு கதையை நான் எழுதுவேனா?”

 “ஆ…ங்! அப்படி வா. உன்னையும் அறியாம உன் மனசிலே இருக்கிறது வெளிவந்திடிச்சு, பாத்தியா?”

 “என்ன உண்மை வெளி வந்திடிச்சு? என்ன பேசறீங்க?”

 “ஒரு விதவை மறு கல்யாணம் கட்டுறதை நீ முழு மனசோட ஆதரிக்கிறவங்கிற உண்மை!”

 “ஆமா! ஆதரிக்கிறேந்தான். அதுல எந்தச் சந்தேகமும் கிடையாது. ஒரு விதவையோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு அவளுக்கு ஆதரவா என் கதையில நான் குரல் கொடுத்தேன். அது ஒரு தப்பா? அந்தக் கருத்தோட என் தனிப்பட்ட மனநிலையைச் சம்பந்தப்படுத்தி எதுக்காக மண்டையைக் குழப்பிக்கிறீங்க? உங்க போக்கும் பேச்சும் எனக்குப் புரிய மாட்டேங்குது. அவங்கதான் போதுபோக்கத்துப் போய் ஏதோ வம்புத்தனமாப் பேசினாங்கன்னா, நீங்களும் அதைக் கேட்டுட்டு இப்படிப் பேசறீங்களே?”

 “விமர்சனம் பண்ணினவங்க வெறும் வம்புக்காகப் பண்ணியிருக்கலாம்.  ஆனா அதுலே உண்மையும் இருக்குதில்லே?”

 “என்ன உண்மை இருக்குதுன்றீங்க?”

 “நீயும் அப்படிப்பட்ட பொண்ணுதான்கிறது!”

 “இத பாருங்க. ஒண்ணு மட்டும் கேட்டுக்குங்க. என்னோட மனசிலேயும் வாழ்க்கையிலேயும் உங்களைத் தவிர  வேற யருக்குமே இடம் கிடையாது. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். அதை நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.”

 “…….”

 “ஆம்பளைங்க பொஞ்சாதி செத்ததும் மறு கல்யாணம் கட்டுறதை வெச்சு எழுதறாங்களே, எத்தனையோ எழுத்தாளருங்க, அதையும்தானே படிக்கிறீங்க? அப்ப வராத குதர்க்க புத்தி ஒரு விதவைக்குப் பரிஞ்சு ஒரு பெண் எழுத்தாளர் எழுதுறப்ப மட்டும் ஏங்க உங்களுக்கு வருது?”

 “சரி. போனது போகட்டும். இனிமேற்பட்டு, இப்படியெல்லாம்  நாலு பேரு உன்னை விமர்சிக்கிற மாதிரி எதுவும் எழுதாதே. எனக்கு அசிங்கமாயிடும்.”

 “அப்படின்னா? என் கருத்துக்களை வெளிப்படுத்துறதுக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் விட மாட்டீங்கன்னு இதுக்கு அர்த்தமா? ஒவ்வொரு கதையையும் பத்திர்கைக்கு அனுப்புறதுக்கு முந்தி உங்க அங்கீகாரத்துக்கு உங்க கிட்ட சமர்ப்பிக்கணுமா?”

 “பெரிய புரட்சி எழுத்தாளர்னு நினைச்சுக்கிட்டு நம்ம பண்பாட்டுக்கு விரோதமா எழுதி, உன்னைப் பத்தி நாலு பேரு அசிங்கமாப் பேசும்படி நீ நடந்துக்கிறதை என்னால சகிச்சுக்க முடியாது!”

 “பண்பாடுன்னு எதைச் சொல்றீங்க? ஒரு அம்பது வருஷங்களுக்கு முந்தி நீங்களும் நானும் இப்படி பீச்ல உக்காந்து பேசியிருந்திருக்க முடியுமா? அந்தக் காலகட்டத்துல அது பண்பாட்டுக்கு விரோதமான செயலா மத்தவங்களுக்குத் தோணியிருந்திருக்குமில்லே? அது மாதிரித்தான் இதுவும். ஏன்? எதுவுமே! நம்ம எண்ணங்க:ள் மாறுகிறப்போ நம்ம செயல்களும் மாறத்தானே செய்யும்? செயல்கள் மாறினா பண்பாடும் மாறத்தானே செய்யும்?”

 “இதா பாரு, அன்னம். சும்மா பிரசங்கம் பண்ணாதே! இந்த விதண்டாவாதமெல்லாம் எனக்கு சுத்தமாப் பிடிக்கல்லே. ஒரே பேச்சு. நாலு பேரு உன்னைப் பத்திக் கேவலமாப் பேசுறமாதிரியோ விமர்சிக்கிற மாதிரியோ நீ எதுவும் எழுதக் கூடாது. இன்னைக்கு வெளிவந்த கதைக்கே நான் உன்னை நியாயமா நிராகரிக்கணும். அதைப்பத்தி நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரல்லே. யோசிச்சுக்கிட்டிருக்கேன்.”

  அன்னம்மாவுக்குள் ஓர் அதிர்வு விளைந்தது. மணலை அளைந்துகொண்டிருந்த அவள் விரல்கள் நடுங்கின. உதடுகள் துடித்தன. கன்னத்துச் சதைகள் ஆடின. விழிகளில் நீர் கோத்துக்கொண்டது. ’சே! நீ இவ்வளவுதானா?’ என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தபின் அவள் சட்டென எழுந்துநின்றாள்.

 “நீங்க இன்னும் ஒரு முடிவுக்கு வராம இருக்கலாம். யோசிச்சுக்கிட்டும் இருக்கலாம். ஆனா இதிலே யோசிக்கிறதுக்கு எதுவும் இருக்கிறதா நான் நினைக்கல்லே.”

 “நீ அப்படி நினைக்கலாம். ஆனா நான் அப்படி நினைக்கல்லே.”

 “நீங்க அவசரப்பட்றீங்க. … நான் எனக்கு யோகிக்கிறதுக்கு ஒண்ணுமில்லேன்னு சொல்றேன். எந்த யோசனைக்கும் அவசியமே இல்லாதபடி நான் ஒரு முடிவுக்கு வந்தாச்சு. … குட்பை! … ‘நான் இறந்த பிறகு மறுமணம் செய்துகொள்ளாத ஒரு மணமகள் தேவை’ அப்படின்னு ஒரு விளம்பரம் கொடுங்க! ஆல் த பெஸ்ட்! …” – குரல் நடுங்காமல் பார்த்துக்கொண்டபின் அவள் அவசரமாக எழுந்தாள். திகைத்து அமர்ந்திருந்த அவனைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

 … மறு நாள் அன்னம்மா அலுவலகத்துக்குச் செல்லவில்லை. மூன்றாம் நாள் அவளது பணி விலகல் கடிதம் கண்டு அனைவரும் வியப்பில் மூழ்கினார்கள். ‘ஒருகால் பத்திரிகை அலுவலகத்தில் வேலை கிடைத்திருக்குமோ? மனசுக்குப் பிடித்த வேலை என்பதால் ஒப்புக்கொள்ளப் போகிறாளோ?’ என்பதே எல்லாருடைய ஊகமாகவும் இருந்தது.

 சசாங்கனின் வாயை அநேகமாக எல்லாருமே கிளறினார்கள். தனக்கு எதுவுமே தெரியாது என்று அவன் அவளுடன் எந்த உறவும் இல்லாதவன் போல் சொன்ன பதில் அவர்கள் புருவங்களை உயர்த்தியது; காதுகடிக்கவும் வைத்தது. …

 சியாமா அன்னம்மாவின் வீட்டுக்குப் போனாள். நடந்ததை அறிந்த அவள் வியப்பும் வேதனையுமுற்றாள். சசாங்கணைச் சந்தித்துப் பேசி இருவரும் மறுபடி இணைவதற்குத் தான் முயல்வதாய் சியாமா சொன்ன யோசனைக்கு அன்னம்மா சற்றும் இணங்கவில்லை.

 இரண்டே மாதங்களில் அன்னம்மாவுக்கு வேறோர் அலுவலகத்தில் அதிகச் சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்தது. தன் ஏமாற்றம், வேதனை ஆகியவற்றை ஓரகங்கட்டிவிட்டு அவள் முழு மூச்சுடன் தன் எழுத்துப்பணியைத் தொடர்ந்தாள். அலுவலகப் பணியைச் செய்துகொண்டே எழுத்துலகிலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்று அதை வெற்றியுடன் தக்கவைத்துக்கொண்டாள். …

 வேற்றூருக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டிருந்த சியாமா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வர நேர்ந்த போது அன்னம்மாவின் வீட்டுக்கு வந்தாள். தன் தாயுடன் வசித்துவந்த அன்னம்மா தன் பழைய தோழியை ஆவலுடன் வரவேற்றாள். இருவரும் வெகு நேரம் பழைய கதைகள் எல்லாவற்றையும் பேசித் தீர்த்தார்கள்.

சசாங்கனுக்குத் தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது, மூன்றாம் பிள்ளைப்பேற்றுக்கு அவன் மனைவி அவளது பிறந்த வீட்டுக்குப் போயிருப்பது ஆகியவற்றைக் கேட்டதும் அன்னம்மா வாய்க்குள் சிரித்துக் கொண்டாள்.

 “என்னடி சிரிச்சுகறே?”

 “புருஷன் செத்தா நான் மறு கல்யாணம் கட்டக் கூடியவள்னு எவனோ ஒரு சோம்பேறி விமர்சனம் செஞ்சதைப் பெரிசா எடுத்துக்கிட்டு மனசு மாறிப் போன அந்தாளு, காதலியைக் கைவிட்டு இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அந்தாளை மட்டுமே நேசிச்ச நானோ – விதவைகளோட மறுமணத்தை ஆதரிக்கிறவளா இருந்தாலும் – அவரு இருந்த மனசிலே வேறொருத்தரைக் குடிவைக்க மனசு வராம கல்யாணம் பண்ணிக்காமயே இருந்துட்ட கன்னி விதவை! என் மேல அவர் சாட்டின குற்றச்சாட்டும் என்னைப்பத்தி அவர் எடை போட்டதும் தப்பாயிடிச்சில்லே? அதை நெனைச்சுத்தான் சிரிச்சேன். எங்க ரெண்டு பேர்ல யாரு காதலுக்கு உண்மையா நடந்துக்கிட்ட ஆளுடி? சொல்லு!”

 சியாமாவின் விழிகள் கலங்கிச் சிவந்தன.

…….

 

 

Series Navigationஉக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியதன் எதிர்வினை என்ன?புத்தகக் காட்சி சிந்தனைகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *