மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014 நாகரத்தினம் கிருஷ்ணா

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

 

 

  1. பிரான்சில் என்ன நடக்கிறது?

 

அ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி:

 

நமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சகித்துக்கொள்ளலாம் என்பதுபோல வேடிக்கையொன்று பிரான்சு நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. Ferney- Voltaire என்பது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு கொம்யூன், அதாவது பேரூராட்சி. பிரான்சு -சுவிஸ் எல்லையிலிருக்கிற ஊர். சுவிஸ் நாட்டிற்கு குறிப்பாக ஜெனீவாவிற்கு வெகு அருகிலிருந்ததாலும் அப்போதைய அரசியல் சூழலாலும் இவ்வூரை வசிப்பதற்கென வொல்த்தேர் தேர்வு செய்து (1759) இருந்தார். அறிவொளிகால தத்துவவாதியும் – படைப்பாளியுமான வொல்த்தேர்க்கு மரியாதை செலுத்தும்வகையில் அவரது பொன்மொழிகள் அடங்கிய செப்புத் தகட்டினை கொம்யூன் வைக்க நினைத்தது. வரவேற்கக்கூடிய யோசனைதான். கொம்யூனும் அதற்கான நிதியை ஒதுக்கியது. கல்வி ஆண்டு தொடங்கும்போது அதாவது செப்டம்பர் மாதத்தில் அதன் திறப்புவிழா இருக்கவேண்டுமென மேயர் நினைத்தார். அந்த அவசரமே அவரை சந்தியில் நிறுத்த காரணமாகி இருக்கிறது.

 

“சொற்பிழை, வாக்கிய பிழையுடன் அமைத்து வொல்த்தேர் சொல்லவந்ததையே மாற்றிப்பொருள்கொள்ளும் வகையில் கூற்றுகள் செப்புத் தகடுகளில் இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?. நீண்ட வாக்கியத்தை சுருக்குகிறேனென்று அதன் பொருளையே கேலிக்குரியதாக்கி இருக்கிறார்கள்” என்பது குற்ற சாட்டு. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் மீண்டும் திறப்பார்கள். கொம்யூன், வொல்த்தேருக்கு இந்த மரியாதையை(?) கல்வி ஆண்டின் தொடக்கப் பரிசாக உள்ளூர் மாணவர்களுக்கென அறிவித்திருந்தது நகைமுரண். “Rien ne se fait sans un peu d’enthousiasme” (சிறிதளவேனும் ஆர்வமின்றி எதையும் செய்துமுடிப்பதில்லை அல்லது ஒன்றைச் செய்ய சிறிதளவாயினும் ஆர்வம் வேண்டும்) என்ற வாக்கியம் “rien ne se fait sans peu d’enthousiasme” ( சிறிதளவு ஆர்வத்துடன் செய்யப்பட்டதென்று எதுவுமில்லை) என்று கொம்யூன் பதித்துள்ள தகட்டில் இருந்தது. அதுபோல Printing accentலும் தவறுகள் இருந்திருக்கின்றன.

 

இதைக் கண்டித்திருக்கும் பிரெஞ்சு தினசரிகள்: “இத்தவறுகள் Franck Ribéry (பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் – பிரெஞ்சு மொழியைப் பிழையுடன் பயன்படுத்துவபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகுபவர்களில் ஒருவர்) குடியிருப்பு வழித்தடத்தில் வைத்திருந்தால் கூட சகித்திருக்கலாம் அவர்கள் வைத்திருப்பது வோல்த்தேர் தமது மாளிகையிலிருந்து ஜெனீவா செல்லும் பாதையில். இது அவருக்குச் செய்யும் அவமரியாதை” எனக் கண்டித்திருக்கிறா¡ர்கள். பிழையுள்ள பொன்மொழிகள் அகற்றப்பட்டுள்ளன. “தவறுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இருக்கிறோம்”, என அறிவித்திருக்கிறார் மேயர்.

 

கடந்த சில ஆண்டுகளாவே மொழி அனுதாபிகள், « பிரெஞ்சு மொழியியை ஒரு சாரார் சரியாக உபயோகிப்பதில்லை » என குறைகூறிவருகிறார்கள்: பிழைபட உபயோகிப்பது, வாக்கியப் பிழைகள், ஒரே பொருளைத் தரும் இருசொற்களை பயன்படுத்துவது, ஆங்கில சொற்கள் உபயோகமென.. குற்றசாட்டுகள் உள்ளன.

 

அண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பு பிரெஞ்சு மொழியை கொலைசெய்கிறவர்கள் யார் யார் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி 78% விளையாட்டுவீரர்கள் பிரெஞ்சு மொழியை ஒழுங்காக உபயோகிப்பதில்லையாம், அடுத்ததாக நட்சத்திரங்கள் 51%( நடிகர்கள், பாடகர்கள்); பத்திரிகையாளர்களும் தப்பவில்லை 19%. ஆங்கிலசொற்களை கலந்து பேசுவதும் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். பத்து பேருக்கு 7 பேர் ஆங்கிலச் சொற்களை கலந்து பேசுகிறார்கள். அவர்களில் 13% பேர் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பவர்கள். குறிப்பாக 18லிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 29% ஆங்கிலச் சொற்களை உபயோகிக்கிறார்களாம்.

 

ஆ. புத்தகம் படுத்தும்பாடு:

 

வலெரி த்ரியெர்வெலெர் (Valérie Trierveiler) பிரான்சு நாட்டின் இந்நாள் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து(François Hollande)வின் முன்னாள்காதலி. 2013ம் ஆண்டு பிப்ரவரிமாதம் இப்பெண்மணி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் (2013). காந்தி சமாதிக்கு கதலருடன் மலர் வளையமெல்லாம் வைத்திருக்கிறார். அடுத்த ஜனவரி மாதம் ஊட்டச்சத்துப்பற்றாக்குறை குழந்தைகளின் நலனை முன்வைத்து அவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மும்பைக்கு வரவிருக்கிறார். அதிபர் திடீரென்று இப் பத்திரிகையாளர் பெண்மணியைக் கைவிட்டு ஜூலி கயெ (Julie Gayet) என்கிற நடிகைமேல் காதல்கொண்டுவிட, பத்திரிகையாளர் பெண்மணி அதிபரோடு இருந்த நாட்களையும் அவரது அரசியலையும், பக்கத்திற்குப்பக்கம் குற்றம் சாட்டி « Merci pour ce moment » (அத்தருணத்திற்கு நன்றி) என்ற நூலை எழுதியிருக்கிறார். இருக்கிறார். நான்கைந்து நாட்களுக்கு முன்பு முதற்பதிப்பாக இரண்டு லட்சம் புத்தகங்கள் வெளிவந்து விற்று முடிந்திருக்கிறது. மீண்டும் இரண்டாவது பதிப்பு. ஆங்கிலத்திலும் விரைவில் வர இருக்கிறது இதுவரை ஒரு மில்லியன் யூரோவை அவர் சம்பாதிருக்கக்கூடும் என்கிறார்கள்; முதற்பதிப்புக்குமட்டும் பதிப்பகம் ஐந்து லட்சம்யூரோவை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே அதிபர் பிரான்சுவா ஹொலாந்துவின் சோஷலிஸ்டுகளின் அரசாங்கத்தை, இடதுசாரிகள் அனைவரும் விமர்சிக்கிறார்கள்; அண்மையில் அரசின் கொள்கை ஏழைகளுக்கானதல்ல எனக்கூறி முக்கியமான அவரது கட்சியைச்சேர்ந்த மூன்று அமைச்சர்கள் (நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர்) பதவி விலக வலது சாரி மனப்பாங்குகொண்ட இவருடைய சோஷலிஸ்ட் கட்சி பிரதமர், மனுவெல் வால்ஸ் புதிய அமைச்சரவை பதவியேற்று இரண்டுவாரங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இந்த அம்மாவின் புத்தகம் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பு 13% பிரெஞ்சுமக்களே அதிபர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. பிரெஞ்சு அதிபர்கள் வரலாற்றில் எந்தவொரு அதிபருக்கும் இப்படியொரு நிலமை உருவானதில்லையாம்.

 

 

  1. அண்மையில் வாசித்த புத்தகம்: பசித்த மானுடம் -கரிச்சான் குஞ்சு

 

முதன் முதலாக வாசித்தேன்.

 

கணேசன் – கிட்டு இரு மனிதர்கள், இருவேறு வாழ்க்கை, பழமை மரபுகளில் ஊறிய குடும்பங்களின் வழித் தோன்றல்கள். வயிற்றுப் பசியைக்காட்டிலும் உடற்பசி அதிகமாக பேசப்படுகிறது. பெண்களை பரத்தைகளாக சித்தரித்திருக்கிறது. இக்காலத்தில் எழுதப்படிருந்தால் ஒரு வேளை Aides நோயைக் கதைநாயகனுக்குக் கொடுத்திருப்பார். இங்கே குஷ்டம். பெண்போகத்தால் வரும் நோய் குஷ்டம் என்ற நம்பிக்கையில் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல். மேற்கத்திய நாவல்களில் தான் நுணுக்கமான அவதானிப்பை கவனித்திருக்கிறேன் எழுதுவதற்கு முன்னால் ஒரு குஷ்ட ரோகியின் உடலை ஈபோல மொய்த்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவ்வளவு நுண்ணிய பார்வை. 1978ல் முதற் பதிப்பு வந்திருக்கிறது. அக்காலத்தில் இப்படியொருநாவல் என்பது மிகப்பெரிய புரட்சிதான். இன்று கற்பனையைக் காட்டிலும் நாவலில் சுய அனுபவங்கள் மேலோங்கி இருக்கற காலம். இந்நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. நோயினை, நோயாளியை, மனித மன விகாரங்களை ஒளிவு மறைவின்றி பேசுகிறது எனவே தனித்துவம் பெற்ற நூல் எனக்கூறலாமா? அதனினும் பார்க்க மேலான தகுதிகள்,  பெருமை சேர்க்கிற கூறுகள் நாவலில் இருக்கின்றன. முதலாவதாக கதை சொல்லியைப் படைத்திருக்கும் விதம். தன்னிலையிலும், படர்க்கையிலும் அவன் கதை தஞ்சை எழுத்துக்களுக்கே உரிய அடர்த்தியுடனும் அழகுடனும் சொல்லப்படிருக்கிறது. மையம் விளிம்பு என்கிற மயக்க நிலையில் கதை நாயகர்கள்.

 

இரு கதை நாயகர்களுமே ஆரம்பகால வாழ்க்கை சுகமானதல்ல. ஏன் கதை முழுவதுமே அவர்கள் வாழ்க்கை கடுமையானதுதான் என்பதைத் தெரிவிக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் இருந்தாலுங்கூட.

 

கணேசன் “சத்திரா போஜா மடா நித்திரா” என்று வாழ்க்கையைத் தொடங்கியவன்:

“ஊரில் எங்கு கல்யாணம், கருமாதி நடந்தாலும் தானும் அம்மாவும் போய்க் காசு வாங்கிகொண்டும் கடுமையான வசவுகள் வாங்கிக்கொண்டும் சாப்பிட்டுவிட்டும் வந்ததெல்லாம் உண்டு. அப்பொழுது எனக்கு ஐந்தாறு வயதிருக்குமா? ” என கடந்தகாலத்தை நினைவூட்டி நமக்கும் “எனது வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது” என்பதை கூச்சமின்றி தெரிவிப்பததன் மூலம் இன்றைய தனது நிலைமைக்கு சப்பைகட்டு கட்டுகிற கணேசன் தாய் தந்தையற்ற அநாதை.

“கிட்டாவின் தந்தை இறந்தபோது அந்தக் குடும்பத்திற்கு ஐந்து மா நிலமும் ஆயிரம் ரூபாய் கடனும் இருந்தது”. ஓர் விதவைத் தாயாராள் வளர்க்கப்பட்டவன்.

 

கணேசனின் இளம்வயதுக்கு பத்மா: “.. நீள மூஞ்சி, சுருட்டை மயிர் அவ்வளவு சேப்பு இல்லை.. கண் ரொம்ப அழகாயிருக்கும்” விசிப்பலகையிலே “மெதுவா அவனை ஒருக்களிக்க சொல்லிவிட்டுத் தானும் படுத்துக்கொள்ளும்” பத்மா.

கிட்டாவுக்கு ஒரு நீலா தன் முகத்தையும் மார்பையும் கிட்டாவின் மேல் படும்படி உராய்ந்து “சூடே ஒரு ருசி.. சேப்பே ஒரு அழகு இல்லையா கிட்டா” என்று கேட்டவள்.

 

இருவர் வாழ்க்கையிலுமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள். இருரையுமே எதிர்பாராத திருப்பங்களுடன வாழ்க்கை அழைத்துசெல்கிறது.

 

அனாதையான கணேசனை ஏற்றிவிட சங்கரியென்றும், ராயர் என்றும், வாத்தியார் என்றும் ரட்சகர்கள் குறுக்கிடுகிறார்கள் ஆனால் அவன் தலையெழுத்தை ‘சிங்க ரவுத்து’ எனும் சனி மாற்றி எழுதுகிறது. விதவை பாலாம்பாளால் வளர்க்கப்பட்ட கிட்டு சாமர்த்திய சாலி. தொட்டதெல்லாம் துலங்குகிறது காரோட்ட கற்றுகொள்ளவந்த கிட்டாவின் வாழ்க்கையில் குறுகிட்ட ராசுவும், செட்டியாரும் அவனை தனவந்தனாக மாற்றுகிறார்கள். இருவர் வாழ்க்கையும் ஏதோ ஒரு அறத்தை சத்தமில்லாமல் போதிக்கின்றன:

 

“இந்த அறிவுக்குப் பழைய நினைவே கனவாகத்தான் தெரிகிறது. தூக்கத்தில் கனவைத் தவறாகக் காண்பதுபோலவே விழித்திருக்கும்போதும் இந்த நனவையும் நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனோ. ஒன்றுமே புரியவில்லையே; பிறகு என்றாவது புரியப்போகிறதோ? ” என்று கேட்கிற கணேசனே இறுதியில் “விழிச்சிண்டிருந்தா எல்லாம் தெரியணுமே, அப்ப எனக்கு ஒண்ணுமே தெரியரதில்லை. நானே இருக்கிறதில்லை அப்பல்லாம் .. ஆனா சந்தோஷம் பொங்கிண்டிருந்தப்பலே தோணும் பின்னாடி.” என்கிறான். கனேசன் தோற்றவனா ஜெயித்தவனா? என்ற கேள்வி படித்து முடித்தபின்பும் நைந்த கயிறை பிடித்திருப்பதுபோல மனதிற் தொங்கிக்கொண்டிருக்கிறது. கடைசி நான்கைந்து பக்கங்களுக்காவே பலநூறுமுறை வாசிக்கலாம்.

 

Series Navigation
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *