மொழிவது சுகம் 8ஜூலை 2017

This entry is part 12 of 16 in the series 9 ஜூலை 2017

 

. « Tout ce que j’ai le droit de faire est-il juste ? » உரிமையின்  பேரால்  செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?.

 

இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில்  இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக தேர்வு செய்திருந்தவர்களுக்கு  தத்துவப் பாடத்தில் கேட்கப்படும் இரண்டு கேள்விகளில்  இரண்டாவது.

இக்கேள்வி சட்டம் நமக்கு அனுமதிக்கிற உரிமைகள் பற்றி பேசுகிறது. அனுமதிக்காத உரிமைகள் அல்லது மறுக்கிற உரிமைகள் பற்றி கேள்வி எழுப்புவதில்லை.  அடுத்தவர் சொத்து உன்னுடையது அல்ல,  சாலை விதிகளை மீறக்கூடாது, இலஞ்சம் கொடுப்பதோ வாங்குவதோ குற்றம் போன்றவையெல்லாம்  சட்டப்படி மறுக்கப்படும் உரிமைகள். சட்டப்படி மறுக்கப்பட்ட உரிமைகளை, அவை அனைத்தையும்  ஏற்று நடப்பது நியாயம் ஆகுமா ? சரியா என்பது இங்கு கேள்வி இல்லை. அனுமதிக்கப்பட்ட உரிமைகளை, சட்டம் வழங்கும் உரிமைகள் மொத்த த்தையும் நாம் செயல்படுத்துதில் அல்லது சொந்தம் கொண்டாடுவதில்  நியாயம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. நீதியா ? என்பதல்ல அறம் ஆகுமா ?

அடுத்தக் கட்டமாக இக்கேள்வியில் ‘உரிமை’, ‘அனைத்தும்’, ‘சரியா ?’, ஆகிய  மூன்று சொற்களையும் விளங்கிக்கொண்டால் விடை கிடைத்துவிடும்.

சட்டமும் உரிமையும் :

உரிமை என்றால் என்ன ? உரிமை என்ற தும் நாம் அச்சொல்லோடு இணைத்துப் பார்ப்பது முதலில் சட்ட த்தை த்தான். இவற்றைத்தவிர மரபு, சமயம், பண்பாடு சார்ந்த உரிமைகளும் உள்ளன.

பொதுவில் உலகில் ஜனநாயக நாடு சுதந்திர நாடு என்ற  சொல்லுக்கு அருகதையுள்ள நாடுகள் அனைத்தும் அடிப்படையாக தமது பிரஜைகளுக்கு அரசியல் சட்டங்களை வகுத்து அதனூடாக சில உரிமைகளை வழங்குகிறது. பின்னர் சற்று விரிவான அளவில் ஒத்திசைவான சமூகத்தைக் கருத்திற்கொண்டு மக்களின் தினசரிவாழ்க்கையைச் சிக்கலின்றி முன்னெடுக்க, அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண  தமது குடிகளின் மரபு, சமயம், பண்பாடு இவற்றினைக் கருத்திற் கொண்டு, நாகரீகமான உலகின் எதிர்பார்பார்ப்பிற்கிணங்க சட்ட வல்லுனர்கள், துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் உதவியுடன் சட்டங்களைத்  தீர்மானிக்து, உரிமைகளை வழங்குகிறார்கள். இவ்வுரிமைகளுக்குப் பாதுகாப்பாக காவல்துறையும், நீதிமன்றமும் உள்ளன.  ஆக இவை சட்டம் அளிக்கும் உரிமை.

 

 மரபு, சமயம், சமூகம் பண்பாடு தரும் உரிமை :

இவ்வுரிமைகளைப் பற்றியும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.  சட்டங்கள் நம்முடைய மரபு, சமயம் போன்றவற்றையெல்லாம் கருத்திற்கொண்டே இயற்றப்பட்டவை என்பது உண்மைதான். இருந்தும் நீதிமன்றமோ, காவல் துறையின் கண்காணிப்போ ஒட்டுமொத்த மனிதர்களின் தினசரி வாழ்க்கைக்கு கடிவாளம் இடமுடியாத நிலையில், சாத்தியமுள்ள களத்தில் ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ ஆகிற  உரிமையுள்ளது. தந்தை வழி சமூகம்  காலம்காலமாக தந்தைக்கு கொடுக்கும் ; ‘நான் குடும்பத்தின் தலைவன்’, ‘நான் மூத்தவன்’, ‘நான் ஆண்’ ; பின்னர் ‘எங்க கிராம வழக்கம்’, எங்க சமயத்தில் குறுக்கிட இவன் யார்’ ; நான் நாட்டாமை, நான் அரசியல் வாதி, போன்ற திமிர்த்தன உரிமைகள் இருக்கின்றன. சட்டத்தை ஏய்க்க, சட்டத்தை வளைக்க, நீதி த்துறையையும் காவல்துறையையும் விலைக்கு வாங்க முடிந்த இடங்களில் இவர்களெல்லாம் தாங்களாகவே  எடுத்துக்கொள்கிற  இதுபோன்ற சட்டங்களை மிதிக்கிற உரிமைகள் குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.   இத்தகைய போக்கிற்கு உலகம் முழுவதும் அவரவர் அரசியல், அவரவர் சமூகம், அவரவர் சமயத்தின் மொழிக்கேற்ப வார்த்தைகளுண்டு.

 

« நான் உரிமையுடன் செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ? »

இக்கேள்வி சட்டத்தை மதிக்கிற, சட்டத்தை வேதவாக்காக நினைக்கிற, , சட்டத்தை நீதியை  கலியுக கடவுளாக நம்புகிற மக்களைப் பார்த்து எழுப்ப்ப்பட்ட கேள்வி . இக்கூட்டத்திலும்  இருவகை மக்கள் இருக்கிறார்கள். ஒருவகையினர் உண்மையிலேயே சட்டத்தை மதிப்பவர்கள் : ஏழைகளும், பெருவாரியான நடுத்தர வர்க்கமும் இந்த வகையினர்தான். சட்டத்தைத தவிர வேறு நாதியில்லை என்றிருக்கும் மக்கள். இவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகள் குறித்தே தெளிவில்லைஎன்கிறபோது தங்கள் உரிமைகளில்  எவற்றை நியாயத்துடன் பிரயோகிக்கிறோம், எவற்றை நியாயமின்றி பிரயோகிக்கிறோம் என்பதுபற்றிய பிரக்ஞையெல்லாம் இருக்குமா ? என்பது ஐயத்திற்குரியது தான்.  இக்கேள்வி மெத்த படித்த, வசதி படைத்த சட்ட த்தை வளைக்கத் தெரிந்த புத்திசாலிகளுக்கு, என வைத்துக்கொள்ளலாம். கல்கத்தா முன்னாள் நீதிபதியும் தனக்கு சட்டப்படி உரிமை இருக்கிறதென சொல்கிறார். முன்னாள் தலைமைசெயலர், விதிமுறைப்படி என்னுடைய வீட்டில் சோதனை இடவில்லை என்கிறார். நிரூப்பிக்கபடாத குற்றம் என்றொரு சொல்லை அகராதியில் ஏற்றிய தமிழினத்தலைவர்கள் பற்றிய வியாசத்தை நீதிபதி சர்க்காரியாவைக் கேட்டால் தெரியும்.  நியாயமற்ற இவ்வித ஒழுங்குமீறல்கள்  தமிழ்நாட்டில் மட்டும் காணக்கிடைப்பதல்ல, சட்ட த்தின் பேரால் குற்றத்தின் தன்மையில் எவ்வித மாற்றமும் இல்லை என்கிறபோதும் வெள்ளையர்கள் விடுவிக்கப்படுகிறார்கள், அமெரிக்க கறுப்பரின மக்களுக்கு மரணதண்டனை  உறுதிசெய்யப்படுகிறதென்பதுதான் வரலாறு, ஒபாமாக்கள் அதிபராகலாம் ஆனால் கறுப்பரினத்திற்கு நியாயமான நீதி என்பது எட்டாக் கனி. ஆக உண்மையில் சட்டத்தின் துணையுடன் இம்மக்களுக்கு நியாயம் மறுக்கப்படுகிறபோது அமெரிக்க நீதிபதிகளைப்பார்த்து நீங்கள் சட்டத்தின் பேரால் வழங்கும் நீதிக்கான உரிமைகள் அனைத்துமே சரியா ? என்ற கேள்வியை எழுப்பவே தோன்றும்.

பிரான்சு நாட்டில் அண்மைக்காலத்தில் அரசியல்வாதிகள் மீது தங்கள் சுயநலத்தின்பொருட்டு, அரசுப்பணத்தை தவறாக கையாண்டிருக்கிறார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சம்பந்தபட்ட அரசியல்வாதிகள் சட்டப்படி நாங்கள் எந்த தவறையும் இழைக்கவில்லை என்றார்கள். ஒருபாராளுமன்ற உறுப்பினர், தங்கள் பணிக்காக  அரசாங்க செலவில் உதவியாளர்களை வைத்துக் கொள்ளலாம் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால யாரை வைத்துக்கொள்ளலாம், அதிகபட்சம் எவ்வளவு ஊதியம் என்பதைப்பற்றிய விளக்கமில்லை என்பதால் அனேக பிரெஞ்சு மக்களவை உறுப்பினர்கள்  தங்கள் மனவியை, பிள்ளைகளை குடும்ப உறுப்பினர்களாக நியமனம் செய்வதும், அவர்கள் தகுதிக்கு மீறிய  ஊதியம் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. (இனி கூடாதென சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்).

இத்தகைய அரசியல்வாதிகளைப்பார்த்து மக்கள் எழுப்பிய கேள்வி « உரிமையின் பேரால நீங்கள் செய்த து சரியா, நியாயம் ஆகுமா ? »  ஹாலந்து நாட்டின் ஓர் அமைச்சர், தமது அமைச்சர் பதவிக்கென வழங்கப் பட்டக் கடனட்டையை, உணவு விடுதி ஒன்றில் குடும்பத்துடன் சாப்பிட பயன்படுத்தினார் என்பது செய்தியான போது, அந்த அமைச்சர் பதவி விலக நேர்ந்த அதிசயக் கதைகளும் பூலோகத்தில் உண்டு.

பொதுவில் பிறருக்கு மட்டுமே சட்டம், நாம் அப்படி இப்படி நடந்துகொள்ளலாம், வரிசை மீறலாம், நம்ம குலமா, நம்ம கோத்திரமா ?, நம்ம கட்சியா ? இத்யாதிகளும் பொருந்திவந்தால், வழக்கறிஞர்கள், குமாரசாமிகள் நீதிபதிகளாக இருந்தால், ஆடிட்டர் கெட்டிக்காரர் என்றால், சாட்சிக்கூண்டில் சாமர்த்தியமாகப் பொய் சொல்லத்  தெரிந்தால், வாக்குகள் விலைபோகுமென்றால் சட்ட த்தின் துணையுடன் எதையும் செய்யல்லாம்.  நியாயம் நமக்கு மட்டும் வளைந்து கொடுக்குமென்றால் சந்தோஷம்தான். ஆனால் மனசாட்சி இருப்பின் அவ்வப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி

« உரிமையின் பேரால் நான் செய்வதைனைத்தும் சரியா » ?

——————————————————————————

 

 

Series Navigation‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடுநூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *