யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 11

author
2
1 minute, 2 seconds Read
This entry is part 1 of 19 in the series 20 நவம்பர் 2016

பி.ஆர்.ஹரன்

 

இக்கட்டுரைத் தொடரின் சென்ற பகுதியில் WRRC மற்றும் CUPA அமைப்புகளைப் பற்றியும், அவற்றுக்கு அன்னிய நாடுகளிலிருந்து வரும் நிதியுதவி பற்றியும் சில சந்தேகங்களைத் தெரிவித்திருந்தோம். அந்தக் கட்டுரை அவர்கள் கவனத்திற்குச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்வமைப்புகள் இணைந்து, அக்கட்டுரையைச் சுட்டிக்காட்டி, அதில் தெரிவிக்கப்பட்டிருந்த சந்தேகங்களுக்குப் பின்வரும் மறுப்பைத் தங்களுடைய இணையதளத்திலும், முகநூல் பக்கங்களிலும் வெளியிட்டுள்ளன. (https://drive.google.com/file/d/0B9uaghHfTnnnTFRHYkxKU1I3a0U/view )

 

WRRC / CUPA அமைப்புகளின் மறுப்பு

 

அந்த அமைப்புகள் கொடுத்த மறுப்பறிக்கையின் தமிழாக்கம் பின்வருமாறு:

suparna-ganguly

9 அக்டோபர் 2016 தேதியிட்ட இணைய இதழில் வெளியான ஒரு கட்டுரையில் WRRC மற்றும் CUPA பற்றிக் கடுமையான ஆதாரமற்றக் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள் பொதுவில் வைக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கான மறுப்புகளை வெளியிடுகிறோம்.

 

 

  • கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து இரு அமைப்புகளும் FCRA-Annual Returns சமர்ப்பித்ததாகத் தெரியவில்லை; – WRRC, CUPA இரு அமைப்புகளுமே ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் FCRA-Annual Returns சமர்ப்பிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் தன்னுடைய இணையதளத்தில் தொடர்ந்து தகவல்களைத் தெரிவிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால் நாங்கள் FCRA-Annual Returns சமர்ப்பித்த விவரம் அதில் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். அது எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளதால், நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. நிதியாண்டு 2014-15 வரை நாங்கள் சமர்ப்பித்துவிட்டோம் என்பதையும், நிதியாண்டு 2015-16க்கான அறிக்கை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

  • WRRC, CUPA இரு அமைப்புகள் இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் அல்ல இது கடுமையான பொய்க்குற்றச்சாட்டு. இரு அமைப்புகளுமே ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்திய விலங்குகள் நலவாரியத்தினால் (AWBI) அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள். இந்திய விலங்குகள் நலவாரியம் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இருக்கும், அரசியல் சாஸனப்படி அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வமான அமைப்பு. இது விலங்குகள் பாதுகாப்பு மற்றும் அதற்கான சட்டங்கள் இயற்றும் விஷயங்களில் மத்திய அமைச்சகத்துக்கு ஆலோசனைகள் தந்து உதவும் அமைப்பு.

 

 

  • Catholic Relief Services (CRS), Baltimore (USA) என்கிற அமைப்பிடமிருந்து சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களுக்கும், மனநலம் குன்றிய குழந்தைகளுக்காகவும் நன்கொடை பெறப்பட்டுள்ளது .இது உண்மையல்ல. அந்த மாதிரியான மத அமைப்பிடம் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. விலங்குகள் நலன் மற்றும் அதற்கான உதவிகள் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் நாங்கள் நன்கொடை பெறுவதில்லை. குறிப்பிட்ட தகவல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் FCR இணையதளத்தில் எங்களுக்குத் தெரியாமல் எங்கள் பெயரில் துரதிர்ஷ்டவசமாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான காரணங்கள் எங்களுக்குத் தெரியவில்லை. குறிப்பிட்டத் தவறுகள் திருத்தப்படுவதற்கான முறையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அரசு இணையதளங்களில் தவறுகள் ஏற்படுவது சாதாரண விஷயம் என்பதும் அவற்றைத் திருத்த அதிக காலம் பிடிக்கும் என்பதும் வாசகர்களுக்கு தெரிந்ததே!

 

 

  • நாங்கள் ஆலயப்பாரம்பரியத்தின் நலனுக்கு எதிராக இயங்குவதாகக் கட்டுரை குற்றம் சாட்டுகிறது. இது அபத்தம்! விலங்குகளை மீட்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது என்பதை வலியுறுத்துகிறோம். எங்களுடைய யானைகள் மீட்புப் பணியை அவமதிக்கும் நோக்கத்துடன் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் எண்ணுகிறோம். WRRC அமைப்பினால் மீட்கப்பட்ட எந்த யானையும் அதன் உரிமையாளர்களால், (தனிநபர் அல்லது நிறுவனம்) எங்களுடன் கலந்து ஆலோசித்து, விவாதித்த பின்னரே, WRRC வசம் மனமுவந்து அளிக்கப்படுகின்றன. பல உரிமையாளர்கள், இனி யானைகளைக் கட்டிப்பராமரிக்கும் பாரம் தங்களிடமிருந்து நீங்கியது என்று நிம்மதியைத்தான் தெரிவித்திருக்கிறார்கள்.

 

 

  • பெங்களூரு நகரில் லக்ஷ்மி என்கிற யானையின் நலன் கருதி நன்கொடை வேண்டி நாங்கள் வைத்திருந்த போஸ்டர்களில் மத நிறுவனங்களை நாங்கள் விமரிசனம் செய்துள்ளதாகக் கட்டுரை குற்றம் சாட்டுகிறது. மீண்டும், இது அபத்தம். அந்த போஸ்டரைப் படிக்கும் எவரும் அது பொது மக்களின் ஆதரவுக்கான வேண்டுகோள் என்பதைப் புரிந்துகொள்வர். தன்வசம் வைத்துள்ள யானைகளின் பராமரிப்பிற்காக WRRC அமைப்புக்கு நிதி தேவைப்படுவதால் பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெறவேண்டியுள்ளது. இந்தியாவில் யானைகள் சித்திரவதைப் படுத்தப்படுவது பற்றி அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் ஏற்கனவே பொதுத்தளங்களில் இருப்பவை ஆகும். சிறைப்படுத்தப்பட்ட யானைகளைப் பற்றி பத்து ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கைகளைப் படிக்க விருப்பமுள்ளவர்கள் எங்கள் இணையதளத்தில் சென்று படிக்கலாம். இந்தக் கம்பீரமான விலங்குகளின் பரிதாபகரமான நிலைமை அந்த அறிக்கைகளில் தெளிவாக விளங்கும்.

 

 

  • WRRC மற்றும் CUPA அமைப்புகளுக்கு “அன்னிய” அமைப்புகள் உதவி புரிகின்றன என்று அந்தக் கட்டுரை சந்தேகங்கள் தெரிவித்துள்ளது. உண்மையாகவே Crystal Rogers Animal Welfare Trust (UK), CUPA-US (USA), மற்றும் Help Animals India (USA) ஆகிய வெளிநாட்டு அமைப்புகள் எங்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளன. இவை எல்லாமே விலங்குகள் நல அமைப்புகள். உலகெங்கும் உள்ள மக்கள் விலங்குகளின் நலனுக்கு நன்கொடை அளிக்க முன்வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஜீவகாருண்யம் என்பது உலகளாவிய கோட்பாடு.

 

 

எங்கள் WRRC மற்றும் CUPA அமைப்புகளின் பணிகளைப் பின்பற்றிக் கவனிப்பவர்களுக்கும், எங்கள் பிராணிகள் பராமரிப்பு வளாகங்களுக்கு நேரில் வந்து பார்ப்பவர்களுக்கும், விலங்குகளின் நலனுக்குச் சேவை செய்வதைத்தவிர வேறு எந்தக் குறிக்கோளும் எங்களுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரியும். மாற்று வழியில் சென்று பொதுமக்கள் மனதில் தவறான எண்ணங்களைத் தோற்றுவிக்க முயல்பவர்கள்தான் மறைமுக நோக்கங்கள் கொண்டவர்கள். இது போன்ற குற்றச்சாட்டுக்களைக் கவனத்துடன் மதிப்பிட்டு, எங்கள் பணிகளைப் பார்வையிட்டுப் பின்னர் முடிவுக்கு வருமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்வோம்.

 

இறுதியாக, எங்களை விமரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் விரயம் செய்வதற்குப் பதிலாக, விலங்குகள் நலனுக்குச் சேவை செய்ய இணையுங்கள். சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்கு மட்டுமே செய்யவேண்டிய சேவைகள் நிறைய இருக்கின்றன. நீங்கள் நிதி பெற்றுத்தரலாம், நிலங்கள் வாங்கித்தரலாம், விலங்குகள் நல மருத்துவர்களை அழைத்து வரலாம், உயிரியல் மற்றும் உணவியல் போன்ற பாடங்களைக் கற்று உங்களுடைய சொந்த புனர்வாழ்வு மையங்களை அமைத்து, சித்தரவதை செய்யப்பட்ட, ஊனமுற்ற யானைகளைத் திறம்படப் பராமரிக்கலாம்.

 

அந்த மாதிரியான பணிகளை எடுத்துச்செய்ய விருப்பமில்லாவிட்டாலும், அந்தப் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யும் அமைப்புகளின் சேவைகளுக்குத் தடங்கல் புரியாமலாவது இருங்கள்.

 

மேலும் சில விளக்கங்கள்

 

மேற்கண்ட மறுப்புகளில் இரண்டாவதாகச் சொல்லப்பட்டுள்ளது மட்டுமே தெளிவாக உள்ளது. அதாவது இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சட்டப்பூர்வமான அமைப்பான இந்திய விலங்குகள் நலவாரியம் (AWBI), WRRC மற்றும் CUPA ஆகிய இரு அமைப்புகளையும் அங்கீகரித்துள்ளது என்பதால், அவற்றை இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளாகக் கொள்ளலாம்.

 

மற்றபடி, எனது கட்டுரையில் நான் குறிப்பிட்டு எழுப்பியிருந்த சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை என்று எனக்குத் தோன்றியதால், WRRC/CUPA அமைப்புகளின் முக்கிய நிர்வாகியான திருமதி.சுபர்னா கங்கூலி அவர்களை நேரடியாக மின் அஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டு, மீண்டும் என் சந்தேகங்களை மேலும் தெளிவாக முன்வைத்து, அவரிடம் விளக்கங்கள் கேட்டேன். மேலும், அவர் அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ள FCRA-Annual Returns-களை இணையதளத்தில் வெளியிடுமாறும் ஆலோசனை சொன்னேன்.

 

எனக்குப் பதிலளித்த சுபர்னா கங்கூலி அவர்கள், என் ஆலோசனைப்படி FCRA-Annual Returns-களை தங்களது WRRC இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்து என் ஆலோசனைக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், அன்னிய மத நிறுவனங்களிடமிருந்து தாங்கள் நிதி பெறுவதில்லை என்றும், அவ்வாறு உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என்றும் மீண்டும் தெரிவித்தார்.

srirangam-andal

ஆலயப்பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிடுவதைத் தாங்கள் பெரும்பாலும் தவிர்ப்பதாகத் தன் மடலில் குறிப்பிட்டுள்ள அவர், கோவில் யானைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கோவில்களுக்குக் கொண்டுவரப்படும் யானைக் கன்றுகள் காடுகளிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாகக் கொண்டுவரப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், WRRC இணையதளத்தில் 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான FCRA-Annual Returns மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. 2010-11 மற்றும் 2011-12 நிதி ஆண்டுகளுக்கான FCRA-Annual Returns வெளியிடப்படவில்லை என்று நான் மீண்டும் சுட்டிக் காட்டியபோது, அவர்களுடைய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டபோது அந்த அறிக்கைகள் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை எடுத்து வெளியிடுவதாகவும் பதிலளித்துள்ளார்.

 

Catholic Relief Services (CRS), Baltimore (USA) என்கிற அமைப்பிடமிருந்து சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களுக்கும், மனநலம் குன்றிய குழந்தைகளுக்காகவும் நன்கொடை பெறப்படவில்லை என்று மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் FCRA அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள அமைப்புகளில் தங்களின் அமைப்புகளும் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டி, ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் FCRA-Annual Returns-களைத் தவறாமல் சமர்ப்பிப்பதாகவும் கூறியுள்ளார்.

 

ஆனால், CUPA அமைப்பின் இணையதளத்தில் FCRA-Annual Returns எதுவும் வெளியிடப்படவில்லை. CUPA மத அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அமைப்பாகும். (CUPA is registered as a Charitable Trust under Religious and Charitable Endowments CUPA is granted exemption of Income Tax under Section 80G for all donations and has been given permission to accept foreign contributions under the Foreign Contributions Regulations Act (FCRA). CUPA is also registered with the Animal Welfare Board of India (AWBI). http://cupabangalore.org/about-cupa/ ). இதைப் பற்றியும் அவருக்குச் சுட்டிக்காட்டியுள்ளேன். CUPA இணையதளத்திலும் அவர் FCRA-Annual Returns தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

 

மேலும், யானைகளின் நலன்களுக்காகத் தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லி, நீதிமன்றங்களில் வழக்காடிவருவதையும் குறிப்பிட்டுள்ளார் சுபர்னா கங்கூலி. ஒரு ஹிந்துவாக ஆலயப் பாரம்பரியங்களை மதிப்பதாகவும், அதே சமயத்தில் கோவில்களில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும், அவ்வாறு பராமரிக்கப்படத்தக்க சூழல் கோவில்களில் இல்லை என்றும், யானைகளைப் போன்ற பெரிய வன விலங்குகள் காடுகளில் இருப்பதே சரி என்று தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

thiruvidai-marudhur-gomathi-3

WRRC, CUPA போன்ற அமைப்புகளின் கருத்து இதுவாக இருந்தாலும், ஆலய நிர்வாகங்களும் தேவஸ்தானங்களும் கோவில்களில் பல்வேறு சம்பிரதாயங்களுக்கு யானைகள் வேண்டும் என்கிற முடிவில் தீர்மானமாக இருக்கின்றன. எனவே, நீதிமன்றங்கள் இவ்விஷயத்தை எவ்வாறு அணுகப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

கோவில்களில் தொடரும் பிரச்சனைகள்

 

திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி கோவில் யானை கோமதி சந்தித்துவரும் பிரச்சனைகள் பற்றி இந்தக் கட்டுரைத் தொடரின் மூன்றாவது பகுதியில் ஏற்கனவே பார்த்தோம். கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த யானை கோவில் வளாகத்தில் ஒருவரைக் கீழே தள்ளிவிட்டு, வெளியே சாலையில் மிரண்டு ஓடியதாகவும், அதைக் கட்டுப்படுத்த பாகன்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அடுத்த நாள் தினசரிகளில் செய்தி வந்தது. இதனைத் தொடர்ந்து 16 ஆகஸ்டு அன்று பிராணிகள் நல ஆர்வலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவருமான திருமதி.ராதாராஜன் அவர்கள் திருவிடைமருதூருக்கு நேரில் சென்று கோவில் நிர்வாகிகளையும் அறநிலையத்துறை அதிகாரிகளையும் சந்தித்தார்.

 

கோமதியைப் பராமரிக்கும் பாகன் நடந்த சம்பவத்தைப் பற்றி வெவ்வேறு விளக்கங்கள் கொடுத்து குழப்பியதாகவும், பாகனின் கொடுமைகள் தாங்கமுடியாமல் கோமதி கோவிலுக்கு வெளியே ஓடியிருக்கலாம் என்றும், பாகனின் ஒரு கால் வீங்கியிருப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர். தகவல்களைக் கேட்டறிந்த ராதாராஜன் ஒரு அறிக்கையை இந்திய விலங்குகள் நலவாரியத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்.

 

ஏற்கனவே இரண்டு பேரைத் தாக்கியுள்ள கோமதி, 2009-லிருந்து முறையாகப் பராமரிக்கப்படாமல் ஒரு சிறிய கூடு போன்ற இடத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தாள் என்று பார்த்தோம். அந்தச் சமயத்திலேயே கோவிலைப் பராமரித்து வரும் திருவாவடுதுறை ஆதீனமடம், மாவட்ட ஆட்சியர், வனத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகியோருக்கு, யானையைத் தங்களால் பராமரிக்க முடியவில்லை என்றும், அவர்கள் யானையைக் கோவிலிலிருந்து வேறு இடத்துக்கு மாற்ற ஆவன செய்யவேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், வனத்துறையும் எந்த பதிலையும் அனுப்பவில்லை. ஆனால் இந்து அறநிலையத்துறை யானையை எடுத்துக்கொள்ளவும், வேறு இடத்துக்கு மாற்றவும், சில லக்ஷ ரூபாய்கள் பணம் கேட்டுள்ளது. அவ்வளவு பணம் தங்களால் கொடுக்க இயலாது என்று மடத்து நிர்வாகம் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது.

 

நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, திருவாவடுதுறை ஆதீனமட நிர்வாகம், தாங்கள் கோமதியை நன்றாகப் பராமரித்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும், யானை குளிப்பதற்கு “Shower” முதலிய வசதிகள் செய்துள்ளதாகவும், சத்தான உணவுகள் கொடுக்கப்படுவதாகவும், நீதிமன்றத்தில் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இந்திய விலங்குகள் நலவாரியக் குழு மீண்டும் திருவிடைமருதூர் சென்று பரிசோதனை செய்தபோது, கோமதியின் நிலையில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை என்பதையும், பெரிதாகப் பேசப்பட்ட “Shower” மனிதர்கள் குளிப்பதைப் போன்றதுதான் என்பதையும் கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு அறிக்கைத் தயார் செய்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

 

வழக்கு மீண்டும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மடத்து நிர்வாகம், கோமதியை வைத்துப் பராமரிக்கத் தன்னிடம் போதுமான நிதியும் ஆதாரங்களும் இல்லை என்றும், இனிமேலும் அந்த யானையை வைத்துப் பராமரிக்க இயலாது என்றும் கூறியுள்ளது.

 

ஏற்கனவே கூடலழகர் கோவில் யானையைப் பராமரிக்க வனத்துறை மாதம் ரூபாய் மூன்று லக்ஷம் தேவைப்படும் என்று கூறியிருந்ததையும், WRRC அமைப்பு மாதம் ரூபாய் 70,000/- போதும் என்று கூறியிருந்ததையும், மடத்து நிர்வகத்தின் மனுவையும், இந்திய விலங்குகள் நலவாரியத்தின் அறிக்கையையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், மஹாலிங்கஸ்வாமி கோவில் யானை கோமதியை WRRC அமைப்பே தன்னுடைய புனர்வாழ்வு மையத்துக்குக் கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்டது.

 

இதனிடையே கடந்த நவராத்திரித் திருவிழாவில் ஒருநாள், ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளை ஒரு காலைத் தூக்கி மூன்று கால்களால் நொண்டியடிக்கச் செய்து தாயாரின் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளச் செய்ததும், அதை “Mouth Organ” என்று சொல்லப்படும் சிறிய இசைக்கருவியை வாசிக்கச் செய்ததும் நாளிதழ்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தியாக வெளியாயின. ஆண்டாள் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மூன்று கால்களால் நொண்டியடிக்கும் காட்சியின் காணொளியும் வெளியாகியது. இந்த நிகழ்வை “ஆலயப் பாரம்பரியம்” என்று ஒரு சாரார் கூற, இது சித்திரவதை என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கொதித்து எழுந்தனர்.

 

இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட இந்திய விலங்குகள் நலவாரியம், திருவிடைமருதூர் கோவில் யானை கோமதி பற்றிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆண்டாள் நொண்டியடிக்கும் காணொளியைச் சமர்ப்பித்து, சம்பிரதாயம் என்கிற பெயரில் யானைக் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. அதைக் கவனத்தில் எடுத்துகொண்ட உயர் நீதிமன்றம் அந்நிகழ்வுக்கு விளக்கம் கேட்டு இந்து அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

 

மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டாளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் எவ்வளவு மோசமானது என்பதையும் நாம் ஏற்கனவே இக்கட்டுரைத் தொடரின் மூன்றாம் பகுதியில் பார்த்திருக்கிறோம்.

 

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

 

திருவிடைமருதூர் கோவில் வழக்கும் சரி, ஸ்ரீரங்கம் கோவில் நிகழ்வும் சரி, நமக்குச் சில சந்தேகங்களை எழுப்புகின்றன.

 

கோவில் நிர்வாகங்கள் உண்மையிலேயே யானைகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளனவா? யானை நொண்டியடித்துச் சென்று பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வதையும், இசைக்கருவி வாசிப்பதையும் பாரம்பரியம் என்று சொன்னால், ஆலயப் பாரம்பரியம் என்பது உண்மையிலேயே என்ன? இந்த மாதிரியான சம்பிரதாயங்கள் எல்லாம் சாஸ்திரங்களிலோ அல்லது வேத, ஆகம நூல்களிலோ சொல்லப்பட்டுள்ளனவா? போன்ற சந்தேகங்கள் நம் மனதில் எழுகின்றன.

 

 

இவற்றைப் பற்றி மேற்கொண்டு வரும் பகுதிகளில் பார்ப்போம்

 

(தொடரும்)

 

 

 

 

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    v narayanana says:

    this will start new debate.Already all are against our Jallikattu.Now they entered into Elephant area.But temple authorities should not allow them to point out small issues.Now Target is changed I think.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *