யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–16

author
0 minutes, 10 seconds Read
This entry is part 7 of 14 in the series 18 ஜூன் 2017

பி.ஆர்.ஹரன்

 

சிறைப்படுத்தப்பட்ட யானைகள் விஷயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. சில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. விலங்குகள் நல அமைப்புகள், “யானைகளைக் கோவில்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அவ்விடங்களில் அவைகளைச் சரியாகப் பராமரிப்பதில்லை; மேலும் கடுமையாகத் துன்புறுத்துகிறார்கள். கோவில் திருவிழாக்களில் அவைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. யானைகளை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று யானைப் பாகன்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் முறையாகப் பராமரிக்கிறார்களா இல்லையா என்பதைக் கோவில் தேவஸ்தானங்களோ, யானைகளின் உரிமைதாரர்களோ மேற்பார்வைப் பார்ப்பதில்லை. ஆகவே அவற்றை அவ்விடங்களிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும்” என்று கூறுகின்றன.

 

ஆனால் ஆலயப்பாரம்பரியப் பிரியர்களும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், “யானைகள் பலநூற்றாண்டுகளாக கோவில்களுடனும் கோவில் பூஜைகள் மற்றும் திருவிழாக்களுடனும் தொடர்பு கொண்டவை. மேலும் யானைகளைப் பழக்கப்படுத்தும் பாரம்பரியமே நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருவது. எனவே மனிதனால் பழக்கப்படுத்தப்படும் யானைகளைச் சிறைப்பிடிக்கப்பட்டவை என்று சொல்வதே தவறு. யானைகளின் நலன் என்கிற பெயரில் அன்னிய நிதியுதவியுடன் இயங்கும் அரசு சாரா அமைப்புகள் ஹிந்துக்களின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் கோவில் திருவிழாக்களையும் கெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. கோவில்களிலிருந்து யானைகளை நீக்குவதன் மூலம் கஜபூஜை போன்ற பாரம்பரியச் செயல்பாடுகளையும், கும்பாபிஷேகங்கள், உற்சவங்கள் போன்ற கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவதையும் அழிப்பதே அவர்கள் குறிக்கோள். இதற்கு அனுமதிக்க முடியாது” என்று கூறுகின்றன.

 

கடந்த 15 பகுதிகளில் நாம் விவரமாகப் பார்த்த வகையில், இரு சாராருக்குமான சாதக பாதகமான விஷயங்களைப் பட்டியலிடுவோம்.

 

விலங்குகள் நல அமைப்பினருக்குச் சாதகமான விஷயங்கள்

 

  • கோவில் யானைகள் கன்றாக இருக்கும்போதே தாய் யானைகளிடமிருந்து பிரித்து எடுத்து வரப்படுகின்றன. அதன் பிறகு அவைகளின் வாழ்க்கை இறுதிவரை தனிமையிலேயே கழிகின்றது. குடும்பம், குழு, போன்ற சூழலில் வளர்ந்து வரவேண்டிய ஒரு விலங்கை, அது கன்றாக இருக்கும்போதே தாயிடமிருந்தும் குடும்பத்திடமிருந்தும் பிரித்து எடுத்துத் தனிமைப்படுத்துவது கொடுமை. தனிமையினால் அது மனத்தளவில் பாதிக்கப்படுகின்றது

 

  • இயற்கையான வனச்சூழலில் சுதந்திரமாகத் திரிந்து வளர வேண்டிய ஒரு விலங்கை, சிறு கான்க்ரீட் கட்டிடத்தில் சங்கிலிகளால் கட்டிவைத்து, அதற்குத் தேவையான உணவும் நீரும் இன்றி அதைக் கஷ்டப்படுத்துவதும் கொடுமை. தேவையான உணவும் நீரும் இன்றி வளர்க்கப்படுவதால், அவை பலவிதமான உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளாகின்றன.

 

  • இயற்கையான நிலத்தில் ஊன்றி நடப்பதற்கே படைக்கப்பட்ட யானையின் பாதங்கள், கான்க்ரீட், கிரானைட், தார்ச்சாலை போன்ற இடங்களில் நிற்கவும் நடக்கவும் வேண்டியிருப்பதால் விரைவில் புண்ணாகின்றன.

 

  • யானையைப் பராமரிக்கும் பாகன்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வதில்லை; யானைகளை அன்புடன் நடத்துவதில்லை; பெரிதும் துன்பப்படுத்துகிறார்கள்; கோவில் யானைகள் மட்டுமல்லாமல் தனியார் யானைகளைப் பராமரிக்கும் பாகன்களும் பெரும்பாலும் முறைகேடாகத்தான் நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்தோம்.

 

  • பல கோவில்களில் கஜபூஜை என்கிற சம்பிராதயம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. யானைகள் வெறும் காட்சிப் பொருளாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. பாகன்கள், தங்களுடைய பிழைப்பிற்காக யானைகளைப் பிச்சை எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பலவகையான தின்பண்டங்களையும் பழங்களையும் கொடுப்பதால் அவற்றை உண்ணும் யானைகள் அஜீரணக் கோளறு, உடல் பருமன் போன்ற வியாதிகளுக்கு உள்ளாகின்றன.

 

  • தேவையான உடற்பயிற்சி (நடைப்பயிற்சி, சேற்றுக் குளியல், குளம் அல்லது ஏரி போன்றவற்றில் குளியல், போன்றவை) இல்லாததாலும் நோய்வாய்ப்படுகின்றன.

 

  • தேவையான நேரத்தில் முறையான மருத்துவ வசதியும் கொடுக்கப்படுவதில்லை. அதனால், கோவில் யானைகள் இறந்து போகின்றன. குறைந்த வயதிலேயே இறந்து போகின்றன என்பதைப் பல உதாரணங்களின் மூலம் பார்த்தோம்.

.

 

  • தனியார் வசம் உள்ள யானைகளின் நிலை மேலும் மோசம். அரசாங்கமும், யானைகளை வைத்துப் பராமரிக்கும் சக்தி வாய்ந்தவர்களா இல்லையா என்பதையெல்லாம் பரிசோதிக்காமல் ஆட்டோ ஓட்டுனர்கள் போன்றவர்களுக்கெல்லாம் உரிமம் வழங்குவதைப் பார்த்தோம். யானைகளை வெறும் வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தும் தனியார் உரிமைதாரர்கள், அவற்றின் பராமரிப்புக்குத் தேவையான நிதியை ஒதுக்குவதில்லை என்பதையும் பார்த்தோம்.

 

  • மொத்தத்தில், கோவிலாக இருந்தாலும் சரி, தனியார் வசமாக இருந்தாலும் சரி, சிறு வயதில் குடும்பத்திடமிருந்தும் தாயிடமிருந்தும் பிரித்து எடுத்து வரப்படுவது முதல் இறப்பது வரை தனிமையும் துன்பமுமே வாழ்க்கையாக இருக்கின்றன என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் மரண எண்ணிக்கை சமீப காலங்களில் மிகவும் அதிகமாகி வருகின்றது.

 

  • அரசுகளும், வனத்துறையும், கால்நடைப் பராமரிப்புத்துறையும், இந்து அறநிலையத்துறையும், தேவஸ்தானங்களும் பொதுவாகவே பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றது. யானைகள் மட்டுமல்லாமல் பசுக்கள் பராமரிப்பும் மிகவும் மோசமான நிலைகளில் இருக்கின்றது. வீட்டுப் பிராணியான பசுவையே ஒழுங்காகப் பராமரிக்க முடியாதவர்கள் வனவிலங்கான யானையை எவ்வாறு பராமரிப்பார்கள், என்கிற கேள்வியில் ஞாயம் இல்லாமல் இல்லை.

 

  • ஆன்மிகப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும், கோவில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றெல்லாம் ஹிந்து கலாச்சாரத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் ஹிந்து அமைப்புகள் ஒன்று கூட கோவில் கோசாலைகள் ஒழுங்காக முறையாக நடைபெறுகின்றனவா என்பதைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. யானைகளின் நலனில் அக்கறை செலுத்துவதும் கிடையாது.

 

ஆன்மிக ஆர்வலர்களுக்குச் சாதகமான அம்சங்கள்

 

  • இன்றைய காலக்கட்டத்தில் “சிறைப்படுத்தப்பட்ட யானைகள்” என்று கூறப்பட்டாலும், யானைகள் பல்வேறு ராஜாங்க, ஆன்மிகக் காரியங்களுக்குப் பழக்கப்படுத்தப்படுவது என்பது தொன்று தொட்டு இருந்து வரும் பாரம்பரியம் என்பதை மறுக்க முடியாது.

 

  • பாரத தேசத்தில் யானைகள் தொன்றுதொட்டுப் பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றன என்கிற உண்மைக்கு, இதிஹாசங்கள், புராணங்கள், சாஸ்திர நூல்கள், மருத்துவ நூல்கள், இலக்கியங்கள், காவியங்கள் என்று அனைத்துவிதமான சான்றுகளும் ஏராளமாக இருக்கின்றன.

 

  • கோவில்களுக்கும் யானைகளுக்கும் உள்ள சம்பந்தமும், கோவில் சம்பிரதாயங்களில் யானைகள் பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதற்கும் ஆகம நூல்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. அதை நிரூபிக்கும் விதமாக கோவில் சிற்பங்களிலும், கோவில்களின் கட்டிடக் கலையிலும் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன.

 

  • சமூகச் சூழலிலும், ஆன்மிகப் பாரம்பரியத்திலும், போர்கள் உட்பட அனைத்துவிதமான ராஜாங்கக் காரியங்களிலும், யானைகள் பழக்கப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதற்கு நமது பாரத தேசத்தின் குறைந்த பட்சமான ஐயாயிரம் ஆண்டு வரலாறே நிரூபணமாக இருக்கின்றது.

 

  • தற்போது செயல்பட்டு வரும் விலங்குகள் நல அமைப்பினர் அன்னிய நாடுகளின் நிதியுதவியைப் பெறுகின்றன. அன்னிய தேச மற்றும் அன்னிய மத அமைப்புகளிடமிருந்தும் நிதியுதவி பெறுகின்றன என்பதையும் மறுக்க முடியாது. WRRC மற்றும் CUPA போன்ற அமைப்புகளே இவ்வுண்மைக்குச் சான்று.

 

  • விலங்குகள் நலன் என்கிற பெயரில் ஹிந்து ஆன்மிகப் பாரம்பரியத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டிலும் உண்மை உள்ளது. இங்கிலாந்து நாட்டு லிஸ் ஜோன்ஸ் எழுதிய கட்டுரையிலும், கனடா நாட்டு சங்கீதா ஐயர் தயாரித்த ஆவணப்படத்திலும் கோவில் கலாச்சாரம் கொச்சைப்படுத்தப்படுவதைப் பார்க்க முடிந்தது.

 

  • மஹாராஷ்டிர மாநிலம் ஷிங்னாபூர் சனீஸ்வரன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி, சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி, ஆலயங்களில் ஆடைக்கட்டுப்பாடு, திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவில் நிலவறைச் செல்வங்கள், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் விளையாடப்படும் ‘தஹி ஹண்டி’, ராமஜன்ம பூமி போன்ற அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றங்கள் ஹிந்துக்களுக்கு எதிராகவே தீர்ப்புகளும் கருத்துக்களும் தெரிவித்து வருகின்றன. எனவே அன்னிய நிதியுதவி பெறும் விலங்குகள் நல அமைப்புகள் நீதிமன்றங்களுக்கு யானைகள் பற்றிய பிரச்சனையையும் கொண்டு சென்ற செயல் சந்தேகத்திற்கு இடமளிப்பதை மறுப்பதற்கில்லை.

 

பிரச்சனைகள்ஒரு அலசல்

 

இவ்விஷயத்தில், விலங்குகள் நல அமைப்புகள் மற்றும் ஆன்மிகப் பாரம்பரிய ஆர்வலர்கள் ஆகிய இரு சாராரிடமும் நியாயங்களும் இருக்கின்றன, குறைகளும் இருக்கின்றன. கோவில்களிலும், தனியார் வசமும், சர்க்கஸுகளிலும் யானைகள் சிறைப்படுத்தப்பட்ட நிலையில், முறையான பராமரிப்பின்றி, தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் எதுவுமின்றி துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் யானைகளை நன்றாகப் பராமரித்து வரும் கோவில்களும் (எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்) இருக்கின்றன என்பதையும் விலங்குகள் நல அமைப்புகள் மறுக்க முடியாது.

 

கோலாபூர் மஹாலக்ஷ்மி கோவில் யானை சுந்தர், கர்நாடகத்தில் தேக்கு மரக்கிடங்கில் வேலை பார்த்து வந்த அனீஷா, தமிழகத்தில் தனியார் வசம் இருந்த லக்ஷ்மி, கர்நாடக மாநிலக் கோவில் ஒன்றில் பணியாற்றி வந்த மேனகா போன்ற யானைகள் அவைகள் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்ட இடங்களிலிருந்து மீட்கப்பட்டு தற்போது விலங்குகள் நல அமைப்புகளின் புனர்வாழ்வு மையங்களில் உடல்நலன் தேறி வருகின்றன. இவைகள் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டதையோ, மீட்கப்பட்டு தற்போது முறையான பராமரிப்பில் உள்ளதையோ ஆன்மிகப் பாரம்பரிய ஆர்வலர்கள் மறுக்க முடியாது.

 

அதே சமயத்தில் இவ்வாறு மீட்கப்பட்ட யானைகளின் பராமரிப்புக்காக நிதி திரட்டும் செயல்பாடுகளில் தாங்கள் ஹிந்து கோவில்களையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் கொச்சைப்படுத்துவதை விலங்குகள் நல அமைப்புகளும் மறுக்க முடியாது. கோவில்களிலிருந்து யானைகளை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மனுவே உறுதி செய்கிறது. மேலும் வெளிநாடுகளிலிருந்து இவர்கள் பெறும் நிதியைப் பற்றிய கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சமர்ப்பிப்பதில் சந்தேகத்திற்கு இடம் தரும் விதத்தில்தான் செயல்படுகிறார்கள்.

 

மற்றொரு புறம் தொன்று தொட்டுப் பல நுற்றாண்டுகளாக ஆலயப் பாரம்பரியத்திலும், கோவில் சம்பிரதாயங்களிலும் யானைகள் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளன, அவைகளின் பயன்பாடுகளை நிறுத்த முடியாது எனக் கூறும் பாரம்பரிய ஆர்வலர்களும், ஹிந்து அமைப்புகளும், பழம்பெருமையை மட்டும் பேசிக்கொண்டு, இன்றைய காலகட்டத்தில் செயல்படாமல் இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. கோவில்களில் யானைகளின் பங்கைப் பற்றிப் பெருமைப்படும் இவர்கள் அதே கோவில்களில் யானைகள் ஒழுங்காக, முறையாக, தேவையான அடிப்படை வசதிகளுடன் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். வெளியே சில கோசாலைகள் வைத்திருந்தாலும், கோவிலில் உள்ள கோசாலைகளை அறநிலையத்துறையும் தேவஸ்தானங்களும் முறையாகப் பராமரிக்கின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

 

இந்து அறநிலையத்துறை கோவில் கோசாலைகளைச் சரியாக நடத்துவதில்லை என்று அத்துறையின் மீது உயர் நீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்து, அதனைத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமாறு செய்து வருபவர் ராதாராஜன் என்கிற ஒரு தனிப் பெண்மணி. இவர் தேசபக்தியும் ஹிந்து கலாச்சாரப் பற்றும் நிறைந்தவர். இவர் போன்ற தேசிய ஹிந்து கலாச்சாரப் பின்னணி கொண்ட பிராணிகள் நல ஆர்வலர்களின் ஆலோசனையைக் கேட்டு கோசாலைகள் மற்றும் யானைக் கொட்டாரங்கள் அமைப்பதில் ஹிந்து அமைப்புகள் கவனம் செலுத்தலாம்.

 

தற்போது விலங்குகள் நல அமைப்புகள் கோவில் யானைகள் விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு, ஹிந்து ஆன்மிகப் பாரம்பரியத்துக்கு எதிரான சதி என்றெல்லாம் அவர்கள் மீது குற்றம் சுமத்தி எதிர்ப்புத் தெரிவிக்கும் அதே சமயத்தில், யானைக் கொட்டாரமோ அல்லது ஒரு புனர்வாழ்வு மையமோ துவக்க முயற்சி செய்வதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். கோவில் திருவிழாக்களுக்கும் கும்பாபிஷேகங்களுக்கும் லக்ஷக்கணக்கில் நிதியுதவி செய்யும் செல்வந்தர்கள் ஹிந்து சமூகத்தில் எத்தனையோ பேர் இருக்க, அவர்களை அணுகி கோசாலைகள் அமைப்பதற்கும், யானைகள் கொட்டாரம் அமைப்பதற்கும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்.

 

கோவில்களில் பசுக்களும் யானைகளும் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது கண்களுக்கு முன்னே நிதர்சனமாகத் தெரியும் உண்மை. இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, அதை முறைப்படுத்த என்னமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதைப் பற்றியும் ஹிந்து அமைப்புகள் சிந்திக்க வேண்டும். நாம் எதுவுமே செய்யாமல் இருந்தால், மற்ற அமைப்புகள் உள்ளே நுழையத்தான் செய்யும் என்பதைப் புரிந்துகொண்டு,. நம்முடைய தர்மத்தைப் பின்பற்றி, நம்முடைய கடமையைச் செய்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

 

 

யானைகளின் நலனும் காக்கப்பட வேண்டும்; யானைகள் சம்பந்தப்பட்ட ஆலயப் பாரம்பரியமும் தொடர வேண்டும் என்பதற்குத் தீர்வு உண்டா என்கிற கேள்விக்கு, நிச்சயம் உண்டு என்பதே பதில். அதை நிறைவுப் பகுதியில் பார்ப்போம்.

 

(தொடரும்)

Series Navigationபெரு வெடிப்புக்குப் பின் உடனே பிரபஞ்சத்தில் நேர்ந்த உள்வீக்கம் [Inflation] மாபெரும் மர்மமா ?தமிழ்மணவாளன் கவியுலகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *