யானைகளும், கோவில்களும், ஆன்மீகப்பாரம்பரியமும் – 1

author
3
0 minutes, 44 seconds Read
This entry is part 15 of 15 in the series 5 ஜூன் 2016
B R ஹரன்
yanai
சமீபத்தில் கோவில் யானைகள் சம்பந்தப்பட்ட இரு நிகழ்வுகள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஒன்று, மதுரை கூடல் அழகர் கோவில் யானை மதுரவல்லி நோயுற்று பெரும் துன்பத்தை அனுபவித்து இறந்துபோனது; இரண்டு, உடலெங்கும் புண்கள் ஏற்பட்ட நிலையில், காஞ்சி காமாட்சி கோவில் யானைகள் தீவிர சிகிச்சைக்காக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து மேற்கொண்ட சிறு ஆய்வின் விளைவே இந்தக் கட்டுரைத் தொடர். ஒரு பக்கம் யானைகளின் நலன்; மறு பக்கம் கோவில்கள் மற்றும் மடங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம். இரண்டுமே முக்கியம். இதில் எதை முன்னிறுத்துவது, எதற்கு அதிக முக்கியத்துவம் தருவது போன்ற குழப்பங்களுக்கு நேர்மையான, நியாயமான தீர்வைப் பெறும் முயற்சியே இந்த ஆய்வு. இந்தக் கட்டுரைத் தொடரின் முடிவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடனும், கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுதலுடனும் ஆரம்பிக்கிறேன்.
மதுரவல்லியின் மரணம்
மதுரை கூடலழகர் கோவிலில் மதுரவல்லி (பெண் யானை) 1976-ஆம் ஆண்டு தன்னுடைய 12-வது வயது முதல் 40 ஆண்டுகளாகப் பணி புரிந்து வந்தாள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவள் கால்களில் புண்கள் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டாள். அப்போது நீண்ட நாட்கள் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு ஓரளவுக்குக் குணம் அடைந்தாள். ஆயினும் முன்போல் அவளால் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை.
Elephant 2
இந்நிலையில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மீண்டும் அவளுக்குக் கால்களில் புண்கள் ஏற்பட்டு நோய்வாய்பட்டாள். கால்களின் அடியிலும், குளம்புப் பகுதியிலும் புண்கள் மிகவும் முற்றிப்போய் சீழ்பிடித்து அழுகிய நிலையில் அவளால் நடக்க முடியாமல் போனது. நடக்க முடியாமல் இருக்கும் நிலையில் கூட அவளுடைய கால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்திருந்தது கோவில் நிர்வாகம்.
Elephant 3
(மதுரவல்லி நோய்வாய்ப்பட்டு துன்பமும்  வேதனையும் அனுபவித்துக்கொண்டிருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழ்காணும் இணைப்புகளில் பார்க்கலாம்:
Elephant 4
தொடர்ந்து பல மாதங்கள் பெரும் அவதிக்குள்ளானாள் மதுரவல்லி. சிகிச்சையும் பலனளிக்கவில்லை. பிறகு அவளால் நிற்கவும் முடியவில்லை. படுத்த நிலையிலேயே இருந்தாள். படுத்த நிலையில் கூட அவளுடைய கால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்திருந்தார்கள் கோவில் நிர்வாகத்தினர். உணவு உட்கொள்ளும் திறனும் குறைந்துபோய் மதுரவல்லி மிகவும் பலவீனமாகிப் போனாள். நோயும் முற்றி, பலவீனமும் அதிகமாகி கடைசியில் கடந்த வெள்ளிக்கிழமை 26-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, தன்னுடைய 53-வது வயதில் கூடலழகர் பெருமாளின் திருவடிகளை அடைந்தாள் மதுரவல்லி.
Elephant 5
இருபது ஆண்டுகளுக்கு முன்பு கால்களில் புண்கள் ஏற்பட்டுக் குணமானதைத் தொடர்ந்து, சரியாக, முறையாக, இந்திய விலங்குகள் நலவாரியத்தின் வழிகாட்டுதல்களின் படி அவளைக் கவனமுடன் பராமரித்து வந்திருந்தால், அவளுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது. மேலும் பல வருடங்கள் இறைப்பணியில் இருந்திருப்பாள். அவளுடைய இறப்புக்கு பாகனின் பொறுப்பற்ற தன்மையையும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தையும் கவனக்குறைவையும் தான் காரணமாகச் சொல்ல வேண்டும். கோவில் நிர்வாகம் மட்டுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மதுரவல்லியின் மரணம் ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. மதுரவல்லியைப் போல தமிழகத்தில் பல கோவில் யானைகள் தொடர்ந்து முறையான கவனமும் பராமரிப்பும் இன்றி இறந்துகொண்டிருக்கின்றன. திருக்கடையூர் கோவில் அபிராமி, தஞ்சாவூர் பெரிய கோவில் வெள்ளையம்மாள், ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோவில் பவானி, திருசெந்தூர் கோவில் குமரன் ஆகிய யானைகள் அடுத்தடுத்து இறந்துள்ளன. இவ்விஷயத்தைப் பற்றி இந்தக் கட்டுரைத் தொடரில் விவரமாகப் பார்ப்போம்.
காஞ்சி காமாட்சி கோவில் யானைகள் இடமாற்றம்
காஞ்சி காமகோடி பீடத்தின்கீழ் இருக்கும் காமாட்சியம்மன் கோவிலில் சந்தியா என்கிற காமாட்சி, இந்துமதி, ஜெயந்தி ஆகிய மூன்று பெண்யானைகள் இருந்தன. கர்நாடக மாநில வனத்துறையிடமிருந்து (ஹன்சூர் காடுகள் பகுதியில் இருந்து) ஏழரை வயது இருக்கும்போது 1981-ல் ரூ.20,000க்கு வாங்கப்பட்ட சந்தியா என்கிற காமாட்சி (இப்போது இவள் வயது 42), கேரள வனத்துறையிடமிருந்து (வயநாடு காடுகள் பகுதியிலிருந்து) 6 வயதாக இருக்கும்போது 1987-ல் ரூ.20,000க்கு வாங்கப்பட்ட இந்து (இப்போது இவள் வயது 34), அஸ்ஸாம் மாநில வனத்துறையின் அன்பளிப்பாக காஜிராங்கோ தேசிய பூங்காவிலிருந்து 2001-ல் வழங்கப்பட்ட 3 வயது ஜெயந்தி (இப்போது இதன் வயது 18) ஆகியவையே இந்த மூன்று பெண்யானைகள்.
Elephant 6
இந்த மூன்று யானைகளையும் கோவிலில் 35 ஆண்டுகளாகப் பாகனாக இருக்கும் குணசீலன் என்பவர் பராமரித்து வந்தார். அவருக்கு உதவியாக பி.தில்லைகுமார் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும், எ.நடராஜன் என்பவர் கடந்த ஓராண்டாகவும், இருந்து வந்துள்ளனர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இக்கோவிலில் பாகனாக இருந்த எஸ்.சேகர் என்பவர் இடையே கோவிலைவிட்டுச் சென்றுவிட்டு, தற்போது மீண்டும் வந்து பணியில் சேர்ந்துள்ளார். கடந்த ஆண்டு திடீரென்று குணசீலன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு அவர் மகள் அன்னபூரணி நான்காவது ஆளாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அன்னபூரணி என்பவர் ஒரு மேற்பார்வையாளரைப் போல் இருந்துகொண்டு, யானைகள் சம்பந்தப்பட்ட பதிவேடுகள், பத்திரங்கள் ஆகியவற்றைக் கோவில் அலுவலகத்தில் வைக்காமல் தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்தியவிலங்குகள்நலவாரியம், தனக்குக் காஞ்சி காமாட்சி கோவில் பக்தர்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில், 22 ஜுலை 2015 அன்று, நான்கு நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து, காஞ்சி காமாட்சி கோவிலில் உள்ள இந்த மூன்று யானைகளையும் கண்காணித்துப் பரிசோதனை செய்தது. பெங்களூருவில் இருக்கும் Compassionate Unlimited Plus Action (CUPA) என்கிற அமைப்பின் தலைவர், அறங்காவலர் மற்றும் செயலாளரான திருமதி சுபர்னா கங்கூலி, CPR Environmental Education Centre (CPREEC) என்கிற அமைப்பைச் சேர்ந்த டாக்டர்.சுந்தரமூர்த்தி, இந்திய விலங்குகள் நலவாரியத்தைச் சேர்ந்த விலங்கு மருத்துவர் டாக்டர் ஆர்.சுமதி, இந்திய விலங்குகள் நலவாரியம் இணைத்துக்கொண்ட உறுப்பினர் டாக்டர் மணிலால் வள்ளியத்தே ஆகியோர் அந்தப் பரிசோதனைக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். பரிசோதனைமுடிவில்மூன்று யானைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது என்பதைக் கண்டறிந்தனர் குழுவினர்.
Elephant 7
பரிசோதனையின் முடிவில், மேற்கொண்டு யானைகளை எப்படி முறையாகப் பராமரிக்க வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களையும் மேலும் சில ஆலோசனைகளையும் கோவில் நிர்வாகத்தினருக்குக் குழுவினர் அளித்தனர். அப்போது மடத்திற்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அந்நிலத்தில் யானைகளுக்குத் தேவையான இயற்கைச் சூழ்நிலையில் கொட்டாரங்கள் அமைத்துக்கொள்வதாகவும் கோவில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. பரிசோதனைக்குழுவினரின் அறிக்கையை, கோசாலைகள் பற்றிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்திய விலங்குகள் நலவாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. பசுக்கள் மற்றும் கோசாலைகளைப் பரிசோதனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சட்ட உரிமைக் கட்டளையை (Mandate) நீட்டித்து, யானைகளையும் அவற்றின் பராமரிப்பையும் கூட பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
யானைகள் பணியில் இருக்கும் கோவில்களின் பட்டியலைக் குழுவினருக்குத் தருவதற்கு இந்து அறநிலையத்துறை தாமதம் செய்துகொண்டிருந்தது. இதனிடையே,  உயர் நீதிமன்றம் கோசாலைகள் பரிசோதனைக்காக அமைத்த குழுவினர், காஞ்சி காமாக்ஷி கோவிலில் யானைகள் பரமாரிப்பை மீண்டும் பரிசோதனை செய்தபோது, இந்திய விலங்குகள் நலவாரியம் அமைத்த குழுவினர் அளித்திருந்த  வழிகாட்டுதல்களின் படி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும், யானைகள் மேலும் உடல்நலன் குன்றியிருந்தன என்பதையும் கண்டறிந்தனர். ஆகவே மேற்கண்ட நிலையைத் தங்களின் ஆய்வறிக்கையில் உறுதி செய்து, தீவிர சிகிச்சைக்காக யானைகள் இயற்கையான சூழ்நிலை அமைந்துள்ள இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.
Elephant 8
இதனிடையே இந்து அறநிலையத்துறை யானைகள் பணியில் இருக்கும் கோவில்களின் பட்டியலைக் குழுவினரிடம் அளித்தனர். குழுவினர் மெற்கொண்டு சில கோவில்களுக்குச் சென்று யானைகள் பராமரிப்பைப் பரிசோதனை செய்தனர். (இவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்).
இந்நிலையில், காஞ்சி காமகோடி பீடத்தின் சம்மதத்துடன் இந்திய விலங்குகள் நலவவாரியம் எடுத்த நடவடிக்கையின் படி, இந்த மூன்று யானைகளும் Tree Foundation என்கிற அமைப்பிற்கும் Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC) என்கிற அமைப்புக்கும்  சொந்தமாக, சென்னை-புதுச்சேரி எல்லையில் மரக்காணம் என்ற ஊரில் உள்ள இயற்கைச் சூழல் நிறைந்த இடத்திற்கு மே மாதம் 12-ஆம் தேதி மாற்றப்பட்டன. யானைகளை அவ்விடத்திற்குக் கொண்டுசெல்ல முயன்றபோது, யானைகளைக் கவனித்துக்கொண்டிருந்த அன்னபூரணியும் அவருடைய அம்மாவும் தேவையில்லாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யானைகளை இடமாற்றம் செய்ய காஞ்சி மடத்தின் நிர்வாகம் பூரண ஒத்துழைப்பு கொடுத்தபோதும், காலம் சென்ற பாகனின் மனைவியும் மகளும் ஒத்துழைக்காமல் முரண்டு பிடித்துள்ளனர். அவர்களுடன் இத்தனை காலமாகப் பழகிய காரணத்தால் யானைகளும் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு முரண்டுபிடித்ததால், கொஞ்சம் வலிமையைப் பயன்படுத்தி, கட்டாயப்படுத்தி அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இந்துவும், ஜெயந்தியும் ஒருவாறு மாற்றப்பட்டாலும் சந்தியா என்கிற காமாட்சி கடுமையாக முரண்டு பிடித்து வாகனத்திலிருந்து (லாரி) கீழே இறங்க முயற்சித்து அதன் விளைவாகக் கீழே விழுந்தது. எனவே வேறு வழியில்லாமல், அதை மடத்திற்குச் சொந்தமான இடத்தில் ஒரு நாள் வைத்திருந்து, பின்னர் அடுத்த நாள் காவல்துறை உதவியுடன் மரக்காணத்திற்குக் கொண்டு சென்றனர்.
Elephant 9
இதனிடையே, பரபரப்புக்காகவே இயங்கும் ஊடகங்கள், யானைப்பாகன் குடும்பத்தினரின் பேச்சை மட்டும் கேட்டுக்கொண்டு, ”கோவிலுக்குள் மற்ற காரியங்களுக்கு இடம் தேவைப்படுவதாலும் வேறு பல காரணங்களாலும் தனியார் தொண்டு நிறுவனத்தினரால் யானைகள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன” என்று தவறான செய்தியை வெளியிட்டுள்ளன.
இவ்விஷயத்தின் முழு விவரங்களையும் அறியாத சிலர், பத்திரிகைச் செய்தியை மட்டும் கவனத்தில் கொண்டு, “இது இந்துமதத்தின் ஆலயப் பாரம்பரியத்துக்கு எதிராக அன்னிய நாடுகளுடன் தொடர்பு கொண்ட அரசு சாரா அமைப்பினர் செய்யும் சதிவேலை. இந்துக் கோவில்களிலிருந்து யானைகளை வெளியேற்றி, கஜபூஜை போன்ற பாரம்பரிய வழக்கங்களை நீர்த்துப்போகச் செய்வதே அவர்களின் குறிக்கோள். இதன் பின்னே இருக்கும் நோக்கம் மதமாற்றம்” என்று சமூக ஊடகங்களிலும்  வலைதளங்களிலும் தவறான தகவல்களைப் பரப்பினர்.
இதனிடையே மரக்காணத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட இரண்டே தினங்களில் இந்துவும் ஜெயந்தியும் அபரிமிதமான முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளன. மூன்றாம் நாள் சந்தியா என்கிற காமாட்சியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். பெரிய தென்னந்தோப்பும் மரங்களும் செடிகொடிகளும் கொண்ட அந்த இயற்கை சூழ்ந்த இடத்தில், யானைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. அந்த மூன்று பெண்மணிகளும் கால்களில் சங்கிலிகள் கட்டப்படாமல், இயற்கைச் சூழலில் சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டு சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் உலா வருகின்றனர். யானைகளின் உடல் மற்றும் மனநலன்களைப் பற்றிய அறிவும் அனுபவமும் கொண்ட விலங்குநல மருத்துவரின் சிகிச்சையுடன், நல்ல தரமான சத்துக்கள் கொண்ட உணவுகள் உண்டு சந்தோஷமாக இருக்கின்றனர்.
Elephant 10
(மூன்று யானைகளும் தற்போது இருக்கும் நிலையை கீழ்காணும் இணைப்புகளில் பார்க்கலாம். 
 
Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC)
Elefriends 101
Sandhya, Indhumathi and Jayanthi enjoying a mud bath. 
Jayanthi splashing water all over her body and enjoying her bath. 
Sandhya, Indhumathi and Jayanthi enjoying the mud bath
 Jayanthi being fed with nutritious food 
சரி, காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து இந்த மூன்று யானைகளும் ஏன் இடமாற்றம் செய்யப்பட்டன, இதற்காக அரசு சாரா அமைப்புகளின் உதவி ஏன் நாடப்பட்டுள்ளது, இவ்விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஏன் ஈடுபட்டுள்ளது, இந்த மூன்று யானைகள் போன்று இடமாற்றம் செய்து சிகிச்சையும் கொடுக்கப்படாததால் தான் மதுரைக் கூடலழகர் கோவிலில் இருந்த மதுரவல்லி இறந்தாளா, மதுரவல்லி போன்று மேலும் பல கோவில் யானைகள் இறந்துபோயுள்ளனவா, போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிந்தால் இந்தப் பிரச்சனையின் கருவும், அதன் பின்னே இருக்கின்ற முக்கியத்துவமும் நமக்கு விளங்கும்.
ஆனால் அந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் காணும் முன்பாக, யானை என்கிற விலங்கைப் பற்றிய சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்வது நன்மை பயக்கும்.
 யானை பற்றிய அடிப்படை உண்மைகள். 

யானை ஒரு பாலூட்டி. மூங்கில், கரும்பு போன்ற தாவரங்கள் மற்றும் இலைகள் உண்ணி. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகவும் பெரியது. சராசரியாக 70 ஆண்டுகள் வாழக்கூடியது. நிலத்தில் வாழும் உயிரினங்களில் மனிதர்களுக்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் உயிர்வாழும் விலங்கு.

யானை மிகவும் வலிமையான விலங்கு. சிங்கம் புலிகள் கூட நெருங்க முடியாதவை. சிங்கங்கள் கூட்டமாக வந்து, தனியாக இருக்கும் களைத்து இளைத்துப் போன யானையையோ அல்லது நோய்வாய்பட்ட யானையையோ தான் தாக்கிக் கொல்ல முடியும்.

யானைகள் குடும்பமாகத் தான் வாழும். ஆண் யானை தான் பருவம் எய்கின்ற வரை குடும்பத்துடனேயே இருக்கும். பருவம் அடைந்த பிறகு, தனித்துப் போவதும் உண்டு. ஆனால் பெண் யானைகள் ஒன்றாக, குழுவாகத்தான் இருக்கும். ஒன்றுக்கொன்று இழைந்துகொண்டு பிணைப்புடன், தாய், சகோதரி, பெண் என்கிற உறவுடன் குடும்பமாக இருக்கும். பருவ நிலை அடைந்த சமயத்தில் பெண் யானையும் தனியாகப் போவதுண்டு.

 

Elephant 11

 

ஆசியாவில் உள்ள யானைகளில் ஆண் யானைகளுக்குத் தந்தம் உண்டு. பெண் யானைகளுக்குத் தந்தம் இல்லை. இவற்றின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகள் காணப்படும்.

யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பில் ஈடுபடுகின்றன. யானைகளின் ஜீரண சக்தியும் குறைவு, மந்தமானது. அதனால் அது உண்ணும் இலைகள் போன்ற உணவுகளில் 40 சதவிகிதமே ஜீரணம் ஆகின்றது. ஆகவே இவை நிறைய உணவு உட்கொள்ள வேண்டியிருக்கிறது. நன்கு வளர்ந்த யானைகள் ஒரு நாளைக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிமனானது. சுமார் 2.5 செண்டிமீட்டர் முதல் 3 செண்டிமீட்டர் அளவுக்குத் தடிமனாக இருக்கும். தடிமனாக இருந்தாலும் மெத்தென்று (மென்மையாக) இருக்கும். ஆகவே தான் கொசு, எறும்பு போன்ற மிகச் சிறிய ஜந்துக்கள் கூட அதைக் கடித்துத் துன்புறுத்தும். யானையின் வாயைச் சுற்றியும் காதுகளின் உட்பகுதியிலும் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விடக் கூடுதலாக முடியைக் கொண்டது.

யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுவதும் பூசிக்கொள்ளும். இது அதன் இயற்கையான குணம். இதனால் அது தன் தோலை சூரிய வெப்பத்திலிருந்தும் கதிர் வீச்சிலிருந்தும் காத்துக்கொள்கிறது. இதன் தோல் தடிமனாக இருப்பதால், யானையின் உணர்திறன் அதிகம். இதனாலேயே அவை சேற்றையோ மண்ணையோ வாரியெடுத்துத் தம் மேல் தூற்றிக்கொள்கின்றன.
யானையின் கால்கள் வலுவானவை. கால்கள் பெருத்த உடலைத் தாங்கிக் கொண்டிருந்தாலும், செங்குத்தான மலைப்பாதைகளிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் முடியும். இந்த குணத்தைக் குறியீடாகக் கொண்டுதான் “ஆனைக்கும் அடி சறுக்கும்” என்கிற பழமொழி வழக்கத்தில் வந்தது. மேலும் இந்தக் கால்கள் செங்குத்தாக அகன்ற பாதங்களுடன் இருப்பதால் யானையால் நீண்ட நேரம் இளைப்பாராமல் நிற்க முடியும். ஆப்பிரிக்க யானைகளுடன் ஒப்பிடும்போது, ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. முன்னங்கால்களில் ஐந்து நகங்களும் பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். யானைக்கு நன்றாக நீந்தவும் முடியும். யானைகளின்  பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வு கொண்ட ஒலியலைகளைக் கூட உணரக்கூடியவை.

யானையின் சிறப்பே அதன் தும்பிக்கை தான். வேறு எந்த விலங்குக்கும் இப்படி ஒரு அமைப்பு கிடையாது. இந்தத் தும்பிக்கை மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக் கூடியது. தும்பிக்கையின் நுனியில் ஒரு சிறிய இதழும் (ஆப்பிரிக்க யானைகளுக்கு இரண்டு இதழ்கள்) மூச்சுவிடும் துளைகளும் இருக்கின்றன. இந்த உறுப்பைப் பயன்படுத்தி சின்ன விரகுக் குச்சி முதல் பெரிய மரங்கள் வரைத் தூக்க இயலும். தும்பிக்கை பொதுவாக உணவை எடுப்பதற்கும், நீரைப் பருகுவதற்கும் உதவுகிறது. பகை விலங்குகளின் தாக்குதலையும் சந்தித்து, எதிர்த்து முறியடிக்க இந்தத் தும்பிக்கை உதவுகிறது. கழுத்து குட்டையாக இருப்பதால், தும்பிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

 

யானையின் அகன்ற மடல் போன்ற பெரிய காதுகள், அதன் உடலின் வெப்ப நிலையைப் பராமரிக்கும் விதத்தில் பங்காற்றுகின்றன. யானையின் காதுகளில் இரத்த நாளங்கள் நிறைய இருப்பதால், சுற்றுப்புறக் காற்று அவற்றின் வழியாக உடலுக்குள் சென்று வெப்பத்தைக் குறைக்கிறது. யானைகள் காதுகளை அசைத்துக்கொண்டே இருப்பதும் தங்கள் உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கத்தான். ஆசிய யானையின் காது மடல்கள் (ஆப்பிரிக்க யானைகளைவிட) சிறியனவாக இருக்கும்.

 

யானைகளின் கேட்கும் திறனும் மோப்பத் திறனும் சிறப்பானவை. யானையின் கண்கள் கிட்டப் பார்வை கொண்டவை. ஆதலால் யானை தன் கண்பார்வையை விட கேட்கும் திறனையும் மோப்பத்திறனையும் அதிகம் நம்பி வாழ்கிறது. தும்பிக்கையும் உணரும் திறன் மிக்கது. காதுகளும் தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லவை.

 

தரையில் வாழும் உயிரினங்களில் மனிதருக்கு அடுத்த படியாக அறிவுத்திறன் கொண்டவை யானைகள். தரையில் வழும் விலங்குகளில் இதன் மூளையே பெரியது. ஐந்து கிலோகிராமுக்கும் சற்று அதிகமான எடை கொண்டது யானையின் மூளை. அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தது. யானை அடிப்படையில் இரக்க உணர்வு மிக்கது.

யானைகள் தன்னுணர்வு கொண்டவை. தங்களைத் தாங்களே (நிலைக் கண்ணாடி முன் நிற்க வைத்தால்) அடையாளம் கண்டுகொள்பவை. ஒருவர் சுட்டிக் காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் படைத்தவை.

Elephant 12

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள். பெரும்பாலும் ஒரேயொரு கன்றைத்தான் ஈனும். இரட்டைகள் பிறப்பது மிகவும் அபூர்வம். பிறக்கும் கன்று (குட்டி) 90 முதல் 115 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும். யானை சினையாக இருக்கும்போதும், கன்றை ஈனும் முன்னரும், ஈனும் போதும், ஈன்ற பின்னரும் மற்ற வளர்ந்த யானைகள் அதனைச் சுற்றி இருந்துகொண்டு அதற்கு உதவுகின்றன. யானைக் கன்று பிறந்ததிலிருந்து அதன் கூட்டத்தாலேயே வளர்க்கப் படுகிறது.

யானைகள் வாழ்வதற்குப் பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. இயற்கைச் சூழலுடன் கூடிய மரம் செடி கொடிகள் கொண்ட பகுதிகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள மரம் செடி கொடிகளை அழித்து உண்டு, அங்கிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்கின்றன. இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாகச் சென்று மீண்டும் அவை ஆரம்பப் பகுதிக்கு வரும்போது அழிக்கப்பட்ட மரம் செடி கொடிகள் வளர்ந்து விடுகின்றன. இம்மாதிரியாக அவை அடிக்கடி போகும் பாதை தான் “யானைப் பாதை” என்று வழங்கப்படுகிறது.

 
(தொடரும்)
Series Navigationஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    Rama says:

    To fix problems like this (and to fix other problems like proper maintenance of temples,) the Govt should hand over the control of temples back to Hindus. Hindus should have control of the temples and all the related affairs of the temples.

    1. Avatar
      bala says:

      Kamatchi amman temple is under kanchi mutt. still the seers do not make any attempt for the proper upkeep of any animals be it elephants, cows. so your reasoning is not valid.Ramakrishna mutt is doing yeomen service to hindu society. they do not have elephants

  2. Avatar
    bala says:

    the practice of keeping elephants in captivity in temples must be banned. there are many temples where there are no elephants. even in Guruvayur elephants are not maintained properly. Religious heads must come forward and eradicate this evil practice

Leave a Reply to bala Cancel reply

Your email address will not be published. Required fields are marked *