யானைமலை

6
0 minutes, 0 seconds Read
This entry is part 20 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மதுரையே இங்கு
கல்லாய் விறைத்து
உயரமாய்
படுத்திருப்பதை
பார்க்க கோள்ளை அழகு.

அந்த மத்தகம்
பரந்த ஒலிம்பிக் மைதானமாய்
கம்பீரமாய் காட்சி தரும்.
வெள்ளை வெயில்
தினமும் குளிப்பாட்டும்
சுகத்தில்
அந்த‌ க‌ருங்க‌ல் கூட‌
கருப்பு வெல்வட்
ச‌தைச்சுருக்க‌மாய்
தும்பிக்கை நீட்டிக்கிட‌க்கும்.

சென்னை போகும்
பேருந்துக‌ள்
அதை உர‌சி உர‌சி
செல்லும்போது
அந்த‌ கிச்சு கிச்சு மூட்ட‌லில்
பொசுக்கென்று
அது எழுந்துவிடுமோ
என்றும்
ஒரு ப‌ய‌ம் வ‌ருவ‌துண்டு.

இந்த‌ ஆண்யானைக்கு
திருப்ப‌ர‌ங்குன்ற‌ம்
மொக்கைக்க‌ல் ம‌லை
ஒரு பெண்யானையாய்
தெரிவ‌தால்
க‌ல்லின் ஏக்க‌மும் புரிகிற‌து.

ம‌ழைக்கால‌த்து
நீர் விழுதுக‌ள்
க‌ண்போல் தெரியும்
குழிக‌ளிலிருந்து க‌சியும் போது
ம‌த‌ம் பிடித்து
அது பிளிறும்
ஊமைத்த‌ன‌மான‌
டெசிப‌ல்க‌ள்
ம‌துரைக்கார‌ர்க‌ளின்
ம‌ன‌த்தில் ம‌ட்டுமே
ப‌திவாகும்.

க‌ல்யானைக்கு
க‌ரும்பு ஊட்டிய‌ ப‌ட‌ல‌ம்
ம‌துரை மீனாட்சிய‌ம்ம‌ன்
கோயிலுக்குள் உண்டு.
அந்த‌ க‌ரும்புக்கும்
எச்சில் ஊறி
எழுந்துவிடும்
ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பு கூட‌
அந்த‌ க‌ல் உட‌ம்பில்
விடைப்ப‌து போல்
என‌க்கு தோன்றுவ‌து உண்டு.

அன்பே சிவம்
என்று கோவிலுக்குள்
மணிஒலி கேட்டபோதும்
அன்பு தான் இன்ப ஊற்று
என்று ஒலித்தவர்களை
ஒழித்துக்கட்டும்
கழுமரங்களை
நட்டு வைத்த
ஆட்சியின் அடையாளங்கள்
இந்த‌ கல்லில்
உறைந்து கிடக்கின்றன.

அந்த சமணர் சிற்பங்கள்
இந்த‌ கல் தோலில்
இருப்பது தெரிந்தால்
அதை “தோலுரித்து”
வதம் செய்ய‌
மீண்டும் அந்த சிவன்
“ரௌத்திரம்” காட்டுவானோ?

மாடு க‌ட்டி போர் அடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை க‌ட்டி போர‌டித்த‌
தென்ம‌துரையின்
தொன்மை காட்டும் சின்ன‌மோ
இந்த‌ யானைம‌லை?

கோசாகுள‌ம் புதூரில்
இருந்து பார்க்கும் போது
ஒரு கோண‌ம்.

வ‌ண்டியூர் க‌ண்மாய்க்
க‌ரையோர‌ம் ஒரு கோண‌ம்.
அழ‌க‌ர் கோயில் சாலையில் இருந்து
ப‌க்கவாட்டில் ஒரு கோண‌ம்.

ஒத்த‌க்க‌டைக்கார‌ர்க‌ளுக்கோ
அது
த‌ன்னுட‌னேயே த‌ங்கி
படுத்திருப்பது போல்
ஒரு பிரமையின் கோணம்.

முன்கால் வைத்து
பின்வால் நீட்டி
தும்பிக்கையை கூட‌
வாய்க்குள் திணித்து
வெற்றிலை போட்டுக்கொண்டு
சாவ‌காச‌மாய்
குத‌ப்பிக்கொண்டிருக்கும்
ஒரு நுட்ப‌மான‌ கோண‌ம்.

நாக்கு சிவ‌ந்திருக்கிற‌தா
என்று அது
ப‌ளிச்சென்று துப்பிக் கேட்கும்
அந்த‌ சூரிய‌னிட‌ம்!
சிவ‌ப்பாய் த‌ன் மீதே
உமிழ்ந்து கொண்ட‌து போல்
வைக‌றையும் அந்தியும்
எதிர் எதிர் கோண‌ங்க‌ளில்
காட்டும்
தொலைதூர‌ ம‌துரையின் க‌ண்க‌ளுக்கு
எப்போதுமே
அற்புத‌ விருந்து தான்
அந்த யானை மலை!

எங்கள் வரலாற்றின்
உயிர்ச்சிகரமாய்
ஓங்கி நிற்கும்
வாரணமே!

உன்னை
பாளம் பாளமாய் அறுத்து
அந்த எண்ணெய் தேசங்களுக்கு
விற்று
டாலர்கள் குவிக்க நினைக்கும்
வணிக வல்லூறுகள்
வட்டமிடுவது
உனக்குத்தெரியவில்லையா?

உன் தும்பிக்கைக்கு
உயிர் வ‌ர‌ட்டும்
அந்த “தாராள‌ம‌ய‌ வேதாள‌ங்க‌ளை”
பிடித்து சுழ‌ற்றி அடிக்க‌ட்டும்.

இருப்பினும்
இன்னொரு ஆப‌த்தும் இருக்கிற‌தே!
உன‌க்கு உயிர் வ‌ந்தால்
உன் தும்பிக்கையை
எப்போதும்
நீட்ட‌ வைத்து விடுவார்க‌ளே
நாலணாவுக்கும் எட்ட‌ணாவுக்கும்
உன்னை
ச‌லாம் போட‌
வைத்து விடுவார்க‌ளே!

எங்களுக்கு
நாலு வர்ணம்
தீட்டியது போதாது என்று
உன்
முக அலங்காரத்துக்கும்
மூவர்ணம் தீட்டி
வடகலையா? தென்கலையா?
என்ற வாதங்களின்
பட்டி மன்றம் ஆரம்பித்து விடுவார்களே!

க‌ல்லில் ம‌றைந்து கிட‌க்க‌ட்டும்
அந்த‌ மாம‌த‌ யானை!
கல்லையே மறைக்கும்
அந்த மாமத யானைக்கு
கல்லறையாகிடு கல் யானையே!
கல்லறையாகிடு கல் யானையே!

Series Navigationதூக்கணாங் குருவிகள்…!ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
author

ருத்ரா

Similar Posts

6 Comments

  1. Avatar
    சோமா says:

    ருத்ரா.தங்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
    யானைமலையை வெளி நின்று பார்த்து இரசிப்பவர்கள் ஏராளம்…அதனோடு அதன் நிழலில் நான்கு ஆண்டுகள் வாழக்கிடைத்த பாக்கியவான்கள்..மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள்…பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய வாசமும் அங்குதான் இருந்தது. ஆசியாவிலேயே இருக்கும் ஒரே ஒரு கல்லால் ஆன நீண்ட பாறை. ஒரு முழு மலையாகத் தெரிகிறது. அந்த யானையின் முதுகின் மீது சவாரி செய்வதற்கு நாங்கள் ஒரு பாதையை அமைத்திருந்தோம். கடந்த ஆட்சியில் குகை ஓவியம் வரையப் போகிறோம் என்று அந்த மலையை கல்குவாரி கயவர்களிடம் ஒப்படைக்க இருந்தார்கள். இன்றைக்கும் அதன் பின்புறம், ஒத்தக்கடை வழியாக கால்வாசி யானையை விழுங்கிவிட்டார்கள் இந்தச் சண்டாளர்கள்.

    புதிதாய் மதுரை வருபவர்கள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இந்தக் கல்லைத் (நீண்ட பாறையை) தரிசிக்கலாம். ஒரு யானை தும்பிக்கையை நீட்டி ஒரு புறம் தலை சாய்த்து படுத்திருப்பது போல் இருக்கும்.

  2. Avatar
    ruthraa says:

    நன்றி சோமா அவர்களே.

    எனக்கும் அதன் முதுகில் சவாரி செய்யும் நெடுநாளைய ஆசை ஒன்று உண்டு.ம‌லை விழுங்கும் ம‌காதேவ‌ன்க‌ள் நா ஊற‌ காத்துக்கொண்டிருக்கிற‌ர்க‌ள்
    என்ப‌து க‌வ‌லை கொள்ள‌ச்செய்யும் செய்தி தான்.இப்ப‌குதி ம‌க்க‌ளின் விழிப்புண‌ர்வு அதை காக்கும் என ந‌ம்புகிறேன்.

    இப்ப‌டிக்கு
    அன்புட‌ன்
    ருத்ரா

    1. Avatar
      ruthraa says:

      அன்புள்ள சித்திரவீதிக்காரன் அவர்களே

      உங்கள்
      வலைப்பூ நுழைந்தேன்.
      மலைப்பு மிகக்கொண்டேன்.

      மதுரையின் சித்திரம்
      மதுரைக்காரனின்
      “கவச குண்டலம்” ஆகிப்போனதை
      உயிர்ப்போடு
      சிலிர்ப்பொடு
      சொல்லியிருக்கிறீர்கள்.

      சமணர்களின்
      பாறை ஓவியங்கள்
      யானையின் மேனியில்
      வ‌ர‌லாறு சொல்வ‌தை
      க‌ண்ணுற்றுக்க‌ளித்தேன்.

      ஆம்.
      அந்த‌ அருக‌ன் வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள்
      அம்ம‌ண‌மாய்
      பிர‌ம்ம‌ம் காட்டினர்
      ஆசை ஆடைக‌ள் க‌ழ‌ற்றியெறிந்து.

      இவர்களுக்கு
      அ(ம்)மணம் தான் தெரிந்தது.
      மனதைக்கூட அவிழ்த்த அவர்கள்
      அமனம் (மனது அற்றநிலை)கொண்டு
      மனங்கள் கூர்ந்திடும்
      மாயநிலை கற்றவர்கள்.

      கல்லுக்குள்ளும்
      ஆனையாய் உறங்கினாலும்
      ஒரு ஒளியாய் உறைந்திருப்பார்கள்.
      வரி வரியாய் நீங்கள்
      தீட்டிய சித்திரம்
      அகலாது என்றும் அகலாது.

      அன்புடன்
      ருத்ரா

  3. Avatar
    சோமா says:

    ருத்ரா அவர்களுக்கு…ஏற்கனவே யானைமலையின் மீது சவாரி செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லாதபட்சத்தில் விருப்பமிருந்தால் சொல்லுங்கள். கல்லூரியில் சொல்லி நான் ஏற்பாடு செய்கிறேன். இன்னுமொரு ஆழமான பதிவு எங்களுக்குக் கிடைக்கும்.

  4. Avatar
    ruthraa says:

    அன்புள்ள சோமா அவர்களே

    யானை சவாரி யாரே வெறுப்பர்?
    ஐந்து ரூபாய் தாளை நீட்டி
    பாகன் அருகில் பாங்காய் அமர்ந்து
    பயணம் செய்தது மறக்க இயலுமோ?
    “தூண்கள் நகரும்”
    அந்த‌மாளிகை உச்சியில்
    உட்கார்ந்த‌தும்
    அதிர்ந்த‌து உண‌ர்ந்தேன்.
    சின்ன சின்னப் பூகம்பங்கள் என்
    முதுகெலும்பு வ‌ருடி வ‌ருடி
    கொலுசுக‌ள் ஊமையாய்
    ஒலிப்ப‌து கேட்டேன்.

    ம‌லையின் முதுகில் பொதுக்
    கூட்ட‌மே போட‌லாம்.
    இருப்பினும்
    வ‌ளைந்த‌ விளிம்பின்
    க‌ல் புருவ‌ம்
    உற்றுப்பார்ப்ப‌து
    ம‌ட்டுமே தெரியும்.

    நியூட்ட‌னின் ராட்ச‌ச‌ உருவ‌ம்
    ம‌ர்மமாய் காட்டும் ஈர்ப்பு
    மனங்கொத்திப்பறவையாய்
    கிடு கிடுத்துக்காட்டும்
    பயங்களின் உணர்வும்
    தொற்றுதல் அழகு.

    முறச்செவி எங்கே
    முடங்கிப்போனதோ?
    அதனால் தான்
    காக்கைகள் கூட‌
    கொத்திப்பார்க்க‌
    தத்தி தத்தி தாவிவந்து
    கல்லில் வந்து
    கூர் தீட்டிக்கொள்ளும்.

    அன்புட‌ன்
    ருத்ரா

Leave a Reply to சோமா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *