‘ரிஷி’யின் கவிதைகள்

0 minutes, 6 seconds Read
This entry is part 5 of 29 in the series 19 ஜூலை 2015

root-words

  1. வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில….

 

இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும்

 

இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை

திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்;

 

ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே

அதலபாதாளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாய் அடித்துப்பேச வேண்டும்;

 

அப்பாவிகளாய்ப் பார்த்து அறுக்கப்படும் தலைகளைக் கண்டு

குறையாத  உவகைகொள்ளும் உலகளாவிய அன்பு மனம் வேண்டும்

 

புரையோடிய வன்மத்தில் யாரோ எழுதிய அற்ப வாசகத்தைத் தப்பாமல்

தன் முகநூலில் பதிவேற்றம் செய்து யுகப்புரட்சி செய்துவிட வேண்டும்!

 

பொறுப்பேற்பில்லா அரியாசனத்தில் பெருமையோடு அமர்ந்துகொள்ள வேண்டும்

 

’குரலற்றவர்களின் குரலாக’த் திகழும் அதிகாரப் பெருவிருப்பில்

கழுத்துகளைக் கணக்கெடுத்துக் கயிறா லிறுக்கியபடியே கவிதை யெழுத வேண்டும்!

 

 

*****

  1. ரத்தக்காட்டேரியும் பட்டாம்பூச்சியும்

 

பட்டாம்பூச்சியின் மென் இறகுகளை ஒவ்வொன்றாய்ப் பிய்த்தெறிந்தபடியே

ஒரு தொழில்முறைக் கொலையாளியின் துல்லியத்தோடு

அவள் அறிவிக்கிறாள்:

 

“என்றாவது நீ பட்டாம்பூச்சியைப் பிரியத்தோடு பிடிக்க முயற்சி செய்திருக்கிறாயா?

என்றாவது அதை உன் கைவிரல்களுக்கிடையில் அன்போடு ஏந்தியதுண்டா?

இந்த அழகிய பூச்சியைப் பொருட்படுத்தி அதன் அருகே போகத்தான்

என்றேனும் அக்கறை காட்டியிருக்கிறாயா?

நான் இவற்றையெல்லாம் செய்திருக்கிறேன்; இதற்கு மேலும்.

எனவே இந்தப் பூச்சியை சித்திரவதை செய்ய நான் உரிமை படைத்தவள்;

வண்ணத்துப்பூச்சியை வதைப்பது என் விருப்பத்தேர்வு _”

 

பிரகடனம் செய்தபடியே

இதோ நவீனப்பிறவி, இதோ கற்கால வாதி என

பச்சோந்தியாய் நிறம் மாறியவாறு, தான்

முடமாக்கிய வண்ணத்துப்பூச்சி மீது

மாகவிதை ஒன்று எழுதி முடிக்கிறாள்.

 

மிகவான அச்சத்தின் பிடியில் நான் இங்கே

அவளுடைய அன்புக்குரியவர்களின் நலனுக்காய் பிரார்த்தித்தபடி….

 

 

*****

  1. நுண்ணுணர்வு

 

நடைபழகிக்கொண்டிருக்கிறேன்

அகவுலகப் பசும் எல்லையின்மையின் அகண்ட வெளியெங்கும்;

 

அங்கீகாரம் எனக்கும் என் தேடல்களுக்கும் இடையேயான

தேவையற்ற குறுக்கீடு;

 

கைத்தட்டல், பாராட்டு

படைப்பின் ஆனந்தத்திற்கு ஒருபோதும் பதிலியாகாது;

 

 

காலம் எல்லையற்ற எட்டு மணி சாகரமாக நிலைத்திருந்தது

கடிகாரம் தன் டிக் டிக் டிக் ஐ நிறுத்திவிட்டதை நான் உணரும் வரை;

 

இன்றிரவு நான் முழுவிழிப்போடிருப்பேனாக

கனவற்ற ஆழ் உறக்கத்தில்;

 

கவிதையில் சொற்கள்

தெய்வாதீன வனமொன்றில் முள்ளும் மலருமாக _

 

கவிதை எதுவுமே சொல்வதில்லை

வேறோர் கூடு பாயாதவரை

 

 

Series Navigationமு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *