‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 3 seconds Read
This entry is part 7 of 11 in the series 25 ஜூலை 2021

 

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 

  1. அவரவர் ஆன்மா அவரவருக்கு

 

தெருவையே நிறைத்துச் சுழித்துக்கொண்டோடியது

அந்தக் குரல் _

பண்டரிநாதனைப் பாடிப் பரவியபடி.

ராமனைப் போல் உடையும் ஒப்பனையும் தரித்திருந்த

ஒருவரின் அருகில்

அனுமனைப்போன்றே அத்தனை அன்போடும் பணிவோடும்

நின்றிருந்தான் சின்னப் பையன்.

அவர்களிருவரின் மலிவுவிலையிலான ஒப்பனைகள் அவர்களை

ஏழை ராம அனுமனாக எடுத்துக்காட்டின.

ராமனும் அனுமனும் பணக்கணக்குக்கப்பாற்பட்டவர்கள்

என்ற மனக்கணக்கில் பிணக்கிருப்பாரையும்

உருகச்செய்யும்படி

அதோ தெருவில் கானாமிர்தத்தை வழியவிட்டுக்கொண்டே நிற்கிறான் ராமபிரான்….

கூடவே காலை பத்துமணி வெயிலின் வியர்வை வழிய

குட்டி அனுமன்.

தந்தையும் பிள்ளையுமோ

தாற்காலிக எஜமானும் ஊழியனுமோ

என் வாடகைவீட்டு வாசலில் வந்து நின்று

பாடிக்கொண்டிருக்கிறார்கள்

பசித்த வயிறோடு.

அவர்களுடைய குரலின் ரீங்காரம்

உயிரின் அடியாழத்தில் எதிரொலிப்பதை உணரமுடிந்தது.

பைக்குள் கையை நுழைத்து பரபவென்று தேடிப்பார்த்து

கிடைத்த நூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு

(ஐந்நூறு ரூபாய் கிடைத்திருந்தால் எடுத்துக்கொண்டுபோயிருக்கமாட்டேனோ என்ற கேள்வியும் உடன்வர)

வாசலையடைந்து காசைக் கொடுப்பதற்கு முன் _

அனிச்சையாய் கால்கள் செருப்புகளைக் கழற்றிவைக்க

ஒரு கணம் கண்மூடி அவ்விருவரையும் கைகூப்பி வணங்கினேன்.

ராமனுக்கோ அனுமனுக்கோ

இன்னும் பலராலாகிய என் அன்றாடங்களின் சகமனிதர்களுக்கோ

என்னால் செய்யக்கூடிய குறைந்தபட்ச மரியாதை அது.

குட்டி அனுமன் என்னைப் பார்த்து அலங்கமலங்க விழித்தான்.

தெருவில் போய்க்கொண்டிருந்த சிலர்

நமுட்டுச்சிரிப்போடு கடந்துபோனார்கள்.

என் ஆன்மா நிறைந்து தளும்பிக்கொண்டிருந்தது.

 

 

2.இயங்குவிதிகள்

 

கருத்துக்கு எதிர்க்கருத்துரைக்க முடியாதவர்கள்

Character Assassinationஇல் இறங்குகிறார்கள்

கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்

கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி

அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்

ஒரு கருத்துக்கு வரக்கூடிய காத்திரமான எதிர்க்கருத்தை

எதிர்கொள்ள முடியாதவர்கள்

Character Assassination இல் இறங்குகிறார்கள்

கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்

கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி

அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்

ஒரு எதிர்க்கருத்துக்கு வரக்கூடிய காத்திரமான இன்னொரு எதிர்க்கருத்தை

எதிர்கொள்ள முடியாதவர்கள்

Character Assassination இல் இறங்குகிறார்கள்

கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்

கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி

அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்

வெளியேறமுடியாதொரு விபரீத வட்டச்சுழற்சியில்

தலைசுற்றி கண்மயங்கி யவருமிவருமெவருமுவருமாய்

இன்னும் நிறையவே மிச்சமிருக்கின்றன

கொச்சைவார்த்தைப்பிரயோகங்கள்

கெட்ட வார்த்தைகள்

character assassinationகள்

கவிதைகள்…..

 

 

  1. பூச்சாண்டிகள்


நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்டபார்வையும்
திமிர்ந்த ஞானச்செறுக்கும் தமிழின் திருமாண்பும்
தமதென்றே பாவனைசெய்து அதை ஆவணமாக்கி
நிஜத்தில் முதுகுத்தண்டில் நல்லதொரு ‘ஸ்ப்ரிங்க்’ பொருத்தி
நினைத்தபடியெல்லாம் நாலாபக்கங்களிலும் வளைந்து
மடங்கித் தழைந்து குழைந்து
அழையா விருந்தாளியாய் அங்குமிங்கும் சில
அவரளவிலான அரிய கருத்துகளை
அள்ளி வழங்கி
அறிஞரும் ஆய்வாளருமாகி
அருந்தவப்படைப்பாளியுமானபின்பும்
அழுதுபுலம்பிக்கொண்டிருப்பார்
கொஞ்சம்போல் எஞ்சியிருக்கும் மனசாட்சியும்
அரைகுறை ஆன்மாவும்
பழுதடையாமலிருப்பதாலோ
பழுதடைந்திருப்பதாலோ….

 

 

 

  1. உள்ளங்கை நெல்லிக்கனி

 

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்றால்

அத்தனை தெளிவாகத் தெரிவது என்றார் ஒருவர்.

அத்தனை துல்லியமாகத் தட்டுப்படுவது என்றார் ஒருவர்.

தெரிவதற்கும் தட்டுப்படுவதற்கும் இடையே உள்ள பொருள் மாறுபாடு பின் தொடர –

உள்ளத்திலுள்ள கையிலிருக்கும் நெல்லிக்கனியைப் பார்க்க ஆசை பிறந்தது.

அதியமான் அவ்வைக்குத் தந்த நெல்லிக்கனி என்னிடம் எப்படியிருக்கும்?

அப்படி யாரேனும் தந்தாலும் அவ்விருவரிடமிருந்து திருடப்பட்டதாக இருக்குமோவென

மனதில் எழலாகும் சந்தேகத்தை எப்படித் தீர்த்துக்கொள்வது?

இருவரில் யாரிடமிருந்து களவாடப்பட

வாய்ப்புகள் அதிகம் என்ற கேள்விக்கு

எப்படி விடையளிப்பது?

நெல்லிக்கனியும் நெல்லிக்காயும் ஒன்றா இருவேறா?

நெல்லிக்காயும் அரிநெல்லிக்காயும் வேறு வேறு

என்று தெரியும் என்றாலும்

ஒரு பார்வைக்கு எல்லாம் ஒன்றாகவே தெரியும்தான்.

ஒரு சமயம் உள்ளங்கையிலும் இன்னொரு சமயம் அதலபாதாளப் பள்ளமொன்றிலும் இருக்கும்

பிறிதொரு சமயம் இல்லாமலாகும்

உள்ளங்கை நெல்லிக்கனி உண்மையில் எத்தனை தள்ளியிருக்கிறது

என்பதுதான் ஒருபோதும் தெரிவதில்லை

 

 

Series Navigationபிச்சகுருட்ஷேத்திரம் 1  (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *