‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 7 in the series 24 நவம்பர் 2019

  1. கர்ணனும்

கமர்கட்தானமும்

கவிதையும்

கர்ணனைத் தங்கள் தோழனாகத்
தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர்
வலது கை கொடுப்பதை
இடது கை யறியாமல்
தர விரும்புவதேயில்லை.


கமர்கட்தானம் கொடுத்தாலும்
அதைக் கணக்கற்ற காமராக்களின்
ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள்.
இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய்
கொடுத்து
வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில்
துல்லியமாய் செல்ஃபியெடுத்துப்
பதிவேற்றிவிடுகிறார்கள்.

  •  

குட்டு வெளிப்பட்டதும்
துண்டைக் காணோம்
துணியைக் காணோம் என்று
கொஞ்சமே கொஞ்ச காலம்
அஞ்ஞாதவாசத்திலிருந்த கவிச்சக்கரவர்த்திகள்
வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து
வாய்முத்துதிர்த்து
விட்ட இடத்திலிருந்து
தங்கள் தர்பாரைத் தொடங்குகிறார்கள்.

  •  

காணிநிலமென்று சில ஏக்கர்
நிலங்களைக்
கைவசம் வைத்திருக்கும்
நவீன ஏழைகள் சிலர்
ஒண்டுக்குடித்தனத்திலிருப்பவர்களைக்
கொடுங்கோலரசர்களாகக் காட்டி
செருப்பாலடிக்கிறார்கள்
திரும்பத்திரும்ப.

  •  

பேசும் பாம்புகளாக மெகாத்தொட
ரோட்டிக்கொண்டிருக்கும்
விஜய் தொலைக் காட்சி
நாங்கள் மூடநம்பிக்கைகளை ஆதரிக்க
வில்லை, மூடப்பழக்கவழக்கங்களை
ஊக்குவிக்கவில்லைஎன்றெல்லாம்
பலவாறாய்
நீண்டு வளைந்துசெல்லும்
வாக்கியப் பாம்புகளை
திரையில் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு வேகவேகமாய்
ஊர்ந்துசெல்ல வைக்கிறது.

  •  

எல்லோரும் உண்மைதான் பேசுவார்கள்,
உண்மையாகத்தான் பேசுவார்கள்
என்று இன்னமும் எண்ணியவாறிருக்கும்
இத்தனை பெரிய மூடநம்பிக்கையிலிருந்து
மீளும் வழியறியாமல்
விக்கித்து நிற்கிறது என் பகுத்தறிவு.

***

  • கவிதையெழுதுதல்

என்ற

சமூகச்செயல்பாடு

இந்த மாதமும் துண்டுவிழுவதில் வியப்பில்லை.
வரவுசெலவு பற்றாக்குறை வாடிக்கை.

(வீதியோரம் வெற்றுப்பார்வையுடன்
உள்ளொடுங்கிய வயிறுடன் படுத்திருப்பவரைப்
பார்க்க
நான் வெட்கங்கெட்ட வில்லி
விசித்திரகோடீஸ்வரி)

வங்கியிலுள்ள பூஜ்யசேமிப்பை
வர்ணமயமாக வெளிச்சமிட்டுக்
காட்டும் ஏடிஎம் மிஷின்

முகமூடிக்கொள்ளைக்காரர்கள்
என்னைச் சுற்றிவளைத்தால் என்னவாகும்?
அதாவது, அவர்களுக்கு

அத்தனை நிறைவளிக்காத ஒரு சிறு நூலை
இன்னும் பத்துநாட்களுக்குள் மொழிபெயர்த்து

முடித்தாகவேண்டும்.
மூவாயிரத்தி ஐந்நூறு ரூபாய் கிடைக்கும்.

முந்நூறு பக்க மொழிபெயர்ப்பை விட
முத்தான பத்து வரிக் கவிதை
அதிக சன்மானம் ஈட்டித்தரு மந்தப்
பொற்காலம்
என் வாழ்நாளுக்குள் வருமா?

(அப்படியே வந்தாலும்
யார் கேட்டாலும் தருவதற்கு
கவிதை யென்ன ஏழை வேசியின்
உடம்பா?)

அத்தனையையும் மீறி ஒரு கவிதை
இடைமறிக்கிறது
என்னை எழுதிவிடேன் என்று
மூச்சடைக்க இறைஞ்சுகிறது.

அது என்ன சுண்டுவிரலா?
கண்ணிமையா? சொப்புவாயா?
இன்னும் உருப்பெறவில்லை வடிவம்
ஆனால், இளஞ்சூட்டில்
என்னமாய் சுவாசிக்கிறது அந்த உயிர்!

மையமா யொரு வரியிலிருந்து
துவங்கினால்
பின் மூன்று வரிகளோ
முன்னூறு வரிகளோ

அதில் நான் முயலோ முட்டுச்சந்தோ
முப்பரிமாண ஓவியமோ?

எங்கே ஒளிந்துகொண்டிருப்பேன்
என்னைநானே பார்த்தவாறு?

ஆறு மனமே ஆறு…..
ஆவியாகி மறையாம லொரு
கவிதையை அடைகாத்தல்
கைகூடினா லது
ஆகப் பெரும்பேறு.

***

  • கவிதை என்ற பெயரில்….

எத்தனைலைக்குகள் வாங்கினாலென்ன?
எத்தனை விருதுகள் வாங்கினாலென்ன?
விதவிதமான புகைப்படங்களில்
புதுப்புது ஆடையணிமணிகளுடன்
அழகுப்போட்டிகளில் பங்கெடுப்பதே போன்று,
அல்லதுரௌத்ரம்பழகுவதாய்
எத்தனைவிதமாய்
போஸ்கொடுத்தால்தான் என்ன?
இத்தனை வன்மமும்
வெறுப்பும்
விபரீத அகங்காரமும்
வெட்கங்கெட்ட மனச்சாய்வும்
வேண்டும்போதானமறதியும்
வசதியாய் சிலவற்றைப் பற்றி
எண்ணமறுக்கும்
வக்கிரமும்
வழிந்தோடும் மனம் வாய்த்தவர்
வரிவரியாய் பல்லாயிரம் எழுதினாலும்
எப்படி கவியாக முடியும்?


லைக்குகள் அதிகமாக அதிகமாக
தலைக்கேறிய கர்வத்திற்கு
விலைபோய்க்கொண்டிருக்கும் கவியை
விசனத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது
நவீன தமிழ்க்கவிதை.

பெரியபெரிய வார்த்தைகளை
கைபோன போக்கில்
அடுக்கிக் கோர்த்து
பூச்சாண்டி காட்டலே
கவிதை
யென்ற அவர் புரிதலுக்கு
முதல் பலி அவராக;
அடுத்தது
அவர் வடித்ததாக.

Series Navigationரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 5பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் இருவருக்கும் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *