ரௌத்திரம் பழகு!

This entry is part 11 of 42 in the series 1 ஜனவரி 2012

ஸ்ரீதர் சதாசிவன்
Twitter: @shrisadasivan

நடுநிசியில் கண்விழித்த அதிதி, பக்கத்தில் படுக்கையில் ராமை தேடினாள். எதிர்பார்த்தது போலவே படுக்கை காலியாய் இருந்தது. மெல்ல எழுந்து லிவிங் ரூமிற்கு வந்தாள். ராம் இருட்டில், கவுச்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அணைத்து வைத்திருந்த டி.வீயை வெறித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் வந்து, குனித்து முழங்கால் போட்டு உட்கார்ந்தாள் அதிதி. அவன் தலை முடியை, தனது கைகள் கொண்டு வருடினாள்.
“ஏம்ப்பா தூங்கலையா?” என்று பரிவாய் கேட்டாள்.
“………..” பதில் சொல்லாமல் அவளை திரும்பிப் பார்த்தான் ராம்.
“இட்ஸ் ஓ.கே” என்று அவன் கைகளை பற்றி தடவினாள் அவள்.
“தூங்க முடியலை அதிதி” என்று தளர்வாய் ராமிடமிருந்து பதில் வந்தது.
“தூங்கலேனா உடம்பு என்னாகும்? இதோட மூணாவது நாள்.”
“ரத்தம் கொதிக்குது அதிதி. இருப்பு கொள்ளல, கையாலாகாவதன் மாதிரி பீல் பண்றேன்” என்று உரக்கச் சொன்னான் ராம்.
“இட்ஸ் ஓ.கே, இட்ஸ் ஓ.கே. அப்படி எல்லாம் நினைக்காத. யூ ஆர் டூயிங் யுவர் பெஸ்ட்” அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் அதிதி “ரிலாக்ஸ். கொஞ்சம் பொறுமையா இரு, ஜஸ்ட் ஒன் மோர் டே. நீ இந்தியாவுல இருப்ப. எல்லாம் சரியாயிடும்”
—–

இரண்டு நாட்களுக்கு முன்பு நடூரத்திரியில் சென்னையிலிருந்து வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. ராமின் அண்ணன் ஆனந்த் பதட்டத்துடன் எதிர் முனையில்.
“என்ன ஆனந்த்? என்ன இந்த நேரத்துல? என்னாச்சு?”
“சாரிடா, லேட்ஆ கால் பண்றேன். வீட்டுல ஒரே சண்டை. அப்பா அம்மாவை ரூமுல போட்டு, கண்டமேனிக்கு அடிச்சிருக்காரு. சுபா தடுக்க போயிருக்கா, அதுக்கு அவ மேலயும் கை ஓங்கியிருக்காரு.”
“என்ன? என்னடா சொல்ற? சுபாவ அடிச்சாரா?”
“ஆமாம். அவ கூச்சல் போட்டு, வீட்டுக்கு வெளிய வர, அக்கம் பக்கம் எல்லாம் வந்து, அப்பாவ தடுத்து நிறுத்தி இருக்காங்க. குமார் அங்கிள், சைக்கிள எடுத்துகிட்டு கடைக்கு வந்து, என்னை உடனே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தார்”
“……………”
“நான் வந்து பாத்தா அம்மா கண்ணெல்லாம் வீங்கியிருக்கு”
“ஓ மை காட்” ஆத்திரம் பொங்கியது ராமிற்கு. “என்ன தைரியம் அந்த ஆளுக்கு!”

போன் சத்தம் கேட்டு ராம் கூடவே எழுந்த அதிதி, ஒரு பக்க தொலைபேசி உரையாடலை வைத்தே என்ன விஷயம் என்று யூகித்து விட்டாள். கல்யாணமாகி இந்த மூன்று வருடங்களில் அதிதிக்கு இது பழகிப் போயிருந்தது. ராமை அதிதிக்கு வரன் பார்த்த பொழுது, ராமின் குடும்பம் ஒரு சராசரி நடுத்தர வரகத்தை சேர்ந்த குடும்பமாகத்தான் தோன்றியது. ராமின் அப்பா, ரங்கராஜன் பாங்க் ரிடையரி. அம்மா மைத்ரேயி டி.என்.ஈ.பி யில் வேலை செய்து, ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆனந்தும், ராமும். ஆனந்திற்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை. மனைவி சுபா, பத்து வயது குழந்தை ஸ்வேதா. பெற்றோர்களுடன் கூட்டுக்குடுத்தனம்.

ராம் – அதிதி கல்யாணம் நடந்து, இரண்டு வாரங்கள் தான் இந்தியாவில் இருந்தார்கள். அதிதி வீட்டில் ஒரு வாரம், ராம் வீட்டில் ஒரு வாரம். ராம் வீட்டில் தங்கிய இரண்டாவது நாளே, அதிதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வழக்கமான அந்த காலை பொழுதில், ஸ்வேதா ஸ்கூலிற்கு போக தயாராகிக் கொண்டிருந்தாள். ரங்கராஜன் பேத்தியை ஸ்கூல் வேனில் ஏற்றிவிடுவது வழக்கம். தொலைபேசி ஒலித்தது. ரங்கராஜன் குளித்துக் கொண்டிருந்தார். மைத்ரேயி பதில் சொன்னாள். பேசியது ஸ்கூல் வேன் டிரைவர். அன்று கொஞ்சம் தாமதமாகிறது, அதானால் வேன் வீட்டிற்கு வந்து பிக்கப் பண்ண முடியாது, ஸ்வேதாவை தெரு முனைக்கு கொண்டு வந்து எற்றிவிடும்படி கேட்டார் டிரைவர். மைத்ரேயி “சரிப்பா. ஆகட்டும்” என்று சொன்னாள்.

குளித்து தயாரான ரங்கராஜனிடம், அதிதி நல்ல மருமகளாய், “மாமா, ஸ்வேதாவை தெரு முனைக்கு கொண்டு போய் ஏத்திவிடுங்க. வேன் இன்னிக்கு உள்ளே வராதாம்” என்றாள்.
“யாரு சொன்னா?” என்றார் எரிச்சலாக ரங்கராஜன்.
“அத்தை” – அதிதி.
“மைத்ரேயி! இங்க வாடி” என்று கத்தினார் ரங்கராஜன். “அந்த வேன்காரனுக்கு இதுவே பொழைப்பு. காசுகுடுக்கறது இல்லாம, அவன் வசதிக்கு நாம வளைஞ்சு குடுக்கணும்”
“என்னங்க என்ன ஆச்சு?” என்று அடுப்படியிலிருந்து வேகமாய் வந்தாள் மைத்ரேயி.
“என்னடி சொன்னான் வேன்காரன்?”
“லேட் ஆகுது, தெருமுனைக்கு வந்துருங்கனு சொன்னான்” என்று மெதுவாய், தயங்கி சொன்னாள் மைத்ரேயி.
“உடனே நீ சரின்னு சொன்னியாக்கும்? அதிங்கபிரசங்கி! நீயாடி ஏத்திவிடற? என்னை கேக்கவேண்டாம்?” என்று கோபத்தில் கத்தியவர், “பளார்” என்று மைத்ரேயியின் கன்னத்தில் அறைந்தார்.

தூக்கிவாறி போட்டது அதிதிக்கு. அரண்டு போனாள். குழந்தை ஸ்வேதா, “அம்மா” என்று கத்திக்கொண்டே கிச்சனுக்கு ஓட, சத்தம் கேட்டு வெளியே வந்தாள் சுபா. சூழ்நிலை உடனடியாக புரிந்தது சுபாவிற்கு. அதிர்ச்சியில் பேய் அறைந்தார் போல நின்று கொண்டிருந்த, அதிதியை தொட்டு உலுக்கி, “அதிதி, நீ கொஞ்சம் ஸ்வேதாவை பஸ் ஏத்தி விடேன்” என்று குழந்தையை அவளை கையில் திணித்து, இருவரையும் வாசலுக்கு தள்ளினாள் சுபா.

அதிதிக்கு என்ன நடந்தது என்று புரியக்கூட ஒரு அரைமணி நேரம் பிடித்து. அதிர்ச்சியில் மூளை வேலை செய்யவில்லை. அவள் வீட்டில், குழந்தைகள் விளையாட்டுக்கு ஒருவரை ஒருவர் அடித்தால் கூட, அவள் அப்பாவும் அம்மாவும் கண்டிப்பார்கள். குரலை உயர்த்தி சண்டை போடுவதென்பது அபூர்வம். இங்கே, அவள் கண் முன்னால், அறுவது வயது மாமனார், உப்பு பெறாத விஷயத்திற்கு, ஐம்பத்து ஐந்து வயதான மாமியாரை, புது மருமகள், பத்து வயது பேத்திக்கு முன்னால், “பளார்” என்று அறைந்து இருந்தார். இது போன்ற “டொமஸ்டிக் வயலன்ஸ்” எல்லாம் கீழ்த்தட்ட குடும்பங்களில், குடிகார கணவன்கள் ஈடுபடும் ஒரு ஈனமான செயல் என்று அன்று வரை நினைத்திருந்த அதிதிக்கு, அங்கு நடந்ததை ‘டக்’கென்று கிரகிக்கக் கூட முடியவில்லை.

ஸ்வேதாவை ஸ்கூல் பஸ் ஏற்றிவிட்டு, வேகமாய் மாடியில் ரூமில்ருந்த ராமிடம் ஓடிய, அதிதிக்கு, ராமை பார்த்தவுடன் அழுகை பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அதற்குள் சுபா நடந்ததை, ராமிடம் சொல்லியிருந்தாள்.
“ஐ யாம் சாரி அதிதி” என்று அவளை அணைத்து ஆறுதல் சொன்னான் ராம்.
“என்ன இது ராம்? உங்க அப்பா என்ன இப்படி காட்டுமிராண்டித்தனமா?” குரல் உடைந்தது அதிதிக்கு.
“அந்த ஆளு ஒரு மிருகம்!”
“என்ன நடக்குது இந்த வீட்டுல?”

ராம் அவளை அமரவைத்து, அவள் கண்களை துடைத்தான். அவளிடம் மனம்விட்டு பேசினான்.

ராமிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. மனைவியை கிள்ளுக்கீரை போல நடத்துவது ரங்கராஜனுக்கு சாதாரணமான விஷயம். அவரது உணர்சிகளுக்கு ஒரு வடிகால் தான் மைத்ரேயி. ஒரு பஞ்சிங் பேக்! மைத்ரேயி, பெயருக்கு ஏற்றார்போல பொறுமையில் சீதா தேவி. என்னதான் படித்து, வேலைக்கு போகும் பெண்ணாய் இருந்தாலும், “ஆணுக்கு பெண் தாழ்வு” என்று அந்த காலத்து எண்ணத்தில் வளர்க்கப்பட்டவள். கல்யாணம் ஆனா புதிதில், மைத்ரேயி சில முறை, ரங்கராஜனை எதிர்த்திருக்கிறாள். அடி கூடியதே தவிர குறையவில்லை. ஒருமுறை மைத்ரேயியின் பெற்றோர்கள் முன்னாலேயே ரங்கராஜன் கை ஓங்க, அவளது அம்மா, அப்பாவிடம் புலம்பினாள். “அதெல்லாம் புருஷன் பொண்டாட்டி சமாசாரம், நீ தலையிடாத!” என்று அப்பா, அம்மாவை அடக்கினாரே தவிர ரங்கராஜனை ஒன்றும் சொல்லவில்லை. “பொம்பளை நீதாம்மா பொறுத்து போகணும். குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும். ஆம்பளைக்கு ஆபீசில் என்ன பிரச்சனையோ!” என்று மைத்ரேயியின் அம்மா அறிவுரை சொன்னபொழுது “நானும் தானே வேலைக்கு போகிறேன், எனக்கு மட்டும் பிரச்சனைகள் இல்லையா? அது எப்படி கை ஓங்கலாம்?” என்று எதிர்கேள்வி கேட்கவில்லை மைத்ரேயி. புருஷனிடம் அடி வாங்குவது சில பெண்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி என்று எண்ணி, தன்னை தானே சமாதனப்படுத்திக் கொண்டாள். “உங்க அக்கா பாரு, அப்படிப்பட்ட மனுஷனையும் சமாளிச்சு, குடும்பத்த எப்படி கொண்டுபோறா! அவகிட்ட கத்துக்கோ பொறுமைய!”, முன்கோபியான மைத்ரேயியின் தங்கை புவனாவிற்கு புத்திமதி சொல்ல, அப்பா மைத்ரேயியின் ‘நன்னடத்தையை’ உதாரணம் காட்டினார். கணவனின் அடக்கு முறையையும், அக்கிரமத்தையும் சகித்துக்கொள்ளும் பெண்களுக்கு “சிறந்த மனைவி” சான்றிதழ் குடுப்பது நமது சரித்திர கால வழக்கமாயிற்றே!

“உங்க அம்மா அந்தகாலம், சரி. நீங்க எப்படி பொறுத்துக்கிறீங்க?” புரியாமல் கேட்டாள் அதிதி.

ராமிற்கும், ஆனந்திற்கும் அப்பாவை கண்டாலே பயம். அம்மாவை அடிப்பவர், அவர்களையும் அடிக்கத் தயங்கியதில்லை. ஒருமுறை பன்னிரண்டு வயது ராம், எதோ ரஜினிகாந்த் படம் பார்த்த தைரியத்தில், அம்மாவிற்கு ஆதரவாய், அப்பாவை எதிர்த்து சண்டை போட, அவனை அடித்து நொறுக்கினார் அப்பா. “என்ன திமிருடா உனக்கு? இரு. உன்னையும், உன் அம்மாவையும் உயிரோட கொளுதறேன்” என்று கிரசின் டின்னை எடுத்துக் கொண்டு அப்பா அவனை துரத்தியது இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது. “வேண்டாம்பா” என்று அவனை தடுத்தாள் மைத்ரேயி. “அப்பாக்கு ஏதோ டென்ஷன். அதான் கோபப்படறார். நீ பெரியவங்க விஷயத்துல தலையிடக்கூடாது.”

கோபம் வராத நேரங்களில் அப்பா நல்லவர் தான். அவரது கோபத்தையும், அம்மா வாங்கும் அடி உதைகளையும், குடும்பம் பழகிக் கொண்டது. பல சமயங்களில் அம்மா ஒன்றுமே நடக்காதது போல நடந்தது கொள்வாள். நாளடைவில் குழந்தைகளுக்கும் காயங்கள் மரத்துப் போயின. வருடங்கள் ஓட, முதுமை நெருங்க, அப்பாவின் கோபம் குறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் வாரத்துக்கு இரண்டு முறை கை நீளும் என்றால், இப்பொழுதெல்லாம் மாதம் இரண்டு முறை.

“அதனால? உங்க அம்மாக்கு என்ன வயசாகுது? டயபடிக் வேற. அவங்களை போய் கை நீட்டி அடிக்கலாமா?” அதிதி ராமிடமும், சுபா ஆனந்திடமும் வீட்டில் நடக்கும் இந்த வன்முறையை கண்டிக்க, அவர்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவை கண்டிக்க ஆரம்பித்தார்கள். அம்மாவும் சில சமயங்களில் எதிர்க்க ஆரம்பித்தாள். “இனிமே இப்படி நடக்க மாட்டேன், இது தான் கடைசி” என்பார் அப்பா. அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு வீட்டில் அமைதி நிலைக்கும். பின்பு வேதாளம் முருங்கை மரம் ஏறும்.

ஆனந்த் போன் செய்த பொழுது, அப்பா அம்மாவை அடித்தார் என்பதை வீட, சுபாவை அடித்தார் என்பது தான் அதிர்ச்சியாக இருந்தது.
“அப்படி ஆகி போச்சு உங்க அம்மா நிலைமை! என்ன அக்கிரமம் இது?” போனில் பேசி முடித்த ராமிடம் பொருமினாள் அதிதி.
“எவ்ளோ திமிரு அந்த ஆளுக்கு.” பக்கத்திலிருந்த சுவரின் மேல் ஆத்திரம் தாங்காமல் , கைகளால் குத்தினான் ராம்.
“ரிலாக்ஸ். டென்ஷன் ஆகாத. என்ன பண்ணலாம்னு யோசி” அதிதி அவனை சமாதானப் படுத்தினாள்.

இந்த முறை ராம் ரொம்பவே உறுதியாக இருந்தான். ஆனந்த், அம்மா பேச்சை கேட்டு தயங்கியதால், அவனே அமெரிக்காவிலிருந்து சென்னையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து பேசினான். “உங்க அம்மாவை ஒரு கம்ப்ளைண்ட் குடுக்க சொல்லுங்க சார். நாங்க பாத்துக்கறோம்” என்று அனுசரணையாக அவர்களும் பதில் சொன்னார்கள்.

அடுத்த நாள் அம்மாவிடம் பேசிய பொழுது அம்மா கலங்கினாள்.
“வயசாகுது, மனுஷனுக்கு சுத்தமா காது கேக்கலை, மறதி வேற. அந்த கோவத்தை என் மேல காட்டறாரு! நான் என்ன செய்ய முடியும்? முடியலப்பா, உடம்பு தாங்கலை”
அம்மா அழுதவுடன் ராமால் தாங்க முடியவில்லை. “போதும்மா! இந்த ஆளோட நீ வாழ்ந்தது. நான் ஆனந்த் கிட்ட பேசிட்டேன். ரெண்டு மாசம் முன்னாடி தான் கடைசியா வார்னிங் குடுத்தோம். இந்த முறை சும்மா இருக்க போறதில்லை. போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்க போறோம்.”
“ஐயோ வேண்டாம்ப்பா. நம்ம குடும்ப மானம் என்னவாகும்? ”
“என்னமா பேசற நீ? நாம என்ன தப்பு பண்ணினோம்? குடும்ப மானம் எல்லாம் போகாது. அந்த ஆளு மானம் தான் போகும். போகட்டும். எத்தனை காலம்தான் நீயும் அவரை காபாத்துவ?”
“வேணாம் ராம். வயசான காலத்துல.”
“உனக்கு மட்டும் வயசாகலையா? நீ டயபடிக் வேற. இந்த ஆளு அடிச்சு நாளைக்கு உனக்கு ஏதாவது ஆச்சுன்னா. காலம் பூரா, எங்களை அந்த குற்ற உணர்ச்சி கொல்லும். நீ எங்களுக்கு முக்கியம்”
“புரியுதுப்பா, ஆனா” அம்மா தயங்கினாள்.
“சரி உனக்கு தான் பழகிப் போச்சு. சுபா அண்ணிக்கு என்ன தலையெழுத்து? எவ்ளோ தைரியம் இருந்த அந்த ஆளு அண்ணி மேல கை நீட்டுவான்? என்ன பண்ணினாலும் கேக்க ஆளு இல்லை, நம்மள யாரு என்ன செய்வாங்கனு தைரியம். இப்படியே விட்ட நாளைக்கு ஸ்வேதா குட்டிய அடிப்பாரு. ஒரு ஆளால குடும்பம் முழுசும் கஷ்டப்படனுமா? என்ன நியாயம் இது?”

அம்மாவால் பதில் பேச முடியவில்லை. சுபாவும் ரொம்பவே நொருங்கிப் போயிருந்தாள். ஸ்வேதாவுடன் தனது அம்மா வீட்டுக்கு போயிருந்தாள். ரங்கராஜன் இருக்கும் வீட்டில் இனிமேல் இருப்பதில்லை என்று உறுதியாய் இருந்தாள். எல்லோரும் மீண்டும் போனில் கூடிப் பேசினார்கள். அம்மா போலீஸ் எல்லாம் போக வேண்டாம் என்று மன்றாடினாள். பிரச்சனைக்கு முடிவாக, ரங்கராஜனை கோயம்பத்தூரில் உள்ள ‘ எல்டர்லீ ஹோமி’ல் சேர்ப்பது என்று முடிவு செய்தார்கள். போன வருடம் அவர்கள் குடும்பத்தில் ஒரு வயதான மாமாவை அதே ஹோமில் சேர்த்திருந்தார்கள். நல்ல, வசதியான, கவனிப்பு நிறைந்த ஹோம் அது. ரங்கராஜனிடம் யார் இந்த விஷயத்தை பதமாக எடுத்து சொல்வது என்று பேசியபொழுது, ராம் இந்தியா போக வேண்டியதாயிற்று. அவனால் தான் அவரை சமாளிக்க முடியும். இந்தியாவிலிருந்து திரும்பி வரும்பொழுது, அம்மாவை அமெரிக்க அழைத்து வர முடிவு செய்து, டிக்கெட்டும் புக் செய்தாயிற்று. அம்மாவிற்கு ஒரு மாறுதல் தேவை.

“சரி எழுந்திரு. வா படு. நாளைக்கு பூரா ப்ளைட்ல இருப்ப. தூங்க முடியாது. ப்ளீஸ்” என்று ராமின் கைகளை பிடித்து அழைத்துச் சென்றாள் அதிதி. முப்பது ஆண்டு கால பிரச்னைக்கு இன்னும் முப்பத்தியாறு மணி நேரத்தில் முடிவு காணப்போகும் நம்பிக்கையில், கண்ணயர்ந்தான் ராம்.
—-

ஒரு வாரம் கழிந்திருந்தது. அலுவலகத்திலிருந்த அதிதிக்கு வேலையில் நாட்டம் இல்லை. எப்பொழுதுடா இந்தியாவிலிருந்து அழைப்பு வரும் என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

ராம் இந்தியாவில் இறங்கிய முதல் இரண்டு நாட்கள் ரொம்பவே கடினமாக இருந்தது. வீட்டில் ஒரே ரகளை. ரங்கராஜன் வானுக்கும் பூமிக்கும் குதித்தார். மைத்ரேயியை வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசினார். ராமிடம் கை ஓங்கினார். இந்த முடிவு யாருக்கும் எளிதாக இருக்கவில்லை. ஆனால் மைத்ரேயியின் உடல் நலத்தை கருதியும், குடும்பத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்ற வைரகியத்திலும், ராமும், ஆனந்தும் உறுதியாய் இருந்தார்கள். மூன்று நாட்கள் கழிய, ரங்கராஜனின் வேறு வழியில்லாமல் கோயம்பத்தூர் போக சமதிதார். இன்று எல்லோருமாக ஹோமை பார்க்க கோயம்பத்தூருக்கு போய் இருக்கிறார்கள். காலையில் ராமிடம் பேசினாள் அதிதி, ராமின் குரலில் வருத்தம் தெரிந்தது. என்னதான் இருந்தாலும் அப்பவாயிற்றே! குடும்பத்தில் பிரிவு என்பது கஷ்டமான விஷயம்தான், பாவம் ராம்.

இந்நேரம் அவர்கள் போன காரியத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பியிருக்கவேண்டும். சென்னை வந்தவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதாக சொல்லியிருந்தான் ராம்.

அதிதியின் செல் போன் ஒலித்தது.
“ஹலோ”
“அதிதி” என்றான் ராம்.
“எப்படி இருக்க? எல்லாம் நல்லபடியா போச்சா?”
“………..”
“ஹ்ம்ம்? என்னாச்சு?”
“………..” பதில் வரவில்லை.
“ராம்? இருக்கியா?” செல் போனில் சிக்னல் இருக்கிறதா என்று சரிபார்த்து, மீண்டும் கேட்டாள் அதிதி. “ராம்! ஹலோ! இருக்கியா?”
“இருக்….கேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் ராமின் குரல் உடைந்தது.
“வேண்டாம்பா! உஷ்ஷ், அழாத. உன் கஷ்டம் எனக்கு புரியுது” என்று அவனை தேற்ற முயன்றாள் அதிதி.
ராம் கேவிக்கொண்டிருந்தான்.
“இந்த பாரு, நீ ஆயிரம் மயில் தள்ளி இருக்க. இப்படி அழுதா என்ன பண்றது? நான் பக்கத்துல கூட இல்லை. சொன்னா கேளுப்பா”
“…இல்ல அதிதி…” ராமின் அழுகை குறையவில்லை.
“என்னதான் ஆனாலும் உங்க அப்பா அவர். கஷ்டம் தான். இல்லைங்கல. ஆனா பாவம் உங்க அம்மா, யோசிச்சு பாரு. இந்த வயசான காலத்துல, அவங்களுக்கு அமைதி ரொம்ப முக்கியம். அடிவாங்கற வயசில்லை இது. கலங்காத, எல்லாம் நல்லதுக்குதான்”
“……அம்மா, அம்மா….” அழுகையுடன் கலந்த ராமின் வார்த்தைகளில் தெளிவில்லை.
“எல்லாம் சரியாயிடும். நீங்க ரெண்டு பசங்களும் அவங்க மேல உயிரையே வைச்சிருக்கீங்க. அத்தை வேற ஒரு மாறுதலுக்கு இங்க வரப்போறாங்க. ஷி வில் பி பைன்.”
“அம்மா வரப்போறதில்லை அதிதி!” குரலை களைந்து சொன்னான் ராம். “அம்மா எங்கயும் வரப்போறதில்லை”

மைத்ரேயி, ரங்கராஜனுடன் எல்டர்லீ ஹோமில் சேர்ந்திருந்தாள்! தனது இரண்டு மகன்களும், அவரவர் குடும்பங்களுடன் நிம்மதியாய் வாழ வேண்டும் என்பதும், ரங்கராஜனால் குடும்பத்தில் தேவையில்லாத வன்முறை இனி கூடாது என்பதும் அவள் விருப்பமாய் இருந்தது.

“அம்மா! அப்போ நீ? என்னமா சொல்ற? உனக்கு இது தேவையா? இந்த ஆளோட நீ கடைசி வரைக்கும் திண்டாடனுமா?” அடி, உதையிலிருந்து கடைசியாய் அம்மாவிற்கு விடுதலை என்று எண்ணிக்கொண்டிருந்த ராமிற்கு பேரதிர்ச்சி.
“அது என் தலையெழுத்துப்பா! என்னோட போகட்டும்” என்று அவனை தேற்றினாள் மைத்ரேயி. “வயசான காலத்துல உங்க அப்பாவ தனியா விட என் மனசு இடம் கொடுக்கல. அப்படி விட்டா அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னுடும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் புருஷன். இது என் கடமை. ஒரு தாயா என் கடமையை செய்ய, மனைவியின் கடைமைகளை என்னால தூக்கி எரிய முடியாதுப்பா.” இரண்டு மகன்களையும் அணைத்து ஆறுதல் சொன்னாள் மைத்ரேயி.
“ஐயோ அம்மா! அடி, உதை வாங்கறது உன் கடமை இல்லை.” அம்மாவுடன் பல மணிநேரம் வாதாடினான் ராம்.
அக்னி சாட்சி என்பது அடிமை சாசனம் அல்ல, என்று கடைசிவரை புரியவேயில்லை மைத்ரேயிக்கு.

—–

Series Navigationவாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்
author

ஸ்ரீதர் சதாசிவன்

Similar Posts

Comments

  1. Avatar
    சித்ரா says:

    மனதை கனக்க வைக்கும் கதை! பல மைத்ரேயிகள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

Leave a Reply to சித்ரா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *