லெனின் விருது 2017 – பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 6 in the series 30 ஜூலை 2017

pro_sornavel1

நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு விருது வழங்கப்படும். படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே லெனின் விருதின் தனித்தன்மை.

பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்: அம்பாசமுத்திரம் பக்கத்திலுள்ள வழுதூரைச் சார்ந்த ஸ்வர்ணவேல் அவர்கள் பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அங்கு பாலு மஹேந்திராவிற்கு பல வருடங்கள் ஜூனியர். ஆவணப் படங்களின்பால் தனது கவனத்தைச் செலுத்திய சொர்ணவேல் தங்கம் (1995), ஐ.என்.ஏ. (1997), வில்லு (1997), போன்ற முக்கிய ஆவணப் படங்களின் இயக்குனர். அவரது சமீபத்திய படங்களில் முக்கியமானது அன்பினிஷ்ட் ஜர்னி: எ சிடி இன் ட்ரான்ஷிஸன் (2012) மற்றும் மைக்ரேஷன்ஸ் ஆப் இஸ்லாம் (2014). அன்பினிஷ்ட ஜர்னி, சொர்ண்வேல் தனது நண்பர் பேராசிரியர் மார்க் ஹூல்ஸ்பெக்குடன் இணையாக தயாரித்து இயக்கிய படம். ப்ளோரிடா மாகாணத்திலுள்ள அமெரிக்காவின் முதல் நகரமென கருதப்படும் செயிண்ட் ஆகஸ்டினில் 1960களில் நடந்த இதுவரை அதிகம் அறியப்படாத இன/நிற வெறுப்புச் சம்பவங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பட்ட கஷ்டங்களை ஆவணப்படுத்தியிருக்கும் இப்படம் பகழ்பெற்ற (AWDFF) ஆப்ரிகன் வொர்ல்ட் பிலிம் பெஸ்டிவலினால் அமெரிக்க சிவில் ரைட்ஸ் மூவ்மெண்டின் 50வது ஆண்டுவிழாவிற்காக தெர்ந்தெடுக்கப்பட்டு பல இடங்களில், குறிப்பாக ஆப்ரிக்காவில் நைஜீரியாவிலும், இப்பொழுதும் ஆப்ரோஅமெரிக்கர்கள் நிறவெறியினால் துயறுரும் பெர்கஸனுக்குப் பக்கதிலுள்ள மிஸ்ஸூரி பல்கலைக் கழகத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரிக்க அமெரிக்க ம்யூஸியத்தில் அரங்கேறியது தமிழர்களுக்கு பெருமை.

அதைப் போலவே பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் மைக்ரேஷன்ஸ் ஆப் இஸ்லாம் பாரிஸில் புகழ்பெற்ற எத்னோகிரா திரைப்பட விழாவில் சென்ற வருடம் ஏப்ரல் 12தேதி திரையிடப் பட்டது. ஐயோவா பலகலைக் கழகத்தில் சினிமாத்துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் சொர்ணவேல் தற்சமயம் மிச்சிகன் மாநில பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அன்பினிஷ்ட் ஜர்னி: அ சிடி இன் ட்ரான்ஷிஸனில் ரேஸ் மூலமாகவும், மைக்ரேஷன்ஸ் ஆப் இஸ்லாமில் மதம் மூலமாகவும் சிறுபான்மையினரின் மேல் ஒளிபாய்ச்சிய ஸ்வர்ணவேல் அவரது சமீபத்திய மோங் மெமொரீஸ் அட் த க்ராஸ்ரோட்ஸ் (2016)-ஸில் இனம் மூலமாக விளிம்பிலுள்ளோரின் ஆதங்கத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார். தற்கால அகதிகளின் புலம்பெயர் சூழலில் பாரிஸீல் (Cité nationale de l’histoire de l’immigration) புலம்பெயர்வுக்கான வரலாற்று ஆவணகாப்பகத்தில் சென்ற ஆண்டு இப்படம் திரையிடப்பட்டிருப்பது பேராசிரியர் ஸ்வர்ணவேலின் மனிதம் சார்ந்த தொடர் ஈடுபாட்டுக்குச் சான்று.

கோட்பாட்டிற்கும் தனது ஆவணப்படம் சார்ந்த செயல்பாட்டிற்கும் பாலமாக தனது ஆசிரியத்துவத்தையும் ஆராய்ச்சியையும் நிறுவியிருப்பது ஸ்வர்ணவேலின் தனிச்சிறப்பென்றால், தங்கம் படம் துவங்கி இன்று வரை அறிஞர்கள், ஆசிரியர்கள், தனது மாணவர்கள் போன்றோரை சக பயணிகளாகக் கொண்டு கூட்டாக இயங்கி வரும் அவரது பாங்கு சினிமாவில் அரிதாகக் காணக்கிடைப்பது. வரலாறு கோட்பாடு உருவாக்கம் என்று ஒன்றிணைத்து செயல்படும் விவேகத்தை தனது மாணவர்களுக்கு புகட்டிவரும் பேராசிரியர் ஸ்வர்ணவேல் அவர்களின் பல மாணவர்கள் இன்று பி.ஹெச்.டி. பயின்று பேராசிரியர்களாகவும் எம்.எப்.ஏ. பயின்று சுயாதீனப் படங்கள் எடுப்பவர்களாகவும் வளர்ந்து வந்து மளிர்வது அவரது அகன்ற நோக்கத்திற்கும் உழைப்பிற்கும் கிடைத்த பலன் என்று சொல்லலாம். அவரது ஆசான்களில் ஒருவரான அண்மையில் மறைந்த, 2015க்கான லெனின் விருதைப் பெற்றவருமான திரு. பி.கே. நாயர் அவர்கள் கூறியதைப் போல “பூனே திரைப்பள்ளியில் படித்து அமெரிக்காவில் ரிசெர்ச் ஏ பல்கலைக்கழகங்களில் ஒன்றான மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுவது மட்டுமல்ல ஸ்வர்ணவேலின் சிறப்பு, அவர் வருங்கால மாணவர்களை வரலாறு கோட்பாடு உருவாக்க்கம் என்று சகல தளங்களிலும் இயங்க உத்வேகமளித்திருப்பது அவரது நிகரில்லாத கொடை.” இதே கருத்தை ஸ்வர்ணவேலின் மதிப்பிற்குரிய ஆசான்களான் அமரர் சதிஷ் பகதூரும் ஐயோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். கோரி க்ரீக்மரும் வெவ்வேறு விதத்தில் ஆழமாகப்பதிவு செய்திருக்கிறார்கள்.

மேலும், தனது ஆங்கில புத்தகமான மெட்றாஸ் ஸ்டூடியோஸ்: நேராடிவ், ஜான்ர, அண்ட் ஐடியாலஜி (சேஜ், 2015) மூலமாக தமிழ் சினிமா வரலாற்றை உலகிற்கு எடுத்துச்சென்ற ஸ்வர்ணவேல் அவர்கள் தனது தமிழ் புத்தகமான சினிமா: சட்டகமும் சாளரமும் (நிழல், 2013) மூலமாக உலக சினிமாவை, குறிப்பாக அதிமுக்கிய ஆவணப்படங்களையும் பரிட்சார்த்த படங்களையும், தமிழ் உலகிற்கும், குறிப்பாக சினிமா மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது இதயத்து சட்டகமும் சாளரமும் சினிமாவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்காக என்றும் திறந்திருப்பவை. கடந்த சில வருடங்களில் தமிழில் சீரிய சினிமாவுக்கான சஞ்சிகைகளான படச்சுருள், நிழல் மற்றும் படப்பெட்டியில் பதிவான அவரது காத்திரமான கட்டுரைகள் தமிழ் சூழலில் மிக முக்கியமானவை. சுயாதீன கலைஞர்களுக்காக வழங்கப்படும் லெனின் விருது (2017)-ஐ பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு அளிப்பதில் தமிழ் ஸ்டூடியோ பெருமை கொள்கிறது.

விருது வழங்கும் விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும். மலையாள சினிமாவின் முன்னோடி இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தமிழ் ஸ்டுடியோவின் விருதை வழங்கி சிறப்பிக்கிறார்.

Series Navigationபீட்டில்ஸ் இசைக் கீதங்கள் இந்தியா என் இல்லம் -1தொடுவானம் 180. இருமணம் கலந்தால் திருமணம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *