வட்டி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 13 in the series 15 ஆகஸ்ட் 2021

 

வேல்விழி மோகன்

                           மரகதம் ஒரு சாப்பாட்டு பையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.. அவளுக்கு.. அவள் அம்மாவுக்கு. அந்த தடியனுக்கு.. தடியன் என்றுதான் மகனிடமும் மகளிடமும் பேசுவாள்.. அது தெரிந்து அதற்கு ஒரு நாள் வாங்கியிருக்கிறாள்.. இரண்டு நாளைக்கு முன்னாடி காரிமங்கலம் தாண்டி பைபாஸில் ஒரு திருப்பத்தில் மல்லாக்க விழுந்து மூச்சு பேச்சில்லாமல் இருந்தவனின் மொபைலை எடுத்து யாருக்கோ கேட்டு யாரோ இவளுக்கு போன் செய்து..

      “உயிரோடதான் இருக்கானா..?” என்றபோது பேசின குரல் சந்தேகமாக..”யாரு பேசறது..?” என்றது..

      “அந்தாளோட பொண்டாட்டி..” என்றபோது தயக்கமாக விழயத்தை சொல்லி “முதுகல அடிபட்டிருக்குது.. வாயில ரத்தம் வருது.. சந்தேகம்தான்..” என முடித்தபோது அந்த சந்தோழம் ஒரு இரவுக்குதான் நீடித்தது..

அவள் அம்மா முன்னாடியே போய்..”உயிருக்கு ஒன்னுமில்ல.. பத்தரமா இருக்கான்..” என்றபோது பெரிய ஏமாற்றமாக இருந்தது.. போக இருந்தவள் வீட்டோடு இருந்துவிட்டாள்.. புளி மண்டிக்கு போகத்தான் நினைத்தாள்.. ஒரு நாள் கூலி போயிவிடும்.. ஆனால் விசாரிப்பார்கள்., “புருசன் ஆஸ்பிட்டல்ல இருக்கும்போது இவ இங்கேயா..?” என்று பேசுவார்கள்.. பேச்சுக்கு குறை இல்லை.. ஊர் வம்பு என்றால் பெரிய பட்டாளமே இருக்கிறது.. “என் வாழ்க்கைய நான்தான் வாழனும்.. எனக்குதான் தெரியும் என்ன நடக்குதுன்னு.. “ என்று கோபித்துக்கொள்வாள்.. அக்கம் பக்கத்தில் அவளை பத்தி தெரியும்.. “நான் அடி வாங்கும்போது வேடிக்க பாக்கறவங்கதானே நீங்க..?” என்பாள்..

அவளுக்கு இந்த உலகத்தின் மீது மரியாதை இல்லை.. அவளுடைய கவனம் மகன்.. மகள் மீது மட்டும்தான்.. கூலி வேலை.. வளர்ப்பு.. போதுமென்று ஒரு வட்டம் போட்டுக்கொண்டாள்.. மற்றபடி அவள் வீட்டுக்காரனுக்கு அவள் ஒரு இயந்திரம்.. அதாவது அவன் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான் என்பது மாதிரி..

இன்றைக்குதான் கிளம்புகிறாள்.. பர்ஸை நோண்டியபோது இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களும்.. நான்கு இருபது ரூபாய் நோட்டுக்களும் தெரிந்தது.. புளி மண்டியில் வேலை செய்த கூலிக்கு இன்னும் இரண்டு நாள் கழித்துதான் பணம் கிடைக்கும். பெரிய மகனை சாப்பிடவைத்து சின்னவளை “அண்ணன் கூட சண்டையெல்லாம் போடக்கூடாது..” என்று சொல்லி அவளுக்கு கொஞ்சம்  அலங்காரம் செய்துவிட்டு சாப்பாட்டு பையோடு கிளம்பும்போது மகள்..”நானும் வரட்டுமாம்மா..?” என்றாள்..

      “எதுக்கு..? அந்தாளை பாக்கவா..?”

      “இல்லம்மா.. உன் துணைக்கு..”

      அவளுக்கு முத்தமிட்டு..”வேணாம்.. பத்தரமா இருங்க..” என்று கிளம்பும்போது பெரிய பையன் “அவருக்கிட்ட எதுவும் பேசிக்காதம்மா..” என்றான்..

      “அங்க என்னா கூத்து நடக்குதுன்னு உங்க பாட்டி போன் பண்ணி சொன்னாங்க.. அவ கூடவே இருக்காளாம்.. எனக்கு போறதுக்கு புடிக்கல.. செத்து தொலைஞ்சிருந்தா தல முழுகியிருக்கலாம்.. எல்லாம் எனக்கு சோதனையாவே இருக்குது.. நான் புளி மண்டிக்கு போயிட்டு போறேன்.. போய் வர்றதுக்கு முப்பது கிலோமீட்டர் ஆகும்.. பணம் இல்லை.. கூலி கொஞ்சம் வரணும்.. ரண்டு நாளு வேல போச்சு..சனிக்கிழமதான் தருவாங்க.. இன்னும் ரண்டு நாள் இருக்குது.. அந்த மண்டிக்காரம்மா லப..லபன்னு கத்தும்.. அவ பையன்கிட்ட சொல்லி கேட்டுப்பாக்கறேன்.. இல்லன்னா வட்டிக்குதான் அங்கேயே வாங்கிட்டு போகனும்..”

      மகள் மறுபடியும் கேட்டாள்..”நானும் வரட்டுமாம்மா.?. உனக்கு துணைக்கு..”

                              0000

      புளி மண்டியில் எழெட்டு பெண்கள் பொட்டு உரித்துக்கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து இவளை பார்த்தார்கள்.. தென்ன ஓலை பந்தலுக்கு கீழே மண் தரையில் எங்கு பார்த்தாலும் புளிக்கொட்டைகள்.. ஒரு பக்கம் நாரும் பொட்டுகளும் ஒன்று சேர்ந்து குவியலாக இருந்தது.. பெண்களில் வயசானவர்கள்.. இளசுகள்.. சிறுசுகள் என்று வயசு வித்தியாசமில்லாமல் இருந்தார்கள்.. நிமிர்ந்து சிரித்துவிட்டு கீழே குனிந்து வேலையை பார்த்தார்கள்.. ஒரு ஓரமாக அந்த சாய்வு நாற்காலியில் அந்த தாட்டியான வயதான பெண் அமர்ந்திருந்தாள்.. இவளை பார்த்து..”இன்னிக்கு வேலைக்கா.. ரண்டு மணி நேரம் போயிடுச்சே..?”

      “புளிக்குதானே கணக்கு..? எப்ப வந்தா என்ன.. நான் அதுக்கு வரலை.. பணம் கொஞ்சம் வேணும்..”

      “எப்படியிருக்கான் உன் வீட்டுக்காரன்..?”

      “போனாதான் தெரியும்..”

      “நேத்து போனது..?”

      “அம்மா இருக்காங்க.. எதுவும் சொல்லலை அவங்க.. இன்னிக்கு போனாதான் தெரியும்..”

      “மொத்ததுல பொழைச்சுக்கிட்டான்னு சொல்லு..”

      “அது கூட போனாதான் தெரியும்..” என்றவளை ஒரு புன்சிரிப்புடன் பார்த்துவிட்டு..”உன்னைய தெரியாதா மரகதம்.. ரண்டு புள்ளைய வச்சுக்கிட்டு நீ பட்ற பாடு.. உன் வீட்டுக்காரன பத்தி பேசறதுக்கு என்னா இருக்குது.. ப்ச..” என்று உதட்டை சுழித்தவள்.. “இப்ப பணம் இல்லையே..”

      “ஒரு ஐநூறு கொடுங்க.. எங்கம்மா வேற இருக்குது..”

      “ஐநூறா..?”

      “கூலி ரண்டு நாளைக்கு முன்னூறு ஆச்சா.. இன்னும் ரண்டு நாளைக்குது கழிச்சுக்கோங்க..”

      “அதான் இல்லேன்னு சொன்னேனே..” அந்தம்மாள் இன்னும் நன்றாக சாய்ந்துக்கொண்டு சிரித்தாள்.. அவள் அப்படித்தான்.. வட்டிக்கும் பிழைப்பு ஓடுகிறது.. சும்மா வார்த்தைக்கு அவளிடம் அர்த்தம் கிடையாது.. நூறு ரூபாய் என்றாலும் ஐந்து வட்டிக்கு கணக்கு போடுவாள்.. ரொம்ப அவசரம் என்றால் பத்து வட்டிக்கு.. அவளுடைய சிரிப்பை கேட்டுகொண்டே உள்ளிருந்து கத்தினான் அவளுடைய இரண்டாவது மகன்.. அவன்தான் மண்டிக்கு அடுத்த பொறுப்பு..

      “ஏம்மா இப்படி பண்ணறே.. அந்தம்மாக்கிட்டேயும் சிரிப்பு காட்டிக்கிட்டு.. கேட்டத கொடுத்தனுப்பு..”

      “நீ சும்மாருடா.. பணம் கொட்டுதா..?”

      “அவங்க நம்ம மண்டிலதானே வேல செய்யறாங்க.. கம்முனு கெட..” வெளியே வந்தவன் பட்டென்னு இரண்டு ஐநூறை எடுத்து நீட்டினான்.. “நீங்க போங்க.. கூலில கழிச்சுக்கலாம்..”

      அந்தம்மாள் எழ முடியாமல் பருத்த முகத்தை கஷ்டப்பட்டு திருப்பி..”எவ்வளவுடா கொடுத்த..?”

      “ஐநூறு..” இவளிடம் திரும்பி..” நீ போம்மா..”

      “நீ உருப்படமாட்டடா..” என்றாள் அந்த மண்டியம்மா..

                        0000

      மரகதம் பேருந்து நிலையத்தில் “எந்த பஸ் போகும் ஆஸ்பிட்டலுக்கு ?”

      அவன் “20ஏ” என்றான்.. ஒரு பக்கம் நுங்கு வைத்து “இருபது.. அம்பது..” என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்..

      “தரையில் எச்சில் துப்பாதீர்..” வாசகம் எங்கும்.. பிளாஸ்டிக் கவர்கள்..  தின்று தீர்த்த மக்காச்சோளங்கள்.. குறுக்கே ஓடும் ஒரு குட்டி நாய்.. புட்டுக்கடைகள்.. வெளியே தொங்கிய பத்திரிகைகள்.. டீக்கடைகள்..

      “வாம்மா.. லெமன் டீ.. இஞ்சி டீ.. புட்டு பத்து ரூபாதான்..”

      போண்டா சாப்பிடும் சிறுமி.. சன்னலோரத்தில் கேட்கும் வியாபாரிகள்.. “சோளம் பத்து… சோளம் பத்து.. “

      அத்தைய கூட்டிக்கிட்டு வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.. “வர்றேன் நானும்..”னுதான் சொன்னாங்க..  இங்கிருந்து முப்பது கிலோமீட்டர் வரும்.. “வேணாம் அத்தை.. நான் பாத்துக்கறே..”ன்னு சொல்லிட்டா… அவளுக்கு அம்மா துனண போதும்.. அம்மாவுக்கு தைரியம் அதிகம்.. ரண்டு பசங்க. இவ ஒரே பொண்ணு.. கல்யாணத்துக்கு அப்புறமும் ஒரு பாட்டியா கம்பீரமா இந்த அறுபத்தியாறு வயசுலேயும் உழைச்சுட்டே இருக்காங்க.. மூணு பேருக்கும் சேந்து ஏழு பொண்ணுங்க.. நாலு பசங்க.. இவளுக்கு ஒரு பொண்ணு.. ஒரு பையன்.. வீட்டுக்காரன் அடிபட்டு ஆஸ்பிட்டல்ல இருக்கான்னு தெரிஞ்சப்போ பசங்க அம்மா முகத்தையே பாத்தாங்க..

      “அம்மா.. அப்பாவுக்கு ஏதாவது ஆயிடுமா..?”

      “ஆனா பாத்துக்கலாம்..”னு சொன்னா..

                        0000

      அந்த மருத்துவமனை நெருக்கடியான ரோடில் பெரிய இடத்துடன் நான்கைந்து கட்டிடங்களுடன் இருந்தது.. வெளியே ஆட்டோக்கள்.. 108 வண்டிகள்.. உணவு விடுதிகள்.. ஒரு ஆள் “கபசுரம் குடிங்க.. கொரானா வராது..” என்று கொடுத்தக்கொண்டிருந்தான்..      இவள் மௌனமாக கேட்டுக்குள் நுழைந்து மருந்து வாசனைகளை கடந்து அந்த கட்டிடத்தின் உள்ளே போனாள்.. இரண்டு பக்கமும் வரிசையாக சேர்கள்.. ஒரு சிலர் உட்கார்ந்தபடி.. படுத்தபடி.. சுவரில் ஒரு காலண்டரில் இவளை பார்க்கும் வெண்புறா.. முதல் மாடிக்கு ஏறியபோது இறங்கிப்போன இரண்டு நர்சுகள்.. டெட்டால் வாசனை.. திறந்திருந்த சன்னல் வழியே வெளியே தெரிந்த நகரத்தின் மாடிக்கூரைகள்..  ஒரு குழந்தையை தவழவிட்டு வேடிக்கை பார்க்கும் அம்மா.. எதையோ பேசியபடி தரையை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு வயதான ஜோடி.. அவசரமாக ஒரு அறையிலிருந்து வெளியே போகும் மூத்திர பாத்தரம்.. கரகரப்பான குரல்கள்.. குழந்தையை தூக்கி பிடித்தபடி வெளியே காக்காவை காட்டும் பெரியவர்.. அவள் அறை வந்தது.. அது பெரிய அறை.. வரிசையாக படுக்கைகள்.. பச்சை விரிப்புகள்.. மின்விசிறிகளின் சத்தம்.. கட்டிலுக்கு கீழே துணிகள்.. பைகள்.. வாழையிலை இட்லி பார்சல்.. அரைத் தூக்கத்தில் ஒரு சிலர்.. ஏழாவதாக இடதுபுறம் இருந்த கட்டிலின் மீது அவள் உட்கார்ந்திருந்தாள் முதுகை காட்டியபடி..  பெரிய கொண்டை.. முதுகில் ரவிக்கையில் ஓட்டை போட்ட ரிப்பன் வைத்து..

      அவன் கண்களை மூடி கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான்.. முதுகை சுற்றி பெரிய கட்டு.. இடுப்பில் தளர்வுடன் லுங்கி..வலதுகால் வெளியே தெரிந்து முழங்காலுக்கு கீழேயும் ஒரு கட்டு.. இடது கண்ணுக்கு மேலே பஞ்சு வைத்து ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரி.. தலைமாட்டில் பழங்கள்.. கட்டி வைத்திருந்த சாப்பாட்டு பார்சல்.. சற்று தள்ளியிருந்த ஒரு பையன் சன்னல்களை எண்ணிக்கொண்டிருந்தான்..

      “மூணு.. நாலு..”

      அம்மா இல்லை.. “உங்கம்மா இல்லை.. கீழே எங்கேயோ போனாங்க “ என்றான் கண்விழித்து அவன்.. உட்கார்ந்திருந்த கொண்டை திரும்பாமல் அவனிடம்..”தோசைய சாப்பிடுங்க.. ஆறிடு…ம்..” னு இழுத்தாள்..

      பையன் இப்போது ஒரு சன்னலின் கம்பிகளை எண்ண ஆரம்பித்தான்.. “ஒன்னு.. மூணு..”

      “அத மாமியாருக்கு கொடுத்துல்லாம்.. இதா சாப்பாடு வந்திருச்சி.. இட்லிதானே..?”

      அவள் கட்டிலை தாண்டி பத்தாவது கட்டிலுக்கு அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் அருகே உட்கார்ந்தாள்.. அவரு உற்றுப்பார்த்து..”சாப்பிடும்மா.. சாப்பிடு.. தண்ணி இருக்கா..?”

      “குடுக்கறேன்பா..”

      “அந்த லுங்கிதான் உங்க பெட்டா..?”

      “ஆமா..”

      “என்னாச்சு..?”

      “ஆக்ஸிடென்ட்.. முதுகுல அடி.. ரண்டு நாளு ஆகுது.. “

      “ஒரு அம்மா இருந்ததே..”

      “அது எங்கம்மா.. “ பையிலிருந்து இரண்டு பாத்திரங்களையும் இரண்டு தட்டுகளையும் எடுத்தாள்.. ஒன்று தோசை.. தொட்டுக்க புதினா சட்னி.. இன்னொன்னு சேமியா.. அம்மாவுக்கு புடிக்கும்..

      பெரியவர் “தண்ணிம்மா..” என்றார் மறுபடியும்.. அவள் பாட்டிலை எடுத்துக்கொடுத்தாள்.. தட்டில் தோசையை வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.. பெரியவர் “அவரு சாப்பிட்டாராம்மா..?”

      “தெரியலைங்க.. உங்களுக்கு தோச தரட்டா.. அதிகமாவே இருக்குது..”

      “இல்ல.. வேணாம்.. ரண்டு இட்லி சாப்பிட்டேன்.. போதும்.. இது எம் பொண்ணும்மா..” கட்டிலில் படுத்திருந்த பெண் இவளையே பார்த்தாள்.. இவள் பார்த்தபோது லேசாக சிரித்தாள்..

      “பேதியாயிருச்சு ரொம்ப.. நேத்து சாயந்திரம்தான் வந்தோம்.. இப்ப பரவாயில்ல.. நாலு குளுக்கோசு போட்டுட்டாங்க.. இந்த கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்ல பரவாயில்ல..”

      “நீ இங்க வந்துட்டா எனக்கு எப்படி தெரியும்..” அம்மா அருகில் வந்து உட்கார்ந்தாள்.. “கீழ மாத்தர கொடுக்கற எடத்தல போயி உக்காந்துட்டேன்.. யாருக்கு என்ன பதிலு சொல்லறது..? அடுத்தவங்க வார்த்தைல விழ வேண்டியிருக்குது.. சேமியாவா..?” எடுத்து போட்டுகொண்டு “புதினா சட்னியா..?” எடுத்து வைத்துக்கொண்டு கிசுகிசுப்பாக..”அவனும் சாப்புட ஆரம்பிச்சுட்டான்.. நம்மள மொறச்சு பாத்துக்கிட்டே..”

      பெரியவர் “அந்தம்மா யாரு..?”

      இவள் “அவள அந்தாளு வச்சிருக்கான்..” என்றாள்..

                        0000

      இவள் அம்மா நிமிர்ந்து கட்டிலில் படுத்திருந்த பெண்ணின் சிரிப்பை கவனித்தாள்.. பெரியவர் திரும்பிப் பார்த்து “என்னாங்க .. உட்டு வச்சிருக்கீங்க?”

      “வெளிய சொன்னாதானே தெரியும்..”

      “ஆமா..”

      “சொல்லலைன்னா..?”

      “அதெப்படீங்க.. நானா இருந்தா வெட்டி போட்டிருப்பேன்..”

      “யாற..?”

      “அந்த தேவடியாவ..”

      அவர் பெண்..”ஸ்ஸ்.. மெல்ல பேசுங்கப்பா.. “ என்றாள்.. ஆனால் அந்த சிரிப்பு புன்னகையாக மாறி இவளையே பார்த்தது.. இவள் பெரியவரை நிமிர்ந்து பார்த்து “நான் எதுவும் பேசப்படாது.. அதுக்கு நிறைய வாங்கியிருக்கேன் உடம்ப பூரா.. எங்கம்மா இருக்காங்க.. அவங்க முன்னாடி பேசக்கூடாது..”

      அவள் அம்மா..”எனக்கு ரொம்ப மரியாத பாரு..”

      “பசங்க இருக்காங்களா..?”

      “ரண்டு..”

      “எங்க ஊர்ல அப்படித்தான்னு….”ன்னு இழுத்து ஏதோ சொன்னாரு அவரு.. இவ கவனிக்கலை.. கைய கழுவினா.. அம்மாவுக்கு இன்னொரு சேமியாவ எடுத்து வச்சு சடினிய ஊத்தினா.. அவன் இவளையே பாக்கறது தெரிஞ்சது.. அம்மா.. “எனக்கும் தோசைய தரக்கூடாதா?” என்றாள்.. எழுந்து பாத்திரம்.. தட்டையெல்லாம் பையில் வைத்துக்கொண்டு கைய கழுவ வெளியில் போனாள்.. அந்த கட்டிலை கடக்கும்போது “ஏ..” என்றான் அவன்..

                                    0000

      அவள் தொடர்ந்து நடந்து கட்டில்களை கடந்து அந்த அறைக்கு வெளியே வந்து வலதுபுறம் பாத்ரூமுக்கு வெளியே இருந்த குழாயை திருகி கையை கழுவினாள்.. பின்னாடி யாரோ முந்தானையை இழுத்தார்கள்..

      திரும்பினாள்.. அந்த பையன்.. முகம் முழுக்க சிரிப்புடன்.. “ஆண்டி .. மாமா உங்கள கூப்பிட்டாரு.. “

      ஒன்பது அல்லது பத்து வயதிருக்கலாம்.. சிவந்த நிறம்.. நீளமான கை விரல்கள்.. சிவப்பு சட்டை.. சிவப்பு ஜீன்ஸ் பேண்ட்.. உதட்டில் எச்சிலுடன் கூடிய சிரிப்பு.. தலை முடிய அழுத்தி வாரியிருந்தான்..

      “உங்கப்பா என்ன பண்றாரு..?”

      “தெரியல” சிரித்தபடி..

      “உங்கப்பா பேரு என்ன..?”

      “தெரியாது..”

      “வீட்ல யாரு இருக்கறது..?”

      “நானு.. எங்கம்மா.. எங்கண்ணன்….”

      “உங்கப்பா..?”

      “தெரியல.. அது செத்துப்போச்சு..”

      “அந்த அங்கிள தெரியுமா..?”

      “ம்.. ம்.. வீட்டுக்கு வருவாரு.. பிஸ்கட்டு.. பழமெல்லாம் வாங்கி வருவாரு.. அண்ணக்கு புடிக்காது..”

      “எவ்வளவு நேரம் இருப்பாரு..?”

      “ம்.. அதுவா.. ரொம்ப நேரம்.. அம்மாவோட கடைக்கு போவாரு.. நானும் அண்ணனும் டிவி பாப்போம்.. அண்ணன் அப்பப்போ அழுவான்..  “

      “எதுக்கு,,.?”

      தெரியல..”

      “சரி போ..”

      “அங்கிளு கூப்புட்டாரு..”

      “வர்றேன் போ..”

      அவன் குதித்துக்கொண்டே ஓடினான்.. அந்த பிள்ளை நல்ல சூழ்நிலையில் வளரவேண்டுமே என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.. அம்மா கையை கழுவ வந்தாள்.. முகத்தில் கோபம் தெரிந்தது.. “என்னம்மா..? என்றாள்..

      “அந்த பையன பாத்தா பாவமா இருக்குது “

      “எனக்கும்தான்..”

      “புரியும்போது தாங்குவானா..? “

      “அழுவான்.. அப்பறம்..”

      “அப்பறம்..?”

      “தெரியல.. அந்த பையன் இன்னும் கொழந்தம்மா.. சிரிச்சுக்கிட்டே இருக்கான்.. இடுப்புல தூக்கி வச்சுக்கனும் போல இருந்தது.. “ உதடுகளை துடைத்துக் கொண்டாள்.. அம்மா கையை கழுவிய பிறகு கண்ணாடியை பார்த்தாள்.. நெற்றியில் சுருக்கம்.. கண்களில் அசதி தெரிந்தது.. சட்டென்று திரும்பிப் பார்த்து “நாம போயிடலாம்..”

      “ சரிதாம்மா..”

      பெரியவர் கையை கழுவ வந்தவர்.. “ என்னம்மா அப்படி பேசறாரு அவரு..”

      “என்னம்மா ஆச்சுது..?”

      அம்மா பெரியவரிடம்..”போங்க.. கைய கழுவுங்க.. உங்க பொண்ணுக்கு எத்தன பசங்க..?”

      “பேச்ச மாத்தாதம்மா.. என்ன ஆச்சு..?”

      “உங்கம்மா வர்றப்ப ஏய்..ன்னு கூப்புட்டு சிரிக்கறாரும்மா அந்தாளு..”

                              0000

      அவள் உள்ளே போனாள்.. அம்மா பின்னாடியே போய் அவள் கையை பற்றிக்கொண்டாள்.. “உள்ளாற வேணாம்.. சாப்பாட்டு பைய பெரியவர எடுத்து வரச்சொல்றேன்.. இரு..”

அந்த நர்ஸ் “என்ன இதெல்லாம்.. ?”

      “ஒண்ணுமில்ல.. “ கையை விட்டு..” வா போயிடலாம்..”

      “இங்க சத்தம் போடக்கூடதுன்னு சொன்னேனில்ல.. டாக்டரு வந்துக்கிட்டிருக்காரு.. அந்த முதுகுவலி பேஷண்டோட ஆளுங்களா நீங்க..?”

      இவள் “ஆமாங்க..”

      எட்டிப்பார்த்து..”அங்க இருக்கறது யாரு..?”

      அம்மா “அது பாக்கறதுக்கு வந்திருக்குது..”

      “அது தெரியுது.. யாருன்னு கேட்டேன்..?”

      பெரியவர்..”அது அந்தாளுக்கு தெரிஞ்சவங்கம்மா.. “

      நர்ஸ் இவள் அம்மாவிடம்..” நீங்கதானே இருந்தீங்க.. என்ன சொன்னேன்.. ஒருத்தருதானே இருக்கனும்.. இங்கேயே சாப்பிட்டு.. இங்கேயே கைய கழுவிட்டு.. சே.. சே.. அந்தப் பையன் யாரு.. எதுக்கு ஆளுங்களை எண்ணறான்?”

      அவன் “நாலு.. அஞ்சு..” என்று படுத்திருந்தவர்களை எண்ணிக்கொண்டிருந்தான்..

      பெரியவர் மறுபடியும்..”அந்தம்மா பையன்க..விளையாட்டுப் புள்ள..”

      அந்த கொண்டை திரும்பி பார்க்க நர்ஸ் முன்னேறி அருகிலிருந்த பேஷண்டின் ரிப்போர்ட் அட்டையை கையில் எடுத்துக்கொண்டு..”நீங்க சாப்பிட்டாச்சா..?”

      அந்த நோயாளி “இப்பதாங்க வந்துச்சு..இனிமேதான்” என்றான்.. நர்ஸ் சிரிப்புடன் இவளை திரும்பிப்பார்த்து..” நீங்கதானே அவரு பொண்டாட்டி..? இங்க எதுக்கு நின்னுக்கிட்டு..?.. டாக்டரு வருவாரு.. போயிட்டு அவங்களை அனுப்புங்க..” என்று சொன்னவள் அந்த பேஷண்டிடம் திரும்பி “வலி குறைஞ்சிருக்குதா.. இல்லையா.. ?” என ஆரம்பித்தாள்.. அவள் அவன் அருகில் நெருங்கினாள்.. கொண்டை தள்ளி நின்றது.. அவளிடமிருந்து செண்ட் வாசனை.. பையனை பார்த்து..”இங்க வாப்பா.. போலாமா வீட்டுக்கு..?”

      “சொல்றது புரியலையாம்மா..ஒரே சத்தமா இருக்கு..” என்றாள் நர்ஸ் அங்கிருந்து..

      பையன்  “பதினஞ்சு.. பதினாறு.. “நிறுத்திவிட்டு.. “போலாம்மா.. போம்போது ஐஸ்கிரீம் வாங்கிக்கொடு..”

      அவன் கொண்டையிடம்..”பத்திரமா போ.. ஆட்டோவுல போயிடு..”கொஞ்சம் சத்தமாக “காலைல வரும்போது மதியத்துக்கும் சேத்து சாப்பாடு கொண்டாந்துடு.. நைட்டுக்கு நான் பாத்துக்கறேன்.. கேண்டீன்ல இட்லி கெடைக்கும்.. அம்மா..” வலியால் நெளிந்தான்..முக்கியபடி வார்த்தைகள் வெளியே வந்தது.. “சாப்பாட்டுக்கு பஞ்சமா என்ன எனக்கு..? “அவள் நெருங்கியவுடன்..” ஏ..” என்று சிரித்தான்..

      அவள் தொண்டையை உறுமி கனைத்து “தூ…” என்று அவன் முகத்தில் துப்பினாள்..

                              0000

அவர்கள் வெளியே வந்த பிறகு அம்மா “நடக்கலாமே.?” என்றாள் மரகதத்திடம்.. அவள்  “இருபது நிமிஷம் ஆகும்.. பரவாயில்லையா.?”  என்று கேட்க அம்மா தலையாட்டி மெதுவாக “பயமா இருக்குது..” என்றாள்.. ஆட்டோ கேட்ட ஆட்களை தலையாட்டி மறுத்து தள்ளு வண்டி இட்லி கடைகளை தாண்டி நடந்தார்கள்.. “நீ செஞ்சது சரிதான்.. ஆனா..” என்று இழுத்தாள் அம்மா..

“இந்த ஆனா அப்படிங்கறே வேணாம்.. பொம்பளைங்கள இந்த வார்த்த மூலமாத்தான் கொக்கி போடறாங்க.. ஆனா நீதாம்மா அடங்கிப் போகனமுன்னு..”

“அவன் அப்படியே காலம் பூராவும் பெட்லேயே இருக்கனும்.. “ என்றாள் அம்மா. .இவள் சிரித்து..”ஏம்மா பயப்படறே..?”

“நான்தான் பாத்தேனே.. உன் உடம்பு பூரா ரத்த காயம்..  அதுதான் பயமா இருக்குது.. வீட்டுக்கு வந்தான்னா உதைப்பானே..”

      “அது விடும்மா..”புதினா சட்னி எப்படிம்மா இருந்தது.?” என்றாள்..

“அதை கேக்கவா வேணும்..”

“உம் பேத்தி சொன்னா.. வரும்போது.. ஆயாவுக்கு இன்னும் ரண்டு சேமியா எடுத்துட்டு போம்மான்னு.. “

“அவ கூட வர்றேன்னு சொல்லலையா…?”

“சொல்லமாட்டா..”

“ஏன்..?”

      “அவளோட அண்ணன் வேணாம்னு சொல்லிட்டான்.. ஏன்னு அவ கேக்கலை.. எப்பம்மா திரும்ப வருவீங்கன்னுதான் என்னைய கேட்டா.. “

      “அவ அப்படியே உன்னையாட்டம்..”

      “எம் பையன் கூடத்தான்..” அவள் பையில் திடீரென எதையோ தேடினாள்..”நினைச்சேன்..” என்றாள்..

      “என்ன..?”

      “தண்ணி பாட்டல மறந்துட்டேன்.. பெரியவருக்கிட்ட இருக்குது..”

      “போகுது.. வெயிலு என்ன இப்படி அடிக்குது.. கொஞ்சம் ஓரமா நிப்போமா..?”

      அவர்கள் ஒரு கடையின் அருகில் ஒதுங்கினார்கள்.. பக்கத்தில் பழக்கடை.. “இங்கு பிரஸ் ஜூஸ் கிடைக்கும்..” பார்த்து பிரஸ்..ஸூக்காக சிரித்தாள்.. அம்மா தலைக்கு மேலே பறந்த ஈயை முடுக்கினாள்.. சேலை தலைப்பால் மூக்கை மூடினாள்.. கீழே திறந்திருந்த சாக்கடையிலிருந்து ஒரு நாய் உடம்பை உதறிக்கொண்டு ஓடியது.. சாக்கடை தண்ணீரில் காகிதங்கள் மிதந்து சென்றது.. எதிர் கடையில் ஒரு பெரியவர் கையை நீட்டிக்கொண்டிருந்தார்.. கூலிங்கிளாஸ் அணிந்து ஒரு பதினேழு கடக்கும்போது அம்மா..”என்னா.. இந்த வயசிலேயே இப்புடி வளர்ச்சி இந்த பொண்ணுக்கு..” என்றாள்.. ஒரு பஸ் கடக்கும்போது விளம்பரத்தில் நேற்று முளைத்திருந்த நடிகையின் பின்பக்கத்தை காட்டினார்கள்.. மூன்று கடை தள்ளி யாறோ எச்சில் துப்பிக்கொண்டே இருந்தார்கள்.. நின்றிருந்த இடத்தில் அனல் அடித்து அம்மா “போலாமா.. நடக்கறதே பரவாயில்லை போல..” என்றவள்  “அந்த பையன்தான் பாவம்.. புரியும்போது என்ன பண்ணும்..?”

      “தெரியல.. அவனோட சேந்து இன்னொரு ஜீவன் இருக்குது அந்த வீட்ல.. அவனோட அண்ணன்..  அப்பப்போ அழுவானாம்..”

      “எதுக்கு..?”

      “தெரியலைன்னான்.. அவனுக்கு புரிய ஆரம்பிச்சிருக்கலாம்..”

      “அழுகதான் ஒரே வழியா..?”

      “இருக்கலாம்..”

      “வாழ்க்கை பூராவுமா..?”

      “இருக்கலாம்..

      “அவனும் பாவம். சே.. “

      “பெரியவரு ஒன்னு சொன்னாரு கவனிச்சியாம்மா..>“

      “என்ன..?”

      “பஞ்சாயத்து பண்ணிருங்கன்னு..”

      “அப்படின்னா..?”

      அவள் பையை கை மாற்றி முதுகில் பிரா நனைவதை உணர்ந்து சலித்துக்கொண்டே “டைவர்ஸ்..”  என்றாள்.

      அவள் அம்மா “மறுபடியும் ஒதுங்கலாமா.. ? வெயிலு தாங்கலை.. “

      அருகில் ஒரு தையல் கடை.. பக்கத்தில் மூடியிருந்த பாரத் எலக்ட்ரானிகஸ்..  இங்கு அனைத்து விதமான டிவிகளும்,, லேப்டாப்புகளும் பழுது பார்க்கப்படும்.. தொடர்புக்கு…

      “இன்னும் எவ்வளவு தூரம்மா..?” என்றாள் அம்மா..

      “நான்தான் சொன்னேனே.. டௌன் பஸ்ல போயிடலாமுன்னு.. நீ கேட்டியா..? நடக்கலாமுன்னு சொன்னே..”

      “நடந்தாதான் என்க்கு நல்லாயிருக்கும்..”

      “இப்போ..?”

      “நல்லாதான் இருக்கு.. “ அம்மா வியர்வையை துடைத்துகொண்டபோது  இவளுக்கு கஷ்டமாக இருந்தது.. அம்மா அவள் வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டரில் கிராமத்தில் இருக்கிறாள்.. தனியாக.. இரண்டு ஏக்கர் நிலம்.. இரண்டு மாடுகள் அடங்கிய வாழ்க்கை.. நிலம்னு கூட சொல்ல முடியாது.. அத இவளோட அண்ணனும் தம்பியும் கவனிச்சுக்கறாங்க..  மாடுங்கதான்.. “எனக்கு அதுங்க தாய்ங்க மாதிரி “ என்று அவ்வபொது சொல்லுவாங்க. வீட்டுக்கு வரமாட்டாங்க.. பசங்க வீட்டுக்கு கூட .. இவங்கதான் அவங்கள பாக்கறதுக்கு போகணும்.. பேரன்.. பேத்திங்களுக்கு உடம்பு சரியில்லன்னா போயி பாப்பாங்க.. மாட்டுப் பால் வருமானம்தான் அவங்களுக்கு.. அதைய சேத்து வச்சு பசங்களுக்கு கொடுக்கமாட்டாங்க.. இவளுக்குதான் கொடுப்பாங்க..

      “உனக்கு  செலவுக்கு வச்சுக்கும்மா..” என்பாள் இவள்..

      “இல்ல.. வேணாம்.. எனக்கு எதுக்கு..? உங்கண்ணன்கிட்ட மட்டும் சொல்லிடாத..”

      “ஏம்மா..?”

      “வேணாம்.. எதுக்கும் லாயக்கில்லாதவன்.. தங்கச்சி வாழ்க்க சரியில்ல.. ஏதாவது செஞ்சானா.. ?.. அவன் எதுவும் செய்யவேணாம்.. உன் வூட்டக்காரன அடக்கி வச்சானா..?.. அவன் அந்த கொண்டக்காரி கூட இருக்கறது நாலஞ்சு வருசமா தெரியும்.. ஏதோ சொன்னானாம்.. கேக்கலையாம்.. உட்டுட்டானாம்.. உங்கண்ணி இத கேட்டு சிரிச்சா.. “நிறுத்திவிட்டு “இவரே சரியில்ல.. இவர வச்சு பஞ்சாயத்தா..?ன்னு கேட்டுப்புட்டா.. “

      “அப்படி வேறயா..?”

      “ஒரு சில ஆம்பளைங்களுக்கு ஒரே மாதிரியான குணம்.. பொம்பளைங்க விழயத்துல.. ஒடம்பு வெறி..”

      “பாவம் அண்ணி..”

      “உன் வீட்டுக்காரன் வெளிப்படையா செய்யறான்.. இவன் மறைக்கறான்.. அவ்வளவுதான் விஷயம்.. உங்கண்ணிக்கு முன்ன மாதிரி முகம் இல்லை.. சப்புன்னு இருக்கா.. ஏதும் கேட்டா சொல்லமாட்டெங்கிறா.. ஆனா அவங்களுக்குள்ள முன்ன மாதிரி இல்ல.. அவ சிரிக்கும்போது பொய் தெரியுது.. உன் தம்பி என்னடான்னா அண்ணனுக்கான நெலத்த மட்டும் நல்லா பாத்துக்கற.. என் நெலத்துக்கு ஓர வஞ்சன பண்ணற..ன்னு சொல்லறான்.. நான் எதுக்குடா பாக்கனமுன்னு இப்ப நெலத்து பக்கமெல்லாம் போறதில்ல.. ஆளுக்கு ஒரு ஏக்கருன்னு பிரிச்சுக்கிட்டாங்க.. ஆண்டுக்கிட்டு போகட்டும்.. உன் தம்பி பொண்டாட்டி உன்னைய பத்தி பேசுனாவே கிண்டலா பேசறா.. அவள திட்டிப்போட்டேன்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறா நான் பாக்கும்போதெல்லாம்.. அவங்களுக்கு நீ அவலு.. ஏதாவது மெல்லனுமில்ல.. தங்கச்சிய அடிச்சு தொம்சம் பண்ணறான்னு தெரிஞ்சும் பஞ்சாயத்து.. பஞ்சாத்து.. ன்னு போனா போதுமா.. என்ன சொல்லறாங்க பஞ்சாயத்துல.. ஆம்பளைன்னா அப்படிதாம்மா.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா.. சமாளிச்சுக்கோம்மா.. பசங்க இருக்காங்கம்மா.. ன்னுதான் சொல்லறாங்க.. கொண்டக்காரிய வச்சிருக்கான்னு சொன்னா சத்தியம் அடிக்கறான் உன் வீட்டுக்காரன்.. அவள தங்கச்சி மாதிரியின்னுட்டான்.. எம் பொண்டாட்டி சந்தேகக்காரின்னுட்டான்..  வேணுமுன்னா தங்கச்சிய கூட்டிக்கிட்டு வர்றேன்னு கூட்டிட்டு வந்தானே.. அந்த படும்பாவி சொன்னாளே.. ஆமாங்க.. இவரு அண்ணன் மாதிரி.. எங்க வீட்டிக்காரோட நண்பரு.. அவருக்கு இன்னொரு குடும்பம் ஆகி வடக்கால செட்டில் ஆயிட்டாரு.. ரண்டு பசங்க இருக்காங்க..இவருதான் எங்கள பாத்துக்கறாருன்னு கண்ணீரு விட்டாளே.. பஞ்சாயத்து பண்ணானே அந்த முண்டாசு தல.. அந்தாளு சட்டுன்னு அந்த பொம்பள பக்கம்தானே பேசினான்.. ஆமாம்மா.. நீ சந்தெகப்படறேன்னு தோணுது.  தங்கச்சிய போயி யாறாவது…ன்னு நக்கலா உங்கிட்ட சொல்லி சிரிக்கல.. எனக்கு உங்கப்பா இல்லையேன்னு தோணுது.. உன் சித்தப்பனுக்கு கவலை மட்டும்தான்.. எங்கண்ணன் பொண்ணுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு கண்ல தண்ணிய காட்டறாரு.. ரண்டு ஆளுங்கள விட்டு இவன கவனிக்க தெரியாதா.. ? பஞ்சாயத்துக்கு வந்தா பேசறதலை.. கடைசில அவரும் ஏம்மா.. தங்கச்சி மாதிரியாமே அந்த பொம்பளன்னு கேட்டுட்டாரு..  திருந்துவான்னு நம்பிக்க போயிடுச்சு.. எனக்கு ஒரு சந்தேகம் மரகதம்..?”

      “என்னம்மா..?”

      “பஞ்சாயத்து பண்ணறவங்களுக்கும் சரி.. மத்தவங்களுக்கும் சரி.. உன் வீட்டுக்காரனுக்கு கொண்டக்காரியோட தகாத உறவு இருக்குதுன்னு உள்ளுக்குள்ள தெரியுது.. ஆனா ஏன் இப்படி..?”

      “ஏன்னா அவங்களும் ஆம்பளைங்கதானே.. ?”

      “அப்படீன்னா..?”

      “அதே பலவீனம் அவங்களுக்கும்.. “

      “இதுக்கு வழி?”

      “நீதான் சொல்லேம்மா..”

      “பசங்க இருக்காங்களே…?”

      “அதுக்காக..?”

      அம்மா ஏதும் சொல்லவில்லை.. இதுவரையிலும் ஏதும் சொன்னதில்லை.. அவங்களுக்கு விடை இல்லை.. ஆனா இப்ப கேட்டாங்க..

      “அவன் சரியாயிட்டு வீட்டுக்கு வந்தான்னா உன்னைய சும்மா விடமாட்டான் மரகதம்.. சாகடிச்சுடுவான்.. அதுக்கு நான் விடமாட்டேன்.. உங்கண்ணன.. தம்பிய.. சித்தப்பன.. இவங்கள நம்பி பிரயோசனம் இல்லை.. என்ன செய்யலாம்னு சொல்லு..”

      ஒரு பையன் வேகமாக பைக்கில் பறந்தான்.. கரும்பு லாரி ஒன்று போனது.. வேட்டிய தூக்கு புடிச்சிட்டு பேரப்பையனோட தாத்தா ஒருத்தரு ஏதோ பேசிட்டே போறாரு.. கொஞ்சம் தள்ளி ஒரு ஆடு ஒண்ணுக்கு போது..

      “ரண்டு ஏக்கர் நெலம்.. அண்ணன்.. தம்பின்னு ஆளுக்கு ஒரு பங்கு..எனக்கு எங்கம்மா..?”

      அம்மா சங்கடப்பட்டபடி “இருக்கற பிரச்சனைல இது வேறயா..? இத்தனை நாளா கேக்க தோனலையான்னு கேப்பாங்க..”

      “இப்ப கேக்க வேண்டிய சூழ்நிலை..பிரச்சனைய பத்திதாம்மா பேசுறேன்..”

      “பஞ்சாயத்து வைக்கலாமுன்னு சொல்லுவாங்க…”

      “எதுக்கும்மா.. முண்டாசு தலையன் ஆம்பளைங்களுக்குதான் சொத்துன்னுவான்.. பொண்ண பெத்து வச்சிருக்கறவனும் தலையாட்டுவான்.. “

      “நான் இன்னும் கையெழுத்து போடலையே.. சொத்து எம் பேர்லதானே இருக்குது..”

      “மூணா பிரிச்சிரும்மா.. ஏன்னா எம் பசங்களோட ஊருக்கு வந்துட்டா பொழைக்கனுமில்ல.. உன்னையும் பாக்கனுமில்ல.. வீட்ட இன்னிக்கே காலி பண்ணிடறேன்.. தெருவுல ஒரு வக்கீலம்மா இருக்குது.. இப்ப பாத்துடலாம். வீட்டையும் எம்பேர்ல எழுதி வச்சிரும்மா.. ஏன்னா பசங்களுக்கு பின்னாடி பாதுகாப்பு.. எல்லாத்துக்கும் சேத்திதான் வக்கீலு.. உங்கண்ணன் இருக்கான்.. தம்பி இருக்கான்னு சொன்னின்னா உன்னோட இஷ்டம்..”

      “சொல்லமாட்டேன்..”

      “ஏம்மா..?”

      “என்னைய அவன் ஏய்.. ன்னு சொன்னதுனாலதானே அவனைய துப்பினே.?.”

                              0000

      “அது கெடக்குதும்மா.. போலிஸ்ல ஒரு புகாரும் கொடுத்துடலாம்.. ஒடம்புல தடித்தடியா காயங்க இருக்குது.. அவன் என்கிட்டதான் வீராப்பு.. தகவல் போச்சுதுன்னா கொண்டக்காரி வீட்ல போயி படுத்துக்குவான்.. தொட நடுங்கி.. டைவர்சுன்னா ஓடி வருவான் கால புடிக்கறதுக்கு.. அங்கேயே இருந்து தொலையட்டும்.. தங்கச்சின்னே சொல்லிக்கட்டும்.. அந்த பசங்கதான் பாவம்.. இரும்மா போன் வருது..” எடுத்து காதில் வைத்து  “ஹலோ..”

      “நானு சந்தரன் பேசறேன்..”

      “எந்த சந்தரன்..?”

      “அதாங்க புளி மண்டி..”

      “ஓ.. சொல்லுங்க சார்..”

      “என்ன சாருன்னு.. கிண்டலா..?”

      “சே..சே…”

“எப்படியிருக்காரு உங்க வீட்டுக்காரு.?..”

“ரொம்ப நல்லாவே இருக்காரு.. அழுதுட்டே  இருந்தேன்.. சமாதானம் சொன்னாரு.. இப்ப கோவிலுக்கு போறேன்.. அவரு சீக்கரம் சரியாகனம்னு..அவரு இல்லன்னா என் வாழ்க்கை என்ன ஆகறது..?.. பசங்க வேற இருக்காங்க.. கணவனே கண்கண்ட தெய்வமுங்க..”

எதிர்முனையில் தயக்கம் ஏற்பட்டது.. இவள்..”ஹலோ..ஹலோ..” என்று சொல்லிவிட்டு சிரிப்புடன் பட்டனை அழுத்தினாள்..  இவள் அம்மா இவளை குறுகுறுப்புடன் பார்க்க..”அது வந்தும்மா.. அது அந்த புளி மண்டி ஜொல்லு..”

“கணவனே கண்கண்ட தெய்வமுன்னு..?”

“அந்தாளை திட்டுவேன்னு எதிர்பார்த்தது ஜொல்லு.. ஆறுதலா பேசற மாதிரி பேசி வார்த்தையால தடவலாமுன்னு.. அப்படி பேசினதும் கப்புன்னு ஆயிடுச்சு.. கூலியோட கொஞ்சம் சேத்தி பணம் கேட்டேன்.. இல்லைன்னு அந்தம்மா சொன்னது.. இந்தாளு எடுத்துட்டு போன்னு ஜம்பமா ரண்டு ஐநூற கொடுத்தான்..”

“ஓ..”

“எனக்கு தெரியாதா என்ன..?.. பணத்த கொடுத்துட்டு அதிகமா உரிமை எடுத்துக்குவாங்கன்னு..”

“அப்பறம்..?”

“வட்டிக்குதான் வாங்கிட்டு வந்தேன்..” என்றாள் மரகதம்..

                              0000

 

Series Navigationஊரடங்கு வறுமைஅருள்பாலிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *