வரலாற்றுப்பார்வையில் -பெரியகுளம்-இரண்டுமுறை தமிழக முதல்வரை தேர்ந்தெடுத்த தொகுதி

author
0 minutes, 8 seconds Read
This entry is part 21 of 23 in the series 14 டிசம்பர் 2014

வைகை அனிஷ்
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியகுளம். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியாகும். இவை தவிர கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, தோட்டக்கலைக்கல்லூரி, மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல், ஆண், பெண்மருதமரம் கொண்ட வராகநதி என இருந்தாலும் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி பெரியகுளம் தொகுதி. பெரியகுளம் நகராட்சி சேர்மனாக இருந்து தமிழகத்தின் முதல்வராக பதவியில் அமைத்த தொகுதி. இவை தவிர நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேத்தா, கவிஞர் மேத்தா, கவிஞர் வைரமுத்து(பூர்விகம் கரட்டுப்பட்டி தற்பொழுது வடுகபட்டி வைரமுத்து) என பல பாரம்பரியமிக்க ஊர். தற்பொழுது தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் பெரியகுளம் மீதான பார்வை நம்மை பார்க்கவைக்கிறது.
தேனி மாவட்டத்தின் பழமையான ஊர் ஆகும். பெரியகுளம் வராநதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வராநதியின் தெற்குப்பக்கம் அமைந்துள்ள ஊரை தென்கரை என்றும் வடக்குப்பக்கம் அமைந்த ஊர் வடகரை எனவும் அழைக்கப்படுகிறது. பழமையை நினைவு படுத்தும் கோட்டை மேடு, தண்டுப்பாளையம், ஆண் மற்றும் பெண் மருதமரங்கள், மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் என பலவரலாற்று சிறப்பு அம்சங்களைக்கொண்டது. 72 பாளையப்பட்டுக்களில் பெரியகுளமும் ஒன்று. பெரியகுளம,; ஆலங்குளம் , தேசி எறிவீர பட்டினம் என்றும், குளந்தை நகரம் எனவும் அழைக்கப்பட்டு தற்பொழுது பெரியகுளம் என அழைக்கப்படுகிறது. இதற்கு சான்றாக அருள்மிகு பாலசுப்பிரமணியன் என்ற பெரியகோயில் கல்வெட்டுக்கள் உள்ளது. ராசேந்திர சோழீச்சுரமுடைய நாயனார் திருக்கோயிலும், வடகரையில் அமைந்துள்ள கயிலாயநாதர் கரட்டில் உள்ள உய்யவந்த ஈச்சரமுடைய நாயனார் திருக்கோயிலும் மேலும் கூடுதல் வலுசேர்க்கிறது. இக்கோயில்களில் கல்வெட்டுக்களை பொறித்தவர்கள் முதலாம் மாறவர்மண் சுந்தரபாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியன், நடை கொடை ராயன், மறைபுக்கார் காவலன், இம்மடி வயிறு நாயக்கர் மன்னர்கள் ஆவர்.
ஆலங்குளம்
~~பூவும் நீரும் ஒரு மரப்பெயராகும்
ஆழ்கடல் விடமும் ஆலமாகும்~~ -பிடமங்கலம்
இவற்றில் ஆல் என்பது நீரை குறிக்கும் சொல்லாகிறது. அதே வேலையில் ஆல்-து என்ற அமைப்பினதாகிய ~~ஆறு~~ என்னும் சொல்லின் பொருண்மை அதன் பகுதியாகிய ~~ஆல்~ என்ற சொல்லின் பொருண்மையினின்றும் நெகிழ்ந்து நிற்கிறது. எனவே ஆல் என்ற சொல் நீரையும் குறிக்கிறது.
முருகன் கோயிலில் அமைந்துள்ள கல்வொட்டு ஒன்றில் ~~மாடக்குளக் கீழ் மதுரை~~ என்ற தொடர் காணப்படுகிறது. இதே கருத்தை சின்னமனூர் செப்பேடும், இராசசிங்கப் பெருங்குளக் கீழ்ச் ச+ழ நகரிருந்தருளி~ என்று பிறிதொரு ஊரோடு தொடர்பு படுத்திக்காட்டுகிறது. எனவே குளங்களின் அருகாமையில் ஊர் அமைந்ததால் அதுவே ஊர்ப்பெயராக அமைந்துள்ளது.
தேசி எறிவீர பட்டினம்
பிற்காலச் சோழர் வரலாற்றை பதிவு செய்த சதாசிவ பண்டாரத்தார் எறிவீரபட்டினம் பற்றி இவ்வாறு விளக்குகிறார். ஒரு வணிகர் குழு வணிகம் புரிந்து, வாழ்ந்து வந்த இடங்கள் காவலுக்குட்பட்டு வீரபட்டினம்-எறிவீர பட்டினம் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது.
இவ்வணிகப் பெருங்குழுவினர் அலைகடலுக்கு அப்பாலும், தங்கள் செல்வாக்கினைச் செலுத்தியிருந்தனர் என்பது சுமத்ரா தீவில் ~~லோபா-டோவா~~ என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.1088 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கல்வெட்டால் புலனாகிறது.(ம.இராசகேர தங்மணி-முதலாம் இராசேந்திர சோழன்-பக்கம் 379ஃ80.
பெயர் மாற்றத்தின்கான காரணம்
பதினொன்றாம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் இருந்து வணிகம் புரிந்த நானாதேசிகன், அய்யப்புழல் காட்டுர் என்ற ஊரை வாங்கி, வீரபட்டினமாகச் செய்து கொண்டனர் என்று ஒரு கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.
நானாதேசிகளும், நாட்டாரும், நகரத்தாரும் முதலாம் இராசாதிராசனின் ஆட்சிக்காலத்தில் சிராவள்ளி என்ற ஊரில் கூடி நானா தேசிய தசமடி எறிவீர பட்டினம் என்று அவ்வூரின் பெயரை மாற்றியமைத்ததுடன் அவ்வூர் மக்களுக்கு சில உரிமைகள் வழங்கியதாக அறிகிறோம். ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளி வட்டத்திலுள்ள ~~பசனிகொண்டா~~ ஊரிலுள்ள கல்வெட்டு இதனை உறுதிபடுத்துகிறது.
(ஆதாரம்:
1ம.இராசகேர தங்கமணி-முதலாம் இராசேந்திர சோழன்-பக்கம் 379ஃ80
2.புலவர் கா.கோவிந்தன்-தமிழர் வணிகம்-பக்கம் 82-86
ஆங்கிலக் கிழக்கிந்தியக் வணிகக் குழுவினரைப் போன்று கட்டுப்பாடுள்ள சமுதாய அமைப்பiயும் ஓரளவு படை வலிமையையும் பெற்ற நானா தேசியினர் பன்னிரெண்டாம் நூற்றாண்டளவில் ஆலங்குளத்திற்கு வருகை புரிந்தனர்;. தம் தொழிலைப் பெருக்கினர். ஊர்ப்பெயர் மாற்றத்திற்கு உடன் நின்றனர்
(ஆதாரம்:கே.கே.பிள்ளை-தென் இந்திய வரலாறு-பக்கம் 11)
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யும் பொழுது ஊரின் முன்பகுதியில் ஆன அல்லது அழகிய ஒன்ற ஒரு சொல்லை இடையில் கூறிப் புதுப்பெயரைப் பின்னர் கூறுவது மரபாக உள்ளது.
உதாரணமாக கீரனூர் ஆன கொழுமங்கொண்ட சோழநல்லூர் என்று அழைப்பது போல ஆலங்குளம் என்ற பழமையான ஊர்ப்பெயரை காலப்போக்கில் மாற்றம் செய்து ~~ஆலங்குளமான நானாதேசி எறிவீரபட்டினம்~~ என புதுப்பெயருடன் அழைக்கப்பட்டது. இதனை ஆவணமாக்க இராசேந்திர சோழீச்சுரர் திருக்கோயிலில் கல்வெட்டில் பதித்துள்ளனர்.
இவ்வாறு பெயர்மாற்றம் செய்த பின்னர் தங்கள் வணிகத்தையும், வளத்தையும் பெருக்கி இடம் பெயர்ந்தனர்.
குளந்தை மாநகர்
இங்குள்ள பெரிய கோயிலில் உள்ள செவ்வேளுக்குக் ~~குழந்தை வேலநாத சுவாமி~~ என்று பெயர் உண்டு. அவ்விறைவன் குழந்தை வடிவினன் ஆதலின் அப்பெயர் அழைக்கப்பட்டது.
இராசேந்திர சோழீச்சுரமுடைய நாயனார் திருக்கோயிலில் திருச்சுற்று மதில் வெளிப்பகுதியில்-கிழக்கு மூலையில் ஒரு கல்வெட்டு உள்ளது.
பிற்காலத்து இறையன்பரால் வெட்டுவிக்கப்பட்ட கல்வெட்டொன்றில் ~~குழந்தை~~ என்ற தொடர் குறிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நடைபயிலும் அச்சொல் இங்குள்ள முருகக் கடவுளுடன் இணைக்கப்பட்டுக் ~~குளந்தை வேலநாத சுவாமி~~ எனவும், முன் ஒட்டில் உள்ள ~~குளந்தை~~-ஊர்ப்பெயராகவும் நூல்வழியில் சிறப்பிக்கப்படுகின்றன..
கல்வெட்டு பார்வையில் பெரியகுளம்
1….கோமாறபன்ம..வனச்சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியற்கு யாண்டு ~கரு~-வது அருளியச் சொல்..ள நாடடு ~~ஆலங்குளமான~~தெசிய-முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்-முருகன் கோயில் கருவறை மேற்குச்சுவரில் அமைந்துள்ளது.
2.சுந்தரபாண்டியன் தேவற்கு யாண்டு பதின் ஏழாவதின் எ(தி) ராமாண்டின் எதிராமாண்டு மார்கழி மாதம் எறிபடைநல்லூர் நாயனார் கணக்க பண்டாரிகளொடும் ~~ஆலங்குளத்தில்~~ நாயனார் எழுந்தருளியிருந்து-முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்-கயிலாயநாதர் கரடு உய்யவந்த ஈச்சமுடைய நாயனார் திருக்கோயில் அடிச்சுற்று.
3.கோமாற பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியர்க்கு யாண்டு ~~உகா~ வது மேனெடுங்குளநாட்டு ஆலங்குளமான தேசிய வீரபட்டினத்து-குலசேர பாண்டியன்-இராசேந்திர சோழீச்சுரமுடைய நாயனார் திருக்கோயில் மேற்கு அடிச்சுற்று
4.விரோதிகிருது வருடம் தை ~க0~ ஆம் தேதி நெடுங்குள நாட்டுப் பெரியகுளத்து நாயனார்-இம்மடி வயிறு நாயக்கர்-கோயில் மேற்குச் சுவர்மேல் குமுதம் என பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம்.
தற்பொழுது பெரியகுளத்தின் மேற்கு பகுதியில் பெரியகுளம் ஒன்று உள்ளது. அந்த பெரியகுளம் தான் ஊர்ப்பெயராக அமைந்துள்ளது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
பெரியகுளம் தாலுகா
பெரியகுளம் தாலுகா பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்திலிருந்த தாலுக்காக்களிலேயே பெரிய தாலுகாவாகும். இதற்கு முன்பு தென்கரை தாலுகா என்று அழைக்கப்பட்டு வந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள மற்ற தாலுகாவைக்காட்டிலும் பெரியகுளம் தாலுகா தனது மொத்த பரப்பளவில் பாதிக்குமேல் மலைப்பகுதிகளையும் வனப்பகுதிகளையும் கொண்டிருந்தது.
பெரியகுளம் தாலூக மதுரை மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் கம்பம், வருஷநாடு பள்ளத்தாக்குகளை எல்லையாகக் கொண்டிருந்தது. பெரியகுளம் தாலூகவின் வடகிழக்கு, தென்மேற்கு திசைகளின் இடையிலுள்ள ஒரு நீண்ட நிலப்பகுதியானது வடக்கில் பழனி மலைத்தொடராலும், மேற்கில் திருவாங்கூர் மலைத்தொடராலும், கிழக்கில் வருஷநாடு, ஆண்டிபட்டி மலைத்தொடர்ச்சிகளாலும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியின் மையத்திலிருந்து சுருளி, வைகை, பெரியாறு போன்ற நதிகள் கிழக்கு நோக்கி ஒடுவனாகவும் பெரியாறு சுருளி ஆறுடன் சேர்ந்து பெரியகுளம் தாலுகாவின் தென்பகுதியை செழிக்கச் செய்கிறது. இதன் பயனாக மேலும் புதிய நன்செய் நிலங்கள் உண்டாகி விவசாயத்திற்கு வந்தன. மேலும் ஏற்கனவே ஒரு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலங்களாகும். ஐந்தில் இரண்டு பங்கு நிலப்பகுதி கரிசல் நிலமாகும்.
இவை இத்தாலுகாவின் மையப்பகுதியிலிருந்து ஆறுகளை விட்டு விலகி இந்த கரிசல் நிலம் திருமங்கலம் தாலூகாவைத்தவிர மற்ற எல்லாத் தாலுகாவை காட்டிலும் அதிகமான கரிசல் பகுதியைக் கொண்டதாகும். இவ்வாறு புன்செய் விவசாயத்திற்கு உட்பட்ட நிலப்பகுதி அதாவது ஆண்டிபட்டியைச் சுற்றி உள்ளது போல் உள்ள பகுதிகளில் கிரானைட் அடங்கிய பாறைக்குன்றுகளும் உள்ளன. இவை மைச+ர் பீடபூமியின் சாயலாக அமைந்துள்ளது. இந்த தாலுகாவில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம் இருப்பதால் மக்கள் தொகை மற்ற தாலுகாவைக்காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால் 1891 முதல் 1901 வரை உள்ள விகிதாச்சார மக்கள் நெருக்கமும், மதுரை மாவட்டத்திலுள்ள மற்ற தாலுகாக்களைக்காட்டிலும் அதிகம் தான். காரணம் திருவாங்கூர் மலைப்பிரதேசம் தேயிலை, காபி, ஏலம் போன்ற விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்டதாலும் மேற்படி உற்பத்திப் பொருள்கள் இந்த தாலூகவின் வழித்தடங்களை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யவும், பிற அத்தியாவசிய பொருள்கள், தோட்டத் தொழிலாளர்களும் இத்தாலுகா வழியாக பெற வேண்டியிருப்பதால் இங்கு மக்கள் தொகை அதிகரிக்க காரணமாகும்.
பெரியகுளத்தின் மக்கள் தொகை 17,960 கொண்டது. இப்புள்ளிவிபரம் 1906 ஆண்டு கணக்குப்படி எடுக்கப்பட்டது. இங்கு தாசில்தார், மாவட்ட முன்சீப்(நீதிபதி), உதவி மாஜிஸ்திரேட், சார்பதிவாளர் ஆகியோரின் அலுவலகங்கள் இங்கு உள்ளன. போடி நாயக்கனூர் ஜமீனுக்குச் சொந்தமான பங்களா ஒன்று இங்குள்ளது. அதில் அனுதியுடன் ஐரோப்பியர்கள் தங்கலாம். இதோடு ஒரு சத்திரமும் உண்டு. பனைமரங்கள் நிறைந்த வராகநதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் பழனிமலைத்தொடர் சுவர் போல் அமைந்துள்ளது. இம்மலை வாழ்மக்களின் வியாபார மையமாக இவ்வூர் விளங்குகிறது. இதன் வடக்கில் 5 மைல் தூரத்தில் கொடைக்கானல் செல்லும் குதிரைப்பாதை ஆரம்பமாகும். சுத்தமான குடிதண்ணீர் வசதி செய்ய பேரிஜம் புராஜக்ட் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
பெரியகுளம் தென்கரை, வடகரை, கைக்களாங்குளம் என்ற கிராமங்களை உள்ளடக்கியதாகும். இவ்வூர் குறுகிய தெருக்களை கொண்டிருந்ததால் காலரா நோய் பரவ காரணமாக அமைந்திருந்தது. 1882ல் நெருக்கமாக அமைந்த வீடுகள் உள்ள பகுதியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு சுமார் 300 வீடுகள் எரிந்து நாசமாகியது. அதன் பின்னர் நகரசபை சார்பில் நகருக்கு கிழக்கிலும், தெற்குப் பக்கமும் வாங்கி தேவைப்படுவோருக்கு விற்றுவந்தது.
அழகான இரண்டு சாலைகள் ஆற்றின் இரண்டு கரைகளின் மேற்காக மலையை நோக்கிச் செல்கிறது. வடகரையில் போகும் சாலை அழகிய தோப்புகள் வழியாக அலுவலகங்கள் இருக்கும் திறந்த வெளியைத்தாண்டி சிவன்கோவிலுக்குச் செல்கிறது.
இக்கோவிலில் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இங்கு ~பெரியகுளம்~ ஒன்று இருக்கிறது. இந்தக் குளத்தைக் குறிக்கும் பெரியகுளமே இவ்வூருக்கு பெயராக அமைந்தது. இதன் வடக்கு மூலையின் கரையில் மாவட்டத்திலேயே பெரிய புளியமரம் ஒன்று உள்ளது. இங்குள்ள சிதம்பர தீர்த்தம் என்ற தண்ணீர் தொட்டியிலிருந்து பசுவாய் போன்றமைந்த கல்முகப்பு வழியாக தண்ணீர் வரும்.
வடகரை
வராக நதியின் வடகரையில் அமைந்துள்ளது. இது பெரியகுளம் நகராட்சியின் ஒரு பகுதியாகும். இது பாளையத்தின் தலைமை கிராமம். இவ்வூர் பலிஜா இனத்தைச்சேர்ந்த ராமபத்திரநாயக்கரால் ஏற்பட்டுத்தப்பட்டதாக மெகன்சி எம்.எஸ்.எஸ்.மூலம் அறியப்படுகிறது. இவர் விஜயநகரத்திலிருந்த நாகம நாயக்கருடன் வந்தவர். இவர் நாகமநாயக்கரின் நம்பிக்கைக்கு உரியவர். நாகமநாயக்கர் பனாரசிக்கு யாத்திரை செல்லும்போது அவருடைய பொறுப்புகளை ராமபத்ர நாயக்கர் கவனித்து வருவார். நாகம நாயக்கருக்கும் அவருடைய மகனுக்கும் இடையயே உள்ள பிரச்சினைகளை சரிசெய்து ஒழுங்குபடுத்த உதவியாக இருந்தவர். கடைசியில் இவரை மதுரை மாவட்டத்தின் வருவாய்துறையில் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
பின்னாளில் இவர் தன்னுடைய தனிப்பட்ட வீரத்தால் கம்பம் கோட்டை தாக்கப்பட்டபோது, தன் முகத்தில் காயப்பட்ட போதிலும் சண்டையில் முன்னேறிச்சென்று முதல் ஆளாக கோட்டையில் கொடியை நாட்டினார். இந்த தீரச் செயலுக்காக இவருக்கு வடகரை ஜமீன் வழங்கப்பட்டது. இதன் பிறகு இவருடைய அடுத்த வாரிசுக்கு மதுரையில் 72 கோட்டைகளில் ஒரு கோட்டையின் பொறுப்பு வழங்கப்பட்டது. இவருக்குப் பின் நினைவில் நிற்கக்கூடிய பாளையக்காரர்களில் ஒருவர் மாச்சி நாயக்கர். இவர் திருமலை நாயக்கரின் மற்றும் அரசவையின் முன்னிலையில் மதுரை தெப்பக்குளத்தின் குறுக்கே அம்பைவிட்டு சாதனை செய்ததால் மேலும் கூடுதலாக சில பகுதிகளும் வழங்கப்பட்டது. இவருக்கு நிகராக வேறு எந்த பாளையக்காரரும் அவ்வாறு சாதனை புரியவில்லை. இந்த நிகழ்ச்சி இன்னும் வடகரையில் வருடந்தோறும் மாச்சிநாயக்கர் வேட்டை என்று விளையாடி கொண்டாடப்படுகிறது. அப்போது கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக மாச்சி நாயக்கரின் கைக்குளான்குளம் கல்லறைக்கும் சென்று வருவர். பின் வந்த மற்றொரு மாச்சிநாயக்கர் 1638ல் ராமநாதபுரம் சேதுபதிக்கும் திருமலை மன்னருக்கும் ஏற்பட்ட சண்டையில் திருமலை மன்னருக்கு உதவி செய்தார் என மெக்கன்சி எம்.எஸ். மூலம் அறியப்படுகிறது.
மைச+ரில் இருந்து திண்டுக்கல்லுக்கு அச்சுறுத்தல் வந்தபோது அப்போதிருந்த வடகரை பாளையக்காரர் படைத்தலைவர்கள் குழுவை கூட்டி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்தார். ஆனால் அது வெற்றிஅடையவில்லை.
கண்டமநாயக்கனூர் வடகரை அதிகப்படியாக தன்னை முன்னிலை படுத்திவருவதாகக்கூறி வடகரை மீது படையெடுத்து அந்த பாளையக்காரரை தலையை வெட்டிக் கொன்றனர். இதிலிருந்து இந்த இரண்டு குடும்பங்களும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதில்லை. மைச+ர் வடகரையின் செயலை மனதில் வைத்து திண்டுக்கல்லை கைப்பற்றியபோது வடகரை ஜமீனை பறித்துக்கொண்டது.
1759 இல் இதனுடைய உரிமையாளர் கலெக்டர் இப்பகுதி வழியாக படையுடன் வந்தபோது போடி நாயக்கனூருக்கு கலெக்டரை எதிர்க்க உதவி புரிந்தது. 1859ல் கப்பம் கட்டுவதில் பாக்கி வைத்திருந்ததால் இந்த பாளையத்தை கம்பெனியார் திரும்ப பெற்றுக் கொண்டனர். இந்த ஜமீன்தாருக்கு உபகாரச்சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இது மூத்த மகனுக்கு வந்து சேரும். அவர் பாளையத்தின் சொத்தில் பெரும்பகுதி இவருக்கு சொந்தமானதாகும். 1881 ல் அவருடைய மகனும் இறந்துவிட்டார். இவருடைய மகன் தற்பொழுது உரிமையாளர் வி.ராமபத்ர நாயுடு மைனராக இருந்ததால் காப்பாளர் குழு ஜமீன் நிர்வாகத்தைப் பார்த்துக்கொண்டனர். 1894ல் மேஜரான பின் கல்விபுரவலாராகவும், முன்னோர்கள் உண்டாக்கிய அழகிய தோப்புக்களை பாதுகாத்தார். பெரியகுளம் முனிசிப்பால் கவுன்சிலின் சேர்மனாக இருந்தார்.
ஆதார நூல்கள்
1.வேர்களைத்தேடி, அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி
2.மாலைமலர் நாளிதழ், திண்டுக்கல் பதிப்பு, திண்டுக்கல்
3.அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும், பாகம்-2, அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி
4.தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை-மதுரை மாவட்டம்-முனைவர் வர்க்கீஸ் ஜெயராஜ், பாவை பப்ளிகேசன்ஸ்,
சென்னை

கட்டுரையாளர்
வைகை அனிஷ்

Series Navigation(3)  –  யாமினி க்ருஷ்ணமூர்த்திமிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *