வாக்கிங்

This entry is part 18 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011



காசிம் ஹாஜியார் வேகுவேகென்று நடந்துகொண்டிருந்தார்.  இத்தனை காலங்களாகப் பாசமாக வளர்த்து வந்த தொந்தியைக் கரைத்தே ஆக வேண்டுமென்று இதய மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.  இல்லையென்றால் ஹார்ட் அட்டாக் வந்தேவிடுமென்று பயங்காட்டியதால், அவர் பேச்சைக் கேட்டே ஆகவேண்டியதாகிவிட்டது.  இல்லையென்றால், காசிம் ஹாஜியாராவது நடக்கிறதாவது?  பக்கத்து தெருவிலிருக்கும் அவருடைய ஜவுளிக் கடைக்கே காரில்தான் போவார்.

இப்பக் கூட டாக்டர் காண்பிச்ச அந்தப் படம் மனக்கண்ணில் வந்து நின்றது. அதாவது இரத்தக் குழாயில் கொழுப்பு அடைச்சா எப்படியிருக்கும், அது இதயத்தை எப்படி பாதிக்கும் எல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குப் பூச்சாண்டியைக் காட்டிக் கதை சொன்ன மாதிரி விலாவாரியா படங்காட்டி கதைசொன்னார் டாக்டர். ஹாஜியாருக்கு, அது பயமாத்தான் இருந்துது. ஆனா, அதைவிட அவர் தோஸ்து ‘காயலான்கடை’ மஸ்தான் சொன்ன பிராக்டிகல் பூச்சாண்டி கதைதான் இன்னும் பயங்கரமா இருந்துது. மஸ்தானுக்கு சமீபத்திலதான் அட்டாக் வந்து ஆஞ்சியோ பண்ணாங்க. “காசிமு, மத்த வலியெல்லாம் தாங்கிகிடலாம்ல. ஆனா, அந்த எழவு ஆஞ்சியப் பண்ணும்போது ரெண்டு கையையும், காலையும் அசைக்காம ஆடாம இருக்கணுன்னு மணிக்கணக்குல கட்டிபோட்டுறாங்கலே, அதாம்லே பயங்கர வலி” என்று கண்கள் விரிய பீதியோடு சொன்னதுதான் பேதியாகிவிட்டது!! அதனால் யோசித்து யோசித்து நடந்தேவிடலாம் என்று முடிவு பண்ணிவிட்டார்.

இருந்தாலும், நடப்பது சிரமம் என்பதோடு, போரடிக்கும் விஷயமாச்சே. கூட துணைக்கு யாராவது வந்தால், பேச்சுத்துணைக்கும் ஆச்சு; நடப்பதும் நடக்கும். யாரை அழைக்கலாம் என்று பார்த்தார் காசிம் ஹாஜியார். ஹாஜியாருக்கு ஊரெல்லாம் நண்பர்கள் என்பது மட்டுமல்ல, எந்த இரண்டு நண்பர்கள் சேர்ந்தாலும் உடனே மாலிக் டீக்கடைக்குப் போய் ஜமா வைத்து, டீ, வடை என்று தொடங்கி, புரோட்டா, ஆம்லெட், சிக்கன்65 என்று அளவு தெரியாமல் தொடருமளவு பேசிக்கொண்டிருப்பார்கள். தொந்தி வளர்ந்ததுக்குப் பாதிக்காரணம் அதுதானே? ஆக, நண்பர்களைக் கூட்டுச் சேர்த்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று புரிந்துகொண்டு, அந்த நினைப்பைக் கைகழுவினார்.

“இந்தாங்கோ சாயா” என்று காரச்சேவுடன் பாசமாகச் சாயா கொண்டு தந்த மனைவி தவுலத்தைப் பார்த்ததும் ஒரு ஃப்ளாஷ்!! ஏன், இவளையே கூட்டிப் போனால் என்ன நடக்க? இவளும் கிட்டத்தட்ட தன்னைப் போல பருமனாகத்தான் இருக்கீறாள். என்ன ஒரு வித்தியாசம், தனக்கு தொந்தி தனியே தெரியுமளவு உடல்வாகு. தவுலத்தோ, மேலிருந்து கீழ் வரை ஒரே சமச்சீராகப் பருமன். தன்னைவிட அதிக எடை இருப்பாளோ என்றுவேறு டவுட்டாக இருந்தது. பேச்சில்தான் மிஞ்ச முடியவில்லை; இதிலாவது தான் அவளை மிஞ்ச வேண்டும் என்று தோன்றியது. மேலும், இப்படியே விட்டால், இவளுக்கு ஏற்கனவே இருக்கும் சுகர், பிரஸர் எல்லாம் சேந்து தன்னைப் போல வேறு பிரச்னைகளைக் கூட்டி வரலாம். அத்தோடு தன் ‘தொந்தி’ வளர,  லுஹர் தொழ வந்த உச்சிவெயில் நேரத்திலும் சாயாவும், காரச்சேவும் தருமளவுள்ள இவளது பதிபக்தியும் ஒரு காரணம்தானே? !! அதற்குப் பழி வாங்கியது போலுமாச்சு. ஒரே கவளத்தில் ரெண்டு துண்டு மண்ணீரல்!! (எவ்வளவு காலந்தான் கல்-மாங்காய் உதாரணம் சொல்வது?)

மனைவியிடம் சொன்னபோது, ‘என்னது, நடப்பதா, அதுவும் நானா?’ என்று தவுலத் பீவி அதிர்ந்தார்.  டாக்டரின் எச்சரிக்கைகளைக் கணவர் சொல்லக் கேட்டு, தான் உடன்செல்லாவிட்டால் அவர் நடக்கமாட்டார் என்பதையும் உணர்ந்தார். அங்ஙனம் செல்லாவிட்டால், அசம்பாவிதமாக ஏதும் நடந்துவிடுமோ என்று நினைப்பு தோன்றியதில் பதறி, “ரப்பே!! காப்பாத்துப்பா” என்று மனதில் சொன்னவள், “நா வாறேன், நா வாறேன்” என்று அவசரமாக ’நடை’ஒப்பந்தம் போட்டார். அன்று தொடங்கியது, இவர்கள் ‘நடைப்பயணம்’. என்னது, ஊர்விட்டு ஊர் செல்வதுதான் நடைப் பயணமா? எனில், இவர்கள் ஊர்ப்பள்ளிக்கூட மைதானத்தை ஒருமுறை சுற்றி வருவதற்குள் நீங்கள் ஒரு நடைப்பயணமே போய் வந்து விடலாம்.

எப்படியோ, நடக்க ஆரம்பித்து, பல தடங்கல்கள் வந்தபோதும் – வெற்றிகரமாக ஒரு மாதம் கடந்துவிட்டது. . தனியாக நடந்தாலே வரும்- இதிலே கணவன், மனைவி சேர்ந்து நடந்தால் கேட்கணுமா? எப்படியோ, எதுவோ – உயிர்ப்பயமோ என்னவோ, நடப்பது தொடர்ந்தது.

அன்றும் நடந்துகொண்டிருந்தார்கள். காலை சுபுஹு தொழுதுவிட்டு, இளங்குளிரில் நடப்பதும் ஒரு சுகம்தான். உலக நடைமுறை வழக்கப்படி, காசிம் ஹாஜியார் முன்னே செல்ல, தவுலத் பீவி பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். கணவன் -மனைவி இருவரும் ஒன்றாக நடந்துசெல்கிறார்கள் என்றால், ஒன்று, புதுசாக் கல்யாணமான கணவன், மனைவி கைப்பிடித்துச் செல்வதாக இருக்கவேண்டும். அல்லது வயோதிகத்தில் நடக்க முடியாத கணவனை, கைப்பிடித்து மனைவி அழைத்துச் செல்வதாய் இருக்க வேண்டும். இது இரண்டும் அல்லாது, லோகத்தில் கணவன் -மனைவி ஒருசேர நடந்துப் பார்த்ததுண்டோ நீங்கள்? எப்பவும் கணவன் முன்னே, மனைவி பின்னேதான். அதுவும் கணவர்மார்கள் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடப்பார்கள். தொலைந்து போய்விட்டாளா அல்லது இன்னும் வந்துத்தொலைகிறாளா என்று பார்ப்பார்கள்போல!!

அதுவும், இந்த ட்ராஃபிக் நிறைந்த சாலையைக் கடக்கும் சமயத்தில் கணவன், மனைவியை விட்டு, தனியே முன்னே பாய்ந்தோடுவதைப் பார்க்க வேண்டுமே! எதிர்ப்பக்கம் போய்நின்று, மனைவி தட்டுமுட்டி சாலையைக் கடந்து வெற்றிகரமாய் மறுபக்கம் வந்துசேர்வதை ஒருவித  ஏமாற்றத்தோடு பார்ப்பார்கள்.

அதேபோல இங்கும் முன்னே சென்றுகொண்டிருந்த காசிம் ஹாஜியார்,  “கடகடன்னு நடயேன்” என்றும் அதட்டிக் கொண்டே அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டுவந்தார். அப்போது எதிரில் சைக்கிளில்  ஜமீல் வருவதைப் பார்த்தவர், அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு பார்க்காதவரைப் போல நடந்தார். இருந்தாலும், அவன் விடாமல்,  “அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜ்ஜியார்ரே” என்று ஸலாம் சொன்னான். அவனின் “ஹாஜ்ஜியார்ரே” என்ற அழுத்தத்தை உணர்ந்தவராக,  முகம் சிவந்து ”வ அலைக்கும் ஸலாம்” என்று மெல்ல அவருக்கே கேட்காமல் வேறு பக்கம் பார்த்து முணுமுணுத்துவிட்டு, எட்டி நடையைப் போட்டார்.

ஜமீல் நிறைய சீர்திருத்தம் பேசுவான். ஃபாத்தியா ஓதுவது, மௌலூது, கந்தூரி, தர்ஹா எல்லாம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாதது என்று வாதம் செய்வான். சரி, அத்தோடு இருந்தால், தொலைகிறான் என்று விட்டுவிடலாம்தான். ஆனால், அவரது ஹாஜியார் பட்டத்துக்கும் அல்லவா வேட்டு வைக்கப் பாக்கிறான்? “ஹஜ் செய்யப் போயிருக்கவங்களை, சவூதில ஏர்போர்ட் ஆஃபிஸர்களும், போலிஸூம் கூட்டத்தை ஒழுங்குபடுத்தறதுக்காக ‘ஹாஜி’னு விளிப்பாங்க. படிக்கிற பிள்ளையள ‘ஸ்டூடண்ட்ஸ்”னு சொல்வோமில்லியா, அது மாதிரி. அதுக்காக, நீங்க எதோ படிச்சு வாங்குன பட்டம் மாதிரி பேருக்குப் பின்னாடி ‘ஹாஜியார்’னு போட்டுக்கிட்டு இருக்கீங்க? இஸ்லாத்துல அப்படி எங்க சொல்லிருக்கு? சவுதிக்காரன் எத்தனை ஹஜ் செஞ்சாலும் அப்படியா போட்டுக்கிறான்?”னு விதண்டாவாதம் பண்ணுவான். காசிம் ஹாஜியாருக்கோ அது தன் பேரின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது போல  உணர்கிறார். தன் அந்தஸ்தின் பிரதிபலிப்பாகவும் அதைக் கருதினார். அதை விடுவதாவது? அதனால்தான் ஜமீலின் ‘ஹாஜ்ஜியார்ரே’ என்ற சீண்டல்!! தன் மனைவியையும் ‘ஹாஜிமா’ என்றுதான் அழைப்பிதழ்களில் போடுவார். இப்பவெல்லாம் ஹஜ்ஜுக்கு மக்காவுக்குப் போய்வந்தவர்களைப் பேரப்பிள்ளைகள், ‘மக்காமா’ ‘மக்காப்பா’ என்று அழைக்கிறார்கள். அதற்கு இது பரவால்லை.

பலதையும் நினைத்தவாறே நடந்துகொண்டிருந்தவர், ‘ஹாஜிமா’ என்றதும் தவுலத் பீவி நினைவு வந்தவராகத் திரும்பிப் பார்த்தவர், மனைவி  ஜமீலுடன் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சினந்தார். “ஏளா, சீகீரம் வாளா. எம்புட்டு நேரமா இங்க காவல் நிக்கேன்?” என்று கத்தினார். அவர் கோவத்தைக் கண்டு, உடனே அவர் விறுவிறுவென நடந்து அவரருகே வந்து மூச்சு வாங்க நின்றார். ”வாக்கிங் வந்தா நடக்கத்தான செய்யணும். அங்க என்னவுளா வழியில போறவாரவுகட்ட எல்லாம் பேச்சு? நின்னு நின்னு நடந்தா என்ன ஃபாயிதா?” என்று எரிந்துவிழுந்தார்.

“தெரிஞ்சவுக வழில வந்தா பாத்துட்டுப் பேசாம வந்தா என்ன நினைப்பாக நம்மளை?” என்று சமாதானம் சொன்னார்.

“ஆமா,  சும்மாவே எனக்கு ஏழடி பின்னாலத்தான் வருவ. ஒரு நாளாவது சேந்து நடந்துருக்கியா? இதுல அவனையும்இவனையும் பாத்துப் பேசிகிட்டிருந்தா வெளங்கும்.”

“ஆமா, நீங்க என்னிக்கு என்கூட சேந்து நடக்கணுமின்னு நெனச்சிருக்கியோ? எப்பவும் கால்ல கஞ்சியக் கவுத்தா மாதி ஓடத்தான் செய்யுறது.”

“எளா, நாங்கல்லாம் ஜமீன், பண்ணையார் பரம்பரை. அப்படித்தான் முன்னாடி நடந்து பழக்கம். எங்க வாப்பா ஊர்ல நடந்து வந்தா, பின்னாடி வரிசைகட்டி மக்கசனம் நடந்துவரும் தெரியுமா? இப்ப நீ என் பின்னாடி வர்றதும், பண்ணையாருக்குக் குடைபிடிச்சு நடக்க மாதிரித்தான் எனக்குத் தோணுது தெரியுமா?” எக்காளத்துடன் சொல்லிச் சிரித்தார்.

”என்னது பண்ணையாரா? இன்னும் அந்தக் காலக் கனவுலருந்து வெளிய வரலியா நீங்க? ஜமீன், பண்ணையெல்லாம் ஒழிச்சு எம்புட்டு காலமாச்சு? தெரியாதா? இப்பம்லாம் அரசியவாதிக காலம். ஒரு தலைவன் போறான்னா, அவனுக்கு மின்னாடி எம்புட்டு போலீஸு காரு, தொண்டனுவோ காரு போவுது? என்னைய முந்திகிட்டு நீங்க நடக்கது, எனக்கு ஜெயலலிதா போவும்போது செக்கூரிட்டி முன்னாடி வழிய விலக்கிப் போவாம்ல, அதான் நாவகம் வருது!!” அடிபட்ட புலியாய் சீறினாள் தவுலத் பீவி. வழக்கம்போல மௌனமானார் காசிம் ஹாஜியார்.

Series Navigationஎங்கே போகிறோம்ஆர்வம்
author

ஹுஸைனம்மா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *