வாசல்

This entry is part 28 of 47 in the series 31 ஜூலை 2011

எப்படியாவது தன் மகன் இஞ்சினியரிங் பட்டம் வாங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார் சுப்பையன்.ஆனால் அவரது மகன் சுந்தரோ வேறு மார்க்கத்தை பின்பற்றப்போவதை மனதில் வைத்துக் கொண்டு படிப்பை தொடர மாட்டேன் என பிடிவாதமாக இருந்தான்.+2 முடித்துவிட்டு பையனை வீட்டில் வைச்சிருந்தா ஏன், எதற்கு, என்னண்ணு கேள்வி கேட்டு சொந்த பந்தங்கள் குடையுமே என வேதனைப்பட்டாள் சுந்தரின் அம்மா காமாட்சி.

காதைக் கிழிக்கும் ஹாரன்.இயந்திரத்தனமான மனிதர்கள்.விண்ணை முட்டும் கட்டிடங்கள்.எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள்.இரவைக் கொண்டாடும் இளைஞர்கள்.இப்படிப்பட்ட சென்னை நகரத்தில் வசித்துக் கொண்டு தான் காவி உடை தரிக்க ஆசைப்பட்டான் சுந்தர்.சுந்தரின் அக்கா கணவன் சேதுவைத் தவிர வேறு யாரும் அவனுக்கு ஊக்கம் கொடுக்கவில்லை.

எல்லோரும் வற்புறுத்தவே ஒரு வழியாக கல்லூரியில் சேர ஒத்துக்கொண்டான்.மெய்ஞானம் தேடும் அவனுக்கு விஞ்ஞானம் கசப்பாக இருந்தது.கல்லூரி வாழ்க்கை அவனுள் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது.

மனித மனம் விசித்திரம் நிறைந்தது.தனக்குத் தேவையான பொருளை தண்ணீரில் மூழ்கியாவது பெற்றுவிடத் துடிப்பது.பணம் தனக்கு பறக்கும் சிறகைத் தரும் என நம்புவது.சிறிய உதவிக்கு பெரிய பிரதிபலனை எதிர்பார்ப்பது.புதையல் என்றால் ஆளாய் பறப்பது.விபத்தில் இறந்தவனின் பாக்கெட்டைத் துழாவுவது.மனம் ஒரு விலங்கு பழக்கப்படுத்திவிட்டோமானால் வாலை ஆட்டிக் கொண்டு நம்மையே சுற்றி வரும்.கூண்டை அகற்றி விட்டோமானால் புலி போல வேட்டையாடத் துவங்கிவிடும்.

சேது மனக்கோட்டை கட்டியிருந்தான்.சுந்தர் லெளகீகம் வேண்டாமென்று சந்நியாஸம் வாங்கிக் கொண்டால் சொத்தெல்லாம் தன் மனைவி பெயரில் எழுதி வைக்கப்படும்.தான் சுகபோகமாக வாழலாம் என திட்டம் போட்டிருந்தான்.

பாம்பு போன்ற மனிதர்கள் வார்த்தைகளில் விஷம் வைத்து அலைவார்கள்.நேரம் பார்த்து எப்படி விஷத்தினை செலுத்துவது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சுந்தர் முதல் செமஸ்டர் தேர்வில் அனைத்து பேப்பரிலும் அரியர் வைத்தான்.இந்த உலகம் மாயை என்று நினைத்துவிட்டால் நாம் செய்யும் செயல்கள் பிரயோஜனம் இல்லாதது என்று மனதிற்குப்படும்.நிலையற்ற உலகத்தில் படித்து என்னத்துக்கு ஆகப்போவுது.நாமே ஒரு நாள் இறந்துவிடுவோம் என்கிற போது அது என்ன பர்மணன்ட் ஜாப், டெம்ப்ரரி ஜாப்.உலகமெனும் சிறையில் கைதிகளுக்கிடையே என்ன அந்தஸ்து பேதம்.மரணம் ஒன்றே நிலையானது என்கிற போது எதற்கு இந்த ஆட்டம் பாட்டம்.

இந்த மூஞ்சி தான் எல்லா பாடத்திலும் பெயில் என்று சுந்தரை எழுந்து நிற்க வைத்து எல்லோரும் பாருங்க என்றார் ஆசிரியர்.சுந்தர் இதை பொருட்படுத்தவில்லை.கல்லறையை தங்கத்தாலா இழைக்கப் போகிறார்கள் முதல் வகுப்பில் தேறியவர்களுக்கெல்லாம் என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

வான் மழை,அலை கடல்,குழந்தைகள்,மரங்கள் என இவையெல்லாம் வசீகரித்தன சுந்தரை.புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று சொல்லப்படுவது வாய் வார்த்தையல்ல.ஞானம் அடைவதற்குரிய பக்குவம் அடைந்திருந்தார் போதி மரத்தடியில் உட்கார்ந்த போது ஞானம் கைவரப்பெற்றது.

சுந்தர் படிப்பில் பூஜ்யமானாலும் கவிதை செய்வதில் வல்லவனாக இருந்தான்.கவிதை ஆத்ம திருப்தி்க்குத்தான் சோறு போடாது என அவனை பலபேர் முளையிலேயே கிள்ளி எறிய முனைந்தனர்.

ஓராண்டு முடிவில் மீண்டும் செமஸ்டர் தேர்வு வந்தது.சுந்தர் பேப்பர் வாங்கி எழுத ஆரம்பித்தான் தனது இயலாமையை,ஆதங்கத்தை,ஏமாற்றத்தை,ஆன்மிக ஈடுபாட்டை எல்லாம் அந்த தாளில் கொட்டிவிட்டு பேப்பரை கொடுத்துவிட்டு வீடு நோக்கி நடந்தான்.

அடுத்த நாள் பிசிக்ஸ் மேடம் அழைத்தார் என்று எல்லோரும் சொன்னார்கள் போனான்.”நேற்று பிசிக்ஸ் பேப்பர்ல என்ன எழுதியிருந்த, ஏன் அப்படி எழுதினே” என்று மேடம் கேட்டார்.அவன் வாயிலிருந்து வந்ததோ “தோத்துட்டேன் மேடம்” என்று கண்கள் பனிக்கச் சொன்னான்.”ஆம்பளையா பொறந்துட்டு தோத்துட்டேன்னு சொல்ல வெட்கமா இல்ல”என்றார் மேடம்.

“உனக்கு எதுல தான் விருப்பம்” என்றார்.”கவிதை எழுதுவேன்” என்றான் சுந்தர்.அப்ப அதுலயே முன்னேறப் பாரு படிப்பு வரலைனா டிஸ்கன்ட்டினியூ செய்துவிட்டு” என்றார்.மேலும் “நாங்க எல்லாம் க்யூல நின்னு உன்னைப் பார்க்கிற மாதிரி நீ வளரணும்” என்றார்.

அறையிலிருந்து வெளியேறிய சுந்தருக்கு மகிழ்ச்சி.அவன் தோளில் சுமந்த பாரத்தை யாரோ இறக்கி வைத்தது போலிருந்தது.ஆமாம் சுந்தர் குடும்பஸ்தன் ஆகிவிட்டான் கவிதையை கல்யாணம் செய்து கொண்டுவிட்டான்.

ப.மதியழகன்
mathi2134@gmail.com

Series Navigationசெதில்களின் பெருமூச்சு..கரைகிறேன்
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *