வாழ்க்கைத்தரம்

author
3
0 minutes, 2 seconds Read
This entry is part 9 of 29 in the series 3 நவம்பர் 2013

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

 

எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்நாள் கனவு. அதனால் ராகவனும் கார் வாங்க ஆசைப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. விலைவாசி விஷம் போல் ஏறி மாதாந்தர குடும்பச் செலவு பட்ஜெட்டைத் தாண்டினாலும், பெட்ரோல் விலை எக்கச்சக்கமாக ஏறினாலும் கார் வாங்கும் ஆசை மட்டும் அவருக்கு குறையவே இல்லை.

“ஏன்னா… பக்கத்தாத்து மாமி கார் வாங்கிட்டா… வாரம் ஒருமுறை குடும்பத்தோடு வெளியே கிளம்பிடறா… ஹூம்… என் தலையெழுத்து, இந்த அடுப்பங்கரையை கட்டிண்டு நாலு சுவரே உலகம்னு கிடந்து அல்லாடறேன்” என்று அடிக்கடி அலுத்துக் கொள்ளும் அம்புஜம் வேறு அவருடைய ஆசைத் தீயில் நெய் வார்த்தாள்.

ஆனால் கணக்குப் போட்டுப் பார்க்கும் போது, காரை நிறுத்தும் பார்க்கிங் இடத்துக்கு வாடகை, குறைந்த பட்சமாகவேணும் ஆகும் பெட்ரோல் செலவு, கார் லோனுக்கு மாதாமாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகை எல்லாமாகச் சேர்ந்து மாதம் பதினைந்தாயிரம் ரூபாயை தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதிகப்படியாக செலவாகும். அந்தப் பணத்தை எப்படி சமாளிப்பது? இந்த யோசனைதான் காரை வாங்கும் முயற்சியில் இருந்து இதுவரை ராகவனைத் தடுத்து வைத்திருந்தது.

அதனால் யாராவது ராகவனிடம், “இப்பத்தான் ஈஸியா கார் லோன் கிடைக்கிறதே, ஒரு கார் வாங்கப்படாதோ” என்று கேட்கும் போதெல்லாம், “வாங்கலாம்தான். ஆனால் நிப்பாட்ட இடம் வேண்டுமே, முதலில் அதைப் பார்த்து விட்டுத்தான் கார் வாங்க வேண்டும்” என்று சால்ஜாப்பு சொல்லியே சமாளித்து விடுவார்.

அவர் இப்போது இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தம் இருப்பது ஐந்தே ஐந்து கார் பார்க்கிங்தான். அதில் ஒன்றில் பக்கத்து வீட்டு கோமளா மாமி காரை நிறுத்துகிறாள். இன்னொன்றில் முதல் மாடியில் இருக்கும் சுவாமிநாதன் அவருடைய இன்னோவா காரை நிறுத்துகிறார். மீதியுள்ள மூன்று இடத்திலும் அதனதன் சொந்தக்காரர்களின் கார்கள் நிற்கிறது. இரண்டாவது மாடியிலிருந்த கார்த்திகேயன் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனதால் அவருடைய கார் பார்க்கிங் இடத்தை கோமளா மாமிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்.

“கார் பார்க்கிங்கையும் சேர்த்து வீடு வாங்குங்கோன்னு தலை தலையா அடிச்சுண்டேன். கேட்டேளா? இப்போ கார் வாங்கினா எங்கே போய் நிறுத்துறதாம்” என்று அம்புஜம் அடிக்கடி குத்திக் காட்டுவதுண்டு.

 

சரி! எதுக்கு இந்த விஷயமெல்லாம் என்றுதானே கேட்கிறீர்கள்? ஒரு வழியாக நம்ம ராகவன் கார் வாங்க முடிவெடுத்து விட்டார் அல்லவா, அதற்குத்தான் இவ்வளவு பீடிகை!

போனமாதம் ஆபீஸில் புரமோஷன் வந்தபோது, ராகவனுக்கு சம்பள உயர்வோடு பெட்ரோல் அலவன்ஸும் கிடைத்தது. ராகவனிடம் கார் இல்லாததால் கார் வாங்குவதற்காக லோனுக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. விஷயத்தைச் சொன்னவுடன் அம்புஜத்துக்கு தலைகால் புரியாத சந்தோஷம். அப்பொழுதே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பெருமையடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

அம்புஜம் சொன்னதைக் கேட்ட கோமளா மாமி தன் மருமகளிடம், “அம்புஜம் கார் வாங்கிடுவான்னு நான் சொன்னேனில்லையோ, இப்போ வாங்கப் போறா பாத்தியா” என்று ஒத்துப் பாடினாள். ஆனால் மருமகளுக்கோ அப்படி எதுவும் அவள் சொன்னதாக ஞாபகமில்லை. இருந்தாலும் மாமியார் சொன்னதை ஆமோதிக்க வேண்டுமேயென்று தலையசைத்து வைத்தாள்.

“இதோ பாரு அம்புஜம், கார் வந்தவுடனே, என்னைத்தான் முதலில் கூப்பிட்டுக் காட்டணும்” என்று உரிமையாக கேட்டுக் கொண்டாள் கோமளா மாமி.

இதைக் கேட்ட அம்புஜத்துக்கு பெருமை பிடிபடவில்லை. ஆனால், “ஏன்டிம்மா, என்ன கலர்னு டிசைடு பண்ணிட்டியோ”ன்னு அவள் கேட்ட பிறகுதான் அம்புஜத்துக்கு அதைப்பற்றியே ஞாபகம் வந்தது.

“ஏன்னா, கார் வாங்கறச்சே என்னையும் கூட்டிண்டு போங்கோ, நான்தான் நேக்கு பிடிச்ச கலரை செலக்ட் பண்ணுவேன்” என்று அடம் பிடிக்கத் தொடங்கினாள் அம்புஜம்.

“சரி, போறச்சே, கூட்டிண்டு போறேன். இப்ப பேசாம இரு” என்று அதட்டுவார் ராகவன்.

என்ன கலர் என்பது மட்டுமல்ல, என்ன கார் வாங்குவது என்பதும் ராகவனுக்கு குழப்பமாக இருந்தது. நண்பர்களிடம் விசாரித்தார். கூகுளில் தேடிப்பார்த்தார். விதவிதமான கார்கள், விதவிதமான சைஸ்களில், விதவிதமான விலைகளில் இருந்ததைப் பார்த்து மலைத்து விட்டார். ஃபோர்டு, ஹுண்டாய், டயோட்டா, மாருதி, டாடா, ஸ்கோடா, ஆடி, நிஸான், செவர்லே இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று. அவரால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அவருடைய நண்பர் குமார் ராகவனிடம். “ராகவா, கார் வாங்கும்போது கலர் மட்டுமல்ல, மற்ற பல விஷயங்களையும் பார்க்க வேண்டும். இப்போது பெட்ரோல் விற்கிற விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக இருந்தால் நல்லது. அல்லது டீசல் வண்டிக்குப் போய் விடலாம். ஆனால் அது விலை அதிகமாக இருக்கும். அதோடு பெரிய காரா, சின்னக் காரா என்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்” என்று சொன்னது வேறு குழம்ப வைத்தது.

“அது மட்டுமல்ல, ஒரு மாதத்திற்கு காருக்கு எவ்வளவு செலவாகும்? பெட்ரோல் செலவு, மாதத்தவணை போன்றவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்து முடிவெடு” என்றும் அறிவுறுத்தினார். ராகவனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலத் தோன்றியது.

எல்லாவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்த ராகவன் ஓரளவு சுமாரான கட்டுபடியாகக் கூடிய விலையில், சின்னக்காராக ஹுண்டாய் சான்ட்ரோவைத் தேர்ந்தெடுத்தார். என்ன கலர் என்பதை மனைவியுடன் விவாதி்த்தபோது மெரூன் கலர் என்று முடிவானது. பிறகுதான் தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பது ஞாபகம் வந்தது. ஒரு டிரைவரை வேலைக்கு வைத்தால் அவனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமே!

பிறகு இன்ஸ்யூரன்ஸ், அவ்வப்போது சர்வீஸுக்கு ஆகும் செலவு இத்யாதி இத்யாதி என்று செலவுகள். நினைக்கும் போதே ஒரே மலைப்பாக இருந்தது. பேசாமல் கார் வாங்கும் திட்டத்தை கைவிட்டு விடலாமா? என்று கூட யோசித்தார். ஆனால் அம்புஜத்தை சமாதானப்படுத்த முடியாது. அவள் இப்போதே எல்லோரிடமும் சொல்லி வைத்து விட்டாள். அந்தக் காலத்தில் வீடு கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்வார்கள். இப்போது காரை வாங்கிப்பார் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு சொல்லத் தோன்றியது.

முதலில் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் என்று டிரைவிங் இன்ஸ்ட்யூட்டில் சேர்ந்து பழக ஆரம்பித்தார். பழகப் பழக சீக்கிரமே கார் வாங்கிவிட வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அப்போதுதான் அவருடைய நண்பர் மூலமாக ஒரு அதிர்ஷடகரமான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

 

ராகவனின் நீண்ட நாளைய நண்பரான கணேசன் ஒருநாள் போன் செய்தார். தான் வெளிநாட்டுக்குச் செல்லப் போவதாகவும் தன்னுடைய சான்ட்ரோ காரை யாராவது விலைக்கு கேட்டால் விற்றுவிட்டு போக இருப்பதாகவும், அப்படி யாராவது இருந்தால் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார். தானே ஒரு கார் வாங்கும் முடிவில் இருப்பதாக ராகவன் சொன்னவுடன் உடனே வந்து தன்னை பார்க்கும்படி கணேசன் சொன்னார்.

ராகவன் போய் பார்த்தபோது அவர்கள் முடிவு செய்த அதே மெரூன் கலரில் நல்ல கண்டிஷனில் கார் இருந்தது. 2009 வருட கார் என்பதால் நல்ல விலைக்குப் போகும் என்றும் ராகவனுக்காக மற்றவர்களைவிட இருபத்தைந்தாயிரம் ரூபாய் குறைவாகக் கொடுப்பதாகவும் சொன்னார். அம்புஜத்தையும் கூட்டிக்கொண்டிக் கொண்டு போய் காரைக் காண்பித்தார். அவளுக்கும் பிடித்து விட்டது. கையில் சேமிப்பாக வைத்திருந்த பணத்தோடு அங்கே இங்கே என்று பணம் ஏற்பாடு செய்து கார் லோன் வாங்காமலே அந்தக் காரை வாங்கி விட்டார். அவருக்கு தன்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறிய சந்தோஷம்.

 

ஆனால் இப்போது இன்னொரு பிரச்சினை முளைத்தது, காரை எங்கே நிறுத்துவது? கார் பார்க்கிங் ஒரு பெரிய பிரச்சினையாக ஆகி விட்டது. காரை நிறுத்துவதற்கு இடம் பார்த்து விட்டு காரை எடுத்துக் கொள்வதாக கணேசனிடம் சொன்னார் ராகவன். கோமளா மாமியிடம் இது பற்றி அம்புஜம் கவலைப் பட்டு புலம்பினாள்.

“பக்கத்தில் சில்வர் கேசில் என்று ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. இன்னும் சில இடங்களில்கூட கார் பார்க்கிங் இருக்கிறது என்று கேள்விப் பட்டேன். கேட்டுப் பாருங்கோ” என்றாள் கோமளா மாமி. ஆனால் ராகவன் போய் விசாரித்த போது, அப்படி எதுவும் இடம் காலி இல்லை என்ற பதிலே கிடைத்தது.

இது விஷயமாக இவர்கள் பேசுவதைக் கேட்ட வெங்கட்ராமன், தனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் பார்க்கிங் இடம் இருப்பதாகவும், தனியாக கேட் இருப்பதால் பூட்டுப் போட்டுக் கொள்ளலாம் என்றும் சொன்னார். அதைக் கேட்ட ராகவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

“உங்களுக்கு என்பதால்தான் இந்த இடத்தைச் சொன்னேன். ஆனால் மாதவாடகையாக ரூ 1800 கொடுக்க வேண்டும். அட்வான்ஸாக உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். நான் பேசிக் கொள்கிறேன்” என்றார் வெங்கட்ராமன். அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் மாடியில் குடியிருப்பவர்; நீண்டநாள் பழகியவர் என்பதால் அவர் சொல்வதில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. வெங்கட்ராமன் நல்ல வசதி படைத்தவர். இன்னோவா கார் வைத்திருக்கிறார். நல்ல வாழ்க்கைத்தரம் உள்ளவர் என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்களிடம் நல்ல மரியாதையும் செல்வாக்கும் அவருக்கு உண்டு.

கடவுளே நமக்கு வெங்கட்ராமன் மூலமாக ஒரு நல்ல வழி காண்பித்து இருப்பதாக நம்பினார் ராகவன். கார் பார்க்கிங் இடத்துக்கு அட்வான்ஸாக ஆறாயிரம் ரூபாயை வெங்கட்ராமனிடம் கொடுத்து விட்டு அவருக்கு நன்றி சொன்னார். “இதிலென்ன இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து கொள்வதுதானே” என்று பெருந்தன்மையாகச் சொன்னார் வெங்கட்ராமன்.

ஆனால் கடவுளின் திட்டம் வேறுவிதமாக இருந்தது அப்போது ராகவனுக்கு புரியவில்லை.

நல்ல நாள் பார்த்து காரை அங்கு போய் நிறுத்த வேண்டும். அடுத்த இரண்டாவது நாள் நல்ல முகூர்த்த நாளாய் இருந்தது. அன்றைக்கு காரை எடுத்து வந்து நிறுத்தலாம் என்று நினைத்த ராகவனுக்கு திடீரென்று ஆபீஸ் விஷயமாக பெங்களுரு போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. எனவே தன்னுடைய நண்பர் ரவியிடம் சொல்லி காரை கொண்டு வந்து பார்க்கிங்கில் நிப்பாட்ட ஏற்பாடு செய்து விட்டார். அட்வான்ஸ் கொடுத்து விட்டதால் அந்த கேட்டில் ஒரு பூட்டு போட்டு விட்டு சாவியை நண்பரிடம் கொடுத்து விட்டால் வேலை முடிந்தது. நிம்மதியாக பெங்களுரு போகலாம்.

அன்று சாயந்தரம் ஆபீஸ் முடிந்ததும் புதிதாக ஒரு பூட்டு ஒன்று வாங்கிக்கொண்டு அங்கே சென்றார் ராகவன். ஒரு யோசனை வந்தது. நாமோ ஊரில் இல்லை; நமது நண்பருக்கோ இங்கு யாரையும் தெரியாது; அதனால் அந்த கட்டிடத்தில் உள்ள யாரிடமாவது சொல்லி வைக்கலாம் என்று உள்ளே நுழைந்து முதலில் இருந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். ஒரு வயதான அம்மாள் கதவைத் திறந்து என்னவென்று விசாரித்தாள்.

தான் முன்னால் உள்ள கார் பார்க்கிங்கை வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், நாளை மறுநாள் காரை இங்கு வந்து நிறுத்த இருப்பதாகவும், அன்று தான் ஊரில் இல்லாததால் நண்பரிடம் காரை கொண்டு வரச்சொல்லி இருப்பதாகவும் சொன்னார். ‘யாரிடம் பேசியிருக்கிறீர்கள்’ என்று அந்த அம்மாள் கேட்டதற்கு வெங்கட்ராமன் பெயரைச் சொன்னார்.

“வெங்கட்ராமனா? பின்னாடிதான் அவருடைய ஆபீஸ் இருக்கிறது” என்றாள் அந்த அம்மாள்.

ராகவனுக்குத் திகைப்பாயிருந்தது. வெங்கட்ராமனுடைய ஆபீஸ் இங்கு இருப்பதை அவர் நம்மிடம் சொல்லவில்லையே! சரி அவர் இருந்தால் அவரிடமே சொல்லி விடலாம் என்று பின்னால் சென்று, மாடிப்படி அருகே உள்ள ஒரு கதவில் வழியாக நுழைந்தார். அது ஒரு இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு ஃப்ளாட். அதை ஆபீஸாக மாற்றியிருந்தார்கள். முதலில் இருந்த ஹாலை ரிசப்ஷனாக ஆக்கியிருந்தார்கள். அங்கு இருந்த ஒரு மேஜையின் பின்னால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ராகவனைப் பார்த்து, “வாங்க, யாரைப் பார்க்கணும்?” என்றாள்.

“மிஸ்டர் வெங்கட்ராமனைப் பார்க்கணும்”

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று அங்கிருந்த சோபாவை காண்பித்து விட்டு இன்னொரு ரூமிற்குள் நுழைந்தாள். ராகவன் அந்த அறையைச் சுற்றிப் பார்வையை ஓட விட்டார். ரிசப்ஷனிஸ்ட் தவிர நான்கு பேர் அங்கு தங்கள் வேலையில் மூழ்கியிருந்தார்கள். இரண்டு பேர் வாடிக்கையாளர்களாக எதிரே உட்கார்ந்திருந்தார்கள்.

“வாங்க” சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் ராகவன்.

வெங்கட்ராமன் கொஞ்சம் அசட்டு சிரிப்போடு முன்னால் நின்றிருந்தார். அவர் முகத்தில் லேசான அதிர்ச்சி தெரிந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு “சொல்லுங்க சார், என்ன விஷயம்?” என்றார்.

“நாளைக்கு காலையில் வெளியூர் போறேன். அதான் கேட்டில் பூட்டுப் போட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தேன். என்னோட நண்பரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் காரைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்” ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் ராகவன்.

“அப்படியா, சரி! பூட்டு போட்டுக்குங்க” என்றவர் அந்த பெண்மணியிடம் திரும்பி, “சார் ஒவ்வொரு மாதமும் வாடகை கொடுப்பார். வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார். ராகவனை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்..

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் பிறகு கடவுள் என்று ஒருவர் தேவையில்லை என்று சொல்வார்கள். எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். அப்படி இல்லாதபோது எவ்வளவுதான் மனிதன் முயற்சி செய்தாலும் அது நடக்காது.

ராகவன் கேட்டுக்கு வந்தபோது அங்கே லுங்கியுடன் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் கையில் மணல் அள்ளிக் கொண்டு போகும் தட்டு இருந்தது. அவரிடம் மற்றவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

ராகவன் பூட்டை கேட்டில் மாட்டும்போதுதான் கவனித்தார். அவருடைய கார் நிறுத்தும் இடத்தில் கொஞ்சம் மணல் குவித்து வைக்கப் பட்டிருந்தது. ஒன்றும் புரியாமல் அந்த இருவரையும் பார்த்த போது, அவர்கள் இருவரும் இவரையே கவனித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் விஷயம் தெரியாமல் சந்தேகப்பட்டு ஏதேனும் கேட்பதற்குள் நாமே விஷயத்தை விளக்கி விடலாம் என்று அவர்களை நோக்கிச் சென்றார்.

அதற்குள் அந்த மனிதர்களில் ஒருவர், “எதற்காகப் பூட்டுகிறீர்கள்?” என்றார்.

அந்த இடத்தை கார் நிறுத்துவதற்காக வாடகைக்கு எடுத்திருப்பதாகவும் வெங்கட்ராமனிடம் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாகவும் சொன்னார் ராகவன். அதற்கு அவர், “அந்த இடத்தில் சின்னதாக ஒரு பராமரிப்பு வேலை இருக்கிறது. அதனால் இன்று இரவு மட்டும் விட்டுவிட்டு காலையில் வந்து பூட்டிக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

பிறகுதான் அவரிடம் ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார் ராகவன். “இவர்தான் இந்த கட்டிடத்தின் அஸோசியேசன் செகரட்டரி” என்றார் பக்கத்தில் இருந்த இன்னொருவர். அவரிடம் நன்றி சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார் ராகவன். பிறகுதான் விதி விளையாடியது.

வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்தில் வெங்கட்ராமனிடம் இருந்து போன் வந்தது. அவருடைய பேச்சில் லேசான கோபம் தெரிந்தது.

“நீங்க அங்கு வந்தபோது, அந்த பில்டிங் அஸோசியேசன் செகரட்டரியைப் பார்த்தீர்களா?”

“ஆமாம், எதற்குப் பூட்டுகிறீர்கள் என்று கேட்டார், நான் விஷயத்தைச் சொன்னேன். அதன்பிறகுதான் அவர் அந்த பில்டிங் அஸோசியேசன் செகரட்டரி என்று தெரிந்தது” என்று பதில் சொன்னார் ராகவன்.

“உங்களிடமிருந்து இப்படி ஒரு செயலை நான் எதிர் பார்க்கவில்லை” என்றார் வெங்கட்ராமன் லேசாக சிரித்தபடி. அவர் சிரித்தபடி பேசுவது போல் தோன்றினாலும் அவர் கோபத்தைக் கட்டுப் படுத்துகிறார் என்பது புரிந்தது.

“என்ன சார் ஆயிற்று? ஒன்றும் பிரச்சினை இல்லையே” என்றார் ராகவன் பரிதாபமாக.

“உங்க பார்க்கிங் இடம் இப்போது ஊசலாட்டத்தில் இருக்கிறது” என்றார் வெங்கட்ராமன்.

“அய்யய்யோ, ஏன் சார்? என்ன விஷயம்?” பதறினார் ராகவன்.

“நீங்கதான் அவரிடம் விலாவாரியா எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டீங்களே” கடுகடுத்தார் வெங்கட்ராமன்.

ராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இதில் நம் தவறு என்ன இருக்கிறது? வெங்கட்ராமன் நன்றாகத் தெரிந்தவர், மரியாதைப் பட்ட மனிதர். நாம் அவரைப் பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லையே? உள்ளதைத்தானே சொன்னோம். ஆனால் நம்மிடம் ஏன் இப்படிப் பாய்கிறார்?

பிறகு நேரில் சென்று வெங்கட்ராமனைச் சந்தித்து விபரத்தைக் கேட்ட பிறகுதான் என்ன நடந்தது என்று புரிந்தது.

அதாவது வெங்கட்ராமன் அந்த பில்டிங்கில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஆபீஸ் நடத்துகிறார். அதில் ஒரு கார் பார்க்கிங் இடமும் அடக்கம். அவருடைய காரை நிறுத்த வேறு இடமிருப்பதால் அந்த இடத்தை வாடகைக்கு விட்டு அதில் கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறார். அதை ராகவனிடம் சொன்னால் கௌரவக் குறைச்சல். சொல்லாமலே இருந்து விட்டால் அங்கு யாராவது கேட்கும்போது, தன்னுடைய கம்பெனி கார்தான் என்று சொல்லி விடலாம் என்று நினைத்திருக்கிறார்.

ஆனால் அந்த கார் பார்க்கிங்கை வாடகைக்கு எடுத்திருப்பதாக ராகவன், அந்த பில்டிங் அஸோசியேசன் செகரட்டரியிடமே போட்டு உடைத்து விட்டதால், இப்போது அவர் பிரச்சினை பண்ணுகிறாராம். ‘உங்கள் காரை நிறுத்துவதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதை இன்னொருவருக்கு வாடகைக்கு விடக்கூடாது. இல்லையென்றால் பிளாட் சொந்தக்காரரிடம் சொல்லி விடுவேன்’ என்று சொல்கிறாராம்.

இப்போது வெங்கட்ராமனுடைய கவலை எல்லாம், தாம் வாடகைக்கு இருப்பது ராகவனுக்குத் தெரிந்து விட்டதே என்பதும், இந்த விஷயம் வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்தால் அவர் வாடகையை ஏற்றுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதும்தான்.

தெரிந்த மனிதர்களிடம்கூட எப்படி எல்லாம் கௌரவம் பார்க்கிறார்கள் என்று நினைத்த போது ராகவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வாழ்க்கைத்தரம் என்பது இதுதானோ? இனிமேல் அந்த இடம் கிடைக்காது என்பதால், தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டு வேறு இடம் பார்க்க ஆரம்பித்தார் ராகவன்.

அடுத்த தெருவில் பார்க்கிங் லாட்டில் ஒரு இடம் கிடைத்தது. வாடகையும் குறைவாக இருந்தது. ஒரு வழியாக பிரச்சினை எல்லாம் முடிந்து தினமும் ஆபீசுக்கு காரில் போவதும், சாயந்தரம் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருவதுமாக நாட்கள் ஓடியது.

 

“ஏன்னா… நீங்க ஆபீஸ் போனப்பறம் கார் சும்மாதானே நிக்கிது. அந்த நேரத்தில் நானும் சித்த கார் ஓட்டப் பழகிண்டா பிரயோஜனப்படாதோ?” என்று கேட்க ஆரம்பித்தாள் அம்புஜம்.

“அதெப்படி முடியும் அம்புஜம்? ஆத்திலே நோக்கு வேலை இருக்காதோ”

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்னா…. நீங்க சரின்னு சொல்லுங்கோ” அடம்பிடித்தாள்.

எப்படியோ அதற்கு ஏற்பாடு பண்ணி, இப்போது அம்புஜம் நன்றாக கார் ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டாள். அதனால் காலையில் ராகவனை ஆபீசுக்கு காரில் கூட்டிப் போவதும் அவள்தான். சாயங்காலம் திரும்ப வீட்டுக்கு கூட்டி வருவதும் அவள்தான். மற்ற நேரங்களில் எங்கு போவதானாலும் காரில்தான் போவாள். ஏன், காய்கறி வாங்கப் போனால்கூட காரை நிறுத்த வசதியுள்ள பெரிய கடைகளுக்குத்தான் போகிறாள்.

இப்போதெல்லாம் அம்புஜத்தின் நண்பிகள் எல்லோருமே, கார் வைத்திருப்பவர்கள்தான். அவர்கள் மூலமாக வசதியுள்ளவர்கள் உறுப்பினராக உள்ள கிளப்களில்கூட உறுப்பினராகி விட்டாள். அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தையும் வாய்ப்பைப் பயன்படுத்தி ராகவனுக்கும் நல்ல சம்பளத்தில் வேறு வேலைக்கு ஏற்பாடு செய்தாகி விட்டது.

 

அடுத்த சில மாதங்களில் கார் பார்க்கிங் உள்ள ஒரு புது வீட்டையும் வாங்கியாகிவிட்டது. இப்போது அவர்களின் வாழ்க்கைத்தரமே மாறி விட்டது. இப்போதெல்லாம் வெங்கட்ராமனும் அவருடைய மனைவியும் குழந்தைகளொடு அடிக்கடி ராகவன் வீட்டுக்கு வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள்.

ஆனாலும் இப்போது அம்புஜம் மனதில் ஒரு குறை. “ஏன்னா… எங்க கிளப்ல எல்லோருமே பெரிய பெரிய கார்ல வரா….ஹூம்… நான் மட்டும் ஒரு குட்டிக்காரை வச்சுண்டு அல்லாடறேன். ரொம்ப அவமானமா இருக்கு நேக்கு” என்று ஒருநாள் அலுத்துக் கொண்டாள் அம்புஜம்.

ஒரு பேப்பரை எடுத்து வைத்து பெரிய கார் வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போட ஆரம்பித்தார் ராகவன்.

 

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ்
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    எஸ். சிவகுமார் says:

    வாழ்க்கையை நன்றாகவே ரசித்திருக்கிறீர்கள் திரு.பழனிச்சாமி அவர்களே ! தங்கள் ரசிப்பு பெருகட்டும் ! எங்களுக்கு மேலும் பல கதைகள் வாசிக்கக் கிடைக்கட்டும் ! வாழ்த்துகள் !

Leave a Reply to எஸ். சிவகுமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *