வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 13

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 

 

                மேசை இழுப்பறையை ஓசைப்படாமல் திறந்த மாலா அதிலிருந்து ஒரு வெள்ளைத்தாள், எழுதுஅட்டை, பேனா ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து சமையலறைக்குள் புகுந்து கதவைச் சாத்தினாள்

அவளது நோக்கம் ராமரத்தினத்துக்குப் புரிந்தது. இரண்டு நிமிடங்கள் தாமதித்ததன் பின்ன்ர் அவனும் மெதுவாக எழுந்து சமையலறை நோக்கி நடந்தான். கதவருகே நின்று சில நொடிகளைச் சிந்தனையுடன் கடத்திய பிறகு, அதன் கதவை மெல்லத் தட்டினான்.

மாலா வியப்புடன் கதவைத் திறந்தாள். அவள் எடுத்துச் சென்றிருந்த அட்டை, காகிதம் பேனா ஆகியன அப்போது அவள் கையில் இல்லை.

அதை அடுப்புக்குப் பின்னால் மறைத்திருப்பாள் என்று ஊகிதத அவன், “என்ன, மாலா, இந்த நேரத்துல இங்கே என்ன பண்றே?” என்றான் சன்னக் குரலில்.

“ததத…தண்ணி குடிக்க வந்தேன்…”

“அதுக்கு ஏன் வாய் திக்குது? எதுக்கு இந்தப் பொய், மாலா? ரமணிக்கு லெட்டர் எழுதத்தானே இங்க வந்தே? உன்னோட லெட்டருக்கு அவன் ஏன் இன்னும் பதில் போடல்லைன்னு கேட்டுத்தானே எழுதப்போறே?”

மாலாவின் தலை தாழ்ந்தது. கண்கள் நொடிக்குள் கலங்கிவிட்டன்.

“எனக்கு எல்லாம் தெரியும், மாலா. அந்த ரைட்டிங் பேடையும் தாளையும் எடு…”

அவள் அடுப்புக்குப் பின்னால் ஒளித்து வைத்திருந்த அவற்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். ‘அன்புள்ள ரமணி அவர்களுக்கு. வணக்கம். என் கடிதம் கிடைத்ததா?…’ எனும் வாக்கியங்களுடன் நின்றிருந்த அந்தக் காகிதத்தைச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்து அவன் சன்னல் வழியே வெளியே வீசினான்.

உடனேயே மாலா முகத்தைப் பொத்திக்கொண்டு ஓசை எழுப்பாமல் அழலானாள். அவள் தோள்கள் குலுங்கின.

“மாலா! கண்ணைத் துடைச்சுக்க. அம்மா எழுந்து வந்து என்ன, ஏதுன்னு கேட்டா அசிங்கமாயிடும். முணுக்னா அம்மாவுக்குத் தூக்கம் கலைஞ்சுடும். உனக்கே தெரியும். அதனால அழறதை முதல்ல நிறுத்து.”

“ரமணிக்கு உன் லெட்டர் போய்ச் சேரவே இல்லைன்னு – அதாவது அவன் அதைப் படிக்கவே இல்லைன்னு – உனக்குத் தெரியுமா?”

மாலா திகைப்புடன் கலங்கிய விழிகளை மலர்த்தி அவனை நோக்கினாள்.

“அவன் டூர் போயிருக்கான். அந்த நாள் பார்த்து உன் லெட்டர் அவனுக்குப் போயிருக்கு. அவனோட ஆஃபீஸ் பியூன் வேற் ஏதோ புக்கோட அதையும் எடுத்துண்டு போய் அவன் அப்பாகிட்ட கொடுத்திருக்கான்… கவர் மேல இருந்த கையயெழுத்து ஒரு பொண்ணோடது மாதிரி இருந்ததாலேயும், அது ஏன் அவனோட ஆஃபீஸ் அட்ரெசுக்கு வந்ததுன்ற சந்தேகத்தாலேயும் அவரே அதைப் பிரிச்சுப் படிச்சுட்டார். ரமணி இன்னும் டூர்லதான் இருக்கான். அவன் அப்பா என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்… போனேன். என் வேலை விஷயமா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவர் உன்னோட லெட்டரை எங்கிட்ட கொடுத்துப் படிக்கச் சொன்னாரு…”

அது வரை அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மாலா தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

ராமரத்தினம் தொடர்ந்தான்: “அவர் பேசினதையெல்லாம் மறுபடியும் சொல்லி உன் மனசை நான் நோகடிக்க விரும்பல்லே. நீ ரமணிக்கு லெட்டர் எழுதினது அவனுக்குத் தெரியவே கூடாதுன்னாரு. இனி எழுதவும் கூடாதுன்னாரு. அது விஷயமா ரமணி கிட்ட பேசக்கூடாதுன்னு என்னையும் எச்சரிச்சாரு. அவர் பேசின தோரணையைப் பார்த்தா அவர் நம்மளைப் புழுவுக்கும் கேவலமா நினைக்கிறார்னு தோணுது. ஆனா நான் விட்றதா இல்லே. …உன்னை ஏத்துக்கிறதோ நிராகரிக்கிறதோ ரமணியோட இஷ்டம்.”

மாலா தலை உயர்த்தி நன்றியுடன் அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் தலை கவிழ்ந்தாள்.

“ஆனா ஒண்ணு. இந்தச் சம்பந்தம் நமக்குக் கொஞ்சங்கூட லாயக்கில்லாத சம்பந்தம். ரமணிக்கு விருப்பம் இருந்து, அவன் ரொம்பவும் உறுதியா யிருந்தாலொழிய இது நடக்கிறது சந்தேகந்தான்…. பார்க்கலாம். அவன் டூர்லேர்ந்து வந்ததும் பார்த்துப் பேசறேன்… நீ போய்ப் படுத்துண்டு தூங்கு….”

மாலா முதன் முறையாகப் புன்னகை புரிந்தாள். வெட்கத்துடன் அவனை ஏறிட்டு, “ ரொம்ப தேங்க்ஸ், ராஜா! ..” என்றபடி கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

பின்னர், “நீ என்னைப்பத்திக் கேவலமா நினைக்கல்லேதானே?” என்று கேட்டாள்.

“சீச்சீ! அப்படியெல்லாம் நினைப்பேனா?…” என்ற ராமரத்தினமும் ஆதரவாய்ப் புன்னகை செய்தான்.

“அம்மா என்னைப் பத்தின கவலையால சரியாத் தூங்குறது கூட இல்லே. அதான்… எனக்குன்னு ஒரு வழியை நானே தேடிண்டா ஒரு பிரச்சனையாவது தீருமேன்னுதான்…”

“சரி, சரி. போய்ப் படுத்துக்கோ. அம்மா வந்து வெச்சா கஷ்டம்…”

கதவைத் திறந்துகொண்டு அப்போது பருவதமே அங்கு வந்து விட்டாள். இருவரும் திகைத்துப் போய் அவளைப் பார்த்தார்கள்.

“எல்லாத்தையும் கேட்டுண்டுதாண்டா இருந்தேன். கதவை சரியாச் சாத்தாததுனால இடுக்கு வழியா நீங்க பேசினதெல்லாம் கேட்டுது. பன்னண்டு மணிக்கு மேல அண்ணனுக்கும் தங்கைக்கும் சமையல்கட்டுலே என்ன வேலைன்னு பார்க்கத்தான் எழுந்து வந்தேன். ரமணி வந்துட்டுப் போனதிலேர்ந்தே இவ மூஞ்சி சரியில்லே. அன்னைக்கே நான் ஜாடையாச் சொன்னேன் – அவங்களை எட்டேணி வெச்சாலும் நம்மால் எட்ட முடியாதுன்னு. அதுக்கு உன்னோட இன்னொரு தங்கைக்காரி, ‘ரமணி மனசு வெச்சா முடியும்’னு சொன்னா. அது இவளை உசுப்பி விட்டுடுத்துன்னு தோணுது…” என்ற பருவதம் மாலாவை முறைத்துப் பார்த்தாள்.

“பாதி ராத்திரி வேளையிலே சத்தமாப் பேசாதேம்மா. அவளை எதுக்கும்மா முறைக்கிறே? அவ மேல என்ன தப்பு?”

“என்னது! அவ, மேல, என்ன, தப்பா? அழகாயிருக்குடா நீ பேசுறது. ஒரு வாலிபப் பிள்ளைக்கு இவ லெட்டர் எழுதலாமா? … என்னடி எழுதினே அவனுக்கு? அவந்தான் இவளைப் பத்தி என்ன நினைப்பான். அடி, கடங்காரி.”

பருவதம் கையை ஓங்கிக்கொண்டு மாலாவை நோக்கிப் பாய்ந்தாள். ராமரத்தினம் மாலாவை அப்பால் ஒதுக்கிவிட்டு, “இப்ப என்னம்மா ஆயிடுத்து? இதுக்கெல்லாம் காரணம் வீட்டுப் பெரியவங்கதான். மாலா வயசுல உனக்குக் கல்யாணமாயி ஒரு குழந்தையும் பிறந்தாச்சு. அதை நினைச்சுப்பாரு. அப்பா குடிச்சுக் குடிச்சு எல்லாத்தையும் பாழாக்காம நாலு காசு சேர்த்து வெச்சிருந்தா இது மாதிரி ஒரு நிலைமை நமக்கு வந்திருந்திருக்காது. எல்லாம் கிடக்க, அவ மேல எதுக்குப் பாயறே?”

“அதுக்காகத் தப்பு வழியில போகணும்னுட்டு இல்லேடா.”

“இப்ப என்ன தப்பு வழியிலே போயிட்டா அவ? ஒரு தப்பும் நடக்கல்லே. கண்ணியமா அவனுக்கு ஒரு லெட்டர் எழுதிக் கேட்டா. அவ்வளவுதான்.”

“லெட்டர் எழுதினதே தப்புங்கறேன், அப்புறம் கண்ணியமான லெட்டர்ன்றே? என்னடி எழுதித் தொலைச்சே?”

“தப்பான வார்த்தை ஒண்ணு கூட இல்லேம்மா அதுல. நானே படிச்சேனே! ‘உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருந்ததா எங்கம்மாவைப் பார்த்துப் பேசுங்க’ அப்படின்னு எழுதியிருந்தா. அவ்வளவுதான்.”

“நீ என்னதான் அவளுக்கு வக்காலத்து வாங்கிப் பரிஞ்சு பேசினாலும் அவ செஞ்ச காரியத்தை நான் சரின்னு ஒத்துக்க மட்டேண்டா. பொண்ணு பொண்ணா யிருக்கணும். அந்தப் பிள்ளையே இவளைப் பத்தி என்ன நினைச்சுப்பான்?”

“தப்பா ஒண்ணும் நினைச்சுக்க மட்டான். அப்படி நினைச்சான்னா அது அவ்ன் தப்பு. காலம் ரொம்ப மாறிண்டிருக்கும்மா. நான் ஆஃபீசுக்குக் கிளம்பிப் போனதுக்கு அப்புறம் அவளைப் பிடிபிடின்னு பிடிச்சுக்காதே…. தெரிஞ்சுதா?. ரமணி டூர்லேர்ந்து வந்ததும் அவனை நானே பார்த்துப் பேசலாம்னு இருக்கேன்.”

“அதான் சொன்னியே அவகிட்ட? கேட்டுண்டுதான் இருந்தேன்… சரி, சரி. படுத்துக்குங்கோ ரெண்டு பேரும்…….”

கோமதியும் எழுந்து வந்தாள்: “என்னம்மா?”

“உங்க அக்காக்காரி என்ன காரியம் பண்ணி யிருக்கான்னு அவளையே கேளுடி…”

“என்னம்மா சொல்றே?”

“அந்த ரமணிக்கு இவ லெட்டர் எழுதியிருக்காடி – என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியான்னு கேட்டு!… நீ நாளைக்கு என்ன பண்ணி எங்க மானத்தை வாங்குறதா யிருக்கியோ!”

கோமதி வியப்புடன் மாலாவைப் பார்த்தாள். அவள் தலை தாழ்ந்திருந்தது.

“சரி, சரி. எல்லாரும் போய்ப் படுக்கலாம், வாங்க!” என்று ராமரத்தினம் கூறவும் அனைவரும் தத்தம் படுக்கைக்குச் சென்று படுத்தார்கள்.

…. சில் நொடிகளில் பருவதம் மூக்கை உறிஞ்சிய ஓசை கேட்டது.

“அம்மா! அம்மா! இப்ப என்னத்துக்கு அழறே?” என்று ராமரத்தினம் அவளை சமாதானப் படுத்துகிற குரலில் வினவினான்.

“பணக்காரப் பையன் மேல இப்படி ஆசை வெச்சுட்டாளே இவ!. இது நடக்குமா? என் வயித்துல் வந்து பொறக்குறதுக்கு இதுங்க என்ன பாவம் பண்ணித்துங்களோ, கடவுளே!’ ன்னு அழறேண்டா!”

“அதுக்குக் கடவுளை நொந்து என்ன லாபம்? நான் தான் ரமணியை போய்ப் பார்க்கிறேன்னு சொன்னேனில்லே? அவன் என்ன சொல்றான்கிறதைக் கேட்டுட்டு அப்புறமா அழவோ சிரிக்கவோ செய்…. அதுக்கு முன்னாடியே உன் கண்ணீரையெல்லாம் வீணாக்கிடாதே!…”

“அப்ப? உனக்கே தெரியறதில்லே, நான் அழத்தான் வேண்டி யிருக்கும்னு?!”

“அய்யோடா! ஒரு பேச்சுக்குச் சொன்னேன்மா. ரமணி நல்ல பையன். அவனுக்கு மாலாவை பிடிச்சிருந்தா எப்படியாவது சாதிச்சுடுவான். ஒரே பிள்ளை வேறே… பார்க்கலாம். எல்லாரும் இப்ப தூங்குங்க. மணி பன்னண்டரையாச்சு…”

…. கொஞ்ச நேரத்தில் பருவதத்தின் மெல்லிய குறட்டை ஒலி கேட்கலாயிற்று.

“மாலா! தூங்கிட்டியா?” என்று கோமதி அவளைத் தொட்டு வினவினாள்.

“இல்லேடி. என்ன கேக்கப் போறே?”

“சொல்லத்தாண்டி போறேன்…இன்னைக்குக் கோவில்ல எந்தப் பொண்ணுக்கும் நடக்கக் கூடாதது எனக்கு நடந்துடுத்துடி…”

“என்னடி சொல்றே?”

குரலைத் தாழ்த்திக்கொண்டு கோமதி அன்று நடந்தது பற்றி விவரிக்க, அதிர்ந்து போன மாலா தன் காதல் பற்றிய கவலையை ஓரங்கட்டினாள். தங்கைக்கு நேர்ந்து விட்ட கொடுமையை அவளால் தாங்க முடியாமல் போயிற்று. அவள் தன் கையை நீட்டி கோமதியின் தோள் மேல் போட்டுக்கொண்டாள். அவளையும் மீறி அவளுக்கு அழுகை பொங்கியது. கோமதியும் அழுதாள்.

“அழாதேடி, கோமதி. அம்மாவுக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேணாண்டி. சொல்லித்தான் தீரணும்கிற மாதிரி ஏதானும் இக்கட்டு நேர்ந்தா மட்டும் சொன்னாப் போதும்.”

“அய்யோ! உன் வாயால அப்படிச் சொல்லாதே…”

“நெருப்புன்னு சொன்னாலே நாக்கு வெசந்துடாதுடி, கோமதி. எல்லாத்தையும் பத்தி நாம யோசிச்சு வெச்சுக்கணும்தானே? அதான் சொல்றேன். அப்படி எதுவும் ஆகாது. ஆகக்கூடாதுன்றதுதான் என்னோடவும் பிரர்த்தனை…கவலைப்படாம தூங்குடி…” என்ற மாலா தன் கையை அகற்றிக்கொண்டு தானும் கண்களை மூடிக்கொண்டாள்.

ஆனால் அவளால் தூங்க முடியவில்லை. ‘கோவிலாச்சேன்னு கூடப் பார்க்காம இப்படியும் நடப்பாங்களா மனுஷங்க! சே…அப்படி ஒரு வெறியா!…’ எனும் நினைப்பே அவள் மனத்தில் சுற்றிச் சுற்றி வரலாயிற்று. வெகு நேரம் கழித்துத் தான் அவளால் கண்ணயர முடிந்தது.

…..வீட்டை யடைந்த பின் கொஞ்ச நேரம் போல் ஒரு புத்தகத்தின் சில பக்கங்களைப் படித்த சேதுரத்தினம் பிறகு படுக்கையை உதறிப் போட்டுக்கொண்டு படுத்தான். இன்னும் நான்கு நாளகள் கழித்துத் தான் மதுரைக்குத் தன் அலுவலக வேலையாகப் பயணிக்க வேண்டியது ஞாபகம் வர, இரண்டு நாள்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கோயமுத்தூர் போய்விட்டு அங்கிருந்தே மதுரைக்குப் போனால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.

மதுரையிலிருந்து திரும்பி வந்ததும், வத்தலப்பாளையத்துக்கும் அப்படியே போய் நாசூக்காக விசாரித்ததில் லலிதாவைப் பற்றி ரங்கனுக்கு வந்த அந்த மொட்டைக் கடிதம் அறவே பொய்யான சேதியைத் தாங்கியது என்று அவனிடம் சொல்லிவிட வேண்டியதுதான் என்று அவன் முடிவு செய்தான். தனக்குத் தெரிந்த உண்மையைச் சொன்னால் இருவர் வாழ்க்கையும் பாழாகி விடும். அதற்கு நான் காரணன் ஆகக்கூடாது. எல்லாருக்குமே ஓர் இறந்த காலம் இருக்கும்தான். அதைத் தோண்டக் கூடாது.. அப்படிப் பார்த்தால், இந்த ரங்கனுக்கு எப்படிப்பட்ட இறந்த காலம் இருக்கிறதோ! யாருக்குத் தெரியும்?….’

சிறிதே நேரத்தில் அவன் உறங்கிவிட்டான்.

….நல்ல உறக்கத்தில் இருந்த அவன் திடுக்கென்று விழித்துக்கொண்டான். கதவு இடைவிடாமல் தட்டப்பட்ட ஓசையில்தான் அவன் விழித்துக்கொண்டான். மின்தடையால் அழைப்பு மணி வேலை செய்யவில்லை. அவன் கைமின்விளக்கைப் பொருத்தி மணி பார்த்தான். அதிகாலை நான்கு மணி.

அவன் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

“தந்திங்க. ரொம்ப நேரமாக் கதவைத் தட்டிக்கிட்டு இருக்கேன்…”

அவன் சன்னல் வழியாகவே கையை நீட்டித் தாளில் கையெழுத்துப் போட்டுத் தந்தியைப் பரபரப்புடன் பெற்றுக்கொண்டு கைமின்விளக்கு வெளிச்சத்தில் அதைப் பிரித்தான்.

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *