வாழ்க்கை பற்றிய படம்

This entry is part 25 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஆங்கிலப் படம். பலரும் அருமை என்று கூறக் கேட்ட என் கணவர், எங்களையும் அதைப் பார்க்கச் செய்ய வேண்டும் என்று துடித்தார். ஞாயிறன்று மாலைக் காட்சி பார்க்க வேண்டும் என்று தயாரான போதும், மதியத் தூக்கத்தின் காரணமாகப் போக முடியாததால், நல்ல இனிய காற்றினை சுவாசிக்க நடைபயிலச் சென்ற போது, திடீரென முடிவு செய்து இரவு 10 மணி ஆட்டத்திற்குச் சென்றோம். மிகச் சிலரே அரங்கில் இருந்தோம்.

படம் ஆரம்பிக்கும் முன்பே சென்று விட்டதால், குழந்தைகள் சற்றே பொறுமையற்று இருந்தனர். படம் போட்டதும், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம். பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இனிய தமிழ்ப் பாடல். ஒரு மரத்தடிப் பிள்ளையார் என்று படம் ஆரம்பம் ஆனது. 1970களின் பாண்டிச்சேரியும், கதையின் நாயகனின் பள்ளி வாழ்க்கையும், உலகம் முழுதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் படத்தில் வருவது, சற்றே பெருமிதம் கொள்ள வைத்தது.

லைஃப் ஆப் பை, பையின் வாழ்க்கை என்ற படம், கதை நாயகனான பை மூலமாக கடலில் கவிழ்ந்த கப்பல் விபத்திலிருந்து தப்பித்ததைக் கதையாகச் சொல்லப்படும் படம். ஆசியாவின் ஒரே ஆஸ்கர் இயக்குநரான அங் லீ, தைவானில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்து, பல அருமையான படங்களை செய்த பின், யான் மார்டல் 2001ல் எழுதிய இந்தக் கதையை படமாக்க எண்ணி, வேலையைத் தொடங்கியது ஜனவரி 2011. இந்தியாவில் விண்ணப்பித்திருந்த 3000 பேர்களில், முத்தான கதாநாயகனாக சூரஜ் சர்மாவைத் தேர்ந்தெடுத்தார். பல்வேறு பருவத்திற்கு பல்வேறு ஆட்களைக் காட்டுவதால் பையாக மட்டுமே நால்வர்.

கனடா நாட்டில் வாழ்ந்து வரும் பை ஒரு கதாசிரியருக்குத் தன் கதையைச் சொல்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கடவுள் மேல் நம்பிக்கை கொள்ள அவனது கதை உதவும் என்று பையின் மாமா கூறியதால் கதாசிரியர் பையைக் காண வருகிறார். உணவை பரிமாறி, உண்டு கொண்டே கதை சொல்லப்படுகிறது.

பாண்டிச்சேரியில் வாழும் மிருகக்காட்சி சாலை வைத்திருப்பவரின் மகனாக வாழும் பை, தான் கடவுளைப் பற்றி எப்படி தெரிந்து கொண்டான் என்பதை விளக்குவது அருமை. முதலில் இந்துக் கடவுளான கிருஷ்ணர், பிறகு ஏசு, பின் அல்லாவை அவன் எப்படி அறிந்து கொண்டான் என்பதை விளக்குகிறான். குழந்தையாக அனைத்து மதத்தையும் விரும்பும் அவனுக்கு, அவன் தந்தை எடுத்துக் கூறும் விளக்கம், புலியை அருகில் காண விரும்பிய மகன் செய்த தீரமான செயலை, தவறென உணர்த்த கற்பிக்கும் பாடம், அனைத்தும் மகனுக்கு தந்தை எப்படி அறிவுரையால் புரிய வைக்க முடியும் என்று விளக்குகிறது.

கப்பல் மூழ்கிய பின் தப்பிக்கும் பை தன்னுடன் இருக்கும் வரிக்குதிரை, மனிதக்குரங்கு, கழுதைப் புலி, வங்காளப் புலி ஆகியவற்றுடன் செய்யும் சாகசங்கள் தான் கதையின் முக்கியம்சம். முப்பரிமாணத்தில் படத்தைக் காணும் போது, நாமே கடலில் சிக்கி, சாகசங்கள் செய்வது போன்ற உணர்வு. சில விஷயங்கள் சற்றே மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், வரைகலை அருமையிலும் அருமை.

இந்தப் படம் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கத் தக்க வகையில் உள்ளது. குழந்தைகளுக்கு விலங்குகளுடன் பையின் அனுபவங்கள் பிடிக்கும். பெரியவர்கள் கடவுள் நம்பிக்கைப் பற்றிக் கூறும் செய்திகள் அசை போட வைக்கும்.
சிறுவன் பை, நீச்சலை விரும்பும் மாமாவிற்குப் பிடித்த பிரான்சில் இருக்கும் நீச்சல் குளத்தின் பெயரான பிசின் மாலிடர் படேல் என்று பெயர் பெறுகிறான். புpசின் என்று சொல்லை சிறுநீர் கழிப்பதுடன் ஒப்பிட்டு, மற்ற மாணவர்கள் கேலி செய்வதைத் தவிர்க்க, சிறுவன் கணிதத்தில் வரும் பை என்ற எழுத்துதான் தன் பெயர் என்று பள்ளியில் தன் பெயருக்கு அர்த்தம் காட்டுகிறான். மிருகக்காட்சி சாலை வைத்திருக்கும் தந்தை, மகன், தனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துக் கடவுளையும் விரும்பி, கடவுள் நம்பிக்கை கொண்டு செயல்படுவதைக் கண்டு அறிவுரை கூறுகிறார். பூங்காவில் இருக்கும் புலியைப் பக்கத்தில் காண விரும்பும் சிறுவன் பை, அதற்கு மாமிசத்தை தன் கைகளால் தர முயல்கிறான். கடைசி நேரத்தில் அதைத் தடுத்து, புலியின் குணத்தை விளக்க, ஒரு ஆட்டை கதவருகே கட்டி, அதை புலி எப்படி அடித்துத் தின்கிறது என்று காட்டுகிறார்.

பாண்டிச்சேரியில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதும், மிருகக்காட்சி சாலையை மேலும் நடத்த முடியாது என்பதை உணர்ந்து, அதிலிருக்கும் விலங்குகளை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்க கப்பலில் புறப்படுகின்றார்கள். அப்போது, கடலில் வரும் புயல் காரணமாக, கப்பல் கவிழ நேர்கிறது. புயல் சத்தத்தைக் கேட்டு, வெளியில் அதைக் காண, எதேட்சையாக வெளியே வரும் பை, ஆச்சரியகரமாக அந்த விபத்திலிருந்து தப்பிக்கிறான். படகில் ஏறிய போது, வரிக்குதிரை அதில் விழுகிறது. கழுதைபுலியும் புலியும் படகில் இருக்கின்றன. சற்றே புயல் தணியும் போது, மனிதக்குரங்கு வாழைப்பழத் தார் மூட்டையின் உதவியுடன் தப்பித்து படகருகே வருகிறது. பை அதைக் காப்பாற்றுகிறான்.

விலங்குகளின் குணங்களை அறிந்து பை, படகின் ஒரு நுனியில் தொங்கிக் கொண்டே தன் உயிரை காப்பாற்றிக் கொள்கிறான். கழுதைப்புலி பசி வந்ததும், வரிக்குதிரையை அடிக்கிறது. பிறகு மனிதக்குரங்கையும் கொல்கிறது. கோபம் கொண்ட பை, கழுதைப்புலியைக் கொல்கிறான். இறுதியில் புலியும் அவனும் படகில். புலியிடமிருந்து தப்பிக்கும் அதே தருணத்தில், அதையும் கவனித்தும் கொள்கிறான். படகின் நுனியில் கயிற்றைக் கொண்டு, சிறு தோனியைச் செய்து கொண்டு மிதக்கிறான். மழை நீரைக் குடித்தும், சைவமாக இருக்கும் அவன், மீன்களை உண்டு பழகுகிறான். புலிக்கும் மீன்களை உணவாகக் கொடுத்து அதன் உயிரைக் காக்கிறான். தன் அனுபவங்களை எழுதிக் கொண்டே நாட்களைக் கழிக்கிறான். கடந்த நாட்களை கோடு போட்டு எண்ணிக் கொண்டே கழிக்கிறான்.

மறுபடியும் புயல் வர, முயன்று தப்பிக்கிறான். கடைசியில் ஒரு தீவிற்கு வந்து சேர்கிறான். காலையில் அருமையாக இருக்கும் தீவு, இரவில் இரசாயன மாற்றத்தால் உயிர்கள் கொல்லப்படுவதை அறிந்ததும், அந்த இடத்தை விட்டு அகல்கிறான். அந்தத் தீவை வெகு தொலைவிலிருந்து பார்க்கும் போது பார்க்கடலில் படுத்திருக்கும் விஷ்ணுவைக் போன்று ஒரு நொடி காட்டி, கடவுள் அவனைக் காப்பாற்றுகிறார் என்று காட்டுகிறார் இயக்குநர். ஒரு கப்பல் தூரமாகத் தெரிந்ததும், தான் இருப்பதை உணர்த்த பல உத்திகளை செய்து பார்க்கிறான். பயன் அளிக்காது, சோர்வுறுகிறான். இறுதியில் 227 நாட்கள் கடல் வாழ்க்கைக்குப் பிறகு, மெக்சிகோ கரையோரம் ஒதுங்குகிறான்.

உயிர் பிழைத்த புலி காட்டைப் பார்த்ததும் சென்று மறைகிறது. அதன் பிரிவைத் தாங்காமல் அழுகிறான். பை தப்பிதத்தைக் கேள்விப்பட்டு, கப்பல் எப்படி கவிழ்ந்தது, பை எப்படி தப்பினான் என்று கேட்க நேரில் வந்து சந்திக்கின்றனர் ஜப்பானியக் கப்பல் நிர்வாகத்தார். இந்தக் கதையை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் பை, விலங்குகளை, வரிக்குதிரையை சைவ உணவை உண்ணும் புத்த மத நண்பனாகவும், கழுதைப்புலியை சமையல்காரனாகவும், மனிதக்குரங்கை தாயாகவும், புலியைத் தானாகவும் உருவகப்படுத்திக் கதை சொல்கிறான். அதையும் அவர்கள் முழுமையாக நம்பவில்லை என்பதையும் கூறுகிறான்.

கதையைக் கேட்கும் கதாசிரியர், பையின் குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு அதைக் கதையாக எழுதச் செல்கிறார் என்று கதை முடிகிறது.

பன்னிரண்டு மணியான போதும் ஒருவர் முகத்திலும் தூக்கக் கலக்கம் இல்லாதது பட இயக்கத்தின் தன்மையை விளக்கும்.
முழுமையான முப்பரிமாணத்தில் இந்தப் படத்தைப் பார்த்த பின் கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி ஆள் மனத்தில் நிச்சயம் ஒரு கேள்வியை எழுப்பும்.

——————

Series Navigationஅக்னிப்பிரவேசம் – 15டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

5 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    லைஃப் ஆஃப் பை நாவல் முன்பே தெரியுமாதலால் நானும் திரைப் படத்தைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் பார்க்க்கும் பார்வை எப்படியெல்லாம் வேறுபடுகிறது! எனது திரைப் பட மதிப்பீடு வரும் ஜனவரி 2013 ஆழம் மாத இதழில் வெளியாகிறது. வெளியானபின் பரவலான கவனத்திற்காக மறு பிரசுரம் வேண்டி திண்ணைக்கு அனுப்புகிறேன். திண்ணை ஆசிரியர் குழு பிரசுரிக்கத் தகுதி வாய்ந்தது எனக் கருதினால் பிரசுரிக்கும் என நம்புகிறேன்.
    இத்திரைப்படமோ நாவலோ கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியையா எழுப்புகிறது? அப்படித் தோன்றினால் அது மேலெழுந்தவாரியான பார்வையாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
    ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம், யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் தேனக் யக்தேன புஞ்ஜீதா மா க்ருத கஸ்யஸ்வித் தனம் என்ற ஈசா வாஸ்ய உபநிஷத்தின் முதல் வாக்கியத்தை இத்திரைப் படம் சொல்வதாகவே கருதுகிறேன். இப்பிரபஞ்சம் இறைச் சக்தியால் பொதிந்துகொள்ளப்பட்டிருக்கிறது, இதில் உள்ள யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை ஆகையால் எதையும் தனதெனக் கொள்ளாமல் அனுபவிப்பாயாக என்பது இந்த வாக்கியத்தின் பொருள்.
    -மலர்மன்னன்

  2. Avatar
    punaipeyaril says:

    பயத்தின் வெளிப்பாடே கடவுள். கடவுள் இருந்திருந்தால் தாலிபான்களும், டில்லி காமப் பிசாசுகளும் அழிவுகளை ஆராதித்து கொண்டாட மாட்டார்கள்

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    http://jayabarathan.wordpress.com/is-there-a-fate
    [ஊழிற் பெரு வலி யாதுள ?]

    பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளிமந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே எழுதப் பட்டு வரிகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன்.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான முடிவில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது, தானாகச் செம்மைப் படுத்துகிறது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.

    சி. ஜெயபாரதன்.

  4. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ ஜயபாரதன், இந்த விஷயத்தில் நாம் ஒன்றுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    -மலர்மன்னன்

  5. Avatar
    ஷாலி says:

    //பயத்தின் வெளிப்பாடே கடவுள்.கடவுள் இருந்திருந்தால் தலிபான்களும்,டில்லி காமப்பிசாசுகளும் அழிவுகளை ஆராதித்துக் கொண்டாட மாட்டார்கள்.// இல்லை நண்பரே! கடவுள் பயம் இல்லாதவர்களே இப்படி அழிவுகளை ஆராதிக்கிறார்கள். அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும். ஏன்? கடவுள் உடனுக்குடன் தீர்ப்பளிப்பதில்லை?
    “மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) இறைவன் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு (மனித) உயிரையும் விட்டு வைக்க மாட்டான்.ஆயினும்,அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரையிலும் விட்டு வைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக்கொள்வான்.) இறைவன் தன் அடியார்களை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். –அல்குர் ஆன்.35:45.

Leave a Reply to மலர்மன்னன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *