வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1

This entry is part 18 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சீதாலட்சுமி

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு ..-

வாழ்வியலின் வழிகாட்டி

—————————————————-

எட்டயபுரத்தில் பெருமாள் கோயிலுக்கருகிலுள்ள தெருவில் ஓர் சிறிய வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருவர் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். காலைப் பொழுது. கிணற்றை யொட்டி ஓர் முருங்கை மரம், தள்ளி ஓர் வேப்பமரம், சில காட்டுச் செடிகள். சுற்றி வந்த கண்களுக்கு அக்காட்சி நிறைவைக் கொடுக்கவில்லை. வானத்தைப் பார்த்தார்.

காணி நிலம் வேண்டும். பத்து பதினைந்து தென்னை மரங்களாவது இருக்க வேண்டும். அவர் கற்பனையில் காட்சி விரிந்தது. முகத்தில் புன்னகை. கற்பனை உலகத்திலிருந்த அவரை இவ்வுலகுக்கு அழைத்து வந்தது ஓர் சத்தம். திரும்பிப் பார்த்தார்

அங்கே ஒருத்தி நின்று கொண்டிருந்தாள் அவள் முகத்தில் ஆத்திரம் தெரிந்தது. ஆனால் அவருக்கோ மகிழ்ச்சி தோன்றியது

என்னைத் தெரிகின்றதா? வந்தவள் கேட்டாள்

உன்னை உருவாக்கியவனே நான்தானே

அதனால்தான் உம்மீது ஓர் வழக்கு தொடுக்க வந்திருக்கின்றேன்

வழக்கா? சொல். அவர் முகத்தில் புன்னகை மாறவில்லை

“நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கு” இது உமது பாட்டு அப்படி ஓர் பெண்ணிருந்தால் அவளிடம் நளினம் இருக்குமா?

நளினம் எதற்கு? ஆணுக்கு விருந்துக்காக மட்டுமா பெண் பிறவி?

அச்சம், நாணத்தை நாய்களுக்குப் போடச் சொன்னீர்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நான்கையும் எறிந்துவிட்ட என்னை ஒருவரும் பெண்ணாகவே பார்க்கவில்லை

அவர் சிரித்தார்

இதுதான் உன் குறையா? உன்னுடன் பழகவே ஆண்களுக்குப் பிடிக்கவில்லையா?

அவரது கேள்வியால் அவளின் ஸ்ருதி குறைந்தது

பழகினார்கள். எல்லோரூம் என்னிடம் , “ உன்னுடன் பழகும் பொழுது ஒரு பெண்ணுடன் பழகுவது போல் இல்லை. ஆணிடம் பழகுகிற மாதிரிதான் இருக்கின்றது.” என்று சொல்வார்கள்.

மீண்டும் அவர் சிரித்தார். பின்னர் அவள் கேள்விக்குப் பதிலளித்தார்.

அதனால் அவர்கள் ஓடி விட்டார்களா? அவனுக்கு நீ ஏன் பெண்ணாகத் தெரிய வேண்டும்? .. தோழமைக்கு ஆண் என்ன, பெண் என்ன, அதிலுமா இன வேறுபாடு? உனக்குத்தான் ஆன்மீக உலகம் முதல் அரசியல் உலகம் வரை, பாமரன் முதல் பத்திரிகை உலகம் வரை கணக்கற்ற நண்பர்கள் இருக்கின்றார்கள். இந்த மானுட உலகத்தில் அச்சமில்லா ஒருத்தியாய் ஆனதற்கு யார் காரணம்? இந்த வீட்டில் குடியிருக்கச் சிறுமியாய் வந்தாய். உனக்குத் தாலாட்டுப் பாட்டு வரிகளே என் பாடல்கள்தானே? சமுதாயத்தின் சவால்களை எப்படி நீ வீரத்துடன் எதிர்கொண்டாய்? உன்னை இப்படி புரட்சிப் பெண்ணாக்கிய என் மீது வழக்கா? இருந்தாலும் உன் தைரியத்தை மெச்சு கின்றேன். உன் கடைசி மூச்சு இருக்கும் வரை இந்த மண்ணுக்கு கடமையைச் செய்

கட்டளையிட்ட பாரதி பறந்துவிட்டான்

ஓர் அதிர்வு.

கனவிலிருந்து விழித்தேன். இத்தனையும் நெட்டைக் கனவுதானா? குதித்துக் கொண்டிருந்த மனக் குரங்கைக் குட்டி அடக்கினேன். படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. திரும்பிப் படுக்க்க் கூட முடியவில்லை. மரத்துப் போன கால்களுடன் மன்றாடினேன். இது முதுமையின் கொடுமையா? இல்லை. விபத்துக்களின் விளையாட்டில் அடிபட்ட உடல்.

கண்ணகிக் கோட்டம் காண தேக்கடி சென்றிருந்தேன். திரும்பி வரும் பொழுது நான் ஏறியிருந்த ஜீப் மலையில் ஒருபக்கம் மோதி உருண்டது. உருண்ட வண்டி இன்னொரு பாறைக் கல்லில் மோதியதால் மேலும் உருளாமல் நின்றுவிட்டது. மேலும் உருண்டிருந்தால் தேக்கடி மலையிலே சமாதியாகி இருப்பேன்..

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அமெரிக்காவில் இருந்த மகன் வீடும் இந்தியாவும் மாறி மாறி நான் வாழுமிடமாயிற்று. 5 வருடங்களுக்கு முன்னால் கீழே விழுந்து வலது கை மணிக்கட்டு எலும்பு முறிந்தது. அடுத்த வருடமே மீண்டும் விழுந்து இடது தோள் மூட்டு கழன்று அறுவை சிகிச்சை நடந்தது. கட்டுப் பிரிக்கு முன் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தேன். லண்டனில் தானே இயங்கும் படியில் போய்க் கொண்டிருக்கும் பொழுது அதிலே சாய்ந்து விழுந்தேன். உடன் வந்து கொண்டிருந்த பேரன் கையைப் பிடித்துக் கொண்டதால் முழுவ்தும் உருண்டு விழவில்லை. உடன் வந்தவர்களால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. சாய்ந்த நிலையில் உட்கார்ந்து சென்றதால் இடுப்பிற்குக் கீழ் பலமான அடிகள். எப்படியோ இந்தியா கொண்டுவந்து ஆயுர்வேத சிகிச்சை செய்ததால் ஓரளவு சரியானாலும் முடமானேன்.

சென்னை நந்தவனத்திலிருந்த என் அலுவலக்க் கட்டடத்தில் எனக்கு ஆறாவது மாடியில் அறை. கீழே லிப்ட் உண்டு. நான் வரும் நேரம் அது மேலே போயிருந்தால் வரும் வரை காத்திருக்கமாட்டேன். ஆறாவது மாடிக்குப் படி ஏறிப் போய்விடுவேன். என் வாழ்க்கைப் பயணத்தில் வரப்புகளில், மேடு பள்ளங்களில், மலைகளில் அயராமல் ஓடித் திரிந்தவள். இன்று ஒரு படி ஏற வேண்டுமென்றால் பிறர் உதவி வேண்டும். எனக்கு வயது ஒன்றும் அதிகமாகவிட வில்லை. இப்பொழுதும் இளமை குன்றாதவள்தான். என் வயது 77 தான்! என்ன சிரிக்கின்றீர்கள்? உடலுக்கு முதுமை வரலாம். ஆனால் உள்ளம் என்றும் இளமை சக்தியுடன் இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு சென்னைக்குச் சென்ற பொழுதுகூட வரலாற்றுப் பயணங்கள் சென்றேன். என்னுடன் பல இளைஞர்கள் வந்தனர். என்னுடன் வர இளைஞர்கள் தயங்கமாட்டார்கள். போரடிக்க வில்லை என்பார்கள். அத்தனை உற்சாகத்துடன் சுற்றுவோம். மேடு ஏறும் பொழுது மட்டும் பிடித்துக் கொள்வார்கள். எத்தனை இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றேன். ! என் நண்பர்களைச் சந்திக்காமல் வர முடியுமா? அமெரிக்கா திரும்பியவுடன் முதலில் சலிப்பு தோன்றியது. படிப்பது, எழுதுவது நின்றது. முதுமையின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டுவிட்டேனோ என்ற திகைப்பு !. எண்ணங்கள் வலுக்க மனச் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் பயன்தான் இப்படி உருண்டு கொண்டிருக்கின்றேன்

நான் எழ வேண்டும். மீண்டும் எழுத வேண்டும். அதுவும் பல நண்பர்கள் பல ஆண்டுகளாக என்னை எழுதச் சொல்லுவதை எழுதியே ஆக வேண்டும். சில வரலாற்று உண்மைகள் பதியப்பட வேண்டும். இந்த நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகள் பலவற்றுடன் நேரிடையாகச் சம்பந்தப்பட்டவள்.

வரலாறு என்பது உண்மைகளின் தொகுப்பு. ஆனால் சரித்திரம் சரிவதும், நிறம் மாறுவதும் அவ்வப்பொழுது நிகழ்வதுதான். ஆனால் முற்றிலும் மாறவோ அல்லது அழிவதோ கூடாது. வளமான வாழ்க்கைக்கு, வளர்ச்சிக்கு வேர்கள் தெரிந்திருக்கவேண்டும்.

இலக்கிய வரலாற்றில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு மாறுதல் மனத்திற்குத் தெம்பைக் கொடுக்கின்றது. இதிகாசம், காப்பியம் தொடங்கி சிறுகதையாகி புதுக்கவிதை காலம் வந்துவிட்டது. அத்துடன் நிற்கவில்லை. பலரும் தங்கள் நினைவுகளைப் பதிய ஆரம்பித்துவிட்டார்கள். கணினியுகத்தில் நாம் பெற்ற பெரும் வாய்ப்பு.! யார் எழுதினாலும் இந்த அனுபவங்களைத் தொகுத்து ஓர் பெட்டகத்தில் சேமித்துவையுங்கள் .எழுதப்பட்டிருக்கும் வரலாறுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் காலம் வரும். உண்மைகளை உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கும்

.பொய்களுக்குக் கவர்ச்சி அதிகம். மூளைச் சலவை செய்யப்படுவதை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு வியாதி வரும் முன் தடுப்பூசி போட்டு தடுக்கலாம். வியாதியைப்பற்றி தெரிந்திருக்காவிட்டால் தடுப்பைப்பற்றி எண்ணுவோமா.?

சுனாமி போல் மனிதனிடம் வேகமாக மாறிவரும் மாற்றங்கள் சமுதாயத்திற்கு நல்லதல்ல. காடுகளில் விலங்குகளுடன் வாழ்ந்த மனிதன் பல்லாயிரக்கான ஆண்டுகளுக்குப் பின் தனக்கென்று சமுதாயத்தையும் சில கட்டமைப்பு களையும் அமைத்துக் கொண்டான். மாறுதல் இயற்கை. அதையும் இலக்கணமாக்கி இருக்கின்றோம். மாறுதலால் அழிவு வரக் கூடாது. நமக்கு விழிப்புணர்வு வேண்டும். அதற்கு வரலாறு எழுதுவது மட்டுமல்ல, தங்கள் அனுபவங்கள், தெரிந்த உண்மைகள் பதியப்பட வேண்டும். சில நேரங்களீல் பொய் கூட உண்மையின் போர்வை போத்திக்கொண்டு வரும் தவிர்க்க இயலாது. ஆனால் உண்மைக்குச் சக்தி அதிகம். ஒரு நாள் வீறுகொண்டு எழும்

புரட்சிப்பெண், என்று என்னைப் பற்றி பாரதி கூறூவதாக எழுதியிருப்பது சிறிது மிகைப்படுத்தலே. ஆனால் என்னைப் பற்றி பலர் செய்த விமர்சனத்தின் எதிரொலிதான் இது. இத்தொடரில் அக்காட்சியும் வரும்.

நம்மிடையே ஒரு விழா,

ஒரு விரதம் உண்டு.

தீமிதிப்பு

அம்மனுக்கு வேண்டிக் கொண்டு விரதம் இருந்து ஒரு நாள் தீமிதிப்பார்கள். இதனை மூடப்பழக்கம் என்று சொன்னவர்கள் கடவுள் நினைப்பில்லாமல் தீமிதிப்பு நடத்திக் காட்டியதும் உண்டு.

ஓர் இலக்கில் மனத்தை நிறுத்தி உறுதிப்பாட்டுடன் ஒரு செயல் செய்யும் பொழுது அவன் ஆழ்மனச் சக்தி அவனை வழி நடத்தும். முன்னவன் கடவுளை எண்ணினான் பின்னவன் கொள்கையை மனத்தில் நிறுத்தினான். அதனால் இருவருக்கும் முடிந்தது. இந்தத் தீமிதிப்பு தூரம் சிறியது. பாதிப்பு வர வாய்ப்பு குறைவு

நான் கடந்துவந்த பாதையில் பல தீமிதிப்புதான். எனக்குக் கிடைத்த வழிகாட்டிகளும் வழித்துணைகளும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருப் பவர்கள். என்னுடைய சக்தியே அவர்கள்தான். ஒரு பெண்ணின் பயணம் பார்க்கப் போகின்றீர்கள். இது கதையல்ல. அத்தனையும் நிஜம். இதன் பாத்திரங்கள் நாம் எல்லோரும்தான்

இது ஒரு சத்திய சோதனை என்று தெரியும். விமர்சனக் கணைகள் வந்து தாக்கும். பரவாயில்லை. விருதுக்கோ விமர்சனங்களுக்கோ பாதிக்கப்படாத நிலைக்குச் சென்று விட்டேன். இது முடியும் வரை நான் உயிருடன் இருக்க வேண்டும். அதுவே என் விருப்பம். நமது மண்ணின் வரலாற்றிற்கு நான் அளிக்கும் சிறுகாணிக்கை இது

வாழ்வியல் வரலாறு ஓர் ஆழ்கடல். நான் வாழ்ந்த காலத்தில் கண்ட, வாழ்வியலில் சில பகுதிகளில்.முக்கியமானவைகளை மட்டும் எழுத விரும்புகின்றேன். போராட்டகளம் மட்டுமல்ல, பல சுவையான காட்சிகளூம் காணலாம்

எழுதும் எண்ணம் வந்து விட்டது. சக்தி வேண்டுமே?! எழுந்து உட்கார்ந்தேன். என் வீட்டின் நீச்சல் குளம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். ப்ளோரிடா மாநிலத்தில், ஓர்லாண்டோவில் இருக்கும் பெருமபாலான வீடுகளிலும் நீச்சல் குளம் இருக்கும். குளத்தைச் சுற்றி மரம், செடி, கொடிகள்.. இயற்கையின் எழில் கண்டால். சக்தி பிறக்கும் என்ற நம்பிக்கை.

எல்லோரிடமும் ஓர் வேண்டுகோள். என்னைப் புரிந்து கொள்ள இது ஓர் அறிமுகம். எல்லோரும் ஓர் முறை படிக்க வேண்டுகின்றேன். இலக்கிய வாதிகளாயினும், சிந்தனைச் சிற்பிகளாயினும் எல்லோரும் மனிதர்களே. நம் கதையைச் சொல்லப் போகின்றேன். நம் கடமைகளீல் மூழ்கி இருக்க நம்மைச் சுற்றி நடப்பவைகள் நம் கவனத்திற்கு வராமல் போவதுண்டு. எனவேதான் இந்த வேண்டுதல் கண்ணாடிக்கு முன் நின்றால் நம் உருவம் தெரியும். இதனைப் படிக்கும் பொழுதும் நம்மை நாம் பார்க்கலாம்

நாம் சேர்ந்து பயணம் செய்யப் போகின்றோம்

“உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.உண்மை மீது பிடிப்புள்ளவர்களாக இருங்கள். உண்மை நிச்சயம் வெற்றி பெறும். உண்மையையும் அன்பையும் தூய உள்ளத்தையும் எதுவும் எதிர்த்து நிற்க முடியாது. உண்மையானவர்களாக இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை” _ _ _ விவேகானந்தர்

(பயணம் தொடரும்)

Series Navigationபழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்
author

சீதாலட்சுமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    அன்புள்ள சீதாம்மா….
    உங்கள் இலக்கியக் கட்டுரை திண்ணையில் பார்த்ததும்..படித்ததும்….ஆஹா…என உள்ளம் துள்ளியது.
    மெல்லிய அதிர்வோடு ஆரம்பமே அனுபவ நிஜங்களோடு ஆரம்பித்திருக்கிறீர்கள்….உங்கள் அன்பவங்கள்
    ஒவ்வொன்றும் நாங்கள் தேடினாலும் கிடைக்காத பாடங்கள்….!அருமைப் பதிவுகளை படிக்கும் ஆவல் இனி வாரா வாரம் எனக்கு தங்களின் எழுத்து விருந்து.தங்களின் படைப்புகள் தங்களின் மனஇலக்கை அடைய வேண்டும் என அனைவரோடு கூடி நானும் வேண்டிக்கொள்கிறேன்.
    தெய்வப் புலவர் திருவள்ளுவர் இல் ஆரம்பித்து….மகாகவி பாரதியாரோடு கூட நடந்து .விவேகானந்தரோடு கை குலுக்கி இருக்கிறீர்கள்…!
    வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்……! தங்களின் அனுபவக் கடலில் அள்ளிக் கொடுக்கும் நல்முத்துக்கள்….!
    அள்ளிக் கொள்ளக் காத்திருக்கும்…
    தங்களின் அன்பு ரசிகை..
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் சீதாம்மா,

    நாகரீகம் என்ற பெயரில் கட்டற்று காட்டாற்று வெள்ளமாக இலக்கில்லாமால் அலை பாயும் இளம் உள்ளங்கள் வாசிக்க வேண்டிய அருமையான கட்டுரை. பாரதியும், வள்ளுவனும் உடன் வர அழகாக பாதையமைத்தமை பாராட்டிற்குரியது. தொடருங்கள். வாழ்த்துகள்.

Leave a Reply to jayashree shankar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *