வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43

This entry is part 8 of 32 in the series 3 பிப்ரவரி 2013

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற.

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

நினைக்காமல் இருப்பதுமில்லை

மனித மனத்தின் ஊஞ்சலாட்டம்

இருப்பது ஒரு மனம். ஆனால் கேட்பது பல குரல்கள்

செய் என்று சொல்லும் மனத்தை இழுத்துப் பிடித்து பின்னே இழுக்கின்றது. இன்னொரு மனம்

ஆமாம் நமக்கு ஒரு மனம்தானே இருக்கின்றது !

யானையைக் கூட அடக்கி விடலாம் ஆனால் இந்த மனத்தை அடக்க நமக்கு வலிமை இல்லையே!

வாழ்க்கை பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. எல்லாம் எழுத்தில் கொண்டு வந்து அலசுவதற்கும் காலம் போதாது. முக்கியமான பிரச்சனைகளை மட்டும் எடுத்துப் பார்க்க வேண்டிய நிலை. ஆலமரமாய் வளர்ந்து கொண்டிருந்த ஓர் அமைப்பு, அதுவும் பெண்ணின் நிலை உயர, ஆதரவற்றவர்களுக்குப் புனர் வாழ்வு இல்லமாய் வளர்ந்த ஓர் கட்டடம் விழ இருந்தது. அது காப்பாற்றப் பட்டதும், அதற்குக் கிடைத்த உதவிக்கரமும் வரலாற்றில் பதியப்பட வேண்டியவைகள். என் பணிக்களம். என் கடமையை உணர்ந்து தகுந்த நேரத்தில் செயல்பட்டதால் சோதனை நீங்கியது. சமூக நலப் பணி புரிய எண்ணுபவர்கள் எவருக்கும் இச்செய்தி தெரிந்திருக்க வேண்டும். கண்ணீர் விட்டுக் காத்த பயிர். அதனைச் செவ்வனே காக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணிற்கும் கடமையாயிற்று.

என் கடமை முடித்து ஓய நினைத்த பொழுது ஓர் அதிர்ச்சி. ஏதோ ஓர் நகரில் நடந்த பாலியல் வன்முறை மட்டுமல்ல, “அது என்று நடக்கவில்லை, இன்று புதியதைப் போல் பார்க்க?” என்னைப் பதறவைத்தது 17 வயது பையனின் கொடூரச் செயல். அவன் அப்படி நடந்து கொண்டதற்குக் காரணம் யார்? அவனை அத்தகைய அரக்கனாக்கியது எது? அபாய அறிகுறி. எல்லோரும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம். ஆனால் நம்மால் முடியுமா? நம்மைத் தடுப்பது எது? மனிதன் வளர்ச்சியில் வேகமாக ஏறிக் கொண்டிருந்தவன் வழுக்கி விழ ஆரம்பித்து விட்டானே அதுவும் வேகமாக.. விழப்போகும் இடமோ புதைச் சேறு. எழுத்தை முடிக்க இருந்தவளை முடுக்கிவிட்டது இந்த அதிர்ச்சிதான். ஆம் தொடர் தொடரப் படவேண்டும். வாழ்வியலில் வரலாறு முடியவில்லை. முக்கியமான பகுதிகளை அலச வேண்டும். பிரச்சனைகளில் முக்கியமானவற்றைப் பார்த்து விஷக் கடிகளுக்கு மாற்று மருந்து காண வேண்டும். ஆழ்மனச் சக்தியில் உயிர்ப்பைக் உணர்ந்தேன். வேறு சில பக்கங்களையும் நாம் பார்த்தாக வேண்டும். இன்று யாருக்கும் அமைதி கிடையாது.

ஞானம் என்றல் அறிவு.

அஞ்ஞானம் என்றால் அறியாமை.

விஞ்ஞானம் என்றால் விண்ணைத் தொடுமளவில் நுண்ணிய அறிவு.

மெஞ்ஞானம் என்பது அதனிலும் உயர்ந்தது. அது தெளிந்த அறிவு.

சொர்க்க வாசலுக்குப் போகும் வழிகளைப் பற்றிப் பேசவில்லை. சொர்க்கம், நரகம் என்று இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது. அப்படி இருந்தாலும் நான் நரகத்திறகுப் போகவே விரும்புகின்றேன். முட்டாள் தனமாக வாழ்ந்து துன்பச் சுழலில் தவிப்பவர்களுக்கு ஏதாவது ஆறுதலாவது ஒடுக்க முடிந்தால் அதைச் செய்வேன். நானும் நரகத்தில் இருந்தால் எனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ. ? எனவே இடும் ஓலம் கூட மற்றவர்களுக்கு இதமாக இருக்க முயற்சிப்பேன்.

தேடல் என்பது எளிதல்ல. தெரிந்தால் மட்டும் போதாது. தெளிவாகப் புரிதலும் அறிதலும் முக்கியம். அதுவே மெஞ்ஞானம்.

தற்காலம் ஓர் அவசர யுகம். எதிலும் அவசரம். நுனிப்புல் மேய்தல் போல் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு ஓடுகின்றோம். மேலும் விருப்பும் வெறுப்பும் நம்மை விளையாட்டுப் பதுமையாக ஆக்கிவிட்டது .இந்த சமுதாயச் சறுக்கல்களுக்கு நம்முடைய தள்ளாட்டம் முக்கிய காரணம்.

நான் எழுத்தாளரல்ல. ஆனால் சமூக மருத்துவர். எதைப் படித்தாலும் எங்கு சென்றாலும் என் தேடல் பல கோணங்களில் அமைந்தாலும் அது மானுட வியலைச் சுற்றிவரும்.

நான் இறை நம்பிக்கையுள்ளவள். அவர் எனக்கு நிறைய வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தார். என்னைப் பற்றிய பல தகவல்கள் இறுதியில் தருவேன். பன்னாட்டு அமைப்பில் சேர வைத்தது காலம். எங்கள் குழுவில் நாங்கள் பன்னிரண்டு பேர்கள். பல நாட்டவர்கள். எனக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதி கொடுத்திருந்திருந்தார்கள்.

எங்கள் அமைப்பில் உலகை நான்கு பாகங்களாகப் பிரித்திருந்தனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவும் பசிபிக் பகுதியும், அமெரிக்கா பகுதிகளும் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகுதி மாநாடு நடக்கும். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பிரதிநிதிகள் வருவார்கள். அத்தனை பேர்களும் பெண்கள். அவரவர் நாட்டுப் பிரச்சனைகளை அங்கே கூறுவார்கள். பல நாடுகள் சென்று நேரில் பார்த்த்த்துடன் உலகின் எல்லாப் பகுதிகளின் வாழ்வியலைப் பற்றியும் அறியும் அரிய வாய்பு இதனால் கிடைத்தது. அந்த தகவல்களைப் பின்னால் கூறுவேன்.

நான் ஓர் வரலற்றுப் பிச்சி. ஏழு வயது முதல் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தவள். இரவு ஒரு மணி வரை படிப்பேன். முதலில் கல்கியின் கதையில் தான் ஆரம்பித்தேன். ஆனால் அதன் பின்னர் நான் படித்தவைகள் வாழ்வியல் களனில் வரும் அநேகமாக எல்லாப் பகுதிகளையும் ஓரளவு படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

என் தேடல் புத்தகத்துடன் நிற்கவில்லை. பல இடங்களுக்குச் சென்றேன். தனியாகவும் குழுவாகவும் போயிருக்கின்றேன். கற்ற கலைகளும் நிறைய. இத்தனையும் ஏன் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்? விருது வாங்கவா ? இல்லை அய்யா. இனி எழுதப் போகும் விபரங்களை நீங்கள் அக்கறையுடன் படிக்க வேண்டும், பயன் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும் முன்னர் என் தகுதி பற்றி கூறி உங்களிடம் நம்பிக்கையை விதைக்க ஓர் முயற்சி. மாற்றுக் கருத்துக்களும் விமர்சனங்களும் நிச்சயம் இருக்கும். ஆயினும் சிலராவது என் ஆன்மாவின் துடிப்பைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். நம் பிள்ளைகள், நம் எதிர்காலச் சந்ததிகளுக்கு உண்மையான வரலாற்றுச் செய்திகள் தெரிய வேண்டும். காசுக்காக, புகழுக்காக எழுதவில்லை. கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்குத் துரும்பு கிடைத்தாலும் தப்பிக்க முயலுவான். நிச்சயம் என்னுடைய முயற்சியில் சில நன்மைகள் நடக்கும் என்று நம்புகின்றேன். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து சில வரலாற்றுச் செய்திகளைக் கூறிவிட்டு தற்காலத்தில் நம்மை வீழ்த்திக் கொண்டிருக்கும் நச்சு அரவங்களை அடையாளம் காண்போம்.

இது சித்தர்கள் வாழ்ந்த பூமி. அவர்கள் சிறந்த விஞ்ஞானிகள். இப்பொழுதைய கண்டு பிடிப்புகள் அவர்கள் முன் சாதாரணமானவை. பல நூற்றாண்டு காலம் வாழ்ந்தவர்கள். சிறந்த வைத்திய முறை கண்டவர்கள். அமானுஷ்ய சக்தி பெற்றவர்கள். வர்மக் கலைகள், சோதிடம் போன்று பல கலைகளை உருவாக்கியவர்கள். மண்ணைப் பொன்னாக்கும் வல்லமை படைத்தவர்கள். இத்தனை திறமைகள் இருந்தும் அவைகளை வணிக வட்டத்தில் நிறுத்த வில்லை. வாழும் கலையை எளிய முறையில் சொல்லியிருக்கின்றார்கள். நாம் தான் அசட்டை செய்து மாயை வலையில் வீழ்ந்து மயங்கி இருக்கின்றோம்.

எல்லாம் விளக்கமாக எழுத எனக்குக் காலம் இல்லை. முன்பே எழுதத் தொடங்கி யிருக்க வேண்டும். ஏனோ எழுதுவதில் அக்கறை வரவில்லை. அதைவிட களத்தில் இறங்கி கண்கலங்கி நிற்பவர்களுக்கு என்னால் முடிந்தவைகளைச் செய்து கொண்டிருந்துவிட்டேன். சோதிடம் மட்டும் 40 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்திருக்கின்றேன். எனவே என் ஆய்வுகள், என் அனுபவங்கள், என் எண்ணங்கள், சுருக்கமாகப் பதியப் போகின்றேன்.

தொடர் முடியும் பொழுது சிலராவது நம்பிக்கையுடன் வாழ்க்கையில் திருப்பம் காண்பீர்கள். வழிகாட்ட சிலரை அடையாளம் காட்டுவேன்.. யாருக்கும் காசு கொடுக்க வேண்டாம். நாங்கள் வியாபாரிகள் அல்ல. அரசியல் முதல் ஆன்மீகம் வரை பேசினாலும் எங்கள் நோக்கம் மனிதம் காப்பது. நம்பிக்கை யூட்டுவது.

உங்களிடம் நான் வேண்டுவது பொறுமையாக, ஆழ்ந்து ஒரு முறையாவது படியுங்கள். பின்னூட்டங்களில் ஆக்க பூர்வமாக இருக்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் தருவேன். விவாதங்களில் இறங்கினால் திசை மாறிவிடும். என் நினைவுகளை மீட்டெடுப்பதே சிரமமாக இருக்கின்றது. எனவே என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். இப்பொழுதுள்ள சூழநிலையில் மனம் புழுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்கும். எளிய தமிழில் எழுதுவதைப் போல் சொல்லப் போகும் விபரங்களும் எளிமையாக இருக்கும். இனி மனிதன் தோன்றிய காலத்திற்குச் செல்வோம்.

ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தோன்றினான் என்பது வரலாற்றாய்வாளர்களின் கூற்று.

மனிதன் தோன்றிய காலத்தில் பேசத் தெரியாது. சைகையிலும் சத்தத்திலும் எண்ணங்களை பரிமாறிக் கொண்டான். இரைதேட பத்து பேர்கள் வேட்டைக்குக் கிளம்பினால் அவர்களில் ஓரிருவர் மிருகங்களுக்கு இரையாகி எஞ்சியவர்கள் இருப்பிடத்திற்குத் திரும்புவர். அவர்கள் தொழில் வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலும் ஆகும். ஒளியும் இருளும் ஏன் என்று தெரியாது. வெட்ட வெளி வானிலிருந்து நீர் கொட்டுவதும் மிரட்டியது. கண்ணுக்குத் தெரியாத காற்று மரங்களையே சாய்த்தது கண்டு இன்னும் மிரண்டான். வயிற்றுப் பசி, உடல் பசிக்குப் பின் அவன் உணர்ந்தவைகள் அச்சமும் ஆச்சரியமும். ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இல்லை. மனிதர்களுள்ளும் அறிவாற்றலில் சமமாக இருத்தல் கிடையாது. தள்ளாட்டம் வரும் பொழுது ஊன்றிக் கொள்ள ஒரு பற்றுக் கொடு தேடுவோம். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் அச்சத்தில் அடைக்கலமாக ஒன்றை அடையாளம் காட்டினான். அதுதான் கடவுள்.

பிரபஞ்சத்தை, உயிரினங்களைப் படைத்தவர் கடவுள் என்று எல்லா மார்க்கங்களூம் சொல்கின்றன. கடவுள் ஒரு மனிதன் மூலமாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். இந்த விளக்கம் என் மீது சிலருக்குக் கோபத்தை வரவழைக்கலாம். இது என் சிந்தனையின் வெளிப்பாடு. மாற்றுக் கருத்துக்கள் நிச்சயம் இருக்கும். ஆக கடவுள் மக்களிடையே கண்டு கொள்ளப்பட்டார். அவரை அத்துடன் விடவில்லை. அவர்களுக்குக் கடவுளைப் பார்க்க வேண்டும். எந்த உருவில் படைப்பது என்று அவன் சிந்தித்தான். காணாததை உருவகப் படுத்த முடியாது. ஓர் உயிரைப் பல மாதங்கள் சுமந்து, பின்னர் பெற்றெடுத்து, பாலூட்டிச் சீராட்டி வளர்த்து உணவளித்துக் காப்பாற்றும் பெண் இப்பொழுது உயர்வாகத் தெரிந்தாள். எனவே பழைய கற்காலத்தில் பெண் வடிவில் உருவமைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தான். உணவளித்துக் காக்கும் பெண்ணுக்கு நன்றிக் கடனாகப் பலி கொடுக்க ஆரம்பித்தான். வேட்டைக்குச் சென்று திரும்பும் பொழுது மிருகத்தின் தலையை வெட்டி தங்கும் இருப்பிடம் வரவும் கடவுளுக்கு அதனைக் காணிக்கையாகச் செலுத்த ஆரம்பித்தான். இது வரலாறு.

வேட்டைக்குச் சென்ற களைப்பு மாற ஒன்று கூடி அமர்ந்து மகிழ்ச்சியில் ஓலமிட்டனர். அது இசையாயிற்று. குதித்து மகிழ்ந்தான் கூத்து பிறந்துவிட்டது. “குதித்தல்” என்ற சொல்லிலிருந்து பிறந்தது கூத்து. வாழ்வியலில் உயிரினங்கள் வாழும் முறைகளிலேயே பல அறிந்து கொள்கின்றன. பூனைக்கு வயிற்று நோவு வரின் புல்லைத் தின்னும். மனிதனிலும் காய் கனிகளுடன் சில இலைகளையும் சுவைத்துப் பார்த்தான். கஞ்சாச் செடியின் பழக்கம் தொடங்கியது. போதையில் உடல்வலி மறந்து உற்சாகம் கண்டான். போதைப் பழக்கம் பழைய கற்காலத்திலே இப்படித்தான் ஆரம்பமாகியது.

வேட்டையாடிய பொருட்களை தான் வசிக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து உலர்த்தி சேமித்து வைத்துக் கொண்டான். இயற்கையின் சீற்றங்கள் நேரும் பொழுது அவனால் வேட்டைக்குச் செல்ல் முடியாது. குகைகளில் தங்க வேண்டிய நிலை. அப்பொழுது குகைகளில் கோடுகள் தீட்டி மகிழ்ந்தான். சுவற்றோவியம் பிறந்தது. பச்சிலை உதவியுடன் பாறை ஓவியங்கள் பிறந்த கதை இதுதான். ஆக மனிதன் உழைப்பிற்கு மட்டுமல்ல களிப்பிற்கும் வழி கண்டான். இதுவும் வரலாறு.

சில சிறப்பு அம்சங்களையும் பார்க்கலாம். தலைவர்கள் இயல்பாக உருவாகினர். உடல் பலமும் புத்திசாலித்தனமும் கொண்டவன் வழி நடத்தினான். நிரந்தரத் தலைவன் என்றோ ஆட்சி முறையோ கிடையாது. ஆண்கள் வேட்டைக்கு வெளியில் சென்றால் பெண்கள் இருப்பிடத்தைப் பாதுகாக்கவும் , கொண்டு வந்த இரைகளை உலர்த்திச் சேமித்து வைப்பதிலும் கவனம் செலுத்தினர். சில சமயம் பெண்களும் வெளியில் சென்றதுண்டு. முக்கியப் பணியும் இயல்பாக வந்தது. பிள்ளை பெறுவதும் அவர்களைப் பேணிப் பாதுகாப்பதும் எல்லோருக்கும் உணவைப் பங்கிட்டுக் கொடுப்பதும் அவள் தன் பணியாகக் கொண்டாள். அந்த கூட்டத்தைச் குழுச் சமூகம் என்று அழைக்கப்பட்டது.

இந்த சமூகத்தில் ஓர் கட்டுப்பாடு இருந்தது. இவர்களைச் சேர்ந்தவர்கள் யாரும் அடுத்த குழுச் சமூகத்துடன் எந்த உறவும் அதாவது நட்பு, மணவினைத் தொடர்பு காதல், பண்டமாற்றம் போன்ற வணிகச் செயல்கள் எதுவும் கூடாது. கடுமை யாகக் காப்பாற்றி வந்தனர்.

புலம் பெயர்ந்து செல்ல முடிவு எடுக்கவும் அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் வாழும் அத்தனை பேர்களையும் கொன்றுவிடுவர். பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்க மாட்டார்கள். கலப்பு நேரின் குழுவின் கட்டுப்பாடு குலைந்து இனம் அழிந்துவிடும் என்று நினைத்தனர்.

எழுதப்படாத விதி இன்னொன்று இருந்தது. அதனை எல்லோரும் ஏற்று மதித்து நடந்தனர். சட்டக் கல்லூரியும் காவல் நிலையமும் இல்லாத காலத்தில் மனிதன் தனக்கு விதிகளை உருவாக்கிக் கொண்டு கண்டிப்பாகவும் கட்டுக் கோப்பாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றான். அதனைப் பார்க்கலாம்.

பெற்றவள் யார் என்று அறிய முடியும் ஆனால் அதற்குக் காரணமான ஆண் யார் என்று தெரியாது. மனிதன் பெற்றவளைப் புரிந்து கொள்ள முடிந்ததால் அவளுடன் பாலியல் உறவு கொள்ள மாட்டான். ஆண்டுகள் செல்லச் செல்ல அதே தாயின் வயிற்றில் பிறந்த பெண்களிடமும் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தான்.

இதை எழுதும் பொழுது ஒரு செய்தி கூற விரும்புகின்றேன். பழங்குடி மக்களிடம் ஒரு பழக்கம் இருந்துவந்தது. வருடத்தில் ஓர் நாள் இரவில் திருவிழா போல் ஓர் கொண்டாட்டம். அன்று குடிப்பார்கள் ஆடுவார்கள், எந்த ஆணும் அடுத்தவன் மனைவி என்று இருந்தாலும் விருப்ப்பட்டவர்களுடன் உறவு கொள்ளலாம். ஒரு ஆச்சரியமன செய்தி. இப்பொழுதும் சில மலைப் பகுதிகளில் இது நடந்து வருகின்றது. வெளி மனிதர்களைப் பார்வையளராகக் கூட அனுமதிக்க மாட்டார்கள். என் நண்பர் ஒருவர் ஏற்கனவே அந்தக் கூட்டத்துடன் நெருங்கிப் பழகி வந்தவர். எப்படியோ அந்த நாள் காட்சியைக் காண அனுமதித்தனர். அவர்கள் கொடுக்கும் மதுபானம், உணவு அருந்த வேண்டும் அவ்வளவுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்த பொழுது என்னிடம் தெரிவிக்கப்பட்ட செய்தி.

ஒரு பெண்ணிற்கு ஐந்து கணவர்கள் இருப்பதை நானே அறிவேன். நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் பொழுது இதனை அறிய நேரிட்டது. வாயிலில் செருப்பு இருந்தால் அடுத்த ஆண்மகன் வந்த வழியில் திரும்பி விடுவான்

ஆரம்ப காலத்தில் இருந்த வாழ்வியல் முறை இது. இதனைக் குற்றமாகவோ பாவமாகவோ நினைக்கவில்லை.

அவர்களிடம் சமயம் என்று ஒன்று கிடையாது. ஆயினும் வழிபடுதல், பலி கொடுத்தல், சில சடங்குகள் செய்தல் வழக்கமாக இருந்தன. அச்சத்திலிருந்து விடுபட மாந்திரீகம், தாயத்து கட்டிக் கொள்ளல் போன்றவைகளும் இருந்திருக்கின்றன.

இங்கே என் சொந்தக் கருத்து ஒன்றைத் தெரிவிக்க எண்ணுகின்றேன்.

குழுச் சமுதாயத்தில் பலமும் புத்தி கூர்மையும் கொண்டவன் வழி நடத்தினான் என்பதைப் பார்த்தோம். அக்கூட்டத்தில் அபூர்வமாக ஒருவரோ இருவரோ தான் இயற்கையின் மாறுதல்களைக் கணக்கிட்டுப் பார்க்க முடிந்திருக்கின்றது. ஆட்சி முறை இல்லாவிட்டாலும் இயல்பாக ஏற்படுத்திக் கொடுத்த தலைமை நிலை அதிகாரச் சுவையை உணர்த்தியிருக்க வேண்டும். ஆச்சரியமான விஷயங் களைக் கூறுகின்றவன் மற்றவர்களுக்கு ஆச்சரிய மானவனாக இருந்தான். இது வளர்ந்தால் அதிகாரம் ஆட்டம் கண்டுவிடும் என்பதை அவன் இயல்பாக உணர்ந்திருக்க வேண்டும். எனவே கடவுளைக் காட்டியவனை தனக்குள் இணைத்துக் கொண்டான். அவனை ஓரளவு சிறப்பாகவும் கவனித்திருக்க வேண்டும். பிற்கால அரசுகளில் ஆட்சியாளர்கள் தங்களின் முதல் கேடயமாக, உதவும் ஔடதமாக மதத்தினை உபயோகப் படுத்திவந்தது வரலாற்றில் கண்ட உண்மை. அவன் எங்கு சென்றாலும் முதலில் அவன் மதம் முன் செல்லும் . இத்தொடரில் சில நாடுகளின் வரலாற்றை உதாரணமாகக் கூறும் பொழுது விளக்கமாக எழுதுவேன்.

காலச் சுழற்சியில் பழைய கற்காலம், இடைக்கற்காலம் கடந்து புதிய கற்காலம் ஆரம்பமாகியது. ( 10000. கி.மு. )

புலம்பெயர்ந்து ஓடிக் கொண்டே இருந்தவன் ஓரிடத்தில் தங்கி வேளாண்மையில் இறங்கினான்.

தான் ஈட்டும் பொருளுக்குத் தன் வாரிசு வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தான். பெண்ணைச் சிறை வைத்தான். அவள் வெளியில் சென்றால் அவளுக்குப் பிறக்கும் மகன் தன்னுடையது என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. பிள்ளையைக் கொடுக்க , அதனையும் தன் இல்லத்தையும் பார்க்க ஒருத்தி. வெளியில் அவன் இச்சைகளைத் தீர்க்க பிறபெண்கள் வாழும் சேரிகளையும் உருவாக்கினான். இன்னொரு காரணமும் உண்டு. வணிகம் , போர் என்று சென்றால் அவன் வீடு திரும்ப சில மாதங்கள் ஆகலாம், சில வருடங்கள் கூட ஆகலாம். அப்பொழுது அவன் தேவைக்குப் பெண்கள் வேண்டும். எனவே பரத்தையர் சேரிகள் தோன்றின.

சில ஆண்டுகளுக்கு முன் வரை பிழைப்பதற்கு வெளி நாடுகள் செல்கின்றவர்கள் குடும்பங்களைத் தாய் மண்ணில் விட்டுச் செல்வதைப் பார்த்திருக்கலாம்.

போர்ப் பயணம் நீண்டு கொண்டே போனால் போகும் பாதைகளில் கிடைக்கும் பெண்கள் இளைஞர்களையும் அள்ளி எடுத்துச் செல்வார்கள். இது உலக வழக்கம். ஒரினச் சேர்க்கையும் இருந்தது.

வேளாண்மைத் தொழில் தொடங்கவும் நிலப்பிரபுத்துவமும் தோன்றியது. பொருள் கொண்டவன் உயர் நிலையிலும் உழைப்பவன் அடிமை நிலையிலும் வாழ வேண்டிய கட்டாயச் சூழலும் உண்டாகியது.

இதுவரை அலைந்து திரிந்து வாழ்ந்தவன் நிலையான களம் கிடைக்கவும் அதன் சுவையில் ஈர்க்கப்பட்டான். தன் வாழ்க்கையை மேலும் சீராக்க, சில விதிகளையும் உண்டாக்கினான். எழுதப்படாத சமுதாய விதிகள். அங்கே மன்னர் ஆட்சி எதுவும் கிடையாது. ஆனால் சமூக விதிகளை மீறி யாரும் நடக்க முடியாது. தவறு செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட்டனர். இது போன்ற சமுதாயக் கட்டுப்பாடுகளின் தோற்றம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் என்றாலும் நான் பணியாற்றிய காலத்தில் கூட சமுதாயக் கட்டுப்பாடுகளைப் பார்த்திருக்கின்றேன். பின்னால் இதுபற்றி நிறைய அலசப் போகின்றோம்.

இந்த அளவு வரலாறு தெரிய வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம். வேர்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம் சந்ததிகளுக்கு நம் வரலாறு கிடைக்கும்.

பொய்யும் புனைந்துரைகளூம் நிறைந்த வரலாறு கிடைத்தாலும் உண்மை திடீரென்று வெடித்து வெளியே கிளம்பும். பெண்பித்தர்கள், குடிகாரர்கள், பேராசைக் காரர்கள். பெரும் ஊழல்வாதிகள், சினிமா மயக்கத்தில் நடிகர் முன் தேங்காய் பழம் வைத்துக் கும்பிட்டவர்கள், கடவுளைக் கல் என்று கூறிவிட்டு நடைபாதைகளைக் கூட விட்டு வைக்காமல் பிள்ளையார் கோயில்கள், அம்மன் கோயில்கள் கட்டி இந்த அறிவாளிகளே தர்மகர்த்தாவாக இருப்பார்கள், பச்சோந்தித்தனமான அரசியல் சூழல், இரட்டை நிலை, —

இதனைப் படிக்கும் பொழுதே மயங்கி விழுந்து விடுவான். இன்றைய மக்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்குச் சேர்த்துவைக்கும் பெருமைகள் இவைகள். நல்லவர்கள் இருந்தாலும் ஒளியிழந்து ஒடுங்கி இருக்கும் இடம்கூடத் தெரியாமல் புதைந்திருப்பர்..

நம்மில் வேதனைப் படுகின்றவர்கள், வெட்கப்படுகின்றவர்களும் இருக்கின்றார்கள். நம் கடமை என்ன? நம்மால் என்ன செய்ய முடியும். நல்ல முயற்சிகளும் பிறக்கும் பொழுதே முடக்கப் படுகின்றனவே! திகைத்துப் போயிருக்கின்றோம். இந்தத் தொடர் முடிவில் நம்மில் சிலர் சேர்ந்தாவது ஏதாவது தீர்வினைக் காண முயற்சிப்போம். விதை விதைத்தால் அது வளரும். நமக்கு நம்பிக்கை வேண்டும். வேதனையாக இருக்கின்றதா? சிரிக்கவும் சிந்திக்கவும் அடுத்தப் பதிவில் கடவுளே வந்து பேசுவார்.

“கடவுளாம். கல்தானே இருக்கின்றது அப்படி ஒருவர் இருந்தால் வரச் சொல்” இப்படிச் சொன்னால் அவன் பகுத்தறிவுவாதியாம். ஓரறிவு, ஐந்தறிவு என்று இருக்கும் உயிரினங்களுக்கு மத்தியில் ஆறு அறிவு பெற்றவன் மனிதன். அதுதான் பகுத்தறிவு. ஓர் இயக்கத்தில் இருந்து கொண்டு நாங்கள் மட்டும் பகுத்தறிவு வாதிகள் என்றால் மற்ற மனிதர்கள் மடையர்களா?

கடவுள் வந்தால் என்ன நடக்கும்.

கடவுளை பூலோக யாத்திரைக்கு வரச் செய்வோம்.

ஒரு முறையவது கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லட்டுமே

ஒவ்வொருவரிடமும் ஒருமுறை பேசும் ஒருநாள் கூத்தையும் பார்ப்போம்.

இந்தத் தொடரில் எடுத்துக் காட்டுகளில் அதிகமாக என்னையே எடுத்துக் கொள்ளப் போகின்றேன்.

என்னுடைய குறைகள், அசட்டு எண்ணங்கள், கோபம், சினிமா மயக்கம் போன்ற பலவற்றிலும் என்னைக் காட்டுவேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் உண்டு. பல குணங்களைத் தான் முகங்கள் என்கின்றோம். ஒவ்வொருவரும் தன்னைச் சுயபரிசோதனைச் சாலையில் வைத்துப் பரிசோதிக்கட்டும்.

நமக்குள் மறந்திருக்கும் ஆழ்மனச் சக்தியை உணர முயற்சியைத் தொடங்குவோம். முடியாதது எதுவும் இல்லை. முடிவை நினைக்காதீர்கள் முதலில் தொடக்கத்தைத் தொடுவோம்

நல்லதை நினை

நல்லதைச் செய்

நல்லவனாக இரு

இது வாழ்க்கைப் பாடம்

உலகையும் உயிரினங்களையும் தோற்றுவித்த அந்த பிரபஞ்ச சக்தி நமக்குத் துணை புரியும்.

முன்னதாகவே நன்றி நவிலல். முறையைத்தான் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே.

ஒவ்வொரு துறையிலும் எனக்கு நண்பர்கள், வழிகாட்டிகள் இருகின்றனர். குறிப்பாக வரலாற்றுச் செய்திகள் கூற என் சமஸ்தானத்தில் ஒருவர் வெகு காலமாக இருக்கின்றார். பலர் இருந்தாலும் இவரைத்தான் அதிகம் தொந்திரவு செய்வேன். எனக்குத் தேவையன குறிப்புகள் உடனே தருவார். அவர் பெயர் திரு ராமச்சந்திரன். தொல்பொருள் ஆய்வாளர். சமூகவியல் மானுடவியல், இலக்கியமும் படித்தவர். இதைக் கூறுவதற்குக் காரணம் நான் எழுதுவது புனைந்துரை என்று கருத வேண்டாம். என் நினைவுப் பெட்டகத்தில் தேடுவது கஷ்டமாக இருக்கின்றது. வரலாற்றுப் பிழை வரக் கூடாது என்று நினைப்பவள். நான்.

எல்லோரிடமும் பணிவுடன் வேண்டிக் கொள்வது தயவு செய்து ஆழ்ந்து கவனித்து படிக்கவும். பின்னர் சிந்திக்கவும். என் கருத்தைத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தொடர்ந்து படித்து வந்தால் பின்னால் இப்பொழுது நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இவைகள் தேவை என்பதும்புரியும்.

அடுத்து இறைவனின் பூலோக யாத்திரையைப் பார்க்கலாம்

தொடர்ந்து பயணிக்கவும்.

“ பறவைகளைப் போல் மனிதனால் காற்றில் பறக்க முடியும். மீனைப்போல் தண்ணீரில் நீந்த முடியும்.ஆனால் மனிதனைப் போல நடக்கமட்டும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை “

டாக்டர். .ராதாகிருஷ்ணன்

[தொடரும்]

Series Navigationஎங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லைநிழற்படங்கள்
author

சீதாலட்சுமி

Similar Posts

Comments

  1. Avatar
    Adaikalaraj says:

    பலரும் பேச தயங்கும் உண்மைகளை எழுதி உள்ளீர்கள். நேர்மையான சிந்தனைகள், நல்லது நிகழ வேண்டும் என்று நினைத்து எழுதும் உங்கள் உழைப்பிற்கு என் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *