வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49

This entry is part 9 of 29 in the series 24 மார்ச் 2013
Three Children -49
 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

 

 

வாழ்வியல் வரலாற்றை முழுமையாக எழுதப் புகுந்தால் ஓர் ஆழ்கடலின் ஆய்வு அறிக்கையாகிவிடும். முத்துச் சிப்பிகள் என்று அள்ளி வந்தோமானால் கூட சில சிப்பிகளில் மட்டுமே முத்துக்கள் காணப் படும். மற்றவைகள் வெற்றுச் சிப்பிகளாக இருக்கும்..

சமுதாயப் பிரச்சனைகளை என்னால் முடிந்த அளவு எழுதினேன். சாதி மதம், அரசியல், இயக்கங்கள், ஊழல், வன்முறைகள் இந்தப் பட்டியல் நீளமானது. எழுத்தால், பேச்சால் சீர்திருந்தும் நிலையைக் கடந்து விட்டோம். திரும்பத் திரும்ப பிரச்சனைகளை எழுதும் பொழுதும் படிக்கும் பொழுதும், பார்க்கும் பொழுதும் மன அழுத்தம் அதிகமாகும். ஒவ்வொருவரும் முதற்கண் அலைபாயும் மனத்தை ஓரளாவாவது அடக்கி அமைதி பெற முயற்சிப்போம்.

ஏற்கனவே தெரிவித்தபடி அடுத்த பதிவுடன் இத்தொடரை முடிக்கின்றேன். எனவே எல்லாப் பிரச்சனைகளையும் எழுத முடியவில்லை. எல்லோருக்கும் தெரிந்ததுதானே.   எனக்கேற்பட்ட சில சொந்த அனுபவங்களை மட்டும் கூற விரும்புகின்றேன்.

என்னுடைய குடும்பம் தந்தை வழியிலும் தாய் வழியிலும் ஆன்மீகப் பாதையில் நம்பிக்கை உள்ளவர்கள். இருதரப்பிலும்  உறவுகளின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் மத்தியில் நான் ஓர் முள் செடியாகத் தென்பட்டேன். என் பாட்டிக்கு அதனால் மிகுந்த வருத்தம்.

நானும் என் தாயாரும் எட்டயபுரம் சென்றவுடன் என் பாட்டி கீழ அனுமந்த ராயன் கோயில் தெருவில் உள்ள சகோதரியின் மகன் வீட்டில் குடியேறினார்கள். இதனைச் சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது. அந்த வீட்டில் மூன்று குடும்பங்கள் இருந்தன. எல்லோரும் உறவினர்கள்.  பாட்டியின் சகோதரியின் மருமகள் சீதா என்னிடம் பரிவுடன் பழகினார்கள். என் குறை களைக் கூறி திருத்த முயல்வார்கள்.

எட்டயபுரத்தில் இருந்த பொழுது பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகங்கள் மட்டுமில்லாது பல புத்தகங்கள் படிக்க நேர்ந்தது. அப்பா கொடுத்தது காந்திஜி எழுதிய சத்திய சோதனையும் வீர சாவர்க்கார் எழுதிய எரிமலை புத்தகமும் படித்தேன். எங்கள் கடையில் இருந்த திரு சுப்பையா பிள்ளை மூலமாக காரல்மார்க்ஸ் பற்றிய புத்தகங்கள் படித்தேன். பால்காரன் மூலமாக திராவிட இயக்கங்கள் புத்தகங்கள் படித்தேன். அந்த வயதில் இவைகளைப் படித்து சரியாகப் புரிந்து தெளிவடைய முடியாது. எனவே தான் மற்றவர்களின் தாக்குதலுக்கு ஆளானேன்.

பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் சென்றேன். என் வாழ்க்கையில் அது ஓர் திருப்பு முனையாக அமைந்தது. தூத்துகுடியில் இருந்த மரியன்னை கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்தேன். கன்னியாஸ்த்ரீகள் நடத்திய கல்லூரி. கட்டுப் பாடுகள் அதிகம். சிட்டுக் குருவியாகப் பறந்தவளுக்கு அது ஓர் சிறை போன்று ஆரம்பத்தில் உணர்ந்தேன். வரும் கடிதங்கள் கூட திறந்து பார்த்து படித்த பின்னரே கொடுப்பார்கள்.

விடுமுறையில் என் பாட்டி வீட்டிற்குச் சென்ற பொழுது ஓர் செய்தி அறிந்தேன். எனக்கு வந்த கடிதம், புத்தகங்கள் எனக்குக் கிடைக்காததை அறிந்தேன். கல்லூரிக்குத் திரும்பியவுடன் வார்டனிடம் சண்டை போட்டேன். அவர்கள் பாதிரியார் அவர்களிடம் பேசிவிட்டுக் கொடுத்தார்கள். அக்கடிதமும் புத்தகங்களும் ஓர் துறவியிடமிருந்து இமயமலையில் உள்ள ஓர் ஆஸ்ரமத்திலிருந்து வந்திருந்தன. அனுப்பியவர் சுவாமி சிவானந்த மகரிஷி அவர்களாகும். அவரின் அருமை அப்பொழுது எனக்குத் தெரியாது. கடிதம் படிக்கவும் அதில் கண்ட அறிவுரைகளைப் படிக்கவும் இது சீதா மாமியின் வேலை என்று புரிந்து கொண்டேன். அவர்கள் பத்தமடை ஊரைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்ல சுவாமிஜிக்கு உறவினரும் கூட. என்னைப் பற்றிக் கூறி எனக்கு அறிவுரை வழங்க அவர்கள்தான் முயற்சி எடுத்திருக்கின்றார்கள்.  அது ஓர் இந்துமத் துறவியின் கடிதம் என்பதால் கல்லூரி கொடுக்கவில்லை அது முதல் சுவாமிஜிக்கு நான் எழுதுவதும் அவரிடமிருந்து பதில்களும் புத்தகங்களும் வர ஆரம்பித்தன.

அதே ஆண்டில் இன்னொன்றும் நடந்தது. திருவனந்தபுரத்திற்கு மாணவிகள் சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஓர் கடையில்  முருகன் சிலை ஒன்றைப் பார்த்தேன். உடனே வாங்கிவிட்டேன்.இப்பொழுதும் அதாவது 62 ஆண்டுகளாக என்னிடம் இருக்கின்றது. இரண்டரை அங்குல உயரம் தந்தத்தில் செதுக்கப் பட்டிருந்தது. எனக்குள் முருகனைப் பதித்தவர் என் தாயார்.

அவர்களுக்கு முதலில் இருமுறை குறைப் பிரசவம் ஆயிற்றாம். அதனால் என் பெற்றோர்கள் சஷ்டி விரதம் இருந்தார்களாம். ஆறு மாதங்களில்  கர்ப்பம் தரித்து நான் பிறந்ததால் என்னை முருகன் போட்ட பிச்சை என்று அடிக்கடி கூறுவார்கள். எப்படியோ என் முருகன் எனக்குள் தங்கிவிட்டான். திராவிட புத்தகங்கள் படித்த காலத்திலும் புராணங்களை நானும் விமர்சித்த பொழுதும் முருகனை மட்டும் என்னால் ஒதுக்க முடியவில்லை இந்த சிலைக்கு ஓர் தொடர் கதையே இருக்கின்றது. பின்னால் சொல்கின்றேன்

முருகன் சிலையை என் அறையில் மேசையில் வைத்திருந்தேன். அங்கே வைக்கக் கூடாது என்று எங்கள் வார்டன் திட்டினார்கள். மற்றவர்கள் மேசையில் இருக்கும் ஏசுநாதர் படங்களை எடுத்தால் நானும் முருகன் சிலையை எடுக்கின்றேன் என்றேன். இப்பொழுது என்னைப் பற்றிய புகார் போன இடம் பெரிய இடம். அதாவது பிஷப்பிடம்  புகார் தெரிவிக்கப்பட்டது. அபொழுது இருந்த பிஷப்பின் பெயர் மேதகு ஆண்டவர் தாமஸ் பெர்ணாண்டோ அவர்களாகும்.

எங்கள் பிஷப் அவர்களைச் சந்தித்தேன். சிரித்த முகத்துடன் பேசினார்கள். “பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லையாமே” என்று கேட்டார். நான் நடந்த விபரங்களைக் கூறினேன். கடிதம், , புத்தகம் தராமல் இருந்ததைக் கூறினேன். இது கல்விக் கூடம். இங்கு மதப் பிரச்சனை வரலாமா என்று அவரிடமே கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டார். முருகனை மேசையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் இனிமேல் வரும் கடிதங்கள், புத்தகங்களும் வந்து சேரும் என்றார். அவர் என்னிடம் எந்த மதப் பிரச்சாரமும் செய்ய வில்லை.

கல்லூரிக்கு வந்தால் என்னைக் கூப்பிட்டனுப்புவார். திருக்குறள் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதுபற்றி பேசுவோம். ஆன்மீகம் பற்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாகப் பதில்கள் கூறுவார். எதுவும் எந்த மதங்களையும் சார்ந்திருக்காது. ஒரு புறம் சுவாமி சிவானந்த மகரிஷி, இன்னொரு பக்கம்  கத்தோலிக்க பிஷப்..கல்லூரி வாழ்க்கையில் என் அரண்கள்.

என் மனம் துறவறம் நாட ஆரம்பித்தது. ரிஷிகேசம் வர வேண்டுமென்ற ஆவலை சுவாமிஜியிடம் தெரிவித்தேன். ஆனால் அவரோ என்னை நன்றாகப் படிக்க வேண்டுமென்றும் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டு மென்றும் கூறினார்கள். பிஷப் அவர்களும் மதம் மாறி மடத்தில் சேரச் சொல்லவில்லை. நானும் மதம் மாறித் துறவியாக நினைக்கவில்லை. . அந்த இளம் வயதில் எனக்கு வழிகாட்டிகளாக அமைந்தவர்கள் இரு துறவிகள். இருவரும் வெவ்வேறு மதத்தினர்.

என் வாழ்க்கை பற்றிக் கூறுவதில் எதுவும் புனைந்துரையல்ல. இது சத்தியம். நம்புங்கள் என்று சொல்ல வில்லை. இதை உங்களிடம் தெரிவிக்க தோன்றியது எழுதுகின்றேன் அவ்வளவுதான்.

பிஷப் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

செய்யும் தவறுகளை யெல்லாம் செய்துவிட்டு பாவ மன்னிப்பு கேட்டால் செய்த பாவங்கள் போய்விடுமா?

அவர் சொன்ன பதிலை இப்பொழுதும் என்னால் மறக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல என்னிடமுள்ள பல குறைகளைப் போக்கும் வழியாகவும் அமைந்தது.

மனிதன் யாரும் எப்பொழுதும் தன்னிடம் குறைகள் இருப்பதாகக் கூட நினைப்ப தில்லை. ஒருசிலர் உணர்ந்தால் கூட உடனே மறந்துவிடுவர்.. அப்படியிருக்க தன் குறைகளை வாய்விட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவன் முதலில் நினைத்துப் பார்க்கின்றான். சொல்லும் பொழுதெ அவனையும் அறியாமல் தான் , செய்யும் தவறுகளைத் திருத்திடும் உணர்வு தோன்றும். பிறர் சுட்டிக் காட்டினால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நாமே நினைத்துப் பார்த்து, மேலும் சொல்லவேண்டி வந்தால் ஓரளவு திருந்தும் வாய்ப்பு வரும்.

உண்மை.

ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் மாதக் கடைசியில் என் குறைகளை, நான் செய்த தவறுகளை காகிதத்தில் குறிப்பேன். அதைப் படித்துப் பார்க்கும் பொழுது “சே, நம்மிடம் இத்தனை குறையா?” என்று தோன்ற ஆரம்பித்தது. யாராலும் எல்லாக் குறைகளையும் போக்கிக் கொள்ள முடியாது. ஆனால் ஓரளவாவது திருந்த முடியும். இந்த முறையில் என்னிடமிருந்த பல குறைகள் குறைந்தன. பணிக்குச் சென்ற பின்னர் டிசம்பர் மாதம் 31 ந்தேதியன்று இரவில் ஓர் பட்டியல் தயாரிப்பேன். குறைகள், தவறுகள் எல்லாம் குறிப்பேன். என்னைத் திருத்திக் கொள்ள முயல்வேன். இதனால் முழுமையாகத் திருந்திவிட்டேன் என்று கூற முடியாது.ஆனால் சில குறைகள் போயின. பல குறைகள் குறைந்தன. இது அனுபவம்.

மனிதனுக்குள் தோன்றும் எண்ணம் தொடர்ந்து தங்கி முயற்சியும் தொடர்ந்தால் பலன் கிடைக்கும். முற்றிலும் நம்பிக்கை இழக்காமல்  அவ்வப்பொழுது முயற்சி செய்து வந்ததால் என்னிடம் பல தன்மைகள் மாறின.ஒவ்வொரு மாதம் என்பது மாறி ஒவ்வொரு வருட இறுதியிலும் இது தொடர்ந்தது. இப்பொழுதும் அது தொடர்கின்றது.

கல்லூரிப் படிப்பு முடியவும் முதலில் ஆசிரியைப் பணிக்குச் சென்றேன். அதனை சுவாமிஜிக்குத் தெரிவித்தேன். அப்பொழுது அவர் எழுதிய கடிதத்தை இப்பொழுதும் பாதுகாத்து வருகின்றேன். கிராமப் பணிக்குச் சென்ற பின்னர் கடிதத் தொடர்பு நின்றது. பிஷப் அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்புவேன். அதனால் நான் இருக்குமிடம் அவர்களுக்குத் தெரியும். அப்பக்கமாகச் சென்றால் அவர்கள் என் வீட்டிற்கு வருகை தருவார்கள். வாடிப்பட்டி வேலூர் ஆகிய இடங்களுக்கு வந்திருக்கின்றார்கள். அவர்கள் ஓய்வு பெற்று திருச்சி மடத்தில் இருந்த காலத்தில் அங்கு சென்று அவரைப் பார்த்தேன்.

என் கவனம் சமுதாயத்தில் பதிந்தது. ஒவ்வொரு கடமையும் அக்கறையுடன் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இந்த இரு துறவிகளால் வளர்க்கப்பட்டது என்பதை அவர்களை நினைத்துக் கொண்டு தெரிவித்துக் கொள்கின்றேன்.

காந்தி கிராமப் பயிற்சிக்குச் சென்ற பொழுது என்னுடைய நெருக்கமான தோழி இஸ்லாம் மத்தைச் சேர்ந்தவள். அவளிடம் அவள் மதத்தைப் பற்றி கேட்டு சில விபரங்கள் தெரிந்து கொண்டேன். அதைவிட நான் அதிகமாகத் தெரிந்து கொண்டது வட ஆற்காடு மாவட்டத்தில் மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணியாற்றிய பொழுது பல குடும்பங்களுடன் பழகியதால்தான். சென்னையில் பேராசிரியர் சையத்துடன் பழகிய பொழுது நாங்கள் இருவரும் மதங்களைப் பற்றி மனம் விட்டுப் பேசுவதுண்டு.

மத வரலாறு நிச்சயமாக எழுத மாட்டேன். காரணம் விமர்சனத்திற்குப் பயந்து அல்ல. எல்லா மதங்களைப் பற்றியும் சரியாகப் படிக்காமல் எழுத விரும்ப வில்லை. எனக்கென்று ஓர் கருத்து அமைந்தது அத்துடன் என் காலம் கழிந்தது.

சாதி, மதம், மொழி, நாடு என்று காரணங்களில் விருப்பு வெறுப்பு கிடையாது.

தவறுகளைக் காணும் பொழுது எனக்குக் கோபம் வராதா என்ற கேள்விக்குப் பதில் கூறுகின்றேன். நிச்சயம் கோபம் வரும். வருத்தமும் வரும்.

அவர் ஓர் துறவி.

மகாப் பெரியவராக நான் மதிப்பவர். அவரை அவ்வப் பொழுது சந்தித்து உரையாடுவேன்.

ஒரு முறை சந்தித்த பொழுது அவர் கூறியது:

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது ஒரு சக்தி. அதற்கு உருவம் கிடையாது. நாமமும் கிடையாது. ஆனால் மனிதன் முயன்றால் அந்த சக்தியை உணரமுடியும். அதனை இறைவன் என்றோ, கடவுள் என்றோ சொல்லிக் கொள்ளட்டும். அவர் இந்த ஊரில்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல. இந்தியாவானாலும் கடல் கடந்த பிரதேசமானாலும் எங்கும் இருப்பார். அவர் படைத்த பூமியில் எங்கும் இருப்பார்.

என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் :

“உனக்கு எத்தனை பெயர்கள் ?”

ஆம் எனக்கு பல பெயர்கள் உண்டு. அவற்றைச் சொன்னேன்.

ஆனான ஒரு பெண்ணுக்கே இத்தனை பெயர்கள். கடவுளுக்கு எத்தனை பெயர்கள் இருந்தால் என்ன? கடவுள் நம்பிக்கை முக்கியம். மனிதன் செம்மையாக வாழ அது மிகவும் அவசியம் என்றார். எல்லோராலும் வெட்ட வெளியைப்ப் பார்த்து உட்கார்ந்து இறைவனை உணர முடிவதில்லை. அவனுக்கு அடையாளம் வேண்டியிருந்தது. பல உருவங்கள் தோன்றின. பக்தி மார்க்கத்தில் பக்குவம் அடைந்துவிட்டால் மனிதன் எங்கும் உட்கார்ந்து இறைவனை உணரமுடியும் என்றார்.

அந்தப் பெரியவர் கூறியது நினைவிற்கு வரவும் என் சிந்தனையில் ஓர் சித்திரம் ஓடியது.

இறைவன் உலகையும் உயிரினங்களையும் படைத்ததுடன் நிற்கவில்லை. மனிதன் இயந்திரமாக இருக்கக் கூடாது என்று சுதந்திரம் நிறைய கொடுத்திருக் கின்றார். அவனுடைய தவறுகள் அதிகமாகும் பொழுது அவர், குரலால், உணர்வால், ஏதாவது காட்சிகளால் மனிதனை நலமான பாதைக்குப் பாதை காட்டுவார். அதனால்தான் உலகில் பல ஞானிகள் தோன்றியிருக்கலாம். யாராயினும் அவர்கள் கேட்டதை, உணர்ந்ததை அவர்கள் எழுதி வைக்கவில்லை. அருகில் இருந்த உறவுகள், நண்பர்கள் இவர்களிடம் சொல்லியிருக்கலாம். புரிதல் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதுவும் எழுத்து வடிவம் பெறும் முன்னரே சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால்தான்  ஒரே மதங்களில் கூட பல பிரிவினைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். பிரிவினைகள் என்றாலே சண்டைகளும் வரத்தானே செய்யும். இது ஞானிகளின் குற்றமா?

பெரியவரைச் சந்தித்த பின் என் மனம் நினைத்ததை எழுதியிருக்கின்றேன்.

எல்லோரும் அன்பைத்தான் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் பிரிவினைகளால் அன்பு பாதிக்கப்பட்டு விடுகின்றதே. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையில் கூட வன்முறை நடப்பது வேதனைக் குரியது. வரலாற்றைப் பார்த்தால் பல மதங்களில் ஒவ்வொரு காலக் கட்டங்களில் வன்முறை நடந்த செய்திகளைக் காண்கின்றோம்.

ஒரு கிராமத்தானிடன் போய் நீ எந்த மதம் என்று அன்று கேட்டால் விழிப்பான். நீ கும்பிடும் சாமியின் பெயர் என்ன என்று கேட்டால் உடனே பதில் கூறுவான். இப்பொழுது நிலை மாறிவிட்டது. சாதியைவிட மனிதனை மதம் இறுகப் பற்றிக் கொண்டுவிட்டது.

யார் சிறந்த கடவுள் என்று அறிய தேவ லோகத்தில் தேர்தலா நடத்த முடியும் ?

1961 இல் தெய்வலோகத் தேர்தல் என்று ஓர் கதை எழுதி அதுவும் பிரசுரமாகி யிருக்கின்றது. அந்த இளம் வயதிலேயே இந்த சிந்தனையும் என்னைப் பற்றிக் கொண்டது.

இறைவனை நம்புகின்றவர்கள் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.

இந்த எண்ணங்களின் வளர்ச்சிதான் என்னால் எல்லோரிடமும் வெறுப்பின்றி பழக வைத்தது. குற்றம் புரிந்தவர்களின் செயல்களுக்காக வேதனைப் படுவேன். முடிந்தவர்களிடம் நேரிடையாகச் சொல்வேன். அவர்கள் திருந்த வேண்டு மென்று முயற்சிப்பேன். ஆனால் வெறுக்க மாட்டேன். இது என் இயல்பாகி விட்டது.

சாதி, மதம், அரசியல்பற்றிப் பேசும் பொழுது எல்லோருக்கும் ஆத்திரம் வரும். அது மனித இயல்பு. பாதிக்கப்பட்டவர்கள், , பாதிப்பானவர்களைப் பார்க்கின்றவர்கள் ஆகியோரால் அமைதியாக இருக்க முடியாது. மனிதர்கள் உணர்ச்சிகளின் கலவை. அது தவறல்ல. அது இயல்பு.

இன்று நம்மைச் சுற்றிலும் வேதனைகளும் சோதனைகளும் சுழன்று சுழன்று வருகின்றன. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.  தனி மனிதன் கடமை என்ன?

கிழவி உளறுகின்றாள் என்று தோன்றுவதும் சரியானதே.

இன்னும் சில தகவல்கள் என்னைப்பற்றிக் கூற வேண்டும்.

ஊட்டியில் பணியாற்றும் பொழுது அங்கு ஒருவர் வந்தார். பத்து நாட்கள் தங்கி இருந்தார். அவரைக் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. வந்தவர் ஒருவாரம் யோகா வகுப்பு நடத்தினார். நானும் சேர்ந்தேன். தியானப் பயிற்சி தரப்பட்டது. குண்டலினி எழுப்பினார்கள். அது எனக்குப் புது அனுபவம். எனக்குப் பயிற்சி கொடுத்து குண்டலினி எழுப்பியவர் மதிப்பிற்குரிய பரஞ்சோதி அவர்கள். இவர் வேறு யாருமல்ல. வேதாத்ரி மகரிஷியின் குருநாதர். இவரும் தன்னுடன் வந்து உதவி செய்யலாம் என்று அழைத்தார். ஒரு காலத்தில் துறவியாக விரும்பினேன். அப்பொழுது எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்த பொழுது நான் தயாராக இல்லை. இன்னொரு அழைப்பும் வந்தது.

சுவாமி சச்சிதானந்த சுவாமிகள் சென்னைக்கு வருகை தந்த காலம் நடந்தது. அப்பொழுது ஹிப்பிகளின் பிரச்சனை அமெரிக்காவில் அதிகம். சுவாமிகள் அமெரிக்காவில்  Integral Yoga Institure  என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த மையங்கள் மூலம் பல்லாயிரக் கணக்கான ஹிப்பிகள் மனம் மாறினர். அமெரிக்க அரசும் அவரைக் கவுரவித்தது. அவர் சென்னைக்கு  வந்திருந்த பொழுது நிருபர்களுக்குப் பேட்டி யளித்தார். பகீரதன் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். ஒரு நாள் முழுவதும் சுவாமிஜியுடனும்  மனம் மாறிய பல ஹிப்பிகளுடனும் பழக நேர்ந்தது. என் ஆர்வத்தைக் கண்ட சுவாமிஜி அவர்கள் பயிற்சிக் கூடத்தில் சேவை செய்யக் கூப்பிட்டார். நான் செல்ல வில்லை.

என்னை கிராமங்கள் விடவில்லை.

முக்கியமான ஒரு தகவலையும் கூற வேண்டும். என் தந்தை, அவரது குடும்பத்தினர் பலரும் சோதிடக் கலை தெரிந்தவர்கள். என் சிற்றப்பாவைத் தத்தெடுத்தவர் ஓர் சோதிடர். அக்காலத்தில் மேல மாசி வீதியில் பிரபலமாக இருந்தார்.

நான் பிறந்தவுடன் ஜாதகம் கணித்ததில் என் பொதுவாழ்க்கை பற்றி அறிந்திருக்கின்றார்கள். குறிப்பாக என் தந்தை அதனை விரும்பினார். சாதாரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும், பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். என் தந்தை நினைத்தது தன் மகள், பட்டம் பெற வேண்டும், சமூக சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். காந்திஜியின் தொண்டராயிற்றே. அதற்கேற்ப எனக்குக் கல்வி மட்டுமல்ல, பல கலைகளும் கற்க வாய்ப்பு ஏற்படுத்தினார். ஆண் பிள்ளை போல் துணிச்சலாக இருக்கும்படியாக வளர்த்தார். உயர்திரு காமராஜ் அவர்களும் என்னைக் கிராமப் பணிக்குச் செல்லக் கூறவும் உடனே ஆசிரியை வேலையை விடச் சொன்னார் என் தந்தை.

சோதிடம் பற்றி எனக்கு நம்பிக்கையில்லை. எங்கோ இருக்கும் உருண்டைகள் உலக மக்களின் வாழ்க்கையில் எப்படி விளையாடும் என்று கூறிவந்தேன். ஆனால் சில நிகழ்வுகள் நடந்த பொழுது வியப்பு ஏற்பட்டது. அதென்ன கலை என்று தெரிந்து கொள்ள சோதிடம் கற்க ஆரம்பித்தேன். என் ஆய்வுகள் தொடர்ந்தன. சில ஆண்டுகள் அல்ல. 40 ஆண்டுகளாக சோதிடக் கலையைவிட்டு ஒதுங்கவில்லை. பி.வி.ராமன், எழுதிய எல்லாப் புத்தகங்களும் இப்பொழுது என்னிடம் இருக்கின்றன. என் ஆய்வுகளில் எனக்கு சந்தேகம் ஏற்படும் பொழுது வித்துவான் லட்சுமணன், புலியூர் பாலு இன்னும் பலரைச் சந்தித்து விளக்கம் பெறுவேன். புலியூர் பாலுதான் எனக்கு ஓர் அறிவுரை கூறினார். வெறும் ஏட்டுப் படிப்பு போதாது, மக்களைச் சந்தித்து அவர்கள் ஜாதகங்களைப் பார்த்து அவர்கள் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். அப்பொழுதுதான் படித்தவைகளை எப்படிக் கையாளுவது என்று தெரியும் என்றார். புலியூர் பாலு ஓர் போலீஸ் காரராகப் பணியாற்றியவர். பின்னர் சோதிடரானார்.

தாராபுரம் சென்று என் தோழி பழனியம்மாள் வீட்டில் ஒரு வாரம் தங்கினேன்., போகும் முன்னரே நோட்டீஸ் அடித்துச் சுற்றுக்கு அனுப்பியிருந்ததால் நிறைய பேர்கள் வந்தார்கள். வந்தவர்களில் பலர் பல சோதிடர்களைப் பார்த்தவர்கள் அவர்களே நமக்கு கற்றுத் தந்துவிடுவார்கள் போலிருந்தது. யாருக்கும் நான் ஓர் அரசாங்க அதிகாரி என்று தெரியாது.

சிவகாசியில் மூன்று நாட்கள் தங்கி  ஜாதகங்கள் பார்த்தேன். தாராபுரத்தில் மக்கள் கொடுத்த பணத்தை கோயிலுக்கு தந்தேன். சிவகாசியில் கிடைத்த பணம் அந்த மகளிர் மன்றத்திற்குக் கொடுத்தேன். எனக்குக் கிடைத்த அனுபவங்கள் பெரும் மதிப்புடையது.

சோதிடம்பற்றி கூறுவதற்குக் காரணம் சித்தர்களைப் பற்றி என்னை எண்ண வைத்தது. நாடி சோதிடத்தை நான் நம்பவில்லை. கோடானு கோடி மக்களுக்கு எப்படி முன்னதாக ஜாதகக் குறிப்பு இருக்கும் என்ற எண்ணமே காரணம்.  இராமனாதபுர  மஹாராஜாவின் மகள் என்னுடைய தோழிகளில் ஒருவர். அவர்தான் என்னை நாடி சோதிடம் பார்க்க வைதீச்வரன் கோயிலுக்குப் போகச் சொன்னார்கள். ஒருவர் பெயரைச் சொல்லி பார்க்கச் சொன்னார்கள். அவர் பெயர் ஆறுமுகம். நானும் சென்றேன். ஆனால் ஆறுமுகம் அவர்கள் இப்பொழுது ஓலைகள் பார்ப்பதில்லை என்றார். ராணியம்மாள்தான் என்னை அவரிடம் அனுப்பினார்கள் என்றேன். அத்துடன் நாடி சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன். அவர் என்னை வியப்பாகப் பார்த்தார். பிறகு என் கோரிக்கைக்கு இணங்கினார். அவரிடம் ஒன்று முதலிலேயே கூறினேன். அவர் ஓலையைப் படிக்க வேண்டும். என்னுடையது இல்லையென்றால் இல்லை என்று மட்டுமே சொல்வேன். விளக்கம் தரமாட்டேன் என்றேன். அதற்கு விளக்கம் கூறினேன். கேள்விகளால் வந்தவர்களைப் புரிந்து கொண்டு ஓலைச்சுவடிகள் உடனே தயாரிக்கப்பட்டு வாசிப்பதாகச் செய்திகள் என்றேன். நான் உண்மை களைக் வெளிப்படையாகக் கூறவும் அந்த வயதானவர் எல்லாவற்றிற்கும் ஒப்புக் கொண்டார்.

என் அலுவலகப் பதிவேட்டில் என் பிறந்ததேதி தவறாகக் குறிக்கப்பட்டிருக்கும். காரணம் என் தாயார் பள்ளியில் சேர்க்கும் பொழுது சரியான தகவல்கள் கொடுக்க வில்லை. தந்தையின் பெயரும் முழுமையாக இருக்காது. அவர் முழுப் பெயர் சுப்பிரமணியன் ஆனால் பதிவேட்டில் வி.எஸ் மணி என்றிருக்கும். எனவே யாரும் முன்னதாக இங்கே தகவல்களும் கொடுத்திருக்க முடியாது.

இரண்டு ஓலைகள் வாசிக்கப்பட்டன. போதும் என்று எழ நினைத்தேன். மூன்றாவைதையும் பார்த்துவிட்டுப் போகச் சொன்னார். என்னை வியப்பில் ஆழ்த்த இறைவன் முடிவு செய்திருக்கும் பொழுது நான் எப்படி ஓட முடியும். வந்தவைகளில் ஒரு ஓலையில் நான் இருந்தேன். என் தந்தை, தாயாரின் முழுப் பெயர்கள், நான் பிறந்த இடம், என் ஜாதகம் இருந்தது. இது எப்படி? சித்தர்களை நினைக்க ஆரம்பித்தேன். என்னுடைய இறை நம்பிக்கை ஆழமாகியது. மற்ற ஓலைகள் வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஜாதகக் குறிப்புகளை வைத்து எழுதப் பட்டிருக்கும் நானும் ஒரு சோதிடராயிற்றே. புறப்பட்டுவிட்டேன். என் சோதிட ஆராய்ச்சியுடன் சித்தர்களைப் பற்றிய ஆய்வும் தொடர்ந்தது. இன்னும் தொடர்கின்றது.

சித்தர்கள் விஞ்ஞானிகள். அவர்கள் கண்டுபிடிப்பில் 10 சதவிகிதம் கூட இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. நமக்குத் தெரியாத அதிசயங்கள் நிறைய இருக்கின்றன. நமக்குத் தெரியாது என்பதால் இல்லை என்றாகிவிட முடியுமா? சித்தர்கள் பாடல்களில் மறை பொருள் நிறைய இருக்கும். வெளிப்படையாகத் தெரிந்தால் வன்முறையாளர்கள் கைகளில் கலைகள் சென்றால் நாசம் ஏற்படும். சித்தர்கள் தங்கள் கண்டு பிடிப்பவைகளுக்குக் கடைகள் விரிக்கவில்லை. ஆனால் சோதிடம் என்றும் ஆன்மீகம் என்றும் கொஞ்சம் தெரிந்தவர்கள் கூட அதனை வியாபரமாக்கி விட்ட படியால் அவைகள் கேலிக்குரியதாகிவிட்டன. அரசியல் முதல் ஆன்மீகம் வரை பொய்கள் கலந்து மனிதனை வாட்டுகின்றதை ஒதுக்க முடியுமா?

ஓர் பத்திரிகையில் ராசிபலன் எழுதினேன். ஓர் சோதிட அமைப்பில் ஜாதகங்கள் பார்த்து பலன்கள் எழுதிக் கொடுத்தேன். அண்ணா நகர் டைம்ஸில் விளம்பரம் கொடுத்து ஜாதகங்கள் பார்த்தேன். ஆல் இந்தியா சோதிடர்கள் சங்கத்தில் நான் ஆயுள் உறுப்பினர். இது திரு பி. வி ராமன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இப்பொழுதும் பலர் எழுதிய சோதிடப் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன. தொழில் செய்ய வைத்திருக்கவில்லை. சோதிடக் கலை ஓர் கடல். எனவே இன்னும் நான் ஒரு மாணவி. கற்றுக் கொண்டே இருக்கின்றேன்.

இதுவரை இணைய உலகில் நான் பங்கு கொள்ளும் குழுமங்களிலோ, எழுதும் இணைய இதழ்களிலோ சீதாம்மா ஒரு சமூக சேவகி, பெண்ணியம் பேசும் எட்டய புரத்துக்காரி என்று மட்டுமே தெரியும். எனக்குள் இருக்கும் ஆன்மீக வாழ்வைக் காட்டியதில்லை. என் மனச் சிமிழில் என் முருகன் வாழ்கின்றான். அந்தரங்க புனிதமானது.

இப்பொழுது இவைகளைத் தெரிவிக்கக் காரணம் என் முடிவுரையில்  மன அமைதி பெற, மன அழுத்தம் குறைய எனக்குத் தெரிந்த சில ஆலோசனைகள் கூற நினைத்திருப்பதால் முன்னோடியாக  என்னைப்பற்றிய செய்திகளை எழுதினேன்.

வரலாற்றுப் புத்தகங்கள், ஆன்மீகப்புத்தகங்கள் நிறைய இப்பொழுதும் என்னிடம் இருக்கின்றன. இனி வரலாற்றுப் புத்தகங்கள் தேவையில்லை. இனி நான் வரலாறு எழுதப்போதில்லை. எனக்கு சந்தேகங்கள் ஏற்படும் பொழுது சென்னையில் குரோம்பேட்டையில் இருக்கும் வரலாற்று ஆய்வாளர் திரு ராமச்சந்திரன் அவர்களை அதிகமாக நாடுவேன்.  வரலாற்றுச் செய்திகளை அறிய விரும்புகின்றவர்கள் இவரிடம் கேட்டால்  நிறைய விளக்கங்கள் தருவார். இவர் வரலாறு மட்டுமல்ல, மானுடவியல், சமூகவியல், தமிழ் இலக்கியம் பயின்றவர். எனக்கு இவர் ஓர் நூலகம்..

இணைய இதழ்களில் எழுதுவதும் இந்தத் தொடருடன் முடிந்துவிடும். பழகிய குழுமங்களில் முடிந்த பொழுது உலா வந்தால் போதும். ஏதாவது கிறுக்க நினைத்தால் வலைப் பூ இருக்கின்றது.

எல்லாவற்றையும்விட தியான வாழ்க்கையை விரும்புகின்றேன். இதை மறைந்த நம் நண்பர் திரு மலர்மன்னன் அவர்களிடமும் கூறினேன். என்னைப் புரிந்து கொண்டு அவரும் ஆசியளித்தார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

நல்ல எண்ணங்களில், நல்ல செயல்களில் ஒன்றுபடுவோம். காழ்ப்புணர்ச்சியை விடுவோம். எல்லோரையும் நேசிப்போம்.

அன்பே இறைவன்

“அனைத்துச் சமயங்களும் சாதகர்களை ஒரே இலட்சியத்திற்கு இட்டுச் செல்கின்றன.

எத்தனை மனிதர்களோ அத்தனை கொள்கைகள். எனவே முடிவை நீங்களே எடுங்கள். எது பொய் , எது மெய் என்பதைப் பிரித்தறியக் கற்றுக் கொள்ளுங்கள். ஒருவரிடம் மூன்று நல்ல அம்சங்களும் , ஆறு தீய அம்சங்களும் இருக்குமானால் அந்த மூன்று நல்ல அம்சங்களையே காணுங்கள். ஒவ்வொரு பிரச்சனையுடனும் அதன் தீர்வும் பிறந்து விடுகின்றது. எனவே பிரச்சனைகள் எழுங்கால் அவற்றைக் கண்டு அஞ்சாதீர்கள்.எவரிடமும் குற்றம் காணாதீர்கள்.

அன்பு இருக்குமிடத்தில் அமைதியும் ஆனந்தமும் இருக்கும்.

அவரவர் ஆரோக்கியத்திற்கு அவரவரே காரணம்.

அமைதியாய் இருங்கள். உண்மையாய் இருங்கள்

உலகம் முழுவதும் ஒரு குடும்பமே

ஏழை எளியோர்க்குத் தொண்டு செய்யுங்கள்.

அனைவருடைய நல்வாழ்வை நாடுங்கள்.”

சுவாமி சிவானந்த மகரிஷி

என் குருநாதர்.

அடுத்து நிறைவுப் பகுதியில் சந்திப்போம்

படத்திற்கு நன்றி.

 

************************

 

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்‘அப்பு’வின் மகாராணியும் ‘ஆதி’யின் பகவானும்
author

சீதாலட்சுமி

Similar Posts

14 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த சீதாலக்ஷ்மி அம்மையாரின் வாழ்க்கை அனுபவங்களை அவ்வப்போது வாசிப்பதுண்டு.

    இப்போதைய பாகத்தினுடன் காவியணிந்த சிறுவனும் சிலுவை மாலையணிந்த சிறுவனும் அருகருகே அமர்ந்த சித்திரத்தை கண்டு தாங்கள் மத நல்லிணக்கம் பற்றி ஏதும் தங்களது அனுபவங்கள் தெரிவிப்பீர்கள்; நாமும் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வோம் என்ற ஆசையிலே வாசித்தேன்.

    சஹோதரி தேனம்மையின் வ்யாசத்தை வாசித்ததில் மனதை நிறைத்த முருகன் அகலகில்லேன் என இங்கும் மனதை நிறைக்க விழைந்தால் அவன் கருணையை என்னென்று சொல்வது. அருணகிரிப்பெருமான் வாக்கினாலேயே அவனை நினைக்கவும் இயலுமன்றோ. இன்று அடியார் வாயிலாக அளவிலா முருகனின் கருணைப்பொழிவு என்றால் மிகையாகாது.

    திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
    பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
    மருவடி வான வதனங்க ளாறும் மலர்க் கண்களுங்
    குருவடி வாய்வந்தென்னுள்ளங் குளிரக் குதிகொண்டவே

    \யார் சிறந்த கடவுள் என்று அறிய தேவ லோகத்தில் தேர்தலா நடத்த முடியும் ?\

    முத்தான வார்த்தை அம்மா!

    \இறைவனை நம்புகின்றவர்கள் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.\

    அருமை. மனிதர்களிடம் நேசம் குறைகின்றதென்றால் குறை நாம் பார்க்கும் மனிதர்களிடம் அன்று. குறை நம்மிடம் என குஹனடியார் சொல்ல நான் கேட்டதுண்டு.

    \ஒருவரிடம் மூன்று நல்ல அம்சங்களும் , ஆறு தீய அம்சங்களும் இருக்குமானால் அந்த மூன்று நல்ல அம்சங்களையே காணுங்கள். \

    அருமை அம்மா! என் மனக்கண்ணாடியைப் பார்ப்பது போல் இருக்கிறது மேற்கண்ட வாசகத்தை வாசிக்குங்கால். ஆனால் செயல்பாட்டில் என்னிடம் குறைகள் உண்டு. வள்ளிமணாளன் அருள் குறைகளைக் களையும்.

    \எல்லாவற்றையும்விட தியான வாழ்க்கையை விரும்புகின்றேன். இதை மறைந்த நம் நண்பர் திரு மலர்மன்னன் அவர்களிடமும் கூறினேன். என்னைப் புரிந்து கொண்டு அவரும் ஆசியளித்தார்.

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

    நல்ல எண்ணங்களில், நல்ல செயல்களில் ஒன்றுபடுவோம். காழ்ப்புணர்ச்சியை விடுவோம். எல்லோரையும் நேசிப்போம்.

    அன்பே இறைவன்

    “அனைத்துச் சமயங்களும் சாதகர்களை ஒரே இலட்சியத்திற்கு இட்டுச் செல்கின்றன.\

    “ம” என்று முருகனை நினைக்கையில் அவன் நான் மிகவும் மதிக்கும் அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயரையும் உடன் நினைக்க வைத்ததும் அவருடைய ஆழ்ந்த ஆசிச்சொற்களையும் உள்வாங்க வைத்ததை என் சொல்வது

    ஆம் அனைத்துச் சமயங்களும் சாதகர்களை ஒரே லட்சியத்திற்குத் தான் இட்டுச் செல்கின்றன.

    ஒரே ஒரு விக்ஞாபனம்.

    ஸ்வாமி சிவானந்தர் தங்களுக்கு வழங்கிய ஆன்மீக அறிவுரைகளையும் ஒரு பாகமாக தொகுத்தளித்தால் வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் பயனுறுவார்கள்.

    வேறென்ன சொல்ல இருக்கிறது அம்மா!!!!!!!!

    வேலும் மயிலும் சேவலும் துணை

  2. Avatar
    Adaikalaraj says:

    எத்தனையோ விஷயங்களை புதுமையான கோணத்தில் நேர்மையாக எழுதி வந்திருக்கிறீர்கள். அடுத்த வாரம் முடிக்கப் போகிறீர்கள் என்னும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது.

  3. Avatar
    Manikandan says:

    இது வரை எழுதியவை அனைத்தும் படித்து வந்துள்ளேன். உயிரூட்டத்துடன் எழுதி இருந்தீர்கள். கடைசியாகப் பின்னூட்டம் எழுதலாம் என்று இருந்தேன். அருமை. பாராட்டுக்கள்.

    முடிவுப்பகுதியில் மன அமைதி பெற மன அழுத்தம் நீங்க வழிகள் சொல்லப் போவதாகச் சொல்லி உள்ளீர்கள். இன்று அனைவருக்கும் தேவைப்படுவது அது தான். அதை தங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் சொல்வது சரியாக இருக்கும். அடுத்த வாரம் வரை காத்திருக்கிறோம்.

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    தூய மரியன்னைக்கல்லூரி, மற்றும் மறைத்திரு பேராயர் தாமஸ் பர்ணாந்து ஆண்டகை பற்றிய குறிப்புக்கள் மிக அருமை.

  5. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    என் அன்புள்ள சீதாம்மா,

    இந்த வாரம் உங்கள் அனுபவங்களைப் படித்ததும்…அசந்து போனேன்.
    ஜோதிடக் கடலையும் விடாமல் மூழ்கி முத்தெடுத்து இருக்கிறீர்கள்.
    அதன் கரை காண தாங்கள் செய்த ஆராய்ச்சி வியக்க வைத்தது.
    அதிலும் சேவை எண்ணம் மேலோங்கிய விதம் அருமை. உங்கள்
    மனத்தில் இருக்கும் அனுபவ அறைகளைக் காணும் போது ..
    “சாதனைப் பெண்மணி” என்று மனதாரப் பாராட்டுகிறேன் .
    ஆரம்பத்தில் இருந்து எத்தனை எத்தனை அனுபவங்களை
    அழகாக சுவையாக வாழ்வியல் என்ற தலைப்புக்கு ஏற்புடையதாக
    என்னைப் போன்றவர்களுக்குப் பாடமாக எழுதி இருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி. வாழ்த்துக்கள். இறைவன் முருகன் உங்கள் கூட
    இருந்து உங்கள் சிந்தனையைச் செயலாக்கி இருக்கிறார்.

    அன்புடன்,
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  6. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    என் அன்புள்ள சீதாம்மா,

    தங்களின் கட்டுரையில் வரும் குழந்தைகள் படங்கள் அருமை.
    மத நல்லிணக்கத்தை பெருமை படுத்தும் விதமாக அழகான
    குழந்தைகள். நிறைவாக இருக்கிறது.

    அன்புடன்,
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    வாழ்வியல் வரலாற்றில் சில் பக்கங்கள் என்று சீதாலட்சுமி அவர்கள் எழுதி வந்த இட் தொடரை விடாமல் படித்து வியந்தவர்களில் நானும் ஒருவன்.

    ஒவ்வொரு வாரமும் புதுப்புது அனுபவங்களைக் கோர்வையாக எப்படித்தான் எழுதமுடிகிறதோ என்று எண்ணிப் பார்ப்பேன். அத்தனையும் வாழ்க்கைக்கு பயனுள்ள அனுபவப்பூர்வமான முன் உதாரணங்கள் என்பேன்.

    சிறு வயது, இளம் பருவம்,பள்ளி கல்லூரி மாணவப் பருவம், பணி புரிந்த காலம், களப்பணியில் ஈடுபட்டது, அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், ஆண் பெண் நண்பர்கள்,என்று பலதரப்பட்ட பரந்த நினைவுகளையும், அனுபவங்களையும் பொறுமையாக எழுத்தில் கொண்டுவந்து வாசகர்கள் மனங்களில் நீங்காத இடம் பெற்றுள்ளார் சீதாபிராட்டி அம்மையார்.

    உங்களின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது உண்மை. இனி அடுத்த வாரத்துடன் நீங்கள் தொடரை முடித்துக் கொள்ளப்போவதுதான் வருத்தத்தை உண்டு பண்ணுகிறது.

    பிராமண வகுப்பில் பிறந்து, பாரதியின் புரட்சிக் கருத்துக்களில் மூழ்கி, திராவிட இயக்கத்தின் தாக்கத்திலும் உழன்று, சமுதாய நலனில் முழ மூச்சுடன் செயல்பட்ட ஒரு புரட்சியும் எழுச்சியும் மிக்க புதுமைப் பெண் நீங்கள்! உங்களின் தொடர்பு எனக்கு பெருமகிழ்ச்சியையே உண்டுபண்ணுகிறது…..டாக்டர் ஜி.ஜான்சன்.

  8. Avatar
    MURALI says:

    மகாப் பெரியவராக நான் மதிப்பவர். அவரை அவ்வப் பொழுது சந்தித்து உரையாடுவேன்.

    ஒரு முறை சந்தித்த பொழுது அவர் கூறியது:

    இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது ஒரு சக்தி. அதற்கு உருவம் கிடையாது. நாமமும் கிடையாது. ஆனால் மனிதன் முயன்றால் அந்த சக்தியை உணரமுடியும். அதனை இறைவன் என்றோ, கடவுள் என்றோ சொல்லிக் கொள்ளட்டும். அவர் இந்த ஊரில்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல. இந்தியாவானாலும் கடல் கடந்த பிரதேசமானாலும் எங்கும் இருப்பார். அவர் படைத்த பூமியில் எங்கும் இருப்பார்.

    ” Then RAMAYANAM AND MAHABHARATAM ARE STORIES- BHAGAVAT GITA AND VEDAS ARE JUST A NARRATION”.

    VISHNUSAHASRANAMUM…BHISHAMA …DESCRIBES GLORY OF LORD….LALITHA SAHASARANAM AND BHAJA GOVINDAM AND SRIRUDRAM JUST A SONG.

    ARUNAGIRINATHAR” MURUGAN THIRUPHUGZH IS ????

    RAMAKRISHNA PARAMHAMSAR ” KALI UPASANA”?/////

    SWAMI VIVEKANANDHA ??//

    ” ALZHWAR PASURAM “THIRU KANDEN,PONNMAYNI KANDAN /// AND DEVARAM /////ABOUT WHAT THEY ARE TALKING ABOUT???//

    ” I DON’T KNOW WHAT MADE THAT PERIYAVAR TO SAY THAT”

        1. Avatar
          சோழன் says:

          Periyavar refers to the late Chandrasekara Saraswati Swamigal. Brahmins call him Periyavaa.

          He is well known for his ultra conservatism for which he was crticised during his lifetime.

  9. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் சீதாம்மா,

    வணக்கம். எத்துனை பக்குவப்பட்ட எழுத்துக்கள். அனுபவ முத்துக்கள், அத்தனையும் முத்திரையாக பதிந்துள்ளன… மிக்க நன்றி அம்மா.

    அன்புடன்
    பவள சங்கரி.

  10. Avatar
    Arun Narayanan says:

    One opens up the Thinnai with a great expectation of Seetha amma and Venkat Swaminathan. Two giants in their own inimitable style mesmarise the readers. It will be very difficult for some of us not to see Seetha Amma’s writings in Thinnai. If some editor could combine these 50 articles into one it will be an encyclppedia in itself. We Pray for a healthy and long life to our beloved “SEETHA AMMA”

    1. Avatar
      சோழன் says:

      Venkat Swaminathan and Seethaamma have only one thing in common: Birth in the same caste. They differ in all other things.

      She is a bold progressive thinker; an iconoclast; accepts anyone on progressive thoughts. She is a dogged questioner and her questions can disturb people who don’t like to see changes in society.,

      Therefore, it was possible for her to write about EVR, Anna and others in a favouable light. She could make friends both with a Catholic Bishop and a Hindu Swamiji. It was due to her open mindedness that these two famous monks from extreme sides of the spectrum took her as a familiar companion to talk with. She studied in a Xian college and came from an area noted more for aridity than for greenness: karisal kadu; and lived more among the people from all kinds of classes, all of which have finally made her SEE LIFE AS A WHOLE.

      Venkat Swaminathan is a stark contrast to her. He is a conservatist with strong like for his own caste people and harbours a deep rooted hatred for EVR, Annathurai and others just because they criticised his community. He has not lived in the far south like Ettayapuram where you find more nayakars, theevars, etc than Brahmins. He feels at home only among his caste men and out of sync with others. He wants Tamil society without any changes. This cloistered living led to narrow mindedness. HE SAW LIFE IN PARTS !

      In religion and policial views, Venkat Swaminathan is a die hard conservatist.

      In sum, Seethamma and Venkat Swaminathan are a strange kettle of fish. Unclubbable personalities.

      I forgot to mention this: there is another common between them: AGE. :-)

Leave a Reply to சோழன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *