வாழ நினைத்தால் வாழலாம்!

This entry is part 15 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

 

உலகப்புகழ் மெரீனா கடற்கரை. பலவிதமான வண்ணங்களும், எண்ணங்களும் சுமந்துத் திரியும் மனிதர்களுடன் நாளும் உறவாடும் ஓயாத அலைகள். மாறி மாறி வரும் மக்கள் மத்தியில் என்றும் மாறாமல் அனைத்திற்கும் சாட்சியாய் நிற்கும் கடல் அன்னை. பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கி, விழுங்கினாலும் பச்சைப்பிள்ளையாய் துள்ளி விளையாடும் தோற்றம். கதிரவன் தம் செங்கிரணங்களை வீசத்துடிக்கும் மங்கிய  இளங்காலைப் பொழுது.

 

சரசரவென கடலோரம் ஈர மணலில் பாதம் பதித்துக் கொண்டிருந்தவளின் நடையில் இருந்த தள்ளாட்டம் ஏதோ உள்ளுணர்வாக தப்பாகச் சொல்ல தன் நடையை எட்டிப்போட்டாள் அனுஜா. வழக்க்மாக் அவள் வாக்கிங் வரும் நேரம் இன்று சற்று தள்ளிப்போனது. தான் நினைத்தது சரியாக இருந்தது புரிந்தது. அந்தப் பெண்ணின் பின்புறம் மட்டுமே தெரிந்தது… ஆளையும், உயரத்தையும் வைத்துப் பார்க்கும்போது இருபது அல்லது ஒன்றிரண்டு முன்பின்னாக வயது கணிக்கலாம். ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தாள். யோசித்துக் கொண்டே நெருங்கியவள், அதற்குள் அவள் அவ்வளவு விரைவாக கடலில் சென்று இறங்குவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கடக்க வேண்டிய பத்தடி தூரத்தை அவ்வளவு விரைவாக நான்கு எட்டில் கடந்தது தனக்கே ஆச்சரியம்தான்.. எட்டிப்போய் இழுத்துப் பிடிக்க முயன்றாள். அதற்குள் வேகமாக முன்னேறியவள், அலைகள் இழுத்த இழுப்பிற்கு சமாளிக்க முடியாமல், விழுந்தவளை ஆழத்தில்  செல்வதற்குள் பின்னாலிருந்து ஒரு கரம் அணைத்துப் பிடித்து இழுத்தது.

 

வெளியே கொண்டு வந்து போட்ட அனு, அவள் வயிற்றில் அமுக்கி உள்ளே சென்ற நீரை வெளியேற்றினாள். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவளை பார்த்த மாத்திரத்திலேயே அவளுடைய இந்த பரிதாபமான முடிவிற்கான காரணம் புரிந்தது. மேற்கொண்டு அவளிடம் எதுவுமே பேசாமல் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். அவள் என்று சொல்லக் கூடியவளும், மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாக அனுவின் பின்னே தொடர்ந்தாள். அனு கூட்டிச்சென்ற இடம் ஒரு ஆசிரமம் போல இருந்தாலும், அந்த காலை வேளையில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ராமசாமி என்று யாரையோ பெயர் சொல்லி அழைத்தவள், அவளுக்கு தங்குமிடத்தை காட்டிவிட்டு வரச்சொன்னாள். ஒன்றும் பேசாமல் செல்ல எத்தனித்தவளை, ”உன் பெயர் என்ன” என்ற ஒற்றைக் கேள்வி நின்று திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு நிமிடம் அனுஜாவின் கண்களை உற்று நோக்கியவள், “நானாக வைத்துக் கொண்ட பெயர் அம்ருதா” என்றாள்.

 

ஒரு புன்னகையை பதிலாகத் தந்தவள், எதையோ யோசித்துக் கொண்டே நகர்ந்தாள் அனுஜா.

 

மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. தன் வாழ்விற்கும் ஓர் அர்த்தம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. மனதில் இருந்த அந்த பழைய கோபமும், ஆத்திரமும் குறைந்து இன்று அமைதியானதொரு நிலை அம்ருதாவிற்கு.   உண்ணும் சோற்றிற்கு ஏற்ற உழைப்பு, அதற்கேற்ற ஊதியம், தையல் பயிற்சி வகுப்பு, யோகாசனம், தியானம், மருத்துவ ஆலோசனை நேரம் என பொழுது வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. விவரம் தெரிந்த காலத்திலிருந்து பெற்றோரின் பரிவும், பாசமும்கூட உணர்ந்திராதவளுக்கு, இன்று அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, என எத்த்னையோ உறவுகள். ஆயிரம் இருந்தும், தன்னை ஒதுக்கித் தள்ளிய குடும்பத்தினர் மீது வெறுப்போ, கோபமோ எதுவுமே இல்லாதது தனக்கே ஆச்சரியம்தான். தாங்கொணா அலட்சியப் பார்வைகளும், எள்ளி நகையாடும் பேச்சுக்களும் பலவற்றை சகித்துக் கொண்டாலும், தன்னைப் பெற்றவர்களே காட்டிய இழிவான பார்வையையும், அவர்களுடைய தர்மசங்கடங்களையும் ஒவ்வொரு நாளும் சகித்துக் கொள்ள இயலாமையில்தான் வீட்டை விட்டு சொல்லாமல்,கொள்ளாமல் ஓடி வர வேண்டியதாகியது. ஏதோ தானே விரும்பி இப்பிறவியை எடுத்துக் கொண்டது போல பெற்றோரின் நடவடிக்கை அவள் நெஞ்சை முள்ளாய் தைத்தது. மனம் என்ற ஒன்று மட்டும் எல்லோரைப் போன்று தனக்கும் பொதுவாக அமைந்துவிட்டதை அவர்களால் உணர முடியாமல் போனதுதான் வேதனையின் உச்சம்….

ஆணாய்ப் பிறந்த அண்ணனும், பெண்ணாய்ப் பிறந்த தங்கையும் பெற்ற அன்பும், பாசமும், இரண்டுங்கெட்டானாக பிறந்த தனக்குக் கிடைக்காததை பிஞ்சிலேயே உணர்ந்தவள். இது நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் போல, தான் பெற்ற குழந்தைக்கு அடிப்படை வாழ்வாதார சூழலையாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற குறைந்தபட்ச எண்ணம் கூட  இல்லாமல் போனதை என்ன செய்ய முடியும்..

 

கழுகுக் கூட்டத்தில் சிக்கிய கோழிக்குஞ்சாக ஆன தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் அன்று எடுத்த முடிவு சில மணித்துளிகளிலேயே தலையெழுத்தையே மாற்றியமைத்து விட்ட வரமாக எண்ணத்தோன்றியது. பெற்றோரையும், உடன் பிறப்புக்களையும் அவர்கள் அறியாமல் அவ்வப்போது ஒளிந்திருந்து பார்த்து வருவாள். ஒரு நாளாவது தன்னைப்பற்றி யாராவது தவறியாவது ஒரு வார்த்தை பேசக்கூடாதா என்ற ஏக்கமும் இருக்கும். விட்டது தொல்லை என்று நிம்மதியாக, நினைப்பதுகூட பாவம் என்று இருப்பவர்கள், அர்த்தநாரீஸ்வரரை மட்டும் விழுந்து, விழுந்து கும்பிடுவது வேடிக்கையாக இருந்தது.

 

வீட்டை விட்டு வந்த இந்த பத்து ஆண்டுகளில் பட்ட வேதனைகள் கடலளவையும் மிஞ்சுமே…  பிச்சை எடுத்து வயிறு வளர்த்தபோது கூட படாத சிரமங்கள் பருவம் வந்த பிறகு கழுகுகளிடம் சிக்கி சீரழந்த நேரம் மரணமே மேல் என்று நினைக்கத் தோன்றியது. இன்று தானும் இந்த உலகில் வாழ்த்தகுதி வாய்ந்த ஒரு உயிர் என்பதை உணரச் செய்த அனுஜாவை தெய்வமாகவே கொண்டாடினாள். அது மட்டுமல்லாமல், தன்னால் மூன்று ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து அவர்களைப் படிக்க வைக்க முடிகிறது என்று எண்ணும்போது பெருமை பொங்கியது..

 

அன்று வங்கிக்கு பணம் கட்டுவதற்காகச் சென்று திரும்பும் வழியில் தெருவோரம் ஏதோ சத்தமும், கைகலப்பும் தெரிந்தது. தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு நெருங்கியவள், அங்கு ஒரு ஐந்து ரூபாய் பணத்திற்காக இரண்டு குரூப்பாக பிரிந்து அடிதடி போட்டுக்கொண்டிருந்த திருநங்கைகளைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது. பலமுறை இவர்களிடம் விடுதியில் வந்து சேரும்படி சொல்லியும், அங்கிருக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தொடர்ந்து தங்க மறுத்து இப்படி தெருவில் காட்சிப் பொருளாக ஆகிறார்களே என்ற கோபமும் ஆத்திரமும் வந்தது.

 

”அடிப்பாவிகளா… ஏண்டி இப்படி செய்யறீங்க எத்தனைவாட்டி சொன்னாலும் திருந்த மாட்டீங்கறீங்க.. எதுக்குடி இந்த சுயபச்சாதாபம் உங்களுக்கு… ஆண்டவன் நமக்கு படைப்புலதான வஞ்சம் பண்ணிப்புட்டான்.. மத்தவிங்களைப்போல நல்ல மூளையும், சக்தியும் கொடுத்திருக்கான்.. நமக்குனு எத்தனையோ தனிப்பட்ட திறமைகள கொடுத்திருக்கானே.. கைகால் இல்லாதவன்கூட தன்னால முடிஞ்ச தொழிலைச் செய்யுறான்.. நாம் மட்டும் ஏன் இப்படி கையாலாகாம்த் திரியணும்.. நாம ஒழுங்கா ஏதோ ஒரு தொழில நேர்மையா செஞ்சாத்தானே அரசாங்கமும் நம்மள் புரிஞ்சிக்கிட்டு சலுகைகள தருவாங்க. மக்களும்  மரியாதையா நடத்துவாங்க.. இப்படி நம்மளையே அசிங்கப்படுத்திக்கவா இந்த பொறப்பு… நம்ம வாழ்க்கைய நாமதானடி வாழணும்.. வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்….. ?”

 

“ஐய.. இங்க பாருங்கடி இந்தக் கூத்தை… அட்வைஸ் பண்றாளாம்… நாங்க என்ன கோட்டையப் புடிக்கவா போட்டுக்கிட்டு கிடக்கறோம்.. அடுத்த நேர வவுத்துப்பாடு.. கஞ்சிக்கிடி.. பசிக் கொடுமை பட்டாத்தான தெரியும்..  வந்துட்டா என்னமோ புத்தி சொல்ல..“

 

போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டதால், யாரோ கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் வந்து வழக்கம் போல மிரட்டி, ஜீப்பில் ஏறச்சொன்ன போது, அம்ருதா, அவர்களுக்காக வாதாடி, காப்பாற்றினாலும், இது நிரந்தரம் அல்ல . விரைவிலேயே அடுத்த சண்டைக்குத் தயாராகிவிடுவார்கள்…   சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற வேதனையுடனே, அடுத்து தான் கலந்து கொள்ள வேண்டிய தொலைக்காட்சி பேட்டிக்கான நேரம் ஆகிவிட்டதே என்று ஓட்டமாக ஓடினாள். தன்னுடைய த்னனம்பிக்கையையும், மனத்தெளிவையும் பாராட்டும் வகையிலும், இது போன்று பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அம்ருதாவை பேட்டி எடுத்தார்கள். நிகழ்ச்சி முடிந்து திரும்ப இரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

 

இரயில் நிலையத்தின் அருகில் உள்ள குறுக்குச் சந்தின் வழியாக சென்றால் சீக்கிரம் விடுதியை அடைந்து விடலாம் என்று நினைத்து வண்டியைத் திருப்பியவள், அந்த சந்தில் தெருவிளக்கு பழுதாகிப் போனதால் இருண்டு கிடந்தது.. வேகமாகக்கடந்து போய் விடலாம் என்று நினைத்து வண்டியை முடுக்கியவள், கொஞ்ச தூரம் சென்றவுடன் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒரு பெண் ஓடுவதையும், முரட்டு உருவம் ஒன்று துரத்திக்கொண்டு ஓடி, அந்தப் பெண்ணை நெருங்கும் சமயம் சரியாகப் பார்த்துவிட்டாள். சற்றும் தயங்காமல் அவர்களை நெருங்கி வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கினாள். பளிச்சென்ற ஒளியில் கண்கள்கூச தடுமாறிய அந்த உருவம் கொஞ்சம் தயங்க, அந்த இடைவெளியில் கையை மடக்கி, பலமனைத்தும் திரட்டி, பொளேரென அவன் பிடரியில் ஒன்று விட்டாள். அப்படியே சுருண்டு விழுந்தவன் கதி என்னவானது என்றுகூட கவனிக்காமல் அந்தப் பெண்ணை கையைப் பிடித்து இழுத்து வந்து வண்டியை ஸ்டார்ட் செய்து அவளை உட்கார வைத்து வேகமாகக் கிளப்பினாள்.. மெயின் ரோடிற்கு வந்தவுடன்தான் உயிரே வந்தது அவளுக்கு. அந்தப் பெண்ணை அப்போதுதான் முழுவதுமாக கவனித்தாள்.. ஆச்சரியத்தில் கண்கள் விரிந்து கலங்கிப் போனது. தன் உடன் பிறந்த சகோதரியைக் காப்பாற்றியிருப்பது தெரிந்தவுடன், தன் பிறப்பிற்கே ஒரு அர்த்தம் கிடைத்தது போன்று உணர்ந்தாள் அவள்.. இதை அறியாமலே பயத்தில் உரைந்து போயிருந்த அந்த பெண் அம்ருதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கள் கலங்க “ரொம்ப நன்றிக்கா.. ஆண்டவனா பார்த்துதான் உங்களை அனுப்பி என்னைக் காப்பாற்ற வைத்தான். கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டு திரும்பி வந்தேன். கூட வர பிள்ளைக இன்னைக்கு வரல.. தனியா வந்தேன். குறுக்கு சந்துல வந்தது தப்பாப் போச்சு.. நல்ல நேரத்துல தெய்வமாட்டமா வந்து அந்த குடிகார பாவிகிட்ட இருந்து காப்பாத்திட்டீங்க” என்று கண்கள் கலங்க நெகிழ்ந்து போனாள். தன் உடன்பிறப்பின் ஸ்பரிசம் பட்டவுடன், புத்துயிர் பெற்றது போன்று உணர்ந்தவள், ஒன்றும் பேச முடியாமல், அவளிடம் ஏதும் காட்டிக் கொள்ளாமல் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டு, வீட்டின் முனையிலேயே இறக்கிவிட்டுச் சென்றாள்…  அக்கா… நன்றிக்கா என்று அன்பாக தன் உயிர்த் தங்கை சொல்வது காதில் கேட்டும், திரும்பி கையை ஆட்டிவிட்டு வேகமாக  நகர்ந்தாள் அதே மகிழ்ச்சியுடன்……

————————–

Series Navigationஅற்புதமான ஓர் சுய முன்னேற்ற புத்தகம் – Who moved my Cheeseபொன் மாலைப்பொழுது
author

பவள சங்கரி

Similar Posts

5 Comments

  1. Avatar
    முகில் தினகரன் says:

    பவள சங்கரி அவர்களின் பக்குவமான எழுத்து நடை பாராட்டுக்குரியது.
    முகில் தினகரன்

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் பவள சங்கரி,

    கதை ஒரு நிதர்சனத்தை சொல்லும்போது, படிக்கும்போது நெஞ்சம் உறுத்தத் தான் செய்தது…
    எத்தனை பார்க்கிறோம் நிஜத்தில் தெருவில்…..சிந்திக்க வைத்தது உங்கள் எழுத்துக்கள்.
    வழக்கம் போலவே….ஆர்மையான நடை..ஆழமான சிந்தனை. நிதர்சனமான உண்மை.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் ஜெயஸ்ரீ,

      தங்களின் வாசிப்பிற்கும், கருத்துரைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி தோழி.

      அன்புடன்
      பவள சங்கரி

  3. Avatar
    punai peyaril says:

    வழக்கம் போலவே….ஆர்மையான நடை..ஆழமான சிந்தனை. –> வழக்கமான ஆழமான சிந்தனை என்பது இதில் எங்கு வெளிப்படுகிறது என்று சொல்லலாமே… இதே இதழில் ‘அரவான்’ என்ற கதை பற்றி உங்கள் கருத்தென்ன. அதுவும் போக அர்த்தநாரீஸ்வர் அலியோ , இல்லை ஆண் ஃபீலிங் உள்ள பெண்ணோ, பெண் ஃபீலிங் உள்ள ஆனோ தெரியவில்லை. மெரினாவில் போய் கார் கண்ணாடியை சிறிது இறக்கி விட்டோ, இல்லை தனியாக மணலில் தள்ளி போய் உட்கார்ந்தால் இவர்களின் இன்னொரு உலகம் தெரியும். எழுத வேண்டும் என்ற வேகத்தில் வாராவாரம் வேறு வேறு கேரக்டர் தாட் நாட் என்ற பாணியில் எழுதப்படுகிறது… தேட்ஸ் ஆல்…

Leave a Reply to punai peyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *