விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்

author
2
0 minutes, 7 seconds Read
This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

சு. முரளீதரன்

முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழாய்வுத் துறை

தேசியக் கல்லூரி (தன்னாட்சி)

திருச்சி – 01

நூல் அறிமுகம்

பக்தியை ஊட்டும் நூலாகத் தோன்றிய தூது இலக்கியம் பின்னர் சிற்றின்பச் சுவையைக் கொடுக்கும் தூது இலக்கியமாக மாறியது. பக்தி இலக்கியங்களில் நாயகன் நாயகி பாவம் என்ற நிலையிலிருந்து மாறி. கி.பி  16-ம் நூற்றாண்டில் சிற்றின்பச் சுவையைப் புலவர்கள் கலந்தார்கள். இந்தக் காதல் சுவை காலப்போக்கில் காமச் சுவைiயாக மாறத் தொடங்கியதால் தூது விடும் பொருள்கள் அஃறிணையிலிருந்து உயர்திணை மாந்தர்களாகிய விறலியர் என்னும் பாணர்  குலப்பெண்களைத் தூதுவிடத் தொடங்கினார்கள். ‘ஆண் தூதைக் காட்டிலும் பெண் தூதே சிறப்பானது’ என்ற முடிவுக்;குப் பிற்காலப் புலவர்கள் வந்தார்கள். விறலி விடு தூது நூல்களில் புலப்படுத்தும் உண்மைகளை ஆராய்வதே இக்கட்டுரை நோக்கம் ஆகும்.

தூது

இது வரை தமிழில் தோன்றியுள்ள 417 சிற்றிலக்கியங்களில் மிகவும் பழமையானது தூது இலக்கியம் ஆகும்.

ஒருவர் தம் கருத்துக்களையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் மற்றவருக்குத் தெரிவிக்க பிறிதொருவரை அனுப்புவதே தூது ஆகும். இதை அகத்தூது  புறத்தூது என இரண்டாகக் கூறலாம்.

1.   தலைவன் தலைவியிடத்தே தூது அனுப்புவதையும் தலைவி தலைவனிடத்தே தூது அனுப்புவதையும் அகத்தூது என்று கூறுவார்கள். இதைக் களவுத் தூது, கற்புத் தூது என இரண்டாகப் பகுப்பார்கள்.

2.   அரசர்கள் பகைவரிடத்துத் தூது அனுப்புவதையும், புலவர்கள் வள்ளல்களிடத்துத் தூது அனுப்புவதையும் புறத்தூது என்று கூறுவார்கள்.

“ஓதல் பகையே தூதினைப் பிரிவு”

–    தொ. கா – அகம் – 27

தொல்காப்பியர் ஓதல் பிரிதலும், பகைவயிற் பிரிதலும், தூதிற்குப் பிரிதலும் என மூன்று வகைப்பிரிவுகளைக் கூறுகின்றார்.

சந்தும் வாயிலும்

சந்து, தூது, வாயில் ஆகிய மூன்றும் தூதின் பெயர்கள் என நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாடினி இளையர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”

-தொ.கா – கற்பு – 52

கற்புக் காலத்தில் தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர ஆகியோர் தலைவன் தலைவியரிடையே தூது செல்லுதலும் உண்டு. இவர்களை வாயில்கள் என்று தொல்காப்பியர் கூறுகிறார். வாயில்கள் என்ற சொல் தூது செல்வோரைக் குறிக்கின்றது.

கதையமைப்பு

தூது நூல்கள் கலிவெண்பா என்ற யாப்பில் இயற்றப்பட வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

இந்நூல்களில் கதாநாயகன், தலைவன் பெரும்பாலும் ஒரு கற்றறிந்த அந்தணனாகவும், கவிஞராகவும், அவதானியாகவும் இருபபான்;. பெரும்பாலும் நூலாசிரியரே தலைவன் பாத்திரத்தை ஏற்றுத் தன் கதையைக் கூறுவார்;.

கதைத்தலைவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வரும் நாள்களில், சிறிய பிணக்கின் காரணமாகத் தலப் பயணம் மேற்கொள்வான். ஒரு தலத்தில்  தான் கண்ட நடனமாடும் ஒரு பரத்தையிடம் மோகம்கொள்வான். பின்னர் அவளிடம் தொடர்பு கொண்டு அவள் வீட்டிலேயே வாசம் செய்து, காமக்கடலில் மூழ்கியிருப்பான். அவனுடைய செல்வம் முழுவதையும் கவர்ந்து கொண்டு பின்னர் தாய்க்கிழவி அவனை ஏளனம் செய்து வசைபாடி வெளியே அனுப்பி விடுவாள். செல்வத்தை இழந்த அவன் மனம்நொந்து பாட்டுடைத் தலைவராகிய அரசர் செல்வந்;தரிடம் சென்று அவரைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்று ஊர்; திரும்புவான்.

பரத்தையின் காம வலையில் சிக்கிய கணவனின் செயல் கண்டு மனம் மாறுபாடு கொண்ட மனைவியைச் சமாதானப்படுத்த கணவன் தன் மனைவியிடம் பாணர் குலப் பெண்ணான விறலியைத் தூது அனுப்புவான். விறலி தூதாகச் சென்று, பிரிந்த கணவன் மனைவியை விறலி சேர்த்து வைப்பாள்.

விறலி விடு தூது நூல்கள் தோன்ற காரணம்

1.புலவரின் வறுமையை போக்க

வறுமையில் வாடிய புலவர்கள்,  குறுநில மன்னர்கள் அல்லது நிழக்கிழார்கள் அல்லது செல்வச் சீமானை பாட்டுடை தலைவராக்கி, உயர்வு படுத்தி காமச் சுவை ததும்பும் தூது நூலை இயற்றி அவர் சபையில்பாடுவார். பாட்டுடைத் தலைவரும், அவருடைய நண்பர் பரிவாரங்களும் கேட்டு இன்புறுவார்கள், பாட்டுடைத் தலைவர் மணம் மகிழ்ந்து புலவருக்கு வேண்டிய பொன்னும் பொருளும் வாரி வழங்குவார்கள் இதன்மூலம் புலவர் தன் வறுமையை போக்கிக் கொள்வார்கள்.

2.வள்ளல்களை புகழ்வதற்கு

புலவர்கள் தன்னை ஆதரித்து பொன், பொருள் ஆகியவற்றை வழங்கி வரும் வள்ளல்களுக்கு தன் நன்றியை தெரிவித்து கொள்ளவும். அவர்களை புகழ்ந்துப்பாடுவது தூது நூல்கள் ஆகும்.

3.மக்களுக்கு அறிவுரை கூற

இத்தகைய நூல்களில் காமச்சுவை மிகுதியாக இருப்பவை என்ற ஒரு கருத்து இருந்தாலும், பரத்தையரின் உண்மை வாழ்க்கை முறையை எடுத்துரைத்துஇ பரத்தையர் எவ்வாறு எல்லாம் ஆடவர்களிடம் இருந்து பொருள்களை கவருகின்றனர். என எடுத்து கூறி பரத்தையரிடமிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ளவும், நல்வழிப் படுத்தவும் எழுந்தவையே என என்னத் தோன்றுகிறது.

1.உறவு நிலைச் சிக்கல்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையிலிருந்து தவறி ஒருவன் இரண்டு மனைவியை மணந்து கொண்டு படும் துன்பத்தை மூவரையன் விறலி விடுதூதில்

“தீட்டும் பலனா ளினியவளங் கொண்டகண்ட

நாட்டிலொரு சாந்தை நன்னகரில் – வேட்டுறைவோன்

காலமொரு மூன்றுணருங் காசிப கோத்திரத்திள்

சீல மறைவாசு தேவன்பான் – ஞாலம்

மரபிலபி ராமியெனு மாதை வரைந்து

கரவிலின்ப மோகவல்லிக் கைக்தே – மருவிப்

பழகப் பழகப் பலரறிந்து பின்வேட்

டழகுக் ககமு மிரண்டாக்கி – விளைவொக்க

வாழுமந்த னாளிலின்ப வல்லி முறையினரை

சூழஞ் சயனத் துணரனைக்கே – யேழையேழ்

–    மூவரையன் விறலி விடுதூது 55 முதல் 59 கண்ணிகள்

சாந்தை நகர் என்ற ஊரைச் சேர்ந்தவன் வாசுதேவ மறையோன். இவன் அபிராமி, மோகவல்லி என்ற இரண்டு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு இருவர் வீட்டுக்கும் முறைவைத்துச் செல்லுகின்றான். ஒருநாள் மோகவல்லியிடம் சென்றிருந்தபோது மறந்து மற்றவள் பெயரிட்டு அழைக்கிறான். அதனால் மோகவல்லி ஊடல் கொள்கிறாள் ஊடல் வினையாக மாறுகிறது. வாசுதேவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான.

2. தெய்வச் சிலையார் விறலி விடு தூதில் மாமன் மருமகனை இழிவாகப் பேச அவன் மனைவியைத் துறந்து வெளிNறுவதை அறியமுடிகிறது.

3. சங்கரமூர்த்தி பேரில் விறலி விடு தூது நூலில் மனைவி கணவன் மேல் சந்தேகம் கொள்ள கணவன் மனைவியைத் துறந்து விட்டுச் சென்றதைக் கூறுவது

“கண்டாளென் இந்திராணி கண்டவுட னேயசடோக்

கோண்டே யலர்முகங் குறுகி – வண்டாவி

தேதென்றாள் நானு மியம்பினே னீதெல்லாஞ்

சூதென்றே பூசலையுந் தோக்கியே – மாதேகேள்!

காலங்கள் மூன்றுங் கருத்தி லுணர்ந்தானுங்

கோலங்கண் டன்னங் கொடுப்பானும் – சாலவே

தன்கணவன் சொல்லைத் தலை சாய்த்துக் கேட்பாளுந்

திங்கள்மும் மாரிக்கு நேரென்றேன் – இங்ஙனே

– சங்கரமூர்த்தி விறலி விடுதூது கண்ணிகள் 101 முதல் 104

தீர்வுகள்

மூவரையின் விறலி விடுதூது நூலில் தன்னனுடைய மனைவியிடம் ஊடல் கொண்டு சென்ற வாசுதேவன் வேசையிடம் தன் பொன் பொருள் என அனைத்தையும் இழந்த பின் வேசையின் தாய் வாசுதேவனை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறாள். அப்போது வாசுதேவன்

“யெங்கெங்கிற் பாக்கிலும்வந் தென்னெதிரே நிற்பளா

லுங்கங் கிருப்ப தவள்தானே – பங்கமென

வன்மத்தம் போலு முரைதடுமா றிக்குளறி

வன்மத் தொடுநான் வழிக்கொண்டேன் – தன்மத்தைச்

சேய்தோமோ யௌ;ளளவுஞ் செய்தாலும் நல்லகெதி

யெய்தோமோ பாழுக் கிறைத்தோமோ – ஊர்க்குள்ளே

நந்தவனங் கண்டகற்று நன்னுதலுக் கீந்ததொரு

நந்தவனங் கண்டால் நலனுண்டே – முந்துகொடும்”

–    மூவரையன் விறலி விடு தூது 413 முதல் 416 கண்ணிகள்

மனம் நொந்து வாசுதேவன் திரும்புகிறான். திரும்பும்போது அவன் மனம் அப்பெண்ணையே நினைந்து ஏங்குகிறது. பிறகு அய்யோ நான் இவளுக்குக் கொடுத்த செல்வத்தில் நல்ல காரியம் செய்திருந்தால் பயனுண்டே புண்ணியம் உண்டே என எண்ணி வருந்துகிறான்.

விறலி விடு தூது நூல்கள் முழுவதிலும் தன்னிடம் உள்ள பொன், பொருள்களை இழந்த பிறகே கதை தலைவனுக்குத் தான் செய்த தவறை உணர்ந்து, தன் மனைவியின் நினைவு வருகின்றது. தன் மனைவியிடம் தூது செல்ல விறலியை வேண்டுகிறான் விறலி தூது சென்று இருவரையும் சேர்த்து வைக்கின்றாள்.

அன்று முதல் இன்று வரை பல குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போகாமலும், ஒருவரை ஒருவர் புரித்துக் கொள்ளாமலும் இருப்பதே காரணமாக அமைகின்றது.

விறலி விடு தூது நூல்களின் சிறப்புகள்:-

1.மூவரையன் விறலி விடு தூது நூல் காமம் மிகுந்து இன்பச்சுவையின் வழியே காணப்படினும், இறுதியில் அறத்தின் ஆறு ஒழுகி வீடு பேறு எய்வதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பதை ஆசிரியர் ஆங்காங்கே திருக்குறள் கருத்து வழி விளக்குகின்றார்.

2.நாட்டியப் பெண் ஆடிய பத்தொன்பது வகையான நாட்டிய வகைகளை வரிசைப்படுத்திக் கூறியுள்ளார்.

3.விறலி விடு தூது இலக்கியங்கள் மூலம் அரசர்கள், புலவர்கள்;, புரவலர்கள், வள்ளல்கள் அவர்களின் செய்திகள் மூலம் பல வரலாற்றுச் செய்திகளை அறிய முடிகின்றது.

4.பெண்கள் அன்று அணிந்து இருந்த சேலைகள், கச்சுகள் அவற்றின் வகைகளைப் பற்றிய செய்திகளை அறிய முடிகின்றது.

5.விறலி விடு தூதில் பல இடங்களில் வட்டாரச் சொல் அல்லது கொச்சை வழக்குகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. மேலும் பல பழமொழிகளையும் இன் நூல்களில் அறிய முடிகின்றது.

6.சீலமும் ஒழுக்கமும் கொண்ட அந்தணனும் வேசை வசப்பட்டால் எவ்வாறு தன் கலாச்சாரத்தை இழந்து, கீழ்நிலைக்கு வீழ்கிறான் எனபதை இன் நூல்களில் அறிய முடிகின்றது.

7.அக இலக்கியங்களில் தூது பெரும்பாலும் களவுக் காலத்திலேயே நிகழும். ஆனால் விறலி விடு தூது நூல்களில் கற்புக் காலத்தில் நிகழ்கின்றது. அதுவும் கணவன் மனைவியை இணைக்க தூதாகப் பெண் செல்கின்றச் செய்தி வேறுபடக் காணமுடிகின்றது.

இதுவரை அறியப்பட்டுள்ள விறலி விடு தூது நூல்கள்

1.   அலைவாய் விறலி விடு தூது.

2.   ஆறை அழுகப்ப முதலியார் விறலி விடு தூது.

3.   கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது.

4.   சங்கர மூர்த்தி பேரில் விறலி விடு தூது.

5.   சிதம்பபேரசர் விறலி விடு தூது.

6.   சின்னணைஞ்சுத்துரை விறலி விடு தூது

7.   செண்டலங்காரன் விறலி விடு தூது

8.   சிவசாமி சேதுபதி விறலி விடு தூது.

9.   தெய்வச் சிலையார் விறலி விடு தூது.

10. நண்ணாவூர் சங்கர சுவாமி வேதநாயகி அம்மன் விறலி விடு தூது.

11. நாதையன் விறலி விடு தூது.

12. பழனியாண்டவர் விறலி விடு தூது.

13. பழனியாண்டவர் விறலி விடு தூது.

14. பாபநாசம் விறலி விடு தூது.

15. விறலி விடு தூது.

16. விறலி விடு தூது.

17. வீரைத் திருவேங்கடவன் விறலி விடு தூது (அ) மூவரையன் விறலி விடு தூது.

18. வையாபுரிப் பிள்ளை விறலி விடு தூது.

19. கலைஞர் கருணாநிதி விறலி விடு தூது.

துணை நூற் பட்டியல்

1.   மூவரையன் விறலி விடு தூது.

2.   தெய்வச் சிலையார் விறலி விடு தூது.

3.   சங்கர மூர்த்தி பிள்ளைப் பேரில் விறலி விடு தூது.

4.   தமிழில் தூது இலக்கியம்.

5.   காதல் சுவை நிரம்பிய விறலி விடு தூதுகள்.

6.   இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்.

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    இந்த கால இளைஞர்களுக்கு சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னவென்று தெரியாது.ஆனால் அங்க இலக்கியத்தின் குத்துப்பாட்டு மெட்டு வகைகள் நன்றாகத் தெரியும்.அந்தவகையில் கவிஞர் யுகபாரதியின் விறலி விடு தூது.
    —————————————–

    கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
    கட்டுமரத் துடுப்புபோல இடுப்பை ஆட்டுற-இவ
    கள்ளுப்பானே ஒதட்டக்காட்டி கடுப்பு ஏத்துறா

    மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா
    கித்தாப்பை எல்லாம் மிதிச்சிட்டு போனா
    இந்த வைப்பாட்டிய பாத்து
    என் பொண்டாட்டிய மறந்தேன்
    இவ முந்தானையே மோந்து-நான்
    மோப்பம் புடுச்சு அலைஞ்சேன்…
    ————————————–

    .
    அந்தக்கால குத்தாட்டம் எனும் சிருங்கார ரசம் சொட்டும் காமச்சுவைப் பாடல்கள் ‘சேதுபதி விறலிவிடு தூது’ என்னும் நூலிலிருந்து, ஒரு ஐட்டம் பார்க்கலாமா?
    “கல்லுக் கொங்கையும் கஞ்சனிக்கு இல்லாத இடையும்…..”

    ——————————————————
    மாகனக மண்டபத்தில் வந்துநிற்கும் போதுகண்டேன்
    மோகனமுத் தென்னுமொரு மொய்குழலை – ஏகநுதல்

    வில்லழகும் பாய்ந்தவிழி வேலழகும் காலழகும்
    சொல்லழகும் மாலையிட்ட தோளழகும் – பல்லழகும்

    கையழகும் மார்பழகும் காதழகும் மூக்கழகும்
    மெய்யழகும் கண்டவுடன் மெய்மறந்தேன் – ஒய்யாரக்

    கட்டழகி வள்ளைமணிக் காதுகண்டேன் காடைவலைத்
    தட்டில் விழுந்தாப்போல் தட்டழிந்தேன்- இட்டமின்னாள்

    வாய்ந்தமயற் குள்ளாய் மதயானை போயறு
    பாய்ந்தகதை போலே பதைபதைத்தேன் – காந்திமணிச்

    சங்கம்தரித்த செங்கைத் தாமரைகண் டேன்மேனி
    அங்கம்தெரித்தநெற்போல் ஆயினேன் – கொங்கையென்று

    கல்லையோ பண்ணிவைத்தான் கஞ்சனிவளுக்கிடையும்
    இல்லையோ என்றுமனத்தெண்ணினேன் – சொல்லியசங்

    கீதத்தைப் பாடினாள் கிண்ணமுலைப்பேதையவள்
    பாதத்தைப் போய்ப்பிடிக்கப் பார்த்திட்டேன் – கோதற்ற

    தேன்பிறந்த சொல்லாளைச் சேராமல் நாம்வீணுக்(கு)
    ஏன்பிறந்தோம் பூமியிலென்றெண்ணினேன் – மான்போல்வாள்

    சேல்வைத்த கண்ணைச்சிமிட்டினாள் மங்கையிதென்
    மேல்வைத்த பார்வையிதென்று மெச்சினேன்….

  2. Avatar
    Anand says:

    Hi,

    Can i get the book or details about “அலைவாய் விறலி விடு தூது”.

    Thanks
    C.Anand
    9942034433

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *