விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?

This entry is part 20 of 26 in the series 22 செப்டம்பர் 2013

பூமி சூரியனின் கதிரில் குளித்து கொதித்து உருண்டு கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வெய்யிலுக்கு வெளியே போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடப்பவர் தவிர வெளியில் மொட்டை வெய்யிலில் மண்டை காய வண்டியோடு போராடிக் கொண்டு, டிராஃபிக் சிக்னலின் அதட்டலுக்கு பயந்து ஒடுங்கி நின்று கொண்டிருக்கும் அனைவருக்கும் அந்த கவுண்ட் டவுன் எண்கள், அவர்களின் நெஞ்சுப் படபடப்பை அதிகப் படுத்திக் கொண்டு தான் இருந்தது. அதும் இந்த வேலையாவது கிடைக்குமா..?  என்று மனசுக்குள் ஆயிரம் முறை பூவா…தலையா…போட்டுப் பார்த்து இண்டர்வியூ போவதற்கு முன்பே சோர்ந்து போய் காத்திருந்தான்  விஸ்வநாதன் ‘பச்சைக்காக’.

“வித்யாவுக்கு ஷ்யூராக் கிடைக்குமா”? என்று மொட்டையாக பெரிய எழுத்துக்களில் விஸ்வரூபமாக இருந்த சைன்போர்ட் விளம்பரம் ஒரு புறம் மூளையைக் கசக்கியது. மற்றோடு புறம்  கழுத்தெல்லாம் கனத்த நகைகளை அணிந்து கொண்டு விளம்பரப் பலகைக்குள்….யாரோ ஒரு அழகி புன்னகை எதற்கு? பொன்நகை போதுமே…! என்றபடி மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள்…அவளைப்  பார்த்தபடியே  “வ்ரும் ….வ்ரும் ….’ என்று விஸ்வா ,  அவனது ‘ஹோண்டா யூனிகார்ன்’னின் ஆக்ஸிலேட்டரை திருகியபடி மனதை வேகமாக ஒட்டிக் கொண்டு நின்றிருந்தான். இம்புட்டு நகையா…? துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டுப் போவேன்..? என்றது அவன் மனது.

விஸ்வா…  எனும் விஸ்வநாதன்….ஒரு சின்ன அறிமுகம்…!

பி.ஈ. ட்ரிப்பில் ஈ….சேரப்போறேன், சேர்ந்துட்டேன், படிக்கிறேன்,படிச்சுண்டு இருக்கேன்,முடிக்கப்போறேன்,முடி

ச்சாச்சு,,,அட….இப்ப  நான் ஒரு இஞ்சினீயர் ..! என்று நான்கு வருடங்களை பல கலர் கலரா  70mmகனவுகளோடு இணைத்து படித்து பட்டத்தோடு வெளியே வந்தாச்சு. பட்டத்தை தலையில் தாங்கி ஆறு மாதமும் காணாப் போச்சு..! இன்னும் வேலையில்லாத வாலிபர் சங்கத்தின் மூத்த அங்கத்தினர் வரிசையில் அப்படியே தங்கிப் போனவன். தன் ஆசைகள் எதுவும் இன்னும் நிறைவேறுவதற்கான  எந்த அறிகுறியும் தென்படாததால், கடவுளை மானசீக மார்ச்சுவரிக்கு அனுப்பிவிட்டு கறுப்புச் சட்டைக்கு கழுத்தை நீட்டியவன்.

அவன் போகும் இண்டெர்வியூவுக்கு அவன் மனது கூடப் போக அடம்பிடித்து, வழக்கம் போலவே, பழைய கல்லூரிக் கதைகளை அசைபோடும் பசுமாடாக மனதின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டது. அவன் மட்டும் தூரத்தைக் கடக்கப் இருபதுக்கே உரிய வேகத்தோடு அறுபதில் விஸ்வநாதன், தனது ஐம்பதாவது இண்டர்வியூவுக்காகப்  பறந்து கொண்டிருந்தான்.

படிக்கும் போது, நண்பன் சரவணன் சொன்னதும் அப்போது நடந்த நிகழ்வுகளும் மனக்கண் முன்னே திரைப்படமாக ஓடிக் கொண்டிருந்தது. அண்ணா நகரிலிருந்து ஒ.எம்.ஆர் வரைக்கும் போகணுமே….காதுகள் ரோட்டைப் பார்க்க கண்கள் காலேஜ் வாழ்க்கைக்குள் நுழைந்து கொண்டது.

வழக்கம் போல அம்பீஸ் கஃபே வாசலில் சரவணனும், கனகராஜும் விஸ்வநாதனுக்காக காத்து நிற்க, பத்துப் பன்னெண்டு மிஸ்டு காலுக்குப் பிறகு விஸ்வநாதனின் தரிசனம் கிடைத்த மகிழ்வில் வாடா மச்சி… விஸ்வா….இப்பவே தலைக்கு மேலே ட்ரிப்பில் ஈ சுத்துது……போல.!.என்று கிண்டல் செய்து வரவேற்கிறார்கள்.

ஒரு சிங்கிள் டீயை கையில் வைத்துக் கொண்டு ‘நாசா’ வரைக்கும் சென்று வந்தார்கள்.

அவர்கள் பேச்சு மெல்ல எதிர்காலத்தைத் தொட்டுவிட ஓடியது.

படிச்சு முடிச்ச உடனே நமக்கெல்லாம் வேலைடா…எடுத்த எடுப்பில் இருபத்தைந்தாயிரம் சம்பளமாம்,என் மாமா சொன்னார். நாமெல்லாம் இன்ஜீயரிங் கிராஜுவேட்டுடா… மச்சி.. வெத்து வேட்டு இல்லை….கவலையே படாதே. நம்மள எம்.என்.சி  கம்பெனி காலேஜுக்கே வந்து காக்கா மாதிரி லபக்குன்னு கொத்திட்டு போயிருவாங்களாம். அப்பறம் நம்ம ஃலைப் ஸ்டைலே வேற மாதிரி இருக்குமாம். நம்புடா மச்சி. கேம்பஸ்ல நமக்கு வொர்க் ஆர்டர் தந்துடுவாங்க நீ வேணாப் பாரேன்…நீ கூகிள் லயும்  நான் இன்போசிஸ்லயும் இதோ… அவன் கனகராஜு  அமேஸான்லயும் உட்கார்ந்திருவோம்…..இன்னும் ஆறே மாசத்துல நம்ம தலையெழுத்தே மாறப் போகுதுடா என்று பெரிய தீர்க்கதரிசியாக உசுப்பேத்திக் கொண்டிருந்தான் சரவணன்.

ஆனால்….அவர்கள் கல்லூரிக்கு கேம்பஸ் இன்டெர்வியூ வந்து போன சுவடு தெரியவில்லை.

ஒரு பெரிய கம்பெனி சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கால் லெட்டர் எல்லாம் கொடுத்து அவர்களை அன்றைய தினத்தின் ஹீரோவாக்கி நிறைய நட்புகளை உடைத்தது. வயிதெரிச்சலில் காதுல புகை வர நண்பர்களைக் கூட எதிரியாக்கியது.. அதன் பின்பு , கால் லெட்டரை வைத்துக் கொண்டு,அவர்களையும் மாதக் கணக்கில் பெஞ்சில் போட்டு ஆறவைத்த போது தான் இவர்களுக்கு மனசு குளிர்ந்து நாமெல்லாம் ‘நண்பேன்டா’ என்று ‘ஸ்மைலியை’ முகத்தில் மாட்டிக்கொள்ள வைத்தது.

என்னடா சரவணா…என்னமோ பீலா விட்ட…..நான் கூகிள்….நீ இன்போசிஸ்…இதோ இவன் அமேஸான் …ன்னு பட்டா எழுதி வெச்ச…மாதிரி..! எல்லாம் ஊத்திக்கிச்சே…இப்ப எங்க நிக்கிறோம் தெரியுமா? அம்பீஸ் கஃபேல கூட கடன்ல சிங்கிள் டீ கேட்கிற நெலைமையிலடா…..என் வெண்று..!…என்று வடிவேலு ஸ்டைலில் காலைத் தூக்கி உதைக்கப் போகிறான்.

சரவணன் இவன் கைகளைப் பிடித்து முறுக்குகிறான்.

அருகில் நின்றவன் என்னடா நீங்கள்லாம் என்ன படிச்சு என்னடா..? ..பரம்பரை  குணத்தை விட மாட்டீங்கறீங்க…போங்கடா..அதோ உங்க பங்காளிங்க அந்த மரத்து மேல தான் உங்களுக்காக காத்துக்கிட்டு பேணெடுத்துக்கிட்டு உட்க்கார்ந்திருக்குங்க…போய் அட்டெண்டென்ஸ் போட்டுட்டு வாங்கடா…போங்கடா…!

ஏய்….யார்ரா இவன்…..? ராஜமன்னார்  பரம்பரையிலிருந்து தப்பிச்சு வந்தது….கழுவுல ஏத்துங்கடா இவனை….! சரவணன் சீண்டினான்.

யாரங்கே…..?.இந்த இரண்டு ஜீவனுக்கு மட்டும் இஞ்சிக்  கஷாயம் தராமல் பங்காளியிடமிருந்து பிரித்து விட்டது…?  இழுத்து வாருங்கள் அவனை….! கனகராஜும்  விடாமல் கலாய்த்தான்.

‘எய்த் செம்’ல காய்ச்சப் போவுதுடா உனக்கு…..மறுபடியும் அதே பெஞ்சில் உட்கார்ந்து டீ ஆத்து..நாங்க டெல்லி, மும்பை, கொல்கத்தான்னு மெட்ரோ சிட்டில ஏஸி ரூம்ல அளப்பற பண்ணீட்டு இருப்போம்….ராஜமன்னாரு….இங்கிட்டு ஜோரா டீ ஆத்துவாரு…விஸ்வநாதன் சொல்லி முடிக்கவும் எங்கிருந்தோ மணி அடித்து சத்தியம் செய்தது.

கூட இருந்தவனுக்கு அடி மனதிலிருந்து அவமானம் கொதித்து எழ “போங்கடா தயிர் சாதங்களா ” அரசு கிட்டயும் அரசியல் கிட்டயும் எங்களுக்கு இருக்கும் அந்தஸ்து தெரிஞ்சா…..போங்காயிருவீங்க புண்ணாக்குப் பசங்களா …மீண்டும் வடிவேலு அவனது குரலில் வந்து போனார்.

டேய்….இவன் நல்லா மிமிக்கிரி செய்யுறாண்டா…..எதுவுமே ஒத்து வரலையின்னா….பேசாம ஸ்டேஜ் ஷோ நடத்தி வாழ்ந்து காட்ட வேண்டியது தான்… ஐயோ பாவம் முகத்துடன் சரவணன் சொன்னதும்,

டேய்…..டேய்….டேய்….எந்த வேலைக்கு நீங்க அப்ளிகேஷன்  போட்டாலும் முத்தல்ல எங்களுக்குத் தான்ப்பு வெத்தலை பாக்கு…! பாக்கத்தான் போறியே பெறவென்ன..? என்று மீண்டும் சீண்டினான் கனகராஜ்.

போதும்டா நமக்குள்ள ஏண்டா இந்த மாதிரி வீண் பேச்செல்லாம்……விடுடா..டேய்…போட்டும் விட்ரா..விஸ்வநாதன் சமாதானக் கொடியை உயர்த்தினான். அந்த நிமிஷமே அவர்கள் பேச்சு வேறு வழிக்குத் திரும்பி மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கே வந்து நின்றது.

எப்படி இருந்த நாம்…இப்படியாயிட்டோம்…..! நினைத்துக் கொண்டே பைக்கைக்  காலால்…..கையால்…………
க்ரீச்…….க்றீச்ச்……க்ரீச்ச் ச் ச் ச் ச் …..என்று சடன் பிரேக் போட்டான்  விஸ்வா…..!

தனக்கு எதிரே காற்றாலையின் இறக்கையை ஏற்றிக் கொண்டு வந்த ராக்ஷச லாரியிடமிருந்து தப்பி நகர்ந்து நின்றது அவனது பைக். நல்லவேளையா தப்பினேன்…..பகல் கனவு கண்டு வண்டி ஓட்டினா இப்படித் தான்…ன்னு தெரிஞ்சே இப்படிப் பண்ணினேனே…இந்த வண்டியோட இடிக்கெல்லாம் என் வண்டி தாங்குமா இல்லன்னா இந்த ஹெல்மெட் தான் தாங்குமா…..? சும்மாத் தட்டிப் பார்தாலே தகடாயிடுவேன்….மை காட்….வயித்துக்குள்ள புல்டோசர் ஒடிச்சு பாரு….என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டவன் அறுபதிலிருந்து  இருபதுக்கு மாறினான்….வண்டியின் வேகத்தில்.

இப்போது மனது கல்லூரியை கலைத்து வீட்டுக்குள் இழுத்தது….!

விஸ்வா….படிப்பை முடிச்சுட்டான்…..இப்ப அவன் இஞ்சினீயர்…..இத்தனை நாள் கனவு. ஒரே பையனை  இன்ஜினீயரிங் படிக்க வைக்கணம்னு. அதுவும் அண்ணா பல்கலைக்கழகத்தில். …டேய்.விஷ்வா….டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணி என் வயித்துல பாலை வார்த்தே…அம்மாவும் அப்பாவும் ஆளாளுக்கு இவனைப் புகழ்ந்து தள்ளியபோது புகழ் போதையில் மயங்கிக் கிடந்தான் அவன்.

மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்…..விருந்தும் மருந்தும் மூணே நாள்தான்னு சொல்லுவாங்களே அது போலத்தான் இந்தக் கொண்டாட்டமெல்லாம் அவர்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியும் வரையில் தான்…..அதுக்கு அடுத்தது…வழக்கம் போலவே .

விஸ்வாவுக்கு வேலை கிடைச்சாச்சோ..? என்று அப்பப்போ தினம் ஃபோன் போட்டு வந்த டார்ச்சர் இருக்கே….அது…! அமிர்தாஞ்சனத்தை ஆறு பாட்டில் முழுங்கியிருக்கும்.

டேய்….இந்தக் கம்பெனிக்கு அப்ளை பண்ணுடா…?

அதுக்கு ஒரு ஈமெயில் தட்டி விடு….!

இதோ இங்க வாக்-இன்-இண்டர்வியூ கேட்டு நியூஸ் பேப்பேர்ல வந்திருக்கு…

இன்னிக்கு உடனே குளிச்சுட்டு கிளம்பு…

சுவாமிக்கு வேண்டிக்கோ..விபூதியப் பூசிக்கோ…

அப்பா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குடா….என்று அப்பாவும்,

இங்க வேண்டாம்பா…அம்மா கால்ல விழு… என்று அப்பாவும்..

மாறி மாறி பாசத்தைப் பொழிந்து,  இந்தா…பெட்ரோலுக்கு வெச்சுக்கோ என்று ஆயிரம் ரூபாய்…ஒற்றைத் தாளை . ஷர்ட் பாக்கெட்டில் திணித்து வாசல் வரை வந்து கையசைத்து வழியனுப்பி வைத்து, அதுவும் போறாமல் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஃபோன் செய்து என்னாச்சு…? என்னாச்சு..? என்று உயிரெடுத்து………..!

அபப்பப்பப்பா……உங்கப் பாச உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையா ? என்று அடிக்கடி இவன் குளிரில் நடுங்கி…!

நாள் செல்லச் செல்ல நான்கு இண்டர்வியூவில் ஏமாந்ததும்……! நிலைமை வீட்டில் தலைகீழானது.

இப்ப எதுக்கு..? யாருக்கு ஃ போன் பண்ணி மொக்க போடறே..? என்ற அதட்டல்…!

இந்த மாசம் டெலிபோன் பில் எக்கச்சக்கத்துக்கு ஏறி உச்சாணிக் கொம்புல உட்கார்ந்திருக்கு…எல்லாம் இவனாலத்தான்..!கட்ட வேண்டாம் அவங்க  கட் பண்ணிட்டு போகட்டும்.

என்ன டிவி  வேண்டியிருக்கு  எப்பபாரு..? அதை அணைச்சுத் தொலை. இது பகலில் டிவி பார்க்கும் போது  போடும் தடா..!

யாருக்கும் தொல்லை தராமல் இரவில் டிவி பார்த்தால்,

எலெக்ட்ரிசிட்டி பில்லு கழுத்தை நெரிக்குது …..ன்னு பட்டென்று அணைத்து விட்டு,  ‘போய்ப்  படு’ கார்த்தால சீக்கிரம் எழுந்திருந்து பாலை வாங்கிட்டு வா….! என்ற அதட்டல் குரல்.

பெட்ரோலுக்குக் பணம்…….தொண்டை வரை வந்த குரல் கூட பயந்து போய்…..வேண்டாண்டா விஸ்வா…பேசாமல் நடந்து போ…என்று புத்திமதி சொல்லும்.

சமய சந்தர்ப்பம் தெரியாமல், எதிர் வீட்டு மாமி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்கை நீட்டி “என் பொண்ணு மைதிலிக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு, இன்னைக்கு குழந்தை ப்ளைட்ல கிளம்பிண்டு இருக்கா என்று கடுப்பேத்தி விட்டுப் போனதும்….வாயில் வைத்த மைசூர் பாக் கூட கசந்து வழியும்.

கூடவே அம்மாவின் பார்வையும்..சேர்ந்து கொல்லும் ……பாரு….நீயும் இருக்கியே….எனக்கும் ஆசைடா அவாளுக்குப் போய் லட்டு கொடுத்துட்டு வர…கண்கள் பேசும்….கெஞ்சும்….ஏவு கணை வீசும்.

கணினி முன்பு உட்கார்ந்து இணையத்தை தலை கீழாப் புரட்டிப் போட்டு நாலு ஈமெயில் தட்டி அனுப்பியதும், ஏதோ வேலை வெட்டி முறிச்சாப்பல வயிறு தாளம் போடும்.

தட்டில் சாதத்தைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால்…….!

எப்பப்பாரு என்ன சோறு…? அரவை மெஷின் மாதிரி….வேலை செய்யாமல் தின்னுண்டே இருந்தால்…அப்பறம் அவ்ளோதான்…நிலைப்படியை இடிக்க வேண்டியிருக்கும்…!

நக்கல் பேச்சுக்கள் இவனை ஊசியாய்க் குத்தும்…!

ஆரம்பத்தில், சந்தோஷமாகப் பேசிய சரவணன் கூட நாளாக நாளாக மச்சி….மாப்ளே…..நண்பேண்டா...என்ற அத்தனை அடை மொழியையும் கைவிட்டு, ம்ம்…சொல்டா என்பதோட நிறுத்திக் கொண்டவன்.

அவனுக்கு ஒரு வேலை .பி பி ஓ வில் வாய்ஸில் …கிடைத்ததும் விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டுக் காணாமல் போனான்.

தனது மகனின் முகம் அறுந்து தொங்குவது புரிந்து கொண்ட அம்மாவுக்கு மனம் இரங்கி ..!

ஏன்னா…நீங்களாவது அவனுக்கு உங்க கம்பெனில யார்ட்டயாவது சிபாரிசு கேட்டு……..என்று எடுத்தவுடன்…

எத்தனை வருஷமானாலும் பரவாயில்லைடி …அவனாத்  தான் வேலை தேடிக்கணம். சிபாரிசு….வாரிசு எல்லாம் என்கிட்டே செல்லாது.  கஷ்டப் பட்டு கிடைக்கிற வேலையோட அருமை தான் அவனுக்கு தெரியும்..புரியும். ரெக்கமண்ட் பண்ணி ஈஸியா வேலை வாங்கிக்  கொடுத்துட்டால்,  வேலை கிடைக்கறது எவ்வளவு கஷ்டம்ங்கறதும் புரியாது கிடைச்ச வேலையோட அருமையும் தெரியாது .அதை தூக்கிப் போட்டு உடைச்சுடுவான்….நீ சும்மாயிரு என்று அந்தக்கால ‘தங்கப்பதக்கம் சிவாஜி கணேசன்’ ஸ்டைலில் தனது இயலாமையை ரொம்ப கௌரவமாகச்  சொல்வார்.

ஆமாம்….முடியாதுன்னு சொல்லிட்டு போறதுக்கு இவ்வளவு பில்ட் அப் என்று அம்மாவும் தோள்பட்டையில் முகவாயை இடித்து விட்டுப் போவாள். போற போக்கில் இந்த அப்பாவுக்கே உன் மேலே நம்பிக்கை இல்லேன்னு பார்வை சொல்லும்.

இதெல்லாம் பார்த்தும் கேட்டும் சலித்துப் போனது விஸ்வாவுக்கு ..

ஹிந்துப் பேப்பரைத் திறந்தால் ஆயிரம் வேலைகள் கொட்டிக் கிடக்கறது…..போய் பொறுக்கீண்டு வரச்சொல்லு , உன் சீமந்தப் புத்திரனை…! அப்பா எகத்தாளமாக குரல் கொடுத்துவிட்டு, வாசலில் அவரது ஸ்கூட்டரை எடுப்பதற்குள் முணு முணு த்துக்கொண்டே,  லோன் போட்டு, நல்ல சென்டர்ல இருந்த ஒரு க்ரௌண்ட வித்து இவனுக்கு காலேஜுக்கு  அழுதாச்சு…..இவன் என்னமோ வெளில போனா கறுத்துப் போயிடுமோன்னு பயந்துண்டு ரூம்ல ஒளிஞ்சுண்டு இருக்கானே…இன்னும் இந்த வயசுல நான் வேலைக்குப் போகலையா…..சம்பாதிகலையா..?

அப்பா….எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கறா…..கோர் கம்பெனில வேலையே ..இல்லை…. கால்சென்டர், பி.பி.ஓ , இன் பௌண்ட் …அவுட் பௌண்ட் …..வாய்ஸ்…நான் வாய்ஸ், மார்கெட்டிங், கஸ்டமர் கேர்…..இதுல தான் வேலை ஈசியா கிடைக்கறது..எனக்கு இதுக்கெல்லாம் போக இஷ்டமேயில்லை. எனக்கு கோர் சப்ஜெக்ட்ல தான் வேலை செய்ய ஆசை..என்று சொன்னதும்..

நாசமாப் போச்சு…! என்று அம்மா முணு முணு த்துக்கொண்டே சமயலறையில் தன் ஆங்காரத்தை ஒங்காரமாக்கிக் காட்டினாள்.

ஏண்டா…. இப்போ அப்பா ஆபீஸ் கிளம்பற நேரம் பார்த்து சண்டை வளக்குற….அப்பா எதாச்சும் சொல்லிட்டு போகட்டும்னு பேசாமல் இருக்கத் தெரியாதா?

இவனைப் பார்த்து பந்தை வீசும் அம்மாவைப் பார்த்து எதிர்த்துப் பேசக் கூட தன் மானம் இடம் கொடுக்காமல் புத்தகத்தில் தலையை கவிழ்த்துக் கொள்கிறான்.

டேய்…யாருக்குமே நினைக்கற வேலை அமையறதில்லை . கிடைச்ச வேலையைத் தான் நினைச்ச வேலையா எண்ணிப் பண்ணுவாங்க. எனக்கு கோர் சப்ஜெக்ட்டுல தான் வேலை வேணும்னு நீ இருந்தா இந்த ஜென்மத்துல உனக்கு வேலை கிடைக்காது.

உனக்குப் பிடிச்சதெல்லாம், நீ நினைப்பதெல்லாம் உன்னோட வாழ்க்கையா இருக்காது. எதெல்லாம் உன் வாழ்க்கையில் தானே நுழையறதோ அது தாண்டா உன்னோட வாழக்கை, அப்படி வாழப் பழகினால் தான் சந்தோஷமா இருக்க முடியும்.அதைப் புரிஞ்சுக்கோ.

ஒரு காலத்துல கவர்ன்மெண்ட்ல வேலை பார்த்தால் தான் அவாளை ஏறெடுத்துப் பார்ப்பா . ஆனால் இப்போ….! இந்த கால்சென்டர் கலாச்சாரம் வந்ததுக்கு அப்பறம். அங்க வேலை பார்க்கறவாளுக்கு இருக்குற மவுசே தனி. காரென்ன….க்ரெடிட் கார்டென்ன….வித விதமா ட்ரெஸ் என்னன்னு கலக்கலாம். கையில் கரண்டியோடு அம்மா கிளாஸ் எடுத்தாள்.

ம்ச் ….கொஞ்சம் சும்மா இரேன்ம்மா….உனக்கென்ன தெரியும்..? .நானும் ரெண்டு மூணு இண்டர்வியூ வுக்குப் போனேன்…..கார்த்தால போனவனை சாயந்தரம் வரைக்கும் காயப் போட்டு கடைசில ஏன் விஸ்வநாத் நீங்க இன்ஜினீயரிங் படிச்சுட்டு இங்க வரீங்க? ன்னு ஒரு கேள்வி கேட்டாங்க பாரு…..அப்பத் தான் எனக்கு உறைச்சது . ஆமா….வேண்டாம் வேண்டாம்னு அங்கியே ஏன் சுத்திக்கிட்டு இருக்கோம்னு.

அப்போ நீ கால்சென்டர் வேலை கிடைச்சால் போக மாட்டே… அப்படித்தானே….?

ம்ம்ம்…..

ஏன்..?

அது என்னோட சப்ஜெக்ட் இல்லை.

பார்த்தியா….திரும்பவும் அங்கியே வந்து நிக்கறே…!

ம்ம்ம்ம்,,,,பின்ன என்னை என்ன தான் பண்ணச் சொல்றே.?

எதோ ஒரு வேலை…கிடைச்சதைப் பிடிச்சுக்கோங்கறேன்.

நிறைய பேர் சொல்றா…..அங்கெல்லாம் வேலை பண்ணினா, சம்பளம்  மட்டும் கிடைக்குமாம்….ஆனால் ஒரே வருஷத்துல உடம்பு பெருத்துடுமாம், கழுத்து வலி வந்துடுமாம், கண்ணு கெட்டுடுமாம், காது டமாரமாயிடுமாம், டிப்ரெஷன் வந்துடுமாம்….இதெல்லாம் உனக்கு யாரும் சொல்லலையா..?..இன்னொண்ணு தெரியுமா இந்த மாதிரி இடங்கள்ள வேலை பார்க்கறவாளுக்கு யாரும் பொண்ணு கூடத் தர மாட்டாங்களாம். ஒரே வருஷத்துல ஓல்ட் ஆயிடுவேனாம் .

இதெல்லாம் யாரு சொன்னது உனக்கு?

அங்க வேலை பார்க்கிறவா தான்…எனக்கு தெரிஞ்சவா.

அப்டிப் போடு….காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ன்னு அவாள்லாம் அங்கயே இருந்துண்டு உனக்கு அட்வைஸ் பண்றாளாக்கும் .

அப்பிடியில்லை…..நாங்க தான் கஷ்டப் படறோம்..நீயும் ஏண்டா எங்களோட லிஸ்ட்ல  சேர்ரேன்னு  ஒரு நல்லெண்ணம் தான்.

போய் பொழைக்கற வழியைப் பாருடா.

அந்த வழி தான் என்னன்னு தேடறேன்.

என் எதிர்காலம் என்ன? என் கனவுகள் என்ன…? நான் என்னவாவேன்….எனக்கு வாழ்வில் அந்தஸ்து இருக்குமா….? மனசு கலங்கி கண்ணாடி முன்பு கண்ணீர் விட்டது.

எதிர்காலம் இதோ…!  என்று ஏதாவது தேவதை டொக் கென்று கையில் தூக்கித் தராதா என்று எதிர்பார்த்து,

ஏய்….அதிர்ஷ்ட தேவதையே…நீ யாரு..? எங்கே இருக்கே..? என்று திருவிளையாடல் தருமி போலத் தேடிப் புலம்பியது.

விஸ்வா……இதோ….நான்… இங்கே….என்னைப் பார்…என்ற ‘அசரீரிக்காக’ ஆவலாய்ப் பறந்தது.

அப்படிப்பட்ட நேரத்தில் தான்…..!

ஈமெயிலில் வந்த இன்டெர்வியூ கால்லெட்டருக்காக இப்போது இந்த ஓ .எம்.ஆர் ரோட்டில் பயணம்.

இந்த முறையும் இவன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவதை பார்த்து அவர்களுக்குள் “இவனுக்கு இதே பொழப்பாப் போச்சு’ என்ற எகத்தாளம் அதிகமாகுமோ.

நான் எதில் சேர்த்தி….?.வேலை கிடைக்காத வாலிபர் சங்கமா? வருத்தப் படாத வாலிபர் சங்கமா ?

இப்போது மனது வீட்டைத் தூக்கிப் போட்டு நிகழ்வுக்கு வந்தது.

இத்தனையையும் நினைத்தபடி வண்டியை ஒட்டிக் கொண்டே அவனை அழைத்த கம்பெனியின் அதி நவீன அசர வைக்கும் கண்ணாடிப் புடவை கட்டிக்கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தைப் பார்த்து இதயம் லப்டப்பெனத் துடிப்பதை மறந்து அதன் அழகில் மயங்கிக கண் மங்கிப் போனது.

பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, ஹெல்மெட்டைக் கழட்டி அதன் பிடியிலேயே மாட்டி வைத்து, எதிர்பட்ட செக்யூரிட்டியைப் பார்த்து  ரெடிமேட் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு, வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று டாஸ் போட்டு சாதகமாய் பார்த்துக் கொண்டே, வந்தவன்..!

என்ன கேள்வி கேட்பாங்களோ….?  இது கோர் கம்பெனி.தான்..!….எலெக்ட்ரானிக்ஸ்ல இப்போ லீடிங்குல இருக்கு. கெடைச்சா நான் அதிர்ஷ்டசாலி…அதிர்ஷ்டமே…..அருகில் வா…..வேலையை வாங்கித்தா…..என்று உள்ளுக்குள் பாடிக் கொண்டே பாதி பயத்தைப் போக்கடிக்க, மீதி பயம்….என்ன கேள்வி கேட்பாரோ….? பேஸிக் எஞ்சினியரிங்கா, மெடாமர்ஸ் பத்தியா, டையோடு பத்தியா, எலெக்ட்ரோ மக்னெட்ஸ் லேர்ந்தா, மைக்ரோ வேவ், சோலார் எனேர்ஜிலேர்ந்தா…குழம்பித் தவித்து
அவர்கள் கேட்கப் போகும் அதே கேள்வியை அவனது இதயம் தேடியது.

கடிகார முள் நகர்வது கூட அவன்  இதயத்தை பதம் பார்த்தது போலிருந்தது விஸ்வாவுக்கு.

என்ன யாருமே இல்லை ? என்ற சந்தேகம் தீர ரிசெப்ஷனில் தயங்கினான்.

கன்சல்டன்ட் மூலமா வந்திருக்கீங்க….. ஒரு நாளைக்கு ஒருத்தர் தான் நேர்முகம்…..ரிசெப்ஷனில் இருந்த அழகி உதட்டைத் திறந்து மூடினாள்.தனக்குத் தெரிந்த ஆங்கிலம் கூட இவனுக்கு ஸ்பானிஸ் மொழி போலக் கேட்டது. அடுத்த நிமிடம் தான் போட்டிருந்த லிப்ஸ்டிக் கலைந்து விட்டதோ என அவள் கவலைப் பட்டபடி தனது கைக்குட்டையை எடுத்து ஒற்றிக் கொண்டதைப் பார்த்து இவன் சிரித்துக் கொண்டான்.

ஓ ….இது மான்ஸ்டர் மூலமா இருக்குமோ….அப்ப டைம்ஸ் ஜாப்….என்று அடுக்கிக் கொண்டே போனது மூளை. ச்சே….நம்ம அறிவு சூப்பர்டா…ஒரு கேள்வி கேட்டால் எங்கேர்ந்து தான் இவ்வளவு பதில்கள் வந்து நிக்குமோ..? ஆச்சரியப்பட்டுக் கொண்டான்.

விஸ்வா இந்த வேலை உனக்குத்  தான்….மனசு… இதயத்துடன் கைகுலுக்கிக் கொண்டது.

வீட்டுக்குப் போகும் போது  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் லட்டுவோட போகணம் . அம்மாவை அசத்தணம்.

இதென்ன அசட்டுத்தனம்….பர்சோட  பலகீனம் தெரியாமல்….! திட்டிக் கொண்டான்.

ஐம்பது வயதைக் கடந்தவர் கோட்டும் சூட்டுமாக பந்தாவாக அவனெதிரில் வந்து நின்று , ஹலோ…ப்ளீஸ் கம் என்றவர்  அவனை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்.

தொண்டை மிடறு விழுங்கியது…..ஒரு சொட்டுத் தண்ணீர் தந்தால் தான் வார்த்தையை வெளியே விடுவேன் என்று அடம் பிடித்தது.

அவர் கேட்டபோது , பெயரைக்  கூடச் சொல்ல விடாமல் அழிச்சாட்டியம் செய்தது.

ஒரு நிமிஷம் என்பதை ஜாடையாகக்  காண்பித்துவிட்டு அங்கிருந்த தண்ணீரை தொண்டைக்குள் தாரை வார்த்தபின் பச்சைக்கொடி காண்பித்து ‘யூ ஆர் நௌ  ரெடி டு   டாக் எனிதிங் ‘ என்று செருமியது.

இவன் நினைத்த எதையும் அவர் கேட்கவில்லை. இவன் நினைக்காததை கேட்டுவிட்டு…”என்ன சொல்றீங்க, இதான் எங்க கம்பெனி பாலிசி ..உங்களால .முடியுமா..?.சரின்னு சொன்னா வேலை ரெடி…என்று ஆங்கிலத்தில் அழகாக பேரம் பேசினார்.

அதிர்ச்சியை  ஜீரணிக்க முடியாத விஸ்வநாத் மெல்ல ‘ஐம் சாரி சார்’….என்று எழுந்தான்…!

அப்போ…. உங்களுக்கு….. மிஸ்டர் விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..? என்ற கேள்வியோடு தனது கையிலிருந்த பால்பாயிண்ட் பேனாவை டேபிள் மீது டொக்கென்று அடித்துக் கேட்டார் அவர்.

டக்கென்று எழுந்து கொண்ட விஸ்வநாதன்….எனக்கு….வேலை....வேண்டாம் ! சொல்லிவிட்டு தனது ஃபைலை எடுத்துக் கொண்டு விடு விடென்று அறையை விட்டு வெளியேறினான் அவன்.

அவர் கேலியாக இவனுக்கு முதுகுப் புறத்தில் சிரித்தது போலிருந்தது அவனுக்கு.

“இந்தக் கம்பெனியில் ஃப்ரெஷ்ஷா ட்ரைனிங்ல ஜாயின் பண்றதுக்கு வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். யூ ஆர் வெல்கம். அதே சமயம் லைப் ல எதுவுமே ஃப்ரீயாக் கிடைக்காது. ஒவ்வொண்ணுக்கும்  ஒரு பிரைஸ் டாக் இருக்கு. அதே மாதிரி தான்…இந்த கம்பெனில வேலை செய்யிறதுக்கும் ஒரு காஸ்ட்…அதாவது   ஜாயினிங் பீஸ் ஒன் லாக். எப்போ டெபாசிட் பண்றீங்க….?” என்ற அவரது குரலும் அதே சமயம் அவரது கைகளிலிருந்த ஃபைலை இவனைப் பார்த்து அலட்சியமாக நகர்த்தியதும் கண் முன்னே மீண்டும் விரிந்தது.

இந்நேரம் என் இடத்தில்,  கமலஹாசனா இருந்திருந்தால் கெட்ட வார்த்தையில் அந்தக் கோட்டு ஸூட்டைத் திட்டியிருப்பார். இதோ…நான் கையாலாகாதவன்…அதனால கெளம்பிட்டேன்…குமுறிய இதயத்துடன் ஹெல்மெட்டை தலையில் மாட்டிக் கொண்டு பைக்கைத் தட்டுகிறான்.

அவனோடு சேர்ந்து பைக்கும் குமுறுகிறது.

போகும் போது இருந்த எந்த வீண் நினைவோ கனவோ ஏதுமின்றி வீட்டை அடைந்த அவன் கைகளில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் லட்டுக்கள்.

கண்களில் தீபத்தோடு புருவங்கள் உயர்த்திய அம்மா, பெருமையோடு, கம்பீரமாக  அப்பா..!

விஸ்வநாத்துக்கு வேலை கிடைச்சாச்சு….நாளேலேர்ந்து ஜாயின் பண்றான்…வீட்டு டெலிபோன் பில் நிமிஷத்துக்கு நிமிஷம் ராக்கெட் வேகத்தில் எகிறியது.

வீட்டுச் சுவர்கள் கூட விஸ்வா…விஸ்வா…என்ற ஒரே பெயரைக் கேட்டு அலுத்துப்போய் காதடைத்துச்  சுண்ணாம்பை உதிர்த்தது.

பொழுது எப்போது விடியும்?…..சோகத்தை கழட்டிவிட்டு விடியலுக்காகக் காத்திருந்தான் அவன்.

மறுநாளும் விடிந்தது…..!

“திஸ் இஸ் ஆர்.விஸ்வநாத் ஹியர் …..ஹௌ  கேன் ஐ ஹெல்ப் யூ ஸர் …” நுனி நாக்கு ஆங்கிலத்தில் நளினமாக ஹெட் ஃபோனை சரி செய்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் விஸ்வநாதன்..!

————————————————————————————————————————

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம் – 1அகநாழிகை – புத்தக உலகம்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

3 Comments

  1. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் ஜெயஸ்ரீ,

    அடடா, மிக யதார்த்தமான நடை! உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி.

  2. Avatar
    தி.தா.நாராயணன் says:

    ஆஹா, இந்தத் துள்ளல் நடையை இதுவரையிலும் எங்கே வைத்திருந்தீர்கள்? முடிக்கும்வரை வாசகனை கட்டிப் போட்டுவிடுகிறதே.சூப்பர்ப். வாழ்த்துக்களுடன்.

  3. Avatar
    N Sivakumar, New Delhi says:

    அருமையான நடை! அருமையான கதை!! யதார்த்தமும் கூட!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *