விஸ்வரூபம் – சோவியத் யூனியனின் வியட் நாமும், மௌனம் படர்ந்த முற்போக்கு இடதுசாரிகளும்

This entry is part 26 of 29 in the series 28 ஏப்ரல் 2013

யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை)

goodbyeleninபத்து வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. அதன் பெயர் “குட்பை லெனின்” . கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பெண், தன் மகன் கைது செய்யப்படுவதைக் கண்டு மயக்கமுற்று கோமா நிலைக்குச் சென்று விடுகிறாள். அவள் கோமாவிலிருந்து விடுபடும் முன்பு கிழக்கு ஜெர்மனியே காணாமல் போய் விடுகிறது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனியின் பிரிவுச் சுவர் தகர்க்கப் பட்டிருக்கிறது. இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்து ஒரே நாடாகி விட்டன. அவள் கோமாவிலிருந்து மீண்டதும் உடனடியாக புதிய வாழ்க்கைக்கு திரும்புவது அவளுக்கு அதிர்சி அளிக்க கூடும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனவே அவளுடைய மகன் கிசஹ்க்கு ஜெர்மனி வீழ்ச்சியுற்றது பற்றியோ சோஷலிசம் போய் இரண்டு ஜெர்மனிகளும் இணைந்து முதலியத்தை ஏற்றுக் கொண்ட நாடாகவும், ஜனநாயக நாடாகவும் ஆகிவிட்ட செய்தியை மறைத்து அவள் முன்னால் நாடகம் ஆடுகிறான். அவளுடைய பழைய நண்பர்கள் இணைந்து இந்த ஏமாற்றுக்குத் துணை போகிறார்கள். அவளுடைய பழைய நினைவுகளிலேயே அவளை இருத்தி வைப்பதன் மூலம் அவளுக்கு ஏதும் அதிர்ச்சி வராமல் காத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

யமுனா ராஜேந்திரன் போன்றவர்களின் எழுத்தைப் படிக்கும் போது இந்தப் படம் தான் என் நினைவில் வந்தது. இவர்கள் இன்னமும் கோமாவில் இருக்கிறார்களா இல்லை, இன்னமும் மலிவுவிலை சோவியத் பதிப்புகளை இவர்களுக்காக மறு பதிப்புச் செய்து இவர்கள் மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்று இவர்களின் நம்பிக்கைகளைக் காப்பாற்றுகிறார்களா என்று எனக்குச் சந்தேகம் வருகிறது.

இன்று சோஷலிச நாடு என்று எதுவும் இல்லை என்று சொல்லி விடலாம். ஒன்றே ஒன்று காஸ்ட்ரோவின் கியூபா. 40 வருடங்களுக்கு மேலாக ஒரு தனிநபர் கட்டுப்பாட்டில் எந்த சுதந்திரமும் , நவீன தொழில் நுட்பமும் இல்லாமல் இருந்து வருகிறது. சீனா சோஷலிச உலகைக் கட்டுமானம் செய்வதற்காக உழைப்பு முகாம்களைத் தயார் செய்தது போய் இன்று அமெரிக்க ஐரோப்பிய மூலதனப் பெருக்கத்திற்காக மலிவுவிலை உற்பத்திக் கேந்திரங்களுக்கு ஆள் சப்ளை செய்து கொண்டிருக்கிறது. தோழர் சாவேசின் சோஷலிசம் இந்திரா காந்தியின் சோஷலிசத்தை ஒத்த ஒரு சோஷலிசம். அரசுமயமாதல், மற்றும் ஏழைகளுக்கு சமுகப் பாதுகாப்பு அளிக்கும் வரவேற்கத்தக்க செயல் என்றாலும் மார்க்சியக் கோட்பாட்டின் படி சோஷலிசம் அல்ல. போல்போட்டின் கம்போடியா இன்று இல்லை. வட கொரியாவிற்கு இன்னமும் மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்துத் தெரிவிப்பதால் அதுவும் சோஷலிச நாடாகத் தான் இருக்க வேண்டும். அதுவும் அரை நூற்றாண்டாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் எத்தனை திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கிறது என்று பட்டியலிடும் வெற்று வேலைக்கு விஸ்வரூபத்தை முன்வைத்து என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. எப்படிப் பட்டியலிட்டாலும் யமுனா ராஜேந்திரனின் பார்வையில் தாலிபனைப் பற்றி விமர்சனம் செய்தால் அது அமெரிக்க ஆதரவுப் படம் என்பது தான் முன்முடிவு. புகழ் பெற்ற நாவலான “கைட் ரன்னர்” பற்றிப் பேசும் போதும் கூட யமுனா ராஜேந்திரன் மிக முக்கியமாக அழுத்தம் கொடுத்து சொல்வது அதன் முக்கிய பாத்திரம் (கதை சொல்லியின் அப்பா) ரஷ்யர்களை வெறுப்பவர். அதனாலேயே இந்தப் படம் அமெரிக்க ஆதரவுப் படம். ரஷ்யர்களை விரும்புபவராய்க் காட்டியிருந்தால் அது புரட்சிப் படமாகியிருக்கும். (ரஷ்யர்களை வெறுப்பதற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபனாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது வேறு விஷயம்.)

அவர் கருத்துப் படி விஸ்வரூபம் அமெரிக்க ஆதரவுப் படம். எண்பதுகளில் ஆப்கானிய மீட்பராக அமெரிக்கா சித்தரிக்கப்படுவதைப் பற்றி யமுனா ராஜேந்திரன் கவலை கொள்வது ஒரு மனவியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய விஷயம். சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பு பற்றி அவர் சித்திரம் அது தான். சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஆப்கானிஸ்தான் மீள்வதற்கு அமெரிக்கா உதவி செய்தது என்ற பெரும்பாவத்தை அவர் மன்னிக்கத் தயாரில்லை. ஏனென்றால் அமெரிக்கா எதிரி. சோவியத் யூனியன் நண்பன். நண்பனின் ஆக்கிரமிப்பு சோஷலிசப் புரட்சி. அமெரிக்க எதிரியின் ஆக்கிரமிப்பு ஏகாதிபத்திய வெளிப்பாடு. ஹங்கேரியில் நடந்தது சோஷலிசப் புரட்சி. வியத்னாமில் அமெரிக்கா செய்தது ஆக்கிரமிப்பு. இது தான் முற்போக்கு, மார்க்சியப் பார்வை. எதிரியின் எல்லாச் செயல்களும் தவறு. நண்பனின் எல்லாச் செயல்களும் புரட்சிகரமானவை. இதனாலேயே அறவொழுக்கம் (Moral Authority ) சார்ந்து எந்த ஒன்றும் சொல்லவியலாதபடி அவர்களின் எழுத்தும் விமர்சனமும் முடமாகி நிற்கிறது.

ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் 1979-ம் ஆண்டு கிருஸ்துமஸ் நாளன்று 30,000 துருப்புகளைக் கொண்ட படையுடன் ஆக்கிரமித்தது. எப்படி வியட் நாமில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ததோ அதே போல் சோவியத் யூனியன் ஒரு யுத்தத்தில் சிக்கிக் கொண்டது. அமெரிக்காவிற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம் ஆகிற்று. ஆப்கானிஸ்தான் நாற்புறமும் வேறு நாடுகளால் சூழப்பட்ட கடல் வழிப் பாதை இல்லாத நாடு. ஏற்கனவே பாகிஸ்தானுடன் அமெரிக்கா கொண்டிருந்த இணக்கத்தைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த முஜஹிதீன்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தானின் விடுதலைப் போரில் மகாத்மா காந்தி போன்றவர்களோ ஜனநாயக மரபு சார்ந்த பன்முகப் போக்கில் உதித்த அமைப்புகளோ இல்லை. இஸ்லாமிய மதமும், அமெரிக்கா அளித்த ஆயுதங்களும், பாகிஸ்தான் அளித்த பயிற்சியும் தான் அவர்களின் துணை. “ஆப்கான் தாலிபானின் ஊற்றுக் கண்ணாக” அமெரிக்கா இருந்தது என்று குற்றம் சாட்டும் யமுனா ராஜேந்திரன், சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்திருந்தால் இந்தப் பிரசினை தோன்றியிருக்க வழியே இல்லை என்பதையும் சௌகரியமாக மறந்து தான் போவார்.

ரஷ்யர்களிடமிருந்து விடுபடும் முன்பு லட்சக்கணக்கில் ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாய் ஆனார்கள். லட்சக் கணக்கில் ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப் பட்டனர். தாலிபான் கைவசம் முக்கால் வாசி நாடு சென்றது. காஷ்மீர் மீதும் இந்தியா மீதும் தாக்குதல் நடப்பதை அமெரிக்கா கண்டு கொள்ளாது என்று பாகிஸ்தான் உறுதி மொழி பெற்றது. அமெரிக்கா இல்லாமல் பத்தாண்டுகள் ஆப்கானிஸ்தான் இருந்த காலத்தில் தீவிர வாதத்தை உதறியிருக்கலாமே?நடக்கவில்லையே? அது ஏன் என்ற கேள்விக்கு பதிலாக ஆப்கானிஸ்தானின் விடுதலைப் போரில் உதவி செய்து ஆப்கானிஸ்தானை ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து காத்த அமெரிக்காவையே குற்றம் சாட்டுவதன் பின்னணி என்ன?

(தொடரும்)

Series Navigationபாசம் என்பது எதுவரை?வேர் மறந்த தளிர்கள் – 2
author

கோபால் ராஜாராம்

Similar Posts

2 Comments

  1. Avatar
    paandiyan says:

    உலக பொருளாதாராம் , உலக கல்வி, சமூகம், சிந்தனை என்று அதன் பார்வையில் விஸ்வரூபம் என்று இனி போகும் போல!!!. வெற்றி பெற்ற படத்திற்கு எந்த விமர்சனமமும் தேவையில்லை. தோல்வி படத்திற்குதான் இப்படி புலம்பல் நிறையதேவைகள் உள்ளது

  2. Avatar
    Do you need one? says:

    Not many realize how Gopal Rajaram uses Viswaroopam movie reviews by our so called Tamil Intellectuals to expose the stupidity and double standards in them. It is not a critique on Viswaroopam, rather a critique on the stale state of our brain drained intellectuals.

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *