விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு

This entry is part 26 of 32 in the series 15 ஜூலை 2012

இரா.முருகன்

1938 டிசம்பர் 28 வெகுதான்ய மார்கழி 13 புதன்கிழமை

இன்னொரு வாரணாசிக் காலை. பனியும் பழகி விட்டது. பகவதி நடந்து கொண்டு இருக்கிறாள். இருட்டு தான் எங்கேயும். அது விலகி சூரியோதயம் ஆகிறதுக்கு ரொம்ப நேரம் செல்லும். வெளிச்சத்துக்காக சத்திரத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. போயே ஆக வேண்டும். போய்க் கொண்டிருக்கிறாள்.

பகவதிப் பொண்ணே, வேண்டாம்டி, சொன்னாக் கேளு. திரும்பிடலாம் வா. ஆம்பிளைகள் இல்லாம இப்படி புலர்ச்சை வேளையில் தனியா எங்கேயும் போகண்டா, கேட்டியா?

அவள் கைப்பிடியில் கலசத்துக்குள் இருந்து குரல் நடுக்கத்தோடு விசாலாட்சி மன்னி சொல்கிறாள். இரண்டே இரண்டு துண்டு எலும்பாக மட்டும் இருக்கும் அவளுக்குக் கூட பனியும் குளிரும் அனுபவப்படுமோ? பகவதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

இதுக்கும் மார்கழிக் குளிருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லேடி பொண்ணே. எனக்கு எனக்கு.

மன்னி கூட வார்த்தை வராமல் தடுமாறுகிறாள்.

என்ன உங்களுக்கு சொல்லுங்கோ. என்னோடு இப்படி வரப் பிடிக்கலியா?

பகவதி அந்தக் கலசத்தைக் காதுக்கு அருகில் பிடித்து உள்ளே ஏதும் ஒலிக்கிறதா என்று பார்த்தாள்.

பயம்டீ. பயம். ரொம்பவே பயப்படறேன்.

குரல் வெளியே எங்கேயோ இருந்து வருகிறது. இல்லை, அது அவளுக்கு உள்ளேயே எழுந்து மனசிலும் புத்தியிலும் பரவி ஒரு க்ஷணத்தில் கரைந்து போகிறது.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

எல்லா நாளும் இப்படித்தான் தொடங்குகிறது. இப்படித்தான் முடிகிறது. இந்தக் காலை நேரத்தின் முதல் ஊர்வலம் சுடலைக்கு ஊர்ந்து கொண்டிருக்கிறது.

பகவதி வழிவிட்டு நின்று வழிபாடு போல் பிரார்த்திக்கிறாள்.

மன்னி சொன்னா கேளு பகவதி. போயிடு.

சங்கரன்.

பூட்டிய கடைத் திண்ணையில் உட்கார்ந்து புகையிலைச் சுருட்டு பிடித்தபடி சொல்கிறான்.

நீங்களுமா போ போன்னு விரட்டறது இப்படி? நல்ல காரியத்துக்குத்தானே போயிண்டு இருக்கேன். பிடிக்கலியா? ஆமா, சுருட்டு எல்லாம் எப்பப் பழகினது?

சங்கரன் அங்கே இல்லை. பைராகி ஒருத்தன் திண்ணையில் கௌபீன தாரியாக நித்திரை போய்க் கொண்டிருக்கிறான். சே, என்ன கஷ்டம். இந்த தரிசனத்துக்காகவா வந்தது?

சொன்னாக் கேளு பகவதி. போற வழி முழுக்க ஆளாளுக்கு அது பாட்டுக்கு ஆடட்டும் நான் பாட்டுக்கு உறங்கறேன்னு இன்னும் நிறையப் பேர்வழிகள் உண்டு. போயிடலாமே.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

நாணிக் குட்டி படுத்துப் போனபடி, நாலு பேர் சுமந்து போனபடி சொல்கிறாள்.

நானும் உன்னோட படுத்துண்டே வரேனே.

பகவதி அவளை ஏக்கத்தோடு நிமிர்ந்து பார்க்கிறாள்.

இங்கே எனக்கே எசகு பிசகாத்தான் இடம் இருக்கு. இதோ வந்தாச்சு. கொஞ்ச தூரம் தான். உனக்கு இப்ப இல்லைன்னு தோணறது. எதுக்கு இங்கே வர்றே? பிராந்தா என்ன உனக்கு?

ஏதோ ஸ்நான கட்டம். ஒரு வாரமாக இப்படி கங்கைப் படித்துறைகளைப் பார்த்துப் பழகி இருந்தது பகவதிக்கு.

பகவதியின் முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் காலத்திலோ அதுக்கும் முன்போ யாரோ போட்டு வைத்த கல் படிகள் நதியைத் தொட அவசரமாக இறங்கும். அப்புறம் ஆழமில்லாத கங்கை பாசத்தோடு காலை நனைத்து வா வா என்று கூப்பிடும். நாலு அடி தண்ணீரில் கால் வைத்து சில்லிப்பை, நகர்கிற நீரின் வேகத்தை அனுபவித்தபடி முன்னால் போனால், புரோகிதப் பண்டா உட்கார்ந்திருக்கிற தாவளம்.

ஏழெட்டு பலகையை குறுக்கே போட்டு மேலே ஒரு கூரையும் ரெண்டு அடுத்தடுத்த பலகைகளுக்கு நடுவே பதித்து வைத்த ஆசனங்களும் தலைமாட்டில் ஒரு குடையுமாக எல்லா பண்டாக்களும் எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பாக தொழில் செய்து கொண்டிருப்பார்கள்.

இருட்டில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் என்ன? இறங்கினால் இங்கேயும் ஒரு புரோகிதன் தட்சணையை எதிர்பார்த்து இருட்டுக் கோழி மாதிரி அடைசலாக கம்பளியைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

இதென்ன, இங்கே இருட்டை இன்னும் கருப்பாக்கிக் காட்டிக் கொண்டு வெளிச்சம் ஒரு ஓரத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறதே. புகை. இது பனிமூட்டம் இல்லை. புகைதான். எதையோ பொசுக்குகிற வாடை.

கரையில் நூறு இருநூறு வருஷம் பழைய கட்டிடங்கள் வரிசையாகச் சாம்பல் பூசிக் கொண்டு சுவரும் கூரையும் கருத்துப் போய் நிற்கின்றன. ஊர்கிற மனுஷர்கள். ஆண்கள் மட்டும்.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

பகவதி போயிடடாம் வா. இதுல்லாம் ஸ்திரிகள் புழங்கற இடம் இல்லே போல இருக்கு.

விசாலம் மன்னி பயத்தோடு சொல்கிறாள். என்ன பயம் மன்னி? நாமே தான் நமக்குன்னு ரெண்டு பேரும் ஆகி எத்தனையோ வருஷமாச்சு. நம்மையும் பொண்ணா மதிச்சு எங்கே கூப்பிடறா இங்கே மட்டும் விலக்கி வைக்க?

போயிடுடி பகவதி. நான் முடிஞ்சு போகணும்.

படித்துறையில் இருந்து குரல் வருகிறது. நாணிக்குட்டி.

ஏய், நீ எதுக்கு இங்கே வந்து படுத்துண்டு இருக்கே?

குளிக்கத்தான்.

நாணிக்குட்டியைக் கிடத்தியபடிக்கே கங்கையில் ஒரு முறை அமிழ்த்தி எடுக்க, புழையில் குளித்த சிலிர்ப்போடு அவள் பகவதியைப் பார்க்கிறாள்.

போய்க்கோ பகவதிக் குட்டி.

நதிப் பிரவாகத்தை ஒட்டி கால் இருக்கணும். சரிச்சு வை. கர்த்தா யாரு? வா இப்படி.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

கங்காஜலத்தை மூணு முறை வாயிலே விடு. அப்படியே மீதி தண்ணியை மேலே முழுக்க நனைக்கற மாதிரி விடு. கங்கா ஸ்நானத்தோடு அமர்க்களமா சுவர்க்கம் போறா உங்க அம்மா. தீபாவளி தான் அவளுக்கு. சந்தோஷப்படு.

எனக்கு மட்டும் தீபாவளியாம். ஏன் ஓணம் இல்லியா? விஷு இல்லியா? நாம ஏற்பாடு செஞ்சுக்கறதுதானே எல்லாம்? சரி நான் கிளம்பறேன். நீ போ.

நாணிக்குட்டி மறுபடியும் அவசரப்படுத்துகிறாள்.

அந்தக் கட்டை மேலே மெல்ல படுக்க வையுங்கோ.

நாணிக்குட்டியை விறகுக் கட்டைகளுக்கு மேலே படுக்க வைக்கிறார்கள். மார் மேலே இன்னொரு கட்டை குறுக்கு நெடுக்காக வைக்கப்படுகிறது.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

அக்னி. அக்னி.

புரோகிதன் அவசரப்படுத்துகிறான், சூரிய கிரணங்கள் பதவிசாக அங்கே இறங்கிக் கொண்டிருக்கின்றன. இருட்டில் குவியல் குவியலாகக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிந்தவர்கள் மனுஷர்கள். இருப்பவர்கள். இருந்தவர்கள்.

நாணிக்குட்டி சிரிக்கிற மாதிரி தோன்றுகிறது பகவதிக்கு. அவள் ஏதோ பகவதியிடம் சொல்கிறாள்.

பகவதி படி இறங்கி இடுப்பளவு கங்காஜலத்தில் நகர்ந்து முன்னால் போக பிருஷ்டத்தில் ஏதோ தட்டி விலகுகிறது. கையில் பிடித்த கலசத்தோடு அவள் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள்.

ஏய் இதென்ன, இப்படி பிரம்மாண்டமாக முதுகில் மலை மாதிரி ஓட்டைச் சுமந்து கொண்டு ஒரு ராட்சச ஆமை.

அந்த ஆமை அவளை லட்சியம் செய்யவே இல்லை. தண்ணீருக்குள் முக்குளித்து எதையோ தேடுகிறது. அது நிமிரும் போது வாயில் மனுஷக் கையோ காலோ ஏதோ ஒன்று பாதி எரிந்து கரிந்து நீட்டிக் கொண்டிருக்கிறது. அப்புறம் அதுவும் முழுக்க வாயில் மறைய ஆமை திரும்ப முக்குளிக்கிறது.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

என்ன பார்க்கிறே? நீ போக மாட்டியா? சரி இரு. நானும் எரிஞ்சு முடிச்சுக்கறேன்.

நாணிக்குட்டி பலமாகச் சிரிக்கிறாள். வேற்று மனிதர்கள் அதுவும் ஆண்கள் இருப்பதைப் பற்றி எல்லாம் லட்சியம் செய்யாத சிரிப்பு. உயிர் போனதற்கு அப்புறம் யாருக்கும் எந்த மரியாதையும் தர வேண்டியது இல்லை போலிருக்கிறது.

பின்னால் யாரோ உரசுகிற மாதிரி. அரை வட்டம் கிரங்கி பகவதி பார்க்க இன்னொரு ஆமை. அதே தோதில். அதே போல மனுஷ உடலின் வேறு ஏதோ உறுப்பைக் கவ்விப் பிடித்தபடி.

ஆமை வாயிலே தான் அவனோட பௌருஷம் அடங்கணும்னு இருக்கு பாரு.

நாணிக்குட்டி. உனக்கு விவஸ்தையே கிடையாதா.

பகவதி சிரித்தபடி தலையைத் தாழ்த்த, புரோகிதன் குரல் சத்தமாக பக்கத்தில் ஒலிக்கிறது.

ஏய் மாதாஜி. இங்கே எல்லாம் ஸ்திரிகள் வரக் கூடாது. இது ஸ்நானக் கட்டம் இல்லே. மணிகர்ணிகா ச்மசானம். போயிடுங்கோ.

இவ மட்டும் இருக்காளே?

பகவதி நாணிக்குட்டியைக் காட்டிச் சிரிக்கிறாள். வெளிச்சத்தில் நாணிக்குட்டியின் முகத்தைப் பார்க்கிறாள். அதென்ன வடக்கத்திச் சாயலில் சோகையான இளவயசுப் பெண்ணாகவா நாணிக்குட்டி இருந்தாள்?

முகத்தை இன்னொரு தடவை பார்க்கிறதுக்குள் காரியம் செய்ய வந்தவன் அக்னியோடு வலம் வந்து மேலே கொள்ளியை எரிகிறான்.

சுற்றிலும் நிற்கிற எல்லோரும் பகவதியை அங்கே இருந்து விரட்டி அவசரப்படுத்துகிறார்கள். போறதுன்னா போய்க்கோ என்று அவளைத் துச்சமாகப் பார்த்துவிட்டு ஆமைகள் ஆற்றுப் பிரவாகத்துக்குள் இன்னொரு தடவை மூழ்குகின்றன,

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

போதும்டி அம்மா. போதும். கிளம்புன்னா கிளம்பணும்.

விசாலம் கண்டிப்பாகச் சொல்கிறாள். பகவதி படி ஏறி மெல்ல மேலே வருகிறாள்.

மேல் படியில் நின்றபடி அந்த மயானக் கட்டத்தை இன்னொரு தடவை தீர்க்கமாகப் பார்க்கிறாள்.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

இன்னும் இரண்டு சவங்கள் கோஷ யாத்திரையோடு வந்து சேர்கின்றன. கால்கள் கட்டிய நிலையில் கங்கையை நோக்கி வைக்கப்பட்டு சுகமான குளியல். சுத்தமாக்க வாயில் கங்கை நீர். மூணு தடவை.

எரிந்து கொண்டிருந்த சவத்தை அப்படியே கங்கைப் பிரவாகத்தில் விட, பக்கத்தில் நிற்கிற ஒரு பிரம்மஹத்தி குதித்துப் போய் அரைகுறையாக இருந்த கழுத்தில், கை, கால், காது இருந்த இடத்தில் ஏதாவது பொட்டுத் தங்கமோ வெள்ளியோ இருக்கா என்று சல்லடையால் சலித்துத் தேடுகிறான். இந்தியில் வசவு உதிர்த்துக்கொண்டு அவன் மேலே வரும்போது ஆமைகள் சிரிக்கின்றன,

பகவதி, வா, வந்த வழி இதுதான். திரும்பிடலாம்.

விசாலம் மன்னி குரலில் இன்னும் பயம் போகாமல் அவசரப்படுத்துகிறாள்.

தடதடவென்று ஒரு பெரிய கூட்டம் முன்னேறி வருகிறது. ஆமைகள் மாதிரி முரட்டு மனிதர்கள். பைராகிகள்.

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

நீண்டு நெடுகப் போகும் சவ ஊர்வலத்தை ஊடுருவி சத்தம் போட்டபடியே ஓடுகிறார்கள்.

தீர் சே போல்.
ஜோர் சே போல்

அரையில் தார்பாய்ச்சிக் கட்டிய வேஷ்டியும் மேலே முறுக்கி வளைத்து முடிச்சுப் போட்ட உத்தரீயமுமாக ஓடுகிறார்கள். நடக்கிறார்கள். சிலர் முழு நக்னமாக. இன்னும் சிலர் அரையில் கௌபீனம் மட்டும் தரித்து. எல்லோர் கையிலும் ஒரு இரும்பு உலக்கை.

முன்னாலும் பின்னாலும் போய்க் கொண்டிருந்தவர்கள் அவசரமாக வழிவிட ஒதுங்குகிறார்கள்.

பைராகிகள் சேர்ந்து பாடுகிறார்கள். சேர்ந்து ஓடுகிறார்கள். பாடிக் கொண்டே ஓடுகிறார்கள்.

தீர் சே போல்
ஜோர் சே போல்
சுபே தக் ராத்
விஸ்வ நாத்.

பாட்டுக்கு நடுவே சொல்லி வைத்தது போல் சேர்ந்து நிறுத்தி இரும்பு உலக்கைகளால் அவரவர்கள் மாரிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து கொள்கிறார்கள். மாரெல்லாம் காய்த்துத் தழும்பேறிப் போயிருக்கிறது. உலக்கைகள் கருத்து நீண்டு பயங்கொள்ள வைக்கின்றன.

பைராகிகளின் கூச்சல் மயானக் கட்ட சடலங்களையும் எழுந்து பார்க்க வைக்கும் திடமுன் திண்மையும் கொண்டது.

பகவதி எங்கேயாவது ஒதுங்கி ஒரு நிமிடம் நின்றால் போதும். பைராகிகள் வழியோடு போய்விடுவார்கள்.

அவள் பக்கத்துக் கடைத் திண்ணை ஏற நினைக்கும்போது அங்கே உடம்போடு உடம்பு படிய போகத்தில் ஈடுபட்டிருந்த ரெண்டு நாய்களைப் பார்க்கிறாள்.

காலையிலே இந்தக் கண்றாவியா பார்க்கணும்?

அவள் கீழே அவசரமாக இறங்க, பைராகிகள் அவளை நாலு பக்கமும் சூழ்கிறார்கள்.

முன்னும் பின்னும் இடமும் வலமும் ஆண் உடல்கள். வியர்த்து நாறி வீபுதி உலர்ந்து சாம்பல் பூசி உதிர்ந்து உலக்கை அடிபட்டு அடிபட்டுக் கன்றிப்போன முதுகும் புஜங்களும்.

ஈ மொய்க்கும் புண்களில் ஊறி வடியும் நீரின் துர்வாடையோடு முன்னேறி வருகிறார்கள் பைராகிகள்.

அவள் யார் மேலும் தன் உடம்பு படாமல் குறுகிக் குறுகி நகர முயன்றாள். முகத்துக்கு நேரே கைகளும் உலக்கைகளும் உயர்ந்து தாழ, தூசி எழுந்து நாற்புறமும் சூழ அவள் தன்னை அறியாமலேயே கல் படிகளில் கால் பதித்துக் கொண்டிருந்தாள். படித்துறைப் படிகள்.

மயானக் கட்டம் இல்லை இது. கீழே மங்கலாக நிறையப் பேர் முழுகிக் கொண்டிருப்பது தெரிகிறது.

அவள் மெல்லப் படி இறங்குகிறாள்.

பகவதி. பகவதி. பகவதி.

விசாலம் மன்னி திரும்பத் திரும்ப அவளை விளிக்கிறது மட்டும் கேட்கிறது. பைராகிகளின் இரைச்சலில் மற்றது எதுவும் காதில் விழவில்லை.

பத்திரமா என் கையிலேயே இருங்கோ மன்னி. இதோ ஆச்சு. வந்த படிக்கே திரும்ப வேண்டியதுதான்.

அவள் கங்கைப் பிரவாகத்தில் நுழைந்தாள். ஆமைகளோ எரியும் உடல்களோ அவசரப்படுத்தும் புரோகிதர்களோ பைராகிகளோ இல்லாத பெருவெளியாக விரிகிற நீர்ப் பரப்பு. தான் தொடும் எதையும் எவரையும் கறை களைவித்து தூய்மையாக்கி நிறுத்தி ஓடும் நதி. மனதிலும் உடலிலும் எல்லா அழுக்கையும் கங்கையின் பிரவாகம் கழுவிக் களையட்டும்.

மனமும் தான் எதற்கு? உடலும் தான் எதற்கு? எதுவுமே வேண்டாமே? நீ ரெண்டுமில்லையே?

கங்கை சிரித்தபடி ஓடுகிறாள்.

பகவதி கழுத்து வரை நீரில் மூழ்கும்போது கையில் இருந்த கலசம் நழுவுகிறது.

போய்ட்டு வாங்கோ விசாலம் மன்னி. நானும் பின்னாலேயே வந்துண்டு இருக்கேன்.

சாமா, சாமா, அம்மா இங்கே இருக்காங்கடா.

மருதையனின் குரல் தான் அவள் கடைசியாகக் கேட்டது.

(தொடரும்)

.

Series Navigationவீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்பில்லா -2 இருத்தலியல்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    era.murukan says:

    நடுவில் சில வரிகள் சரியாகத் திரையில் வரவில்லை. அவை

    தீர் சே போல்.
    ஜோர் சே போல்

    அரையில் தார்பாய்ச்சிக் கட்டிய வேஷ்டியும் மேலே முறுக்கி வளைத்து முடிச்சுப் போட்ட உத்தரீயமுமாக ஓடுகிறார்கள். நடக்கிறார்கள். சிலர் முழு நக்னமாக. இன்னும் சிலர் அரையில் கௌபீனம் மட்டும் தரித்து. எல்லோர் கையிலும் ஒரு இரும்பு உலக்கை.

    முன்னாலும் பின்னாலும் போய்க் கொண்டிருந்தவர்கள் அவசரமாக வழிவிட ஒதுங்குகிறார்கள்.

    பைராகிகள் சேர்ந்து பாடுகிறார்கள். சேர்ந்து ஓடுகிறார்கள். பாடிக் கொண்டே ஓடுகிறார்கள்.

    தீர் சே போல்
    ஜோர் சே போல்
    சுபே தக் ராத்
    விஸ்வ நாத்.

    பாட்டுக்கு நடுவே சொல்லி வைத்தது போல் சேர்ந்து நிறுத்தி இரும்பு உலக்கைகளால் அவரவர்கள் மாரிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து கொள்கிறார்கள். மாரெல்லாம் காய்த்துத் தழும்பேறிப் போயிருக்கிறது. உலக்கைகள் கருத்து நீண்டு பயங்கொள்ள வைக்கின்றன.

  2. Avatar
    admin says:

    நன்றி முருகன்
    மாற்றிவிட்டிருக்கிறேன்
    (படிக்கும்போது தெரியவில்லை)

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *