விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று

This entry is part 40 of 41 in the series 10 ஜூன் 2012

 

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை

 

உன்னாண்ட ஒரு தண்ணிச் சொம்பும் கன்னடத்திலே எவனோ எங்கேயோ எழுதிக் கொடுத்த கோர்ட் காயிதமும் ஒரு தபா கொடுத்தேனே, ஞாபகம் இருக்கா? கோர்ட்டுலே குப்பை செத்தையா அடஞ்சு வச்சிருந்த ஜாமானுங்க.

 

நாயுடு சாயும் சூரிய வெளிச்சம் முகத்தைப் பாதிக்கு வெளிச்சம் போட, மீதம் மசங்கல் இருட்டில் இருந்தபடி நீலகண்டனைக் கேட்டான்.

 

நினைவு இருக்கிறது. அவன் கொடுத்தது. முக்கியமாக அந்த செம்பு. கங்கா ஜலம் என்று மாடப்புரையில் வைத்தது. அதுக்குள்ளே இருந்தும் குரல் கேட்டது மாதிரி பிரமை. எல்லாம் பத்து இருபது வருஷத்துக்கு முந்திய சமாச்சாரம் இல்லையோ. நீலகண்டன் கெத்தாக சூப்பிரண்டெண்ட் ஆகிறதுக்கு கொஞ்சம் முன்னால். நாயுடுவும் கியாதியாக ஹை கோர்ட்டில் சிரஸ்தாராக இருந்த காலம்.

 

ஆமாடா நாயுடு. கொடுத்துட்டு திரும்ப வந்து வாங்கிண்டு போனியே. ஸ்டேன்ஸ் துரை பரலோகம் போன அன்னிக்கு. திதி கூட ஞாபகம் இருக்கு. வருஷம் மாசம் தினம். ஆடிட்டுன்னோ என்னமோ நீ கால்லே வென்னீரைக் கொட்டிண்டு நின்னே. ஆத்துக்குப் போய் எடுத்துண்டு வரதுக்குள்ளே தாவு தீர்ந்து போச்சு அன்னிக்கு.

 

அதேதான். அந்தக் கபோதி ஆடிட்டர் நான் இந்தச் சொம்பையும் சட்டி பானை நசுங்கின லோட்டாவை எல்லாம் மூட்டை கட்டி எடுத்துப் போய் ஒப்படைக்கறதுக்குள்ளாற ரிப்போர்ட்டை முடிச்சு ஏறக்கட்டி வச்சுட்டான் சாவுகிராக்கி. எல்லாம் சரியா இருக்குன்னு சர்ட்டிபிகேட். அதை முன்னாடியே சொல்லித் தொலைச்சா நான் அலைஞ்சு நீ அலைஞ்சு எளவு கூட்டியிருக்க வேணாமில்லே. ஆடிட்டு வந்தா ஜாமான் முடியைக் கூட எண்ணிப் பார்ப்பானுங்க.

 

அவன் உள்ள படிக்கே கோபப்பட்டான். மூக்கு விடைத்துக் கொண்டது. கொட்டிலில் இருந்து எருமை மாடு நீளமாக நீட்டி முழக்கிக் கூப்பிட்டபோது, அதனுடைய அம்மா மாட்டோட்டு உறவு வைத்துக் கொள்ள அக்கறை உள்ளதாக அறிவித்தான் நாயுடு. நீலகண்டனுக்கு சிரிக்க இன்னொரு சந்தர்ப்பம்.

 

அடே, மனுஷாளே இந்த வயசுலே கஷ்டம். மாட்டோட என்னத்துக்குடா இழுபறி? ஆடிட்டர் வந்து போனது பதினஞ்சு வருஷம் முந்தி. அவனும் உன்னையும் என்னையும் போல பென்ஷன் வாங்கிண்டு, கயத்துக் கட்டில்லே உக்காந்திருப்பான் இப்படி.

 

இல்லே அய்யரே. அவன் வீட்டிலும் எருமைமாடு இருக்கும். அதை.

 

மாட்டை விடுடா. சொம்பு பத்தி ஏதோ சொல்ல வந்தியே?

 

நீலகண்டன் அவசரப்பட்டான். அவனுக்குக் கேட்ட குரல் பிரமை இல்லை என்று நிச்சயப் படுத்திக் கொண்டால் சற்றே ஆசுவாசம் கிட்டும்.

 

ஆமாமா, அந்தச் சொம்பு. அதாலே என்னா பிரச்சனை போ. அடுத்த உலக மகா யுத்தமே கூட வந்துடலாம். வந்துட்டு இருக்காமே. பேய்ப்பய ஹிட்லர் அடிச்சுத் தள்ளிக்கிட்டு முன்னேறி வரானாமே.

 

நாயுடு சப்ஜெக்டை விட்டு வழக்கப்படி விலகி வெளியே போய்விட்டான்.

 

ஹிட்லர் கிடக்கட்டும்டா.

 

சரிப்பா சரி, வந்தாச்சு. சொம்பு தானே. நான் ரிடையர் ஆனேன் பாரு. அன்னிக்கு வழக்கம்போல ராவ்ஜி மிட்டாய்க்கடை பூந்தி லட்டு, காராபூந்தி, உளுந்து வடை இதோட பார்ட்டி. உனக்கும் கொடுத்திருப்பாங்களே நீ வெளியே வந்தப்போ.

 

ஆமாடா, அப்புறம் அக்ராசனர் பிரசங்கம், செய்யுள் இயற்றத் தெரிஞ்ச யாராவது அறம் பாடுற மாதிரி பத்து பனிரெண்டு வரி எழுதிக் கண்ணாடிச் சட்டம் போட்டுக் கொண்டு வந்து வாசிச்சுக் கொடுக்கற வாழ்த்துப் பாட்டு.

 

கோர்ட்டுலே அதெல்லாம் தெரிஞ்ச பயபுள்ளைங்க யாரும் கிடையாது. உங்க கப்பல் ஆபீஸ்லே வேணும்னா  இருக்கலாம். ஆனா, எலுமிச்சம்பழ மாலை?

 

எலுமிச்சம்பழ மாலையா? கையிலே சாஸ்திரத்துக்கு ஒண்ணைக் கொடுத்துட்டு அவனவன் பேசிண்டே போவான். நாம மோந்து பாத்துண்டு எப்படா முடியும் இதெல்லாம்னு நட்ட நடு நாயகமா உக்கார்ந்துண்டு இருக்கணும்.

 

எங்க ஆபீஸ்லே என்ன வழக்கமோ போ. சின்னதும் பெரிசுமா இருபது எலுமிச்சம் பழத்தை மாலையாக் கோர்த்து கையிலே கொடுப்பாங்க. கழுத்திலே மல்லிப்பூ மாலைக்கு மேலே போட்டுக்கிட்டு நாற்காலியிலே உக்கார்ந்தா ஏதோ சாதியிலே சாவு விழுந்தா உக்கார வச்சு எடுத்துப் போவாங்களே அச்சு அசப்பா அது மாதிரி இருக்கும்.

 

நீலகண்டன் ரசித்துச் சிரித்தான். நாயுடு விரைப்பாக எலுமிச்சம்பழ மாலையோடு வாய் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிற காட்சி மனசில் தத்ரூபமாகப் பதிந்துவிட்டது.

 

வாக்கிங் ஸ்டிக், வெள்ளி தகடு பதிச்ச ராமர் பட்டாபிஷேகப் படம் இப்படி அததுக்குன்னு உண்டான வெகுமதி எல்லாம் எடுத்துக் கொடுத்ததும், ஜட்ஜ் துரை எழுந்திருச்சார். கையிலே ஒரு துணிப்பை. அரிசி, அஸ்கா ஏதுனாச்சும் தர்றாரான்னு தோணிச்சு.

 

ஆமாமா, ரேஷன் காலத்துலே உபயோகமா இருக்குமே.

 

இல்லே அய்யரே. அதிகாரி சிரிச்சுக்கிட்டே பையை என் கையிலே கொடுத்தான்.

அஸ்கா இல்லே. அரிசியும் இல்லே. ஆடிட்டு நேரத்திலே என்னை எடுத்தாற வச்சாங்களே அந்த சொம்பும் டாக்குமெண்டும் தான்.

 

நீலகண்டன் புரியாமல் பார்த்தான்.

 

மிஸ்டர் நாயுடு கிட்டே இருந்து வாங்கி கோர்ட் கிளார்க் கேஸ் சம்பந்தமான ஜாமான் ஜாபிதாவிலே எண்ட்ரி போட்டு இம்புட்டு நாள் ரிக்கார்ட் ஆபீஸ்லே வச்சிருந்தது. இதாலே யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லேன்னு தெரிய வந்தது. அந்த காப்பர் செம்பில் ஹிந்து பிரஜைகளுக்கு ரொம்பவே புனிதமாக கங்கைத் தண்ணீர் இருக்கும் என அனுமானிக்கிறேன். நாயுடுவுக்கு அவர் உத்தியோகம் பூர்த்தியாகி போகும்போது கோவில் பூஜாரி போல் சந்தோஷமா இதைக் கொடுக்கறேன்.

 

நாயுடு துரை போல் இங்கிலீஷில் ஆரம்பித்து, அவனுடைய பாஷையில் முடித்தான்.

 

சரிய்யான்னு அதை வாங்கியாந்து ஜட்கா வண்டியிலே உக்காந்தேன் பாரு. அப்பப் பிடிச்சு மனசுலே ஏதோ குத்தம் பண்ணின மாதிரி தோணுது. வீடு மாத்தி இங்கே சொந்த வூட்டுக்கு வரச் சொல்ல அங்கேயே விட்டுட்டு வரலாமானு பார்த்தேன். வேணாம் வேணாம்னு யாரோ அய்யர் வூட்டம்மா ராப்பூரா என் தலைமாட்டுலே நின்னு அழுத மாதிரி தோணிச்சுப்பா, ஏன் கேக்கறே.

 

நீலகண்டன் நிமிர்ந்து உட்கார்ந்தான். நாயுடுவுக்கு ஏற்பட்ட அனுபவம் ஆகக் கூடி அந்தச் செம்போ இல்லை பழைய காகித ஸ்டாம்ப் பேப்பர் டாக்குமெண்டோ உண்டாக்கியதாகத்தான் இருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை.

 

இங்கே குடிபெயர்ந்ததும் மொத வேலையா பரண்லே ஒரு கள்ளியம்பெட்டியிலே அந்த ரெண்டு ஜாமானையும் போட்டு முன்னடிக்கே கைக்கு எடுக்கற வாகா தூக்கி வச்சேன். நாய்னா, இதென்னத்துக்கு இங்கே, கோவில்லே கொடுத்திடலாமேன்னான் பையன்.

 

அட, நானும் மடையன் மாதிரி வாய் பாத்துண்டு உக்காந்துண்டிருக்கேன் பாரு. ஆமா, உனக்கு ஒரே புத்ரனாச்சே. லேட் மேரேஜ். லேட் சந்தானம். அப்படித்தானேடா?

 

என்னத்த லேட்டு? அவனுக்கும் இப்போ பத்தொன்பது வயசு. டிராம் கம்பெனியிலே கண்டக்டரா இருக்கான்.

 

சொல்லவே இல்லியே. சம்பளம் எல்லாம் எப்படி?

 

ஏன் சில்லறையாத்தான் கொடுப்பானான்னு கேக்கறியா? அதெல்லாம் இல்லே. மாசம் பொறந்ததும் நாப்பது ரூபாய் ராஜா தலை போட்ட நோட்டா கொடுத்திடறான். அதுலே அவுங்க அம்மா கையிலே இருபது ரூபாயைக் கொடுத்திட்டு தனக்கு செலவுக்குன்னு மீதி. என்ன செலவு. பயாஸ்கோப் பாக்கணும். பாகவதர் படம்னா வெறி. போன வருஷம் அம்பிகாபதியும் சிந்தாமணியும் ரிலீஸ் ஆனப்போ வேலைக்கு லீவு சொல்லிட்டு கொட்டாய்க்குப் போய்ட்டான்’பா.

 

நீலகண்டனோடு நாயுடுவும் பலமாகச் சிரிக்க, என்னை வந்து கவனியேண்டா என்று எருமை இரைந்தது கொட்டிலில்.

 

பேரு என்ன?

 

நீலகண்டன் கரிசனத்தைக் காட்ட வேண்டிக் கேட்டான்.

 

கன்னையா. கன்னையா நாயுடு சன் ஆப் ராமானுஜடு நாயுலு.

 

ஜூனியர் நாயுடு எங்கே? அவங்க அம்மாவை சினிமாவுக்குக் கூட்டிண்டு போயிருக்காப்பலியா?

 

வீடு வெறிச்சென்று இருக்க, இவனைக் கயிற்றுக் கட்டிலோடு விட்டுவிட்டு அம்மாவும் பிள்ளையும் சினிமா போயிருக்கலாம். அம்மாவுக்கு பிரியமான பிள்ளை. நாளைக்கு ஒரு கல்யாணம் ஆனால் அதுக்கு அப்புறமு பிரியமும் மாசச் சம்பளத்தைக் கொண்டு வந்து கொடுப்பதும் எல்லாம் இருக்குமா என்று தெரியவில்லை. அது சரி, நம்ம வீட்டுக் கதை எப்படி இருக்குமோ? மனசில் இப்போது சிரிப்பது கற்பகம். சீக்கிரம் வந்துடுங்கோன்னா. இருட்டிண்டு போறது. ஞாபகப் படுத்தவும் மறக்கவில்லை அவள்.

 

அவன் செகண்ட் ஷோதான் போவான். இப்போ பூனமல்லி ஹைகோர்ட் டிராம்லே டிக்கெட் கிழிச்சுக் கொடுத்துட்டு இருப்பான்.

 

நாலு காசு சம்பாதிக்கிற உத்தியோகத்தில் இருக்கப்பட்ட மகன். அது நாலு மட்டும்தான் என்றாலும் பாதகமில்லை. நாயுடுவுக்குப் பெருமைதான்.

 

சரி, செம்பு சமாச்சாரத்தை இன்னொரு நாள் வரும்போது பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். இதுக்கு மேல்கொண்டும் இவனோடு வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தால், வீட்டில் கற்பகம் பிடிபிடி என்று பிடித்துக் கொண்டு விடுவாள். அவளுக்கு தூரம் நின்று போனதற்கு அப்புறம் எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. பத்து நிமிஷம் தான். அந்த நேரத்தில் எலுமிச்சம் மாலை போட்டுக் கொள்ளாத பத்ரகாளியாகக் கூட சமயத்தில் தெரிந்து நீலகண்டனை வெருள வைத்ததுண்டு.

 

நீலகண்டன் எழுந்து நின்றான்.

 

எங்கே அய்யரே கிளம்பிட்டே? மெயின் சினிமாவே இன்னும் போடலே. அதுக்குள்ளே எந்திரிச்சா என்ன அர்த்தம்?

 

நாயுடு அவன் கையைப் பிடித்துத் திரும்பவும் உட்கார வைத்தான்.

 

போன வாரம் நம்ம வூட்டுக்கு ஒரு சாமியாரம்மா வந்துச்சுபா. திருக்கழுக்குன்றம்தான் ஊராம். மெட்ராஸிலே வாக்கப்பட்டுதாம்.

 

சாமியாரிணிக்கு எதுக்குடா கல்யாணம்?

 

நீலகண்டன் பேச்சு சுவாரசியத்தில் திரும்ப உட்கார்ந்தான். காப்பி கிளாசில் எறும்பு மொய்க்க ஆரம்பித்திருந்ததால் அதை காலுக்கு அப்புறமாக நகர்த்தி வைத்தான்.

 

ரே தொங்கா, இக்கட ரா.

 

நாயுடு இருட்டுக்குள் இருந்து இரைந்து, காப்பிக்கடைக்காரப் பையனைக் கிளம்பி வரவைத்தான்.

 

அவன் கிளாசோடு போகும்போது, ‘மாசக் கணக்கு. காசு பென்ஷன் வந்ததும் கொடுத்தா போதும்’ என்றான் நீலகண்டனிடம்.

 

உப்பு, புளி, மளிகை, பேப்பர் சந்தா, பால்காரன் இதுபோல் காப்பிக் கடையிலும் கடன் வைக்கலாம் போல் இருக்கு.

 

நீலகண்டனுக்குத் தோன்றியது.

 

என்னத்துக்கு உங்களுக்கு அந்த கர்மகாண்டம் எல்லாம். காலாகாலத்திலே வீட்டுக்கு வந்து சேர்ற வழியைப் பாருங்கோ என்று கற்பகம் சிடுசிடுத்தாள்.

 

திருக்கழுக்குன்றம் சாமியாரம்மா.

 

ஆமா அய்யரே அதேதான். அய்யர் ஊட்டம்மா. புருஷன் விட்டுட்டுப் போனதுக்கு அப்புறம் கோவிலே கதியாக் கிடந்து அம்மன் அருள் வந்த பொம்பளை. வீட்டுக்குள்ளே நுழைஞ்சதுமே என்னா ஏது, இருக்கப்பட்டவங்களோட பழைய கதை, இனிமே நடக்கப் போறது இப்படி பலதும் சட்டுனு சொல்லிடும்.

 

நீலகண்டனுக்கு அந்த சாமியார் மாமியை வீட்டுக்குக் கூப்பிட வேணும் போல் இருந்தது. என்னத்துக்கு? அசுவ தோஷம். பரிகாரமா ஹைகோர்டு வாசல்லே நிக்கற ஜட்கா வண்டி குதிரையிலே வெள்ளைக் குதிரையாப் பார்த்து கொள்ளு வாங்கி பனெண்டு பவுர்ணமிக்குப் போடு என்றால் கொள்ளுக்கு எங்கே போக, குதிரைக்கு எங்கே போக.

 

சாமியாரம்மா நம்ம வூட்டுலே காலடி எடுத்து வச்சதுமே பரண்லே கள்ளிப்பெட்டியக் காட்டிச்சு.

 

அதுலே ஒரு சுமங்கலி இருக்காப்பா. எங்கே கொடுத்தியோ அங்கேயே திரும்பக் கொடுத்துடு அப்பிடீன்னுச்சு. கோர்ட்டுலே திரும்பக் கொண்டு போய்க் கொடுத்தா வாங்க மாட்டாங்களே தாயி, நான் வேறே உத்தியோகத்திலே இப்போ இல்லேன்னேன். அப்போ எங்கே இருந்து வந்துச்சோ அங்கேயே கொண்டு போய்க் கொடுன்னாங்க. மலையாள பூமியிலே ஆள் அட்ரஸ் நமக்கு என்ன தெரியும்? அதுவும் ஐம்பது வருஷத்துக்கு முந்தின கதை. அப்பத்தான் உன் நினைவு வந்துச்சு. உன் கிட்டே இருந்துதானே திரும்பி வாங்கினேன்?

 

நாயுடு சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு எழுந்தான்.

 

நீயே தயவு பண்ணி அதுங்களை எடுத்துப் போய் அய்யர் கிட்டே நாலு புல்லை வாங்கி திதி கொடுத்திட்டு சமுத்திரத்திலே போட்டுடு. புண்ணியமாப் போகும்.

 

நீலகண்டன் ஒன்றும் பேசாமல் அவனைப் பார்த்தான். எதோ ஒன்று இன்றைக்கு அவனை நாயுடுவைத் தேடி வந்து இத்தனை நேரம் குந்தி இருக்க வைப்பது இதற்காகத் தான் போலிருக்கிறது.

 

வா அய்யரே ஒரு கை கொடு.

 

நாயுடு உள்ளே இருந்து கூப்பிட்டான். மூலையில் சார்த்தி இருந்த ஏணியைப் பரணில் சார்த்தினான்.

 

நாயுடு மேல் படிக்குப் போய்க் கொண்டிருந்தபோது வெளியே எருமைகள் ஏக காலத்தில் இரைந்தன.

 

அவன் ஏணியின் கடைசிப் படியில் கால் வைத்தபோது பார்த்துப்பா பார்த்துப்பா என்று மேலே இருந்து குரல் ஸ்பஷ்டமாக நீலகண்டன் காதில் விழுந்தது.

 

நீலகண்டன் பலமாக ஏணியைப் பற்றிக் கொண்டு மேலே பார்க்கும்போது நாயுடு தரையில் அலங்கோலமாகக் கிடந்தான்.

 

நாயுடு. நாயுடு.

 

தரையில் நாயுடு தலை மோதி ரத்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

 

நாயுடு, கண்ணைத் திறடா. அய்யோ, என்ன ஆச்சுடா?

 

நீலகண்டனின் கூக்குரலை எருமைகள் துடைத்து இன்னும் உச்சத்தில் இரைய வாசலில் யாரோ வருகிற சத்தம். காக்கி சட்டையும் தொப்பியுமாக வருகிறவன் கன்னையாவாக இருக்க வேண்டும்.

 

(தொடரும்)

Series Navigationகாசி யாத்திரைகணையாழியின் கதை
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *