விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று

This entry is part 28 of 36 in the series 18 மார்ச் 2012

1927 January 30 அக்ஷய வருஷம் மார்கழி 17 ஞாயிற்றுக்கிழமை

அறையில் மொத்தம் நாலு பேர் இருந்தார்கள்.

நீள்சதுரமாக ஒரு மரமேஜை. நிறம் மங்கிய ஆனால் அழுக்கோ கறையோ இல்லாத நீலத் துணி விரித்து வைத்த அந்த மேஜை மேல் நாலைந்து பேர் வசதியாகச் சாப்பிடத் தகுந்த விதத்தில் ரொட்டித் துண்டுகள், ஆப்பிள் பழம், வார்த்து அடுக்கி வைத்த கல் தோசைகள், விழுதாக இஞ்சியும் கொத்தமல்லியும் சேர்த்து நைய்ய அரைத்த துவையல், ஆரஞ்சுப் பழச் சாறு, ஓரமாக கற்சட்டியில் நீர்க்கக் கரைத்து உப்பும், சன்னமாக அரிந்து போட்ட மிளகாயுமாக மோர்.

தெரிசா மேஜைக்குத் தலைப் புறமாக உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பின்னால் பற்றிப் பரவி சுவரில் குழித்த ஒரு பெரிய மாடத்தின் ஆழ அகலங்களுக்கு உள்ளே கனன்று எரியும் தீ. வெளியே எடின்பரோ நகரம் இன்னொரு முறை பனிக்கட்டி மழையில் உறைந்து போய் இயக்கம் நிலைத்திருந்தது. குளிரையும் மழையையும் பற்றி விசனப்படாத குடிகாரன் எவனோ தெருவில் விட்டு விட்டு அபசுவரமாகப் பாடிக் கொண்டு போன சத்தத்தையும் அந்த ராத்திரி தேய்த்து அழித்து விட்டது.

மேஜைக்கு வலது புறத்தில் மூன்று பேர் இருந்தார்கள். அந்த நிமிடத்தில் கதவைத் திறந்து கொண்டு யாராவது உள்ளே வந்திருந்தால் கண்ணில் படாது போயிருப்பார்கள் அவர்கள். ஆனாலும் அங்கேதான் இருக்கிறார்கள். தெரிசா அவர்கள் பேசுகிறதை எல்லாம் கேட்க முடியும். அவளுக்கு மட்டும் தெரிகிறார்கள். அவள் மட்டும் கேட்கக் கூடிய சத்தத்தில் அவளோடு பேச, கேட்க வந்தவர்கள். ராத்திரி போஜனம் அவர்களுக்காகத்தான் காத்திருக்கிறது.

வெளியே காற்று அதிகமாக இருக்கிறது. காற்றின் வேகத்தில் ஒரு கண்ணாடி ஜன்னல் திறந்து அறைக்குள்ளே குளிரை விசிறி அடிக்கிறது. வெளியே புகை மாதிரி நிறுத்தாமல் பனி விழுந்து கொண்டிருப்பது வாசல் விளக்கு வெளிச்சத்தில் தெரிகிறது. எதிர் சாரியில் கருப்புக் கல் கட்டிடங்கள் பனி பூசிக்கொண்டு சாரல்மழையின் ஈரத்தை முழுக்க உள்வாங்கிக் கொண்டு மௌனமாக நிற்கின்றன. இதுவும் கடந்து போகும் என்பதை அவை அறியும்.

தெரிசா எழுந்து போய் ஜன்னலைச் சார்த்தி விட்டு வந்தாள். அவள் உடம்பு தளர்ந்து போயிருந்தது. மனமும் அதே படித்தான். பந்திரெண்டு வருடமாக வாதனைப் பட்டதில் நேர்ந்தது அது. பீட்டர் கடைசி மூச்சை விட்ட ராத்திரிக்கு அடுத்த தினத்தில் தொடங்கியது அதெல்லாம். கடந்து போகப் போகிறாள். எதை எல்லாம், எப்போது என்று தான் தெரியவில்லை. கடந்த பின்னே எது என்பதும்.

பந்திரெண்டு வருடமாக பீட்டர் ராத்திரியில் இதமான வியர்வை வாடையாக, பீஜம் விரைத்து ஆலிங்கனத்துக்கும் சம்போகத்துக்கும் தவிக்கிற ஆணாக, கட்டில் பக்கம் புகை ரூபமாக நின்று செல்ல வார்த்தை சொல்லி எழுப்பி, கண் விழிக்கும்போது காணாமால் போகிறவனாக கூடவே இருக்கிற பிரமை. அவனுடைய கல்லறையில் வருடாவருடம் பூ வைக்கும்போது பக்கத்துக் கல்லறைகள் தாமஸ் இளைப்பாறும் இடத்தை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று ஆக்கிரமித்ததை விலக்கச் செய்யும் பிரயத்தனங்கள். ஒரு மழைக்காலத்தில் கல்லறைக்கு மேலே வைத்த குரிசு விழுந்தபோது அதை நேராக்கி மீண்டும் வைக்க ராத்திரியிலேயே அங்கே ஓடிய அவசரம். எல்லாம் தெரிசாவுக்கு மட்டுமே சம்பவிக்கக் கூடியவை. அப்படித்தான் அவள் நினைத்தாள்.

பந்திரெண்டு வருஷமாக அவள் இருக்க இடமில்லாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். பீட்டரைத் தொடர்ந்து அவன் அப்பா மக்கென்ஸியும் குடித்தே இறந்து போக, கென்சிங்டன் வீட்டை அடமானம் வைத்து வாங்கிய தொகைக்காக பீட்டரையோ அந்தக் குடிகார அப்பாவையோ நெருக்க முடியாத ஸ்காட்லாந்து பேங்குக்காரர்கள் தெரிசாவைத் துரத்தித் துரத்தி வழக்குப் போட்டு லண்டனில் கோர்ட் கோர்ட்டாகப் படியேற வைத்து அலைக்கழித்தார்கள். நேற்று வரைக்கும்.

தெரிசா முன்னால் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்க்கிறாள். பஞ்ச கச்சமாகக் கட்டிக் கட்டி அலுத்துப்போய், சுருக்கங்கள் இன்னும் பதிந்திருக்க, பழைய வேட்டியை தட்டுச் சுற்றாக உடுத்தி தலையில் கட்டுக் குடுமியும், முகத்தில் நரை பாய்ந்த தாடி மீசையும், குழி விழுந்த கண்ணுமாக ஒருத்தன். கூடவே அவன் சகதர்மிணி நூல் புடவையிலும், துன்பத்தைத் தவிர வேறே ஏதும் தெரியாமல், கண்ணில் நீர் வற்றி, பயமான பார்வையோடு கூட. அவள் கட்டி இருக்கிற மடிசார் சேலை நைந்துதான் போயிருக்கிறது. அவள் பக்கத்தில் சிற்றாடையும், தலையில் நாரால் முடித்த நாலைந்து ஜவ்வந்திப் பூவுமாக ஒரு சின்னப் பெண். தெரிசாவின் சொந்த பந்தம் இவர்கள் எல்லோரும்.

அந்த கிறிஸ்துவச்சிக்கு இந்தப் பார்ப்பான் தம்பி முறை. பார்ப்பனத்தி தம்பி பெண்டாட்டி. கூட அவளை அத்தை என்று உரிமையோடு கூப்பிடும் குழந்தை.

ஏன் ஒருத்தரும் ஒண்ணுமே சாப்பிடலே?

விசனத்தோடு கேட்டாள் தெரிசா.

மகாதேவய்யன் குரிச்சியைப் பின்னால் தள்ளிவிட்டு எழுந்து நின்றான். இரண்டு கையையும் நெஞ்சுக்கு நேரே கூப்பிக் கொண்டு கொல்லூர் அம்பலத்தில் மூகாம்பிகா தேவியைத் தொழுகிற பக்தன் போல் தெரிசாவைத் தொழுதான்.

சேச்சி.

அவன் குரல் தழதழத்தது. வாழ்க்கையில் எத்தனையோ சோகம் சுமந்தும் இன்னும் வாழ்க்கையும் சோகமும் பாக்கி இருக்கிறது என்று தெரிந்த புத்தியும், இவனும் இவன் குடும்பமும் இப்படிக் கண்ணுக்குத் தெரியாமல், காலத்தில் தொலைந்து போய், செத்தவர்களுக்கும் கீழாக சீரழிந்து சுற்றிக் கொண்டிருக்கும் அவலமும், இதையெல்லாம் புரிந்து கொண்டு இவர்களுக்கு ஒரே அடைக்கலமாக இத்தனை வருஷமாக இருக்கிற அவனுடைய பிரியமான தெரிசா சேச்சி மேல் வைத்த அன்பும் மரியாதையும், அவள் படும் வாதனைகள் தெரிந்து அதற்கான துக்கமும் எல்லாம் வெளிப்படுத்த முடியாமல் தழுதழுத்த குரல் அது.

சாப்பாடு, தாகம் எல்லாம் மறந்து உடம்பில்லாத உயிரோடு மரத்துப் போய் நிக்கறது பழகிடுத்து சேச்சி. உங்க பிரியத்துக்கு முன்னாடி வேறே பேச்சு ஒண்ணும் எழ மாட்டேங்கறது. அது ஒண்ணே போதும். இந்தத் தீனியும் பானமும் எதிலும் மனசு ஒட்டலை. இதுகளைச் சாப்பிட்டு, குடிச்சு திரும்ப இதிலே ஈடுபாடு வந்து அலைய வேணாமில்லையா? வந்தோம். பார்த்துட்டுப் போயிடறோம். சரியா?

மகாதேவய்யனின் பெண்டாட்டி பர்வதவர்த்தினி தெரிசாவைப் பார்த்து ஏக்கத்தோடு முகத்தை வைத்தபடி மன்றாடுகிற தொனியில் கேட்டாள். அந்தப் பெண்குழந்தை குஞ்ஞம்மிணி மட்டும் இரண்டு கையையும் மேசையில் ஊன்று முகத்தைத் தாங்கி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.

அச்சா, என்னம்மா பெரிய மனுஷியாட்டம உங்க பொண்ணு பேசறாளேன்னு கோபிச்சுக்க வேணாம். சாரதே அத்தை நீங்களும் தான். என் ஆத்தாமை. பேச முடியறதைக் கேட்க யாராவது வரமாட்டாளான்னு இத்தனை நாளா ஏங்கிண்டு இருக்கேன். இப்பவாவது நான் பேசலாமா?

அந்தச் சின்னப் பெண் குச்சி குச்சியாக இருந்த கைகளை முன்னால் நீட்டி முறையிட்ட போது தெரசாவால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை.

குஞ்ஞே. அதெல்லாம் அப்புறமா இன்னொரு திவசம்.

பர்வதம் தப்பு செய்த பாவத்தோடு தெரிசாவைப் பார்த்தபடி, குஞ்ஞம்மிணியை ஆதரவாக அணைத்துக்கொண்டு அவள் கவனத்தை மாற்றப் பார்க்க, குஞ்ஞம்மிணி குரிச்சியை தடார் என்று தள்ளி இழுத்துப் போட்டுக் கொண்டாள். அந்த சத்தத்தில் அறையே அதிர்ந்து அடங்கினதையும், மேஜையில் வைத்திருந்த ஆப்பிள் பழங்கம் உருண்டு போய் கீழே விழுந்து பின்னும் உருண்டு அறைக் கோடிக்குப் போனதையும் தெரிசா பார்த்தாள். ஏற்றி வைத்த மெழுகுதிரிகள் ஆடி அலைபாய்ந்து அந்தச் சின்னப் பெண்ணுக்கு ஆதரவாக சட்டென்று பிரகாசமாக ஒளிர்ந்தன ஒரு கணம்.

நான் சின்னக் குழந்தை. காலத்திலே மாறித் தடம் பதிச்சு, காலத்துலே உறைஞ்சு போய் யாருக்கும் புலப்படாத இந்தக் குழந்தை உடம்போட, இந்தக் குஞ்சுப் பாவாடையோட, சட்டையோட, சேச்சி முன் எப்பவோ கொடுத்த மேல் வஸ்திரத்தோட., கையிலே குட்டி குட்டியா ரப்பர் வளையோட. அஞ்சு வயசே ஆன குஞ்ஞம்மிணியோடு அதெல்லாம் கூட சாஸ்வதமாகிடுத்து. ஏதோ ஒரு பெரிய சக்தி எல்லாத்தையும், எங்க எல்லோரையும் உறிஞ்சி எடுத்து உருவமில்லாம, சக்தியெல்லாம் இழந்து ஒண்ணும் இல்லாம, தூசு மாதிரி பறக்க விட்டுடுத்து. நான் என்ன பாவம் பண்ணினேன் அத்தை? சொல்லுங்கோ. நான் என்ன பாவம் பண்ணினேன்? இவாளுக்குக் குழந்தையா பிறந்ததைத் தவிர?

குஞ்ஞம்மிணி பெருங்குரலெடுத்து விம்ம ஆரம்பித்தாள்.

எல்லாப் பொண்களுக்கும் சுபாவமா விதிக்கப்பட்ட எதுவும் எனக்கும் விதிக்கப்பட ஏன் வாய்க்கலே? இன்னிக்கு நான் இப்படி இல்லேன்னா, இப்போ எனக்கே முப்பத்தஞ்சாவது வயசு ஆகியிருக்கும். வத்தலோ தொத்தலோ, சமையல்காரனோ, சாமி கோவில்லே சப்பரத்துக்கு தீவட்டி பிடிக்கறவனோ எனக்கும் ஒரு ஆம்படையான் இருப்பான். தலைக்கு மேலே கூரையோடு ஒரு குச்சு, கல்யாணத்துக்குக் காத்துண்டு இருக்கற ஒரு பொண்ணு. அவளுக்கு வரன் தேடி அலைச்சல், கல்யாணச் செலவுக்கு சேர்த்து வைக்கறது. வீட்டை அடமானம் வைக்கறது. உதவி வாங்கறது எல்லாம் என்னைப் பெத்த இவா செஞ்சிருப்பா. பெரிய மனுஷத் தோரணையோட இருக்கப்பட்ட ஒருத்தரை விட்டு வைக்காம பின்னாலேயே போயிருப்பா, பிராமண கன்யகை கன்யாதானம் ஆக பெரிய மனசு பண்ணி உங்களாலே முடிஞ்ச அளவு பணமா, பண்டமா கொடுங்கோன்னு மன்னாடி சேவிக்கறதுக்காக அந்த மனை வாசல்களிலே கைகட்டி நின்னுண்டு இருப்போம். இல்லே, எங்களுக்குன்னு ஒரு தோசைக்கடை இருக்கும். நானும் அவரும், அவர் மூஞ்சி எப்படி இருக்கும்னு கூட அனுமானம் பண்ணி வச்சிருக்கேன். முன் வழுக்கையா தலை. அள்ளிச் செருகி அங்கங்கே நரைச்சுப் போன தலை. சதா வெத்திலை குதப்பி பல் எல்லாம் சிவப்பா குருதிபூஜையான பகவதி மாதிரி நிற்கறவர். முன்பல்லுலே ஒண்ணு நீண்டு இருக்கும்.

அவள் சொல்லச் சொல்ல முகம் கலைந்த ஒருத்தன் கூடத்தில் பிரம்மாண்டமாக எழும்பி நின்று கெக்களி கொட்டிச் சிரித்தான். வெத்திலை போட்டுக் கொண்டான்.

எனக்குன்னு குடும்பம், எனக்குன்னு குழந்தை குட்டி. ஒரு சின்னப் பிள்ளை. குஞ்ஞிக்கிருஷ்ணன்னு பேரு. அம்பலத்துலே போய் அவனுக்கு அட்சராப்யாசம். வேணாம். அம்பலத்துக்குப் போனா அந்தர்தியானமாயிடுவா மத்தவாளும்.

அவள் கலகலவென்று சிரித்தாள். தெரசா துக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் பிரவாகமாக வடிகிற கண்ணீர் நிற்கவில்லை.

வேணாம். எதுவும் வேணாம். பசியும் தாகமும், மரத்துப்போன நாக்கும் வயிறும் கண்ணுலே தெரியாத சூட்சுமமான உடம்புமாக இந்த அலைச்சலும் எல்லாம் போதும். எனக்கு மடுத்து. என்னைக் கொன்னுடுங்கோ சேச்சி. ரொம்ப உபகாரமா இருக்கும். இருந்தும் இல்லாம் இருக்கறதுக்கு ஒரேயடியா இல்லாமே போயிடறேன். ஆவியா பிரேத ரூபமா அலையாம, என்னையும் கிறிஸ்தியானியா மாத்தி, குரிசை நெஞ்சிலே வச்சுப் பிளந்து என்னையும் கொன்னுடுங்கோ. பாபாத்மாகளை கடைத்தேத்த அப்படி ஒரு வழி இருக்காமே. கில்மோர் தெரு கன்யாஸ்திரி மாடத்து மதாம்மை ஒருத்தி, உங்க கூட்டுக்காரி தான் சொன்னா. என்னையும் அப்படி குரிசாலே அறைஞ்சு கொன்னுடுங்கோ. என் மேலே தயவு செய்யுங்கோ. இந்த உதவியை உபகாரத்தை மறக்கவே மாட்டேன்.

குஞ்ஞம்மிணி குலுங்கிக் குலுங்கி அழ, அவள் கூட பர்வதவர்த்தினியும் அழ ஆரம்பித்தாள். மகாதேவய்யன் கண்ணைத் துடைத்துக் கொண்டே, அரற்றினான்.

சேச்சி, சேச்சி, இவாளை மன்னிச்சுடுங்கோ. என்னை மன்னிச்சுடுங்கோ. தெரியாம இங்கே வந்துட்டோம். இனிமே வரலே, மன்னிச்சுடுங்கோ. எல்லோரும் போறோம்.

தெரிசா எழுந்தாள். குஞ்ஞம்மிணி பக்கமாகப் போய் நின்றாள். மேஜையில் கவிழ்ந்திருந்த அவள் தலையை ஆதரவாகத் தடவினாள். வெளியே நிலத்தில் பனி விழுந்து பதியும் குளிர்ச்சி எல்லாம் ஒரு வினாடி அவள் விரலில் அர்த்தமானது. குஞ்ஞம்மிணியின் முகத்தை வருட அவள் விரல்கள் நீண்டன. அந்தக் குழந்தையின் கண் இமைகளின் நனைவு விரல்களில் உஷ்ணமாக உறைத்தது. விம்மி அழுது அடங்கட்டும். அவளுடைய குரிசு. யார் ஏற்றி வைத்தார்களோ. அவள் தான் சுமந்தாக வேண்டும். தெரிசா சுமக்கிறதை விட வேறுபட்டது அது. ஆனால் என்ன, குரிசுகள் குரிசுகள் தான். அந்தந்தத் தோள்களில் தான் சுமக்கப்பட வேண்டியவை. மாற்ற முடியாது. எதையும்.

முதல்லே சாப்பிடு என் கண்ணே.

அவள் மூடி வைத்த பாத்திரத்தைத் திறந்து ஒரு தோசை எடுத்து விண்டு குஞ்ஞம்மிணிக்குத் தின்னக் கொடுத்தாள். அந்தக் குழந்தை மெல்ல அந்த விள்ளலை மெல்ல அவள் முகத்தில் சன்னமாக ஒரு சிரிப்பு ஒரு கணம் தட்டுப்பட்டது. தெரிசாவின் கைத் தண்டையில் முகம் புதைத்த அந்தக் குழந்தைக்கு முப்பத்தைந்து வயது என்பதை தெரிசாவால் நம்ப முடியவில்லை.

கையில் மீதம் இருந்த தோசைத் துண்டுகளை பர்வத்தின் கையில் வைத்து மூடினாள். மூடிய விரல்களை அந்த ஸ்திரி இறுகப் பற்றிக் கொண்டாள். இன்னொரு முறை அந்த அறைக்குள் பனி பெய்கிற குளிர்ச்சி எட்டிப் பார்த்துப் போனது. குஞ்ஞம்மிணி தோளிலும் பர்வதம் கையிலுமாக தெரிசாவின் இரண்டு கைகளும் சிறைப்பட்டு குரிசில் அறைந்தது போல் அப்படியே எவ்வளவு நேரம் நின்றாள் என்று அவளுக்கே தெரியாது.

உருகிய மெழுகு உள்ளங்கையில் விழ அவள் உணர்வு நிலைக்கு வந்தாள்.

அவர்கள் சாப்பிடத் தொடங்கி இருந்தார்கள்.

பாத்திரங்களிலும் தட்டுகளிலும், குவளைகளிலும் வைத்தது வைத்தபடி இருக்க, மூன்று பேர் அங்கே மௌனமாக எத்தனையோ காலத்துக்குப் பிறகு பசியாறிக் கொண்டிருந்தார்கள்.

தெரிசா ஒரு ரொட்டித் துண்டை எடுத்துக் கடித்தாள். பசியே இல்லை. இன்றைக்கு எதுவுமே வேண்டாம். நாள் நீண்டு ராத்திரி கவிந்து இதுவும் முடியாமல் இன்னும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. காலம் கட்டுக்களைத் தளர்த்தி நிற்கிறது. எல்லோரும் எல்லாமும் வெளியில் இடைவிடாமல் பொழிகிற பனி போல் உறைந்துதான் போயிருக்கிறது. பனிப் பாளங்களுக்கு நடுவே அவள் இருட்டும் வெளிச்சமும் மாறிவர நின்று கொண்டே இருக்கிறாள்.

நம்ம துக்கத்தைத்தானே சேச்சியோடு பங்கு வச்சுண்டிருக்கோம். அவ கஷ்டத்தைக் கேட்டோமோ.

பர்வதம் மகாதேவனைப் பார்த்தபடி மெலிந்த குரலில் சொன்னாள்.

கேட்க என்ன இருக்கு? எல்லோருக்குமே எல்லாமே தெரிஞ்சுதுதானே பர்வதம்?

மகாதேவன் பாதி தோசையோடு தட்டை தள்ளி வைத்து விட்டு குஞ்ஞம்மிணி குடிக்க ஒரு குவளை நீர் எடுத்துக் கொடுத்தபடி சொன்னான்.

இல்லேடா அனியா. என் துக்கம் எல்லாம் என்னோடதான். உன்னையும் இவங்களையும் அதையெல்லாம் சொல்லி இந்த ராத்திரி முழுக்க கஷ்டப்படுத்த வேண்டாம்னு இருக்கேன்.

தெரிசா சோகமாக புன்சிரித்தாள். அவளுடைய வாழ்க்கை இனியும் நேர்கோட்டில் போகப் போவதில்லை. தாமஸ் துர்மரணம் சம்பவித்து அவளை விட்டுப் பிரிந்து போனதோடு அந்த ஜீவிதமும் கடந்து போனது.

ஆனால் இன்றைக்கு அவளுக்கு ஒரு விசேஷமான தினம்தான். தாமஸ் இருந்தால் சிவப்பு ஒயினும் வெள்ளை ஒயினும் போத்தல் போத்தலாக கழுத்து நீண்ட கோப்பைகளில் ஒழித்துக் குடித்துக் கொண்டாடி மகிழ்ந்திருப்பான்.

கென்சிங்க்டன் வீட்டை அவள் பெயருக்கு மாற்ற கோர்ட் உத்தரவு வந்ததோடு, தாமஸின் அப்பன் ஸ்காட்லாந்த் பேங்கில் வாங்கிய கடன் தொகையை தாமஸும், அவன் இறந்த பிறகு தெரிசாவும் கட்டி வந்ததே கடனையும் நியாயமான வட்டியையும் சேர்த்த தொகைக்கு மேலே வந்து விட்டது என்றும் நீதி மன்றம் தீர்ப்புச் சொல்லிய காகிதம் லண்டனில் தபாலில் அரக்கு முத்திரையோடு போடப்பட்டு இன்றுதான் தெரசா கைகளில் கிடைத்தது.

பேங்கு திரும்பக் கட்டிய தொகை போதாதென்று அடமானமாக வைத்த கென்சிங்டன் வீட்டையும் கைமாற்ற செய்து கொண்ட மனுவை கோர்ட்டார் தள்ளி அந்த வீட்டின் சகல பாத்தியதையும் தாமஸ் மெக்கன்ஸியின் விதவை, தெரிசா மெக்கன்ஸி அம்மைக்கே ஆனது என்று தீர்மானமாக அறிவித்து விட்டார்கள். மேலும் அதிகமாகச் செலுத்திய தொகை, அதை வசூலித்த வகையில் பேங்கு தெரிசாவுக்குச் செலுத்த வேண்டிய அபராத வட்டி இப்படி எண்ணாயிரத்து முன்னூத்துப் பத்து பவுண்டுகள் பேங்கு அடுத்த இரண்டு மாதத்தில் தெரிசாவுக்குத் தரவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவு சொன்னது.

நாளை லண்டன் புறப்பட வேண்டும். வழக்கு வியாஜத்தில் சிக்கி இருந்ததால் அடிக்கடி திறந்து பராமரிக்க முடியாமல் போன வீட்டை சீராக்க வேண்டும். அங்கே மூலைக்கு மூலை, அறைகள் ஒன்று விடாமல், தரையில், கட்டிலில், வெளி முற்றத்தில், கழிவறையில், நெருப்பு மாடத்தில், மெழுகு சிந்தாமல் எரியும் விளக்குகளில் எல்லாம் தாமஸின் சுவாசம் அடர்த்தியாகப் படர்ந்திருக்கிறது. அது இன்னும் பலகாலம் அங்கேயே உலா வரட்டும். தெரிசா வீட்டை விருத்தியாக்கி அந்த நினைவுகளோடு கொஞ்ச நாள் அங்கேயே போக்கி விட்டு தேவ ஊழியத்துக்குத் திரும்ப எடின்பரோ வருவாள்.

சேச்சி, நாங்க தான் உன்னை உபத்திரவப் படுத்தி இத்தனை காலம் எங்க கஷ்டத்தை தீர்க்க முயற்சி செஞ்சிருக்கோம்.

மகாதேவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, தெரசா கையைக் காட்டி நிறுத்தினாள்.

இந்தக் குழந்தையின் துக்கத்துக்கு முன்னாலே நான் செஞ்ச எல்லாமே துரும்பு கூட இல்லே. அதிலும் இத்தணூண்டு. மூணு மனுஷ ஜீவன், எனக்கு பாத்தியப்பட்டவங்க எல்லாரும், இப்படி இருந்தும் இல்லாம அலைஞ்சு திரிஞ்சுண்டு இருக்கறதை பார்க்கறதைத் தவிர வேறே என்ன செய்ய முடிஞ்சுது எனக்கு? உயிரோட இல்லேன்னாலும் அம்பலத்துலே தந்திரி கிட்டே சொல்லி கடைத்தேத்தலாம். கிறிஸ்தியானியா கருதி இங்கே குடீரத்துலே தாமஸ் மாதிரி நித்திய விஸ்ரமத்தில் இருத்தலாம். உயிரோடு இருக்கப்பட்டவங்க ஆச்சே. அதுவும் இந்தக் குழந்தை. வாழ்க்கைன்னாலே என்னன்னு தெரியாம அதை பறிகொடுத்துட்டு அலைய வேண்டிப் போச்சே. யார் தீர்வு தருவா இதுக்கெல்லாம்?

தெரிசா தனக்குத்தானே பேசுகிறதும் அவர்களோடு பேசுகிறதும் ஒன்றானது,

என்னிக்கு விக்ஞானம் வளர்ந்து மேன்மைப்பட்டு காலத்துலேயும் முன்னே பின்னே போக சாத்தியமாகறதோ, வெளிச்சம்போல், அதைவிட வேகமா மனுஷன் சூரிய மண்டலத்திலும் வேறே வெளியே பிரபஞ்சத்திலும் போக வர முடியறதோ, அன்னிக்கு நீங்க திரும்ப இந்த உலகத்துக்கு உங்க காலத்துக்கே உடம்போட திரும்ப வரலாம். அதுவரைக்கும் இந்தப் பிரதேசங்கள்லே இந்தக் காலத்திலே மட்டும் உலாவுங்கோ. காலத்துக்கு முன்னாடி இன்னும் இருபது, ஐம்பது வருஷம் தள்ளிப்போய் என்ன நடக்கிறதுன்னு பார்க்க வேண்டாம். துக்கம் தான் மிஞ்சும்.

தெரிசா சொல்லி நிறுத்தினாள்.

ஆமா, சேச்சி. நடேசனோட நகர்ற படம் பார்க்கப் போய் ஏக கஷ்டமாப் போச்சு. ஓட்டல்லே ராத்திரி கூட்டிப் போய் ரவா உப்புமா கிண்டிப் போட வச்சான். பாவம். நல்ல மனுஷன். அவன் எனக்கு ரொம்பப் பிந்தினவன். ப்ராந்து பிடிச்ச மாதிரி அலஞ்சுண்டு இருந்திருப்பானாக்கும்.

மகாதேவன் சொல்லச் சொல்ல தெரிசாவுக்கு அதில் ஒரு அட்சரமும் புரியவில்லை.

நான் எடின்பரோவிலேயே தினசரி மூணு பேர் புசிக்கக் கூடிய தரத்தில் ரொட்டியும், பழமும், ஜலமும், பாலும் இந்த வீட்டு வளாகத்திலே தினம் வைச்சு எடுத்து மூணு அநாதைகளுக்குக் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீங்க சாப்பிட்டது போக மீந்த எல்லாம் மிச்ச ருசியும் மணமும் எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லே, இன்னும் மூணு வயறை நிறைக்க தினசரி போகும். வருடம் ரெண்டு தடவை உடுத்தத் துணிமணியும் அதேபடிக்குத்தான் கொடுக்க ஏற்பாடு. இந்த வீட்டையும் வாங்கி அதுக்கான செலவுக்கு வட்டியிலே இருந்து எடுத்துக்க பேங்கிலே பணமும் அடைச்சாச்சு. நான் போனாலும், காலாகாலத்துக்கு இதெல்லாம் தொடரும்.

தெரிசா சிரித்தாள். அவளால் முடிந்தது. மதமும் ஆச்சாரமும், நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும், தர்க்கமும், தத்துவமும், பிரியமும், பாசமுமாக மனசாற உண்டாக்கிய ஏற்பாடுகள் அவையெல்லாம். இதற்காக அவளை நல்ல கிறிஸ்தியானியில்லை என்று விதித்து நரகம் போகச் சொன்னாலோ, சநாதன தர்மத்தை சீர்குலைக்க வந்த கோடாரிக் காம்பு என்று புராணம் சொல்லும் சிக்ஷைகளுக்கு உட்படுத்தினாலோ அவளுக்கு சுண்டுவிரல் நகம் போனது போல். அற்ப விஷயம் அதெல்லாம்.

சேச்சி, எங்க அம்மா, அதான் உங்க விசாலம் பெரியம்மா. அவளைக் கடைத்தேத்த வழி ஒண்ணும் பிறக்காதா?

மகாதேவன் கேட்டான். அவன் மடியில் படுத்து குஞ்ஞம்மிணி நித்திரை போயிருந்தாள். அஞ்சு வயசுக் குழந்தைதான் அவள், எப்போதும். தெரிசாவுக்குத் தெரியும்.

நான் அந்த மகாலிங்க அய்யன் கிட்டே கழுக்குன்றத்திலே அம்மாவோட அஸ்திக் கலசததைக் கொடுத்தேன். இப்ப அது எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கு. அந்த பிராமணன்னா, கேட்டேளா, சமுத்திரம் தாண்டி வந்து, சேச்சி வீட்டுக்காரரை எவனோ ஒரு சுப்பன் கொன்னு களைய ஒத்தாசை பண்ணிட்டு லண்டன்லே கம்பி எண்ணப் போய்ட்டா. பிரம்மஹத்தி. அப்பப்ப அவனையும் பார்த்துக் கேட்பேன். பேந்தப் பேந்த முழிச்சுண்டு லோகத்துலே இருக்கப்பட்டவாளுக்கு எல்லாம் வெகு மும்முரமா லிகிதம் எழுதிண்டு இருக்கற பேர்வழி. எழுதினபடிக்கே அவன் ஆயுசு முடிஞ்சுடப் போறது ஒருநாள் நீங்க வேணும்னா பாருங்கோ. தாமஸ் அத்திம்பேரைக் கொன்னதுக்கு உடன் போனானே, அதுக்கு அவன் இந்தப் பிறப்பு முடிஞ்சும் சித்தரவதைப்படப் போறான். அதான் நடக்கப் போறதாக்கும்.

மகாதேவன் ஆத்திரமாகச் சொன்னபோது மறுபடி ஜன்னல் கதவுகள் காற்றில் தடார் தடார் என்று அதிர, கதவுகள் விரியத் திறந்து பெருஞ் சத்தத்தோடு திரும்ப அடைத்துக் கொண்டன.

அனியா, அந்த பிராமணன் தாமஸை வதிக்கலே. அதுக்கு சகாயம் ஏதும் மனசறிஞ்சு செய்யலை. சந்தர்ப்ப சூழ்நிலையாலே அவன் பேர்லே பழி விழுந்துடுத்து. முடிஞ்சா லண்டன் போனதும் அவனை ஜெயில்லே போய்ப் பார்த்து.

மேஜை விரிப்பில் ஊறும் எறும்புகளைக் குனிந்து பார்த்துக் கொண்டே சொன்ன தெரிசா நிமிர்ந்தபோது அந்த அறை வேறு யாருமில்லாமல் காலியாக இருந்தது.

வெளியே பனி நிற்காமல் பொழிந்தபடி அந்த இரவு ஊற, தெரிசா மெல்ல மாடிப்படி ஏறினாள். விடிய எத்தனை நாழிகை இருக்கோ? அவளுடைய ஜன்னலில் வந்து கடல்நாரை சொல்லும். அவளுக்குத் தெரியும். அதுவரை கொஞ்சம் தூங்கலாம்.

கடல்நாரையின் சத்தம் காதில் சூழ, கடலும், அம்பலத்தில் சீவேலிக்கு வாசிக்கும் செண்டை மேளமும், சர்ச் இசைக்குழு மேல் ஸ்தாயியில் பாடுவதும் சேர்ந்து ஒலிக்க அவள் நித்திரை போனபோது தாமஸ் பக்கத்தில் வந்து உபத்திரவப் படுத்தாமல் படுத்துக் கொண்டான்.

தெரிசா, என் கண்ணே. அவன் அவளை மெல்ல இதழ்களில் முத்தினான்.

(தொடரும்)

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Comments

  1. Avatar
    era murukan says:

    இந்த அத்தியாயத்தில் ‘தாமஸ்’ என்று வருகிற இடத்தில் எல்லாம் ‘பீட்டர்’ என்று படித்துக் கொள்ளக் கோருகிறேன். பெயர்க் குழப்பம்!!

Leave a Reply to era murukan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *