வீடு “போ, போ” என்கிறது

This entry is part 11 of 16 in the series 31 ஜனவரி 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

(ஜனவரி 1976 கலைமகள்-இல் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)

      சச்சிதானந்தம் தாம் படுத்திருந்த சாய்வு நாற்காலியின் பின் சட்டத்தின் மீது நன்றாகக் கழுத்தைப் பதித்துத் தலையை உயர்த்திய நிலையில், மோட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதைத் தவிர வேறு சோலி ஏதும் அவருக்கு இல்லை. சமையற்கட்டில் செங்கமலம் காப்பிக் கஷாயம் இறக்கிக்கொண்டிருந்த மணம் அந்த வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. வடிகட்டியின் மேல் அவள் பொட்டுப் பொட்டென்று கரண்டியால் தட்டிக்கொண்டிருந்த ஓசையும் கேட்டது. ‘டிகாக்‌ஷன் எறங்க மாட்டேங்குது போல!’

      சற்றுப் பொறுத்து நல்லெண்ணெய் காய்ந்த வாசனையும் வாசற் பக்கம் நோக்கி வரலாயிற்று. இன்னும் சற்றுப் பொறுத்து வெங்காயம் கலந்த எதுவோ – மசால் வடையா? அல்லது வேறு ஏதாவதா? தெரியவில்லை – எண்ணெய்யில் ‘சுர்’ என்று விழுந்து வெந்த வாசனையும் அவரை வந்தடைந்தது. அதற்குப் பிறகு அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. உச்சி முகட்டினின்று தம் பார்வையை நீக்கிய அவர் தலையைச் சரித்து முதுகு நிமிர நாற்காலியில் செங்கோணமாக உட்கார்ந்தார். புறங்கழுத்தில் இலேசாக வலித்தது. மடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு வெகுநேரம் படித்ததால் விளைந்திருந்த கழுத்து வலியைப் போக்கிக் கொள்ளுவதற்காகத்தான் அவர் நாற்காலியின் பின் சட்டத்தில் கழுத்தைப் பின்புறமாய்ச் சாய்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இன்னும் கழுத்து வலி அறவே போய்விடவில்லை. முணுக் முணுக்கென்று வலித்துக் கொண்டுதான் இருந்தது.

       ‘முந்தியெல்லாம் எம்புட்டு நேரம் படிப்பேன்! கண்ணும் எரிஞ்சதில்லே. களுத்தும் வலிச்சதில்லே. இப்ப என்னடான்னா … இப்ப என்ன ஆயிடிச்சு? ஒண்ணும் ஆகல்லே. ரிடைர் ஆயிருக்கேன். அம்புட்டுத்தான்! ரிடைர் ஆகிறதுக்கு முந்தி – அதுக்கு மொத நாளு வரைக்கும் கூடத் தெம்பாத்தான் இருந்திச்சு. இந்தத் திரேகத்துக்கு திடீர்னு என்ன ஆயிடுச்சு? … ”

      புறங்கழுத்தைக் கைகளால் மாற்றி மாற்றி நீவிவிட்டபடி அவர் சிந்தனையில் ஈடுபட்டார். ‘ரிடைராய்ட்டோம்கிற சலிப்புத்தான் நம்மை இப்படியெல்லாம் பலகீனப் படுத்துது. இனிமே நம்மாலே எது ஒண்ணுக்கும் பெரயோசனமில்லேங்குற நெனப்புத்தான்  என்னைத் திடீர்க் கெளவனாக்கிப்பிடுச்சு. …’                    அவர் மெல்ல எழுந்தார். கொல்லைப்புறம் போக வேண்டியது இருந்தாலும் அதற்கு முன்னால் சமையற்கட்டுக்குள் நுழைந்து செங்கமலம் செய்துகொண்டிருந்த சிற்றுண்டி இன்னது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பியவராய் அவர் நுழை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த திரையைச் சற்றே ஒதுக்கி உளளே முகத்தை  மட்டும் நீட்டினார்.

      தாத்தாவின் முகம் தெரிந்ததும்,  “ஆயா! தாத்தா வந்திட்டாரு …” என்று அங்கே தலைக்கொரு வட்டிலைக் கையில் ஏந்திக்கொண்டு ஏற்கெனவே நின்றிருந்த பேரப் பிள்ளைகள் குரல் கொடுத்தன.

       “தாத்தாவுக்கு ஒண்ணும் அவசரமில்லே இப்பம்! நீங்க மொதல்ல தின்னுட்டுப் போங்க. … பெறகு அவருக்குக் கொடுக்கலாம் …” என்று செங்கமலம் சொன்னது தாத்தா தங்களுக்கு முன்னால் தின்பதற்குப் போட்டிக்கு வந்து விட்டதாகக் கசந்து குரலெழுப்பிய பேரப்பிள்ளைகளின் அந்தக் கசப்பைப் போக்குவதற்காகத்தான் என்பது – அவள் குரலில் வெளிப்பட்ட சுள்ளாப்பின் விளைவாகவோ என்னவோ – அவருக்குப் புரியாமையால், அந்தச் சொற்கள் சுருக்கென்று ஊசிகளாக அவர் நெஞ்சுள் பாய்ந்தன. அவர் குழந்தைகளுக்கு முன்னால் செங்கமலம் தம்மை அவமானப்படுத்தி விட்டதாகக் கசந்து முகம் சுளித்து அவசரமாக அப்பால் நகர்ந்தார். இரும்புச் சட்டியில் செவசெவவென்று பொரிந்து கொண்டிருந்த மசால்வடையின் நேர்முக தரிசனம் தம் நாவினடியில் ஊறச் செய்த உமிழ்நீரைக் கொல்லைப்புறச்சாக்கடையில் “தூ” வென்று துப்பிய அவர் உள்ளத்தில் விவரிக்கவொண்ணாத சடைவு தோன்றியது.  கால் கழுவித் திரும்பிய சச்சிதானந்தம் சமையற்கட்டின் புறம் தலை திரும்புவதைச் தவிர்த்துவிட்டுத் திண்ணையை அடைந்து தமது சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

       ‘பேரப்பிள்ளைங்க ஏற்கெனவே வாண்டுப்பயக. அவுக எதிர்லே என்னைத் தூக்கி எறிஞ்சாப்போல அப்படிப் பேசணுமா? அதுங்களுக்கு என்ன மருவாதி இருக்கும் எம்மேலே? இவ இப்படிப் பேசுறதாலதான் அதுங்களுக்குக் கூடத் தாத்தான்னா எளக்காரமா இருக்குது …’

      பேரப்பிள்ளைகள், ‘எனக்குச் சின்னது; அவனுக்குப் பெரிசு’ என்று அடித்துக்கொண்ட இரைச்சல் அவர் செவிகளுள் வந்து விழுந்தது. எரிச்சல் இன்னும் கிளர்ந்தது.  மசால் வடைகளின் அடுத்த ஈடு வேகத் தொடங்கிவிட்ட வாசனை முன்னிலும் மிகுதியாக அவரது நாசியை விரித்ததில் காலை பத்து மணி உணவுக்குப் பிறகு எதையும் ஏற்றிராத அவரது காலியாகிப் போன இரைப்பை இரைச்சல் போடத் தொடங்கிற்று. நான்கு பேரப் பிள்ளைகளுக்கும் இட்டு நிரப்ப இன்னும் இரண்டு மூன்று ஈடுகளாவது போட்டெடுத்து ஆனதன் பிறகுதான் தமக்கு அழைப்பு வரும் என்கிற நினைப்பு அவரது காழ்ப்பை மிகுதிப்படுத்திற்று.                                              அந்த நேரத்தில் யாரோ படியேறி வந்த செருப்போசை அவருக்குக் கேட்டது. மகள் சரசுவும் இன்னொரு பெண்ணும் பேசிக்கொண்டு திண்ணையில் ஏறினார்கள். அன்று சனிக்கிழமை என்பது மகளைப் பார்த்ததும்தான் அவருக்கு நினைவு வந்தது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று அவளுக்கு அரை நாள் வேலைதான். கூடவே ஒரு தோழியையும் அழைத்து வந்த அவளைப் பார்த்ததும் மசால் வடை இப்போதைக்குத் தமக்குக் கிடைக்காது என்று அவருக்குத் தோன்றிவிட்டது. இந்த எண்ணம் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்த நிலைக்கு அவரைத் துரத்தியதால், அவரது எரிச்சல் கட்டுக்கு அடங்காத நிலையை அடைந்தது. அந்த எரிச்சலில்,  “எங்க ஆஃபீஸ் பொண்ணு, அப்பா. கமலான்னு பேரு …” என்று அந்தப் பெண்ணை மகள் சரசு தமக்கு அறிமுகப்படுத்திய போது அந்தப் பெண் மரியாதையாகக் கும்பிட்டதற்குப் பதில் வணக்கம் கூடச் செய்யாமல், புன்னகையற்ற முகத்தைச் சற்றே அசைத்து மட்டும் விட்டுவிட்டு அவர் வாளாயிருந்து விட்டார். தோழியுடன் உள்ளே போன சரசு, ”ரிடையரானதுலே யிருந்து எங்கப்பாரு ஒரு மாதிரியா ஆயிட்டாருடி, கமலா! நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்கிடாதே …” என்று தணிவான குரலில் சொன்னதும் அவருக்குக் கேட்டது. அதற்குப் பிற்பாடு அவரது எரிச்சல் இன்னும் மிகுந்தது. அவர் கண்களை மூடிக்கொண்டுவிட்டார். சில வினாடிப் பொழுது கழிவதற்குள் மறுபடியும் யாரோ படியேறி வருகிற செருப்புச் சத்தம் கேட்டு அவர் கண்களைத் திறந்தார். மகன் பாபு அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்தான். அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்தானாம். வருட முடிவுக்குள் விடுப்பை எடுத்து முடித்துவிட வேண்டுமாம். எஞ்சியிருந்த அரை நாளை இப்போது எடுத்து விட்டானாம். சிற்றுண்டி அருந்திவிட்டுச் சினிமாவுக்குப் போகப் போகிறானாம்.

      மசால் வடையை முறித்து வாயில் போடுவதற்கான முகூர்த்தம் இன்னும் தள்ளிப் போவதைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொண்ட சச்சிதானந்தம் எங்காகிலும் ஓட்டலுக்குச் சென்று தமது பசியைத் தணித்துக் கொள்ளும் ஆவலுடன் எழுந்தார். வெளியே கொஞ்சம் போய்விட்டுச் சிறிது நேரத்தில் திரும்புவதாகச் சொல்லிக்கொண்டு அவர் புறப்பட்டார்.

      ஆவி பறந்து கொண்டிருந்த ஒரு தட்டுப் போண்டாவும், இரண்டு மசால் வடைகளும் சாப்பிட்டுவிட்டு அவர் காப்பியை வீட்டுக்குப் போய்க் குடித்துக்கொள்ளும் எண்ணத்துடன் நடையைக் கட்டினார்.

      அவர் வீட்டுக்கு வந்த போது, மகள் சரசுவும் அவள் தோழியும் மசால் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மகன் காணப்படவில்லை. சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டான் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டார்.

      சற்றுப் பொறுத்து மகளும் அவள் தோழியும் மொட்டைமாடிக்குப் போனதன் பிறகு செங்கமலம், “கொஞ்சம் வர்றீயளா?” என்று குரல் கொடுத்தாள். சச்சிதானந்தம் மனைவியின் கூப்பாட்டைக் காதில் வாங்காதவர் போன்று பதில் சொல்லாதிருந்தார். செங்கமலம் வடைத் தட்டுடன் தானே வாசலுக்கு வந்துவிட்டாள்.

“கொஞ்சம் வாங்களேன் உள்ளே! …” என்று ஆவி பறந்த வடைத் தட்டுடன் அவள் அவரை அழைத்த போது அந்த மசால் வடைகளை ஒரு கை பார்க்கச் சச்சிதானத்துக்கு ஆசையான ஆசைதான். இருந்தாலும் தாம் செய்திருந்த டிவின்படி, “நான் டிஃபன் சாப்பிட்டாச்சு …” என்று அவர் சிறிது கடுப்புடனே அறிவித்தார்.

       “என்னது! சாப்பிட்டாச்சா! என்ன சொல்றீங்க?”

       “ஓட்டலுக்குப் போயிச் சாப்பிட்டுட்டு அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடிதான் வந்தேன்.”

       “எதுக்கு ஓட்டலுக்குப் போனீங்க?”

       “பின்னே என்ன? நீ உம் பேரன் பேத்திங்க, பொண்ணு, அவ சிநேகிதப் பொண்ணு, உம்மவன் இத்தினி பேருக்கும் குடுத்து முடிச்சுப் போட்டு வர்ற வரைக்கும் இந்தக் கெளவன் வயிறு தாங்குமா?”

       பசி தாளாமல் அவர் செய்துவிட்டு வந்திருந்த வேலையைக் காட்டிலும், தம்மைக் கிழவன் என்று அவர் குறிப்பிட்டுக் கொண்டதும், அவ்வாறு குறிப்பிட்டுக் கொண்ட போது அவர் குரலில் ததும்பிய சலிப்பும் செங்கமலத்தைத் தூக்கிவாரிப் போட்டன.

       “அம்புட்டுப் பசியாயிருந்திச்சுன்னா, சொல்றதுதானே? மொதல்ல உங்களுக்குக் குடுத்திருப்பேனில்லே?”

       “அதான் நான் எட்டிப் பார்த்ததுமே அனவ்ன்ஸ் பண்ணினியே, ‘தாத்தாவுக்கு ஒண்ணும் இப்பம் அவசரமில்லே’ன்னு! பசியா இருக்கவேதான் எட்டிப் பார்த்தேன். மனுஷன் உத்தியோகத்துலே இருந்தாத்தான் அவனுக்கு மதிப்பு-மரியாதை எல்லாம் …”

      கொடுமை மிகுந்த இந்தச் சொற்கள் செங்கமலத்தின் கண்களை ஈரமாக்கின: “நானும் கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன். ரிடைரானதுலேருந்து நீங்க பேசற பேச்சே ஒரு தினுசாத்தான் இருக்குது. எனக்குக் கூடத்தான் ஒரே பசி. அதுக்காகச் சின்னப் பசங்களை விட்டுட்டு நம்ம வயிறுதான் பெரிசுன்னு பெரியவங்க எலையைப் போட்டுக்கிட்டு உக்கார முடியுமா?”

        ‘என்ன இருந்தாலும் பேரன்பேத்திங்கன்னா உனக்கு ஒசத்திதான்!’ என்று குழந்தைத்தனமாக மேற்கொண்டு அவர் பேசக்கூடும் என்று எதிர்பார்த்த செங்கமலம், அவர் அப்படிச் சொல்லாவிடினும், “உம் பேரப்புள்ளைங்களையே கட்டிக்கிட்டு அழு!” என்று சொல்லவும், வியப்பும் வேதனையும் தெறிக்க அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.

      அதற்கு முந்தின நாளும் இப்படித்தான். அவர் காலை ஏழு மணிக்கெல்லாம் வழக்கம் போல் குளிக்கச் சென்ற போது, “இப்ப என்ன அவசரம் உங்களுக்கு? அதுதான் ஆஃபீஸ் இல்லியே?  கடைசியிலே குளிக்கப் போங்களேன்!…’ என்று செங்கமலம் தம்மைத் துரத்தியடித்த நினைவு அவருக்கு வந்தது.

      இரண்டு நாள்களுக்கு முன்னால், “தாத்தா சும்மாத்தானேடா குந்திக்கிட்டு இருக்குறாரு? அவர்கிட்டப் போய்க்  கேளேன்!” என்று மகள் சரசு தன் அக்கா மகன் கணக்குப் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்ட போது அவனைத் தம்மிடம் துரத்தியதும்  அவருக்கு ஞாபகம் வந்தது.

      மற்றொரு நாள் கடைக்குப் போய் ஏதோ மளிகைச் சாமான்கள் வாங்கிவருமாறு செங்கமலம் தன் மகனைப் பணித்த போது, “இனிமே கடைகண்ணிக்கெல்லாம் போய்க்கிட்டிருக்க என்னாலெ முடியாதும்மா! அதான் அப்பா வேலை இல்லாமெ உக்காந்துக்கிட்டிருக்காரே? அவரை அனுப்பும்மா இதுக்கெல்லாம்!” என்று அவன் கத்தியது கூட அவருக்கு நினைவில் நெருடியது.

      ஆகக்கூடி, தாம் அதுகாறும் செக்குமாடாக உழைத்த போது அது பற்றிய உணர்வே யாரிடமும் இருக்கவில்லை என்றும், தற்போது தாம் சும்மா உட்கார்ந்திருப்பது மட்டுமே எல்லாருடைய கண்களையும் கரிக்கிறது என்றும் எண்ணி அவர் கசப்புறார்.

      மேற்குறித்த அண்மையிலான நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அதற்கு முந்தைய வேறு சில நிகழ்ச்சிகளும் நினைவுக்கு வந்து அவரை அலைக்கழித்தன. வேலையிலிருந்து ஓய்வு பெற்று, வீட்டில் தாம் உட்காரத் தொடங்கியதிலிருந்தே தம்  குடும்பத்தினரில் யாரும் கலகலப்பாகத் தம்மோடு பேசுவதில்லை என்று அவர் கருதலானார். எவனோ ஒரு தண்டச்சோற்றுக் கிழவன் ஓர் ஓரமாக வீட்டில் உட்கார்ந்து கிடக்கிறான் என்று அவர்கள் நினைப்பதாகத்தான் அவருக்குத் தோன்றிற்று. சில நேரங்களில் ஓர் எடுபிடி ஆளை வேலை வாங்குகிறாப்போல, தாம் தற்போது சும்மா இருப்பதைச் சாக்காக வைத்துத் தம் குடும்பத்தினர் விரட்டி விரட்டித் தம்மிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் எண்ணினார்.

       ‘மனுஷன் சம்பாதித்துப் போட்டுக் கொண்டிருக்கிற வரையில்தான் அவனுக்கு மதிப்பு, மரியாதை எல்லாம். அதன் பிறகு காலுக்கு உதவாத செருப்பின் கதிதான் அவனுக்கு!’ என்று அவர் மனம் முனகியது. அவர் மூத்த மகன்தானாகட்டும் – அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு தன் பொழுதைக் கழிப்பதற்காகச் சினிமாவுக்குப் புறப்பட்டுப் போனவன் – அப்பாவுக்குப் பொழுது எப்படிப் போகிறது என்பதைப் பற்றி இம்மியேனும் கவலைப்படுகிறானா? ‘அப்பா! உங்களுக்கு இப்ப பொளுதெப் போக்குறது கஷ்டமாயிருக்குமே? லைப்ரரியிலேருந்து எதாச்சும் பொஸ்தகம் வாங்கியாரட்டுமா?’ என்று ஒரு வார்த்தை கேட்கத் தெரிந்ததா இத்தனை நாளில் ஒரு நாள்? …

      அரை நாள் மீதி இருந்ததாம். அதை எடுத்துவிட்டானாம். அவருந்தான் இவனைப் போலவே அரசினர் அலுவலகத்தில் பணியாற்றினார்.  ‘காஷுவல் லீவை’ இப்படியா கணக்குப் பார்த்துத் துடைத்து எடுத்து அனுபவித்தார்? ஆண்டு தோறும் கிட்டத்தட்ட ஐந்தாறு நாள்களைச் சர்க்காருக்கே தத்தம் செய்து விடுவாரே! இந்தக் காலத்துப் பிள்ளைகள் வேலை செய்கிறார்களோ இல்லையோ, இதிலெல்லாம் ரொம்பவும் கருக்குத்தான்.

      மகனைக் காட்டிலும் மகள் ஒரு மாற்றுத் தேவலை. வெளியே போகும் போது, ‘போய்ட்டு வரேம்ப்பா’ என்று சொல்லிவிட்டாகிலும் போகிறாள். மகனைப் பொறுத்த வரையில் அவர் யாருக்கோ வந்த விருந்துதான். செங்கமலம், தாலி கட்டினவன் என்கிற கடனைப் பொருட்படுத்தியோ என்னவோ கொஞ்சம் பேசுவாள். அது கூட, ‘இவள் எங்கிட்ட பேசல்லேன்னு யாரு அளுதாக இங்கிட்டு?’ என்று அவரைச் சலித்துக்கொள்ள வைக்கிற – சரசுவுக்கு உடனே திருமணம் செய்வித்தாக வேண்டிய கட்டாயம், தன் பேச்சைக் கேட்டு அவர் ஒரு வீடு கட்டியிருந்தால் இன்று இருநூற்றைம்பது ரூபாய் வாடகை கொடுக்க வேண்டியதிருக்குமா போன்ற பேச்சுகளையே அவள் பெரும்பாலும் பேசினாள். ஊரிலிருந்து வந்திருக்கிற பெண் வயிற்றுப் பேரக் குழந்தைகளைக் கொஞ்சுவதற்கே நேரம் சரியாக இருப்பதால்தான் செங்கமலம் தம்மோடு தொணதொணப்பதில்லையோ என்றும் அவர் நினைத்தார்.

                    தாம் ஓய்வு பெற்றுவிட்டசெய்தியைச் சேர்த்துச் செங்கமலம் தன் மூத்த மகளுக்கு எழுதிய கடிதத்துக்கு மகள் தான் எழுதிய பதிலில் அது குறித்து ஒரு வரி கூட எழுதாததும் அவருக்கு நினைவு வந்தது. ஆனால், ஆழ்ந்து சிந்தித்த போது, ‘என்னன்னு எளுதும் அது? அப்பா ரிடைரானது கெட்டு ரொம்ப வருத்தமாயிருந்திச்சுன்னா எளுதும்? இல்லே, ரொம்ப சந்தோஷம்னுதான் எளுதுமா? ரெண்டுமே தப்புத்தான். அதனாலதான் கம்னு இருந்திடிச்சோ?’ – அந்த நிலையிலும் அவருக்குச் சிரிப்புக்கூட வந்துவிடும் போல் இருந்தது. எது எப்படி இருந்தாலும், தம் குடும்பத்தில் யாரும் தமக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை என்பது குறித்து அவர் மனத்தில் சிறிதும் ஐயமில்லை.

               முந்திய நாள் தம் ஓய்வு ஊதியத்தை வாங்கிக்கொண்டு வந்து செங்கமலத்திடம் கொடுத்த போது, அதைப் பெற்றுக்கொண்டே, “இந்தப் பணம் உங்க மருந்துமாயத்துக்கே சரியா யிருக்குமே?  எப்படித்தான் காலம் தள்ளப் போகுதோ? சரசு வேற நின்னுக்கிட்டிருக்குறா கலியாணத்துக்கு!” என்று அவள் சொன்னது சுருக்கென்று அவர் நெஞ்சினுள் இறங்கியது.

       “பல எடங்கள்ளே வேலைக்குச் சொல்லி வெச்சிருக்குறேன், செங்கமலம். கிடைச்சா இன்னும் அஞ்சாறு வருசத்துக்கு இந்த ஒடம்பு  தாங்கும். ஆனா, இளவட்டங்களே ஆலாப் பறந்துக்கிட்டிருக்கிறச்சே  எனக்கு எவன் வேலை குடுப்பான்? நானும் வேலை தேடிக்கிட்டுத்தான் இருக்குறேன்.  பல பேரு கிட்டவும் சொல்லி வெச்சிருக்குறேன் …” என்று விளக்கம் தருகிற தோரணையில்.அவர் சொன்ன போது,   “ரொம்ப அளகாயிருக்குதே? நீங்க எதுக்கு வேலைக்குப் போறது?ஆச்சு. நம்ம சுந்தரத்துக்கும் ஒரு வேலை கிடைச்சிருச்சுன்னா, கவலை இல்லே …” என்று செங்கமலம் பதில் சொன்னாள்.  ஆனாலும் அவர் மனத்துக்கு அது அறுதலாக இல்லை. தாம் ஏதோ வேண்டாத சுமையாகிப் போனதாகவும், அதனாலேயே யாரும் தம்மைச் சட்டை செய்வதில்லை என்றும் அவருக்குத் தோன்றலாயிற்று.

      எல்லாரும் தம்மைப் புறக்கணிப்பதாக அவர் நினைக்க ஏதுவாக இன்னும் பல நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாக அவர் நினைவில் தோன்றின. சிறிது நேரச் சிந்தனைக்குப் பிறகு, தாம் சம்பாதிப்பது நின்றுவிட்டதால் மனைவி உட்பட யாரும் தம்மை மதிப்பதில்லை என்கிற சுருக்கமான முடிவுக்கு அவர் வந்தார். சற்றுப் பொறுத்துக் காப்பியுடன் அங்கு வந்த செங்கமலம் அவருக்கு அருகே இருந்த முக்காலியின் மீது அதை வைத்து விட்டு, “காப்பி வெச்சிருக்கேன்,” என்கிற அறிவிப்புடன் அப்பால் நகர்ந்தாள் சூடான காப்பியைக் குடித்தால் சிந்தனைகளால் வெடித்துக்கொண்டிருந்த தலையின் வேதனை சற்றுக் குறையும் என்று அவருக்குத் தோன்றினாலும், அதைத் தொடக்கூடாது என்கிற திடீர் வீறாப்பு அவர் நெஞ்சில் முளைவிட்டது. அதற்குக் காரணம் ஏற்கெனவே அவரை ஆட்டிவைத்துக் கொண்டிருந்த எண்ணங்கள் மட்டுமே என்று சொல்லுவதற்கில்லை. செங்கமலம் பக்கத்தில் நின்று காப்பியை நுரை பொங்க ஆற்றி அவர் கையில் கொடுத்துவிட்டு, அவர் குடித்து முடிக்கிற வரையில் அங்கேயே நின்று டவரா-டம்ப்ளர்களை எடுத்துச் செல்லாமல், முக்காலியின் மேல் ‘டொக்’கென்று வைத்து, விருட்டென்று உள்ளே சென்று விட்டதுதான் அவரது திடீர் எரிச்சலுக்குக் காரணம். அவர் மனம் கசந்தது. கலங்காத அவர் கண்கள் கலங்கின. அவர் காப்பியைக் குடிக்காமலே ஓட்டலை நோக்கி மறுபடியும் சென்றார்

      … ஓட்டலில் காப்பியைக் குடித்ததன் பிறகு, கால்கள் போன போக்கில் கொஞ்சத் தொலைவு நடந்துவிட்டு அவர் வீடு திரும்பிய போது மணி ஆறரை.

       ஆத்திரத்தோடு அவரை எதிர்கொண்ட செங்கமலம்,  “காப்பி மேலே உங்களுக்கு என்ன கோவம்? நீங்களும் வரவர ஒரு பேரக் கொளந்தை மாதிரித்தான் என்னைப் பாடாப் படுத்தறீங்க! ஆன வயசுக்கு அடையாளமா?” என்கிற சொற்களை அழுகை திமிறிய குரலில் வாரி இறைத்தாள்.

      சினிமாவுக்குப் போய் வந்திருந்த மகன், தோழியை அனுப்பிவிட்டு மொட்டை மாடியிலிருந்து இறங்கிவிட்டிருந்த மகள் சரசு, கல்லூரியிருந்து திரும்பியிருந்த சுந்தரம், முறையே பத்து-எட்டு-ஆறு வயசுடைய பேரக் குழந்தைகள் ஆகிய எல்லாருமே ஏதோ வேடிக்கையைக் காண்பதற்காகக் கூடியவர்கள் போல் கூடத்தில் குழுகியிருந்தார்கள். அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியதைக் காணச் சகிக்காத பிள்ளைகளும் பெண்ணும் செங்கமலத்துக்கு வகை வகையான சொற்களால் ஆறுதல் சொன்னவாறு அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

      பெரியவன்,  “குடிக்காம போனாப் போறாரு! நீ ஏன் அளுவுறே? இதைவிட எந்த வீட்டிலெ யாருக்கு நடக்கும்?” என்றான்.

      சின்னவன், ”ஓட்டல் காப்பி சாப்பிடணும் போல் இருந்திருக்கும். போயிட்டார்! இதுக்குப் போய் அளுதுக்கிட்டு! நானாயிருந்தா ரெண்டாம் டோஸ் காப்பி குடிச்சுப்போட்டு எதுவுமே நடக்காதது மாதிரி கமுக்னு இருந்துடுவேன். உன்னாட்டமா அளுதுக்கிட்டுக் கெடக்க மாட்டேன்!” என்று கண் சிமிட்டினான்.

      சரசுவோ, “ஏம்ப்பா இப்படியெல்லாம் பண்ணி அம்மாவை அள விடறீங்க? உங்களுக்கே நல்லாயிருக்குதா?” என்று நேரடித் தாக்குதலில் முனைந்தாள்.

      இந்த மும்முனைத் தாகுதலை அவர் எதிர்பார்க்கவில்லைதான். என்றாலும், சமாளித்துக்கொண்டு, “அவ்வளவுதானா? இன்னும் யாராச்சும் பாக்கி-சாக்கி இருக்காங்காளா? ஏன்? உன் பேரப்புள்ளைங்களையும் கேள்வி  கேக்க வைக்கிறதுதானே? சம்பாரிச்சுப் போட்டுக்கிட்டிருக்குற வரையிலேதான் அப்பன், ஆம்படையான் எல்லாம்! அதுக்குப் பெறகு காலுக்கு உதவாத செருப்புத்தான்!” என்று அவர் கத்தவும், அங்கிருந்த எல்லாருக்குமே தூக்கிவாரித்தான் போட்டுவிட்டது. அவர் தொடர்பு இல்லாமல் ‘காட்டுக்கும் மேட்டுக்கும்’ கத்தியதாகத்தான்  அவர்களுக்குப் பட்டது. எல்லாரிலும் அதிகப் பாதிப்புக்கு உள்ளானவள் செங்கமலம்தான். தூக்கிவாரிப் போடப்பட்டதோடு மட்டுமல்லாமல் அந்தச் சொற்களால் அவள் துயரத்திலும் ஆழ்த்தப்பட்டாள். அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிற அர்த்தமின்மையை – அல்லது அசட்டுத்தாத்தை – அவள் அவரது சீற்றத்தில் முகர்ந்தாள்.

       “ஏன் இப்படியெல்லாம் கன்னாப்பின்னான்னு கிரிசைகெட்டதனமாப் பேசறீங்க? இப்ப என்ன ஆயிடுச்சு? நீங்க சம்பாதிக்கல்லேன்னு இப்ப யாரு உங்களுக்கு என்ன குறை வெச்சாக? என்ன மரியாதைக் குறைச்சலா நடந்துக்கிட்டாக?” என்று செங்கமலம் அழுகை கலந்த சொற்களைக் குழறலாகப் பதிலுக்கு வாரி இறைத்தாள்.

       “அவுக அவுக மனசுக்கே நல்லாத் தெரியும். லிஸ்டு வேற போட்டுத் தரணுமா என்ன?” என்று அவர் காட்டமாகப் பதில் சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தார்.

      அவர் சென்றதன் பிறகு, மூத்தவன், “அப்பாவுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திருக்கும்மா.  வேற ஒண்ணுமில்லே. அதுதான் சள்ளுபுள்ளுனு விழறாரு. நீ ஒண்ணும் சட்டை பண்ணாதே!” என்று சொன்ன சொற்கள் அவரை வந்தடையவே செய்தன. ‘ஓகோ! என்னைச் சட்டை பண்ணாதேங்கறானா? அப்படின்னா ஏதோ பைத்தியக்காரன் கத்திக்கிட்டுக் கெடக்குறான்னு அர்த்தமா!’ என்று மனத்துள் குமுறிய அவர் கண்கள் கலங்கின. மேற்மொண்டு அங்கே யாரும் ஏதும் பேசவில்லை. அவர் தம் சாய்வு நாற்காலியை நோக்கி நடந்தார்.

      அன்றிரவு அவர் சாப்பிடவே இல்லை. செங்கமலம் எவ்வளவோ கெஞ்சியும், கோபித்தும் – கட்டாயப்படுத்தியும் கூடத்தான் – அவர் அசைந்து கொடுக்கவில்லை. அவரோடு சேர்ந்து தானும் பட்டினி கிடந்த செங்கமலத்தைப் பிள்ளைகளின் வற்புறுத்தல் சாப்பிட இசைய வைக்க முடியவில்லை. பட்டினி கிடந்த தம்மைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் பிள்ளைகள் செங்கமலத்தைத்தான் சாப்பிடச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் என்கிற – அவரது கவனிப்புக்குத் தப்பாத – உண்மை அவரது எரிச்சலுக்கு எண்ணெய் வார்த்தது. …

      அவர் படுக்கையில் படுத்த பிறகு குருட்டு யோசனைகள் செய்யலானார். இன்னும் சில நிகழ்ச்சிகளும் அவர் நினைவுக்கு வந்தன.

      … அன்றொரு நாள் மூத்த மகன் கறிகாய்க்கடைக்குப் போக மறுத்து, ‘அப்பா சும்மாத்தானே குந்திக்கிட்டு இருக்குறாரு? அவரைப் போகச் சொல்லேம்மா,’ என்றதும்,   ‘அதானே! மறந்தே போயிருச்சு,’ என்ற செங்கமலம் தம்மை அந்த வேலைக்கு ஏவியதும், மற்றுமொரு நாள், அடுப்பில் சட்டியைப் போட்டுவிட்டுப் பக்கத்துக் கடைக்குப் போய் எண்ணெய் வாங்கிவரச் சொல்லிச் செங்கமலம் தம்மை அவசரப்படுத்தியதும்,       குழாயில் தண்ணீர் நின்ற போது சில தடவைகள் “பம்ப்” அடிக்கச் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்த போது, கிட்டத்தட்ட ஒரு வேலைக்காரனின் இடத்துக்குத் தாம் தள்ளப்பட்டுவிட்டதாக அவர் நம்பினார். இந்த நம்பிக்கையால் அவர் அன்றிரவு பட்ட மனத்துன்பம் கொஞ்சநஞ்சமன்று.

      இரவு சுமார் ஒரு மணிக்கு எழுந்து கொல்லைப்பக்கம் போய்விட்டு வந்து படுத்த அவர் திடீரென்று தோன்றிய முடிவுடன் எழுந்தார். மின்விளக்கைப் போட்டால் யாரேனும்  விழித்துக்கொண்டுவிடக்  கூடும் என்பதால் அரிக்கேன் விளக்கை ஏற்றிவைத்துக்கொண்டு அவர் மனைவிக்குக் கடிதம் எழுத்லானார்.

      … ஏன்தான் பொழுது விடிந்ததோ என்று அன்று காலை செங்கமலத்துக்கு இருந்தது. அவர் எழுதிவைத்திருந்த கொடுமை நிறைந்த சொற்கள் அடங்கிய கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்து அவள் கண்ணீர் விட்டாள். கடிதத்தின் சாரம் தம்மை யாருமே ஒரு பொருட்டாக மதியாததால் தாம் வீட்டை விட்டுப் போவதாக அவர் தெரிவித்திருந்தார் என்பதுதான்! அந்தச் செய்தி தோற்றுவித்த அதிர்ச்சியைக் காட்டிலும் அதைத்  தெரிவிக்க அவர் கையாண்டிருந்த சொற்கள் விளைவித்த கசப்பு மிகுதியாக இருந்தது.

       ‘உத்தியோகத்தில் இருந்த சமயம், மாலையில் நான் வீடு திரும்பியதும் காப்பியைக் கொண்டுவரும் நீ – தானே பக்கத்தில் நின்று  அதை ஆற்றிக் கொடுத்துவிட்டு, நான் குடித்து முடிக்கும் வரை பக்கத்திலேயே நின்று, டம்ளரை வாங்கிச் செல்லும் வழக்கமுள்ள நீ – இப்போதெல்லாம் அநேகமாக அப்படிச் செய்வதில்லை.  நேற்றுக் கூட டொக்கென்று காப்பியை முக்காலியின் மேல் வைத்துவிட்டுப் போய்விட்டாய்.  நீ எந்த அளவுக்கு என்னை அலட்சியப் படுத்துகிறாய் என்பதை உனக்கு எடுத்துக்காட்டுவதற்கு இது ஒன்று சொன்னால் போதுமானது என்று நினைக்கிறேன். கொண்டவள் தூற்றினால் கூரையும் தூற்றும் என்பது நான் உன் சமீபத்திய அலட்சியப் போக்கிலிருந்து அறிந்துகொண்ட புது மொழி …’ – கடிதத்தின் இந்தப் பகுதி அவளைத் துடிதுடிக்கச் செய்துவிட்டது. அவளால் நம்பவே முடியவில்லை. என்ன யோசித்தும் தான் அவரை அலட்சியப் படுத்தியதாக அவளுக்குத் தெரியவே இல்லை. இதனால், அந்தக் குற்றச்சாட்டை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இந்த வரிகளை முதல் தடவை படித்த போது அவள் வாயிலிருந்து புறப்பட்ட சொற்கள் ‘அட, பாவி மனுஷா!’ என்பவைதான்.

       “பாத்தீயளாடா உங்கப்பாரு செய்திருக்குற காரியத்தெ. நேத்திக்கு வடை தீஞ்சு போயிறப் போகுதேன்னு காப்பியெ வெச்சுட்டு ஓடியாந்துட்டேன். அன்னிக்கு ஒரு நாளு பால்காரன் கூப்பிட்டான்னு ஓடினேன். இன்னொரு நாளு பால் பொங்கிறப் போகுதேன்னு ஓடினேன். வேலையிலே இருந்தப்ப ஆறரை மணிக்கு வீட்டுக்கு வருவாரு. நானும் வேலையெல்லாம் முடிச்சுப்போட்டுச் சாவகாசமா இருப்பேன். அவரு குடிச்சு முடிக்கிற மட்டும் நின்னுக்கிட்டிருந்துட்டுக் காப்பி டம்ளரை வாங்கிப் போவேன்… இப்ப மூணு மணிக்கில்லே காப்பி போடுறேன்? எவ்வளவு அமக்களமான நேரம் அது! பேரப் புள்ளைங்க வேற வந்திருக்குறாக! எவ்வளவு வேலை இருக்கும்! கெளவிக்கு ஒத்தாசை பண்ணணும்கிற எண்ணம் வராக்காட்டியும் புத்தி வேலை செய்யிற பவிசைப்பாரு …!” என்று செங்கமலம் பொருமித் தீர்த்தாள்.

      அடுத்து, அவரைத் தேரும் படலம் துவக்கப் பெற்றது. அவர் போயிருக்கக் கூடும் என்று கருதப்பெற்ற ஊர்களில் இருந்த நண்பர், உறவினர் ஆகியோருக்குக் கடிதங்கள் எழுதப்பட்டன. அவர் படிக்கும் வழக்கமுள்ள தமிழ், ஆங்கில நாளேடுகளில்  “காணவில்லை” விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.  ..

      … இரவோடிரவாகத் தம் குறைந்தபட்சத் தேவைகளை ஒரு பெட்டியில் திணித்துக்கொண்டு புறப்பட்டுவிட்ட சச்சிதானந்தம் பூந்தமல்லியில் இருந்த தம் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். அந்த நண்பர் மனைவியை இழந்து பல நாள்களாகி, ஒரு சொந்தக்காரரைச் சமையற்காரராகத் தம்முடன் நிலையாக வைத்துக்கொண்டு காலந்தள்ளிக் கொண்டிருந்தார். அவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுச் சில மாதங்கள் கடந்திருந்தன. அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளுவது வழக்கம்.

      தாம் வீட்டை விட்டு “ஓடி” வந்துவிட்ட கதையை அவர் நண்பர் குப்புசாமியிடம் தெரிவித்ததும், அவர் தாம் சச்சிதானந்தத்தின் செயலை ஆதரிக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஓய்வு பெற்றவர்களுக்கே உரிய தாழ்வு மனப்பான்மை அவரை ஆட்டிவைத்துக் கொண்டிருப்பதாகக் குப்புசாமி சொன்ன போது, சச்சிதானந்தத்துக்கு, ‘அப்படியும் இருக்குமோ’ என்று கண நேரம் போல் ஐயம் ஏற்பட்டாலும் தம் குடும்பத்தினரின் அலட்சியப் போக்கோடு தொடர்புகொண்ட நிகழ்ச்சிகள் பற்றி வந்த நினைவுகளில் அது தவிடுபொடியாயிற்று.

       ‘ஓடி’ வந்து ஒரு வாரத்தில் அவர் தம்மைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு ஐந்நூறு ரூபாய் வெகுமதி அளிப்பதாக அறிவித்துத் தம் மனைவியும் மக்களும் செய்திருந்த விளம்பரங்களைக் காண நேர்ந்தது. அவரது புகைப்படத்தின் கீழ் எழுதப் பெற்றிருந்த உருக்கமான சொற்களைப் படித்து அவர் குரூரமான மனநிறைவை நுகர்ந்தாரெனினும், அவரது மனத்தில் இளக்கம் ஏற்பட்டு விடவில்லை. நாளேடுகளில் அறிவிப்பு  வெளிவந்த அன்று குப்புசாமிக்கு அவர் மகன் பாபு எழுதியிருந்த கடிதமும் வந்தது.

       ‘அப்பா எங்களைப் பற்றி ஏதேதோ தப்பாகக் கற்பனை பண்ணிக்கொண்டு வீட்டை விட்டுப் போய்விட்டார்.  அவர் போனதிலிருந்து வீடே களையிழந்து போய்விட்டது. அம்மா படுத்த படுக்கையாகி விட்டார்கள். என் தங்கச்சி அழுதவாண்ணந்தான்.  யாருக்கும் சாப்பிடக் கூடப் பிடிக்கவில்லை. மொத்தத்தில் வீடு வீடாகவே இல்லை. அவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், விஷயம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாமல், அவரை எப்படியாவது, தயவு செய்து,  இருத்தி வைத்துக்கொள்ளவும். பின்னர் எனக்குத் தகவல் கொடுக்கவும். நான் வந்து அழைத்துப் போகிறேன்…’ என்கிற சொற்களை அக்கடிதத்தில் படித்த போது சச்சிதானந்தம் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டார்தான். அந்தச் சொற்களில் விரவி நின்ற அன்பும் உண்மையும் அவரை ஓரளவு நிலைகுலையச் செய்துவிட்டன. இல்லாத ஒன்றைக் கற்பித்துக்கொண்டு, அதன் விளைவுகளான உணர்ச்சிகளை மிகைப்படுத்திக்கொண்டும் விட்டோமோ என்கிற ஐயம் முதன் முறையாக அவர் உள்ளத்தில் எழுந்தது. இருந்தாலும் பிடிவாதமும் தன்மதிப்பும் அந்தக் கடிதத்தை அவர் பொருட்படுத்தாதவாறு செய்தன.

        கடிதத்தை மடித்துக் குப்புசாமியிடம் கொடுத்த அவர்,  “டேய், குப்பு! இது என் சுய கௌரவப் பிரச்சினை. தயவு செய்து என்னைக் காட்டிக் குடுத்துடாதேடா!” என்று கேட்டுக் கொண்டார்.

       “டேய், சச்சிதானந்தம்! என்னதான் நீ அவங்க உன்னை அலட்சியம் பண்றதா நினைச்சாலும், நீ உள்ளூர நொறுங்கிக்கிட்டு இருக்குறேடா… எனக்கு நல்லாத் தெரியுது. … எப்படியும் நீ திரும்பிப் போகத்தான் பேறே. போய்த்தான் ஆகணும்…உனக்கு ஒரு மாசம் டயம் குடுக்கறேன். அதுக்குள்ளே நீயே கெளம்புற வழியெப் பாரு. இல்லேன்னா, நானே கடுதாசி போட்டுடுவேன் அவங்களுக்கு …” என்றார் குப்புசாமி, மிரட்டலாக. …

      மேலும் பதினைந்து நாள்கள் சென்றன. எல்லா நாடேளுகளிலும் இன்னோர் அறிவிப்பு வந்தது:

       “உங்கள் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும் போல் இருக்கிறது. உடனே வரவும். நீங்கள் ஓடிப்போனது தெரியவந்தால், பெண்ணின் திருமணம் தடைப்படும். இதை உத்தேசித்தாகிலும் உடனே வரவும்.

செங்கமலம்

               இதைப் பார்க்க நேர்ந்ததும், சச்சிதானச்தம் உண்மையில் பதறிப் போனார். தம் மகளின் திருமணத்துக்குத் தாம் தடையா யிருத்தலாகாது என்கிற எண்ணம் ஒருபுறமிருக்க, பிரிவாற்றாமை உள்ளூர அவரை உருக்கிக் கொண்டிருந்த நிலையில், அவர் தமது கௌரவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு உடனே ஊர் நோக்கிப் புறப்படச் சித்தமானார். ‘குடும்பத்தினரின் முகங்களில் எப்படி விழிக்கப் போகிறோமோ’ என்கிற நினைப்பு அவரை வெட்கத்தில் மூழ்கடித்தாலும், அவரால் அதை ஒரு பொருட்டாக நினைத்துத் தமது பயணத்தை ஒத்திப்போட முடியவில்லை. அவர்  மறு வண்டி பிடித்துக் கிளம்பினார்.                                                                                                                                                                                … முன் தகவல் கொடுக்காமலும் ஓசைப்படாமலும் வந்து நின்ற சச்சிதானந்தத்தைக் கண்ணுற்றதும், கூடத்தில் ஓர் ஓரத்தில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த செங்கமலம் ஓவென்று குரலெடுத்து அழலானாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாதலாலும், பிற்பகல் ஒன்றரை மணியானதாலும், எல்லாருமே அந்த நேரத்தில் அங்கே இருந்தார்கள்.

      மூத்த மகன்,  “வாங்கப்பா!” என்று வாய் நிறையக் கூப்பிட்டான். உணர்ச்சிவசப்பட்டு மிக விரைந்து வந்து அவரருகே நின்று அவர் தோளைத் தொட்டான். மகனுடைய விரல்களின் தொடுகை அவரை என்னவோ செய்தது. அவன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரைப் பார்த்து அவர் திகைத்துப் போனார்.

      அடுத்தவன், “எங்கேப்பா போயிட்டீங்க, எங்களையெல்லாம் விட்டுப்போட்டு?” என்று அதட்டலாகக் கேட்டாலும் அந்த அதட்டலில் அவனது அன்பு மனத்தை அவர் கண்டார். மகள் சரசு ஒன்றும் பேசாமல் தாயுடன் சேர்ந்துகொண்டு விம்மலானாள். பேரப் பிள்ளைகள் அங்கே இல்லை. விடுமுறையைக் கழிக்க வந்திருந்த குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டிருப்பார்கள் என்று அவர் ஊகித்தார்.

      ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, அவர் சாடையாகச் செங்கமலத்தை நோக்கினார். அவள் பாதி உடம்பாகி இருந்தாள். எல்லாருமே மகிழ்ச்சி குன்றியிருந்தார்கள் என்று தோன்றிற்று.  வீடே ஏதோ சாவு நடந்துவிட்ட வீடு மாதிரி தெரிந்தது. எல்லாம் தமது பிரிவினால்தான் என்பது புலப்பட்ட போது அவர் பெரிதும் வருந்திக் கழிவிரக்கமுற்றார். அழுகை ஓய்ந்து பேசுவதற்குத் தெம்பு வந்ததும், “இதோ பாருங்க. நாங்க எப்படி, எப்படி உங்ககிட்ட நடந்துக்கணும்குறதுக்கு விவரமா மனசு விட்டுச் சொல்லிப் போடுங்க. என்னென்னத்தியோ நீங்களாக் கற்பனை பண்ணிக்கிட்டு எங்களை இப்படியெல்லாம் தவிக்க விடாதீங்க!” என்று செங்கமலம் மன்றாடினாள்.

      சச்சிதானந்தம் ஒன்றுமே பேசவில்லை. சற்றுப் பொறுத்து, “சரசுவுக்குப் பாச்திருக்குற பையன் யாரு? என்ன பண்ணிக்கிட்டிருக்கான்? என்ன படிச்சிருக்குறான்?” என்று அவர் கேட்டதும், செங்கமலத்தின் முகம் சட்டென்று மலர்ந்தது. அவள் வாய்விட்டுச் சிரித்தவளாய், “அதெல்லாம் சும்மா டூப்பு. சரசுவுக்குக் கல்யாணமின்னு போட்டாத்தான் நீங்க வருவீங்கன்னு அப்படிப் பொய்யாப் போட்டிச்சு!” என்றாள்.

      சச்சிதானந்தத்தின் முகத்துக்கு இரத்தம் ஏறியது. தம்மை எப்படியவது திரும்பச் செய்துவிட வேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு விளம்பரம் செய்ததில் தம்மீது அவர்கள் கொண்டிருந்ததும், வெளிப்பார்வைக்குச் சட்டென்று புலப்படாததுமான அன்பு வெளிப்பட்ட உண்மையை இப்போது புரிந்துகொண்ட அவருக்கு மிகுந்த வெட்கமும் வேதனையும் – தமது மடமையின் மீது சற்றுச் சினமும் கூடத்தான் – ஏற்பட்டன. தமது அசட்டுத்தனம் நிறைந்த ஓடலை நினைத்துக் கழிவிரக்கமுற்றாலும்,  மிகுந்த நிம்மதியுடன் தமது சாய்வு நாற்காலியை நோக்கி நடந்தார். செங்கமலம் காப்பி கொண்டு வருவதற்காககச் சமையலறையை நோக்கி நடந்தாள். …                         *******

Series Navigationவானவில் (இதழ் 121)நிரம்பி வழிகிறது !
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    Noel Nadesan says:

    சில வேளைகளில் நானே இந்த கதாபாத்திரமாக சிந்தித்திருக்கிறேன். ஆண்மனச் சிக்கலை தெளிவாக பார்கிறேன். பெண் எழுதியிருப்பது வியப்பைத் தருகிறது.

Leave a Reply to Noel Nadesan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *