வொலகம்

This entry is part 8 of 17 in the series 12 ஜூலை 2015

எஸ்ஸார்சி

தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது. தெருவில் பத்து பேருக்குக்குறையாமல் இங்கும் அங்கும் விறைத்துகொண்டு நடக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடந்துவிட்டிருக்கிறது.வீதி என்று முத்லில் சொன்னதைத் தெரு என்று கொஞ்சம் மாற்றிச்சொல்லி இருக்கிறேன்.கொலை அல்லவா நடந்து முடிந்திருக்கிறது.ஆகத்தான் அப்படி.. காண்போரிடம் எல்லாம் என்னாய்யா நடந்தது அவன் கேட்டான்.. தெருவில் நடமாடிய பத்து பேரில் ஒருவன் அவனை வாயை மூடிக்கொள் என்று செய்கை காட்டினான். அவன் வாயைமூடிக்கொண்டான்.
வந்து நின்ற ஆம்புலன்சிலிருந்து இரண்டு பெரிய ஆஸ்பத்திரி சிப்பந்திகள் வெள்ளை சட்டை போட்டுகொண்டு கையில் ஸ்டெச்சரோடு இறங்கினார்கள்.முண்டத்தின் மீது வெள்ளை நிற சாக்கு மூடியிருந்ததை அப்புறப்படுத்திவிட்டு முண்டத்தின் கைகளை மார்பின்மீது வைத்துக்கட்டினார்கள்.கயிறு ஒன்றும் எடுத்து வராததால் முண்டத்தின் மார்பில் இருந்த பூண் நூலையே எடுத்துக்கொண்டார்கள்.அவன் யோசித்தான் செத்தவன் பார்ப்பனனாக இருக்கலாம்.இருந்தாலும் பூண் நூல் மட்டும் வைத்து எப்படி இன்னார் என்று முடிவுக்கு வருவது.செட்டிமார்களும் ஆசாரிகளும் வன்னியர்களும் கூடத்தான் பூண் நூல் அணிகிறார்கள்.ஆக யாரென்ற முடிவுக்கு வர முடியாமல் அவனுக்குக் குழப்பமாக இருந்தது.ஆம்புலன்சு உள்ளாக அவன் நோட்டம் விட்டான்.பாலிதீன் பை ஒன்றில் தலை பத்திரமாக இருந்தது. பையில் உள்ள துண்டிக்கப்பட்ட தலையின் கீழே இரத்தம் உறைந்து இரத்தக்குழாயும் வெள்ளை நரம்பும் முறிந்த குறுத்தெலும்புகளும் முறுக்கிக்கொண்டிருந்தன. ஆகா நெற்றியில் நாமம். யூ வடிவத்தில் அழகாகக்கொலுவிருந்தது.காதுகளில் வெள்ளைக்கற்கள் பதித்த கடுக்கன். ஆக ஒரு அய்யர்தான் கொலையுண்டிருக்கிறார்.அவன் முடிவுக்கு வந்தான்.
‘யாரு அய்யிரு மாதிரி இருக்கு’
‘ஆமாம் அய்யிருதான்’
‘மேலத்தெருவுல மளிகைக்டை வச்சிருக்கிற அய்யிரு’ முண்டத்தை தூக்கிவந்த மருத்துவமனை சிப்பந்தி அவனுக்குப்பதில் சொன்னன்..அவனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. ஆம்புலன்சு விரைந்து மறைந்து போயிற்று.வேகு வேகு என்று இங்கும் அங்கும் நடந்த வண்ணம் இருந்த பார்ப்பனர்கள் யாரையும் காணோம்.மேலத்தெரு முக்கில்தான் அந்த அய்யரின் மளிகைக்கடை.அங்கே போனால் செய்தி எதுவும் கிடைக்கலாம். அய்யரின் கடை மூடிக்கிடந்தது.கடையின் பின்புறம்தான் அய்யரின் வீடு.அங்கு சென்று பார்த்தான்.வீடு பூட்டிக்கிடந்தது. இப்படிகூடவா ஆகிவிடும்.ஒன்றுமே பிடிபடவில்லை.திரும்பவும் வாசலுக்கு வந்து மூடிக்கிடந்த கடை வாயிலில் நின்றுகொண்டான்.ஒரு வயதான கிழவி.கையில் ஒரு துணிப்பையோடு கால் தாங்கித் தாங்கி நடந்து வந்தாள்.
‘யாரை பாக்கணும்னு கை வண்டிக்காரரு வந்துருக்காரு ‘
‘அய்யருக்கு என்ன ஆச்சி என்ன சேதி இது தெரியணுமே’ கிழவியைப்பார்த்துக்கேள்வி கேட்டான்
‘பாக்கறதையும் பாப்பிரு என்னை கேப்பிரு என்ன வண்டிக்காரரே சேதி’
‘அய்யரை யாரோ கொண்ணு போட்டுட்டாங்க. அது மட்டுந்தான் தெரியுது.ஆனா என்ன சேதி ஏன் இப்படின்னுதான் தெரியல முழிக்கிறன்’
‘மளிகைக் கடைய வித்துட்டு பட்ணம் போற அய்யிரு.ஆனா நேரா மேலயே பூட்டாரு. ஆள முடிச்சிட்டாங்க’
‘அதான் எனக்கும் அய்யிரு சொன்னது ஆனா இது என்ன கொடுமை’
‘அய்யிரு கடைய வூட்ட விக்கறதுன்னு முடிவாகி அச்சாரம் வாங்கி இருக்குறாரு.அச்சாரம் குடுத்த ஆளு சின்ன ஆளு அவரும் பட்னத்து ஆசாமி. அவுருக்கு இந்த ஊர்ல தான் விக்க கொண்டார சாமானுவ சிடாக் வக்கணும் இந்தப்பக்கமா அதுவுள சப்ளை பண்ணணும் அதுக்கு ஒரு எடம் வேணும் அதான் ‘
‘மேல சொல்லு ஆயா’
‘ அய்யிரு இந்த வூடும் கடையும் பட்னத்து ஆளுக்கு விக்கற சமாச்சாரம் இதே ஊர் உசந்துவூட்டு பலான ஆளுக்கு தெரிஞ்சது. அப்புறந்தான் பத்திகிச்சி விஷயம்.’நான் மேலத்தெருவுல ஒரு ஓட்டல் கடை வைக்க இடம் தேடுறன். எடம் கிடைக்கல.நீரு எங்கிட்டதான் உம்ம வூட்டை கடைய விக்கணும்னு கண்டிஷன் வந்துருக்கு. அய்யிரு அச்சாரம் வாங்கிபுட்ட சேதி சொல்லி இருக்குறாரு. அது எல்லாம் எனக்கு சொல்லுற ஒரு பதில் இல்ல. உன் வூடு கடையை எனக்கு கிரயம் குடுக்கறியா இல்லையான்னு மறுபடியும் சேதி அய்யிருக்கு வநதுது. அய்யிரு முழி முழின்னு முழிச்சி இருக்குறாரு. முடியாதேன்னு கையை விரிச்சி இருக்குறாரு.இது இனி இது சரிப்பட்டு வராது. இந்த அய்யிரு உசுரோட இருந்தாதானே அந்த கிரயம் அது இது எல்லாம். அவுரே இல்லேண்ணா அப்புறம் என்னா இருக்குன்னு கதை முடிஞ்சி போச்சி. உசந்த வூட்டு க்காரரு செஞ்ச காரியம்தான்.அய்யிரு வூட்டு அம்மாவுக்கும் எனக்கும் இது தெரியும் வேற யாருக்கும் தெரிய நியாயமில்லே.அவ்வளவுதான்’
‘எங்க அப்பா நாள்ளேந்து எனக்கு அய்யிரு பழக்கம்.அதான் என் மனசு கெடந்து அடிச்சிகுது’
‘ஏன் எங்க அம்மா குப்பு இந்த அய்யிர தூக்கி வளத்து ஆளாக்குன அந்த சேதி சொல்லும் நானும் வெனவு தெரிஞ்ச நாளா மளிகை கடையில அய்யிரு கிட்ட பொடைக்க கூட்ட சுத்தம் பண்ணுற வேல செய்யுறன்’
‘ நானு பாத்து இருக்குறேன்’
‘அய்யிரு ஏன் மளிகைக்கடை வச்சாருன்னா அது ஒரு வெஷயம்.கோவிலு படைச்சவருதான் அய்யிரு. கோவில்ல பெருமாளு சாமி மேல கெடந்த பவுன் நகையைகானும்னுட்டு வெசாரணை வந்துது. அய்யிரு கிட்ட கேக்ககூட்டாத கேள்வி எல்லாம் போலிசு கேட்டு இருக்காங்க. அண்ணைக்கே எனக்கு இந்த வேல தோதுபடாது. மளிகை கடையில பொட்ணம் கட்டி பொழப்பு நடத்துறேன்னு நொண்டி செட்டியார் கிட்ட வேலைக்கு வந்தவருதான்.நொண்டி செட்டியார் கிட்ட வேலை செஞ்சிதான் புள்ளவள படிக்கவச்சாரு.அதுவ ஆளாச்சி மேல மேல வந்துது.நொண்டி செட்டிக்கும் புள்ள இல்ல. அப்படியே கடையை குடுத்துட்டு பூட்டாரு. இந்த கடை வெடம் அய்யிரு வெடம்தான் கடை மட்டும்தான் நொண்டி செட்டியார் வச்சிருந்தாரு’

‘ நானும் இந்த சேதி சொல்லுறன்னா ஆளு யாரு எவுருன்னு நூறு தரம் பாத்துட்டுதானே சொல்லுறன்.டப்பு டிப்புன்னு இந்த சேதி சொல்லிட முடியுமா’ என்றாள்.
‘ இப்ப அய்யரூட்டு ஜனம் எங்க அய்யிரு பொணம் பெரிய ஆஸ்பத்திரிக்குதான போயிருக்கு’
‘அந்த கதய கேட்டா இன்னும் கேபுலம்.இந்த ஊர்ல அய்யிருக்கு யாரு இருக்குறா. அய்யிரு மொவனும்மவுளும் சிங்கபூர்ல இருக்குதோ இல்ல இன்னும் எங்கயோதான் போயி இருக்குதோ. காசு வேணும்னுட்டு கைலாசம் பாக்க போனதுதானே அய்யிருட்டு அம்மா தான் இங்க இருக்கு. உசந்த வூட்டு ஆசாமி நேரா இங்க வந்த்து. ‘ என்ன பிரச்சனையோ ஏது பிரச்சனையோ யாரு கண்டா பட்டப்பகல்ல உம் புருசனை யாரோ வெட்டிபோட்டுட்டு போயிட்டானுவ இனி நீ இந்த வூட்டுல தனியா கெடந்து என்னா செய்யுவ வா என் வூட்ட பக்கம் நானு கொற சேதியும் பாத்துகுறேன்னு’ சொல்லி அத கூட்டிகினு உசந்த வூட்டு பெரிய கையி அவுரு வூட்டுக்கே போயிருக்கு.அங்க அந்த அம்மா இந்த கதியில போவுலாமா இல்ல கூடாதா இதுகேள்வி . கூடாதுன்னே வச்சிக அது என்னா செய்யும். நட்ட நடு தெருவுல புருஷன தல வெட்டி போட்டு கதை நாறி கெடக்கு. எந்த சனம் அந்த அம்மாவ தாம் வூட்டுகு இட்டுகினு போவும். பாப்பாரசாதியில கேக்குணுமா யாரும் செத்துட்டா ஒரு பொணம் உழுந்துட்டா திரு திருன்னு திருட்டு முழி முழிப்பானுவளாச்சே. அவன் அவன் சாவாம இந்த பூமியிலேயே சாசுவதமா கெடக்கப்போற மாதிரிதான எப்பவுமே அவுனுவ நடக்கறதும் போவறதும் இதுங்கறது எல்லாம்’
‘இப்ப நீ எங்க இந்த பக்கமா வந்த ஆயா’
‘செம்மாதான் வந்தன் பாழும் மனம் கேக்குல.நேத்து எங்கிட்ட பேசிகினு இருந்தாரு அய்யிரு.எல்லா கதயும் சொல்லுவாரு. அந்த அம்மாவும் சொல்லும்.புள்ளிவ அசலூர் மண்ணுக்கு சம்பாரிக்க போயிடுச்சி.பொணத்த அயிசு பொட்டில வச்சி அதுவ வந்த பொற அடக்கம் பண்ணுவானுவன்னு நெனைக்கிறேன்’
அந்த பூட்டிக்கிடந்த அய்யர் மளிகைக்கடைக்கு முன்னால் ஒரு போலிசு வான் நின்றது.இரண்டு போலிசுகாரர்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கினார்கள். உள்ளே நாய் ஒன்று கம்பீரமாய் எட்டிப்பார்த்தது. பின் இறங்கி இங்கும் அங்கும் முகர்ந்து வன்டிக்குள் ஏறிக்கொண்டது.
அவர்கள் கொண்டு வந்த அலுமினியப் பெட்டியைத்திறந்து கடைக்கு சாணிக்கலரில் சீல் வைத்தார்கள்.
‘நீங்க ரெண்டு பேரும் யாரு’
‘அய்யா நானு அய்யிரு கடையில ஜாமானுவ பொடச்சி நோம்பி குடுக்குற பொம்பளை’
அந்த க்கிழவி சொன்னாள்.’நீனு’ என்றார் ஒரு போலிசுகாரர் அவனிடம்.
‘அய்யா நானு கை வண்டி இழுக்குறவன் அய்யிருக்கு மளிகை ஜாமானுவ கொண்டாருவன் போவேன் வருவேன்’
‘ ஒண்ணும் புண்ணியம் இல்லாத கேசுவ. வேற பொழப்பு இருந்தா பாருங்க போங்க போங்க’
என்றார் இதுவரை அமைதியாயிருந்த வேறு போலிசுகாரர்.
‘கதை எப்பிடி போவுது இப்ப’
‘ அய்யிரு கடைய வூட்ட வாங்க அச்சாரம் கொடுத்த ஆளு சென்னையில இருக்கான் அவன தூக்கியார போலிசு ஆளு போயிருக்கு. அவன கொண்டு வந்துட்டு இப்புறம் கதை ஆரம்பிக்கணும். அய்யிரு சனம் சிங்கப்பூர்ல இருந்து வந்துதுன்னா அய்யிரு பொணத்தை ஒப்படைச்சி அசமடக்கி புடலாம் பெறகு வுட்ட கொற முடிக்கணும்’
ஒரு போலிசுக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார்.
மறு நாள் காலை விமானம் பிடித்து அய்ய்ர் மகன் மகள் குடும்பங்கள் வந்தன. உறவினர் ஏதோ நான்கைந்து பேருக்கு எட்டிப்பார்த்தனர்..உசந்த வீட்டுக்காரர் தயவில்தான் அய்யரின் இறுதிப்பயணம் இத்யாதிகள் நிகழ்ந்தது.அய்யரைப்போலவே இருந்த அய்யரின் மகன் கீழ்பாச்சி கட்டி க்கொண்டான்.சவரம் செய்துகொண்டான். அய்யருக்கு க்கொள்ளி வைத்து குடம் உடைத்து அன்றே பாலும் தெளித்துமுடித்தான்.பாக்கி காரியம் எல்லாம் சென்னையில் என்று முக்கியமானவர்கள் முடிவு செய்தார்கள்.தங்காயா உசந்த வீட்டார் வாசலிலேயே குத்திட்டு அமர்ந்திருந்தாள்.
அய்யர் வீட்டு சாவுக்கு காரியம் சடங்கு பாத்த அய்ய்ர் நல்ல வரும்படியோடு வேலை முடித்தார்.’ உனக்கு வெத்துல கித்துல வேணுமா’ என்றார் சடங்கு செய்த அய்யர். தங்காயா ஏனோ அந்த அய்யருக்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
அய்யர் வீட்டு அம்மா தனியாய் நின்றிருந்த தங்காயா கிழவியிடம் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு எடுத்துக்கொடுத்தாள்
‘வேணாம்மா எனக்கு ‘ என்றாள் தங்காயா.
சொல்லி வைத்தார் போல் பார வண்டி இழுக்கும் அவனும் வந்து தங்காயா அருகே நின்றான். அய்ய்ர் வீட்டு அம்மா தெரு வாசலுக்கு இறங்கி வந்தார் அவனிடம் அந்த ஐ நூறு ரூபாயை நீட்டி ‘ நீ வாங்கிக்கோ நாங்க எல்லாம் இப்ப மெட்றாசுக்கு கெளம்பறம்’ என்றாள்.
‘நா காசு வாங்க மாட்டேன்’ என்றான் கை வண்டிக்காரன்.
உசந்தவீட்டு பெரிய மனிதர் இல்லத்து வாசலில்தானே இத்தனையும் நடந்தது. அவரே அந்த நேரம் பார்த்து அவ்விடம் வந்தார்.’ அய்ய்ரே இந்தாரும் இந்த ஐ நூறை நீர் வச்சிகும்’ என்று சொல்லி அந்த அய்யர் வீட்டு அம்மா கைவசமிருந்த ஐ நூறு ரூப ாய் நோட்டை வாங்கினார். சாவு காரியம் பார்த்து முடித்த அந்த அய்யரிடம் ஒப்படைத்தார்.
‘நானும் தாம்பாளத்துல தட்சணையா உக்காரவச்சி குடுத்தாதான் வாங்கிகறது. இருந்தாலும் பெரியவா இப்ப கொடுக்கறேள். நான் வாங்க்கிகறேன்’ என்று சொல்லி காரியம் பார்க்க வந்த அந்த அய்ய்ர் பணத்தைவாங்கிக்கொண்டார்.
‘அய்ய்ரு வூட்டு அம்மா இனி மேலுக்கு சிங்கப்பூரு பூடும். மளிகைக்கடை பூட்டி சீல் வச்சிட்டாங்க. நாம பொழப்ப நாம பாக்குணும்’ சொல்லிய கை வண்டிக்காரன் புறப்பட்டான்.
‘ரவ வண்டியில் குந்திகறன் என்ன இசுத்துகினு போயி அந்த சன்னதி மொகனையில வுட்டுடு நடக்க முடியல ராசா’ என்றாள் தங்காயா.
அவள் ஏறி அமர வண்டி நகர்ந்தது.அந்த இருவரையும் பார்த்து பார்த்து கண்களைத்துடைத்துக்கொன்டிருந்தார் அய்ய்ர் வீட்டு அம்மா.
‘என்னா வொலக்ம்டா இது . சாமி பூதம் எல்லாம் செத்துதான் பூடுச்சி’ சொல்லிக்கொண்டே வண்டியில் பயணம் போனாள் தங்காயா.
———-

Series Navigationசாகசம்ஆச்சாள்புரம் [ வையவனின் குறுநாவல்களை முன்வைத்து ]
author

எஸ்ஸார்சி

Similar Posts

3 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    எஸ ஸார்சியின் ” வொலகம் ” படிச்சி முடிச்சேன். படிக்க படிக்க அந்த முண்டமான ஐயங்கார் பத்தி தெரிஞ்சிக்க ஆச அதிகமாச்சி. ரொம்ப நல்லா கதய சொல்லிபுட்டீங்க. நன்றிங்க ……அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உண்மையாக நிகழுது நிகழ்ச்சிகளை வைத்து, புதிய கோணத்தில் கதை எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

  3. Avatar
    என் செல்வராஜ் says:

    உலகமே இப்படித்தான். பெரிய மனிதர்கள் கொலை செய்தாலும் அந்த ஊரில் அவரை எதிர்த்து பேச ஆள் இருக்காது. ஒற்றை குடும்பமாக அவ்வூரில் வசிக்கும் அய்யர்க்கு கேள்வி கேட்க யாரும்
    இல்லை. கதை நன்றாக இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *