வேட்டை

author
0 minutes, 9 seconds Read
This entry is part 13 of 22 in the series 18 ஜூலை 2021

 

                                                                                                                                                                                                                                                 கடல்புத்திரன்

            பயிற்சி முகாமிலிருந்து வந்து ஒரு வருசம் கடந்து விட்டது . ஆனைக்கோட்டைத் தோழர்களைச் சந்திக்கும் ஆசை பெடியகளுக்கு  நிறைவேறவே இல்லை . ” போய்ப் பார்ப்போமா ? ” என்று  கேட்டுக் கொண்டே இருந்தார்கள்    வேறு ” அவன் எங்கே ? ; இவன் எங்கே ? ” …என்ற குரல்கள்  அங்காங்கே எழுந்து கொண்டிருந்தன . இங்கேயும் ,  ரஸ்யப்புரட்சியில் எழுந்த மாதிரி , மென்செவிக்குகள் எழுச்சியுற்று  இரண்டாகி பிரிந்து விடுமோ ? என்றிருந்தது . கேள்விகளை எழுப்புவது ,கண்டமாதிரி விமர்சனங்களை அள்ளிக் கொட்டுவது என‌ ….  ரசிகர் மன்றம் மாதிரி ஒவ்வொரு பகுதியும்  சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருந்தன‌ . ஒருபுறம் பயிற்சியால் வந்து குவிந்து கொண்டிருக்கும் தோழர்கள் . இந்திய அரசை விலத்தி ஆயுதங்களை வாங்கியதில் கோபமுற்று அத்தனையும் பறித்து விட்ட நிலைமை.  வாழ்வியலில் வறுமை எவ்வளவு மோசமோ …அதைப் போன்றதே  , . இயக்கத்திலும்  ஆயுத வறுமையும்  . ஒட்டு மொத்தத்தில் மார்க்சிச வழியில் பிரபலமாக விளங்கிய தாமரை பலவித சிக்கல்களில்  சிக்கித் தவித்தது

 

           வெளியில்  , சிதைவுறுகிறதை விட சிதைக்கப்படுகிறதோ…என்ற மாதிரியான  நிகழ்வுகள்  தான் அதிகம்   .  முதலில் , தளமாநாடு கூட்டப்படுவதென்றும் , பிறகு ,  , அதில் பெறப்படும் அறிக்கைகளையும் சீர்தூக்கி பார்த்து பின்தளமாநாடு கூட்டப்படும் என்ற விநோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாயின . ஏற்கனவே , அல்லி இயக்கத்தினுள்   காங்கிரஸ் என்று ஒரு அவை கூடி  செயலதிபர் தொட்டு பலர் மீள்தெரிவும் , ஆராய்வும் என புதுவிசயங்கள் தொடங்கி விட்டிருந்தன . இருந்தாலும் அதிலேயும் கொடலியால் கொத்தியது மாதிரிப் பிளவு  படும் போலத் தான் இருந்தது  .  அரசியலில் பல  படிகளைக் கடந்து கொண்டிருந்திருந்தாலும் இலக்கை …… அடைவோமா  ? என்பது  தெரியாது  .  கழுகு ,  திறமான இயக்கம் கிடையாது . அப்படி தன்னை நினைத்துக்  கொண்டு  சங்கரத்தையிலுள்ள முல்லைமுகாம் மீது அதிகாலையிலே தாக்குதலைத் தொடுத்து விட்டது .  தூக்கம் கலையாது வரிசையில் படுத்துக் கிடந்த தோழர்களுக்கு “என்ன நடந்தது ? ” எனத் தெரிய முதலே , எம் 16 சுடுகருவி சடசடவென சுட்டுத்தள்ளி விட ,  திறந்த  முளிகளை, மூடாமல்…. சுமார் 24 , 25 உடல்கள் இரத்தக்குளத்தில் கிடந்தன‌ .

 

           ‘ ஓரிரு மாதங்களுக்கு முதலே , முல்லைக்கு ‘போதாக்காலம்  தொடங்கி விட்டது . வெளியில் தெரிய‌ , அவர்களுடைய‌  தளத்திலிருந்த  இரு உபத்தலைவர்களுக்கிடையில் நிலவிய காழ்ப்புகள்  முற்றி பூசல்களாக‌    வெடித்திருந்தன .  அவ்வளவாகப் படித்திராத  . அச்சம் என்பதை அறியாத  . சாண்டில்யன் கதைகளில் வருகிற மாதிரி எதிரி சுடுகிற போதிலும் காயங்களுடனும் ஆக்ரோசமாக சிங்கம் போல சிலிர்த்து முன்னேறிச் சென்று  அச்சம் கொள்ள வைத்தவர்களும்  அதில் இருந்தனர் . பெருமளவு படையினரையும் , பெரிய நகரக்காவல் நிலயமொன்றையும் முழுமையாக ,வெற்றிகரமாக  தாக்கி அழித்த    இயக்கம்  .   அச்சமயங்களில் .  பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றி மக்களையும் புளாகிதமடையச் செய்திருந்தனர் . குட்டக்குட்டக் குனிபவரில்லை  ” தமிழர்கள் ” என புதிய வரலாற்றை  புதிதாகத்  தொடக்கி வைத்தவர்கள் .  வடமராட்சியில் ,ஒருமுறை  இவர்ககளுடன் எதேச்சையாக கழுகுத்தோழர் ஒருவர்   கொளுவப் போக  ” ஊருக்குள்ளே ஒருத்தருமே கால் வைக்கக் கூடாது ” என கர்ஜித்து ,  கழுகுக்கெதிராக ஊர்ரடங்குச்சட்டம் போட்டு அட்டகாசப்படுத்தி விட்டார்கள்  .   கழுகு , அதை வெகு அவமானமாகவேக் கருதியது .  ஆனால் காளி சொன்னால்  சொன்னது தான் . தாஸின் கண்ணிலிருந்து எவருமே தப்ப முடியாது , அவனது வலது கரமாக நின்றான் .  இன்னும் சிலத் தோழர்கள் துவாரபாலகர்கள். தோளை உயர்த்தி சிலிர்ப்பவ‌ர்கள் .

 

           ஒரு கிழமைக்கு மேலே கழுகார் அந்தப்பகுதிக்குள் கால் வைக்க‌வே முடியவில்லை . கழுகை மிஞ்சி செம்மொழியில் பேச வல்லவர்கள்   என்றால் பார்த்துக் கொள்ளுங்களன்   .  இவர்களும்   கழுகும்   அடிப்படையில்  ஒரே கும்பல்கள் தான் .  மறைவாகக்    கூட‌    மீறல்களை  செய்ய முடியாது . விளைவுகள் என்னவாகும் என்பதை  பச்சைக் குழந்தையும் சொல்லும் . முல்லையின் முறை இது !  . இனி , வர இருப்பது கழுகின் முறை . கழுகுத்தோழர் ஒருவர் இவ்வியக்கத்தினுள் உளவாளியாக சேர்ந்து இவர்களுக்கும் , இவர்களுக்கும் மற்றய அணிக்குமிடையில் கருத்து வேறுபாடுகளை வளர்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது . கரம்போர்ட்டில் காய்களை உள்ளே செலுத்தி சிதறடிப்பது போன்ற‌ இவ்வுளவுகளில்   எல்லாம்  கழுகு வல்லது  .  ஏன் எம்ஊர்வழியவே ” சிலர் கழுகரா ? ” எனத் தெரியாமலே  இருந்திருக்கிறார்கள்  . ஒருசமயம் வெளிப்பட்டு …..புருவங்களை  பெரிதாக‌வே  விரிய வைத்திருக்கிறார்கள்  . இதனாலே , போர் முடிந்த பிறகும் கூட  இலங்கையரசுக்கு கழுகுக்கு அஞ்சுகிறது .   பயம் நீங்கியபாடில்லை . ஜென்மத்தில் நீங்காது .” எம் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு துப்பாக்கிக்குண்டுகள் காத்திருக்கின்றன ” என்ற கவிதை வரி  அரசையும்   அசைத்து  இருக்கிறது .

 

           உலகம் , ஒருவித நாஜிசப் போக்கில்  தொடர்ந்து இருப்பதால் அரசியல் பிரச்சனைகள்    தீராமலே கிடக்கின்றன‌,    ஒரு கட்டத்திற்குப் பிறகு   ,  தனிப்பயங்கரவாதம்    எழுந்து தன் வேட்டையை ஆரம்பித்து விடும் என்றும் பயப்படுகிறது  .  ஒரு சிறு எதிர்ப்புப் போராட்டத்தில் கால் வைப்பதுடாகவே  , மழைக்கு முளைக்கிற காளான்கள் போல‌  எல்லாமே …..உயிர்ப் பெற்று விட   வல்ல‌ன .   ரஸ்யப்   ,   பிரெஞ்சு    ,  சீனப்  புரட்சிகள் எழுந்தது   ,  உலகில் ஜனநாயகம் மலர்ந்தது  எல்லாமே தொல்லைகள் கொடுத்தனால் தான்  .  சிங்களவர்களும்  ,  புத்தபிக்குகளும்    தம்மக்களை   வீணே நரபலி கொடுக்கப் போறார்கள்    என்பதை ஒரு காலத்திலே  புரியவேப் போகிறார்கள்  .

 

         கழுகிடம்  அதிகளவு பகைமையை ஏற்படுத்தி விட்ட்டாயிற்று  .  இத்தாக்குதல் நிகழ்வதற்கு முதலும்  சில  முல்லைத்தோழர்கள்   ,  முகாம்   செலவுகளுக்காக‌  சில தனியார் வீடுகளிலும் புகுந்து கொள்ளைகளும் அடித்திருக்கிறார்கள் .  அதனால் ,  அப்பகுதி  மக்கள் மத்தியில் அதிருப்தி அலைகள் எழும்பி கசப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன‌ . முரட்டுக் குணம் கொண்டிராத   பல்கலைக்கழகத்தில் படித்தவர்களைக் கணிசமாகக் கொண்ட ஒருவித மென்மைக்  கொண்ட    மென்செவிக்குணம் கொண்டவர்களும்  முல்லையில்   இருந்தார்கள்  . அது பிழை ? ,  இது பிழை ? , இந்த நடைமுறை , பல படிமுறைகளிலேச் செல்ல வேண்டும்…  என  ஜனநாயகத்தை   கட்டிப் பிடித்துக்  கொண்டு  தீவிரமாக பேசி , அரசைப் போலவே போராட்டத்தையும் வடிவமைக்க விரும்பினார்கள் . அனைத்து இயக்கங்களிலுமே  இவை  நிலவின‌   தான் . பொதுவாக  நாடுகளில்  நிலவுற …. போன்ற கொன்ஸ்சவேட்டி . லிபரல்  பிரிவுகள் குணாவம்சம் . மொட்டாகி, பூவாகி , பிஞ்சாகி , காயாகி , கனியாகிறது போன்ற   பருவப்படிகளைக்     கடந்து  ,  ஒரு முக்கிய‌ புள்ளியை எய்திக் கொண்டிருந்தன‌ . அந்த  திருப்புப்புள்ளியில் , இரண்டாக உடைந்து விடும் போலவும்  பயம் காட்டிக் கொண்டிருந்தன‌ . இந்த உடைவுகள் அவசியமா , இல்லையா ? என்பதெல்லாம் தெரியவில்லை . ஆனால் , கலகம் பிறந்தால் தானே வழிகள் திறக்கின்றன‌ . இத்திசையில்   தான் நகர்கின்றன  என்பதையும் கவனத்தில் கொள்ளவே  வேண்டும் .

 

           முல்லைப்பெருந்தலைவர் ,  பழைய‌  தொடக்ககாலப் போராளிகளில் ஒருவர் .  எல்லோருமே  ஆரம்பத்தில்  , ஓரமைப்பாக இருந்து , பிரிந்து தனிதனி இயக்கங்களாக கட்டிக்  கொண்டு  வளர்ந்தவர்கள் . அவர்களுக்கிடையில்  பிரிகிற போது ஏற்பட்ட பகைமைகள் நீறுபூத்தே கிடந்தன . முல்லையின்  தலைவர் ,  யாழ் மருத்துவமனையில் , இருக்கிற விவாத  மண்டபத்திற்கு ” பேசித் தீர்க்கலாம் ” என இரு பகுதிகளிற்கும் வரும்படி அழைதிருந்தார்   . முதல் அணியினர்   நுழைகிற போது ,  மற்றைய அணியினர்  ஒளிந்து நின்று சுட்டுக் கொன்று விட் டார்கள்   . அதில்,  காளி , தாஸ் போன்ற  பெரும் தலைகள் எல்லாம்  உருண்டு விட்டன .  பூனைப் போல இருந்தவர்கள் புலி போலக் காரியத்தைச் செய்து விட்டிருக்கிறது . இனியென்ன‌ ,  கதைகள்  சோடிக்கப்பட்டு  றெட்டைக் கட்டிப் பறக்கும் தானே . ” பெரும் தலைவரும் இ தற்கு உடந்தை ” .  ஒருத்தலைவரால் மட்டுமே  ஒரு  இயக்கம் இயங்குவதில்லை  .  ஆனால்  , தமிழர்களில்  கூட இருப்பவர்கள் , குழி   பறிப்பதிலும்  ராஜாக்ககளாச்சே ” . பெரியவரின் அழைப்பு , விவாத மண்டப்த் தெரிவு …எல்லாமே அவர் ‘பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக முடிவுகளை எட்டவே விரும்பி இருக்கிறார் ‘எனத்  தெரிகின்றது .  ராஜாக்களின் செயற்பாடுகள் ,….எல்லாத்  தலைவர்களுக்கும் எதிராகவே அம்புகளை கொண்டு போய் நிறுத்தி விட்டன .  

 பதிவுகளை எழுதுறவர்கள் ,  வைக்கிற   பட்டிமன்றங்களிலும்     ,  புனைகளிலும் ” உண்மைகள் ”  துப்பரவாக‌  வெளிப்படாமலும்   போய் விடலாம் . இலங்கைப்பெளத்ததில் ,  சிங்களமே பேசாத‌  ஒரு  கதாநாயகன்  ,இப்ப ,  ” சிங்களக்கதாநாயக ” னாக உலா வருகிறான்  .  மகாபாரதம் ,இராமாயணம் ,பைபிள் , குரான் …போன்றவையும் கூட‌  புனிதர்களால் வெட்டிக் கொட்டி செதுக்கப்பட்ட  புதிய‌  சிற்பங்கள் தான் .  வரலாற்றில் இருந்தவர்கள்    உண்மையில் எப்படி இருந்தார்கள் என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம் .    . மனித வழியில் வேறு பிறந்தவர்கள் கிடையாது  என   கதை விடப்படுகின்றன ,  ஆவிவழியிலே  பிறந்தவர்கள் என  ( காதில்  )   நிரைய‌  பூச்சூடல்கள் .

 

இயக்கங்களில்  பதவிகளுக்கு போட்டியிடுகிற மென்செவிக்குகளைத் தவிர்க்க , அவர்கள் பதவிகளிக்குப்  போட்டி இடுவதே வெளியில் தெரியாமல் கிடக்கும் , உள்ளே இருக்கிற சக தோழர்களிற்கும் கூட‌   முதியோர் கல்வித்திட்ட  மறைப்பினூடாக‌ கல்வியை கற்பித்து, அறிவைக் கூட்டி படித்த வட்டமாக்குவது     அவசியமானது எனச் சொல்லப்படுகிறது . தொண்டனாக இருந்து வருபவருக்கே ஒரு அமைப்பின் சிதைவுறா அவசியமும்  அதிகமாகப் புரியும் . அடிப்படையில் சாதரண வாழ்வியலில் உள்ள விஞ்ஞானமும் இந்த விஞ்ஞானமும் ஒன்று தான்   .  ( இங்கே  இந்த‌ கம்யூன் அமைப்பை கிராமாப்புற‌ங்களிலிருந்த  ஜி .எஸ் அமைப்புக்கு  ஒப்பிடலாம் என்றேப் படுகிறது ) . இவ்வமைப்பைகளை  விருத்தியடையச் செய்ய வேண்டும் .  நகரப்புறத்திலும் கூட்டுப்பண்ணைகளைச்  செயற்படுத்தும் மூலமாகச் செயல்படுகின்றன .  ( ஒவ்வொரு பிரிவுகளுமே )   ஒவ்வொரு  ஜி. எஸ் யாய்   விளங்கின்றன  .

 

         கழுகு , எதிர்ப்பார்த்துக் காத்திருந்த‌   மிகப் பெரிய‌  வெடிப்பு  முல்லையில் நிகழ்ந்துஇ விட்டது .   அவர்களுடைய வேலையை உள்ளே இருப்பவர்களே முடித்து விட்டார்கள் .  நேரத்தை வீணாக்காமல்  சாதகமாக்கும்  காரியத்தில் உடனேயே இறங்கி விட்டார்கள்  .   அடிமைப்பெண் ”  சினிமா வெளியான போது கூனல் காட்டுவாசியாக நின்ற எம்.ஜி.ஆரின் பிரமாண்டமான கட்டவுட்டை மிஞ்சுமளவிற்கு ,  உடனேயே  , ” காளி , தாஸ் , மற்றும் இரு தோழர்களின்  உருவப்படங்கள்  (கட்டவுட்கள் ) ” அஞ்சலிகள் ” என்ற‌ பெரிய கொட்டை எழுத்துகளுடன் பருத்தித்துறைச்சந்தியில் வைத்து விட்டார்கள் .     ஓரிரு நாள்களில் அவற்றை  வரைவது ….  என்பது  முடியாதக் காரியம் . இரவும் பகலுமாக எத்தனைக் கலைஞர்கள் சிரமப்பட்டு வரைந்திருப்பார்களோ ?  .   ” நாம் வடமராட்சிக்காரர்கள் . எம்மோடு வந்து சேருங்கள் ” என்று  கழுகால் , அவ்வணியினர் வேறு திரைமறைவில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் .

 

         கழுகினுள் இருக்கும் ” வஞ்சம்  ” எல்லா  இயக்கத்தோழர்களும் அறிந்த ஒன்று . காட்டமாக நிற்கிற தோழர்கள் உள்வாங்கி  போடப்படுவார்கள் . எல்லாம் கச்சிதமாய் நடைபெறும்  .  கேள்வி  கேட்க ஆள் இருக்க மாட்டார்கள்.  எல்லா நாடுகளிலும் இருக்கிற புலனாய்வு அமைப்புகளிலும்  . சரணடைந்தவர்களை கொன்று புதைக்கிற‌  கைங்கரியம்  இருக்கின்றது  .  அங்கே இருந்து தான் இந்த பழக்கமே வருகின்றதோ ?  . சேர  ,  பிகு பண்ணினாலும் கூட   தேடி  இழுத்துக் கொண்டு போய் போடப்படுவார்கள் .   வெளியில் உள்ள‌  ‘தீ’நூந்து அணைந்து  போய் கிடக்கும் .  சிறுவர்களோ அவர்கள் பார்வையில் ஆபத்தற்றவர்களாகக் காணப்படுறவர்களோ  ,   ( ‘தில்’ காட்டாத  காட்டமற்றவர்கள் )  சேர்க்கப்பட்டாலும் கூட தாக்குதல்களின் போது  முன்னணியிற்கே அனுப்பப்படுவர்கள் . அது பொதுவில்  பரவாய்யில்லை தான் .

 

           முல்லைத்தோழர்களே   யாழில்  ,ஆயுதங்களுடன் முதல்  வந்திறங்கியத் தோழர்கள் .  பூமாலையாக வந்த இந்தியனாமியின் வரவு  , வரைகோடாகி  ஏறி ,  பிறகு  இறங்கியது போல  இவர்களும் இப்பொழுது  இந்தச் சம்பவத்தோட‌   மதிப்பிழந்து  போய் விட்டடார்கள் .  தலைவிதிகள் எப்படி எல்லாம்   மாறி விடுகின்றன‌  .  எங்கேயுமே வெற்றி பெற்றவர்களே கதாநாயகர்கள் .  இனி, இவர்களுக்கு எங்குமே பாதுகாப்புகள்   இருக்கப் போவதில்லை   ,   இவர்களுடனே இயங்க வேண்டியது  தான்  ஒரே வழி . அடிமை வாழ்வு வாழ இன்னும் நினைக்கலாமா ?  அடிமையாய் உழல்வதும்  , மறவர்களாய் இருப்பதும்  , கொடியவர்களாய் இருப்பதும் கூட எம் கையில் இருப்பதில்லையா ? , விதியின் கையில் தான் அவையும் கிடக்கின்றனவா ? 

 

         இரைக்கு   காத்திருந்த‌ கழுகு , முல்லை மீது பாய்ந்தே விட்டது . இருந்தாலும் உள்ளுக்குக்கே சிறு பயமும் கழுகிற்கு இருக்கவே செய்தது . வெளியில் , முல்லையைப் போல அல்லி இயக்கமும் ஆயுதப்பலம் மிக்கதாக ஒன்றாக‌ நிற்கிறது . அதனால் ,   முதலில்  உள்ளே , ” ” முல்லைத் தவிர , வேற எந்த இயக்கத்தோழரிடமும் சிறு கொளுவலுக்கு கூடப் போய் விட வேண்டாம் ” என்ற கடுமையான‌ உத்தரவை பிறப்பித்திருந்தது.  தாமரையும் , நந்துவுமே ஆயுத வறுமையில் கிடந்தவை . செத்த பாம்பு நிலை  .  இருந்தாலும் பயிற்சி பெற்ற தோழர்கள் . முல்லைத் தோழர்கள் சுதாரித்துக் கொள்ள அவர்கள்  ஒருவேளை  உதவி விடலாம் . நுணலும் தன் வாய்யாலே கெடுவது  போல கழுகிலிருந்தவர் மூலமாகவே  செய்திகளும் வெளியில்  கசிந்து வந்து கொண்டிருந்தன . இந்த தாக்குதல்கள் மக்களையும் ஒரேயடியாய்   குழப்பத்தில் ஆழ்த்தி விட்டன .  இத்தனை பெரிதாக நடக்கும் என ஒருத்தரும் கூட‌  எதிர்பார்த்திருக்கவில்லை தான் . ஓரிரு மணித்துளிகளிலே , யாழ்ப்பாணத்தில்  300 க்கு மேற்பட்ட  தோழர்கள் இறந்து விட்டார்கள் .  பெரும்பாலான தோழர்கள் , இலங்கைப்படை தான் சுட்டது என நினைத்திருப்பார்கள் . அரசு,  யூலைக்கலவரத்தை நடத்தியது போலவே , இதற்கும் ,  முதலே , பல நாள்கள்   திட்டமிட்டு பயிற்சியும் எடுத்திருப்பார்களோ  .

 

              காந்திய சமூக சேவை இயக்கத்தின் ஸ்தாபகரில் ஒருவரான டேவிட் ஐய்யா , நேர்காணல்  ஒன்றிலே  ஒன்றைக் குறிப்பிடுகிறார் . ” தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ,ஈழத்தமிழர் மீது அதிக அக்கறை உள்ளவர் ; அவர்க்கு நம்பிக்கை ஏற்பட்டது என்றால் தன் சக்திக்கும் மீறி உதவுகிறவர் .கழுகுத் தலைவர் அவர் மனத்தைக் கவர்ந்திருக்கிறார் .தமிழர் நலன் என்பதால் ஆறு கோடி ரூபாவை கழுகிடம் கையளித்திருக்கிறார் . கழுகு அப்பணத்தைக் கொண்டு அமெரிக்க எ.கே 47 ஆன எம் 16 சுடுகருவிகளை கணிசமாக வாங்கின . அவற்றைக் கொண்டு கழுகு ,ஒரே ஒரு எதிரியான படையினருக்கெதிராக தாக்குதலைச் செய்யும் என எதிர் பார்த்தால் , அது பழம்பகையை நெஞ்சில் கொண்டு முல்லையின் மீது பாய்ந்து விட்டது ” . இந்த கருவிகளைப்பற்றி ஒன்றையும் கூறுவார்கள் .வெளியில் , ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமாதானப்படைனர் மட்டுமே பாவிக்கின்றனர் . கழுகு ,… கறுப்புச் சந்தையில் வாங்கியதாகக் கூறியது . அங்கே எல்லாம் இவ்வாயுதம் விற்கப்படுவதில்லை . குளிர்கால யுத்தம் முடிந்ததால் அவ்கானிஸ்தான் ஆயுதக்குழுவினர் விற்க வாங்கினார்கள் என்கிறார்கள் .ஆனால் அமெரிக்கா,  அவ்வாயுதத்தை எந்த ஆயுதக்குழுக்களுக்கும் வழங்கியதாகத் தெரியவில்லை . பலத்த நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தில் அமெரிக்காவே கறுப்புச்சந்தையை கண்துடைப்பாக வைத்து பரிவர்த்தனை செய்வதாகச் சொல்கிறார்கள் . முதலாம் , இரண்டாம் உலகப் போர்களில் ….எல்லாம் பெருமளவு லாபம் சம்பாதித்த நாடு அமெரிக்கா . அமெரிக்காவுக்கு இடதுசாரிக்குழுக்கள் அலர்ஜியானவை . கீரீஸில் ,அவர்களுடைய அரசாங்கத்தைக் கொண்டே ஒடுக்கியது . ஈழத்தமிழரிலும் முல்லை இயக்கம் பார்வைக்கு அப்படியான ஒன்றில்லை எனத் தெரிந்தாலும் “ஈழத்தமிழகத்திற்கான அரசியல் அமைப்பை ” எழுதியது . அதன் தலைவர்களே , நீதிமன்றத்தில் ” பிடல் காஸ்ரோ ” போலவே பேசி பகிரங்கப்படுத்தியவர்கள் .

 

            சுடுகருவி வழங்கலில் முக்கிய‌  நிபந்தனையாக முல்லையை அடிப்பது இருந்திருக்க வேண்டும் . ராஜிவ்காந்திக் கொலையும் கூட ஒரு  நிபந்தனையாய்  இருந்திருக்கலாம் . இன்று வரையிலும் கூட கழுகும் ,  இவர்களிற்கு இந்தியா ,’ சாம் 7 ‘என்கிற விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்றையே வழங்கி இருந்தது . ஆனால் , இவர்களிடம் இவ் ஏவுகணைகள் பல இருந்தன . இலங்கை இராணுவமே விமானச் சேவையையும் செய்து கொண்டிருந்தது . அதைக் கொண்டு கழுகு தவறுதலாக ஒருமுறை யாழ் மக்களை ஏற்றி வந்த ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டார்கள். ஜீவனின் பக்கத்து வீட்டு மாமி ஒருவரும் அவ்விமானத்தில்….இருந்து  இறந்து விட்டார் .  கழுகும் ஜெ.வி.பி ஐப் போல இந்திய எதிர்ப்புக் கொள்கையைகொண்டது தான் . அமெரிக்கா , பெரும் ஆயுதங்களில் தனது இலத்திரனியல்  கருவிகளால் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய  உலோகத்தையுமே பதித்தே  தயாரிப்பதாகக் கூறுகிறார்கள் . பிறகு , கழுகை அடையாளம் கண்டு அழிக்கும்  போருக்கும் இலகுவாக இருக்கும் . இரண்டுபக்கமும் வியாபாரம் செய்கிற நரிமூளை கொண்ட நாடு அது .

 

          அதிக உள்பிரச்சனைகளில் அமிழ்ந்து கொண்டிருக்கிற மற்றைய இயக்கங்கள்,  வெளிசதிவலைகளை அறிந்து  விழிப்பாக இருக்கவும் வாய்ப்பில்லை தான் . ” நிதானம் ”  இயல்பு வாழ்க்கைக்கும் மட்டுமில்லை  இயக்கங்களுக்கும் அத்தியாவசியமானதொன்று . ஆனால் இரண்டிலுமே  அவை   இருப்பதில்லையே . சங்கரத்தை முகாமிலே வேட்டையை நடத்திய கழுகு வாகனம் , அயலில் இருந்த சந்தியிலே …காத்திருந்தது . தாமரைத் தோழர்களும் மக்களுமே அதிகளவில் மொய்த்துக் கொண்டிருந்தார்கள் . முகாம் வாசலிலே நின்ற சிறுவர்களில் ஒருத்தன் அராலியைச் சேர்ந்தவன் . அவனை காலில் சுட்டார்கள் .ஆகக்குட்டியன் என்ற இரக்கத்தில் நிகழ்ந்ததாக இருக்கலாம் . அவனை விட்டு விட்டு உள்ளே புகுந்து படுத்திருந்த தோழர்கள் மீது ” சடச் சட” என சுட்டுத்தள்ளப்பட்டிருந்தது . ஒரு தோழரே , சுட்டிருக்கலாம் . எம் 16 கருவியினுள் உள்ள குண்டுகள் அனைத்துமே 24 பேர்களின் உயிரையும் குடித்திருக்கலாம் . எ.கே 47 ஐ அடியாக வைத்து தயாரிக்கப்பட்ட எம் 16 இல் , குண்டு துளை போட்டுச் செல்லாமல் சிதலறுடன் வெடிப்பதாக‌ வடிவமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் . அதில்  உயிர் தப்புற வாய்ப்புகள் குறைவு . சீனா , இதை வைத்தே ரி . 51   , ரி . 52 என கருவிகளைத் தயாரித்தவை .இலங்கைப்படையினரிடம் இருப்பவை . படையினரிடம்  ஒரு எம். 16 கூட‌ கிடையவே கிடையாது . இன்றும் அமெரிக்கா தன் ஆயுதக்குழுக்களிடம் இந்த சுடுகருவியை கொடுப்பதுமில்லை,விற்பதுமில்லை.  காயப்பட்ட சிறுவனை , வட்டு தாமரைத்தோழர்கள் சைக்கிளில் ஏற்றி மருத்துவர் ஒருவரிடம் எடுத்துச் சென்றிருந்தார்கள் .

 

          தமிழக முதல்வரான கருணாநிதி உடனே இந்தியாவிலிருந்த கழுகுத் தலைவரிடம் ‘தளத்திலிருக்கும் முல்லைத் தலைவரை கொல்லாமல்’  பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் . தலைவர் உறுதி அளித்திருந்தார் .கழுகின் வஞ்சமும் ,வக்கிரமும் அவருக்கு தெரிய நியாமில்லை . முல்லைத் தலைவர் , அவரின் ஜென்ம விரோதி ! . கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா? என்னே ! .

 

          அராலித்தோழர் ஒருவர் வந்து சேதி சொல்ல ,ஜீவன் , சைக்கிளில் ஏறி. வழியில் இன்னொரு தோழருக்குத் தெரிவிக்க , அவன் பயிற்சிமுகாம் தோழர்களை படையாக‌க் கூட்டி வர சைக்கிள்கள்  பறந்தன . முகாமிற்கு அயலிலிருந்த கழுகுக்குழுவை எதிர் கொண்டார்கள். அவர்களை போக வேண்டாம் ” என மறித்தது . இவர்கள் கேளாது போகவே  ” குந்துங்கடா ” என ஒருத்தன் கத்தினான் . சைக்கிள்களை அப்படியே தெருவிலே சரித்து விட்டு குந்தினார்கள் .  “சைக்கிள்களை ஓரமாக வைத்து விட்டு குந்துங்கடா ” என்று இன்னொருத்தன் சொன்னான் . எழும்பி அப்படியே குந்தினார்கள் . அரைமணி நேரம் கடந்திருக்கும் , பதற்றத்துடன் நின்ற அவர்கள் சனம் மேலும் கூட  அச்சந்தியை விட்டு வேற சந்திக்கு மாறியது . இவர்கள் எழும்பி பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு முன்னால் இருந்த முகாமிற்கு வந்தார்கள் . ஜீவனுக்கு ஒரு பலவீனம் இருந்தது . காயப்பட்டவரை இரத்தக் காயங்களுடன் கண்டால் தலையைச் சுற்றிக் கொண்டு வரும் . நிலத்தில் குந்த வேண்டும் .இல்லாவிட்டால் சரிந்து விழுந்து விடுவான் . ” கடவுளே ,அப்படி ஏதும் நிகழக் கூடாது ” என உள்ளுக்குள் வேண்டிக் கொண்டான் . பயிற்சிமுகாமில் பித்தம் நிறைய வெளியேறி விட்டதால் அப்படி ஏதும் நடக்கவில்லை .

 

        இரத்தத்தில் மிதப்பது போல கிடக்கும் ஒவ்வொரு உடலையும் பார்த்து, பார்த்து , கண்கள் குளமாக‌ ,குளமாக கிடந்த இரத்தத்தில் காலையும் பிரட்டிக் கொண்டு போனார்கள் .  தள்ளும் கூட்டத்துடன் கவலையுடன் திரும்ப , திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தார்கள் . பக்கத்தில் நின்றவன் ” டே , இவன் சங்கர்லால்டா ! ” என்று ஒரு உடலை வியப்புடன் பார்த்தான் . அந்தப்பெயரை ஜிவனுடன் கூடப் படித்த பால்ய நண்பன்  , முல்லைத்தோழர்:  பவி  , அடிக்கடி சொல்றதைக் கேட்டிருக்கிறான் . இயக்கம் ஊருக்குத் தெரிய வர முதலே சங்கர்லால் , காரைநகரிலிருந்து வருகிற விளையாட்டுக்குழு ஆட்டக்காரனாக பலருக்குத் தெரிந்தவன் . அச்சமயம் ஜீவன் பாடசாலைகளில் நடைபெறுகிற விளையாட்டுக்களை மட்டும் பார்க்கிறவனாக இருந்ததால் எ.ஜி.எ மட்டத்தில் விளையாடுகிற இவனைப் பார்த்திருக்கவில்லை . அறிந்திருக்கவில்லை . பவி ,அந்த ஆட்டங்களில் விளையாடுறவன் . அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது .  பள்ளிக்கூட அதிபர் ஒருவரின் அருந்தவப் புதல்வன் அவன் ! .  முல்லையிலே , பவி சேர்ந்த பிறகு , ” டேய், சங்கர்லால் எங்க முகாமிலே தான்  இருக்கின்றான்ரா ” என்றான் .ஜீவன் தாமரையிலே இருந்தான் . இயக்கம் மாறுபட்டிருந்தாலும் கூட‌ , பவி , எப்பவும் போல நண்பன் தான் .

 

         சுட்டவன் கூட அவனுடன் நிறையத் தடவைகள் விளையாடியவன் . கொலைக்கருவி கையில் ஏறிய பிறகு அதன் கலாச்சாரத்தையே பின்பற்ற வேண்டியதாகி விடுகிறது .அந்த முகாமில் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் கிழக்கு மாகாணப் பெடியள் . அவனுக்கு சங்கரை சுட விருப்பமில்லை. ” கட்டளைக்கு கீழ்படிவதைத் தவிர வேற வழி இல்லையடா ” என்று நண்பர்களுடன் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறான் . யாழில் அதிகளவு கிழக்குப் பெடியள் விழ , மக்கள் ” யார் பெத்த பிள்ளைகளோ “என பலமாகக் கரையத் தொடங்கினார்கள் . பலத்த விமர்சனங்கள் எழுந்தன‌ . வவுனியா , கிழக்கு மாகாண கழுகுப்பிரதேசத்தலைவர்கள் ” எம்மால் , முல்லை முகாம் மீது தாக்குதல் தொடுக்க‌ முடியாது ” என  ஓரேயடியாய் மறுத்து விட்டார்கள் . பிறகு யாழிலிருந்து அங்கே தாக்குதல் புரிய இரண்டு குழுக்கள் சென்றன . இத்தாக்குதல்களால் கழுகினுள்ளே அதிருப்திகள் காளான்களாக முளைத்து   வளரத்  தொடங்கி விட்டன . அவையே பிறகு கசப்பாகி , பிளவுற்று வெடிக்க காரணங்களாகின .

 

         சுமார் ஒரு மணி நேரம் அப்படிப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள் . காரைநகரிலிருந்து சிலர் பஸ் டிப்போவிலிருந்து ஒரு சி.ரி.பி பஸ்ஸை எடுத்து முகாமிற்கு  ஓட்டிக் கொண்டு    வந்து  இறங்கினார்கள் . அதிபர் மேல் ஈர்க்கப்பட்டு காரைநகரிலிருந்து வந்தர்ககள்

சங்கர்லாலுக்காகத் தான் நடந்திருக்கிறது . ” இவர்களை நாம் ஏற்றிக் கொண்டு போய் காரைநகரில்  கிரியைகள் செய்து எரிக்கப் போகிறோம் . கொஞ்சம் விலகி நில்லுங்கள் ” என்று கூறினார்கள் . எல்லாரும் ஒதுங்கி நிற்க இருவர் இருவராக ஒவ்வொரு உடல்களையும் தூக்கிக் கொண்டு போய் பஸ்ஸில் ஏற்றினார்கள் .   ” 83 ம் ஆண்டு ,படையினர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொன்ற உடல்களை தூக்கி , தூக்கி வீசி வாகனத்துள் எறிந்தார்கள் ” என யூலை நினைவுகளை ஞானேந்திரன் ( ராஜன் ) விலாவாரியாக எழுதியது ஜீவனுக்கு அப்ப ஞாபகம்  வந்தது . அந்த தொடர் சிறந்த ஒரு ஆவணம் . புத்தக உருவில் வர வேண்டியதொன்று . வருவதும் அவசியம் . அனைத்து உடல்களையும் ஏற்றிக் கொண்டார்கள் . பஸ் புறப்பட ,    அவர்களும் கனத்த மனத்துடன் திரும்பினார்கள் . காரைநகருக்குக் கொண்டுச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டன . வடமராட்சி  ,  வலிகாமம்  ,  தென்மராட்சியிலே    முல்லைத்தோழர்கள் மோசமாகக் கொல்லப்பட்டிருந்தார்கள்

 

         இவர்களைப் போல , மக்களே அங்கேயும்  இறந்த உடல்களை பக்குவமாக எடுத்து எளிமையான கிரியைகளுடன் எரித்தார்கள்  .  கழுகினரை  ” அநாகரிகம்  பிடித்தவர்கள்  ”  என்றே வயிறெரியத் திட்டினார்கள் . வழியில்  பவி  , இது  எதுவுமே தெரியாது  சைக்கிளில் உழக்கி வந்து கொண்டிருந்தான்  . ” டேய் , எங்கடா போறாய் ? ” என்று  ஜீவன்  மறித்துக் கேட்டான் . ” முகாமிற்கு ” என்று பதிலளிக்க அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது . அவனுக்கு ஒருத் தோழர் செய்தி அறிந்து வந்து கூறியதால் அவன் தோழர்களைத் திரட்டிக் கொண்டு வந்திருந்தான் . பவிக்கு யாருமே கூறி இருக்கவில்லை .வழமை போல கிளம்பி வருகிறான் . இவர்கள் கூற‌ விக்கித்துப் போய் விட்டான் .சங்கர்லால் நெருங்கிய நண்பன் .நேற்று கூட அவனுடன் அலம்பியவன்…இறந்து விட்டான் .  இனிமேல் இல்லை . நம்புறது அவனுக்கு கஸ்டமாகவே இருந்தது . மிகப்பெரிய இழப்பு . ” தெய்வமே என்னைக் கை விட்டு விட்டாயே . கடைசியாக அவனைப் பார்க்கக் கூட கொடுப்பினை இல்லையே ! .அவன் வாய் விட்டு அழுது விடுவான் போல இருந்தது . வாழ்வியலில் எதையுமே தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும் . ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் . அவனுக்கு இனி , இயக்கம் என்று ஓடுறதும் ஓய்ந்து போய் விட்டது . விடுதலைப் பற்றியக் கனவுகள் இப்படி ஒரு நொடியிலே ஒரேயடியாய் ஆவியாகிப் போய் விடுமா ? . நம்பவும் முடியாமல் கிடக்கின்றன . பவியை முடிவுச் சுவரருகே கொண்டு போய் நிறுத்தி விட்டது .ஜீவனுக்கு தற்காலிகமான ஒரு தளர்வு கிடக்கின்றது . அவ்வளவு தான் . நாளை , அவனுக்கும் ஒரு தடுப்புச் சுவர் கிடக்கிறது  . ஜீவனின் தங்கச்சி விமலா பத்திரிகை ஒன்றில் வந்த கவிதை ஒன்றை எடுத்துக் காட்டி இருந்தாள் .அதில் , ” நம் எல்லோருக்கும் ஒரு துப்பாக்கிக் குண்டு காத்திருக்கிறது ” என்ற வரி இடம் பெற்றிருந்தது . அந்த குண்டு எந்தப்பக்கத்திலிருந்தும் வரலாம் . எவ்வளவு அநாகரீகமான நாட்டில் பிறந்திருக்கிறோம் .

 

         பவிக்கு எங்கே போறது எனத் தெரியவில்லை .  கழுகு , அவனை வீடு தேடி வந்து சுடுமா ? அவன் மனம் பயங்கரமாக அடித்துக் கொண்டது . ” டேய் , நீ கணேசின் வீட்டிற்குப் போ . உன் வீட்டிலே தங்காதே ” என்று ஜீவன் யோசனைக் கூறினான் . கணேஸ் , அவனுடைய சித்தப்பாவின் மகன் . அவர்களோடு கூடப் படித்தவன் .கழுகு , முல்லையை தடை செய்திருக்கிறதா ? தொடர்ந்தும் தாக்கப் போகிறதா ? எதுவுமே தெரியவில்லை . பவி சொன்னால் சித்தப்பாவுக்கு புரியுமா  எனத் தெரியவில்லை . இயக்கங்கள் இப்படி அடித்துக் கொள்ளும் என நம்புறதுக்கு அவருக்கும் செய்திகள் வந்தடைய வேண்டும் . அதுவரையில் எவருக்குமே ஒரு அறுப்பு கூட புரியப் போவதில்லை .  அராலியில் , அவன் சைக்கிளை ரதன் வீட்டிற்குத் திருப்பினான் . ரதனும் கூடப் படித்தவன் தான் . அவன் வீட்டிலே மறைவாக நிற்பதே தற்போதைக்கு நல்லது என அவனுக்குப்பட்டது . ரதனிடம் சொல்ல அவன் அம்மா ” தம்பி ,நீ இவன்ர அறையிலே இரு அப்பா . உனக்கு தண்ணி ,சாப்பாட்டை இவள் கொண்டு வருவாள் ” என குட்டித் தங்கச்சி சித்திராவைக் காட்டினாள் .” ஏய் பெட்டைகளே வெளியில் மூச்சு விடாதங்கடி ” என மகள்மார்களிடம் எச்சரித்தாள் . ” இயற்கைத் தேவைகளுக்குப் போற போது இந்த சாரித்துண்டைப் போத்திக் கொண்டு போய் வா ” என பழைய சாரித்துண்டைக் கொடுத்தார் , பார்ப்பவர்கள் புரிந்து கொள்ல மாட்டார்கள் ” முன்மூளை தன்பாட்டிலே வேலை செய்கிறது . ” ரதன் , நீ வெளியில் திரிந்து நிலமையைப் பார்த்து வந்து சொல்லு ” என்றாள் . ” அராலியில் , அவனோட திரிந்த பல தோழர்கள் செத்து விட்டார்கள்  ” என்பதிலிருந்து அபாயத்தை அவர் நொடியில் உணர்ந்து கொண்டு விட்டார் .

 

        எல்லாத் தாய்யுக்கும் பெடியள் அவர் மகன் தான் .இலங்கை அரசுக்கும் , கழுகுக்கும் தான் அவர்களைக் கொல்ல வருகிற பாம்புகள் ; ஐந்துகள் . கெட்டவர்கள் , உடனே திருந்தி விடவாப் போகிறார்கள்  ? . கழுகு , தளத்திலிருந்த முல்லைத் தலைவரையும் சுட்டுக் கொன்று விட்டது . கருணாநிதிக்கும் ” மன்னிக்கவும் , என் கட்டளைப் போய்ச் சேர முதலே கொன்று விட்டார்கள் ” என பதிலளித்திருக்கிறார் .இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று உறுத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருக்கும் .தலைவரின் கொலைக்குப் பிறகு கழுகுக்கு பயம் போய் விட்டது . பையித்தியம் பிடிக்கிறளவுக்கு அடி விழும் என்பது தான் வாழ்வியலாச்சே ! . தீவுப்பகுதியில் கழுகு கால் வைக்க முடியாமல் முல்லையின் பெருந்தோழர்களின் ஆயுத அணி ஒன்று நின்றது . அங்கிருந்து ஒரு கிருஸ்தவப் பாதிரியார் , யாழ்ப்பகுதிக்கு வந்து  கழுகுத் தலைவர்களைச் சந்தித்தார் . ” அங்கே வந்து சுடுபட்டுக் கொள்ள வேண்டாம் ” என்று கேட்டுக் கொண்டார் . ” அவர்கள் அப்படியே 2 , 3  நாள்களில் இந்தியாவிற்குப் போய் விடச் சொல்லுங்கள்  ,  நுழையவில்லை ” என கழுகும் சம்மதித்தது . அப்படி அங்கே கொல்வது தவிர்க்கப்பட்டது .  சங்கரத்தைமுகாம் உடல்கள்  ,  

 

      கிருஸ்தவத் தந்தைமாரும் இனப் பிரச்சனைகளை அமைதி வழியில் தீர்க்க பல காலமாக நீதிக்குரலை எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் . கொடுத்த  வாக்கின்படி   கழுகு தீவுப்பகுதிக்குச் செல்லவில்லை . கழுகுகள் , கிருஸ்தவ ஸ்தாபனங்களுடனும் , வெளிநாட்டு அமைப்புகளுடன் சொல்கிற வாய்மொழிகளைக் காப்பாற்றுறவர்கள் . உதவுறவர்கள்.   அரசுக்கு எப்பவுமே  மாலைக்கண் . தமிழர் எல்லாருமே பயங்கரவாதிகள் . கிருஸ்தவத் தந்தைமார்  சிலரையும் கழுகிற்கு உதவியவர்கள் என ….சிறைகளில் அடைத்தும் வைத்திருந்தது .  நாட்டின் நகரக்காவலர்கள்,  பயங்கரவாதச்சட்டத்தின் கீழ்  மட்டுமே தமிழர்கள் மேல் வழக்குகளைப் பதிவு செய்கிற பிரகிருதிகள். தம் இனத்தவர் என்றால் எந்த பெரிய குற்றவாளிகளையும் சாதரணச் சட்டங்களின் கீழ் பதிவு ,ஆஜர் படுத்தல்கள்.   நீதிபதிகளுக்கு அதிகமாக வேலைகள் இருப்பதில்லை .வழக்குகள் உருப்பெற்று வரப் போவதில்லை என அவர்களுக்குத் தெரியும் . குஜியானப் பொழுதுகளைக் கழிக்க கிளம்பி விடுவார்கள் . அதனாலே, தமிழருக்கு ,கழுகின் பழிவாங்கும் போராட்டமும்(விடுதலைப்போராட்டம்) உவப்பானதாக‌ இருந்தன‌.  சகோதரச்சண்டைகள் , இரண்டாம் பட்சமாக‌ தட்டுப்பட்டுக் கொண்டே சென்றன.   கழுகு ,மற்றைய‌ இயக்கங்களுடனும் , அரசுடனும் சொல்லுறவை காற்றிலே பறந்து விடும் .இவர்களின் பேச்சில் நிலவுற அர்த்தங்களை மக்களை விட ,  சகஇயக்கங்களே வெகு நல்லாவே மொழிபெயர்க்க வல்லன‌ .

 

    ‘ முல்லையை அடித்தது கொஞ்சம் அதிகம் ‘ என உடனேயே புரிந்தது

 

     ” கிழக்கு மாகாணப்பெடியள்கள் பெருமளவில் இறந்து விட்டனர் ” என்ற மக்கள் அடிக்கடி விமர்சித்த விமர்சனங்கள் ….! , கழுகுக்கு பையித்தியம் பிடித்து விடும் போல இருந்தன . யாழ்ப்பெடியள் இறந்தாலும் கூட , கிழக்கை இழுத்து ….இப்படியேக் கதைத்தார்கள் . அப்பொழுதுகளில் , ஊர்ப்பிரச்சனைக் கதைக்க வந்த  பொது மக்களில் சிலர் , வாகனத்தரிப்பிடங்களில் வேலைக்கு நின்ற சிறுவர் சிலர் …கூட அகப்பட்டு இறந்து விட்டிருந்தார்கள் . கழுகுக்கு எங்கே பார்த்தாலும் விமர்சனங்கள் . ” தாக்குதல்கள் முடிந்து விட்டன ” என பெரிதாக‌ அறிவித்தது . அடுத்த நகர்வாக ” முல்லைத் தோழர்கள் , மக்களின் பிரதிநிதிகளுடன் வந்து சரணாகதி அடையலாம் ; ஆயுதங்கள் வைத்திருந்தால் கையளித்து விடவும் . உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் .பிறகு உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது  என உரத்த ஒலிப்பெருக்கிக் குழாய்களில் ஊர்வழியே அறிவித்து திரிந்தார்கள் . ஆயுதங்களைக் கையளிக்க முல்லைக்கு என்ன‌ விசரே ! , அது வேற இயக்கங்களிடம் கொடுக்குமே தவிர இவர்களிடம் கொடுக்க  மாட்டாது . அது கழுகுக்கும் தெரியும் . கிடைக்கும் என எதிர்பார்க்கவும் இல்லை . கழுகின் அறிவித்தலின் மறு அர்த்தம் ; குறிப்பிட்டக்காலம் தான் தரப்படுகின்றது .அதற்குள் மூட்டைக் கட்டி கொழும்பிற்காவது குறைந்த பட்சம் அனுப்பி விடவும் .இல்லா விட்டால் நாம் பொறுப்பில்லை ” . மண்டையில் போடப்படும் .   மக்களுக்கும் இதுவும் கொஞ்சம் புரியும் .  மற்றய இயக்கங்களின் பாஸையும் புரியும் . அராலி , காலில் காயப்பட்ட  முல்லைத் தோழரைக்  கழுகிடம் , பேச்சை நம்பி கூட்டிச் செல்வதா ? என பலமாக யோசித்தது . தம்பியவயள் நிம்மதியாகவும் தூங்கவும் வேண்டுமே ! .

 

       இலங்கையரசும் சரி இல்லை . இயக்கங்களின் தலையெழுத்தும் சரி இல்லை . இங்கே தலைவர்கள் , புதிதாக நடை போடுவதால் , அடிக்கடி தடம் மாறி விடுகிறார்கள் என்பதா..? சரியாக இல்லை . பழைய பகைமைகளை ,வஞ்சகங்களை , வக்கிரங்களை வேறு மண்டையில் காவிக்கொண்டிருந்தார்கள் .  சதா சிங்களவர்கள் , ஈழத்தமிழர்களை ” பிரிவினைவாதிகள் ‘என்கிறார்கள் .  ” தமிழர்களிற்கு தமிழகம் இருக்கிறது .  எமக்கு , இந்த‌ இலங்கையைத் தவிர வேற நாடு இல்லை ” என்று  புலம்புறார்கள் . மேலோட்டமாகப் பார்க்க ‘ நியாயம் ‘போலத் தோன்றும் . ஆனால் அது , முழுக்க , முழுக்க‌ இனவெறி ! . இவர்களின் கதாநாயகரும் சிங்களவரே இல்லை . கிருஸ்து முன் சாகசம் காட்டியவர் . அன்று சிங்களமொழியே பேசப்பட்டிருக்கவில்லை . 6 ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் அவர் பேசியது ” சிங்களம் ”  என எழுதப்படுகின்றது . அன்று, பாளிக்கலவையான ஒரு மொழியே நிலவியது . ” சிங்கம் ” கூட கலிங்க தேசத்திலே திரிந்த ஒரு காட்டு மிருகம் . இலங்கையில் சிங்கமே கிடையாது . இலங்கையின் தேசிய மிருகமும் கிடையாது . புலி கூட இலங்கையில் இருக்கிறதா ? என்பதே சந்தேகம் . இந்த நாட்டுக்கே சம்பந்தம் இல்லாத இரண்டு மிருகங்களை அடையாளமாக‌ வைத்துக் கொண்டு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .  அசோகனுடனான போரிலே தோற்ற பிறகு கலிங்கத்திலிருந்து இலங்கைக்கு அகதியாக வந்த மக்களே பாளிகலந்த மொழியையும் இலங்கைக்குக் கொண்டு வந்தவர்கள் . இலங்கை  , ஒரு காலத்தில்  தமிழ்நாட்டின் ஒரு பகுதி .  அன்றைய இயற்கச்சூழல் வேற   தமிழர் பரந்தே வேரூன்றி வாழ்ந்திருந்தார்கள் . இயற்கைப்பேரிடர்க்குப் பிறகு    ஒதுங்கி இருப் பகுதிகளில் செறிந்து வாழ்ந்தவர்களை  ” பிரிவினைவாதிகள் ” என்கிறார்கள் .  ” நமக்கு நாடு இல்லை ” என்கிறவர்களுக்கு கலிங்கம் ஒன்று இருந்ததே மறந்தே போய் விட்டது . எந்த மையப்புள்ளிகளிலிருந்து வரலாற்றை எழுதுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே முயல வேண்டும் .

 

          உலகத்தில் , சொந்த நாட்டிலே மக்கள் அல்லல்படுகிறது என்றது வளர்க்கதையாக இருக்கின்றன . பாலாஸ்தீனத்தில் , பாலாஸ்தீனர்கள் . இங்கே , நாம் ! ஜீவனின் சிந்தனை இப்படியே  இருந்தது .சங்கரத்தையில் காலில் காயப்பட்ட சிறுவனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் . அராலியைச் சேர்ந்த வேறுசில முல்லைத் தோழர்கள் படு புத்திசாலிகள் . கிழக்குப் பகுதியில் இருந்திருக்க வேன்டும் . அந்தப் பிரதேசத் தலைவர்கள் எடுத்த சாதகமான சூழலில் வியாபாரிகளாகவே மாறி விட்டார்கள் . அரிசி , பருப்பு ,வேறும் சில உணவுப்பொருட்களை  எப்படி காவிச் சென்றார்களோ …?  தெரியவில்லை , ஊர்வழியே விற்றுக் கொண்டு அராலிக்கு வந்து சேர்ந்தார்கள் . முல்லையின் அடையாள‌ம் சிறிதும் அவர்களிடமில்லை . கிராமத்தவர்களும் மூச்சு விடவில்லை . சிறிய ரக (மோட்டார் சைக்கிளுமில்லை,சைக்கிளுமில்லை என்ற சி.40 ஆகவே இருக்க வேண்டும் )வாகனத்தை வாங்கி பின்னுக்கு பெட்டி கட்டி மீன் வாங்கி விற்கத் தொடங்கி விட்டார்கள் . இங்கேயும்  வியாபாரிகள் தான் . அல்லது மக்களிடம் ஏச்சுக்களை வாங்கிக் கொண்டதால் கழுகு , கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கலாம் . பெருந்தலைவரைத் தானே கொன்று விட்டார்களே .

 

           ஒருபக்கம் சரணாகதி நாடகம் நடந்து கொண்டிருந்தது . தோழர்கள் வியாபாரத்திலேயே நின்றார்கள் .ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் என்பதால் ஜீவனுக்கு எல்லாரையுமே வெகு நல்லாய்த் தெரியும் . வட்டுக்கோட்டையைச் சேர்ந்த முல்லைத்தோழர் ஆயுத அணியில் திரிந்தவர் . அவர் சரணாகதி அடைந்தவுடனேயே கல்யாணம் கட்டி குடும்ப,ஆகி விட்டார் . தப்பானக் கணக்கு போட்டு விட்டார் .6 மாசத்திற்குப் பிறகு கழுகு , அவரை விசாரிக்கிறேன் என திரும்ப‌ அழைத்துக் கொண்டுப் போய் சுட்டுக் கொல்லப் போகிறது . இப்படி  கழுகு , மன்னிப்பு வழங்கி இருந்தவர்களை வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில்  சுட்டுக் கொன்ற தொகை ஏரளாம் .

 

            பதற்றமான சூழ்நிலையிலும் மற்றைய இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டே இருந்தன . ஜீவன் எ.ஜி.எ முகாமிற்கு போய் வந்து கொண்டுதானிருந்தான் . அராலியிலிருந்து மானிப்பாய்க்கு குடிபெயர்ந்திருந்த குடும்பஸ்தரான தோழர் மாணிக்கம்,  ஜீவனுக்கு  ரகசியமாக   ஒரு செய்தியை  அனுப்பினான்  . பாண்டியோடு தனியப் போயே எடுப்பதாகத் திட்டம் . பயிற்சிமுகாமிலிருந்து வந்ததிலிருந்து பெடியள்களிடம் ஒரு துடிதுடிப்பு காணப்பட்டிருந்தது .ஏதோ சவாலை சந்திக்கக் காத்திருப்பது போல துரு , துருவெனவே இருக்கிறார்கள் .பாண்டி மற்றைய தோழர்களுக்கும் சிறிது தெரியப்படுத்தி விட  ” அப்படியே , ஆனைக்கோட்டைத் தோழர்களையும் பார்த்து விட்டு வருவோமா ? ” என்று தோழர்கள்  ஆவலோடு கேட்டார்கள் .   அவர்கள் முகத்தைப் பார்த்தான் .   பாவமாக இருந்தது  .  ” சரி ” என்று திட்டத்தை மாற்றினான் . ‘ நாளைக்காலையிலே வாங்கடா ” என்றுச் சொல்ல எட்டு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டார்கள் .

 

          ஆனைக்கோட்டைத் தோழர்கள் அவர்களின் ஆதர்சத் தோழர்கள் ;   ‘ குருஜிகள் ‘ என்று கூடக் கூறலாம் . சாகப்போறவனிடம் ” அதைச் சாப்பிடாதே ; இதைச் சாப்பிடாதே ” என்று கூறுவது தவறு .ஒரு தடவை மனம் நிறைஞ்சு சாப்பிட்டால் , சொர்க்கத்தில் போய் ஏப்பமும் விடுவான் . அவர்களை “போய்ச் சந்திப்போமா ? ” எனக் கேட்டுக் கொண்டிருந்ததில் இடி விழுந்தது போல முல்லைவேட்டை நடந்து விட்டது . இருந்தாலும் ஜீவன் , மாணிக்கத்திடம்  போகத் தீர்மானித்த போது ” அப்படியே …அவர்களையும் சந்தித்து வருவோமா ? ” எனக் கேட்டார்கள். கழுகிட பிழையான செயலோட விடுதலைப் போராட்டம் ஒன்றும் முடிந்து போய் விடப் போவதில்லை . தொடரவே செய்யும் .  பெடியள்களுக்கு விடுதலைப் பற்றிய அனுபவமும் வேண்டும் தான் . . அவர்களின் ஆசையும் நிறைவேறட்டுமே ! , என‌  சம்மதித்தான் . புறப்பட்டார்கள் .

 

            ஆச்சரியத்தில் இருந்தார்கள் .இருக்காதா ?  மூத்தவர் ” குட்டி நாய்களுக்கும், சின்னவர்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது…தான் ! ” என உள்ளூர நினைத்துச் சிரித்துக் கொண்டார்  அதேசமயம்  மூத்தவரால், அராலித்தோழர்களின் துணிச்சலையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .  ” எப்படி ,நீங்கள் சகோதரக் கொளுவலை எதிர் கொள்ளவில்லையா ? ” கேட்டார் .  முல்லைக்காம்கள் அடித்து சிதறுபட்டுக் கொண்டிருந்தன . இன்னமும் ஒய்ந்திருக்கவில்லை  தான் . ” இங்கே , என் தம்பிகளில் ஒருத்தன்   கழுகின் பொறுப்பாளர் , அதனாலே  நாம‌ கழுகின் மரியாதைக்குரியக் குடும்பம் . பகைமையை விலத்தி ….ஒரு சலூட்டும் கிடைக்கிறது . மற்றபடி எல்லாமே  அப்படியே ! . கொழும்புக்குப் போய் விடுவதே உசிதம் என்றே….யோசித்துக் கொண்டிருக்கிறோம்  . போய் விடச் சொல்லி கழுகுகளும் சொல்கிறார்கள் .   இந்தச் சிக்கலைக் கையாளுவதில் ….எங்களுக்குள் விமர்சனங்களும் எழுந்து கொண்டே இருக்கின்றன .” என்றார் .  ஜீவன் ” உங்களைப் பார்க்க வேண்டும் என்பது ..பெடியள்களின் நீண்டகாலக் கனவு . போவம், போவம் என்று சொல்லி, சொல்லியே ஒரு வருசம் ஓடிப் போய் விட்டது . ஏற்கனவே ,  சுதந்திரமற்ற நாட்டிலே வாழ்கிறோம்  . இப்படி , புதிது புதிதாய்  அடிக்கிறதைப் பார்த்தால், நாம சந்திக்கக் கூட முடியாமலே போய் விடும் போல இருக்கிறது . இண்டைக்கு இவர்கள் அடிபடுகிறார்கள் .நாளைக்கு , எங்கடயள்ளும் …அடிப்பார்கள் . இப்படி புயல் .இடி .சுனாமி…எல்லாமே மாறி , மாறி வந்து கொண்டே இருக்கப் போகிறது . அச்சமும் கூட நம்மளுக்கு எதிரி தான் .   நாளை நமக்கு   சுதந்திரமும் கிடைக்க வேண்டும் . வெளியில் மட்டுமில்லை , உள்ளேயும் நாம் ராஜ நடையே போட வேண்டும் ” என்றான் . ”  நீ சொல்லுறதும் சரி தான் .  நம்ம இயக்கப் பாட்டு தான் ஞாபகம் வருகிறது  .  எங்கே இருந்தாலும் எம் கனவுகளை நாம் தொலைத்து விடக் கூடாது  . வாங்கடா உள்ளே . வீட்டைக்  கண்டுபிடிப்பதில் ஒன்றும் தில்லுமுல்லுப் படவில்லையா ? ”  என்று இயல்பிற்கு வந்து  சிரித்தார் . 

 

            ” வாங்கடா ” என வர வேற்றார் . மற்றத்தோழர்களும் கூடவே நின்றிருந்தார்கள் .  அவர்கள் முகமும் மகிழ்ச்சியால் விகாசித்தன .  மூத்தவர் ,தாய்யிடம் …அறிமுகப்படுத்தினார் . அவர் ஆசிரியை .முகத்தைப் பார்த்தே நாடி பார்த்து விடுப‌வர் . ” தம்பி மரவள்ளி ஒன்றை இழுத்துப் போட்டு ,தோட்டத்தைச் சுற்றிக் காண்பி . நான் புட்டும் , கறியும் வைத்து விடுவேன் ” என்றார் . வீட்டிலிருந்து அண்மித்தே மரவள்ளி சோலையாக விரிந்து கிடந்தது .  ஒருத்தர் சென்று மண்வெட்டியைக் கொண்டு வர , வாங்கி நிலத்தை சிறிது கொத்தினார் . ” டேய் ,கை கொடுங்கடா ” என்று கூப்பிட பெடியளும் கை வைக்க , ஒரு இழுவலிலே கொத்தான கிழங்குடன் வெளிய வந்து விட்டது . மண்வெட்டியாலே கிழங்குகளை வேறாக்கி அருகிலிருந்த தண்ணீர்க்குழாய்யில் மண்ணைக் கழுவிப் போட்டு ,விளைந்த கிழங்குகளை எடுத்துக் கொண்டு தாய்யிடம் கொண்டு போய்க் கொடுத்தார்கள் . கூட இருந்த சகோதரிகள் ” யாரடா இந்த வானரகங்கள் ” என்று பகிடியாய்க் கேட்டார்கள் . ” பயிற்சிமுகாமிற்கு வந்தவர்கள் ; வீட்டிற்கு வர ஆசைப்பட்டார்கள் ; வந்து விட்டார்கள் ” என்று  திருக்குரலில் பதிலளித்தான் .  பெடியள்களிற்கும்  ” இவ சுமி , அவ விஜயா…, நம்ம தோழிகள் ” என அவனும் பகிடி விட்டான் . வீட்டாக்களில் மகிழ்ச்சி விகாசித்தால்  எல்லாமே சந்தோசமாகவே இருக்கும் .

 

            ” நல்ல பெரிய காணி . எத்தனை ஏக்கர் இருக்கும் ? “என ஜீவன் கேட்க ” ஒன்றரை ஏக்கர் ” என மூத்தவர் பதிலளித்தார் . மூன்று வளவுகளை வேலிகள் எடுத்து ஒன்றாக்கியதில் எங்களுக்கு நிறைய நிலம்  தோட்டம் செய்ய கிடைத்தது ” என்றார் . இளைய தோழர் ஒருவரைக் காட்டி ” இவன் சித்தப்பாவின் மகன் , தம்பி ,  அப்பாவும்,  சித்தப்பாவும் ,  கொழும்புக்கு வேலைக்குப் போய் விடுவார்கள் ,  அவன் மாமிட  ; அப்பாட தங்கச்சிட மகன் , மச்சான் ”  என்றவன் ,  அதனாலே , முதலேயே சித்தப்பாட வேலியை எடுத்து தானிருந்தது . மாமா , சீமேந்து தொழிற்சாலையில் வேலை பார்த்தவர் ; தூசியாலே பாதிக்கப்பட்டு இறந்த பிறகே , அப்பா ,மாமிட வேலியையும் எடுத்து விட்டார் . மாமி , வீட்டிலேயே , …. உள் அயலவர்களுக்கான கடை போட்டிருக்கிறார் . எங்கட தேவைக்கு எடுத்துக் கொண்டு விளையிறதை மாமிக்கே கொடுக்கிறோம் ” என விலாவாரியாகக் கூறினான் .  ஆனால் , சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக …. தனித்தனி வீடுகளில் வசிக்கிறார்கள் . எல்லாருக்கும் ஐந்து , ஐந்து , நாலு …என பிள்ளைப்பட்டாளம் . இவர்கள் மூவரும் நண்பர்கள் போல ஒன்றாகவே திரிகிறார்கள் . மூத்தவர் தான் வழிகாட்டி .அவர் புதிய கல்வித்திட்டத்தில் விவசாயத்தைப் படித்திருந்தார். அந்த அறிவைக் கொண்டு விவசாயம் நடைபெறுகின்றது .

 

               பொதுவாக வடக்கு விவசாயிகளுக்கே இயற்கைமுறையில்  செய்யத் தெரியாது . அசேதன முறையிலே உரங்கள் வாங்கியே செய்கிறவர்கள் . விவசாயப்பாடத்திலும் அப்படியே சொல்லிக் கொடுக்கப்பட்டது .   சீனக்கல்வித்திட்டம் என்கிறார்கள் . அவர்களுக்கும் இயற்கை விவசாயமுறை தெரியாதா? . உரம் பாவிக்காது செய்யபடுறதைக் கேள்விப்பட்டே இருக்கிறார்கள். ஏன் அயலிலேயே வித்துவான் வாத்தியார் இயற்கைமுறையில் நெல்க்காணியில் தோட்டத்தை சோலையாக்கி வைத்திருக்கிறார். பாட திட்டத்தில்  ,  இயற்கை பற்றி எந்த தகவலும் இல்லை . இந்தியாவில் தான் இயற்கை விவசாயம் வாழ்ந்து கொண்டிருந்தது . ஆனால் , அன்று கணனி , யூ டியூப் எல்லாம் அறிவதற்கு இருக்கவில்லை . நம்ம கதாநாயகனும் உரத்தை வாங்கியும் , வித்துவானின் மகன் கனகு நண்பன் , அவன் மூலமாக அதை , இதை தாட்டும் ஏதோ ஒரு மாதிரியாகச் செய்கிறார்கள் . ஆனால் , ஓரே பயிரையே நெடுகச் செய்யக் கூடாது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது . அதை மனதில் வைத்திருக்கிறார்கள் .

 

               இல‌ங்கை , இனவெறி பிடித்த ஒரு நாடு . எதை, எதை எல்லாம் தடைப்படுத்துவார்கள் ; எதை பறித்தெடுப்பார்கள் எனத் தெரியாது . உரம் கிடைப்பதில்  தடை ப்படுத்தி விட்டது  . யூரியாவை வடக்கு , கிழக்குக்கு அனுப்புறதையே முற்றாக‌வே  நிறுத்தி விட்டது . ” யூரியாவோடு சக்கை என்ற இந்திய மீனவர்கள் பாவிக்கிற கெற்பு மருந்தையும் சேர்த்து , படையினர் பயன்படுத்துற வெடிமருந்துக்கு நிகரான ஆற்றலுள்ள மருந்தைத் தயாரித்து பெடியள்கள் பயன்படுத்தினார்கள் ” என்று முற்றாகத் தடை செய்தும் விட்டது . யூரியா , விவசாயத்துக்கு பிரதான உரம் . மற்றைய உரங்கள் ஓரளவுக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன . யூரியாவுக்குப் பதிலாக இலைகுலைகளை தாழ்க்கிறது என வேற வழிகளை நாட வேண்டி இருந்தன . இந்தியர்கள் பாவிக்கிற இயற்கை முறைகள் பற்றி  தேடத் தொடங்கினார்கள் . இயற்கை விவசாயம் அப்படித் தான் மெல்ல , மெல்ல இலங்கைக்கு திரும்பி  வருகின்றது . இவர்களுக்கு அந்த விவசாயம் சரிவர‌ தெரியாதலால் விலை கூடிய உரங்களைப் பெற்றுத் தான் செய்ய வேண்டி இருக்கின்றன . அடுத்தது நீர் இறைக்கிற எரிபொருள் ஏறிக் கொண்டே போகிற ஒன்று . பெரியவர் அதில்  புத்திசாலியாய் இருந்ததால் , அவர் , சிறுவயதிலிருந்தே சைக்கிளைக் கழற்றிக் கொட்டிப் பூட்டுறது போல நீர்ப்பம்பியையும் பூட்டக் கூடியவர் . பழைய மின்சார மோட்டர் ஒன்றை சங்கானையில் வாங்கி உலோக ஒட்டுனரைக் கொண்டு மின்சாரபம்பியாக மாற்றி அமைத்து விட்டார் . லயன்ஸ் கழகம் வைத்த “வீட்டு மின் இணைப்பு ” கோர்ஸையும் எடுத்து , தானே இரண்டு பேஸ் மின்சார ஃபியூஸ் பலகையும் தயாரித்து …., நீரை தடங்கலில்லாது  இறைத்து ஓரளவு செழிப்பாகச் ….செய்து வருகிறார்கள் . பெருமளவு இடத்திற்கு மரவள்ளி வைத்திருந்தார்கள் ; கத்தரி ,வெண்டி , பூசணி ,பயித்தை…என சில பாத்திகள் . வெங்காயம் , மிளகாய்  என பிறிப்பான பாத்திகள் . மூன்று கிணறுகள் . ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருக்கின்றன . மின்பம்பியை உருட்டி, உருட்டிச் சென்று… பாவிக்க முடியாது  .  மூத்தவரின் கிணருடன் தான் பம்பிக்கு கொட்டில்  இருக்கிறது . மற்றையவற்றில் துலா இறைப்பு தான் .  பெட்டைகளூக்கும் பாதுகாப்பாக மின்சாரமோட்டரைப் இயக்க ஓரளவு பழக்கி இருக்கிறார்கள் . இவர்கள் மூவரும் திடீரென இயக்கத்தில் பயிற்சி எடுக்கப் போனதில் குடும்பங்கள் ஒரேயடியாய் குழம்பிப் போயின‌ . ஏற்பட்ட‌ வெற்றிடத்தில் பெண்பிள்ளைகளும் சேர்ந்து விவசாயத்தைக் கவனிக்க நேரிட்டது . மற்றைய …பெடியள்கள் துலா மிதித்து இறைத்து …..அதில் கொஞ்சம் தேறியும் விட்டார்கள்  என்றே சொல்ல வேண்டும் .  அதுவும்  நன்மை தான் . பெற்றோர்களான பெரிசுகள்  , வரிந்து கட்டிக் கொண்டு இத்தோழர்களை கொழும்புக்கு எடுக்கிற முயற்சியில்  இறங்கி இருக்கின்றனர் .

 

              ஜீவன் தான் நிருபர் போல எல்லாவற்றையுமே பேசியே கறந்து விட்டான் . தோழர்களும் அறிந்து கொண்டார்கள் .

 

             மாமிக்கு தோழருக்கு அடுத்ததாக‌ இரண்டு பெட்டைகளும் இரண்டு பெடியள்களும் . தோழர் தான் மூத்தவர் . மற்ற எல்லாமே குட்டிகள் . மாமி வீட்டில் பெரிய பானையில் நீர் வைத்து , கிளாஸ் போதியதாயிருக்க‌வில்லை . மற்ற வீடுகளுக்கு ஓடிப் போய் எடுத்துக் கொண்டு வர வைத்து …எல்லாருக்கும் தேனீர் ஊற்றினார் . பிள்ளைகள் எடுத்து , எடுத்து  கொடுத்தார்கள் . ” அம்மா , இனி இங்கே தேத்தண்ணிக்கடையும் வைக்கலாம் ” என்று  ஒரு வால் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள் . அடுத்த வீட்டுக்கும் போய் பாத்திகளைப் பார்த்து விட்டு வந்தார்கள் . மூன்று தோழர்களும் கூட இருக்க அன்னதானம் போல வாழை இலையில் சாப்பாடு போட்டார்கள் . சுடச் சுட புட்டும், கறியும்  , உருளைக்கிழங்கும் வெங்காயம் நிரையப் போட்ட வறை போன்ற பொறியலும் செய்திருந்தார்கள் . அந்த மாதிரி இருந்தன . ஆனைக் கோட்டையில் முல்லைப் பெடியள் இறந்தது குறைவு . சாப்பிட்ட பிறகும் இரண்டு, மூன்று மணி நேரம் பலதையும் கதைத்து , நல்ல வெய்யில் கொளுத்தி எறிந்தது, அவர்கள் தந்த இளஞீரையும் குடித்து விட்டு விடைப் பெற்றார்கள் .  . அராலித்தோழர்களுக்கு வயிறும் குளிர்ந்தது  மனமும் நிறைந்தது . இதை பரம்பரைக்கும்  மறக்க மாட்டார்கள் .

 

              மாலை  மூன்று மணி போல விடைப்பெற்று க் கொண்டு கிளம்பினார்கள் . நவாலிப்பக்கமே மாணிக்கம் இருந்தான் .  அது மானிப்பாய்குள் வருகிறதா , தெரியவில்லை ? .எல்லையில் இருக்கலாம் .மாணிக்கம் , மற்றவர்களை திண்ணையில் இருத்தி விட்டு  ஜீவனையும் , பாண்டியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் பின்னால் சென்றான் .

 

             முந்தி ,காவல்களில் நிற்கிற  போது ,கிரனைற்றை கழற்றி , எப்பவும் ஃபியூஸை கழற்றி எடுத்து பொக்கற்றில் வைத்திருக்கும்படி பலதடவைகள் விளக்கி கையில் கொடுத்து இருக்கிறான். அதனால் அவனுக்கு கிரனைற் பற்றி கொஞ்சம் தெரியும் .அவன் வீட்டுக்கு அண்மையில் இருந்த வயற்புறம் இருந்த பூஜைகள் பெரிதாக நடைபெறாத கோவில்ப்பக்கம் புள்ளைகளுடன் திரிகிற போது கிளிப்பைக் கழற்றாமல் எறியப்பட்ட இவற்றைக் கண்டு எடுத்திருக்கிறான் . அதையே பாண்டி மூலம் ஜீவனுக்கு அறிவிக்க , “பயப்படாதே , பத்திரமாக வைத்திரு , வந்து எடுக்கிறேன் “என்று ஜீவன் கூறி இருந்தான் .அவன் கழற்றியபடி தந்ததை எடுத்து சிறிய துணி ஒன்றையும் வாங்கி சுற்றி பொலித்தீன் பையிலும் , மற்றதை காகிதத்தில் சுற்றியபடி சந்திரனிடம் “பத்திரமாக கால்ச்சட்டைப் பையில் வைத்திரு ” எனவும் கொடுத்தான் .

 

           அவனுக்கு எல்லாருக்கும் தேனீர் போட்டுக் கொடுப்பது முடியாதக் காரியம் . இலங்கை அரசே   . வெளிநாட்டில் வேப்ப இலைகளை , முருங்கை இலைகளை எடுத்து வறுத்து ,  பைகளில் அடைத்து  தேயிலையாய்  விற்பனை செய்கிறது .  அது பாராட்ட வேண்டிய விசயம் . அவற்றைக் கொண்டு   சீனி போடாத பச்சைத்தேனீராகத் தயாரித்துக் குடிக்கிறார்கள் . அவற்றை நாம் குடித்தாலும் புத்துணர்வைப் பெறலாம் என்பதை எல்லாம் அறியாதவர்களாகவே  இருக்கிறோம் .  இருந்தோம் . சீனர்களே ,  ‘ பசியற்ற ஆரோக்கிய வாழ்வை வாழலாம் ‘ என்பதை உலகிகிற்கு அதிகமாக  அறிமுகப்படுத்துறவர்களாக  இருக்கிறார்கள் .  இன்று வடக்கு , கிழக்கில் எல்லாம் …அவர்களின் கால்கள் பதிகின்றன . செல்லுகள் விழுந்து வெடிக்கின்ற பயங்கரகாலத்திலும் யப்பானைச் சேர்ந்த பல தேரர்களின் கால்கள்  யாழ்ப்பாணத்தில்  பதிந்தே இருந்தன . உவப்பாக இருக்கிறதோ , இல்லையோ…நாம் இவர்களிடமிருந்தும் பல நல்ல விசயங்களைக் கற்றுக் கொள்ளப் பழக‌  வேண்டும் .  மாணிக்கத்திற்கு சீன அறிவு இருந்திருந்தால் அன்று பச்சைத் தேனீரை தாராளமாக வழங்கி இருப்பான் .  நாமெல்லாம்  குடித்திருப்போம் .  அது ஆனைக்கோட்டையரின் உபசரிப்புக்கு சற்றும் குறைந்ததாக இருந்திராது .  எவருமே  கையில்  பணமில்லை என்று வருத்தபடத் தேவையில்லை . எல்லாருக்கும் மனமிருக்க வேண்டும் .  மனம் இருந்தால் நிச்சியம் வழியும் பிறக்கும் .   வேலையும் குறைந்து பிழைப்பு குழம்பி மாணிக்கத்தின் வாழ்வுப் படகும் தடுமாறிக் கொண்டிருந்தது என்னவோ உண்மை தான்  . அன்றாடம் மேசன் வேலைக்கு போய் வந்து கொண்டிருந்த அனைவரின் நிலையுமே அப்படித்தானிருந்தன . ஆனைக்கோட்டைத் தோழர்களைப் போல இவன் வீட்டைச் சுற்றியும் நிலம்   இருக்கிறது . மரவள்ளித் தடிகளை ஊன்றியிருந்தாலும் பசியாற்ற கிழங்குகளாக தள்ளிக் கொண்டு நிற்கும் . ஜீவன் “மரவள்ளிக்கட்டைகளை வைக்கப் பார் . கிடைக்காட்டிச் சொல் .எங்கடப் பெடியள்கள் இருக்கிறார்கள் . அவர்களிடமிருந்து  பெற்றுத் தருவார்கள் ” என்றான் . ”  இப்ப தானே வந்திருக்கிறேன் . வைக்கப் பார்க்கிறேன்  ” என்றான் . கேட்கச் சந்தோசமாக இருந்தது . மாணிக்கத்திற்கு விவசாய அறிவு இல்லை . அது மறைப்புள்ளி அல்ல . நாம இதுவரையில் செய்யாமல் இருந்திருக்கலாம் . ஆனால் “முடியும் “என்று சொல்கிற போது எம் தலையும் நிமிர்ந்து விடுகின்றது .

 

             அந்த அவசரத்தில் ” கிட்ட ஏதும் கழுகிட‌  முகாம் ஏதும் இருக்கிறதா ? எனக் கேட்க மறந்து போனான்.  வெளியேறி ஆறுதலாக உழக்கி வர ஒரு ஒழுங்கைகளின் சந்தியில் சில கழுகுப் பெடியள்கள் நிற்பது தெரிந்தன . காவல் நிற்கிறார்கள்.  ‘சே ! ,வேற ஒழுங்கையாலே போய் இருக்க வேண்டும். மாட்டுப்படப் போறோமே ‘ என நினைக்கிற போதே சூழ்ந்து விட்டார்கள் . ” தடுத்து நிறுத்தி விட்டார்கள். எங்கே போய் விட்டு வாரீர்கள் ? ” சந்தேகத்துடன் கேட்டார்கள் . ” எங்க‌  ஊர்க்காரர்  இங்கே  , புதிதாய் குடி வந்திருக்கிறார். பார்த்து விட்டு வாரோம்  ”  என்று பதிலளித்தான் . அவர்களில் ஒருத்தன் துணிவாய் ” கனபேர்களாய் வந்தால் காம்புக்கு கூட்டி வரும்படி கட்டளை .  எங்களுடன் வருகிறீர்களா ?” என்றான்  .  இது இயக்க அழைப்பாணை .  உதாசீனம் பண்ண முடியாது . பண்ணினால் அது போட்டுத் தள்ளுறதில் கூட முடியலாம் . பின் தொடர்ந்தார்கள் . மாணிக்கத்திடம் இவயளின் காம் …கிட்ட இருக்கிறதா ? எனக் கேளாமல் விட்டது எத்தனைப் பெரிய தவறு எனப் புரிந்தது . மூளை சீராக வேலை செய்வதில்லை .   ஒழுங்காயும் வேலை செய்வதில்லை  .  போகும் வழியில் ,  பலதைக் கதைத்துக் கொண்டு வந்த பெடியள்களில் ஒருத்தன்   ”   அண்ணே உங்களை ….பார்த்திருக்கிறேன் . எங்கே படித்தீர்கள் ? ” என்று கேட்டான் .  ஜீவன் ” இந்துக்கல்லூரி “என்றான் . “அது தானே ! ,நானும் அங்கே தான் உங்களைப் பார்த்திருக்கிறேன்”என்ற போது அவனுக்கு ஜீவன் மீது பட்சம் ஏற்பட்டு விட்டது . ” அண்ணை , நாலுபேருக்கு மேலே …வந்தால் கட்டாயம்  கூட்டிப் போக வேண்டும் . இல்லா விட்டால் தோலை உரித்து விடுவார்கள் . நாங்க என்ன செய்வோம் ? ” .என்றான் .

 

             இன்னொரு ஒழுங்கையால் செல்ல வயற்புற‌ம் இருந்த ஒரு வீட்டிற்கு கூட்டிச் சென்றார்கள் . முகாமில்  ,  ”   யாரடா நீங்கள் ? ” உருக்கிக் கேட்டான் தடியனாக இருந்த ஒருத்தன் . ஜீவன் ” நாம் தாமரை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ” என்றான் . அவனுக்கு சந்தேகம் கண்ணில் ஆடியது. உடனேயே  அவர்களில் ஒரு தோழரைப் பார்த்து  ” போய் உன்ர கொண்ணையைக் கூட்டி வா ” என்று அனுப்பினான் .

 

                 பாண்டி , நல்ல‌ கறுவல்  . ஜீவனும் , பாண்டியும் சாரமும் சேர்ட்டும் . பாண்டி வயசுடைய மற்றவர்கள் கால் கால்ச்சாராய்யும் சேர்ட்டுமாய் அணிந்திருந்தார்கள் . பாண்டி  , சிறிது வித்தியாசமாகத் தெரிய , தடியன் ,அவனிடமே   விசாரணையை ஆரம்பித்தான். ” நீ யாரடா ? ” என்று கேட்டான் . ” இலக்கியப் பொறுப்பாளர் ” என ஒரு போடு போட்டான் . ” மூஞ்ஜியைப் பார்த்தால் படிப்பு வாசனைத் தெரியவில்லையே ? ” என்ற அவனுக்கு சிரிப்பும் வந்தது . ” உதை விழும் . எத்த‌னை வகுப்புகள் வரை படித்திருக்கிறாய் ? ” கேட்க‌ . ” ஐந்து ” என்று பதிலளிக்க ,” ஒழுங்காய் வாசிக்கத் தெரியுமா ? ” கேட்டான் . ” கொஞ்சம் வாசிப்பேன் “. ” இலக்கியத்தில் என்ன செய்வாய் ? ”  என்று கேட்டான் . ” வயல்பாட்டு பாடுகிறவர்களிடம் கூட்டிச் செல்வேன் ” . அவன் பதில்கள்  சிந்திக்க வைக்க ,  ஜீவனிடம் வந்தான் . ” நீ தான் இவர்களுக்கு எல்லாம் தலைவனோ ? ” . பதிலை எதிர்பாராது ,நெற்றியில்   கைத்துவக்கை வைத்து , ” இங்கே எதற்காக வந்தீர்கள் ? ”   …. கேட்டான். ” இங்கே எங்க ஊரார் குடி வந்திருக்கிறார் . அவரைப் பார்த்து விட்டுப் போவோம் …என்று வந்தோம் ” பதிலளித்தான் .

 

                ” அவன் பெரிய கொம்பனா ? கோபத்தைக் கிளறாதே ” என்றவன் ,திரும்ப பாண்டியிடமே கேள்விகள் கேட்கத் தொடங்கினான் .  ஜீவனைக் காட்டி ” இந்த ஐய்யா உங்களிலே யார் ? ” கேட்டான் . ” ஜி . எஸ்  ” என்று பதிலளிக்க, ” உதை விழும் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறாய் . அது என்ன ? ” கேட்டான் . அவனுக்கு தாமரையிலே நிலவுற பிரிவுகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை. கழுகிலே பிரதேசப் பொறுப்பாளர் , பிறகு இராணுவத் தரத்திலான பிரிவுகள். மத்தியில் தான் ஒரு பெரிய‌ அரசியல் பொறுப்பாளர் இருப்பார் . முல்லை , அல்லி , நந்துவில்…பிரதேசப் பொறுப்பாளர் , பிறகு வேற பெயர்களில் அரசியல் அமைப்புகள் இருக்கின்றன . இன்னொருத்தனைக் காட்டிக் கேட்க “நிதிப் பொறுப்பாளர் ” என்றான் . அவனுக்குப் புரியவில்லை . ஊத்தை வார்த்தைகளைக் கொட்டினான் . “உங்களில் , தோழர் என்று ஒருத்தரும்  இல்லையா ? “என்று நக்கலாகக் கேட்டான் .அவர்களுடைய ஆள் ஒருத்தரைக் கூட்டி வந்திருந்தான் .” ராம் , உன் இயக்கம் என்கிறார்கள் .தெரியுமா ? ” என்று அவனிடம் மரியாதையாகக் கேட்டான் . அவன் ஜீவனிடம் வந்து ” ஜி எ யார் ? ,எ.ஜி.எ யார் ? , மானிப்பாய் எ.ஜி.எ யார் ? ” என கேள்விகள் கேட்டான் . ஜீவன் பதிலளித்தான் . தலைவர் ” எ.ஜி.எ என்றால் தலைவரா ? ” என்று  அவனிடம்  கேட்டான் .  ” எங்கட எ.ஜி.எ , சவுரி ” என்று அவன் பதிலளித்தான் . அவன் பாண்டியிட திரும்பி ” நீ விளங்காமல் சொல்கிறாய் என்று நினைத்தேன். விளங்கித் தான் சொல்லி இருக்கிறாயா ! ” என்று பேசினான் .

 

                ராம் , ஜீவனிடம் ” உன்னை எங்கையோப் பார்த்திருக்கிறேன் ? “என்று இரகசியமாய்  சொல்ல , ”   நானும்  இங்கே நடைப்பெற்ற பாசறை வகுப்பிற்கு வந்திருந்தேன் ” என்று முணுமுணுத்தான்  . ராம் ” இவர்கள் என்னுடைய இயக்கம் தாம் “என்று அவரிடம் தெரிவித்தான் . ஜீவனிடம் கூட்டி வந்தவனை   மறைவாய்க் காட்டி , ” இவன் என்னுடைய தம்பி விமல் ” என்று மெதுவாய் சொன்னான் . அப்பத் தான் அவனுடைய முகச்சாயல் இருப்பதைக் கவனித்தான் . வகுப்பிலே ராம் இல்லை, அவனை “டாம் ” என்றே கூப்பிட்டோம் .இன்னொருத்தன் ” டும் ” கூட  இவனோட வந்திருந்தான் . இருவருமே படு முஸ்பாத்திக்காரர்கள் . எல்லாருக்கும்…அப்படிக் கதைக்க வருவதில்லை . எண்பத்தி மூன்றாம் ஆண்டு கலவரத்தில் இருவரின் அண்ணன்மாருமே கொல்லப்பட்டு விட்டார்கள் . சவுரி ,மன அழுத்தத்துக்குள்ளாகி விடுவார்கள் எனப் பயந்து வகுப்பிற்கு அனுப்பி வைத்திருந்தான். எல்லா இடங்களிலுமே ஒன்றிரண்டு பேர்கள் , ஆனால் மானிப்பாய்யில் மட்டும் வீட்டுக்கு வீடு …தொகைவாரிப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்று சொல்வார்கள்.   பிறகு , டும்மையும் , டாமையும் சந்திக்கவில்லை . நீண்ட காலத்திற்குப் பிறகு இப்ப டாமை சந்திக்கிறான் . ராம் போய் விட்டான் .  பிறகு  , ”  இது என்ன ? “என்று ஜீவனின் கையிலிருந்த பையை பிடுங்கினான் . உள்ளே கிறனைற்றுகள் . அவனை உறுத்துப் பார்த்தான் . ஜீவன் சர்வ சதாரணமாக ” நாங்கள் வழக்கமாக‌ செல்கிற போது ….கையிலே எடுத்துக் கொண்டு தான் செல்வோம் ” என்றான்  .    அவற்றை மேலும் கீழுமாக ஆராய்ந்த்தான்.அவன் ,  ” டேய் , இது நம்முடைய கிரனைற்றுகளடா ! , எங்க எடுத்தீங்கள் ? அடியிலே “க” னா எழுத்து இருக்கிறது ” என்று பெரும் வியப்புடன் கூச்சலிட்டான் . இப்படி அடையாளமிட்டு இருப்பார்கள் என்று ஜீவன் சற்று கூட‌ எதிர் பார்த்திருக்க‌வில்லை . பொய் பேசுவதை அதோடு கைவிட்டு ” எங்கட ஊர்ப்பெடியன் இங்கே குடும்பமாக‌  இடம் பெயர்ந்திருக்கிறான் . அவன் தான் கண்டெடுத்திருந்தான் . அவனிடமிருந்த பெற்று வருகிறோம்  ” என்றான் .  ” இவனோடு போய்   கூட்டி வா ” பாண்டி யைப் பிடித்து  தன் தோழர்களுடன்   தள்ளினான் .

 

             தோழர்கள் ,முல்லைத்தோழர்களை கொல்ல விரும்பாது தான் கழற்றாமல் எறிந்திருக்கிறார்கள் என்றதால் கோபம் கொந்தளிக்க  ,   தன் தோழர்களை  பார்த்து ” பிரபுகள்,  முல்லையை அடிக்க மாட்டீயள்ளோ ” என்று  கத்தினான் . ஊத்தைப் பேச்சால் ஏசினான் .  அவர்களுடைய‌  கிழக்கு ,வன்னித் தலைவர்கள் ” நாம் தாக்குதல்களில்   ஈடுபட மாட்டோம் “என்றே அறிவித்தே விட்டிருந்தார்கள் .  பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து குழுக்கள் சென்றதாகக் கேள்வி .  அப்படிச் சென்றதால் அப்பகுதித் தலைவர்கள் அதிருப்தி அடைந்திருந்தார்கள் . தீவுப்பகுதியிலும்  இவர்கள்  தோழர்களாகப் பிழங்கியதைக் ஜீவன் கண்டிருக்கிறான் . மண்டைதீவு முகாமிலிருந்து  ஒருமுறை  படையினர் வெளியேற முயன்ற போது தாமரை எம். எண்பதை வெடிக்க வைத்தது. மற்ற இயக்கத் தோழர்களும் உதவிக்கு சேர்ந்து கொண்டார்கள் . அம்மானும்  இவர்களுக்கு ‘ சோடா ‘ வாங்கி அனுப்பியதாக‌   மாந்தி தோழர் கூறியிருக்கிறார்  .

              யாழ்ப்பாணத்திலும்  பல இடங்களில் துரத்திச் சென்று விலத்தியே   எறிந்திருக்கிறார்கள் .  இவர்களை நோக்கி கிளிப்புகளைக் கழற்றாமலும் எறிந்திருக்கிறார்கள் . மானிப்பாய்யில் , அந்த விசயமே இவர்கள் கிரனைற்றைக் கொடுத்த போதே தெரிய வந்திருக்கிறது . இவர்களுடைய மானிப்பாயைச் சேர்ந்த பெரும்  தலைவரும் கிழக்கைப் போன்றவர் தான் என அவனுடன் தொழில்னுட்ப்க்கல்லூரியில் படித்த நண்பன் மூலம் அறிந்திருக்கிறான் . அவர் அவனுக்கு குருஜி போல விளங்கினார் . அடிக்கடி அவர் புராணம் வாசிப்பான் . பழைய சோழன் மணி கட்டி வைத்திருந்தது  போல , இவன் தபால்பெட்டிகளை   முக்கிய இடங்களில் வைத்திருந்தான் .  பெட்டியில் எழுதிப் போடுற விசயங்களை உடனடியாகவே கவனத்தில் எடுத்து தீர்த்து வைப்பவன் என்று சொல்லுவான். இவர்களை விசாரித்த தடியன் ஒரு குட்டித் தலைவன் .

             வந்திருந்த மாணிக்கம் திரு, திருவென முளித்துக் கொண்டு நின்றான் .  தடியன்  ,   ஜீவனிடன் கேட்டான் .” இவன் உன்னுடைய தோழனா ? ” ஜிவன் மனதில் , ‘ நாளையும் இவர்களை எதிர் கொள்ள வேண்டியவன் ‘ என்ற சிந்தனை எழ ” இல்லை ! , வெறும் ஆதரவாளன் ” என பதிலளித்தான் . தோழரைத் தான் அடிக்க வேண்டாம் என ஓடர் . இவனை அடிக்கலாம் . அடியுங்கடா ” என்று தன் தோழர்களிடம் கட்டளை இட்டான் . சிறுதோழர்கள் தயங்க , பாபு அடி “என்றான் . அவன் போய் முதுகில்  குத்தினான் .  தடியன் ஓடிப் போய் பாபுவின் முதுகில்  ஒரு போடு போட்டான் . ” தொடுறியா , ஓங்கிக் குத்தடா ” கத்தினான் . அவன் வலியால் நெளிந்து கொண்டு போய் பலமாகக் குத்தினான் . மற்றப் பெடியள்களையும் ஏவ, குத்த ,உதைய  மாணிக்கம் விழுந்து விட்டான் .கண் முன்னால் அடிபடுறான் .ஜீவனுக்கு மனம் வெறுத்து விட்டது .பிறகு எல்லாரையும் ” போங்கடா ” என விட்டு விட்டார்கள் . வழியில் மாணிக்கத்திடம்  “உனக்கு பிரச்சனை…. வரலாம் என்று தான் அப்படி கூறினேன் ” என்று தெரிவித்தான் . “பரவாய்யில்லை ” என சோர்வாக பதிலளித்தான் .

          

               பல நாடுகளிலுள்ள இளைஞர்கள் விடுதலைப் பெற்றுத் தரும் என நம்பி பணத்தைக் கொட்டி , கொட்டி வாங்கிய பெரிய ,பெரிய  ஆயுதங்கள் எல்லாமே , கர்ணனுக்குக் கிடைத்த சாபம் போல …..கடைசியில்   பாவிக்காதும்  பயனற்றுப் போய் விட்டிருக்கின்றனவே ! .  எல்லாம் ஒழுங்காய் நடந்திருந்தால்   ,    வேட்டையை விரும்பாத‌  தோழர்கள் இருப்பதும்  ஜீவனுக்கு   தெரிய வந்திருக்காது . அவனும்  ,வழமை   போல , ‘ கழுகுகளை மிருகங்கள் ‘ என்றே  …. எல்லாரையும்   போல‌   சராசரியாகவே    நினைத்திருப்பான் . இது ஒரு சிறு செய்தியாய்  இருந்தாலும் கூட   ,  எல்லோருக்கும் தெரிய வேண்டிய ஒரு செய்தி  ,   தெரியாமலே போய் விடக் கூடாத செய்தியும் அல்லவா ! .

              ஜீவன் ,சவுரியிடம் கூறி இருந்தால் , கண்ணும் கண்ணும் வைத்தது மாதிரி கிறனைற்றையும்  எடுத்திருக்கலாம் . எடுத்ததை  இப்படி    முட்டாள் தனமாக‌  பறி கொடுத்திருக்கவும்    தேவையில்லை . இவனும்  வீணாகத்  தர்ம‌ அடியும் வாங்கி இருக்க மாட்டான் . ஆனால் , விடுதலையில்  , விழுந்துச் செல்றதும் ஓர்  அனுபவம் தானே ! . 

Series Navigationராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்மொழிப்பெருங்கருணை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *